தொடுவானம் 7. தமிழ் மீது காதல்

This entry is part 1 of 23 in the series 16 மார்ச் 2014

 

” கலைகளில் சிறந்தது எழுத்துக் கலை. தரமானவற்றை எழுதி தமிழ் முரசுக்கு அனுப்புங்கள். ”

வை. திருநாவுக்கரசு சொன்னது எனது வாழ்க்கையில் புதுத் திருப்பத்தை உண்டு பண்ணியது.

நான் வீடு திரும்பியபோது அவர் சொன்னது பொன்மொழியாக செவிகளில் ரீங்காராமிட்டது.

நான் ஏன் ஓர் எழுத்தாளனாக உருவாகக் கூடாது என்ற எண்ணம் மனதில் எழுந்தது.

எழுத்தாளனாக வேண்டுமெனில், தமிழ் மொழியில் புலமை வேண்டும். நிறைய .தமிழ் நூல்கள் படிக்க வேண்டும்.  விடா முயற்சியுடன் பொறுமையுடன் எழுத வேண்டும்.

பள்ளியின் அருகிலேயே தேசிய நூலகம் உள்ளது.அங்கே நிறைய தமிழ் நூல்கள் உள்ளன.நூலகத்தில் நான் உறுப்பினன் ஆனேன்.

முதலில் டாக்டர் மு. வரதராசன் நாவல்களை இரவல் வாங்கினேன். தமிழ் ஆர்வமுடைய பலர் அவருடைய நாவல்களைத் தீவிரமாகப் படித்த காலம் அது.

தமிழ் நாட்டுப் பின்னணியில், மிகவும் நேர்த்தியாக அன்றைய சமுதாய அமைப்பை அவருடைய கதைகளில் கண்டேன்.கிராமப் புறங்கள் மிக அழகாக சித்திரிக்கப்பட்டிருந்தன. இளைஞர்களின் வாழ்க்கை, அவர்கள் எதிர்நோக்கும் இன்னல்கள் பற்றியும் பல கதைகள் பின்னப்பட்டிருந்தன. அவர்களில் சந்திரன், தானப்பன் என்பவர்கள் மறக்க முடியாதவர்கள்.

கள்ளோ காவியமோ?, அல்லி, கரித்துண்டு, கயமை, நெஞ்சில் ஒரு முள், அகல் விளக்கு, மண் குடிசை, பாவை, வாடா மலர், செந்தாமரை, அந்த நாள், மலர்விழி, பெற்ற மனம் போன்ற அவருடைய நாவல்களை நான் ஆர்வத்துடன் படித்து மகிழ்ந்தேன்.

அடுத்ததாக என்னை அதிகம் கவர்ந்தவர் அகிலன். அவரின் பாவை விளக்கு தனிகாசலம் மனத்தில் நிலைத்து நிற்கும் பாத்திரம். அவர்  படைத்துள்ள பெண் பாத்திரங்கள் மறக்க முடியாதவர்கள். தேவகி, செங்கமலம், கெளரி, உமா, ஆனந்தி, போன்றோர் அவர்களில் சிலர்.

கல்கியின் சிவகாமியின் சபதம், படித்தது மறக்க முடியாத அனுபவம். அதில் வரும் ஆயனர் சிற்பி, சிவகாமி, நரசிம்ம பல்லவன் காலத்தால் அழியாத கதா பாத்திரங்கள். அவ்வாறெ பொன்னியின் செல்வனின வத்தியத் தேவனும், அருண்மொழித் தேவரும், குந்தவையும்.

தமிழ் நாவல்கள் படித்தால் மட்டும் போதாது, ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என்று முடிவு செய்தேன்.

பள்ளி ப்ராஸ் பாஸா வீதியில் இருந்தது. அங்கு பழைய புத்தகக் கடைகள் வீதி நெடுகிலும் இருந்தன. அங்கு நான் பழைய ” ரீடர்ஸ் டைஜஸ்ட் ” இதழ்களை மிகக் குறைந்த விலையில் வாங்கிப் படித்தேன். அவற்றில் சிறு அளவில் அருமையான கட்டுரைகள், உண்மைச் சம்பவங்கள் வெளிவரும்.

ஒரு நோட்டுப் புத்தகத்தில் அழகான ஆங்கில வரிகளை எழுதி வைத்துக்கொள்வேன்.அதோடு புதிய சொற்களையும் குறித்து வைத்து அகராதியில் அதன் அர்த்தம் பார்த்து எழுதி வைப்பேன். அவை என் ஆங்கிலப் புலமைக்கு பெரிதும் உதவின. பள்ளியில் ஆங்கிலக் கட்டுரைகள் எழுதும்போது அவற்றை பயன்படுத்தவும் முயன்று பார்ப்பேன். அந்தப் பழக்கம் எனக்கு இன்றும் உள்ளது!

கட்டுரைப் போட்டியில் பரிசு பெற்ற அடுத்த வாரமே, செய்தித்தாள்கள் படிப்பதால் உண்டாகும் நன்மைகள் பற்றிய ஒரு சிறு கட்டுரை எழுதி, என் புகைப்படத்தை இணைத்து தமிழ் முரசுக்கு அனுப்பினேன்.

மறு வாரம் ஞாயிறு முரசில் ” உங்கள் எழுத்து ” பகுதியில் என் கட்டுரை படத்துடன் வெளிவந்திருந்தது!

அதுவே நான் இலக்கிய உலகில் காலடி வைத்த முதல் படி!

அதைப் பார்த்து நான் கொண்ட பரவசமும் ஆனந்தமும் அளவற்றது! என்னைப் பொறுத்தவரை அது பெரும் சாதனையே!

நான் அதை எழுதியபோது என்னுடைய வயது பதினான்கு தான்!

என்னுடைய எழுத்து பிரபல தமிழ் தினசரியில் வெளிவந்துள்ளது எனில், நான் எழுத்தாளன் ஆவது திண்ணம் என எண்ணினேன்.

அந்த வட்டாரத் தமிழ் மக்கள் பலர் என் கட்டுரையைப் படித்துவிட்டு என்னைப் பாராட்டினர்.

லதாவிடம் காட்டினேன். அவள் பெரிதும் மகிழ்ந்து.போனாள். தொடர்ந்து நிறைய எழுதச் சொன்னாள்.

அப்பா அதைப் படித்துப் படித்தார். மனதில் மகிழ்ச்சி என்றாலும் அதை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. படிக்கும் நேரத்தில் கட்டுரை எழுதிக்கொண்டிருந்தால் படிப்பு கெடும் என்றார்.

கதைப் புத்தகங்கள் படிக்கும் நேரத்தில் பாடப் புத்தகங்களைப் படித்தால் நல்ல மதிப்பெண்கள் கிடைக்கும் என்றார்.

நான் எதுபற்றியும் கவலைப்படாமல் நல்ல எழுத்தாளனாக வேண்டும் என்ற கனவில் மூழ்கிப் போனேன்.

படிப்பில் கிடைத்த பரிசுகள், ஓட்டத்தில் கிடைத்த வெள்ளிக் கிண்ணங்கள், இவை அனைத்தையும் விட அந்த ஒரு கட்டுரை பத்திரிகையில் வெளிவந்தது எனக்கு பெரும் மயக்கத்தை உண்டு பண்ணியது!

தொடர்ந்து பல கட்டுரைகள் எழுதி அனுப்பினேன். அனைத்துமே தவறாமல் வெளிவந்தன.

என்னிடம் இத்தகையத் திறமை உள்ளது கண்டு நண்பர்கள் வியந்தனர். அவர்களில் குறிப்பிடத்தக்கவன் நா. கோவிந்தசாமி. அவனுக்கும் என்னைப்போல் எழுத வேண்டும் என்று ஆவல் தோன்றிவிட்டது. நான் கட்டுரைகள் எவ்வாறு எழுத வேண்டும் என்பதை அவனுக்குக் கற்றுத் தந்தேன். கொஞ்ச காலம் அவன் தயங்கினான்.

ஜெயப்பிரகாசம் தேநீர்க் கடைக்கு எதிர்ப்புறம் உள்ள நகரசபைக் குடியிருப்பில் வசிப்பவன். அவன் கலைமகள் தமிழ்ப் பள்ளியின் மாணவன். கொஞ்சம் துணிச்சல் மிக்கவன். அவனும் எனக்கு நெருக்கமானான்.

பன்னீர் செல்வம் அவனுடைய தம்பி. அவன் பாசீர் பாஞ்சாங் ஆங்கிலப் பள்ளி மாணவன். மிகவும் துடிப்பானவன். கவிஞர் ஐ. உலகநாதனின் சீடன்.

கவிஞர் ஐ. உலகநாதன் எங்கள் வட்டாரத்தில் புரட்சிகரமான இளைஞர். அவர் ” பகுத்தறிவு நூலகம் ” அமைத்து, ” மாதவி ” எனும் மாத இதழ் வெளியிட்டு இளைஞர்களுக்கு நல்ல வழிகாட்டியாகவும் விளங்கினார். அப்போதுதான் ” சந்தனக் கிண்ணம் ” எனும் அவருடைய கவிதைத் தொகுப்பையும் நூல் வடிவில் கொண்டு வந்தார்.

தமிழர் திருநாள் பேச்சுப் போட்டியில் பன்னீர், கோவிந்தசாமி நான் ஆகிய மூவரும் தவறாமல் கலந்து கொண்டு பரிசுகள் பெறுவோம்.

இவர்களைத் தவிர வேறு இரண்டு நண்பர்கள் மலையின் மீது இருந்தனர். ஒருவன் ஆனந்தன். மிகவும் நல்லவன். பாரதிதாசன் தமிழ்ப் பள்ளியின் பின்புறம் ஒரு அறையில் தன்னுடைய தந்தையுடன் தங்கியிருந்தான். நாங்கள் இருவரும் தபால் முத்திரைகளை ஆர்வத்துடன் சேர்த்துக் கொண்டிருந்தோம்.

அருமைநாதன் மலை வீட்டின் அருகே வசித்தவன். ஆறாம் வகுப்புக்கு மேல் அவனால் படிக்க முடியவில்லை. தீய பழக்கங்களுக்கு அடிமையாகி வீட்டை விட்டு ஓடிவிட்டான்.

இவர்கள்தான் என் நண்பர்கள். ஆனால் அப்பா இவர்கள் யாருடனும் என்னைச் சேர விடவில்லை. இவர்களுடன் சேர்ந்தால் படிப்பு கெடும் என்றார். அதனால் அவருக்குத் தெரியாமல்தான் நாங்கள் சந்தித்துக் கொள்வோம்.

அப்பா அப்படி பயந்ததற்குக் காரணமும் இருந்தது. அந்த வட்டாரம் தமிழர்கள் நிறைந்த பகுதியாக இருந்தாலும், பல தமிழ் இளைஞர்கள் குண்டர் கும்பலில் சேர்ந்திருந்தனர். அவர்கள் உடலில் பச்சை குததிக்கொண்டனர். அடிக்கடி கோஷ்டி சண்டையில் ஈடுபட்டு சிறைச்சாலையும் சென்று வந்தனர்.

தமிழ் முரசில் கட்டுரைகள் தொடர்ந்து வெளிவந்தபின் சிறுகதை எழுத விரும்பினேன்.

” தென் கடல் தீவு ” எனும் முதல் சிறுகதை மாணவர் மணிமன்ற இதழில் வெளியானது.

என்னால் சிறுகதையும் எழுத முடியும் என்பது அப்போது தெரிந்தது. தமிழ் முரசிலும், தமிழ் நேசனிலும் சிறுகதைகள் எழுதலானேன்.

வழக்கம்போல் பாட நூல்களை இரவில் படித்துவிட்டு, நள்ளிரவில் கதை கட்டுரைகள் எழுதுவேன். சில சமயங்களில் விடியற் காலையிலும் எழுதுவேன்.

படிப்பதும் எழுதுவதும் எனக்கு மிகவும் பிடித்திருந்தது.

அப்பாவுக்கோ நான் கதை கட்டுரைகள் எழுதுவது பிடிக்கவில்லை. வழக்கம்போல் படிப்பு கெடும் என்பார். எழுத்துப் படிவங்களைக் கிழித்து வீசிவிடுவார். அவருக்குத் தெரியாமல் எழுதி ஒளித்து வைப்பேன்.

என்னதான் தெரியாமல் எழுதினாலும் பத்திரிகையில் வெளியானதும் பார்க்கத்தானே போகிறார்? எழுதும் ஆர்வம் அபூர்வமானது. அது அவரால் தடைப்படக் கூடாது என்று துணிவுடன் தொடர்ந்து எழுதிக் கொண்டிருந்தேன்.

கோவிந்தசாமி அப்போது “: உங்கள் எழுத்து ” பகுதிக்கு கட்டுரை எழுத ஆரம்பித்தான்.

சிறுகதை வெளி வந்தால் ஐந்து வெள்ளி சன்மானம் அனுப்புவார்கள். அவற்றை நான் கோவிந்தசாமியிடம் தந்து சேர்த்து வைத்தேன். போதுமான பணம் சேர்ந்ததும் பயனுள்ள பொருள் வாங்க முடிவு செய்தேன்.

எனக்கு புகைப்படங்கள் எடுக்க ஆவல் அதிகம். அதனால் ஒரு புகைப்படக் கருவி வாங்கலாம் என்று எண்ணினேன். ” கோடாக் ” கருப்பு வெள்ளை படம் எடுக்கும் கருவி வாங்கினேன். அதை பல வருடங்கள் பெரும் பொக்கிஷமாகக் காத்து வந்தேன். பல அபூர்வ புகைப்படங்கள் என் கைவசமாயின.

என்னுடைய சிறுகதைகள் பத்திரிகைகளில் வெளி வந்ததும் நான் ஓர் இளம் எழுத்தாளன் ஆகிவிட்ட உணர்வு பெற்றேன்.

சுயநலமிக்க எழுத்தாளனாக இல்லாமல், பத்திரிகையில் பெயர் வந்து விட்டால் போதும் என்ற நிலையில் இல்லாமல், சமுதாயத்திற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று எண்ணம் கொண்டேன். ஆனால் என் வயதில் பெரிதாக என்ன மாற்றத்தை உண்டு பண்ண இயலும்?

அதனால் பள்ளி மாணவர்களின் பக்கம் என் கவனத்தைத் திருப்பினேன். அவர்களிடையே உள்ள பிரச்னையை ஆராய்ந்தேன்.

என்னைப் போன்று ஆங்கிலப் பள்ளிகளில் நிறைய தமிழ் மாணவர்கள் பயில்கின்றனர். அவர்கள் தமிழ் படிப்பது குறைந்து வந்தது. தமிழ் ஒரு பாடமாக இருந்தாலும், தமிழ் மீது பற்றுதல் குறைவாக இருக்கலாயிற்று.

ஆங்கிலப் பள்ளிகளில் பயிலும் தமிழ் மாணவர்களுக்கு தமிழ்ப் பற்று உண்டாக்கும் வகையில் ஏதாவது உடன் செய்யாவிடில், எதிர் காலத்தில் தமிழ் பலரின் இல்லங்களில் தவழாமல் போகலாம் என உணர்ந்தேன்.

ராபிள்ஸ் உயர்நிலைப் பள்ளியில் அப்போது ” தமிழ் இலக்கிய விவாத மன்றம் ” இருந்தது. நான் தமிழ் மாணவர்கள் சிலருடன் பேசி என்னுடைய திட்டத்தை வெளியிட்டேன். அவர்கள் ஆர்வம் காட்டினர். நாங்கள் தமிழ் ஆசிரியரைப் பார்த்து அது பற்றி பேசினோம். அவரும் தலைமை ஆசிரியரும் சம்மதம் தந்தனர்.

அதன் விளைவாக ” ராபிள்ஸ் தமிழ் மாணவர் கழகம் ” உருவானது. நான் தலைவராகவும், தனசேகரன் செயலராகவும், பாரூக் பொருளாளராகவும் தேர்வு பெற்றோம்.

கழகத்தின் முதல் கூட்டத்திலேயே அதன் கொள்கையை வெளியிட்டேன்.

” நாம் ஆங்கிலப் பள்ளியில் பயின்றாலும் நம்முடைய தாய் மொழியான தமிழைக் கற்றுத் தேர்ந்து போற்றிப் புகழ வேண்டும் என்பதே கழகத்தின் நோக்கம். ” என்றேன்.

முதல் கூட்டத்தின் அறிக்கையை தமிழ் முரசில் வெளியிட்டேன். அதைக் கண்ட மற்ற ஆங்கிலப் பள்ளிகளிலும் அதுபோன்று  தமிழ் மாணவர் கழகங்கள் அமைக்கப்பட்டன.

இக் கழகங்களுக்கிடையில் பட்டி மன்றம், இலக்கிய நிகழ்வுகள் நடத்தி ஒன்று கூடினோம்.

ஆங்கிலப் பள்ளிகளில் பயின்ற தமிழ் மாணவர்கள் தமிழ் மீது காதல் கொண்டு புதியதோர் இளையோர் சமுதாயம் உருவாக்கப் புறப்பட்டோம்!

( தொடுவானம் தொடரும் )

Series Navigationஇருநகரங்களின் கதை சொல்லி: சுப்ரபாரதிமணியன்இலக்கியச் சோலை கூத்தப்பாக்கம், கடலூர் [ நிகழ்ச்சி எண்-145 ]2015 இல் புறக்கோள் புளுடோவைத் தாண்டி பரிதி மண்டலத்துக்கு அப்பால் உளவப் போகும் நாசாவின் வேக விண்ணுளவி புதுத் தொடுவான் [New Horizon]எறும்பின் பயணம் – நிலாரசிகனின் ‘கடலில் வசிக்கும் பறவை’பங்காளிகளின் குலதெய்வ வழிபாடு
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

7 Comments

  1. Avatar
    சி. ஜெயபாரதன் says:

    தேமதுரத் தமிழோசை தரணி எல்லாம் பரவச் செய்த உங்கள் தமிழ்ப் பணிக்கு ஈடில்லை.

    எனது பரிவான பாராட்டுகள் டாக்டர் ஜி. ஜான்சன்.

    மருத்துவத் துறையில் தனித்துவத் திறமை பெற்றும், பிறர் பின்பற்றத் தக்க முறையில், தமிழ் வளர்த்த கோடியில் ஒருவர் நீங்கள்.

    அன்புடன்,
    சி. ஜெயபாரதன்

  2. Avatar
    Dr.G.Johnson says:

    அருமையான பாராட்டுக்கு அன்பு கலந்த நன்றி நண்பர் ஜெயபாரதன் அவர்களே! …டாக்டர் ஜி. ஜான்சன்.

  3. Avatar
    jyothirllata girija says:

    டாக்டர் ஜான்சன் அவர்களே! உங்கள் கட்டுரையை ரசித்தேன். உங்களைப் போல்வே நானும் டயரிகளில் த ஹிண்டு தலையஙகத்தில் உள்ள கடினமான ஆங்கிலச் சொற்களை என் பதினைந்தாம் வயதிலிருந்து எழுதத் தொடங்கினேன். தொடர்ந்து உங்கள் கட்டுரையைப் படிக்காமற் போனால் மன்னியுங்கள். நிற்க. அன்பான எல்லா அப்பாக்களும் ஒரே மாதிரிதான் போலும். என்னைப் பள்ளியில் சேர்த்ததும் வைக்கப்பட்ட முதல் கணக்குப் பரீட்சையில் நூற்றுக்கு நுற்று வாங்கியதை என் அப்பாவிடம் சொன்னேன்: “நானும் இன்னொரு பையனும் நூத்துக்கு நூறு வாங்கினோம்” என்று. “இன்னொருவனும் வாங்கினான் இல்லையா? அப்புறம் என்ன?” என்பதே என் அப்பாவின் எதிரொலி!
    நான் அறிந்த வரையில் டாக்டர்களில் பெரும்பாலோர் பல்வேறு கலைகளில் சிறந்தவர்களாக உள்ளனர். ஓவியம், இசை, கவிதை, இலக்கியம் (ரசித்தல், படைத்தல்)இன்னும் பல.நீங்களும் அவர்களில் ஒருவர். வாழ்க!
    அன்புடன், ஜோதிர்லதா கிரிஜா

  4. Avatar
    டாக்டர் இரா விஜயராகவன் says:

    தங்கள் தமிழ்த் தொண்டு மென்மேலும் தொடர என் நல்வாழ்த்துக்கள்.

    அன்புடன்
    இரா விஜயராகவன்
    தமிழ்ப் பேராசிரியர் (பணி நிறைவு)
    மைசூர்

  5. Avatar
    jyothirllata girija says:

    என் பின்னூட்டத்தில் உள்ள அச்சுப் பிழைகளை மன்னிக்கவும்.
    ஜோதிர்லதா கிரிஜா

  6. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள ஜோதிர்லதா கிரிஜா அவர்களுக்கு வணக்கம். உங்களுக்கும் புதிய ஆங்கிலச் சொற்களை எழுதிவைத்து அர்த்தம் பார்க்கும் பழக்கம் சிறு வயதிலிருந்தே இருந்துள்ளது அறிந்து மகிழ்ந்தேன். அதோடு எல்லா அப்பாக்களும் அப்படிதான் இருப்பார்கள் என்றும் எழுதியுள்ளீர்கள். உண்மைதான். ஆனால் என்னுடைய அப்பா பின்னாளில் செய்தவை என்னால் மறக்க முடியாதவை. அவை பின்பு இந்தத் தொடரில் வரும். உங்களுடைய நல்ல பாராட்டுக்கு நன்றி. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

  7. Avatar
    Dr.G.Johnson says:

    அன்புள்ள பேராசிரியர் திரு இரா. விஜயராகவன் அவர்களே, ” தொடுவானம் ” படித்து பாராட்டியதற்கு என் இதயங்கலந்த நன்றி. ஒரு தமிழ்ப் பேராசிரியரின் பாராட்டு எனக்கு இரட்டிப்பு மகிழ்ச்சி தருகிறது. அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *