பவள சங்கரி
“விடுங்க …. ஆரும் பார்க்கப் போயினம்.. “ உதடுகள் மட்டும் ஏதோ சொல்வதை உள்ளம் மறுத்து அதுவே தொடர வேண்டும் என்று ஏங்கும் அதிசயத்தை உணர்ந்தாள் தமிழினி.
“தமிழினி, எப்படி இவ்வளவு மென்மையாக இருக்கிறாய்?. அதுசரி, காயம் ஏதும் பட்டதோ? ” கீழே விழப் போனவளை தாங்கிப் பிடித்தபோது, அவன் வார்த்தைகளில் இருந்த அதீத அன்பை உணரும் நேரம் உள்ளமெல்லாம் பூவாய் பூத்தது!
“அதெல்லாம் ஒன்னுமில்லை, விடுங்க.. நான் போய்விட்டு வாறன்”
“என்ன தமிழினி, உன்னுடைய உடம்பு இப்படி நடுங்குது..?”
“உங்கட நாடி மட்டும் என்னவாம்? இப்படி துடிக்குது?” கடைக்கண் பார்வையினால் சொக்கி விழச் செய்தாள் தமிழவனை!.
“தமிழினி, நாளை நான் வாறேன் அங்கே” அவன் கண்களில் பொங்கிய ஆர்வம் அவளையும் தொற்றிக்கொண்டது.
“இங்கே ஒரே ஆட்கள்… கதைக்கவும் ஏலாது. பாலன் அண்ணைக்கு சாடையாக விளங்குது போலத் தெரியுது..”
“ஓமோம்.. என்னட்டையும் கேட்டவ.. நான்.. சீ.. இல்லை எண்டு சொல்லிப் போட்டன்”
”ம்ம்… என்ன.. அப்படி ஒண்டுமில்லையோ?” லேசான செல்லக்கோபம்!
“அப்ப என்ன… நடுத்தெருவுல நிண்டு சத்தம் போட்டு உண்மையச் சொல்லட்டோ?” சிரித்தான் குறும்பாக.
அவள் அவசரமாக மறுத்துத் தலையாட்டினாள்.
உலகத் தமிழர்களின் இதயங்களை வேதனையால் குத்திக் கிழித்த அந்த சம்பவம் முள்ளிவாய்க்காலின், முள்வேலிக் கம்பிகளுக்குள் முடங்கிப்போய்க் கிடந்த வேதனையெல்லாம் எளிதில் மறக்கக் கூடிய ஒன்றா.. எத்தனைக் கொடுமைகள் கண்ணில் கண்டு உள்ளமெல்லாம் ரணப்பட்டுக் கிடக்கிறது. அந்த 2009ம் ஆண்டின் இருண்ட அத்தியாயம், முப்பது ஆண்டுகால போராட்டத்தின் உச்சக்கட்டம். எத்தனை, எத்தனை இழப்புகள், வேதனைகள், கொடுமைகள்! உயிரிழந்தவர்களின் வேதனையைக் காட்டிலும் உயிரோடு வதைபடுபவர்களின் வேதனை கொடியது! ஆனாலும் ஒருவருக்கொருவர் ஆதரவுத் தேடி வாழந்து தீரவேண்டிய நிலை. பருவம் வந்த நாள் முதலாக தமிழவனை தனக்கானவனாக வரித்துக்கொண்டு, வாழத் தொடங்கினாலும், இடையில் ஏற்பட்ட சம்பவங்கள் அந்த நேசத்தை விசாலமாக்கியது. பள்ளிவிட்டு வீடு வந்தவளுக்கு தாய், தந்தை, தமையன் என அனைவரும் மொத்தமாக விண்ணுலகம் போய் சவமாகக் கிடந்த காட்சி ஈரக்குலையை நடுங்கச் செய்து உயிர் போய் வந்தது. தமிழவனும், தமிழினியும், விசுவமடுவில் ஒரே பங்கருக்குள் வியர்வை நெடியுடன் நெருக்கமாக அமர்ந்திருந்தபோது ஏற்பட்ட அந்த அந்நியோன்னியம் அளப்பரியது. கொடுநாச யுத்தம் துரத்திக் கொண்டே விரட்டி அடித்து இடம் பெயர்ந்து வாழ்ந்தாலும், நேசமும், பாசமும் இன்னும் நெருக்கமாக ஒட்டிக்கொண்டுதான் இருக்கிறது. தாய் மண் முழுவதும் மரணங்கள் மலிந்து எங்கும் ஓலங்கள்! திரும்பிய புறமெல்லாம் சவங்கள். உயிரிழந்த உறவுகளை அடக்கம் செய்யக்கூட அவகாசம் சிக்காமல் அரைகுறையாய் புதைத்துவிட்டு தப்பி ஓடியவர் பலர். காயம் பட்டு, கவனிப்பார் இல்லாமல் சித்ரவதைபட்டு துடிதுடித்து இறந்தவர்களை நேருக்கு நேர் சந்தித்த சோகம். பசி, பட்டினியால் உயிர்விட்ட குழந்தைகள். முகாமில் உணவுப் பங்கீட்டுப் பொருட்களுக்காகத் தகிக்கும் வெயிலையும் பொருட்படுத்தாமல் , நீண்ட வரிசையில் கால்கடுக்க நின்று வாங்கிவரும் அவலம். சிறுசிறு கூடாரங்களில் நெருக்கமாக வசித்து, இயற்கை உபாதைகளைப் போக்கவும் வசதியில்லாத கொடுமை. இதென்ன வாழ்க்கை.. தாமும் கூட செத்திருந்தால் இந்த வேதனை இல்லையே.. அண்ணை டொக்டருக்குப் படித்துக்கொண்டிருந்தவர், வீட்டில் நம்பிக்கை விழுதை ஊன்றியிருந்தவர்…..
“ஆமாம்.. ஆமாம்.. அம்மா… அப்பா.. அண்ணை… எங்க போய்விட்டீங்கள்..”
”தமிழினி.. தமிழினி.. “ உடல் பதற வியர்த்துக்கொட்டி, முகமெல்லாம் வெளிறிப்போய் தன் நினைவேயில்லாமல் கதறித் துடிக்கும் தன் அறைத் தோழியைப் பார்த்து துளியும் பதட்டமில்லாமல், அருகில் அமர்ந்து தலையைத் தடவிக்கொடுத்தாள் மலர்விழி. காரணம் இது வாடிக்கையாக அவ்வப்போது நடக்கும் ஒன்றுதான். தமிழினி இந்த மருத்துவக் கல்லூரியில் வந்து சேர்ந்த அன்றிலிருந்து இந்த நான்காண்டுகளாக பல முறை நடக்கும் ஒரு விசயம்தான் இது. இந்த இளம் வயதில்
பார்க்கக்கூடாத கொடுமைகளையெல்லாம் பார்த்து, உள்ளம் கலங்கிக் கிடப்பவள். பகல் முழுவதும் படிப்பு என்று இருப்பவள் இரவானால் பல விதமான கொடிய நினைவுகள் தாக்க நிம்மதியான உறக்கம் கூட இல்லாமல் தவிக்கும் இந்த கொடுமை மலர்விழிக்குப் பழகிப்போய்விட்டது. மனதில் மட்டுமல்லாமல் உடலிலும் வடுக்கள் வேதனையைச் செய்ய அவ்வப்போது அது வெளிவந்து அவளை அலைக்கழித்துக்கொண்டுதான் இருந்தது. இளமைக் காலம் முழுதும் இப்படி கண்ணீரும், கம்பலையுமாகத் தொலைத்துவிட்டு நிற்கிறாளே என்று மலர்விழிக்கு அவள்மீது இரக்கம் வாட்டிக் கொண்டுதான் இருந்தது.
அன்று நான்காவது ஞாயிற்றுக் கிழமை. சனிக்கிழமை இரவே, வழக்கமாக மலர்விழி, தமிழினியைக் கட்டாயப்படுத்தி தன்னோடு அழைத்துக்கொண்டு உத்திரமேரூரில் உள்ள தன் வீட்டிற்கு அழைத்துச் செல்வது வழக்கம். ஆரம்பத்தில் வரவே மறுத்தவள், கொஞ்ச நாட்களாக ஏதும் பேசாமல் அமைதியாகக் கிளம்பி வந்துகொண்டிருக்கிறாள். தமிழினி வருகைக்காக ஒரு உயிர் அங்கு ஏங்கிக் கொண்டிருப்பதை துளியும் கவனித்தவளாகத் தெரியவில்லை. தனக்குள்ளேயே ஒரு உலகை உருவாக்கிக்கொண்டு அதிலிருந்து வெளிவர மறுக்கும் அவள் போக்கு நியாயம்தான் என்றாலும், இன்னும் எத்தனை காலம்தான் இவள் இப்படியே கடந்து துடித்துக் கொண்டிருக்கப் போகிறாள். எப்போதும் அகண்ட அந்த அழகிய விழிகளில் நிரந்தரமாக அப்பிக்கிடக்கும் அந்த சோகம் மாறி, அழகாக படபடவெனத் துடிக்கும் அவளுடைய பட்டாம்பூச்சி இமைகளைக் காணத் துடிக்கும் தன் சகோதரன் சந்தனுவின் ஏக்கம் வெளிப்படையாகத் தெரிந்தும் அதைத் துளியும் சட்டை செய்யும் நிலையில் அவள் இல்லை. எப்படியும் ஒரு நாள் தன்னை அந்த அழகு தேவதைஏற்றுக்கொள்வாள் என்ற நம்பிக்கையில் ஒரு தலைப்பட்சமாகக் காதலித்துக் கொண்டிருக்கும் அவன் ஒரு வேளை ஏமாற்றப்பட்டுவிட்டால் தாங்கிக் கொள்வானோ என்று சற்று அச்சமாக இருந்தாலும், ஏதோ ஒரு நம்பிக்கை அவளுக்குள் துளிர்விட்டுக் கொண்டுதான் இருந்தது. அவளை எப்படியும் மீட்டுக் கொண்டுவந்துவிட முடியும் என்ற நம்பிக்கை மட்டுமே இருந்தது. ஆனால் இதெல்லாம் அன்று மாலை அந்த அதிர்ச்சியான சம்பவம் நடக்கும்வரைதான்.. அதன்பின் அந்த நம்பிக்கை வேர் ஆட்டம் காண ஆரம்பித்திருந்தது.
ஒவ்வொரு முறை ஊருக்கு வரும்போதும் அன்றைய இரவு நிம்மதியாக அவள் உறங்குவதைப் பார்க்கும்போது, மலர்விழிக்கு ஏனோ ஒரு தாய்மை உணர்வு பீறிட்டுக்கொண்டு வரும். இப்படியே அவள் இதே மனநிலையில், இதே நிம்மதியுடன் இருக்க என்ன வேண்டுமானாலும் செய்யலாம் என்ற வெறியே தோன்றும். காலையில் வெகு சீக்கிரமே எழுந்துவிடுவாள். குளித்து, தன்னுடைய நீண்ட கூந்தலைத் தளர்வாக ஒற்றைப் பின்னலாகப் போட்டு, எந்த முகப்பூச்சும் போடாமல், சின்னதாக ஒரு சாந்துப் பொட்டு மட்டும் வைத்துக் கொண்டு, மிகச் சாதாரணமான ஒரு சுடிதார் அணிந்துகொண்டு அவள் வெளியே வந்தால் போதும் அதற்காகவே காத்துக்கொண்டிருக்கும் சந்தனுவின் கண்களில் ஆயிரம் வாட்ஸ் பல்பு எறியத்தான் செய்யும். முன் நெற்றியில் சுருண்டு விழும் முடியை அலட்சியமாக அவள் தள்ளிவிடும் அழகில் தன்னையே இழந்து நிற்பான் சந்தனு. அவள் கன்னக்குழியைக் காணத் தவம் செய்பவன் போல அவளைச் சிரிக்க வைக்க அவன் எடுக்கும் முயற்சிகள் வெகு சில முறையே வெற்றி பெற்றிருந்தாலும் அவன் தன் முயற்சியில் சற்றும் மனம் தளராமல் இருப்பதைக் கண்டும் காணாதது போலத்தான் இருப்பாள் மலர்விழி. ஆனால் இந்த நாடகமெல்லாம் தமிழினிக்கு ஏதும் பாதிப்பு ஏற்படுத்துகிறதா என்பதைக் கண்டுபிடிக்கும் வாய்ப்பு இதுவரை அமைந்ததில்லை. ஒவ்வொரு மாதமும் நான்காவது ஞாயிற்றுக்கிழமைக்காகவே மற்ற மூன்று வாரங்களையும் பொறுத்துக்கொள்பவன் போல சந்தனு இயந்திரமாகச் சுழல்வது தமிழினி தவிர அனைவரும் அறிந்து வைத்திருந்தனர். அம்மாவும், அப்பாவும்கூட இதை ரசிக்கத்தான் செய்தார்கள். அவர்கள் மனதிலும் வெகு எளிதாகவே இடம் பிடித்து வைத்திருந்தாள் தமிழினி.
வழக்கமாக காலை குளித்து முடித்து லேசான ஒப்பனையுடன் வருபவள், நேரே சமையலறைக்குச் சென்று பால் காய்ச்சி , பில்டரில் கச்சிதமாக டிக்காஷன் போட்டு வைக்கவும், அம்மா எழுந்து வரவும் சரியாக இருக்கும். கமகமவென்று டிக்காஷன் வாசனை மூக்கைத் தொலைக்கும். அதிலேயே எழுந்து வந்துவிடுவாள் மலர்விழியும். அம்மாவும், தமிழினியும் ஏதாவது பேசிக்கொண்டே இருவரும் காப்பியுடன் வெளியே வருவார்கள். தமிழினிக்கு கூடத்தின் மத்தியில் பெரிதாக தொங்கிக் கொண்டிருக்கும், அழகான வேலைப்பாடுகளுடன் கூடிய ஊஞ்சலில் உட்கார்ந்து காபியைக் குடிப்பதற்கு மிகவும் பிடிக்கும். இப்படி அவளுக்குப் பிடிக்கக்கூடிய விசயங்களை சர்வ சாதாரணமாக விரல்விட்டு எண்ணிவிடலாம்.
வீட்டிற்கு வெகு சமீபத்தில், கீழ் ரோட்டில் அமைந்துள்ள . கிழக்கு நோக்கிய, ஆயிரத்து இருநூறு ஆண்டுகளுக்கு முன் நந்திவர்மன் காலத்தில் கட்டப்பட்ட கைலாசநாதர் திருக்கோவிலுக்குக் கிளம்பிவிடுவாள். மிகப் பெரிய அந்தக் கோவிலை முழுவதுமாக வலம் வந்து பின், பழமையான கோவில் கருவறையில் உடுக்கை வடிவ பீடத்தில், தாமரை பாதம் கொண்ட வடிவமைப்பில், உருண்டை வடிவ பாணத்தில் லிங்க ரூபமாய் வடக்கில் சுழிந்து காட்சி தரும் ஈசனின் முன் அமர்ந்துவிடுவாள். பொதுவாக அந்த நேரத்தில் பெரிதாக ஏதும் கூட்டம் இருக்காதாகையால், அமைதியாக அப்படியே சற்று நேரம் உட்கார்ந்துவிடுவாள். சில நேரங்களில் நேரம் போவதே தெரியாமல் உட்கார்ந்திருப்பாள். மலர்விழி தேடிக்கொண்டு வந்தால், கோவிலின் உள்பிரகாரத்தில் கைலாசநாதரின் முன்பு அப்படியே உட்கார்ந்திருப்பாள். கண்களில் தாரையாக கண்ணீர் வழிந்த கரை இருக்கும். சற்று நேரம் அருகில் உட்காந்திருந்துவிட்டு கூட்டி வந்துவிடுவாள்.
அன்று தமிழினி கோவிலுக்குச் சென்ற சற்று நேரத்திற்கெல்லாம், சந்தனு என்றும் இல்லாத திருநாளாக அன்று சீக்கிரமே குளித்து, அழகாக எட்டு முழ வேட்டியும், வெள்ளை நிற முழுக்கை சட்டையும் அணிந்து கொண்டு பளபளவென, மல் வேட்டி விளம்பர மாடல் போல கம்பீரமாக நடந்து வந்ததைப் பார்க்க ஆச்சரியமாக இருந்தது. முகத்தில் இப்படி ஒரு வெட்கத்தை இதற்குமுன் யாரும் பார்த்ததில்லை. வேகமாக வந்தவன், கொஞ்சம் வெளியில் போயிட்டு வரேம்மா.. என்று சொல்லிவிட்டு பதிலைக்கூட எதிர்பார்க்காமல் சென்றான். அவன் கோவிலுக்குத்தான் ஒரு முடிவாகச் செல்கிறான் என்பது புரிந்தது. ஆனாலும் மலர்விழிக்கு மட்டும் ஏதோ ஒரு சங்கடம் இருந்தது. என்ன நடக்கப் போகிறதோ என்று அச்சமாகக் கூட இருந்தது. ஆனால் என்றாவது ஒரு நாள் இது நடந்துதான் ஆகவேண்டும், தமிழினி மனதில் என்னதான் இருக்கிறதென்று அறியத்தான் வேண்டும். அதற்கு இதுதான் சரியான சந்தர்ப்பமும் கூட என்பது புரிந்தாலும், ஏனோ ஒரு படபடப்பு ஆரம்பித்திருந்தது மலர்விழிக்கு. அதற்கான விடையும் வெகு விரைவிலேயே தெரிந்தும்விட்டது.
சந்தனு போய் 25 நிமிடங்கள்தான் ஆகியிருக்கும், தமிழினி மிக வேகமாக வீட்டிற்குள் நுழைந்தவளின் முகம் கொஞ்சமும் சரியாக இல்லை. அதிலிருந்தே நடந்ததை ஊகிக்க முடிந்தாலும், மெல்ல அவளருகில் சென்று ஆதரவாக அவள் தோளைத் தொட்டதுதான் தாமதம், தமிழினி அப்படியே மலர்விழியின் மடியில் முகம் புதைத்து ஓவென்று அழ ஆரம்பித்தாள். அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனாலும், சமாளித்துக் கொண்டவளாக தமிழினியை கொஞ்ச நேரம் அழவிட்டாள், அவள் மனபாரம் குறைய வேண்டுமென்று. அன்று முழுவதும், யாரிடமும் எதுவும் பேசவில்லை அவள். மாலை ஊருக்குக் கிளம்பும் போதாவது ஏதாவது பேசமாட்டாளா என்று அம்மாகூட ஏங்கியது தெரிந்தது. சந்தனு தன் அறைக்குள் சென்றவன் சாப்பிடக்கூட வெளியே வரவில்லை. அம்மாதான் அவன் அறைக்கே டிபனும், சாப்பாடும் எடுத்துச் சென்றார். அமைதியாக விடைபெற்று ஊருக்கும் கிளம்பிவிட்டார்கள். ஊருக்குத் திரும்பியும் இரண்டு நாட்கள் தமிழினி வாய் திறந்து ஏதும் பேசவேயில்லை. மலர்விழிக்கு இது பெரும் வேதனையைத்தான் ஏற்படுத்தியது. இன்னும் ஏழெட்டு மாதத்தில் ஹவுஸ் சர்ஜன் பயிற்சி முடித்துவிட்டால், பின் மெதுவாகத் தன் அண்ணனுடனான திருமணப் பேச்சை எடுக்கலாம் என்று எண்ணியிருந்த எண்ணத்தில் இப்படி மண் விழுந்தது போன்று ஆனது அவளால் தாங்க முடியவில்லை.
அன்று காலையிலேயே வகுப்பு முடிந்து, மதிய உணவு முடித்து இருவரும் தங்கள் அறைக்கு வந்த சிறிது நேரத்தில் தமிழினி மலர்விழியின் அருகில் வந்தவள், ஏதோ சொல்ல நினைத்தாலும், அதைத் தொடங்க அவள் பட்டபாடு சொல்லி முடியாது. அன்றுதான் முதன்முதலில் அவளுடைய அன்புக் காதலன் தமிழவன் பற்றி அறிந்தாள் மலர்விழி. அவர்களுடைய இளம் வயது பாசம் ஆரம்பித்து அனைத்தையும் சொன்னவள் இறுதியாக அவள் சொன்ன விசயத்தைக் கேட்டவுடன் அதிர்ச்சியில் அப்படியே உறைந்து போனாள் மலர்விழி.
“தமிழவன் மாமன், படிப்பு படிப்பு எண்டு மாஞ்சவர்… எங்கட குடும்பத்திலை ஒரு டொக்டர் வரப்போறார் எண்டு சந்தோசப்பட்டம். கம்பசுக்குப் போக அவர்களும் விட யில்லை… பாதைகளும் மூடுப்பட்டு கொடுநாச யுத்தத்திலை எல்லாத்தையும் இழந்துபோய் உடுத்த உடுப்போட உயிரைக் காக்க எண்டு ஓடி வந்தம்… தினமும் செத்துத் செத்து உயிர்த்தபடி இருந்தோம். அம்மா, அப்பா, அண்ணை என எல்லோரையும் ஒரே நாளில் பறிகொடுத்து நின்ன காலம். துன்பங்கள் துயரங்கள் தொடர்கதையாகின. வீட்டுக்கு வீடு வாசல்படி என்பது போல தாய் மண் மரணங்கள் மலிந்த பூமியாய் மாறிக்கொண்டிருந்தது. அன்று அகோர ஜெல் அடி. சற்று ஜெல் அடி ஓய்ந்தபோது, பங்கருக்கு வெளியே சென்ற தமிழவன் மீண்டு வரவே இல்லை. அவர் எதிர்பார்க்காத போது திடீரென்று வந்த ‘ஜெல்’ அவரருகே வீழ்ந்து வெடித்து, சன்னம் ஒன்று அவரது கழுத்தைப் பதம் பார்க்க அந்த இடத்திலேயே துடிதுடித்து இறந்து போனார் அவர் என் கண் முன்னாலேயே” என்று சொல்லிவிட்டு பீறிட்டு வந்த அழுகையை அடக்கமாட்டாமல் துடித்து நின்றாள் தமிழினி.
அவளைச் சமாதானம் செய்ய மிகவும் சிரமப்படத்தான் வேண்டியிருந்தது. அடுத்து நான்காம் ஞாயிற்றுக்கிழமைக்காக, சனிக்கிழமை வகுப்பு முடிந்து ஊருக்குக் கிளம்பியபோது அவள் உடன் வர மறுத்துவிட்டது ஏமாற்றமாக இருந்தாலும், கொஞ்ச நாட்கள் போனால் சரியாகிவிடும் என்றுதான் நினைத்திருந்தாள். ஆனால் அடுத்து வந்த ஒரு சில முறையும் அவள் தவிர்த்துவிட்டாள். இறுதியாக ஒருமுறை வந்து அம்மா, அப்பா மற்றும் சந்தனுவையும் பார்த்துவிட்டு வந்தாள். படிபெல்லாம் முடிந்து அடுத்து என்ன செய்யப்போகிறோம் என்று முடிவெடுக்க வேண்டிய கட்டம். இன்னும் இரண்டொரு நாளில் கல்லூரி வாழ்க்கை முடியப்போகிறது. குடியிருந்த அறையைக் காலி செய்துவிட்டு கிளம்ப வேண்டும்.. தமிழினி என்ன முடிவெடுக்கப் போகிறாளோ என்ற பதட்டம் அதிகமாகவே இருந்தது மலர்விழிக்கு. அவளிடம் அதுபற்றி பேச சரியான தருணம் பார்த்துக் காத்திருந்தவளுக்கு, அன்று விடியலில் பேரிடியாக அவளுடைய நீண்ட கடிதம் கண்ணில் பட்டது. அதன் சாரமாக, தீயில் கருகிய ஊர் மனைகளும், அங்கவீனர்களாக அலையும் மக்களும், உளப் பிறழ்வுடன் கேள்விக்குறியாக நிற்கும் இளசுகளும், இனி என்ன செய்வதென்று தவிக்கும் விதவைகளும், மலிந்து கிடக்கும் தம் தாய் மண்ணை விட்டு தான் மட்டும் ஒரு சுகமான வாழ்க்கை வாழ தன் மனம் இடம் கொடுக்கவில்லை என்றும், என்றாவது ஒரு நாள் தம்தேசம் அமைதியடையும் என்றும், அப்படி ஒரு நாளில் மிண்டும் மலர்விழியைச் சந்திக்கத் தாம் திரும்பி வருவதாகவும், எழுதிவைத்துவிட்டுச் சென்றிருந்தாள். அந்த நான்காம் ஞாயிற்றுக் கிழமை ஆவலாகக் காத்திருந்த சந்தனுவையும் அம்மா, அப்பாவையும், கனமான மனதுடனும், பாரமான அந்த நீண்ட கடித்தத்துடனும் சந்தித்தாள் மலர்விழி!
முற்றும்
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 28
- நத்தை ஓட்டுத் தண்ணீர்
- ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)
- நிஜம் நிழலான போது…
- ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்
- ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்
- இருண்ட இதயம்
- மருமகளின் மர்மம் – 6
- குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்
- பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு
- ஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள்
- வெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )
- கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்
- கவுட் Gout மூட்டு நோய்
- உனக்காக மலரும் தாமரை
- 4 கேங்ஸ்டர்ஸ்
- ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை
- திண்ணையின் இலக்கியத்தடம் -12
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !
- தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று
- சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]
- சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10
- பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.
- புகழ் பெற்ற ஏழைகள் 36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை……
- மனம் போனபடி .. மரம் போனபடி