கீழ்வானம்

This entry is part 4 of 20 in the series 16 பெப்ருவரி 2014

valava

கீழ்வானம் வெள்ளென் றெருமை சிறுவீடு,

மேய்வான் பரந்தனகாண் மிக்குள்ள பிள்ளைகளும்,

போவான்போ கின்றாரைப் போகாமல் காத்து,உன்னைக்

கூவுவான் வந்துநின்றோம்; கோது கலமுடைய

பாவாய்! எழுந்திராய் பாடிப் பறைகொண்டு

மாவாய்ப் பிளந்தானை மல்லரை மாட்டிய,

தேவாதி தேவனைச் சென்றுநாம் சேவித்தால்,

ஆவாவென் றாராய்ந் தருளேலோ ரெம்பாவாய்.

திருப்பாவையின் எட்டாவது பாசுரம் இது. இப்பாசுரத்தில் எல்லாராலும் விரும்பப்பட்ட, எல்லாரும் அவளிடத்தில் நெருங்கி வரக்கூடிய பெருமை உள்ள கிருஷ்ணனாலே விரும்பப் பட்டுக் கிருஷ்ணனைத் தன் வசத்தில் வைத்துள்ள ஒருத்தியை எழுப்புகிறார்கள்.

அவளை எழுப்புகிறார்கள்.

”பொழுது விடிந்து விட்டது எழுந்திரு”

”பொழுது விடிந்தமையை நீங்கள் எப்படி அறிந்தீர்கள்?’

”இதோ பார், இதுவரையில் சொன்ன அடையாளங்கள் போல அன்று. ‘கீழ்வானம் வெள்ளென்று இருக்கிறது. அதாவது கிழக்கு      வெளுத்துவிட்டது”என்கிறார்கள்.

கீழ்வானம் என்று இருந்தால் மேல்வானம் என்று ஒன்று இருக்க வேண்டும் அல்லவா?  இந்த இடத்தில் கீழ்வானம் என்பது லீலாவிபூதியான இவ்வுலகத்தையும், மேல்வானம் என்பது நித்யவிபூதியான வைகுந்தத்தையும் குறிக்கும். கீழ்வானத்தில் நாம் தூய்மையாக இல்லாவிடில் மேல்வானத்தில் இடம் கிடைக்காது.

கிழக்கிலிருந்து வரும் காற்றைக் கீழைக் காற்று என்பதுபோல கிழக்கு வானத்தை இவர்கள் கீழ்வானம் என்று சொல்கிறார்கள்.  விடிவதற்கு முன் முதலில் கிழக்கு வெளுத்துத்தான் இருகும் பிறகுதான் சிவப்பாக மாறும்.

“கிழக்கு  வெளுத்ததடி

கீழ்வானம் சிவந்ததடி”

எனும் பாடல் இங்கே நோக்கத் தக்கது.

அவளோ,

“நீங்களெல்லாம் திங்கள் திருமுகத்துச் சேயிழையார் அன்றோ? அதாவது மதிமுக மடந்தையர் அல்லவா? உங்கள் முகம் சந்திரன் போல வெண்மையாய் அன்றோ இருக்கும். ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கூறுகின்றீர். மேலும் உங்கள் வெண்மையான முகத்தில் ஒளி பட்டுக் கிழக்கு வெளுத்திருக்கும். நீங்கள் எப்போதும் மோரையும் தயிரையும் பார்த்துப் பழக்கப்பட்டிருக்கிறீர்கள். அதனால் காண்பதெல்லம் உங்களுக்கு எல்லாம் வெளுப்பாகவே தெரியும் வேறு ஏதாவது அடையாளம் சொல்லுங்கள்” என்றாள்.

அவர்கள் வேறு அடையாளமாக “இதோபார் எருமைகள் எல்லாம் சிறு வீடு மேயப் புறப்பட்டன” என்கிறார்கள்.

எருமைகளைப் பால் கறப்பதற்கு முன் சிறிது தூரம் பனிப்புல் மேய அனுப்புவார்கள். இதைத்தான்  சிறுவீடு மேய்தல் என்பார்கள். பால் கறந்த பின் மந்தையாக மேய்ச்சலுக்குச் செல்வது பெருவீடு மேய்தலாகும்.

’எருமைகள் போய்விட்டால் கண்ணனும் போய்விடுவான் நீ சீக்கிரம் எழுந்து வா’ என்று அவளிடம் வேண்டுகிறார்கள்.

’மேட்டிள மேதிகள் தளைவிடும் ஆயர்கள்” என்று தொண்டரடிப் பொடியாழ்வார் எம்பெருமானை எழுப்பினார்.

அவளோ ‘அவை எருமைகளே  அல்ல; நீங்களெல்லாம் வெண்முகம் உடையவர்கள்; கிழக்குத் திசை பார்த்து விட்டு முகம் திருப்புகிறீர்கள். முகம் திரும்பும்போது வெளிச்சம் முன்னால் நகர, இருட்டு பின்னால் நகர்ந்து கொண்டே வருகிறது. கருமையான இருட்டு நகர்வதைப் பார்த்து எருமை என்று என நினைக்கிறீர்கள். முதலில் உங்கள் முக ஒளியை வெளுப்பு எனக் கருதினீர்கள். அது அந்யத ஞானம். இப்போது இருளின் திரட்சியை எருமை என எண்ணுகிறீர்கள். இது விபரீத ஞானம். எருமையும் போகவில்லை;ஒன்றும் போகவில்லை; பொழுது இன்னும் விடியவில்லை” என்கிறாள்.

”எங்கள் அறிவு அந்யதா ஞானமாகவும் விபரீத ஞானமாகவும் இருந்துவிட்டுப் போகட்டும்; நீயே பொழுது இன்னும் விடியவில்லை என்பதற்கு ஏதேனும் அடையாளம் சொல்’

என்று இவர்கள் கேட்கிறார்கள். அவள் உடனே,

‘அஞ்சு லட்சம் பெண்களில் ஓராயிரம் பேர் கூட இங்கே வரவில்லை. மற்றவர்கள் இன்னும் பொழுது விடிந்து விட்டது எனக் கருதி வராததாலேயே  பொழுது விடியவில்லை அல்லவா?’ என்கிறாள்.

”இல்லை, இல்லை உன்னைத் தவிர எல்லாரும் போனார்கள்’

”அப்படியா? அவர்களெல்லாம் என்னை அழைக்காமல் எப்படிப் போனார்கள்?”

பெரிய குழாமாகப் போவதால் நீ போகவில்லை என்பதை அறியாமல் போய்விட்டார்களே தவிர உன்னை அலட்சியம் செய்து விட்டுப் போகவில்லை’

”என்ன காரியமாகப் போகின்றார்கள்” என்று உள்ளே இருப்பவள் கேட்டாள்.

”அவர்கள் பகவானைக் காண்பதையே தங்கள் பயனாகக் கருதி போகின்றவர்கள் என்கிறார்கள்.

”அவர்கள் அர்ச்சிராதி மார்க்கம் போலே, அக்ரூராயனம் போலே, திருவேங்கட யாத்திரை போலே, போவதையே பிரயோஜனமாக்க் கொண்டவர்கள்”

என்று பெரியவாச்சான் பிள்ளை வியாக்கியானத்தில் எழுதுகிறார்.

அதாவது அர்ச்சிராதி கதி என்கிற கடைசி கதியிலே ஸ்ரீவைகுந்தத்திற்குப் போவதைப் போலவும், அக்ரூரர் கண்ணனைப் பார்க்க ஆயர்பாடி வந்ததைப் போலவும், திருவேங்கடவனைச் சேவிக்க திருமலை யாத்திரை செல்வாரைப் போலவும் அவர்கள் போகின்றார்கள்.

’அவர்கள்தான் போய்விட்டார்களே, இனி நான் வந்து பயனென்ன?” என்கிறாள் அவள்.

“நீ வரவில்லை என்பதால் நாங்கள் அவர்களை நிறுத்தி விடோம். நீ வரவில்லை என்ற உடன் அவர்கள் தடை கட்டின நாகமாய் நின்று விட்டார்கள். திருவாணை நின்னாணை என்று ஆணையிடவில்லை. நீவரவில்லை என்று ஒரு வார்த்தை சொன்னவுடன் அவர்கள் திருவடிகள் விலங்கிட்டபடி நின்றுவிட்டன. பகவான் நீ எங்கள் கோஷ்டியில் இருக்கிறாயா என்று பார்ப்பான்; நீ இல்லாவிடில் அவன் மனம் கஷ்டப்படும். அதனால் போனவர்களை நிறுத்தி விட்டு உன்னைக் கூவி அழைக்க இங்கு வந்துள்ளோம். அவர்கள் போவதையே ப்ரயோஜனமாகக் கொண்டு போவது போல நாங்கள் உன்னை கூவுவதையே ப்ரயோஜனமாக்க் கொண்டு இங்கு வந்தோம்.

அவர்கள் மேலும் சொல்கிறார்கள்

”நாங்கள் எப்படி வந்து நிற்கிறோம் தெரியுமா? இராவணன் சபையிலிருந்து புறப்பட்டு  நேராக சமுத்திரத்தின் வடகரைக்கு வந்து விபீஷணாழ்வார்  நின்றதைப் போல நாங்கள் உன் வாசலிலே வந்து நிற்கிறோம்”.

அவள் கேட்கிறாள்,

”எல்லாரும்தான் வந்து விட்டார்களே? இனி நான் எதற்கு? நீங்கள் எல்லாரும் இங்கு என் வாசலிலே வந்து கால் தரித்தோமென்று சொல்வதற்குக் காரணமென்ன? நான் உங்களுடன் கூடாமல் உள்ளே உறங்குவதைக் கண்டும் நீ இல்லாமல் நாங்கள் செல்லமாட்டோம் என்று சொல்லக் கூடிய அளவிற்கு நானென்ன அவ்வளவு முக்கியமானவளா? எனக்கு என்ன ஏற்றம் இருக்கிறது?

உடனே வெளியே இருப்பவர்கள் அவளைப் போற்றிப் புகழத் தொடங்குகிறார்கள். ஒருவரைப் புகழ்ந்தால் நாம் சென்ற காரியம் சீக்கிரம் கூடிவிடும் அன்றோ?

’கோதுகலமுடையவளே’ என்கிறார்கள். கோதுகலம் என்பது கௌதுகலம் என்னும் சமஸ்கிருதச் சொல்லின் தமிழ் வடிவம் ஆகும். கௌதுகலம் என்றால் பகவானின் அன்பைப் பூரணமாகச் சம்பாதித்தல்.

”பகவான் உன்னை அனுபவித்து இருக்கிறான்; நீயும் அவனை அனுபவித்து இருக்கிறாய். நீ அவனுக்கும் இனிமையானவள் எங்களுக்கும் இனிமையானவள். மோட்சத்திலே என்ன பெருமை உண்டோ அது உன்னிடத்தில் இருப்பதால் உன்னை நாடி வந்தோம். உன் வாசல் வழியாகச் செல்லும்போது கிருஷ்ணனாலே கொண்டாடப் படும் உன் பேரைச் சொல்லி அழைப்பதை விட எங்களுக்கு வேறு ஏற்றமுண்டோ?.” என்று சொன்னவர்கள் இப்பொது ‘பாவாய்’ என்கிறார்கள்.

”பதுமைபோல் அழகானவளே! நீ பெண் பிள்ளையாயிற்றே? பெண்ணின் வருத்தமறியாத பெருமானைப் போல நீ இருக்கலாமா? எங்களாற்றாமையை நீ அறிய மாட்டாயா?” என்று மேலும் அவளைப் புகழ்கிறார்கள்.

பாவாய் என்பது விநய விதேயம் ஆகும். செருக்கில்லாத விநயத்தோடு கூடிய பக்தியே சிறக்கும். இந்த இடத்தில் சிறுமிகளான எங்கள் துன்பத்தை நீ அறிய மாட்டாயா என்பதற்கு ‘முலையெழுந்தார் படி மோவாயெழுந்தார்க்குத் தெரியாதிறே’ என்று பட்டர் அருளிச் செய்வாராம்.

’எழுந்திராய்’ என அழைக்கிறார்கள் ”

”நீ புறப்பட்டு எங்களுடன் கூடக் கூட வேண்டா. நீ எழுந்திருக்கும் அழகைப் பார்க்க நாங்கள் ஆசைப்படுகிறோம்”

அவள், ”சரி நான் எழுந்து வருகிறேன். வந்து நாம் பெறப் போகும் பயன் என்ன?” என்று கேட்கிறாள்.

’இதற்கு முன் பெற்ற செல்வத்தைப் போல அல்ல நாம் இப்போது பெறப்போகிற செல்வம். இத்தனை நாள் கிருஷ்ணனையும் நம்மையும் சேராதபடி ஊரார் பிரித்து வைத்திருந்தார்கள். எனவே ஊருக்குத் தெரியாதபடி நாம் கண்ணனை நெஞ்சாலே அனுபவித்து வந்தோம். அந்த ஆனந்தத்தை வெளிக்குக் காட்டாமல் இருந்து வந்தோம். இப்போது ஊராரே அனுமதித்துள்ளார்கள். எனவே அவன் திருநாமத்தையும் பெருமையும் பாடுவோம்” என்கிறார்கள்.

பறை என்பது ஊரார்க்கு நோன்பு; இவர்களுக்குக் கைங்கர்யம். பாடிப் பறை கொண்டு என்பதில் பாடி என்பது வேறு; பறை கொண்டு என்பது வேறு இல்லை. பாடுதலாகிய பறை கொண்டு என்றும் பொருள் சொல்வார்கள். பாடுதலையே கைங்கர்யமாகக் கொண்டு என்று பொருள். அவன் பெருமையை உரக்கச் சொல்லுதல் அதைவிட ஆனந்தம் வேறு இல்லை. பாடுவது பெரிய கைங்கர்யம். வைகுந்தத்தில் சாமகானம் பாடிக் கொண்டு நித்ய சூரிகள் எப்போது இருக்கிறார்கள் என்கிறது வேதம்.

’அவன் புகழ் பாடி இளைப்பிலம்’. அதாவது பாடிக் களைக்க மாட்டோம்’ என்கிறார் நம்மாழ்வார்.

’அவன் நமக்குப் பறை தருவானோ’ எனக் கேட்டாள். அவன் மாவாய்ப் பிளந்ததைக் கூறுகிறார்கள்.

’குதிரை வடிவம் கொண்டு வந்த கேசி எனும் அசுரனை வாயைப் பிளந்து போட்டவன் அவன். பகைவர்களை வதைத்துத் தன்னை நமக்குத் தந்தவன் அவன். எனவே நமக்குப் பறை தராமலிருக்க மாட்டான்.’

”அது முன்பு நடந்தது. இப்போது வடமதுரா சென்றவன் அங்கிருக்கும் பெண்களில் மயங்கிக் கட்டுண்டு கிடப்பவன் நமக்கு காரியம் செய்வானா?”

”அவன் வட மதுரையில் தன்னை மாட்டிய சாணுரன் முஷ்டிகன் எனும் மல்லர்களை வதைத்துத் தன்னைப் பெண்களுக்குத் தந்து உதவியவனாயிற்றே?

”அவன் தேவாதி தேவனாயிற்றே; நம் காரியம் செய்வானா?

ஆழ்வாரும் அவனை ‘அயர்வரும் அமரர்கள் அதிபதியவனவன்’ என்றும் ‘மனிசர்க்குத் தேவர் போலத் தேவர்க்கும் தேவாவோ’ என்றும் அருளிச் செய்தார்.

’அவன் தேவாதி தேவனாயிருந்தும் விரோதிகளைப் போக்கி நம்மை அனுபவிப்பதைத் தம் பேறாக நினைப்பவன். எனவே நம் காரியம் செய்யாமலிரான்’. என்று சமாதானம் சொல்கிறார்கள்.

’வா. நாம் அவனைச் சென்று நாம் சேவிக்க வேண்டும்’

சென்று—என்பதற்கு இராவணன் சபையில் ஓலமிட்டுத் தான் அழைத்தால் இராமன் அங்கே வந்திருக்க வேண்டும் அதனால்  அவனைச் சென்று நான் சேவிக்க இங்கு வந்திருக்கிறேன் என்றான் விபீஷணன்.

சென்று—என்பதற்கு தண்டகாரணியத்திலே ரிஷிகள் எல்லாரும் இராமனைத் தரிசிக்க வந்த போது நாம் சென்று அவர்களைச் சேவிக்க வேண்டும் அவர்கள் வந்து விட்டார்களே என்று இராமன் வருத்தப் பட்டானாம்.

அப்படியும் அவள் ”நாம் சேவித்தால் நம் காரியம் செய்வானோ?”

என்று கேட்கிறாள்.

”பரம ஞானிகளான, ரிஷிகள் கோரமான அரக்கர்களால் இம்சிக்கப்பட்டத் தங்கள் உடலைக் காட்டியதுபோல் நாம் “மாசுடையுடம்பொடு தலையுலறி வாய் புறம் வெளுத்து” விரக தாபத்தினல் வாடிய நம் உடம்பைக் காட்டக் கடவோம். அப்போது அவன் ஐயோ, நம் பெருமை போயிற்று; நம் ஏற்றம் அழிந்தது; இவர்கள் வந்து சேவிக்கும்படி நாம் இருந்தோமே ந்ன்று நம் குறையினை ஆராய்ந்து அருளுவான்.” என்கிறார்கள்

ஆவாவென்று அருள்செய்து என்பதால் பகவான் தன் அடியாருடைய துக்கத்தைக் கண்டு பொறுக்காமல் துன்பப் படுபவன் என்றாகிறது.

”மனுஷ்யர்களுடைய துக்கங்களில் ஸ்ரீ இராமபிரான் அவர்களைக் காட்டிலும் அதிகமாக துக்கிக்கிறான்” என்று ஸ்ரீ இராமனுடைய குணங்களைப் பேசும் இடத்தில் வால்மீகி கூறுகிறார்.

”ஆவாவென்று அருள்செய்து அடியேனோடும் ஆனானே’ என்றும்,

”ஆவாவென்றருள் செய்தான்” என்றும்,

”அடியார்க்கு ஆவாவென்னாய்” என்றும்,

”ஆ! ஆ! அடியான் இவனென்று அருளாயே” என்றும்,

”அடியார்க்கு ஆவாவென்றிரங்கி” என்றும்,

”ஆவாவென்று அடியேற்கு இரங்கய்” என்றும்

ஆழ்வார்கள் அருளிச் ச்ய்திருப்பது இங்கு நினைவு கூறத் தக்கது ஆகும்.

இப்பாசுரத்துக்கு உள்ளுறை;

1 கீழ்வானம் வெளுத்தல் என்பது தமோகுணம் நீங்கி சத்துவகுணம் வருவதைக் குறிக்கும்.

2   அச்சத்துவ குணம் ஓங்கினால் மெய்ஞானம் பிறக்கும்.

3   அப்போது அஞ்ஞானம் தானாக விலகும்.

4   அஞ்ஞானம் விலகினால் பகவான் அருள் கிடைக்கும்.

5   இதற்கு பிராட்டி தயை வேண்டும்.

6   அதனால் நாம் எல்லாரும் சேர்ந்து நாம சங்கீர்த்தனம் செய்ய வேண்டும்

7   மாவான கேசியைப் பிளந்ததும், மல்லரை மட்டியதும் அகங்கார மமகாரங்கள் அழித்தலைக் குறிக்கும்.

இப்பாசுரம் தாமிரபரணி நதிக்கரையில் தோன்றிய, வகுளாபரணப் பெருமாள் எனப் பெயர் பெற்ற நம்மாழ்வாரை எழுப்பும் பாசுரமாகும்

’எருமை சிறுவீடு’ என்றால் பெருவீடு என்றிருக்க வேண்டும் பெருவீடு என்பது மோட்சம். சிறு வீடு என்பது ஆத்மாவை அறிதலாகும். ஆத்மாவை அறிந்தபின் தன்னை உணர்வதால் ஏற்படும் ஆனந்தம் உயர்ந்தது. ஆனால் அதிலேயே நின்று விடக்கூடாது. அதற்கும் மேலே ஒன்று இருக்கிறது என்று உலகிற்குக் காட்டியவர் நம்மாழ்வார். “எல்லாவர்றிலும் பெரியவன்; ஞானச் சுடர் விளக்கான அவனைப் பாருங்கள்” என்கிறார் அவர்.

’போவான் போகின்றாரைப் போகாமல் காத்து உன்னை கூவுவான்’—— மதுரகவி ஆழ்வார் வடதேச யாத்திரையில் அயோத்தி நோக்கிச் சென்று கொண்டிருந்தார் அவரை அங்குப் போகவிடாமல் தம்மிடம் அழைத்து வந்தவர் நம்மாழ்வார்.

நம்மாழ்வாரைக் கூவி எழுப்புவதற்காகவே வந்தார் மதுரகவி ஆழ்வார். மேலும் கூவுதல் எனும் ஒலியை அதிகமாக உபயோகித்தவர் நம்மாழ்வார்.

’கூவிக் கொள்ளும் காலமின்னும் இன்னும் குறுகாதோ?’

’கூவிக்கொள் ளாய்வந்தந்தோ’

என்றெல்லாம் அவர் பாடுகிறார்.

ஆழ்வார் பெருமக்களில் நம்மாழ்வார் மட்டும்தான் புளிய மரத்திலேயே அமர்ந்திருப்பவர். அதனால் எழுந்திராய் என்பதும் பொருந்தும்.

முதல் பாட்டிலேயே ’தேவாதி தேவன்’ எனும் பொருளில் அயர்வரும் அமரர்கள் அதிபதி என்று அருளினார் நம்மாழ்வார்.

ஆவாவென்று ஆராய்ந்து—— இவர்தான் ‘ஆர் என்னை ஆராய்வார்’ [திருவாய் மொழி 5, 4,5 ] என்று பாடியவர்.

கிழக்கு வெளுத்ததைப் பாடியமையால் ’வகுள பூஷண பாஸ்கரோதயம் என்ற இவருக்குப் பொருந்தும்.

பாவாய்——-நம்மாழ்வார் தம்மைப் பாவை என்பார்.

’சூழ்வினையாட்டியேன் பாவையே’

’என்பாவை போய் இனித் தண்பழனத் திருக்கோளூர்க்கே’ என்பவை அவர் அருளிச் செயல்களாகும்.

Series Navigation
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *