[சென்ற வாரத் தொடர்ச்சி]
சீதாயணம் படக்கதை -10
நாடகம் : சி. ஜெயபாரதன், கனடா
வடிவமைப்பு : வையவன்
ஓவியம் : ஓவித்தமிழ்
படம் : 18 & படம் : 19 [இணைக்கப் பட்டுள்ளன]
++++++++++++++++++
காட்சி ஆறு
முடிவை நோக்கிச் சீதா
இடம்: வால்மீகியின் ஆசிரமத்துக்கு அருகில் பெரிய மலைகள் சூழ்ந்துள்ள காடு.
நேரம்: மாலை வேளை
பங்குகொள்வோர்: வால்மீகி, இராமன், சீதா, இலட்சுமணன், பரதன், சத்துருகனன், அனுமன், அங்கதன், சுக்ரீவன், லவா, குசா, ஆசிரமச் சீடர்கள். மலை மேட்டுக்கு அருகில் உள்ள ஒரு மரத்தில் அசுவமேத யாகத்தின் வெள்ளைக் குதிரை கட்டப்பட்டுள்ளது.
(இராமன் மரத்தில் கட்டுண்ட குதிரையை அவிழ்க்கச் சென்றபோது, லவா, குசா இருவரும் குதித்தோடிச் சென்று மறிக்கின்றனர்)
லவா, குசா: [தரையில் கிடந்த வில்லைக் கையில் எடுத்து] நிறுத்துங்கள் கோசல மன்னரே! முதலில் எடுங்கள் உங்கள் வில்லை! குதிரையைக் கட்டியவர் நாங்கள்! முதலில் எங்களுடன் போரிட்டு வென்ற பின்தான் நீங்கள் குதிரையை விடுவிக்கலாம்.
இராமன்: [கனிவுடன்] அருமைப் பாலர்களே! உங்களுடன் நான் போரிடப் போவதில்லை! நீங்களும் என்னுடன் போரிடத் தேவை யில்லை! இந்தக் குதிரை எப்படி எனக்கு சொந்தமோ, அதே போல் அது உங்களுக்கும் சொந்தமே! நாமெல்லாரும் இப்போது ஒருபக்கம்! நான் உங்கள் எதிரியும் அல்லன்! நீங்கள் எமக்குப் பகைவரும் அல்லர்!
லவா, குசா: கோசல மன்னரே! என்ன புதிர் போடுகிறீர்! சொந்தம் கொண்டாடி எங்களை ஏமாற்ற முடியாது! நீங்கள் வில்லை எடுக்கப் போகிறீர்களா ? இல்லையா ? ஆயுதமற்ற எதிரியோடு யாம் வில்போர் தொடுப்பதில்லை என்றது நினைவிருக்கிறதா ? போரிடாமல் நீங்கள் குதிரையை அவிழ்ப்பது தவறு. எங்கள் முதல் எச்சரிக்கை இது! எடுங்கள் உங்கள் வில்லை!
இராமன்: போருக்கு முதலில் உங்கள் அன்னையிடம் அனுமதி பெற்று வாருங்கள். அப்போது நான் யாரென்றும் உங்கள் அன்னையிடம் கேளுங்கள். அதன் பிறகு நீங்கள் என்னுடன் போரிடலாம்.
லவா, குசா: [ஆச்சரியமோடு] மறுபடியும் எங்கள் அன்னையை ஏன் இழுத்து வருகிறீர் ? எங்களை யாரும் நிறுத்த முடியாது. ஆமாம் … நீங்களே சொல்லுங்கள் யாரென்று ?
[அப்போது வேகமாய் வால்மீகி முனிவர் வருகிறார். லவா, குசா இருவரும் தலை குனிந்து கைகூப்பி வணங்குகின்றனர்.]
வால்மீகி: பாலர்களே! நிறுத்துங்கள் போரை! கீழே போடுங்கள் வில்லை!
லவா, குசா: (இருவரும் ஒருங்கே) வணக்கம் குருதேவா! (வில்லை இருவரும் கீழே போடுகிறார்கள்)
இராமன்: (இராமனும் தன் கிரீடத்தை எடுத்துவிட்டுக் குனிந்து வணங்குகிறான்.) வணக்கம் மகரிஷி!
வால்மீகி: அருமைச் சிறுவர்களே! யாரென்றா கேட்கிறீர்கள் ? இவர்தான் உங்கள் அருமைப் பிதா! …(இராமனைப் பார்த்து) மாமன்னா! உங்கள் குதிரையைச் சிறுவர்கள் கட்டிப் போட்டது அறியாமற் செய்த தவறே! பலரைக் காயப்படுத்தியதும் அவர்கள் அறியாமற் செய்த தவறே! எனக்குத் தெரியாமல் போனது. முதலில் தெரிந்திருந்தால், தேவையற்ற இந்தப் போரை நிறுத்தி யிருப்பேன். இத்தனை பேர் காயப் பட்டதையும், நான் தவிர்த்திருப்பேன்!
லவா, குசா: [அலறிக் கொண்டு] கோசல மன்னர் எங்கள் தந்தையா ? எங்கள் அருமைத் தந்தையா ? … (லவா மட்டும்) நாங்கள் போரிடப் போன இவர் எங்கள் பிதாவா ? எங்களுடன் ஆரம்பத்திலிருந்தே போரிட மறுத்த இவர் எங்கள் தந்தையா ? தான் யாரென்று கூறினாலும், தந்தை என்று சொல்லாது, மறைத்துக் கொண்ட இவர் எங்கள் பிதாவா ?
இராமன்: அருமைப் பாலர்களே! மெய்யாக நீங்கள் யாரென்று முதலில் எனக்குத் தெரியாது. உங்கள் அன்னையின் பெயரைக் கேட்டதும் நான் போர் தொடுக்க வந்ததை நிறுத்தினேன். உங்களுடன் போரிடவும் மறுத்தேன்.
குசா: எங்கள் அன்னையப் பற்றித் தெரிந்ததும், தந்தை நான் என்று நீங்கள் ஏன் எங்களுக்குக் கூறவில்லை ? எங்கள் அன்னையைக் கனிவின்றி, கண்ணிய மின்றிக் காரண மின்றிக் கானக விலங்குபோல் காட்டுக்குத் துரத்திய கோசல மன்னர் நீங்கள் தானா ? பிதாவாக இருந்து, எங்களை இதுவரைக் காண வராத கோசல மன்னர் நீங்கள் தானா ? இன்று இவரைக் கண்டும் காணாமல் போனது எங்கள் நல்ல காலந்தான்! [இராமனைக் கூர்ந்து நோக்கி] எங்கள் தந்தை என்று சொல்லக் கூட உங்களுக்குத் தயக்கமா ? வெட்கமா ? உங்கள் புதல்வர் நாங்கள் என்று சொல்வதில் கூட அத்தனை வெறுப்பா ? அல்லது வெட்கமா ? [இராமன் வேதனை தாங்காமல் தலையைத் தொங்க விடுகிறான்.]
வால்மீகி: மாமன்னா! ஆசிரமத்தில் சீதாவுக்கு பிறந்த இந்த இரட்டைச் சிறுவர் உன்னருமைப் புத்திரர்! அதில் சந்தேகம் வேண்டாம்! [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! சந்தேக மின்றி இவர் உங்கள் தந்தைதான்!
இராமன்: [ஆச்சரியமோடு] மகரிஷி! சீதாவுக்குப் பிறந்த இருவரும் மெய்யாக என் புதல்வர்களா ?
வால்மீகி: ஆமாம், அதில் எந்த சந்தேகமும் வேண்டாம்.
லவா, குசா: வந்தனம், வந்தனம் பிதாவே! [வணங்குகிறார்கள்]. [ஆத்திர மோடு] சந்தேகம் தீராத் தந்தை! சந்தேகம்! சந்தேகம்!! சந்தேகம்!!! சந்தேகக் குணம் இன்னும் தந்தைக்குக் குறைய வில்லையே!
வால்மீகி: ஆமாம் மாமன்னா! இவர்கள் உன் அருமைப் புதல்வரே! பிரம்மா, சிவன், விஷ்ணு ஆகிய மூவர் சாட்சியாகச் சொல்கிறேன். இவர்கள் உன் அருமைப் புதல்வரே! அன்றைக்கு இலட்சுமணன் காட்டில் விட்டு சென்ற கர்ப்பவதி சீதாவுக்கு என் ஆச்சிரமத்தில் தங்க இடமளித்தேன். சீதாவுக்கு இரட்டைப் பிள்ளைகள் பிறந்தார்கள். லவா, குசா வென்று பெயர் வைத்தவன் நானே! பிறந்ததும் அவர்களது ஜோதிடத்தைக் கணித்து, கிரகங்களின் அமைப்பையும், எதிர்காலத்தையும் சோதித்தேன். இராஜ அம்சங்கள் படைத்த அவர் இருவரும், மாமான்னரின் பரம்பரை வாரிசுப் பட்டமேறும் இளவரசர்கள். அதில் எந்த ஐயமும் இல்லை, மாமன்னா!
[அச்சமயத்தில் பரதன், இலட்சுமணன், சத்துருக்கனன் மூவரும் கையில் கட்டுகளுடன் முன்வந்து வால்மீகி மகரிஷியை வணங்குகிறார்கள். சீதா தனியாகத் தூரத்தில் நின்று வேடிக்கை பார்க்கிறாள். அனுமான் சீதாவின் அருகில் நிற்கிறான்.]
மூவரும்: வணக்கம் மகரிஷி! (பரதன் மட்டும்) யாரென்று கேட்டுக் கொள்ளாமல், சிறுவருடன் நாங்கள் போரிட்டதும், எங்கள் தவறே! அசுவமேத யாகம் புரிந்ததின் எதிர்பாராத பலன், சீதா அண்ணி, சிறுவர்கள் அண்ணாவுடன் சந்திப்பு! அவர்களுடன் எங்கள் சந்திப்பு!
இலட்சுமணன்: மகரிஷி! வீர புத்திரரான லவா, குசா இருவருக்கும் நீங்கள் அளித்த வில் பயிற்சியைப் பாராட்டுகிறோம்! பாருங்கள் சிறுவர்கள் எமக்களித்த அழியாத நினைவுச் சின்னங்களை! [மூவரும் தங்கள் கட்டுகளைக் காட்டிச் சிரிக்கிறார்கள்]. அனுமார் ஒருவர்தான் வில்லடிக்குத் தப்பியவர்! இராம பரம்பரைப் பாலர்களைக் கண்டதும் எங்கள் கைகளும் ஏனோ அம்புகளை ஏவக் கூசின! வில்லை முழுவதும் வளைக்க எங்கள் மனம் விழைய வில்லை! நாங்கள் விடும் அம்புகள் சிறுவர் மேல் பட்டு விடக் கூடாது என்று அஞ்சினோம்! கண்கள் குறி வைத்தாலும் கைகள் தடுமாறி அம்புகள் அவர்கள்மேல் படாது அப்பால் சென்றன. ஆயினும் ஓரிரு அம்புகள் எப்படியோ சிறுவர்களைக் காயப்படுத்தி விட்டன!
வால்மீகி: அருமைச் சிறுவர்களே! உன் தந்தைக்கு மூன்று தம்பியர். மூத்தவர் பரதன், அடுத்தவர் சத்துருகனன், இளையவர் இலட்சுமணன். எல்லாருக்கும் மூத்தவர்தான் உன் பிதா. அதோ சீதாவின் பக்கத்தில் நிற்பவர்தான் அனுமான்! உன் பிதாவின் வலது கை போன்றவர்! அவர் இந்தக் கண்டத்தின் தென்முனை வாசி. சீதாவை இலங்காபுரியிலிருந்து மீட்கக் கடலில் கற்பாலம் அமைத்தவர் அவர். சீதாவின் இருப்பிடத்தை முதலில் கண்டவரும் அவரே! இராவணன் வயிற்றைக் கலக்கி இலங்காபுரிக்குத் தீயிட்டவர் அவர்! தென்னக வீரர் அனுமாரின் உதவி கிடைத்திரா விட்டால், உன் அன்னையை, உன் தந்தை மீட்டிருக்க முடியாது!
லவா, குசா: (இருவரும் அனுமான், பரதன், சத்துருகனன், இலட்சுமணன் அனைவரையும் மீண்டும் வணங்குகிறார்கள்) மகரிஷி! சிறிது நேரத்துக்கு முன் அன்னையும் அவர்களை அறிமுகப் படுத்தினார்கள்.
வால்மீகி: [லவா, குசா இருவரையும் பார்த்து] பாலர்களே! குதிரையை அவிழ்த்து விடுங்கள். இனிமேல் குதிரைக்காகப் போர் வேண்டாம்.
லவா, குசா: குருதேவா! அப்படியே செய்கிறோம். [அனுமான் சென்று குதிரையை அவிழ்த்துக் கயிற்றைக் கையில் பிடித்துக் கொள்கிறான்]. [இருவரும் அடுத்து இராமனின் பக்கத்தில் போய் நிற்கிறார்கள். இராமன் இருவரையும் அன்புடன் தழுவிக் கொள்கிறான்] பிதாவே! ஏன் எங்கள் தாயைக் கண்டும் காணாதது போல் நிற்கிறீர்கள் ? எங்கள் தாயுடன் பேச ஏன் தயங்குகிறீர்கள் ?
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 28
- நத்தை ஓட்டுத் தண்ணீர்
- ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)
- நிஜம் நிழலான போது…
- ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்
- ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்
- இருண்ட இதயம்
- மருமகளின் மர்மம் – 6
- குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்
- பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு
- ஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள்
- வெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )
- கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்
- கவுட் Gout மூட்டு நோய்
- உனக்காக மலரும் தாமரை
- 4 கேங்ஸ்டர்ஸ்
- ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை
- திண்ணையின் இலக்கியத்தடம் -12
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !
- தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று
- சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]
- சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10
- பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.
- புகழ் பெற்ற ஏழைகள் 36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை……
- மனம் போனபடி .. மரம் போனபடி