நத்தை ஓட்டுத் தண்ணீர்

author
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 26 in the series 8 டிசம்பர் 2013

முனைவர் ந.பாஸ்கரன்,

சங்கு சிற்றிதழின் ஆசிரியர் ஒரு நாள்; இந்நூலுக்கு ஓர் அறிமுகம் எழுதுங்கள் என்று என்னிடம் கொடுத்தார்.வழக்கம் போல் தவிர்த்தும், அவர் வழக்கம் போல் திணித்தும் சென்று விட்டார். இரண்டு தினங்கள் கழித்து அப்புத்தகத்தை எடுத்தேன். படித்தேன். படித்துக்கொண்டே இருந்தேன். மிக விருவிருப்பாக நகர்ந்தது. ஹரணியின் கவிதைகளைக் கதைகளைப் படித்து மகிழ்ந்திருக்கிறேன். இப்பொழுதுதான் அவரது உரைநடையைப் படிக்கின்றேன். அவரது உரைநடையின் வீச்சு என்னை வெகுவாகப் பாதித்தது. அவரது உரைநடை என்னுள் நடந்தது என்பதைவிட நாட்டியமாடியது என்றுதான் சொல்லத்தோன்றுகிறது. கவிதையின் நளினத்தோடும், ஆய்வுக்கான ஆழத்தோடும் ஒரு தென்றலின் தவழ்வாய் அவரது உரைநடையின் அனுபவம் என்னுள் இறங்கியது. எனவே. இந்நூலில் உள்ள கருத்துகளுக்கு விளக்கம் எழுதி மேலும் விவரணை செய்வதைவிட இந்நூலுக்கு அழகு சேர்த்துள்ள அவரின் உரைநடை இனிமையைப்பற்றி எழுதுவதனூடே இந்நூலை அறிமுகமும் செய்வது சரியாக இருக்குமெனக்கருதி முயலுகின்றேன்.
உரைநடை அமைப்புச் சிறப்பு :
சில தமிழாய்வாளர்களின் மதியில் விளையாடி விதியில் தடுமாறும் உரைநடையை மடியிலமர்த்தி தலைசீவி தவழ்ந்து நடைபோட வைத்திருக்கிறார். காலந்தோறும் தமிழ் உரைநடை ஒரு வரண்டப்பகுதியிலேயே தனது பெரும்பாலானப் பயணத்தை மேற்கொண்டுள்ளது. விதிவிலக்காக சில நல்ல தமிழ்உள்ளங்களின் பங்களிப்பும் இருந்துள்ளது. இதில், திரு.வி.க.,அண்ணா,கண்ணதாசன் போன்றவர்களை விரல்விட்டு எண்ணலாம். ஹரணியையும் இவ்வரிசையில் வைத்து எண்ணலாம் என்றாலும்.,இவரது உரைநடை இனிமையிலும் எளிமையிலும் வீச்சிலும் ஓர் நுட்பமான வேறுபாட்டை பெற்றுள்ளமையை உய்த்துணர முடிகின்றது. இளையதலைமுறையினருக்கும்,வாசிப்பிலும் படைப்பிலும் புதியன விரும்புநர்க்கும் இவரின் உரைநடை ஒரு வரவாகவே உள்ளதை உணரமுடிகிறது.
 எளிய பதங்களின் பயன்பாடு
 இரண்டு அல்லது மூன்று பதங்களாலானத் தொடர்
 சிற்சில தொடர்களாலானப் பத்திப்பிரிப்பு
 புதுக்கவிதை நடையிலானச் சொற்கட்டு
 எடுத்துரைப்பியல் நடை
 உரையாடல் பாணி
 அடைப்புக் குறியிட்ட தன்கூற்று விளக்கங்கள்
 இலக்கியச்செறிவைத் தளர்த்திக்கொண்ட:
உவமைகள்
எடுத்துக்காட்டுகள்
மேற்கோள்கள்
 முன்,பின் மாற்றமும் குழப்பமும் இல்லாத கட்டமைப்புப்
போன்ற கூறுகளெல்லாம் இவரின் நடையைக் கவனிப்புக்குரியதாக ஆக்குகின்றன.
உரைநடை எல்லாவிதமான சூழலிலும் ஒரே தன்மையோடு இயங்குவது இல்லையென்றே கூறலாம். ஆய்வில், விளக்கத்தில், கடிதத்தில், பாடத்தில், விமர்சனத்தில், கட்டுரையில், கதைசித்தரிப்பில் என்று ஒவ்வொரு இடத்திலும் மிக நுட்பமான செய்முறை மாற்றத்தைப் பெறுவதனாலேயே உரைநடை தனிச்சிறப்பைப் பெறுகின்றது. இத்தகைய அனைத்து செய்நேர்த்தியையும் ஹரணியின் இவ்வுரைநடை நூலின் ஒவ்வொரு கட்டுரையிலும் அவதானிக்க முடிகிறது என்பது முக்கியம்.
கடவுள் வீடுதோறும் இரவில் வந்து அவ்வீட்டில் உள்ளவர்கள் சாப்பிடும்போது கீழே சிந்திய சோற்றுப்பருக்கைகளை ஓர் ஊசியால் குத்தியெடுத்து அதை நத்தையோட்டுத்தண்ணீரில் கழுவி உண்பான் என்றும், அப்படி சாப்பிட்டால் அவ்வீட்டில் உள்ளவர்கள் அடுத்தடுத்த நாட்களில் உணவுக்கு கஷ்ட்டப்படுவார்கள் என்றும் தன்னுடையக் குழந்தைப்பருவத்தில் அம்மாவால் சொல்லப்பட்டக் கதையின் மையத்தை நூற்தலைப்புப் பொருண்மையாக்கி அதன் கீழ் 14 கட்டுரைகளை வாழ்வியல் அறம் சார்ந்த கருத்துகளாகத் தந்துள்ளார். அனைத்தையும் தமது வாழ்வின் புரிதலாகவே முன்வைக்கிறார். தினசரி பேருந்து பயணத்தில் ஒரு படைப்பாளனாகியத் தன்னுடையப் பார்வையில்படும் சகபயணிகளின் முகங்களை அறிமுகப்படுத்தும்போது,
“மூடி வைத்த பாத்திரம் போல சில முகங்கள், கவலையை அப்படியே வெளிப்படுத்துவது போல சில முகங்கள், எதையும் காட்டிக் கொள்ளாமல் சில முகங்கள், கேட்டால் மழுப்பி சிரித்துநழுவும் சில முகங்கள், கடுகடுவென்று சில முகங்கள், கலகலவென்று சில முகங்கள்…”(ந.ஓ.த-ப.1)
என்று எழுதுகிறார். வாசிப்பைப்பற்றி எழுதும் போது,
“வாசிப்பு என்பது ஒரு கலை,
வாசிப்பு என்பது ஒரு தவம்,
வாசிப்பு என்பது ஒரு பரவசம்,
வாசிப்பு என்பது ஒரு உணர்வு”. (ந.ஓ.த-ப.3)
என்ற சின்ன சின்ன வாக்கியங்களின் வழி விவரிக்கிறார்.

உவமை ஆளுமை :
உரைநடையில் சொல்லவந்த செய்திக்கேற்ப உவமையைக் கையாள்வது மிகவும் முக்கியம். இவர் தனது படைப்பில்,
நட்பைப்பற்றி பேசுமிடத்தில்,
“பொருள்,குடும்பம்,பணம்,சாதி என நட்பில் நெருப்பு ஊசி செருகுவதை உணரும்போது ரொம்பவே வலிக்கிறது” (ந.ஓ.த-ப.13) என்றும்,
கைப்பேசியைப்பற்றி பேசுமிடத்தில்,
“காலன் கைக்குள் சிக்கிய உயிர் போலக் கைப்பேசிக்குள் புதைந்துக் கொண்டிருக்கிறோம்.” (ந.ஓ.த-ப.14) என்றும்,
சந்தர்ப்பவாதிகளைப்பற்றி பேசுமிடத்தில்,
“நம்புகிறவர்களை நெருப்பில் தள்ளிக் கொல்வதைப்போல…” (ந.ஓ.த-ப.21) என்றும்,
கூட்டுக்குடும்ப சிதைவைப்பற்றி பேசுமிடத்தில்,
“அழகான ஓவியத்தை எண்ணெய் ஊற்றி எரித்ததுபோல எரித்துவிட்டார்கள்” (ந.ஓ.த-ப.51) என்றும் சிறந்த உவமைகளால் கருத்து விளக்கம் தருவது உரைநடை வாசிப்பு, புரிதல் என்னும் இருநிலைகளையும் விரைவு படுத்துவதாக உள்ளது.

முரண் உத்தி ஆளுமை:
கவிதைகட்டமைப்பில் பயன்படுத்தும் முரண் உத்தியை உரைநடைக்கும் பயன்படுத்தி வெற்றி கண்டுள்ளார். இதனை,
கடிதம் எழுதுவதைப் பற்றி எழுதும்போது,
“நலம் விசாரிப்பது ஆரோக்யமானது.
அது நலமாக இல்லை.” (ந.ஓ.த-ப.14) என்கிறார்.
வாசிப்பு பழக்கத்தைப் பற்றி எழுதும்போது,
“வாசிக்கும் பழக்கத்தையேத் தொலைத்தவர்கள் மற்றவர்களுக்குப் போதிக்கும் கொடுமையைச்
செய்துகொண்டிருக்கிறார்கள்.”(ந.ஓ.த-.31)என்கிறார்.
சுகாதாரத்தைப் பற்றிப்பேசும்போது,
“மருத்துவப் பரிசோதனைகளில் நெகடிவ் என்று
வந்தால்தான் பாசிட்டிவ் வாழ்க்கை” (ந.ஓ.த-ப.33) என்கிறார். இவற்றின்
வழி தமது உரைநடைக்குக் கவித்துவத் தன்மையைக் பாய்ச்சியுள்ளார் என்பதை அறியமுடிகிறது.
இவ்வாறு,உரையாடல்,இலக்கிய எடுத்தாளல்,அங்கதம்,தன்கூற்றுக் காட்டல் என்று பல உத்திகளால் இவ்வுரைநடை நூலை கல்லூரி பாடத்திட்டத்தில் வைக்கும் நுட்பத்துடன் வடிவமைத்துள்ளார் என்ற அளவிற்கு இந்நூலின் உரைநடைத் தன்மை அமைந்துள்ளது. நூலைப் படித்து முடிக்கும் வரை தோழர் ஹரணியுடன் உரையாடிக்கொண்டு இருந்ததைப் போன்ற ஓர் உணர்வையே இந்நூலுக்கான வாசிப்பு அனுபவமாக உணரமுடிகிறது.வாழ்த்துகள் ஹரணி. நன்றி.

நூல் முகவரி :
“ஹரணி”
நத்தையோட்டுத் தண்ணீர் (பல்சுவைக் கட்டுரைகள்)
கே.ஜி.பப்ளிகேஷன்ஸ்
31.பூக்குளம்,
கரந்தை,தஞ்சாவூர்-2;.
விலை : ரூ60.00

 

 

முனைவர் ந.பாஸ்கரன்,
உதவிப்பேராசிரியர்,
தமிழ்த்துறை,
பெரியார் கலைக் கல்லூரி,
கடலூர்-1.

Series Navigationஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *