கவிதையில் இருண்மை

author
0 minutes, 38 seconds Read
This entry is part 1 of 24 in the series 9 மார்ச் 2014

– பேரா. க. பஞ்சாங்கம்

காட்சி ஊடகங்களின் ஆக்கிரமிப்பிற்கு முழுமையாய் உள்ளாகிக் கிடக்கும் இன்றைய நவீன சமூகத்திலும் ஊருக்கு நூறு கவிஞர்கள், மாதத்திற்கு நூறு கவிதைத் தொகுப்புகள் என்று சொல்லும் அளவிற்குக் கவிதை இன்னும் ஏன் ஆட்சி செலுத்திக் கொண்டிருக்கிறது? மேலும், ஓவியர், இசைக் கலைஞர், சிற்பி, புனைகதை எழுத்தாளர், நாடகக் கலைஞர் என்று கலை மரபில் வாழ்பவர்கள் மட்டுமல்ல்  அறிஞர்கள், மதவாதிகள், ஞானிகள், அறிவியல் வித்தகர்கள் பல்வேறு துறை சார்ந்த ஆராய்ச்சியாளர்கள் என்று பெயரெடுக்கிற அளவிற்கு ஒரு குறிப்பிட்ட முறையில் வளர்ந்து விட்டவர்கள்கூட, கவிதை வாசிப்பிலிருந்து விடுபட முடியாமல் அவர்களைக் கவிதை கவர்வதற்கு என்ன காரணம்? காலூன்ற நேரமின்றிக் கிலோ மீட்டர் வேகங்களில் பறந்து திரியும் அரசியல்வாதிகளுக்குள்ளும், பன்னாட்டு நிறுவனங்களின் இயக்குநர்களுக்குள்ளும் இந்தக் கவிதை, காற்றைப் போல நுழைந்து விடுகிறதே! அது எப்படி? கவிதை இப்படியொரு மோகினியாக வடிவெடுப்பதற்கான மூலவேர் எங்கேயிருக்கிறது? என்ற வினாவிற்கு இந்தக் கட்டுரையில் விடையைத் தேட முயலலாம்.

கவிதை மற்ற எந்த இலக்கிய வடிவத்தையும்விட, மொழிப்பயன்பாடு குறித்த, தீவிரமான அக்கறையோடு செயல்படக்கூடிய ஒரு வடிவம்.  மொழியை, வார்த்தையை, வாக்கியத்தை உடைத்து, சிதைத்து, எதிர்பாராத விதத்தில் இணைத்து மொத்தத்தில் மொழியின் தர்க்கத்தை மீறுவதன் மூலமாகவே மொழிக்குள் புதுப்புது வளத்தைச் சேர்க்கின்றது இக்கவிதை வடிவம்.  இதன்மூலம் வார்த்தைகளை எந்த அளவிற்கு உச்சகட்டமாக வேலை வாங்க முடியுமோ அந்த அளவிற்கு வேலை வாங்குகிற வடிவமாகக் கவிதைதான் விளங்குகிறது.  கவிதையின் இந்தப் பண்புகள்தான் அதற்கோர் இருண்மைத் தன்மையையும்(obscurity), பொருள் மயக்கத்தையும்(ambiguity) வழங்குகிறது.  இவ்வாறு வாழ்க்கை போல, இயற்கை போல, கவிதையும் புரியாத புதிராகத் திரண்டு வெளிவரும்பொழுது அது எல்லோரையும் ஈர்க்கின்ற ஒரு கவர்ச்சிப்பொருளாகத் தன்னைத் தக்கவைத்துக் கொள்கிறது.  கவிதையின் உத்திகளாகச் சந்தம், உவமை, முரண், உருவகம், படிமம், குறியீடு, உரத்த சிந்தனை, தெளிவு, உணர்ச்சிக் குவிப்பு என்றெல்லாம் பலவாறு திறனாய்வு மொழியில் உரையாடல் நிகழ்த்தப்படுகிறது.  ஆனாலும் இவையெல்லாம் விகிதாச்சாரப்படி ஒன்றாகக் கூடிப் படிக்கின்ற வாசகர்கள் பல்வேறு விதமாகப் பொருள் கொள்வதற்கும், ஒருவிதமான புரியாத்தன்மையைக் கொண்டிருப்பதன்மூலம் வாசகர்களைத் திரும்பத் திரும்பத் தன்னை நோக்கி வரும்படி அழைப்பு விடுகிற ஒரு முறையிலும் கவிதை அமையும்பொழுதுதான் கவிதையாக்கத்தின் வெற்றி சாத்தியமாகிறது.  எனவேதான், வில்லியம் எம்சனின் ‘ஏழு வகை பொருள் மயக்கம்’(Seevn Typoes of Ambiguity) என்ற நூல் வெளியான முப்பதுகளிலிருந்து இந்தப் புதிரான தன்மை, சிறப்பான கவிதை உத்தியாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.(வை. சச்சிதானந்தன், ப.9) மேலும் சர்ரியலிஸம், பிராய்டியம், மனப்பதிவியம்(Impressionism), படிமவியல், குறியிட்டியல் எனப் பல்வேறு இலக்கிய இயக்கங்களின் வருகைக்குப் பிறகு, கவிதையின் மிகச்சிறந்த பண்பே இருண்மையைத் தனக்குள் கொண்டிருப்பதுதான் என்ற கருத்து வலுப்பெற்று விட்டதையும் பார்க்கிறோம்.  சித்தர்கள், அரவிந்தர் போன்ற மறை மெய்ம்மை(Mystic) சார்ந்த, அரூபநிலை(Metaphysics) சார்ந்த எழுத்தாளர்களின் எழுத்துக்களிலும் இந்த இருண்மை கவிதையோடு ஒட்டிக் கொண்டது என்பதையும் பதிவுசெய்ய வேண்டும்.

அரவிந்தர் பிரணாயாமம் மற்றும் சில யோகங்களைச் செய்த பிறகு தன்னுடைய கவித்துவப் படைப்பாற்றல் பெரிய அளவில் கூடியதாக 1932-இல்எழுதிய ஒரு மடலில் சுட்டுகின்றார்.  இத்தகைய தருணங்களில் தன் மூளையைச் சுற்றி மின்னூட்ட சக்தி(Electric Energy) பெருகி  மூளையின் செயல்பாடு பெரிய அளவில் நிகழ்ந்ததாகக் குறிக்கிறார்.(Manoj Das p.21)  மேலும் வாக்கு அல்லது வார்த்தையின் பயன்பாட்டிலுள்ள நான்கு படிநிலைகளைப் பற்றியும் குறிக்கிறார்.  தந்திர சாஸ்திரத்திலிருந்து இதை எடுத்தாளுகிறார்.  பரா, பச்யந்தி, மத்யமா, வைகரி என்பன அந்த நான்கு படிகள்;  இவற்றுள் பரா என்பதுதான் வாக்கு எனும் தேவதையின் ஆதிசக்தி.  பச்யந்தி என்பது, அந்தத் தேவதையின் இச்சா சக்தி.  மத்யமா என்பது ஞானசக்தி. வைகரி எனப்படுவது கிரியா சக்தி. கிரியா சக்திதான் உலக நிகழ்வுகளில் அன்றாட வாழ்வில் பயன்படுத்தப்பட்டுக் கொண்டிருப்பதாகும்.  இந்த மேலோட்டமான கிரியா சக்தியைத் தாண்டி, மற்ற மூன்று படிநிலைக்குள்ளும் புகுந்து வாக்கைப் பிடிக்கிற முயற்சிதான் யோகா முயற்சி.  அந்த யோக நிலையில் எழுதுவதுதான் கவிதை என அரவிந்தர் கருதியதாகத் தெரிகிறது.(இராம. கோபாலன் சாஸ்திரி, பக். 14-15) இந்நிலையில் கவிதை எழுதுதல் என்பது மந்திரம் உருவாக்குதல் என்ற நிலையில் இயங்கியிருக்கிறார் அரவிந்தர்.  “In poetry the music fit for the mantra makes itself audible” என்றும் “Mantra is poetry” என்றும் குறிக்கிறார்.(Manoj Das p.8)  மந்திரம் என்ற வடமொழிச் சொல்லுக்குச் சிந்தித்துக் கடத்தல் என்பது பொருளாகும்.  (மந் என்றால் சிந்தித்தல், திர என்றால் கடத்தல் என்பது பொருளாகும். (இராம. கோபாலன் சாஸ்திரி, ப.12)  கவிதையை இந்த அளவிற்கு மறைமெய்ம்மை சார்ந்த கவிஞர்கள் மேலெடுத்துச் செல்லும்போது இருண்மை கவிதையின் சிறந்த பண்பாகி விடுவது தவிர்க்க முடியாததாகி விடுகிறது.  அரவிந்தர் இப்படித்தான் புகழ்பெற்ற தன்னுடைய சாவித்திரி காவியத்தைத் தொடர்ந்து மாற்றி மாற்றி எழுதி ஏற்றத்தாழ 30 ஆண்டுகள் அதன்மேல் வினைபுரிந்திருக்கிறார்.  1950-இல் இறப்பிற்குக் கொஞ்ச நாளைக்கு முன்புதான் எழுதி முடித்திருக்கிறார்.  ஏன் இவ்வளவு காலம் எடுத்துக் கொண்டீர்கள் என்று கேட்டபொழுது, யோகப் பயிற்சி மூலம் வாக்கிற்குள் இருக்கும் ஒவ்வொரு பகுதியையும் தாண்டித் தாண்டி அதன் உச்சநிலை நோக்கிய பரிணாம முயற்சியில் ஈடுபட்டுக் கொண்டேயிருந்த சூழலில் இந்த எழுத்துப் பிறந்திருக்கிறது என்று பதில் சொன்னதாக அறிகிறோம்.(Manoj Das p.22)
இவ்வாறு உருவாகும் இருண்மைக் கவிதைகள் வாசகரையும் படைப்பாக்கத்திற்குள் பங்கெடுக்குமாறு கோருகின்றன.  வாசித்தலும் ஒரு படைத்தல் தொழில்தான், ஒருவித யோகா முயற்சிதான்  என்ற நிலையில் வாசிப்பில் ஈடுபடுகிறவர்களுக்கே இருண்மைக் கவிதைகள் பிடிபடும்.  இல்லையென்றால் பெரும்பாலோர் கூறுவது போலப் புரியவில்லை என்று ஒதுங்கிக்கொள்ள வேண்டியதுதான்.  எழுத்தாளர் ஜெயகாந்தனிடம் இப்படி ஒருதடவை, ‘சில மாணவர்கள் சுற்றி நின்று சில எழுத்துக்கள் புரியவில்லையே என்று கேட்டபோது, புரியவில்லை என்றால் இவை உங்களுக்கான எழுத்துக்கள் அல்ல என்பதுமா உங்களுக்குப் புரியவில்லை’ என்று கேட்டார்.

மேற்கண்டவாறு மறைமெய்ம்மைக் கவிதைகள் மட்டுமல்ல. படைப்பாளிகளே உருவாக்கிக் கொள்ளுகிற தனிப்பட்ட சில குறியீடுகள், படைப்பாளிகளின் பண்பாடு சார்ந்து அமையும் சில குறியீடுகள், படைப்பாளிகளுக்கே புரியாமல் எதிர்பாராமல் வந்துவிழும் சில குறியீடுகள் காரணமாகவும் கவிதைக்குள் இருண்மைப்பண்பு வந்து கூடிவிடும். அத்தகைய இருண்மைகள், வாசகனின் பரந்த வாசிப்பையும் உழைப்பையும் எதிர்பார்த்துக் கிடக்கின்றன. அப்படியும் அந்தக் கவிதை புரியாதுபோக வாய்ப்புண்டு. எனவேதான் டி.எஸ். எலியட் கவிதையை ரசிப்பதற்கு அது முழுமையாகப் புரிய வேண்டும் என்பது அவசியமில்லை எனக் கருதுகிறார்.

மேலும் ஒரு பிரதிக்கு அர்த்தம் வாசகரால்தான் உருவாக்கப்படுகிறது என்று வாசகரை முதன்மைப்படுத்தும் திறனாய்வுகள் உருவாகிவிட்ட இன்றைய சூழலில், கவிதைக்குள் இருண்மை இருப்பு கொண்டிருப்பது மிகச் சிறந்த அழகியல் செயல்பாடாகக் கருதுவதற்கான வாய்ப்பைப் பெருக்கியுள்ளது.

வாழ்க்கையில் மனிதர்கள் அடைகிற எல்லா அனுபவங்களும் காரண – காரியத் தர்க்கத்திற்குள் அடங்கிப் போவதாக இல்லை. விபத்துக்கள், கனவுகள், பிறப்பு, சாவு முதலியன புரியாத வாழ்க்கைப் புதிர்களாக நீளுகின்றன.  இத்தகைய புதிரான அனுபவங்கள் மிக எளிய மொழியில் கவிதை ஆனாலும் கூட, அந்தக் கவிதைகளும் இருண்மைப் பார்வை கொண்டு கவிதைக்கு அழகு சேர்க்கின்றன.  பெர்ட்டோல்ட் பிரெக்ட்டினுடைய(Changing the wheel)  என்ற கவிதை இப்படி அமைந்துள்ளது.

“I sit on the road side verge

The driver changes a wheel

I do not like the place I have come from

I do not like the place I am going to

why with impatience do I

watch him changing the wheel?”

இதன் மொழிபெயர்ப்பு தமிழில் இவ்வாறு அமைகிறது.

“சாலையோரத்தில் நான் அமர்ந்திருக்கிறேன்
டிரைவர் சக்கரத்தை மாற்றிக் கொண்டிருக்கிறார்
புறப்பட்டு வந்த இடத்தை நான் விரும்பவில்லை
போய்க் கொண்டிருக்கும் இடத்தையும்
நான் விரும்பவில்லை
பின் எதற்குப் பொறுமையற்று நான்
சக்கரத்தை மாற்றும் அவனைப் பார்த்து நிற்கிறேன்?” (மொ.பு., கவிஞர் பாலச்சந்திரன் பாலா)

இந்தக் கேள்விக்கான பதிலைத் தேடி நாம் பயணம் செய்யும்போது இருண்மை நம்மைச் சுற்றிக் கொள்கிறது.  பல்வேறு திசைகளிலும், பல்வேறு அர்த்தங்களை நோக்கியும் வாசகனை இழுத்துச் செல்வதற்கு இந்தக் கவிதையின் இருண்மைப் பண்பு பெரிதும் பயன்படுகிறது.  இதன் மூலம் சலிப்பே அடையாத அழகியலை நிலைநிறுத்தி விட முடிகிறது.

மேலும், பிடிக்குள் அகப்படாத உவமைகளைப் பயன்படுத்தும்போது இருண்மை கூடிவந்து அழகு கூட்டுகிறது.  டி.எஸ். எலியட்டின் கவிதை ஒன்று இப்படித் தொடங்குகிறது.

 

“Let us go, you and I, when the evening is spread

Out against the sky, like a patient etherised upon a Table.”

-( T.S. Eliot, The song of J.Alfred Prufrock)

இதை இவ்வாறு தமிழில் மொழிபெயர்த்து அறியலாம்.

“போவோம் வா நானும் நீயும்
டேபிள் மீது மயக்கம் ஊட்டப்பட்டுக் கிடக்கும்
நோயாளி போல்
வானத்திற்கெதிரே மாலைநேரம்
விரிந்துகிடக்கும் போதில்.” (மொ.பு, கவிஞர் பாலச்சந்திரன் பாலா)

மயக்கம் ஊட்டப்பட்டுக் கிடக்கும் ஒரு நோயாளியாக மாலை நேரத்தை உவமிக்கும்போது அது ஒரு கனவு அனுபவம் போலப் பிடிக்குள் அகப்படாத அனுபவமாக விரிந்து அழகுப் பொருளாக மாறுவதைப் பார்க்க முடிகிறது.

இருண்மையை உருவாக்குகிறோம் என்ற பெயரில் செயற்கையாகக் கவிஞன் செயல்படும்போது வெளிச்சமே உள்ளே புகமுடியாதபடி வெறும் இருட்டாக உருவாக்கிவிடக் கூடிய விபத்தும் நிகழத்தான் செய்கிறது.  இப்படியொரு கவிதை,

“நிஜம் நிஜத்தை நிஜமாக
நிஜமாக நிஜம் நிஜத்தை
நிஜத்தை நிஜமாக நிஜம்
நிஜமும் நிஜமும் நிஜமாக
நிஜமோ நிஜமே நிஜம்
நிஜம் நிஜம் நிஜம்”

எந்தவொரு இலக்கிய உத்தியும் அதன் பாடுபொருளோடு பின்னிப் பிணையாமல், உத்தியை மட்டுமே கொண்டாடுதல் என்ற நிலைக்குப் போய்விடும்பொழுது அங்கே இலக்கிய அழகியல் காணாமல் போய்விடுகிறது.  ஆத்மாநாமின் இந்தக் கவிதையிலும் இதுதான் நிகழ்ந்துள்ளது.  எனவே இருண்மை ஒரு உத்தி என்ற அளவில் செயல்படும்போது மட்டுமே கவிதை உலகத்திற்குள் அதற்கு இடமுண்டு என்பதையும் மறுப்பதற்கு இல்லை.

————————————

பயன்பட்ட நூல்கள்

1. கோபாலன் சாஸ்திரி, இராம. பாரதியும் அரவிந்தரும், ‘பாரதி இயல்’(தொ.ஆ) இராம. சண்முகம் மற்றும் சிலர், மணிவாசகர் பதிப்பகம், சிதம்பரம், 1982.
2. சச்சுதானந்தன் .வை., மேலை இலக்கியச் சொல்லகராதி, மேக்மில்லன் இந்தியா லிமிட்டெட், சென்னை, 1983.
3. பாலா, புதுக்கவிதை – ஒரு புதுப்பார்வை, அகரம், சிவகங்கை, 1981.

ஆங்கில நூல்

1. Manoj Das, Sri Aurobindo, New Delhi, Sahitya Akademi, Second Edition, 1977.

____________________

சாகித்திய அகாதெமி மற்றும் ஆரோவில் தமிழ் மரபு மையம் இணைந்து நடத்திய ‘எதிர்காலக் கவிதை மற்றும் கவிதையின் எதிர்காலம்’ பற்றிய ஒரு நாள் கருத்தரங்கில் வாசிக்கப்பட்ட கட்டுரை.(நாள்: 19.07.09, இடம்: பாரத் நிவாஸ்)

Series Navigationஇயக்கமும் மயக்கமும்மருமகளின் மர்மம் – 19ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் – ஆய்வரங்குநீங்காத நினைவுகள் – 37செயலற்றவன்செவ்வாய்க் கோளில் பல மில்லியன் ஆண்டுகட்கு முன்னே உயிரினத் தோற்றம் உருவானதற்கு நாசாவின் புது ஆதாரம்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *