நியூட்டன் காலத்தில் வாழ்ந்த வானியல் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [சீராக்கிய மீள் பதிப்பு]

This entry is part 4 of 29 in the series 12 ஜனவரி 2014

[Giovanni Cassini]

(1625-1712)

சி. ஜெயபாரதன் B.E. (Hons), P.Eng. (Nuclear) கனடா

“காஸ்ஸினி அறிவுத் தேடல் பயிற்சியில் வேட்கை மிக்கவர்.  குறிப்பாகக் கவிதை, கணிதம், வானியலில் ஈடுபாடு மிக்கவர்.  அவர் வெறும் விஞ்ஞானக் கோட்பாட்டில் மட்டும் விரும்பம் உள்ளவர் அல்லர்.  தொலைநோக்கிகள் மூலம் உளவும் கூர்மை யான விண்ணோக்காளர். மறுக்க முடியாத அவரது கண்டு பிடிப்புகள் மட்டுமே நியூட்டனுக்கு முன் தோன்றிய வானியல் விஞ்ஞானிகள் வரிசையில் அவருக்கு ஓர் உன்னத இடத்தை அளிக்கப் போதுமானவை.”

டேடன் (Taton)

“உலகின் கண்களுக்கு நான் எப்படி தோன்றுகிறேன் என்பது எனக்குத் தெரியாது ! கடல் கரையில் விளையாடும் ஒரு சிறுவன், இன்றோ நாளையோ ஏதோ ஓர் அபூர்வக் கூழாங்கல் அல்லது எழிற் சிப்பியைக் கண்டெடுப்பது போல எனக்குத் தெரிகிறது! ஆனால் கண்டுபிடிக்க முடியாதபடி மாபெரும் மெய்ப்பாட்டுக் கடல் என் கண்முன்னே பரந்து கிடக்கிறது !”

ஐஸக் நியூட்டன்

“கடந்த நூற்றாண்டுகளில் மறைந்திருந்த மகத்தான சில வானியல் காட்சிகளை, நான் மட்டும் முதலில் காணும்படி வாய்ப்பளித்த கடவுளின் பேரருளுக்கு எனது அளவு கடந்த நன்றியைத் தெரிவிக்கிறேன்”.

காலிலியோ (1564-1642)

முன்னுரை:    உலகின் முதல் பெளதிக விஞ்ஞானி என்று அழைக்கப் படும் இத்தாலியில் தோன்றிய காலிலியோ, அடுத்து பிரிட்டிஷ் கணித விஞ்ஞானி ஐஸக் நியூட்டன், டச் விஞ்ஞானி கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ், இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி ஆகிய நால்வரும் ஐரோப்பாவில் வானியலைக் கணித வடிவில் விஞ்ஞானம் ஆக்கிய முக்கிய மேதைகள் ஆவார். அவர்கள் யாவரும் காபர்னிக்கஸ் கூறிய பரிதி மைய நியதியை [Sun-centered System] மெய்யாகக் கருதிப், பண்டைக் காலப் புவி மையக் கோட்பாடைப் [Earth-centered System] புறக்கணித்தவர் !

காலிலியோ முதன் முதலில் வெள்ளியின் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சியைத் தனது தொலை நோக்கியில் கண்டு பரிதி மைய நியதியை நிரூபித்துக் காட்டினார். பிற்போக்கான தொலை நோக்கியில் காலிலியோ முதலில் தவறாகப் புரிந்து கொண்டு கூறிய ‘நீள்கோளச் சனியைத்’ [Ellipsoidal Saturn], திருத்தி ஹியூஜென்ஸ் செம்மையான தனது தொலைநோக்கியில் சனிக் கோளைக் கண்டு, அதைச் சுற்றித் திடமான வளையங்கள் இருப்பதை முதலில் உலகுக்கு அறிவித்தார்!  அவருக்குப் பிறகு, காஸ்ஸினி அந்தக் கருத்தை மீண்டும் விருத்தி செய்து, சனியின் வளையங்கள் திடமானவை [Solid Rings] அல்ல வென்றும், அவற்றிடையே எண்ணற்ற இடை வெளிகள் உள்ளன வென்றும் எடுத்துக் கூறினார்.

சூரிய மண்டலக் கோள்களில் நீர்வளம், நிலவளம், உள்நெருப்பு, காற்றுச் சூழ்வெளி யாவும் படைக்கப்பட்டு, அவற்றில் புல்லினம், உயிரினம், மானிடம் ஆகிய அனைத்தும் வளர்ச்சி பெறத் தகுதியுள்ள அண்டம் பூமி ஒன்றுதான்! ஆனால் எல்லாக் கோள்களிலும் எழில் மிகுந்த விந்தையாக, ஒளிமயமாக அநேக வளையல்கள் அணிந்தது சனிக்கோள் ஒன்று மட்டுமே!  பூமியின் விஞ்ஞான மேதைகள் அவ்வரிய சனிக்கோளை 400 ஆண்டு களுக்கும் மேலாக தொலை நோக்கி மூலமாகவும், விண்கப்பலை அண்ட வெளியில் ஏவியும் ஆராய்ந்து வருகிறார்கள்!  காஸ்ஸினியின் பெயரால் 1997 இல் ஏவப்பட்டுப் பயணம் செய்யும் காஸ்ஸினி விண்வெளிக் கப்பல் ஆகஸ்டு 2004 முதல் சனிக் கோளை அடைந்து அரிய தகவல் சேமித்து வருவதுடன் திட்ட மிட்ட ஆறு ஆண்டுகளைக் கடந்து  பத்தாண்டுகளுக்கு மேலாக உளவித் தகவல் அனுப்பிக் கொண்டு வருகிறது !

 

 

காலிலியோ விண்வெளியில் கண்டுபிடித்தவை

கடந்த ஐந்து நூற்றாண்டுகளில் வாழ்ந்த விஞ்ஞானிகளின் வரிசையில் முன்னணியில் நிற்கும் உன்னத மேதையாகக் கருதப் படுபவர், காலிலியோ! முதன் முதலில் தன் கையால் அமைத்த தொலை நோக்கியில் அண்ட கோளங்களை ஆய்ந்து, விண்வெளியின் முகத்திரையைத் திறந்து வைத்தவர், காலிலியோ! பிறை வெள்ளியைக் கண்டு, அது சூரியனைச் சுற்றி வருவதைத் தொடர்ந்து நோக்கி, காபர்னிகஸின் ‘பரிதி மைய நியதி’ மெய்யான தென்று நிரூபித்துக் காட்டியவர், காலிலியோ! பூமியைச் சுற்றி வரும் நிலவுக்குப் பிறை வளர்ச்சி, பிறைத் தளர்ச்சி உண்டாகி முழுநிலவு, கருநிலவு தோன்றுவதுபோல், பரிதியைச் சுற்றி வருவதால்தான் வெள்ளிக் கோளுக்கும் பிறைத்தோற்றம் [Phase] ஏற்படுகிறது என்று எடுத்துக் காட்டியவர், காலிலியோ.

அடுத்து நிலவை நோக்கி அதன் குழிகளையும் மலைகளையும் வரைந்து காட்டினார்! பரிதியின் சிவப்புத் தேமல்களை [Sun Spots] முதன் முதலில் கண்டு பிடித்தவரும் காலிலியோவே! பூதக்கோள் வியாழனைச் சுற்றும் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்து உலகை வியக்க வைத்தவர், காலிலியோ! சூரிய மண்டலத்தின் எட்டாவது கோளான ‘நெப்டியூனை’ [Neptune] முதலில் கண்டு, அதன் ஆமைவேக நகர்ச்சியைக் குறித்து வைத்து, தான் ஒரு புதுக்கோளைக் கண்டதைக் கூட அறியாமல் போனவர், காலிலியோ! பிறகு 230 ஆண்டுகள் கடந்து நெப்டியூன் 1846 இல் ஜொஹான் கல்லே [Johann Galle] என்பவரால் கண்டு பிடிக்கப் பட்டது!

 

 

சனிக்கோளை முதலில் தொலைநோக்கியில் பார்த்து, அது முட்டை வடிவத்தில் இருப்பதாகக் கருதினார். ஆனால் அவருக்குப் பின் வந்த கிரிஸ்டியான் ஹியூஜன்ஸ் [Christiaan Huygens], தானமைத்த முற்போக்கு தொலைநோக்கியில் உற்று நோக்கி, அக்கருத்தைத் திருத்திச் சனியைச் சுற்றி வளையங்கள் இருப்பதாக விளக்கினார்! காலிலியோவின் கண்களுக்கு வளையங்கள்தான் சனியை முட்டை வடிவத்தில் காட்டி யிருக்க வேண்டும்!

காலிலியோதான் தனது தொலைநோக்கியில் அண்டக் கோள்களின் நகர்ச்சியை தொடர்ந்து நோக்கி முதன் முதல் ‘நோக்காய்வு வானியலை’ [Observational Astronomy] ஆரம்பித்து வைத்தவர்! அவர் எழுதிய ‘விண்மீனின் தூதர்’ [The Starry Messenger] என்னும் நூல் வானியல் விஞ்ஞானத் துறை வளர வழி வகுத்தது! பால்மய வீதிகள் [Milky Way] கோடான கோடி விண்மீன்கள் கொண்டுள்ளதைக் கண்டார்! உலக விஞ்ஞான மேதை ஆல்பர்ட் ஐன்ஸ்டைன் காலிலியோவை ‘நவீன பெளதிகத்தின் பிதா’ [Father of Modern Physics] என்று புகழ் மாலை சூடியிருக்கிறார்!

 

கிரிஸ்டியான்†ஹியூஜென்ஸ் வானியல் கண்டுபிடிப்புகள்

கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் (1629-1695) காலிலியோ, நியூட்டன் காலத்தில் வாழ்ந்த ஒரு டச் விஞ்ஞானி. இத்தாலிய விஞ்ஞான மேதை காலிலியோ (1564-1642) இறந்த ஆண்டும், பிரிட்டிஷ் விஞ்ஞான மேதை ஐஸக் நியூட்டன் (1642-1727) பிறந்த ஆண்டும் ஒன்றுதான்! அப்போது வாழ்ந்து வந்த கிரிஸ்டியான் ஹியூஜென்ஸின் வயது பதிமூன்று! ஐரோப்பாவின் இரு பெரும் முன்னோடி விஞ்ஞானிகள் [காலிலியோ, நியூட்டன்] படைத்த பல பெளதிகக் [Physics] கோட்பாடுகளைச் செம்மைப் படுத்தியும், மேன்மைப் படுத்தியும் பெரும் புகழ் பெற்றவர், ஹியூஜென்ஸ்! காலிலியோ ஆக்கிய தொலை நோக்கியை விருத்தி செய்தவரும், முற்போக்கான தொலை நோக்கியின் மூலம் முதலில், சனியின் வளையத்தை முதலில் கண்டுபிடித்தவரும் ஹியூஜென்ஸ் ஒருவரே!  ஆனால் அவரும் சனிக்கோளின் வளையங்கள் திடப் பிண்டத்தால் (Solid Rings) ஆனவை என்று தவறாகக் கூறினார்.

1656 இல் அவர் தயாரித்த முற்போக்கான தொலைநோக்கியில் முதலாக ஓரியன் நிபுளாவைக் [Orion Nebula] கண்டு பிடித்தார்! அடுத்து 50 மடங்கு பெருக்கம் தரும் மாபெரும் தொலை நோக்கியைத் தயாரித்துச் சனிக்கோளைச் சுற்றி வரும் ஒரு பெரிய துணைக் கோளைக் [Satellite] கண்டு பிடித்தார்! அது சனியைச் சுற்றி வரும் காலம் 16 நாட்கள் என்றும் கணக்கிட்டார்! அது டிடான் [Titan] என்னும் கிரேக்க இதிகாசப் பூதத்தின் குடும்பப் [Family of Giants] பெயரைப் பெற்றது! தொலைநோக்கி மூலம் செவ்வாய்க் கோளின் [Mars] தளத்தில் முதல் முதலாக மேடு பள்ளங்கள் இருக்கக் கண்டார்!

சனிக்கோளின் அற்புத வளையங்கள் கண்டுபிடிப்பு

காலிலியோவின் தொலைநோக்கி காட்டாத சனியின் வளையத்தை, 50 மடங்கு பெரிது படுத்தும் முற்போக்கான தொலைநோக்கியைத் தயாரித்து 45 ஆண்டுகள் கழித்து 1655 இல், கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் முதலில் கண்டு பிடித்தார்! வளையம் மெலிந்தது என்றும், சனி சுற்றிவரும் தளத்துக்கு 20 டிகிரி சாய்ந்த ‘திடவத் தட்டு ‘ [Solid Plate] என்றும், சனிக்கோளைத் தொடாமல் சுற்றி யிருக்கும், ‘துளைத் தட்டு’ [Donut Shape] என்றும் கூறினார்!  பின்னால் 1669 ஆம் ஆண்டில் சனியின் உட்புற, வெளிப்புற வளையங்கள் [Inner & Outer Rings], வளைங்களின் இடைவெளிகள், சனியின் நான்கு துணைக் கோள்கள் ஆகிய வற்றை இத்தாலிய பிரென்ச் விஞ்ஞானி கியோவன்னி காஸ்ஸினி [Giovanni Cassini] கண்டு பிடித்தார். அதன் பின் சனியின் வளையம் ‘திடவத் தட்டு’ என்னும் கருத்து மாறி, இடை வெளிகள் கொண்ட வளையங்களாக எடுத்துக் கொள்ளப் பட்டன!

வானியல் விஞ்ஞானி காஸ்ஸினி கண்டுபிடித்தவை

காஸ்ஸினி ஒரு கணித ஞானி. மேலும் அண்டக் கோள்களைக் கூர்ந்து உளவு செய்யும் வானோக்காளர் [Planet Observer]. பூமிக்கும் சூரியனுக்கும் உள்ள தூரத்தைத் துல்லியமாகக் கணிக்க, காஸ்ஸினி 1672 இல் சேகரித்த தகவல்கள் பயன்படுத்தப்பட்டன.  அண்டக் கோள்களான வியாழன், வெள்ளி, செவ்வாய் ஆகியவைத் தன்னைத் தானே சுற்றிவரும் காலத்தைக் கோள்களில் உள்ள நிரந்தரப் புள்ளிகளைத் தொடர்ந்து பல்லாண்டுகள் தொலைநோக்கி மூலம் பார்த்துப் பதிவு செய்தவர். அவர் கணித்த அண்டங்களின் சுற்றுக் காலங்கள், அவரது வாழ்நாளில் முரண்பாடுடைய புவிமைய நகர்ச்சிக்கு எதிராக எண்ணிக்கை நாட்களை அளித்தன.

 

கிரிஸ்டியான் ஹியூஜென்ஸ் தனது தொலைநோக்கியில் சனியின் மிகப் பெரும் சந்திரன், டிடானை [Titan] முதலில் கண்டுபிடித்த பின், காஸ்ஸினி மற்றும் நான்கு சந்திரன்கள் சனியைச் சுற்றி வருவதை எடுத்துக் காட்டினார்.  1652-1653 இல் காஸ்ஸினி முதன்முதல் ஒரு வால்மீனைக் கண்டு ஆராய்ந்தார். பூமியின் நிலவு பொழியும் வெளிச்சம், பரிதி மறைந்துள்ள சமயம் காலைக் கீழ்வானில், மாலை மேல் வானில் தெரியும் வெளிச்சம் ஆகியவற்றை ஆய்வு செய்து, அவற்றைப் பயன்படுத்தி வால்மீனின் [Comets] நகர்ச்சிக் கோட்பாடுகளை அறிவித்தார்!

பொலோனா செயின்ட் பெட்ரோனியஸ் கோயிலில் [St. Petronius Church, Pologna] இஞ்னேஸியோ தாந்தே [Ignazio Dante] 1576 இல் பயன்படுத்திய ‘பரிதிக் கடிகாரத்தைச்’ [Gnomon or Sun Dial] 1653 இல் செப்பணிட்டுப் பெரிது படுத்தி, ஆண்டுக் காலண்டரைத் [Yearly Calendar] திருத்தம் செய்தார். பரிதியைப் பற்றி ஆழ்ந்து ஆராய்ச்சிகள் செய்து, சில அட்டவணைகளை 1662 இல் வெளியிட்டார். 1664 இல் வால்மீன் ஒன்றைக் கண்டு அதன் நகர்ச்சிப் பின்பற்றி, அது பரிதியைச் சுற்றி வட்ட வீதியில் வருகிறது என்று அறிவித்தார். அதே ஆண்டு மிக நுணுக்கமான சக்தி வாய்ந்த தொலைநோக்கி மூலம், வியாழன் தன்னச்சில் சுற்றும் நாட்களைக் கணித்தார். அத்துடன் வியாழன் துருவப் பகுதிகளில் தட்டையாக இருப்பதாகவும் கூறினார்.  பூதக்கோள் வியாழனுடைய பட்டைகளையும், புள்ளி களையும் கண்டறிந்து பதிவு செய்தார். செவ்வாய்க் கோளின் சுய சுற்றைக் கணக்கிட்டு மூன்று நிமிடத் துல்லிமையில் பதிந்தார். 1668 இல் வியாழக் கோளின் சந்திரன்களைக் கண்டு பல விபரங்களைப் பதிவு செய்தார்.

ஒளியின் வேகத்தை அறிய விபரங்கள் சேகரித்தார். ஏழு ஆண்டுகள் கழித்து ரோமர் [Romer] அவரது தகவல்களைப் பயன்படுத்தி ஒளிவேகத்தைக் கணித்தார். சனியின் நான்கு சந்திரன்களைக் கண்டு பிடித்தபின், 1975 இல் வளையங்களை தொலை நோக்கியில் ஆராய்ந்தார். சனியின் வளையங்கள் தனித்தனியானவை என்றும், தொடர்ந்த வட்டமல்ல என்றும், இடைவெளி உள்ளவை என்றும், அவை கோடான கோடி சிறு, சிறு துணைக் கோள்கள் போல் சுற்றி வருகின்றன வென்றும் அறிவித்தார். 1679 இல் பூமியின் நிலவை நோக்கிப் பெரிய வரைப்படமாய் வரைந்து ‘விஞ்ஞானப் பேரவைக்குச் ‘ [Academy of Sciences] சமர்ப்பித்தார். காமிரா நிழற் படங்கள் [Photography] தோன்றிய காலம்வரை, காஸ்ஸினியின் படமே ஓர் உதவும் நிலவுப் படமாக இருந்து வந்தது. 1680 இல் பூமிக்கும், பரிதிக்கும் உள்ள ஒப்புமை நகர்ச்சி வேகங்களை ஆராய்ந்து, அண்டக் கோள்களின் சுற்றுவீதிகளைக் கணித்தார். அவை ‘காஸ்ஸினி யின் வளைகோடுகள்’ [Cassini Curves] என்று அழைக்கப் பட்டன. ஆனால் அக்கோடுகள் கெப்ளர் [Kepler] அனுமானித்த நீள்வட்ட வீதிகளை [Elliptical Orbits] ஒத்திருக்க வில்லை!

வானியலில் தேர்ச்சி பெற்ற காஸ்ஸினி அத்துடன் ‘நோக்கியல் விஞ்ஞானம்’ [Optics], ‘திரவழுத்தவியல்’ [Hydraulics], ‘வரைப்படவியல்’ [Cartography], சிவில், ராணுவ எஞ்சினியரிங் [Civil Engineering & Military Engineering] ஆகிய துறைகளிலும் நுணுக்க அறிவு உள்ளவராய் இருந்தார். அவரது திரவழுத்தவியல், பொறியியல் [Hydraulics, Engineering] திறமையைப் பாராட்டிப், போப்பாண்டவர் 1665 இல் ரோமானியக் கோயில்களின் மாநில நீர்நிலை வாரியங்களின் மேற்பார்வை அதிபராக நியமித்தார்.  ரோமாபுரியில் இருந்த போது, காஸ்ஸினி டைபர் நதியின் பாலத்தை உறுதிப் படுத்தியதாகத் தெரிகிறது.

கியோவன்னி காஸ்ஸினியின் வாழ்க்கை வரலாறு.

1625 ஆம் ஆண்டு இத்தாலியைச் சேர்ந்த ஜெனோவா [Genoa, Italy] என்னும் நகரில் ஜேகப் காஸ்ஸினி, ஜூலியா குரோவேஸி [Jacopo Cassini, Julia Crovesi] ஆகிய இருவருக்கும் பிறந்தார். பள்ளிப் படிப்பை அவர் வல்லெபோன் என்னும் ஊரில் முடித்த பின், கல்லூரிப் படிப்புக்கு ஜெனோவா நகருக்குச் சென்றார். கல்லூரியில் கவிதை, கணிதம், வானியல் துறைகளில் மிக்க ஆர்வம் காட்டித் தனது மேதமையை வெளிப்படுத்தினார், காஸ்ஸினி.


முதலில் காஸ்ஸினி வானியலில் [Astronomy] மனது ஊன்றாமல் ஜோதிடத்தில் [Astrology] ஈடுபாடு மிகுந்து தேர்ச்சி பெற்றார்! ஆனால் ஜோதிட முன்னறிவிப்பில் [Predictions] அவருக்கு நம்பிக்கை யில்லை! அவரது ஜோதிட வல்லமையை மெச்சி, 1644 இல் பொலோனா நகரின் மேலவை உறுப்பாளி [Senator] மார்க்குவிஸ் மல்வாஸியா காஸ்ஸினியை அழைத்து, பொலோனாவில் கட்டப்படும் பன்ஸானோ வானோக்க கத்தில் [Panzano Observatory] பணி செய்யும்படி வேண்டினார். அப்போது காஸ்ஸினிக்கு வயது பத்தொன்பது! ஆனால் கல்லூரியில் அடுத்து நான்கு ஆண்டுகள் படித்து, ஒருவிதப் பட்டமும் பெறாமல் 1948 முதல் பன்ஸானோ நோக்ககத்தில் சேர்ந்து பணியாற்றினார்! காஸ்ஸினி நோக்ககத்திற்கு வேண்டிய ஆய்வுச் சாதனங்கள், கருவிகள் ஆகியவற்றை வாங்கி அதை இயக்கத் துவங்கினார். இரண்டாண்டில் நோக்ககத்தை விருத்தி செய்து, செனட்டரின் பெரும் பாராட்டையும் மதிப்பையும் பெற்றார்.

அப்போது புகழ் பெற்ற விஞ்ஞானிகளான பட்டிஸ்டா ரிக்கியோலி [Battista Riccioli], பிரான்ஸெஸ்கோ கிரிமால்டி [Francesco Grimaldi] போன்றோரிடம் தனிப்பட்ட முறையில், காஸ்ஸினி நிறையக் கற்றுக் கொண்டார். அவர்கள் இருவரும்தான் பின்னால் ‘ஒளித்திரிபைக்’ [Diffraction] கண்டு பிடித்தார்கள். செனட்டர் மல்வாஸியாவின் ஆதரவில் 1650 இல் பொலோனா பல்கலைக் கழகத்தில் வானியல், கணிதத் துறைகளின் பேராசிரியராகப் பதவி பெற்று, காஸ்ஸினி ஆசிரியராகவும் பணி செய்தார்.

பிரென்ச் நாட்டுக் குடிநபரான விஞ்ஞானி காஸ்ஸினி

பொலோனா நோக்ககத்தில் காஸ்ஸினி 1652 ஆண்டில் ஒரு வால்மீனைக் கண்டு அதன் நகர்ச்சியை ஓராண்டு காலம் பதிவு செய்து வெளியிட்டார். அக்காலங்களில் அவர் டைகோ பிராஹோ [Tycho Brahe] 1659 இல் பிறப்பித்த புவி மைய ஏற்பாடை [Earth-centered System] நம்பினார்! அதாவது நிலாவும், பரிதியும் பூமியைச் சுற்றிவர, மற்ற கோள்கள் [செவ்வாய், புதன், வியாழன், வெள்ளி, சனி] சூரியனைச் சுற்றுவதாகக் கூறிய டைகோ பிராஹோவின் கருத்தை ஏற்றுக் கொண்டார்! பிறகு அக்கருத்து பிழையான தென்று உணர்ந்து, காஸ்ஸினி காபர்னிகஸ்ஸின் [Copernicus] பரிதி மையக் கோட்பாடை ஒப்புக் கொள்ளும்படி நேரிட்டது!

காஸ்ஸினியின் அண்டக்கோள் விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள் ஐரோப்பிய நாடுகளில் பாராட்டப் பட்டன. 1668 இல் பிரான்ஸின் அரசர் பதினான்காம் லூயி [Louis XIV] அவர்களிடமிருந்து அரண்மனை விருந்தில் கலந்து கொள்ள, காஸ்ஸினிக்கு அழைப்பிதழ் வந்தது. பாரிஸில் வானோக்ககம் ஒன்று கட்டப்பட்டு அதன் தலைமைப் பதவி பெரும் வருவாயுடன் அவருக்காகக் காத்திருந்தது! பதினான்காம் லூயி 1671 இல் அளித்த பாரிஸ் வானோக்ககத்தின் தலைமைப் பதவியை ஏற்றுக் கொண்டு, காஸ்ஸினி பிரென்ச் நாட்டின் குடிமகனாய் ஆனார். 1974 இல் ஜெனிவி டி லைஸ்டர் [Genevieve de Laistre] என்னும் ஓர் எழில்மாதை மணந்து பாரிஸில் நிரந்தரமாகக் குடியேறினார். 1677 இல் ஜேக்ஸ் காஸ்ஸினி [Jacques Cassini] என்னும் புதல்வன் அவருக்குப் பிறந்தான். தந்தையின் தடத்தில் நடந்து வானியல் விஞ்ஞானியாய்த் தேர்ச்சி பெற்றுத் தந்தை முதுமை அடைந்ததும், ஜேக்ஸ் காஸ்ஸினியே, பின்னால் பாரிஸ் வானோக்ககத்தின் தலைவர் பதவியைப் பெற்றார்!

1789 இல் பிரென்ச் விஞ்ஞானி பியர் ஸைமன் லாப்பிளாஸ் [Pierre Simon Laplace (1749-1827)] சனிக்கோளின் வளையங்கள் மிகச் சிறிய துணுக்குகள் கொண்டவை என்றும், அவையே சூரிய ஒளியைப் பிரதிபலித்துச் சுடரொளி வீசுகின்றன என்று விளக்கினார்! பிரிட்டிஷ் விஞ்ஞானி ஜேம்ஸ் மாக்ஸ்வெல் [James Maxwell (1831-1879)] கோடான கோடித் துணுக்குகள் தூரத்துக்கு ஏற்ப வெவ்வேறு வேகங்களில் சுற்றிக் கொண்டிருப்பதால்தான் வளையங்கள் நீடித்துச் சனிக்கோளைச் சுற்றி நிலை பெற முடிகிறது என்று கணித மூலம் 1857 ஆம் ஆண்டில், நிரூபித்துக் காட்டினார்! சனியைச் சுற்றித் திடவ வடிவு வளையமோ [Solid Ring], திரவ வாயு வளையமோ [Fluid Ring] இருந்தால் அவை சனியின் கவர்ச்சி விசையால் இழுக்கப் பட்டுத் தளத்தில் மோதி நொறுங்கி விடலாம் என்றும் ஜேம்ஸ் மாக்ஸ்வெல் கூறினார்!


காஸ்ஸினியின் இறுதிக்கால வாழ்க்கை

1695 இல் பதினெட்டு வயது மகன் ஜேக்ஸ¤டன் காஸ்ஸினி இத்தாலிக்குச் சென்றார். அங்கே உள்ள பல புவித்தள ஆய்வு நோக்குகளை [Geodesic Observations] இருவரும் பார்வை யிட்டனர். பொலோனாவுக்குச் சென்று தான் முப்பது ஆண்டு களுக்கு முன்பு ஆக்கிய சூரியக் கடிகாரத்தைக் காஸ்ஸினி செப்பணிட்டார். 1709 இல் மகன் ஜேக்ஸ் காஸ்ஸினி பாரிஸ் நோக்ககத்தில் சிறுகச் சிறுகத் தந்தையின் பணிகளை மேற்கொண்டார். தந்தையின் உடல்நிலை குன்ற ஆரம்பித்தது. குறிப்பாக கியோவன்னி காஸ்ஸினியின் கண்ணொளி மங்கிப் போய்க் கொண்டிருந்தது! இல்லச் சிறையில் [House Arrest] தள்ளப்பட்ட முதிய காலிலியோ பல்லாண்டுகள் விண்வெளி அண்டங்களையே பார்த்துப் பார்த்து ஒளியிழந்தது போல், காஸ்ஸினியின் கண்களும் அண்டக் கோள்களைக் கூர்ந்து பார்த்து ஒளி மங்கி 1711 இல் குருடாகிப் போயின! 1712 ஆம் ஆண்டு பாரிஸில் கியோவன்னி காஸ்ஸினி தனது 87 ஆம் வயதில் காலமானார்.

கியோவன்னி காஸ்ஸினி பல்கலைக் கழகத்தில் எந்தப் பட்டமும் பெறாத வானியல் விஞ்ஞானி! அவர் ஒரு நியதிவாதி [Theoretician] அல்லர்! மேதமை மிக்க கூரிய வானோக்காளர் [Gifted Astronomical Observer]! காஸ்ஸினி 1667 இல் பிரான்ஸின் விஞ்ஞானப் பேரவை உறுப்பினர் [Member, Academie Royale des Sciences] ஆனார். 1672 ஆம் ஆண்டு பிரிட்டன் கியோவன்னி காஸ்ஸினியின் கணித விஞ்ஞானச் சாதனைகளைப் பாராட்டி, அவரை ராஜீயக் குழுவின் மதிப்பாளியாகக் [Fellow of Royal Society] கெளரவித்தது. முரண்பாடில்லாத அவரது உறுதியான, மெய்யான விஞ்ஞானக் கண்டுபிடிப்புகள், நியூட்டனுக்கு முந்தி வாழ்ந்த வானியல் விஞ்ஞான மேதைகளுக்குள் உச்ச இடத்தை அவருக்கு நிச்சயம் அளிக்கின்றன!

படங்கள் : நாசா

தகவல்:

1. Giovanni Domenico Cassini, Catholic Encyclopedia

2. Giovanni Casinni, U.K. History of Mathematicians By: E.F. Robertson, J.J. O ‘Connor.

3. Cassini, Giovanni Domenico, Astronomical Institutions

4. Cassini I Gian Domenicao, Catalog of the Scientific Community

5 Giovanni Cassini By : J. J. O’Connor & E. F. Robertson

6. http://www-groups.dcs.st-and.ac.uk/~history/Biographies/Cassini.html (Cassini Biography

7. http://en.wikipedia.org/wiki/Giovanni_Domenico_Cassini (Wikipedia On Cassini) (Nov 21, 2010)

**************

S. Jayabarathan (jayabarathans@gmail.com) January 11, 2014

http://jayabarathan.wordpress.com/

Series Navigationஸ்ரீ கிருஷ்ண சரித்திரம் : அத்தியாயம்-17கடிதம்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *