பிச்சை எடுத்ததுண்டா?

This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

‘பிச்சை எடுத்ததுண்டா?’ என்று உங்களைக் கேட்டால் கையில் கிடைத்ததை எடுத்து சாத்து சாத்து என்று சாத்துவோமா என்று நீங்கள் ஆத்திரப்படுவீர்கள். ஆனாலும் கேட்கிறேன். ‘பிச்சை எடுத்திருக்கிறீர்களா?’  இப்போது பதில் சொல்ல வேண்டாம். இந்தக் கதையை படித்து முடித்துவிட்டுச் சொல்லுங்கள்.

70 களில் அறந்தாங்கியிலிருந்து புதுக்கோட்டைக்கு பயணச்சீட்டு 1 ரூபாய் 10 காசு. நீங்கள் 1.25 கொடுத்தால் பயணச்சீட்டுக்குப் பின்னால் 1.25 என்று எழுதிக் கொடுத்துவிடுவார் நடத்துநர். அவர் ஞாபகமாகக் கொடுத்துவிட்டால் ஓர் அதிசய நிகழ்ச்சியாக நிச்சயம் உங்கள் நாட்குறிப்பில் குறித்துக்கொள்ளலாம். பாக்கி 15 பைசாவை போனால் போகிறதென்று விட்டுவிடவும் முடியாது. 15  காசுக்கு வடையோடு டீ சாப்பிட்டுவிடலாம். 10 காசு நாணயமில்லாமல் புதுக்கோட்டை பேருந்தில் ஏறவே கூடாது. ஏறிவிட்டேன். இருந்ததோ 1 ரூபாயோடு 25 காசு நாணயம். பக்கத்தில் ஒருவர் வெகுநேரமாக கண்களை இடுக்கிக்கொண்டு தினத்தந்தியில் மூழ்கியிருந்தார். சட்டைப்பை நிறைய ஏராளமான பேப்பர்கள். பக்கவாட்டுப் பாக்கெட்டும் இழுத்துக்கொண்டு தொங்கியது. வெற்றிலை குதப்பியிருந்தார். 50 வயதிருக்கும். குளவாய்ப்பட்டிக்கு சீட்டு வாங்கியதைக் கவனித்தேன். அவர் எந்தப் பக்கமும் திரும்பாமல் பேப்பரில் மூழ்கியிருந்ததற்கு இன்னொரு காரணம் நாலைந்து ஜோடிக்கண்கள் பொந்துக்குள் நுழைந்த எலிக்காக காத்திருக்கும் பூனை மாதிரி ஓசிப்பேப்பருக்காக தின்றுவிடுவதுபோல் பார்த்துக்கொண்டிருந்ததுதான். அவரை மெதுவாக நோண்டினேன். ’25 காசுக்கு சில்லரை இருந்தால் கொடுங்கள்.’ ’10 காசுஇல்லாமல் புதுக்கோட்டை  வண்டியில் ஏம்பா ஏறுனே’ என்றவர் கண்களை விலக்காமல் சைடு பாக்கெட்டில் கையை விட்டு  அள்ளினார். ஒரு பெரிய சாவிக்கொத்து. நடுவே ஒரு 10 காசு இருந்தது. கொடுத்தார். அவர் 10 காசு என்றபோது தினத்தந்தியில் சில சிவப்புப் புள்ளிகள் தெறித்தன. அவர் இறங்குவதற்குள் வேறு யாரிடமாவது சில்லரை வாங்கிக் கொடுத்துவிடுவோம் என்று எண்ணினேன். ‘பரவாயில்லை தம்பீ. குளவாய்ப்பட்டி வந்திருச்சு. மணியார்டரில் அனுப்பு’ என்று சொல்லிவிட்டுச் சிரித்தார். மேலும் பல சிவப்புப் புள்ளிகளை அந்த  தந்திப் பேப்பர் வாங்கிக்கொண்டது. இன்று 40 ஆண்டுகளுக்குப்பின் நினைத்துப் பார்க்கிறேன். அந்த 10 காசை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

அப்போதெல்லாம் அதிகாலை ஊத்துக்குளத்துக்கு குளிக்கப் போவோம். 4 மைல் தூரம். சைக்கிளில் நாலைந்து பேராகச் செல்வோம். அன்று எல்லாரும் போய்விட்டார்கள். அது  ஒரு வெள்ளிக்கிழமை. அத்தா பஜ்ரு தொழுதுவிட்டு வந்ததும் 1 ரூபாய் தருவார். அதுதான் எனக்கு ஒருவாரச் செலவு. சைக்கிளை எடுத்துக்கொண்டு ஊத்துக்குளத்துக்குப் பறந்தேன். மணி டீக்கடை அப்போதெல்லாம் ரொம்பப் பிரபலம். பாலை முருகக் காய்ச்சி அரக்குக் கலரில் டிகாசன் விட்டு அவர் போடும் டீ, அடடா! இன்றுவரை அந்த ருசியில் எங்குமே நான் குடித்ததில்லை. நாங்கள் குளிக்கப் போவதில் இன்னொரு சுகம் மணிகடையில் டீ குடிப்பதுதான். அந்த அவசரத்திலும் மணிகடையில் இறங்கிவிட்டேன். ஒரு  கொத்தனார் மட்டப்பலகை கர்ணை சகிதமாய் நாலைந்து சித்தாட்களுடன் வடை சாப்பிட்டு டீ குடித்துக்கொண்டிருந்தார். நான் டீ குடித்துவிட்டு 1 ரூபாயை நீட்டினேன். அந்தக் கொத்தனார் அவர் கணக்கு 1.85க்கு 2 ரூபாயை நீட்டினார். ’15 காசு சில்லரையாக கொடுங்க தம்பீ’ என்றார் மணி. ‘பரவாயில்லை மணி. என் பாக்கி 15 காசை தம்பி டீக்கு எடுத்துக்கங்க’ என்றார் கொத்தனார். அவரிடம் 1 ரூபாயைக் கொடுத்து பாக்கி கேட்டேன்.

2

‘வச்சுக்கங்க தம்பீ. உங்க அத்தாக்கிட்டே வந்து வேலை செஞ்சு வாங்கிக்கிறேன். ஏதாவது வேலை இருந்தால் கூப்பிடச் சொல்லுங்க என்று சொல்லிவிட்டு வேகவேகமாக நடையைக் கட்டினார்கள். அதற்குப் பிறகு அந்தக் கொத்தனாரைப் பார்க்கவே  முடியவில்லை. அந்த 15 காசை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

சென்னையில் பிரசிடென்சி கல்லூரியில் படித்தபோது திருவல்லிக்கேணி ஹைரோடில் ரத்னா கபேக்கு பின்புறம் ஆனந்தா லாட்ஜில் தங்கியிருந்தேன். அந்த ரத்னா கபேயின் இட்லி சாம்பார் இன்றும் பிரபலம். சாம்பாருக்குள் மீன் பிடிப்பதுபோல் இட்லியைத்  தேடவேண்டும். பூரி சாம்பார் கேள்விப்பட்டதுண்டா? அதுவும் அங்குதான் பிரபலம். ஒரு தடவை அடுப்படியில் எட்டிப்பார்த்திருக்கிறேன். பெரிய பெரிய அண்டா குண்டாக்களில்  சாம்பார்தான் கொதித்துக் கொண்டிருந்தது. மற்ற எல்லாம் குட்டிக் குட்டி சட்டிகளில்தான் வெந்துகொண்டிருந்தன. எனக்கு  அஞ்சலட்டை வருகிறதென்றால் அது நிச்சயம் என்  மாமாவின் வருகையைச் சொல்லத்தான். ஒரு  திங்கட் கிழமை காலை 8 மணிக்கு வருவதாக எழுதியிருப்பார். அவர் ஒரு கட்டட ஒப்பந்தக்காரர். எக்மோரில் இறங்கி நேராக என் அறைக்கு வந்துவிடுவார். குளிப்பார். ரத்னா கபேயில் டிபன் சாப்பிடுவோம். நான் கல்லூரி போவேன். அவர் வேலைகளை முடித்துக்கொண்டு அடுத்தநாள் கிளம்பிவிடுவார். அன்றும் ரத்னா கபேக்குச்  சாப்பிடச் சென்றோம். எங்கள் பில் 6 ரூபாய் வந்தது. என்  3 நாள் செலவு அது. அல்வாவெல்லாம் சாப்பிட்டோம். 4 ரூபாய் பாக்கியை ஒரு சிட்டுத்தட்டில் வைத்தார் சர்வர். அதில் 3 ரூபாய் நோட்டுகளாகவும் இரண்டு 50 காசு நாணயங்களும் இருந்தன. அவர் எதிர்பார்த்த டிப்ஸ் 50 காசு என்று அதற்கு அர்த்தம். மாமா 3 ரூபாயை மட்டும் எடுத்துக்கொண்டு இரண்டு 50 காசுகளை விட்டுவைத்தார். ‘என்ன மாமா 50 காசு போதுமே’ என்றேன். ‘அப்ப 50 காசை நீ எடுத்துக்க’ என்றார். அப்போதெல்லாம் இரண்டு பிரோட்டா ஒரு டீ சாப்பிடும் காசு அது. நான் எடுத்துக்கொண்டேன். அந்தக் காசு சர்வருக்குச் சேரவேண்டியது. முப்பது ஆண்டுகளுக்குப் பின் இப்போது நினைத்துப் பார்க்கிறேன். மாமா காதில் மெதுவாகச் சொன்னதை பிறகு நான் எடுத்துக்கொண்டதை அவர் பார்த்திருப்பாரோ என்று  அந்த நினைவுகள் என்னை அறுத்துக்கொண்டே இருக்கிறது. அந்த 50 காசை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

பிறகு நான் சிங்கப்பூர் வந்துவிட்டேன்.  1994-95 களில் பேஜர்கள் பிரபலம். கைத்தொலைபேசிகள் கிடையாது. பொடி டப்பா மாதிரி பொருளை எல்லார் இடுப்பிலும் பார்க்கலாம். அதற்கென்று ஒரு எண் உண்டு. அந்த எண்ணை வீட்டுத் தொலைபேசியிலிருந்து அழைத்தால் அந்த எண் பேஜரில் சிணுங்கும். உடனே 10 காசை எடுத்துக்கொண்டு அருகிலிருக்கும் காசு போட்டுப் பேசும் தொலைபேசியை நோக்கி ஓடவேண்டும். அப்போதெல்லாம் வெளியே புறப்படும்போது செருப்புப்போட மறந்தாலும் பேஜரையும் 10 காசு நாணயங்களையும் மறக்கவே கூடாது. ஒரு நாள் மறந்துவிட்டேன். வீட்டிலிருந்து அழைப்பு. என் மனைவி இன்னும் இரண்டொரு நாளில் என் மகனைப் பெறவேண்டிய தருணம். டம்பனீஷில் ஒரு கட்டடத் தொகுதியில் நிற்கிறேன். அந்த வட்ட சிமிண்டு பெஞ்சுகளில் சில சீனர்கள் சட்டையில்லாமல் அமர்ந்திருந்தனர். சட்டையே இல்லை.  காசு எப்படி இருக்கும். ஆனாலும் கேட்டேன் 2 ரூபாய்க்கு சில்லரை. அவர்கள் நிமிர்ந்துகூடப் பார்க்காமல் இல்லை என்று சைகை செய்தார்கள். ஒரு பங்களாதேஷ் ‘பையா’ தோம்பு வண்டியைத் தள்ளிக்கொண்டு வந்தார். அவரிடம் நீட்டினேன். தன்

3

ஈரக்கைகளை திறந்து காட்டினார். இரண்டு 10 காசுகள் கழுவப்பட்டு காணப்பட்டது. ‘இது என்  காசல்ல. தோம்புக் குப்பையில்  கிடந்தது. எடுத்துக்கழுவினேன். எடுத்துக்கொள்ளுங்கள்’ என்று உடைந்த ஆங்கிலத்தில் சொன்னார். இரண்டையுமே எடுத்துக்கொண்டேன். ஒரு  பத்துக்காசு தோற்றுப்போனாலும் அடுத்தது உதவலாம். பேசினேன்.  அதற்குப் பிறகு எத்தனையோ தடவை அதே கட்டடத் தொகுதியில் தேடியிருக்கிறேன். அவர் அகப்படவேயில்லை. அந்த 20 காசை  எந்தக் கணக்கில் சேர்ப்பது?

ஒரு நண்பர் கவிதைப் புத்தகம் வெளியிட்டார். மொத்தமே 300 வரிகள். நான்கு நான்கு வரியாக 75 பக்கங்களை நிரப்பி வாழ்த்துரை அணிந்துரை என்று 25 பக்கங்களை நிரப்பி 100 பக்கத்தில் இருந்தது அந்தப் புத்தகம். 10 வெள்ளிதான் என்னிடம் இருந்தது. 20 வெள்ளி என்று அறிவித்தார்கள். உரைக்குள் காசு வைத்துக் கொடுக்கும் முறையைக் கண்டுபிடித்தவர் வாழ்க என்று எனக்குள் சொல்லிக்கொண்டு  அந்த 10 வெள்ளியை அதனுள் திணித்து அதை 20 வெள்ளி என்று நடித்து அவரிடம் கொடுத்துவிட்டு புத்தகத்தை வாங்கிக்கொண்டேன். பின்னொரு காலத்தில் அவரைச் சந்தித்தபோது ‘நீங்கள் எவ்வளவு வைத்தீர்கள்?’ என்று கேட்டுவிடுவாரோ என்று பயந்துகொண்டே அவரிடம் பேசிக்கொண்டிருந்தேன். நல்லவேளை. கடைசிவரை அதுபற்றி அவர் பேசவே இல்லை. ஆனாலும் 20 வெள்ளி என்று அறிவிக்கப்பட்ட பின்னும் 10 வெள்ளியை மறைத்துக் கொடுத்தது எந்த வகை? அந்த 10 வெள்ளியை எந்தக் கணக்கில் சேர்ப்பது?

1996ல் சிங்கப்பூரிலிருந்த முதல்முறையாக ஊருக்குப் போகிறேன். புதுக்கோட்டையிலிருந்து திருச்சிக்கு காரில் செல்கிறேன். வழியில் ஒரு ரயில்வே கிராஸிங் இருக்கும். கேட் மூடிவிட்டார்கள். அதற்காகவே காத்திருக்கும்  பிச்சை எடுக்கும் கூட்டம். பேருந்துகளையும் கார்களையும் மொய்த்துக் கொள்வார்கள். கார்களிலிருப்பவர்கள் அந்தக் கண்ணாடியைக்கூட இறக்காமலேயே இருப்பார்கள். கொடுக்கக்கூடாது என்ற எண்ணமில்லை. கொடுப்பது தெரிந்தால் அவரை எல்லாரும்  சேர்ந்து உண்டு இல்லை என்று ஆக்கிவிடுவார்கள்.அந்த ரயில் கிராஸிங்கை நான் மறக்கவே முடியாது. நான் திருச்சியில் படித்துக்கொண்டிருந்தபோது முதல் திருட்டு தம் அடித்த இடம் அதுதான்.  அங்கே ஓரம்கட்டி இறங்கி டீ குடித்துவிட்டு கொஞ்சநேரம் கழித்துப் புறப்படலாம் என்று தோன்றியது. அப்படி இறங்கியபோதுதான் அந்த அம்மாவைப் பார்த்தேன். பத்தைக் கைலியும் பிறைபோட்ட மேல்துண்டும் அவரை ஒரு முஸ்லிம் என்று இனம் காட்டியது. அந்த மேல்துண்டு  தலையிலிருந்து தொங்கி மிகப்பெரிய அந்த சட்டை ஒரு தோளில் நழுவித் தொங்கியதை மறைக்க உதவியாயிருந்தது. கந்தலாடைதான் ஆனாலும் அழுக்கில்லை. இரண்டு கைகளையும் முன்னால் அல்லாஹ்விடம் துஆ கேட்பதுபோல் நீட்டிக்கொண்டு பேசாமலேயே நின்றார். அவரிடம் சென்றேன். ‘ஏம்மா கேட்டாத்தானே கொடுப்பாங்க. சும்மாவே நின்னா யாரு…………’  என்று கேட்டு முடிக்கவில்லை. இடது கன்னத்தில் துருத்திக்கொண்டிருந்த அந்தக் கருப்பு மரு அந்த முகத்தை எனக்குக் காட்டிக் கொடுத்துவிட்டது.

‘நீங்க ஆத்தங்குடிதானே?’

 

4

முகத்தை அன்னாந்து பார்த்த நொடியில் கண்டுபிடித்துவிட்டார். ‘யாரு, பன்னீரய்யாவா? அய்யா…’  இரண்டு கைகளையும் குவித்துக்கொண்டு என் நெஞ்சில் சாய்ந்து கொள்ள விரும்புவதுபோல் கிட்டே வந்தார். நானே இழுத்து சாய்த்துக்கொண்டேன். ரொம்ப நாட்களுக்குப் பிறகு என் செல்லப் பெயரைச் சொல்லி அழைத்தது நல்ல பசியில் நாலைந்து களி நுங்கை கோம்பையோடு குடித்த சுகத்ததைத் தந்தது. என் நெஞ்சுச்சட்டை லேசாக ஈரமாவது தெரிந்தது.

ஆத்தங்குடி. எங்கள்  வீட்டில் ஒரு காலத்தில் பால்  பீய்ச்சும் வேலையையும் சட்டிபானை தேய்க்கும் வேலையையும் இன்னும் பல சில்லரை வேலைகளையும் பார்த்தவர். ஆத்தங்குடி என்ற ஊரிலிருந்து வந்தவர்களாம். அதுவே பேராகிப் போனது. கன்றுக்குட்டி பின்னங்கால்களை உதறி கயிற்றை இழுத்துக்கொண்டு ‘அம்மா’ என்று கத்தினால் ஆத்தங்குடி  கதவைத் திறந்துகொண்டு உள்ளே வருகிறார் என்று அர்த்தம். சரியாக காலை 6 மணிக்கு வருவார். 3 வயது உம்மு எப்போதும் இடுப்பிலேதான் இருக்கும். சாதாரணமாக ஆத்தங்குடி நின்றாலும் உடம்பு ஒரு பக்கம் வளைந்துதான் நிற்பார். உம்முவைத் தூக்கித்தூக்கி அப்படி ஆகிவிட்டது வரும்போதே ஆப்பக்கார ஜெமிலாவிடம் இரண்டு ஆப்பமும் சர்க்கரையும் ஒரு கொட்டானில் வாங்கி வந்துவிடுவார். ஒரு மரப்பாச்சி பொம்மை உம்முவோடு கூடப்பிறந்ததுபோல் எப்போதும் கையிலேயே இருக்கும். உம்முவை திண்ணையில் உட்காரவைத்து ஆப்பத்தை திண்ணச் சொல்லிவிட்டு பால்பீச்சும் வேலையைத் தொடங்குவார். ஆப்பம் முடியும்வரை ஆத்தங்குடியை உம்மு நினைக்காது. கன்றுக்குட்டியை அவிழ்த்துவிட்டு சுரப்பு இறங்கியதும் இழுத்துப் பிடித்துக் கட்டி ஒரு செம்புத்  தண்ணீரால் காம்புகளைக் கழுவி விளக்கெண்ணெயைத் தொட்டுக்கொண்டு சரசரவென்று 2 லிட்டர் பாலை இரண்டு  நிமிடத்தில் கறந்துவிடுவார். நாங்களெல்லாம் காப்பிக்காக காத்திருப்போம். நேற்று சினிமா வண்டியில் கொடுத்த மதுரைவீரன் நோட்டிஸை எழுத்துக் கூட்டிப் படித்துக் கொண்டிருப்போம். கொஞ்சம் வைக்கோலில் சாம்பலை தொட்டுக்கொண்டு சரக்சரக்கென்று பிரிண்டிங் மெஷின் ஓடுவதுபோல் தேய்ப்பார். 3 சிமிண்டுத் தொட்டிகளில் தண்ணீர் வைத்துக்கொள்வார். முதல்  தொட்டியில் சாம்பலோடு அலம்பி இரண்டாம் தொட்டி கொஞ்சம் தெளிந்த தண்ணீரில் ஒரு முக்கு முக்கி மூன்றாவது நல்ல  தண்ணீர் தொட்டியில் ஒரு குலுக்குக் குலுக்கி பக்கத்திலுள்ள திட்டில் கவிழ்த்துக் காயவைப்பார். காப்பி குவளைகளை நாங்கள் அதில்தான் தேடி எடுக்கவேண்டும். சரியாக 8 மணிக்கு எல்லா  வேலையும்  முடியும். ஒரு ஆனச்சட்டி நிறைய அம்மா பழைய கஞ்சியும் சுட்ட கட்டா கருவாடும் இரண்டு மூன்று வெங்காயமும் கொடுப்பார். இரண்டு கால்களையும் நீட்டிக்கொண்டு ஆனச்சட்டியை தூக்கி முகத்துக்குப் பக்கத்தில் வைத்துக்கொண்டு கஞ்சியை ருசிப்பவர் எல்லாம் முடிந்த பிறகுதான் தலையைத் தூக்குவார். சில சமயம் ஆத்தங்குடிக்கு கஞ்சிச்சோறு சேராவிட்டால் அம்மா இரவு சாப்பிடாமல் கூட இருந்துவிடுவார்.. வேலைக்காரர்களின் பசியை உணர்ந்தவர் அம்மா. அம்மாவின் அந்த உணர்வுகள்தான் நாங்களெல்லாம் இந்த அளவுக்கு உயரக் காரணமாயிருந்ததென்று பல தடவை நான் நினைத்ததுண்டு. அந்த ஆத்தங்குடிதான் இதோ என் முன்னே நின்றுகொண்டிருக்கிறார். ஆத்தங்குடி தொடர்ந்தார். ‘பக்கத்தில இருக்கிற  ஒரு பள்ளிக்கொடத்திலதான்யா மகன் வாத்தியாரா இருக்கார்.’ அவர் மகனை மரியாதையாகக் குறிப்பிட்டது அவர்களுக்குள் ஏற்பட்டுவிட்ட இடைவெளியை துல்லியமாகக் காட்டியது. ஆத்தங்குடி மேலும் தொடர்ந்தார். ‘உம்மு உங்க கடையில இருந்த அப்துல்லாவோட

5

போயிட்டா. எங்க இருக்காள்னே தெரியலே. மகன் அந்தப் பள்ளிக்கொடத்திலேயே இருக்க ஒரு டீச்சரை கல்யாணம்  பண்ணிக்கிட்டாரு. நான் வீட்டுக்கு வரக்கூடாதுன்னு அது  கண்டடிச்சு சொல்லீருச்சு. வீடு பக்கத்திலதான். வீட்டுக்குப் பின்னால ஒரு கேணி கொல்லையெல்லாம் இருக்கு. எல்லாரும் போனதும் நாம்போயி குளிச்சிட்டு துணிமணி தொவச்சிட்டு   வந்திருவேன். இதோ இந்தக் கடக்காரருக்கு எல்லாச் சாமானையும் அள்ளிப்போட்டு பூட்டமுடியாது. கொஞ்சச் சாமான்கள வெளிய வச்சு சாக்கு போட்டு மூடி என்னக் காவலுக்கு படுத்துக்கச் சொல்வாரு. மாசத்துக்கு 50 தர்ராரு. கடைக்குப் பின்னாலேயே அஞ்சு வேளை தொழுதுக்கிருவேன்.’

உழைப்பில் வாரா உறுதிகள் உளவோ எத்தனை உழைப்பு எத்தனை ஜீவனுள்ள வாழ்க்கை. அந்த ஆத்தங்குடிக்கா இந்த நிலை என்று கேள்விகள் பிறந்தாலும் பதிலும் உடனே கிடைத்தது. உம்மு பிறக்கும்போதே  கணவர் இறந்துவிட்டார். வாழ்க்கை தொடர்ந்தது. உம்மு அப்துல்லாவோடு ஓடிவிட்டாள். வாழ்க்கை தொடர்ந்தது. மகன் விலக்கிவிட்டார். வாழ்க்கை தொடர்கிறது. இந்த இழப்புகளையெல்லாம் இழப்புகளாகவே  நினைக்க முடியாத மனோபலம்தான் அவர் உழைப்புக்கு அல்லாஹ் காட்டும் கிருபையா? ஆத்தங்குடி மேலும் தொடர்ந்தார். ‘கையை அகல விரிச்சிக்கிட்டு நிப்பேன். ஏதாவது ஓதிக்குருவேன். யார்க்கிட்டேயும் குடுங்கன்னு   கேக்கமாட்டேன். யாராவது ஏதாவது போடுவாங்க. அது அல்லாஹ்  குடுக்கிறதுன்னு நெனப்பேன். ‘ கொஞ்சம் கலங்கினார். ‘பன்னீரய்யா உங்கள பாத்ததே போதும்யா. ரொம்ப சந்தோசமா இருக்குய்யா.’

நான் கேட்டேன். ‘இன்னிக்கு  யாராவது ஏதாச்சும் கொடுத்தாங்களா ஆத்தங்குடி?’

‘ஒரு ஐயா அஞ்சுரூவா கொடுத்தாரு’

‘எங்கே காட்டுங்க’

ஒரு சுருக்குப் பையைத் திறந்து காட்டினார். அதில் அந்த 5 ரூபாய் மட்டும்தான் இருந்தது.

‘ஆத்தங்குடி, இந்தக் காசை எனக்குத் தர்றீங்களா?’

‘என்னய்யா இப்புடிக் கேக்கிற. இந்தக் காசா ஒங்களுக்கு வேணும். எடுத்துக்கய்யா’

அதை வாங்கிக்கொண்டு அவரைத் தனியாக அழைத்துக்கொண்டு சென்றேன்.

‘இதில் 1000 ரூபாய் இருக்கு. வச்சுக்கங்க. மாசாமாசம் ஒன்னாந்தேதி அறந்தாங்கி போயி தம்பிக்கிட்ட 1000 வாங்கிக்கங்க. முடியாதுன்னு சொல்லிடாதீங்க ஆத்தங்குடி’

சரியா. வாங்கிக்கிறேன்.’

‘ரொம்ப சந்தோசமா இருக்கு ஆத்தங்குடி. யாரையும் கொறை சொல்லாம எல்லாத்தையும் சகிச்சுக்கிட்டு இருக்கீங்க. இப்புடி உழச்ச உங்களுக்கே இந்த நிலைன்னா நாங்களெல்லாம் எப்படி ஆவப்போறமோ?’

என் குரல் உடைந்தது.

 

6

‘அய்யா மகராசி பெத்த மகராசா. மகராசனா இருப்பேய்யா. நீ கலங்காதய்யா…இந்த துணியா தாங்காதுய்யா’

நான் சிங்கப்பூர் வந்துவிட்டேன். நான் புத்தகங்கள் அடுக்கிவைத்திருந்த அலமாரியில் ஓர் மூலையில் அந்த 5 ரூபாய் நாணயத்தை வைத்துவிட்டேன்.  அவ்வப்போது எடுத்துப் பார்த்துக்கொள்வேன். அந்த சம்பவத்திற்குப் பிறகுதான் என் மூன்று மகள்களுக்கும் திருமணம். என் ஓரறை வீடு ஈரறையாகி, பின் மூவறையாகி, இப்போது காண்டோவில் வந்து நிற்கிறது. சில்லரைக்காசுகளை பொறுக்கிக்கொண்டு பேருந்திலும் ரயிலிலும் அலைந்த நான் சீர்காழி கோவிந்தராஜன் டூயட் கேட்டுக்கொண்டு காரில் போய்க்கொண்டிருக்கிறேன். ‘இதெல்லாம் வாழ்க்கையின் சுழற்சி. அந்த 5 ரூபாய்க்கும் இதற்கும் சம்பந்தமில்லை’ என்று நீங்கள் சொல்லலாம். சம்பந்தம் இருக்கிறது. அது ரகசியம். ரகசியமென்றால் எனக்குத் தெரிந்திருந்து அதை உங்களுக்கு சொல்லக்கூடாத ரகசியமல்ல. சொல்லத் தெரியாததும் சொல்ல வார்த்தைகள் கிடைக்காததும் கூட ஒரு வகை ரகசியம்தான். அந்த வகையில் இது ரகசியம்தான்.  எனக்கு  மட்டுமே விளங்கிக்கொள்ள முடிந்த மாபெரும் ரகசியம்.

ஒரு வாரத்துக்கு முன் தம்பி போன் செய்தார். ‘இனிமேல் ஆத்தங்குடிக்கு காசு அனுப்பவேண்டாம். ஆத்தங்குடி மவுத்தாப்போச்சு. இன்னாலில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்’

அந்த 5 ரூபாயை எடுத்துப் பார்த்துவிட்டு படுக்கையில் சாய்ந்து கண்களை இறுக்கமில்லாமல் மூடிக்கொண்டேன். நான் எவ்வளவோ கொடுத்திருக்கலாம். அந்த 5  ரூபாய் எந்தக் கணக்கு?

இப்போது என் கேள்விக்கு பதில் சொல்லுங்கள். ‘நீங்கள் பிச்சை எடுத்ததுண்டா?

யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigationஇயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குநீங்காத நினைவுகள் – 37செயலற்றவன்செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Comments

  1. Avatar
    அமீதாம்மாள் says:

    உண்மைதான். யாரும் ஆத்திரப்படவேண்டியதில்லை. பிச்சை எடுக்காதவர்கள் யாருமே கிடையாது இருந்தால் தயவுசெய்து பின்னோட்டத்தில் தெரிவியுங்கள் எங்களுக்கு அது செய்தியாக இருக்கும்
    அன்புடன்
    அமீதாம்மாள்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *