தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

18 பெப்ருவரி 2018

சீதாயணம் நாடகம் -8 படக்கதை -8

சி. ஜெயபாரதன், கனடா

 

 

 

[சென்ற வாரத் தொடர்ச்சி]

 

சீதாயணம் படக்கதை

நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா

வடிவமைப்பு :  வையவன்

ஓவியம் :  ஓவித்தமிழ்

 

 seetha1seetha2

படம் : 14 & படம் : 15 [இணைக்கப் பட்டுள்ளன]

++++++++++++++++++

படம் : 1

Inline image 1

காட்சி ஐந்து

லவா, குசா, இராமன் முதல் சந்திப்பு

 

இடம்: காட்டுப் போர்க்களம்.

நேரம்: மாலை.

பங்குகொள்வோர்: இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, இராமன், சீதா. ஆசிரம மருத்துவர், சீடர்கள்.

அரங்க  அமைப்பு:  பரதன் ஏவிய ஓரம்பில் லவாவின் கரம் காயமானது! [வில்லைக் கீழே போட்டுவிட்டுக் குசா லவா கையிக்குக் கட்டுப் போடுகிறான்] அடுத்துப் போரில் குசா பரதைனைக் காயப்படுத்தி முடமாக்கினான். கலங்கமற்ற சிறுவரைக் கண்டு பராக்கிரமமுள்ள அனுமான் படையினர் போரிடத் தயங்கி நின்றனர். அனுமான் ஏதோ சந்தேகப்பட்டுத் தன் ஒற்றன் ஒருவனை அனுப்பி ஆசிரமத்தில் சீதா இருப்பதை அறிந்து கொண்டான். அனுமான் சிறுவர்களின் கண்கள் இராமப் பிரபுவின் கண்களை ஒத்திருப்பதையும், முகச்சாயல் சீதாவின் முகத்தைப் போல் இருப்பதையும் கண்டு பேரதிர்ச்சி அடைந்தான்! அனுமானின் உடம்பு நடுங்க ஆரம்பித்துக் கைகள் தளர்ந்து விட்டன! இராமப் பிரபுவின் சின்னஞ் சிறு கண்மணிகளுடன் எப்படிப் போரிட்டு நான் சிறைப் படுத்துவேன் என்று மனமொடிந்தான் அனுமான்! அனுமான் படையினர் போரிடாமல் சும்மா நிற்பதைக் கண்டு, பரதன் பெருங் கோபம் அடைந்தான்! பரதன் சினத்தைக் கண்டு அனுமான் தயங்கிப் போரிட வந்தபோது லவா, குவா இருவரும் நடுங்கிக் கொண்டிருக்கும் அனுமானை எளிதாகப் பிடித்து ஒரு மரத்தில் கட்டிப் போட்டனர். அப்போது இராமன் தேரில் வந்திறங்கிக் கோபத்துடன் நேராக இரட்டையர்களை நோக்கி நடந்தான்.

இராமன்: (லவா, குசா இருவரது வல்லமையை மனதிற்குள் வியந்தபடி, ஆங்காரத்தைக் கட்டுப்படுத்தி) அருமைச் சிறுவர்களே! யார் நீங்கள் ? யார் உங்கள் பெற்றோர் ? எங்கிருந்து வந்தவர் நீங்கள் ?

லவா, குசா: (போரை நிறுத்தி) நீங்கள் யார் ? எங்கிருந்து வருகிறீர்கள் ? நீங்கள் கூறுங்கள் முதலில்.

இராமன்: என் பெயர் இராமன். கோசல நாட்டு மாமன்னன் நான். அயோத்திய புரியிலிருந்து வருகிறேன். அந்த குதிரையை அனுப்பியவன் நான்தான்!

படம் :2

Inline image 2

லவா, குசா: (இருவரும்) ஓ! அப்படியா ? அந்த குதிரைப் பிடித்தவர் நாங்கள்தான்! எங்கள் அன்னை மிதிலை நாட்டு இளவரசி!  பெயர் சீதா! எங்கள் தந்தையார் பெயரும் இராமன்தான்!  ஆனால் நாங்கள் அவரை இதுவரைக் கண்டதில்லை!

லவா: என் பெயர் லவா!  இவன் பெயர் குசா! நாங்கள் இரட்டைச் சகோதரர்! அன்னை வால்மீகி ஆசிரமத்தில் இருக்கிறார். தந்தை கோசல நாட்டில் எங்கிருக்கிறார் என்று தெரியாது.

இராமன்: [அதிர்ச்சி அடைந்து, தளர்ச்சியுற்று வில்லைக் கீழே போடுகிறான். சிறுவர்களை நெருங்கிக் கனிவுடன் உற்று நோக்குகிறான்] சமர்த்தான உங்களுக்கு லவா, குசா என்ற அழகான பெயர்களை இட்டவர் யார் ? உங்களுக்கு வில்வித்தை கற்றுக் கொடுத்தவர் யார் ?

லவா, குசா: எங்கள் குரு வேத மகரிஷி வால்மீகி! … ஏன் வில்லைக் கீழே போடுகிறீர் மன்னரே ?  [அவர்களும் வில்லைக் கீழே போடுகிறார்கள்]. ஒன்று எங்களிடம் போரிடுங்கள்; அல்லது குதிரை எங்களிடம் விட்டுவிட்டு ஓடுங்கள். ஓடுபவரின் மீது யாம் அம்பு தொடுப்பதில்லை! ஆயுதமற்ற மனிதருடன் யாம் போரிடுவதில்லை! அது அறமற்றது என்று எங்கள் குருநாதர் சொல்லியிருக்கிறார்!

இராமன்: [சிரித்துக் கொண்டு] பாலர்களே !  உங்கள் யுத்த தர்மத்தை நான் மெச்சுகிறேன். ஆயுதமற்ற நபருடன் நானும் போரிடுவதில்லை! அஞ்சாத சிறுவருடனும் நான் போரிடுவதில்லை! ஆமாம், வல்லமை மிக்க வில்லம்பு வித்தையை, நீங்கள் கற்றுக் கொள்ள எத்தனை மாதங்கள் ஆயின ?

லவா, குசா: எத்தனை மாதங்களா ? எத்தனை வருடங்கள் என்று கேளுங்கள்! ஆமாம், நீங்கள் ஏன் சிறுவருடன் போரிடுவதில்லை ? அவர்கள் எல்லாரும் அஞ்சாமல் எங்களிடம் போரிட்டார்.  நீங்கள் ஏன் போரிட அஞ்சுகிறீர் ? ஏன் வில்லைக் கீழே போட்டீர் ?  சிறுவருடன் போரிடக் கூடாது  என்று எந்த வேதம் சொல்லுகிறது ? உங்கள் குருநாதர் யார் ?

இராமன்: எமது குருநாதர் வசிஸ்ட மகரிஷி. நீங்கள் இருவரும் சிறுவர். நான் வயது முற்றிய வாலிபன். நான் உங்கள் இருவருடன் போரிடுவது சரியன்று. முறையன்று.

லவா, குசா:  அது சரி மாமன்னரே!   அப்படியானால் எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்!  உங்கள் யுத்த தர்மத்தின்படி அதுதான் தர்ம மென்றால், எங்களில் ஒருவருடன் போரிடுங்கள்! ஆமாம், உங்கள் குரு வசிஸ்டர், எங்கள் குரு வால்மீகியை விட வல்லவரா ?

இராமன்: ஆம் பாலர்களே! வசிஸ்ட மகரிஷி, வால்மீகி மகரிஷியை விட சற்று வல்லவர்தான்! … ஆனால் நான் சிறுவன் ஒருவனுடன் எப்படிப் போரிடுவது ? உங்கள் வயதைப் போல் எனக்கு மூன்று மடங்கு வயது! அதுவும் தர்மமாகாது! உங்களில் எவருடனும் நான் போரிடப் போவதில்லை …. நான் உங்களுடன் போரிட்டால் உங்கள் அன்னைக்குப் பிடிக்காது!

லவா, குசா: ஏன் அப்படிச் சொல்லி போர் செய்யப் பயப்படுகிறீர் ? முதலில் குதிரையை நாங்கள் கட்டிப் போட்டதே, எங்கள் அன்னைக்குத் தெரியாது. ஆசிரமத்தில் இருக்கும் எங்கள் அன்னை இதைப் பற்றிக் கவலைப்பட மாட்டார். எதற்காக எங்கள் தாயின் எதிர்ப்புக்குப் பயப்படுகிறீர் ? எங்களுடன் போரிட, எங்கள் அன்னையின் அனுமதியை ஏன் நாடுகிறீர் ? நமக்குள் நடக்கும்  இந்த அசுவமேத யாகப் போரில், எங்கள் அன்னையை  ஈடுபடுத்த வேண்டாம் மாமன்னரே ! … ஆமாம், எங்கள் குரு வால்மீகியை விட, உங்கள் குரு வசிஸ்டர் வல்லவர் என்பது உண்மை என்றால், எங்களுடன் போரிட்டு அதை நிரூபித்துக் காட்டுங்கள். பார்க்கலாம் !

இராமன்: பாலர்களே !   அதில் ஒரு சிக்கல் உள்ளது!  நீங்கள் சிறுவரானதால், உங்களிடம் போரிட உங்கள் அன்னையின் அனுமதி தேவை.  அது அவசியம் எனக்குத் தேவை.  அதுதான் தர்மம். ஆமாம், நீங்கள் ஏன் உங்கள் தந்தையை இதுவரைப் பார்க்க வில்லை ?

லவா, குசா: மாமன்னா !  தர்மத்தைக் குறிப்பிட்டு ஏன் இப்படித் குதர்க்கம் பேசுகிறீர் ? தந்தை இருக்குமிடம் எங்களுக்குத் தெரியாது! தெரிந்தாலும் எங்களுக்கு வழி தெரியாது! வழி தெரிந்தாலும் அன்னையின் அனுமதி கிடைக்காது! எங்கள் தந்தைதான் எங்களைக் காண வரவில்லை! எங்களைக் காண விருப்பமு மில்லை!  அவருக்கு நேரமுமில்லை!  அவர் மிக்கப் பிடிவாதம் கொண்டவராம்.  அவர் பெரிய பராக்கிரமசாலியாம்!  கனமான வில்லை ஒடித்து, என் தாயை மணந்தவராம் !  அவரைக் கண்டால் அசுரர்கள் ஓடிப்போய் விடுவார்களாம்! … [கோபமுடன்] ஆனால் ஒரு கொடுமை ! தாங்க முடியாத கொடுமை.   அவர்தான் எங்கள் அருமைத் தாயை, விலக்கிக் காட்டுக்குத் துரத்தி விட்டாராம்!  கடும் கல்நெஞ்சக்கார மனிதர்!   கர்ப்பமான எங்கள் தாயை அவர் காட்டுக்குத் தனியே அனுப்பியது அநியாயம்,  அதர்மம், அநீதி !

இராமன்: [யோசனையுடன்] ஒருபுறம் பார்த்தால் அது அதர்மம்தான்….! ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால் அது அதர்மமாகத் தோன்றாது! …. அது தர்மமா அல்லது அதர்மமா என்பது வாதத்துக்கு உரியது! … ஆமாம், அந்த மன்னனை நேரே காண நேரிட்டால் என்ன செய்வீர் ? என்ன  தண்டனை கொடுப்பீர்கள் ?

லவா, குசா: [தரையில் கிடந்த வில்லை எடுத்து ஆவேசமாய்] இந்த கூரிய அம்புகளால் அவரது நெஞ்சைத் துளைப்போம், பிளப்போம், துண்டு துண்டாக்குவோம் ! ….

[அப்போது சிறுவர்களின் வில்போரைப் பற்றி ஆசிரமத்தில் கேள்வியுற்று சீதை அவதியுடன் ஓடி வருகிறாள். காவி நிறப் புடவை உடுத்திய சீதா ஆசிரமத்தின் மற்ற சில சீடர்களுடன் போர்த்தளத்துக்கு வருகிறாள்] ….

லவா:  அதோ எங்கள் அன்னை!  எங்களை நோக்கி வருகிறார். ….

[சீதா இராமனைக் கண்டும் காணாது, முதலில் அனுமானைக் கட்டிப் போட்டுள்ள அந்த மரத்தடிக்குப் பதறிக் கொண்டு செல்கிறாள். இராமன் சீதாவை நேராக நோக்க மனமின்றி அவளைத் தவிர்த்துக் குதிரை கட்டப் பட்டுள்ள வேறு மரத்தடிக்கு நகர்கிறான். லவா, குசா இருவரும் தாயைத் தொடர்கிறார்கள்]

படம் : 3

Inline image 4

சீதா: கண்மணிகளே! என்ன அலங்கோலம் இது ?  இந்த உத்தமனை மரத்திலே இப்படிக் கட்டலாமா ?  உடனே அனுமானை அவிழ்த்து விடுங்கள்!

[லவா, குசா இருவரும் ஓடிப்போய் அனுமானின் கட்டை அவிழ்த்து விடுகிறார்கள். ஆசிரமச் சீடர்கள் பரதனுக்கும் மற்ற படையினருக்கும் சிகிட்சை அளிக்கிறார்கள். அனுமான் சோக மடைந்து கண்ணீர் பொங்கச் சீதாவைக் கும்பிடுகிறான். அவளது காலில் விழுந்து கண்ணீரால் கழுவுகிறான். ]

[தொடரும்]

+++++++++++++++

தகவல்

1. Bharathiya Vidhya Bhavan Ramayana By C. Rajagopalachari [1958]

2. Valmiki ’s Ramayana, Dreamland Publications, By: Ved Prakash [2001] and Picture Credit    to Kishan Lal Verma

3.  Mahabharatha By: Rosetta William [2000]

4. The Wonder that was India By: A.L. Basham [1959]

5. The Ramayana & The Mahabharata  By: Romesh C. Dutt  [1969]

6.  Ramayana [Torchlight Publishing] By: Krishna Dharma  [2004]

**************

S. Jayabarathan [jayabarathans@gmail.com ] (October 2, 2013)  [R-2]

Series Navigationபுகழ் ​பெற்ற ஏ​ழைகள் – 34பாரதியின் பெண்ணுரிமைக் குரல்;

3 Comments for “சீதாயணம் நாடகம் -8 படக்கதை -8”

 • ஷாலி says:

  //ஆனால் ஒரு கொடுமை ! தாங்க முடியாத கொடுமை. அவர்தான் எங்கள் அருமைத் தாயை, விலக்கிக் காட்டுக்குத் துரத்தி விட்டாராம்! கடும் கல்நெஞ்சக்கார மனிதர்! கர்ப்பமான எங்கள் தாயை அவர் காட்டுக்குத் தனியே அனுப்பியது அநியாயம், அதர்மம், அநீதி !
  இராமன்: [யோசனையுடன்] ஒருபுறம் பார்த்தால் அது அதர்மம்தான்….! ஆனால் வேறு கோணத்தில் பார்த்தால் அது அதர்மமாகத் தோன்றாது! …. அது தர்மமா அல்லது அதர்மமா என்பது வாதத்துக்கு உரியது! … //
  ———————————————————
  சீதையை இராமன் காட்டிற்கு அனுப்பியது அதர்மமா? ஆம்? எப்படி…பார்ப்போம்.
  ஆரண்ய காட்டில் சீதையின் மடியில் இராமன் தலை வைத்து உறங்குகிறான்.இந்திரனின் மகன் சயந்தன் சீதையின் அழகை கண்டு காமுற்று ஒரு காகத்தின் உருவம் எடுத்து சீதையின் மார்பில் வாய் வைத்து கொத்தி சுகம் காண்கிறான்.
  இந்த காம சயந்தனுக்கு எந்த தண்டனையும் இல்லை.தொட்டுத் தொடாமல் நிலத்துடன் தூக்கிச் சென்ற இராவணன் உயிர் பறிக்கப்படுகிறது.இராமன் போகும் வழியில் ஒரு கருங்கல்லில் பாதம் பட்டு கல்லான அகலிகை உயிர்ப்பிக்கப் படுகிறாள்.யார் இந்த அகலிகை?
  கௌதம முனிவரின் மனைவி ரிஷிபத்தினி.இவள் அழகைக் கண்டு காமுற்ற இந்திரன் (சயந்தனின் தந்தை) சேவல் உருவமெடுத்து பொழுது விடிந்துவிட்டதுபோல் கூவுகிறான்.இதை கேட்ட முனிவர் விடிந்து விட்டது என நினைத்து ஆற்றுக்கு குளிக்க செல்கிறார்.
  உடனே இந்திரன் முனிவர் வேடத்தில் உள் நுழைந்து அகலிகையோடு உறவு கொள்கிறான்.இவன் கணவன் அல்ல காமக்கள்ளன் என்று தெரிந்தும் அவனுடன் ஒத்திசைந்தாள் ரிஷிபத்தினி? காமம் வென்றுவிட்டது.கற்பு தோற்றுவிட்டது.
  ——————————————-
  புக்கவனோடும் காமப் புதுமணல் தேறல்
  ஒக்க ஒண்டிருத்தலோடும் உணர்ந்தனள்,உணர்ந்த பின்னும்
  தக்கதன்று என்ன ஓராள் தாழ்ந்தனள்.
  மனம் விரும்பி சோரம் போன அகலிகைக்கு இராமன் மன்னித்து வாழ்வழிக்கின்றான். அதற்க்கு இராமன் கூறும் காரணம்,
  “நெஞ்சினால் பிழை இலாளை நீ அழைத்திடுக!
  மாசு அறு கற்பின் மிக்க அணங்கினை அவன் கை ஈந்து”
  தெரிந்தே உடலையும் உள்ளத்தையும் ஒருசேரக்கொடுத்தவளை ‘நெஞ்சினால் பிழை இலாள்.” இது குற்றம் இல்லாத கற்பாம் இராமனுக்கு.அதர்மத்திற்கு இப்படி ஒரு விளக்கம்!
  மாசிலா மாமணி சீதையிடம் என்ன பிழை கண்டான்? சீதை நிலத்தில் கண்டெடுக்கப்பட்டதால் தாழ் குலம் என்கிறான் இராமன்.
  —————————————————-
  ‘நன்மை சால் குலத்தினில் பிறந்திலை; கோள்கில் நீடம் போல்
  நிலத்தினில் பிறந்தமை நிரப்பினாய் அரோ”
  —————————————————–
  அடுத்து இராமனின் தீர்ப்பு!
  “அடைப்பர் ஐம்புலன்களை;இடை ஒரு பழிவரின் அது துடைப்பர்,
  அது உயிரோடும் குலத்தின் தோகைமார்”
  பழி வந்து விட்டால் உயர்குடிப்பெண்கள் உயிரை விட்டுவிடுவார்களாம்.தாழ்ந்த குலப்பெண்கள் (நன்மை சால் குலத்தில் பிறக்காத சீதை போன்ற) பழி வந்தாலும் சாக மாட்டார்கள்.என்று அக்கினி வார்த்தையை அள்ளிக்கொட்டுகின்றான். இத்தோடு சீதையை விடவில்லை.தொடர்ந்து,
  மருந்தினும் இனிய மண்ணுயிரின் வான்தசை
  அருந்தினையே,நறவு அமை உண்டிலையே,
  இருந்தினையே,இனி எமக்கு ஏற்பன
  விருந்து உளவோ? உரை.
  ———————————–
  இதோடு விடவில்லை. மேலும் அனலை அள்ளி எறிகிறான்.
  “அரக்க மாநகரில் வாழ்ந்தாயே,ஒழுக்கம் பாழ்பட
  இருந்தாயே,மாண்டிலையோ?-சாகச் சொல்கிறான்.
  அன்று அகலிகையை கற்பு மிக்கவள் என்று சொன்னதும்,இன்று கற்புக்கனலரசி சீதையை எல்லாம் இழந்தவள் என்று சொன்னதும் இராமனைப் பொய்யானாக்காதா?இது தான் இராம தர்மமா? இல்லை அதர்மமே! அதர்மமே!!

  (தர்மமே! என்ற தலைப்பில் அடுத்துப் பார்ப்போம்.)

 • சி. ஜெயபாரதன் says:

  சகலகலாவல்லர் ஷாலி அவர்களே,

  இப்படி நீங்கள் உயர்ந்த இலக்கிய ஞானம் பெற்றவர் என்று திண்ணை வாசகர் ஆகிய நாங்கள் அறிந்து மிகவும் பெருமைப் படுகிறோம்.
  என் சீதாயணம் நாடகத்தை விட அதற்கு வரும் உங்கள் ஆழ்ந்த இலக்கியக் கருத்தோட்டமே உன்னதமாய் இனிக்கிறது.

  சி. ஜெயபாரதன்.

 • ஷாலி says:

  ஸ்ரீ இராமன் சீதையை காட்டிற்கு அனுப்பியது தர்மமாகுமா?என்பதை பார்ப்பதற்க்குமுன் மகாவிஷ்ணு இராமனாகவும்,லெட்சுமி தேவி சீதையாகவும் பூமியில் பிறக்க காரணம் என்ன? இந்தக்காரணம் தெரிந்தால்தான் தர்ம, அதர்மத்தை புரிந்து கொள்ள முடியும்.

  பூர்வ ஜென்மத்தில், ஜலந்தராகேஷன் என்னும் ராட்சதனின் அழகிய மனைவி பிருந்தா.பதிவிரதை.தீவிர விஷ்ணு பக்தை.ஒருநாள் விஷ்ணு காமமுற்று அவளது கணவனின் உருவமெடுத்து அவளை புணர்ந்தான்.அவனது கூடல்முறை தன் கணவன் மாதிரி இல்லையே என்று சந்தேகம் கொண்ட பிருந்தா,என்னைக் கெடுத்த கயவனே யார் நீ?என்று வெகுண்டாள்.உடனே விஷ்ணு,பக்தையே! நான் தான் உனது விஷ்ணு என்றான்.உடனே அவள்,ஒரு பக்தையான என்னை ஏமாற்றிக் கெடுத்ததுபோல் உன் மனைவியும் ஒரு ராட்சசனால் கெடுக்கப்படுவாள் என்று சாபமிட்டு தீக்குளித்து மாண்டாள். பதி விரதையின் சாபத்திற்கிணங்க மகாவிஷ்ணு இராமராகவும்,ஸ்ரீ லட்சுமி சீதையாகவும் மண்ணில் பிறந்தனர்.

  சாபப்படி சீதையை இராவணன் கவர்ந்து சென்று பிருந்தாவிற்கு நேர்ந்த அனுபவத்தை சீதாவுக்கு நிகழ்த்தினான்.சாபல்யப்படி நடக்க வேண்டியது நடந்தது.இதை மூல நூல் வால்மீகி உள்ளதை உள்ளபடி விவரிக்கிறார்.
  மாரீச மானை பிடிக்க இராமனும் இலக்குவனும் சென்றபிறகு அந்தணர் உருவில் இராவணன் சீதையிடம் வந்தான்.”பிரியமாக பேசிய சீதையிடத்தில் ஆசை அதிகமாகி,புதன் ரோஹினியைப் பிடிப்பதுபோல் இடது கையால் சீதையின் தலை மயிரையும்,வலது கையால் தொடைகளையும் சேர்த்துப்பிடித்தெடுத்தான் இராவணன்.” “மேலும் தொடைகளை தூக்கிப்பிடித்து ரதத்தில் வைத்தான்.” -சீ.ஆர். சீனிவாசய்யங்கார் மொழி பெயர்ப்பு.ஆரண்ய காண்டம்,சர்க்கம்.49, பக்கம்.157
  “மற்றும் ஒரு கையால் சீதையைப் பிடித்துக்கொண்டு மறு கையால் எதிர்த்த ஜடாயு கழுகின் சிறகை வெட்டி வீழ்த்தினான்.”
  -பக்கம்.165.
  சீதை என்னும் லட்சுமி தேவி உடன்பட்டே சென்றிருக்கிறாள் என்பதற்கு ஆதாரம்.தம் மேல் விருப்பம் இல்லாத பெண்ணை இராவணன் தொடுவானாகில் அவன் தலை சுக்கு நூறாக சிதறிவிடும் என்ற சாபம் உள்ளது.சீதையை தொட்டு தூக்கும்போது ஒரு தலையும் சிதறவில்லை.இராவணன் மடியில் சீதை உட்கார்ந்திருக்கும்போது அவளது ஆடைகள் காற்றால் அடிக்கப்பட்டு அவன்மேல் புரண்டன.-பக்.167.

  “இலங்கைக்கு கொண்டு சென்றபின்,தன் அந்தப்புரத்தில் வைத்தான்.’-பக்.173. ‘விசித்திரமாக அமைக்கப்பட்ட தங்கப் படிக்கட்டுகளில் இராவணன் சீதையுடன் ஏறும்போது துந்துபி அடிப்பதுபோல் சப்தம் உண்டாயிற்று.”சர்க்கம்.55. பக்.155.

  ஆரண்ய காண்டம், 55 வது சர்க்கம் 678 ம் பக்கத்தில் தாத்தா தேசிகாச்சாரியார் மொழிபெயர்ப்பில் கூறப்படுவதாவது,
  “ இனி நீ நாணமுற்க! இதனால் தர்மலோபமொன்றுமிலது.உனக்கும் எனக்கும் இப்பொழுது தெய்வத்தினாலே சேர்க்கை நேர்ந்தமையின் இதுவும் தர்மமாகும்.இது ரிஷிகளாலும் உகுக்கப்பட்டது.”

  இத்தர்மத்தை நன்குணர்ந்த இராமன் கிஷ்கிந்தா காண்டத்தில் லட்சுமணனிடம் கூறுகின்றான்.
  “என்னிடம் இன்பம் அனுபவித்தவள்.அவளுடன் சுகித்திருக்க,ஏகாந்தமாய் வந்த இடத்தில் அவளை கவர்ந்து சென்றானே!இப்படிப்பட்டவளுடன் போகங்களை அனுபவிப்பவர்கள் பாக்கியசாலிகள்!

  சீதை உடன் பட்டு சென்றதற்கு வேறு காரணங்கள் உள்ளனவா?

  சீதையை காட்டிற்கு தம்முடன் வரவேண்டாம் என்று இராமன் தடுத்தபோது, சீதையின் துடுக்கான வார்த்தையை ஒரு ஆண்மகனைப்பார்த்து வேறு எந்தப்பெண்ணும் சொல்ல மாட்டாள்.

  “ இராமா! உன்னிடம் அழகு மாத்திரமே இருக்கிறது.அதைக்கண்டு அனைவரும் மயங்கி விடுகிறார்கள்.உனக்கு ஆண்மை என்பது சிறிதும் இல்லை.என் ஒருத்தியைக் காக்க முடியாமல் நிறுத்தி நீ காட்டிற்குப் போனாய் என்று என் தந்தையார் கேள்விப்படின் “ஹா”! புருஷவேஷத்துடன் வந்த ஒரு பெண்பிள்ளை (பேடி)க்கா என் புதல்வியைக் கொடுத்தேன்!” என்று தம்மை நொந்துகொள் வார்.”

  -அயோத்திய காண்டம்,சர்க்கம். 30 வது 229 பக்கம், பிரதிவாதி பயங்கரம் அண்ணங்காராச்சாரியார்.

  இராவணன் சீதையை கவர்ந்து மகிழ்ந்திருந்ததை, தம்பி கும்பகர்ணன் இடித்துரைக்கும் பாங்கு.
  ——————————————

  “ஆசில் பர தாரம் அஞ்சிறை அடைப்பே
  மாசில் புகழ் காதல் உறுவோம் வளமை கூரப்
  பேசுவது மானம் இடை பேணுவது காமம் கூசுவது மானுடரை
  நன்று நம கொற்றம்.’
  —————————————————-

  ஸ்ரீ இராமன்-சீதை அவதார மகிமை கம்பனுக்கு தெரியாதெனினும்,ஸ்ரீ இராமனுக்கு நன்கு தெரியும்,ஒரு வண்ணான் சொல்கேட்டு வழி தவறவில்லை.காரண காரியங்களை நன்கு அறிந்தே அவன் சீதையை காட்டுக்கு அனுப்புகிறான்.வால்மீகி இராமனை மானிட மைந்தனாக பார்த்ததால் உண்மைகள் உறங்கவில்லை.நம் கட்டுத்தறி கம்பன் அசல் காவியத்தை மாற்றி திருத்தி கடவுள் தன்மையை கொடுத்துவிட்டதால்,அதற்க்கு தகுந்தாற்போல் கதையை மாற்றி காவியம் பாடி விட்டார்..ஆக,வால்மீகி இராமன் தர்மத்தின் வழியிலேயே சென்றான்.பாதை மாறி பயணம் சென்றது கம்பனின் இராமன்


Leave a Comment

Archives