தினம் என் பயணங்கள் -17 ஓரினச் சேர்க்கை பற்றி.

This entry is part 1 of 22 in the series 18 மே 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

“பெண்கள் தேவையில்லை ஆண்களே போதும்,” இந்த தலைப்பில் ஒரு கட்டுரை படிக்க நேர்ந்தது. அதன் விவரம் கீழே குறிப்பிட்டுள்ளேன். இந்த கட்டுரையின் குறிப்புகள் இணைப்பும் தாஹீர் வலைதளத்தில் இருந்து எடுக்கப்பட்டது
(http://www.enayamthahir.com/2011/12/blog-post_29.html)

குழந்தைப் பேறு என்பது பெண்களுக்கே உரியது. தாய்மை அடையும் பாக்கியம் அவர்களுக்கே உள்ளதால் அவர்கள் பெருமையுடன் போற்றப்படுகின்றர். ஆனால், பெண் துணையின்றி ஆண்களும், ஆண்துணையின்றி பெண்களும் குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

தற்போது “ஸ்டெம்செல்” மூலம் பல அரியவகை அற்புத சாதனைகள் நிகழ்த்தப்பட்டு வருகின்றன.

“ஸ்டெம்செல்” சிகிச்சையின் மூலம் கொடிய நோய்கள் கூட குணப்படுத்தப்பட்டு வருகின்றன.

இந்த அதிநவீன “ஸ்டெம் செல்” தொழிற் நுட்பத்தை பயன்படுத்திஅமெரிக்க விஞ்ஞானிகள் 2 ஆண் எலிகள் மூலம் குட்டி எலிகளை உருவாக்கிச் சாதனை படைத்துள்ளனர். டெக்சாஸ் இனப்பெருக்க விஞ்ஞானிகள் இந்த ஆய்வை மேற்கொண்டனர்.

அதன் அடிப்படையில் மனிதர்களிலும் பெண் துணையின்றி ஆண்களே குழந்தை பெற்றுக் கொள்ள முடியும் என விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர். அதே போன்று ஆண்கள் இல்லாமல் பெண்களே குழந்தை பெற்றுக் கொள்ளலாம். இது ஓரின சேர்க்கை தம்பதிகளுக்கு வசதியாக அமையும்.

ஒரு கிறித்துவ மாத இதழ் படிக்க நேர்ந்தது அது பின்வருமாறு விளம்பரம் செய்யப்பட்டிருந்தது. இந்த கிறித்துவப் பத்திரிக்கையை என்னிடத்தில் கொண்டு வந்து தந்தது என் மகளின் பள்ளித் தோழன் அருண்குமார்,

“இந்தியாவிற்கு ஆபத்து… ஓர் அவசர ஜெப அழைப்பு! பாளையங் கோட்டையில் கூட்டுப் பிரார்த்தனை!” இதுதான் அதில் வந்த செய்தி !

ஓரினச் சேர்க்கைக்கு சட்ட அனுமதி வழங்கிய உச்ச நீதி மன்றத் தீர்ப்பை எதிர்த்தும், ஓரினச் சேர்க்கையைத் தடை செய்யும்படியாகவும், மத்திய, மாநில அரசுகளை வலியுறுத்தி… எதிர்ப்புப் பிரார்த்தனைகள் !

இந்த மாதிரியான வாசகங்களோடு, எனக்குள் எழுந்த கேள்விகள்

1. 1. கிறித்துவர்களின் முக்கிய குறிக்கோள் என்ன?

2. 2. பிரார்த்தனை செய்வதால் ஓரினச் சேர்க்கையாளர்கள் மாறிவிடப் போகிறார்களா?

3. 3. உச்ச நீதி மன்றம் தன் தீர்ப்பை மாற்றிக் கொள்ள போகிறதா?

4. 4. சட்டம் இயற்றி அனுமதி அளிக்காத நாட்களில் மட்டும் ஓரினச் சேர்க்கையாளர்கள் கூடுவதில்லையா?

5. 5. ஒவ்வொரு கதவையாகத் தட்டி யார் யார் ஓரின சேர்க்கை கொண்டுள்ளீர்கள் எனக் கேட்டு தண்டனை அளிக்க முடியுமா?

இதைப் போன்ற தகாத நடவடிக்கைகளால் போதனைகளால் மூளைச் சலவை செய்து மக்களை ஏமாற்றித் தங்ளை விளம்பரப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த கூட்டத்திற்கான செலவுகளை வேறு வழிகளில் செலவிட்டிருக்கலாமே. முதலில் வயிறு நிரம்பின பிறகே மற்ற செயல்கள் தொடங்கும்… இங்கு வயிற்றிற்கே வழியில்லாத எத்தனையோ ஏழை எளிய மக்கள் இருக்க, இருட்டறையில் நடந்துக்கொண்டிருக்கும் சில முரண்பாட்டுத் தோற்றங்களை வெளியரங்கமாக்கி இந்தியாவிற்கு மாபெரும் ஆபத்து வந்து விடுவதைப் போன்றபொரு தோற்றப் பிம்பத்தை ஏற்படுத்துவானேன்.

எல்லாமே இயற்கை எனும் போது மனித மூளைக்கு எட்டாத முரண் பாடுகளைக் கட்டிக்கொண்டு பாமரமக்களைத் திசைமாற்றி வழி நடத்துவது தான் கிறித்துவ போதனையா?

ஓரினச் சேர்க்கையாளர்கள் காலங்காலமாய் இருந்துக்கொண்டே தான் இருக்கிறார்கள். செய்தித் தொடர்பு ஊடகங்கள் குறைவான காலங்களில் அதைப் பரவலாக அறிந்துக்கொள்ள முடியவில்லை.

தற்போது தொடர்புச் சாதனங்கள் பெருகிவிட உலகம் குறுகி உள்ளங்கையில் வந்து விட்டது.

ஓரினச் சேர்க்கைக்கு எதிராய்க் கொடி தூக்குவதால் என்ன சாதிக்க போகிறார்கள் ? எதை சொல்ல விரும்புகிறார்கள்,? தாங்கள் ஓரினச் சேர்க்கையில் ஈடுபடவில்லை என்பதையா?

சரி தவறு என்று ஒரு விவாத பொருள் எடுத்து வாதிட நான் வரவில்லை. இது தேவை இல்லை என்கிறேன். இது நம் சந்ததிக்கு அவசியம் இல்லை. இப்படி அறிவித்து அவர்களையும் கஷ்டப் படுத்தி தெரியாதவர்களுக்கும் தெரியப்படுத்தி வருங்கால இந்தியா மாபெரும் ஆபத்தை எதிர்நோக்கச் செய்கிறார்கள்.

இந்த கிறித்துவ பத்திரிக்கையை என்னிடத்தில் கொண்டு வந்து தந்தது என் மகளின் பள்ளி தோழன் அருண்குமார், ஏழாம் வகுப்பு படிக்கும் அந்த சிறுவன் அம்மா இவர்கள் எதற்காக பிரார்த்தனை செய்ய போகிறார்கள் ? ஓரினச் சேர்க்கை என்றால் என்ன என்று கேள்வி எழுப்புகிறான் ? என்ன பதில் சொல்வது? மனப் பக்குவமற்ற சிறுவருக்கு இது என்ன ஒழுக்கவியலைப் போதிக்கப் போகிறது ?

குடும்பத்தில் ஒரு ஓரினச் சேர்க்கையாளர் இருந்தால் என்ன செய்வோம் ? நம் குடும்ப மானம் போகக் கூடாது என்று அவர் தவறுகளை பிறர் அறியாவண்ணம் மறைப்போம். இந்தியக் குடும்பத்தில் நடக்கும் மறைக்கப்பட வேண்டியவற்றை இப்படி பகிரங்கப் படுத்திக்கொண்டு அதற்காகப் பிரார்த்தனை கூட்டங்கள் நடத்திக்கொண்டு தங்களின் தரத்தை கீழ்படுத்திக் கொண்டிருக்க வேண்டாம் என்பதே என் தனிப்பட்ட கருத்து.

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *