6
ஜோதிர்லதா கிரிஜா
மாலையில் கோவிலுக்குப் போகலாம் என்று தான் சொன்னதற்கு நிர்மலாவிடமிருந்து உற்சாகமான பதில் வரவில்லை என்று கண்ட சாரதா ஒருகால் தான் சொன்னது அவள் காதில் விழவில்லையோ என்கிற ஐயத்துடன், “என்ன, நிர்மலா? பதில் சொல்லாம இருக்கே?” என்றாள்.
“என்ன அத்தை கேட்டீங்க?”
சாரதா சிரித்தாள் : “ஏற்கெனவே ஒரு மாதிரியா இருந்தே. அவன் கிட்டேருந்து •போன் வேற வந்திடிச்சு. கோவிலுக்குப் போலாம்னு சொன்னேன்.”
இன்று ஏதேனும் காரணம் சொல்லிக் கோவிலுக்குப் போவதை நிறுத்தினாலும், நிரந்தரமாய் அதைத் தள்ளிப் போட முடியாது என்று தோன்றியதால் சம்மதிப்பதைத் தவிர அவளுக்கு வேறு வழி இல்லாமல் போயிற்று. “போலாம், அத்தை!” என்றாள்.
“என்னங்க! கோவிலுக்குப் போறதா யிருக்கோம். நீங்களும் வாங்க.”
“உத்தரவு!” என்ற சோமசேகரன் கையில்
இருந்த புத்தகத்தை மூடிவைத்தார்.
மாலை ஐந்து மணிக்குக் கதவைப் பூட்டிக்கொண்டு மூவரும் படி இறங்கினார்கள். இந்த இரண்டு மாதங்களில் தன் மாமனார்-மாமியாருடன் நிர்மலா ஒரே ஒரு தடவைதான் கோவிலுக்குச் சென்றிருந்தாள். அப்போதும் சரி, ரமேஷ¤டன் திரைப்படம், கடற்கரை என்று பல இடங்களுக்குச் சென்ற போதும் சரி, அவளுக்கு எந்த மன உளைச்சலும் ஏற்படவில்லை. நவனீதகிருஷ்ணனைப் பற்றிய அச்சம் அவளுக்கு அவ்வளவாக இல்லாதிருந்தது. இப்போது அவன் அவளது இருப்பிடத்தைக் கண்டுபிடித்துவிட்டதால், அவனால் இனித் தொல்லை ஏற்படப்போவது உறுதி. எனவே கூடிய வரையில் வெளியே போகாதிருப்பது நல்லது. ஆனால், வெளியே அவளைக் காண முடியவில்லை என்பதாலேயே அவன் தொலைபேசியில் அவளிடம் பேச முயன்றான் என்பது புரிய, அவளுக்கு உதறல் எடுத்தது. ‘”அம்மா! அம்மா!” என்று அவள் உள்ளம் அழுதது.
.. .. .. கோவிலுக்குள் நுழைந்த கொஞ்ச நேரத்தில் கற்பூரம் எடுத்துவராதது தெரிய, சாரதா, “கற்பூரம் வாங்கிட்டு வர மறந்துட்டமே?” என்றாள்.
”மறந்துட்டமேன்னு ஏன் எல்லார் மேலயும் பழி சுமத்தறே? நீ தானே தேங்காய், பழம், வெத்திலை எல்லாம் வாங்கினே? அம்மா, நிர்மலா! இந்தா, காசு. கோவிலுக்குப் பக்கத்துலயே இருக்கிற அந்தக் கடையிலேயே கற்பூரமும் கிடைக்கும். ஒரு பாக்கெட் கற்பூரம் வாங்கிட்டு வந்துடும்மா!” என்று சோமசேகரன் செஞ்சுதலாய்க் கூறித் தமது சட்டைப்பைக்குள் கைவிட்டார்.
“எங்கிட்டவே காசு இருக்கு, மாமா!” என்ற நிர்மலா சற்றே தயக்கம் காட்டினாள்.
“என்னங்க, நீங்க? நீங்க போகாம அவளைப் போய் அனுப்பறீங்களே?”
“எனக்குக் காலை திடீர்னு இழுத்துப் பிடிச்சுக்கிட்டு இருக்கு, சாரதா. அதான்.”
நிர்மலா புன்சிரிப்பைத் தோற்றுவித்துக்கொண்டாள். “இங்கே பக்கத்துல இருக்கிற கடைதானே, அத்தை? நானே போய் வாங்கிட்டு வந்துர்றேன்,” என்று அவள் கிளம்பினாள்.
.. .. ..கற்பூரம் வாங்கிக்கொண்டு அவள் கிளம்பிய நேரத்தில், “ஹாய்! பேபி! சவுக்கியமா?” என்று அந்தக் கரகரப்புக்குரல் அவள் காதருகே உரசாத குறையாய்க் கேட்டது. தன் அத்தனை நாடிகளும் ஒடுங்க, எச்சில் விழுங்கியபடி அவள் தலை திருப்பினாள்.
“அப்படி ஓரமாப்போய் அந்த ரிக்ஷா ஸ்டாண்டுக்குப் பக்கத்தில நின்னு பேசலாம்.”
“எதுக்கு அநாவசியமா இங்க வந்து நிக்கிறீங்க? போயிடுங்க. எங்க மாமாவும் அத்தையும் கோவிலுக்குள்ளே இருக்காங்க. எந்த நிமிஷமும் கடைக்குப் போன பொண்ணை இன்னும் காணமேன்னு தேடிக்கிட்டு இங்கே வந்தாலும் வந்துடுவாங்க.”
“அதைப் பத்திக் கவலைப் பட வேண்டியது நீ, பேபி. நானில்லே, கண்ணு!”
“அவங்க பார்வையிலெ நீ பட்றது உனக்கு நல்லதில்லே.”
“நான் சொல்ல வேண்டியதை நீ மாத்திச் சொல்றியே, பேபி?”
“இத பாரு., இது நாலு பேரு போற வர்ற இடம். உன்னோட நான்பேசிக்கிட்டு இருக்க முடியாது. எங்க மாமா, அத்தை கண்ணுல பட்டா, கேவலமா நினைப்பாங்க – பொறுக்கி மாதிரி தெரியிறவனோட இவளுக்கு என்ன பேச்சுன்னு!”
“ஏய்! வார்த்தையை அளந்து பேசும்மா. வா, அப்படி ஓரமா. பொறுக்கி, கிறுக்கின்னு வாயை ஓட்டாதே. ஒரு சிறுக்கிக்குப் பொறந்தவ நீ! ஞாபகம் வச்சுக்க.”
“எங்கம்மாவைப் பத்தி மேற்கொண்டு ஒரு வார்ததை சொன்னே, இது நடுத்தெருன்னும் பாக்காம அறைஞ்சுடுவேன், அறைஞ்சு! ஜாக்கிரதை. அதோட விளைவு என்னவாயிருந்தாலும் எனக்குக் கவலை கிடையாது.”
அவ்வளறு ஆத்திரமாய்ப் பேசியது தான்தானா என்று அவளுக்கே வியப்பாக இருந்தது. எனினும் அவள் கால்கள் அவன் காட்டிய ரிக்ஷா நிறுத்தம் நோக்கி நடந்துகொண்டிருந்தன.
“உன்கிட்ட அறை வாங்கக் குடுத்து வெச்சிருக்கணுமே, பேபி! அப்ப உன்னோட பட்டுக்கை என்னோட கன்னத்துல படுமில்ல? அப்பால, ஏசு சொன்னது மாதிரி என்னோட இன்னொரு கன்னத்தையும் காட்டுவேன்!”
“சீ! ஏசுவை உன்னோட அழுக்கு நாக்கால உச்சரிக்காதே. என்ன வேணும் உனக்கு? எதுக்காக என்னை இப்படி வதைக்கிறே?”
நிர்மலாவின் குரல் கம்மியது. கண்களிலிருந்து கண்ணீர் எட்டிப் பர்த்தது.
“மனசைத் தளரவிடக் கூடாது, பேபி! என்ன வேணும்னா கேக்குறே? ஒண்ணு எனக்கு நீ வேணும். பேசாம எங்கூட வந்துடு. உங்கம்மா எம்புட்டு ராஜ போகமா வாழ்ந்தாங்க, தெரியுமா? எவ்வளவு பணம் சேர்த்தாங்க, தெரியுமா? ஆனா உங்கம்மா மாதிரி ஒரு முட்டளை நான் கண்டதில்ல. பாவப்பணம்னு சொல்லி எல்லாத்தையும் யாராருக்கோ குடுத்துக் கரைச்சா.”
“எனக்கு வழி விடு. இப்ப சொன்னியே, நான் வேணும்னு, அது சொப்பனத்துல கூட நடக்காது. நகரு, நான் போகணும்.”
“இரும்மா, பேபி. எம்புட்டுப் பெரிய சிக்கல்ல இருக்கிறவ நீ! உன்னைப் பத்தின உண்மையை எல்லாம் உங்க மாமனார்-மாமியார் கிட்ட எடுத்துவிட்டா, உன்னோட கதி என்ன ஆகும்? யோசிச்சியா, கண்ணு?”
“. . . . . . . . .”
“உன் புருஷன் அமெரிக்கவுக்குப் போயிருக்கிறானாமே? அவன் தான் ஊர்ல இல்லியே? நீ ஏன் நைசாப் புறப்பட்டு ஒரு தரம் வந்துட்டுப் போகக்கூடாது? ஆறு மாசம் ஆவுமாமே அவன் வர்றதுக்கு? அது வரையில் .. நீ.. ஏன் நான் சொல்றபடி.. .. ..”
நிர்மலாதன் நெஞ்சினுள் கனன்றுகொண்டிருந்த நெருப்பையெல்லாம் விழிகளுக்குக் கொண்டுவந்து தேக்கி அவளை ஒரு பார்வை பார்த்தாள். அதன் சூட்டைத் தாங்க முடியாமல் அவன் தன் பார்வையை ஒரு நொடி விலக்கிக்கொண்ட பிறகு மறுபடியும் அவளைப் பார்த்தான். நகர முற்பட்ட அவளை வழிமறித்தான்.
“இத பாரு, பேபி! அன்னைக்குத் தப்பிச்சுட்டே. இந்த நவனிதகிருஷ்ணன் ஒண்ணை அடையணும்னு நினைச்சா, அதை அடையாம விட்டதில்ல. ஆனா, பாரு, எனக்கும் ஒரு நியாயம் இருக்கு. – அக்கா தங்கச்சிங்க கூட நான் பொறக்காட்டியும்! கலியாணம் ஆயிறுச்சு உனக்கு. நீயா விரும்பினா வரலாம். அதைத்தான் நான் சொல்ல வந்தேன். ஒண்ணு நீ வேணும், இல்லாட்டி பணம் வேணும்னு! சொல்லி முடிக்கிறதுக்குள்ள உனக்குப் புசுக்னு கோவம் வந்திடிச்சு.. .. .. ஆமா? உம் புருசன் வீடு ரொம்பப் பெரிய இடமாமே?”
“அவங்க பெரிய இடமா யிருந்தா எனக்கென்ன ஆச்சு? நான் எப்படி உனக்குப் பணம் தர முடியும்? நகரு. என்னைத் தேடிக்கிட்டு அவங்க வந்துடப் போறாங்க!”
“மறுபடியும் சொல்றேன், பேபி! அதுக்குக் கவலைப்பட வேண்டியது நீ தான்! நானில்லே, கண்ணு! .. .. .. உன் கழுத்துல போட்டிருக்கியே, நெக்லேஸ், அதை ஓசைப்படாம கழட்டிக் குடுத்துட்டுப் போயிட்டே இரு. அப்பால நான் உன்னோட வழிக்கு வரவே மாட்டேன்.”
‘உன் பேச்சை எப்படி நம்புறது?”
‘நம்பித்தான், பேபி, ஆகணும். வேற வழியே இல்லே.”
“சரி. இனிமே •போன் கீன் பண்ணாதே. என்னை எங்கே பாத்தாலும், இது மாதிரி வந்து நின்னு பேசாதே. இந்தா!”
நிர்மலா தன் கழுத்து அட்டிகையைக் கழற்றி எடுத்து அவனிடம் கொடுத்தாள்.
“தேங்க் யூ, பேபி!” என்று இளித்தவாறு, அதைப் பெற்றுக்கொண்ட அவன் தன் கைக்குட்டையில் அதை வைத்து முடிச்சுப் போட்டுக் கைப்பையில் போட்டுக்கொண்டு, “பை!” என்று விடை பெற்றுப் போனான்.
அவனோடு பேசிக்கொண்டு நின்ற போது அவளை ஆட்கொண்டிருந்த துணிச்சல் இப்போது அவளைக் கைவிட்டுவிட்டது. ஏற்கெனவே தொடங்கி விட்டிருந்த படபடப்பு இன்னும் அதிகரித்தது. இதயத்தின் தட் தட் ஓசையில் நெஞ்சுக்கூடே பிளந்து விடும் போல் இருந்தது. குப்பென்று வேர்த்தது. உள்ளங்கையில் வேர்வை பிசுபிசுத்தது. கால்கள் தொய்ந்து நடை தள்ளாடியது. கண்கள் கூட இலேசாய் இருண்டன. சமாளித்துக்கொண்டு நடக்கலானாள்.
சந்நிதியை அவள் அடைந்த போது சாரதா மட்டும் தான் வரும் வழியைப் பார்த்துக்கொண்டிருந்ததை அவள் கவனித்தாள்.
“மாமா எங்கே, அத்தை?”
“உன்னைத் தேடிக்கிட்டுப் போயிருக்காரு. நீ என்ன பச்சைப் பிள்ளையா, வழி தவறிப் போறதுக்கு? ஆன மட்டும் சொன்னேன். சொல்லச் சொல்லக் கேக்காம போயிருக்காரு. இப்ப அவரைத் தேடிக்கிட்டு நாம போகணுமா?” என்று சாரதா சிரித்தாள்.
பிறகு, பார்வை சட்டெனக் கூர்மையாக, “ஏன் உன் முகமெல்லாம் வேர்த்திருக்கு?” என்று வியப்புடன் கேட்டாள்.
“வேற ஒண்ணுமில்லே, அத்தை. திரும்பி வர்றப்ப சேலை தடுக்கி விழுந்துட்டேன். ஆனா அடி கிடி படல்லே.”
“ஊமை அடியா இருக்கப் போகுது. வீட்டுக்குப் போனதும் வெந்நீர்ல குளிச்சுடு.. .. .. ஆமா? ஏன் இம்புட்டு நாழி? கோவிலண்டை இருக்குற கடைக்குத்தானே போனே?”
“அங்கே ஒரே கூட்டம், அத்தை! அதனால வேற கடைக்குப் போனேன்.”
“என்னம்மா? அர்ச்சனையா?”
“ஆமா, குருக்களையா! ரமேஷ், அவிட்ட நட்சத்திரம்.”
தட்டைப் பெற்றுக்கொண்டு குருக்கள் நகர்ந்தார். தீபாராதனை ஆனதும் எல்லாரும் கலையத் தொடங்கினார்கள். சாரதாவும் நிர்மலாவும் பிரசாதம் பெற்றுக்கொண்டு ஒவ்வொரு சாமி சந்நிதியிலும் நின்று தொழுதவாறு மெதுவாக நடந்தனர். மேலும் பதினைந்து நிமிடங்கள் கழிந்த பிறகு சாரதா அமைதி இழந்தாள்.
“போய்ப் பாக்கலாம், நிர்மலா. ரோட்ல ஒரே ட்ரா•பிக். பயம்மா யிருக்கும்மா.”
“அப்படி எதுவும் இருக்காது, அத்தை. இப்ப நான் வர்றதுக்கு லேட்டாச்சில்லே? அது மாதிரி ஏதாவது அற்பக் காரணமா யிருக்கும்.”
கோவில் வாசலில் காலணிகளைக் கழற்றிப் போட்ட இடத்துக்கு வந்தார்கள்.
“அம்மா! எம்பத்தொண்ணுதானே உங்க நம்பர்? செவப்பா உசரமா ஒரு பெரியவர் டோக்கன் நம்பரைச் சொல்லித் தன்னோட செருப்பை மட்டும் வாங்கிட்டுப் போயிட்டாரு. உங்கரெண்டு பேரையும் வூட்டுக்குப் போகச்சொன்னாரு. பின்னாடியே வர்றாராம். . எவனோ பிக்பாக்கெட் அடிச்சுட்டானாம். அது விஷயமாப் போயிருக்கிறதா சொல்லச்சொன்னாரு,” என்று செருப்புகளின் காவலாளி சொன்னதும் நிர்மலாவுக்கு என்னமோ நெரடியது.
“அது விஷயமா போலீஸ் ஸ்டேஷனுக்குத்தானே போயிருக்காரு?”
“இல்லீங்கம்மா. பிக் பாக்கெட் காரனையே துரத்திக்கிட்டுப் போறதாச்சொல்லிட்டு ஓட்டமா ஓடினாரு.”
“பிக்பாக்கெட் காரனைப் பிடிக்கிறதுக்கு அவரு உடனே இல்லே ஓடியிருக்கணும்? இங்க வந்து செருப்பை வாங்கிட்டு சாவகாசமாக் கெளம்பிப் போற வரைக்கும் அவன் நின்னுட்டு இருப்பானா என்ன? ஒண்ணும் புரியலியே?’ என்று யோசித்த சாரதா, “அய்யய்யோ! எதுக்கு இந்த வம்பு உங்க மாமாவுக்கு? பேசாம போலீஸ் ஸ்டேஷனுக்குப் போய்ப் புகார் மட்டும் குடுக்க வேண்டியது தானே? உங்க மாமாவுக்குத் தான் ரொம்ப பாலியம்னு நெனப்பு! .. .. .. ஏம்ப்பா! ஆட்டோவிலதானே துரத்திட்டுப் போறாரு? இன்னைக்குப் பாத்து எங்க காரு ரிப்பேரு.”
“அதெல்லாம் எனக்குத் தெரியாதும்மா.”
இருவரும் தத்தம் செருப்புகளை அணிந்துகொண்டார்கள்.
“சரிப்பா.. .. .. வாம்மா, நிர்மலா. நாம போலாம் வீட்டுக்கு. .. .. .. ஆட்டோ! ஆட்டோ! கொஞ்சம் நில்லுங்க.”
சாரதாவின் அழைப்புக்கு வந்து நின்ற ஆட்டோவில் ஏறி உடனே இருவரும் அமர்ந்தார்கள். ஆட்டோ கிளம்பியது.
`அத்தை தன் கழுத்தைக் கவனிக்காமல் இருக்க வேண்டுமே என்று வழியெல்லாம் நிர்மலாவுக்குக் கவலையாக இருந்தது. பிரார்த்தித்தபடியே இருந்தாள். எனினும், உடனே கவனிக்கத் தவறினாலும், நிரந்தரமாக அப்படி நடக்காது என்பதும், அத்தை அது பற்றி விசாரிக்காவிட்டாலும், கழுத்து அட்டிகையைக் காணவில்லை என்பதைத் தான் சொல்லித் தான் ஆக வேண்டும் என்பதும் அவளுக்குப் புரிந்தே இருந்தன.
ஆனால், படி ஏறி வீட்டுக்குள் நுழைந்ததுமே சாரதா கேட்ட கேள்வியே அதுதான்.
“என்ன, நிர்மலா? கழுத்து மூளியா யிருக்கு? போட்டிருந்த நெக்லேஸ் என்ன ஆச்சு?”
நிர்மலா எச்சில் கூட்டி விழுங்கினாள்.
(தொடரும்)
- டௌரி தராத கௌரி கல்யாணம் – 28
- நத்தை ஓட்டுத் தண்ணீர்
- ஊடகங்களின் கதாநாயகர்கள் – ABCD (American Born Confused Desi) (கேரளா, இயக்குநர்- மார்ட்டின் பிரக்காட்)
- நிஜம் நிழலான போது…
- ஈசாவின் விண்ணுளவி கோசி [GOCE] கண்டுபிடித்த பூகம்ப நில அதிர்ச்சிகள் உண்டாக்கிய புவியீர்ப்புத் தழும்புகள்
- ‘அயலகத் தமிழாசிரியர்’ பட்டயம் – Diploma in Diaspora Tamil Teacher எனும் ஓராண்டுப் பட்டயப் படிப்பினை SRM பல்கலைக்கழகத் தமிழ்ப்பேராயம் தொடங்கியுள்ளது.
- ஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் அத்தியாயம் 12 ஜராசந்த வதம்
- இருண்ட இதயம்
- மருமகளின் மர்மம் – 6
- குழந்தைக்குப் பிடிக்கும் நட்சத்திரங்கள்
- பெண்களும் வர்க்கமும் – சங்க இலக்கியங்களை மையமாகக் கொண்ட ஆய்வு
- ஒரு ஆல விருஷம் பரப்பிய விழுதுகள்
- வெள்ளை யானை ( தலித் இலக்கியத்தில் மேலும் ஒரு தடம் ! )
- கொட்டுப் பூச்சிகளும் ஒட்டடைகளும்
- கவுட் Gout மூட்டு நோய்
- உனக்காக மலரும் தாமரை
- 4 கேங்ஸ்டர்ஸ்
- ஜாக்கி சான் 19. ஆஸ்திரேலிய வாழ்க்கை
- திண்ணையின் இலக்கியத்தடம் -12
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 52 ஆதாமின் பிள்ளைகள் – 3 (Children of Adam) சந்தையில் பெண் ஏலம் .. !
- தாகூரின் கீதப் பாமாலை – 92 என் கனவை நிறைவேற்று
- சோகச் சித்திரங்கள் [தில்லையாடி ராஜாவின் “என்வாழ்க்கை விற்பனைக்கல்ல…” எனும் நூலை முன்வைத்து]
- சீதாயணம் நாடகம் -10 படக்கதை -10
- பொத்துவில் அஸ்மின் எழுதிய ‘பாம்புகள் குளிக்கும் நதி’ கவிதை நூல் அறிமுக விழா சென்னையில்.
- புகழ் பெற்ற ஏழைகள் 36. பார்போற்றும் தத்துவமேதையாக விளங்கிய ஏழை……
- மனம் போனபடி .. மரம் போனபடி