தினம் என் பயணங்கள் -22 தேர்விற்கான ஐந்தாம் நாள் பயணம்

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

தேர்விற்கான ஐந்தாம் நாள் பயணம்
(23.05.2014)

விடிந்தது தெரியாத தூக்கம், நேற்று இரவு (22.05.2014) விதவிதமாக படுத்து உட்கார்ந்து என்று பல நிலைகளில் இருந்து படித்ததின் விளைவு. தேர்வு பயம் போய் படிப்பின் மீது காதல் ஏற்பட்டிருந்தது.

உந்து சக்தியாய் இருந்து அநேகர் ஊக்கப்படுத்தியபடி இருக்க, படித்தலின் மீது காதல் வர காரணமானவர் பிரபீஸ்வரன். தேர்விற்காக எக்சல் ஷீட்டில் டைம் டேபிள் போட்டு படித்தலை ஒழுங்கு படுத்தியது வரை (அவர் சொன்னபடி நான் படிக்கவில்லை அது வேறு விடயம் – அதே சமயம் அவரின் உழைப்பை நான் மதிக்கவில்லை என்ற உறுத்தல் அதிகமாகவே இருந்தது. அதன் விளைவு அந்த எக்சல் ஷீட்டை தற்போது நான் பயன்படுத்திக் கொண்டிருக்கிறேன்.)

பிரபீஸ்வரன் என்னை ஊக்கப்படுத்த அநேகம் பேஸ்புக் சாட்டில் எழுதினார். அவர் எழுதினார். அவர் எழுதிய எல்லா விடயங்களிலும் ஒரு விடயம் மட்டும் மனதில் அணையா விளக்காய் ஆனது. அது உன் கால் சுண்டு விரலால் தரையை எத்தி உன் இயலாமையை தூரப் போட்டுப் படி என்பது தான். இதை அவர் நடையில் வேறு போல சொல்லியிருக்க நான் என் மனதில் உள்வாங்கியதை உங்களுக்காக பகிர்கிறேன்.

ஒரு வழியாய் என்னை ஊக்கப் படுத்தியவர்கள் அத்தனை பேரும், அன்பை பகிர்ந்தவர்கள் என அடுத்தடுத்தாக நினைவில் கடந்தார்கள், திரு.ஜெயபாரதன் அவர்கள், திரு.வையவன் மற்றும், திருமதி. ஜெயஸ்ரீ ஷங்கர், ஐயப்பன் கிருஷ்ணன், பிரசாத் வேணுகோபால் என்று பட்டியல் நீண்டது.

என் சிந்தனையைக் கலைக்கவென ரீங்கியது அலைப்பேசி.

ஹலோ என்றேன் தூக்கக் கலக்கத்தோடு

ஆபீஸ் போகாமல் இன்னும் தூக்கமா?

எதிர்த் திசையில் காட்டமாக வந்த பதிலில் சற்று அதிர்ந்து, இல்லேண்ணா எக்சாம் திருவண்ணாமலை போகனும், லீவு போட்டிருக்கேன் என்றேன்.

அண்ணா………அவர் என் உயர் அதிகாரி. அண்ணா என்றே அழைத்துப் பழகி விட்டது.

திருவண்ணாமலை தான வரீங்க, அந்த டேட்டா எண்ட்ரிக்கு பணம் கொடுத்த லிஸ்ட் கொஞ்சம் எடுத்துட்டு வாங்க. இல்லேண்ணா மதியம் எக்ஸாம். இப்ப கிளம்பினாலும் எக்ஸாம் போகத்தான் சரியா இருக்கும். 5 மணிக்கு மேல கலெக்டர் ஆபீஸ் வந்து அங்க இருந்து திரும்பவும் எப்படி வீட்டுக்கு வர்றது. நான் வேணா தம்பிக்கிட்ட கொடுத்தனுப்பவா?

இல்ல நான் விஜய் (என்னோடு பணிபுரியும் டேட்டா என்ட்ரி ஆபரேட்டர்) எக்சாம் சென்டருக்கு அனுப்பி வாங்கிக்கறேன்.

தேங்க்ஸ்ண்ணா

அச்சோ இன்னும் லிஸ்டே டைப் பண்ண வில்லை, காலக் கொடுமை கரண்ட் இல்லை. நான் பயணத்திற்குத் தயாராகி, வெளியே வரவும், ஆட்டோ வரவும் சரியாக இருந்தது. விஜய் அண்ணா முறையாறு வந்து இறங்கிடறாராம் நம்பள வரச் சொன்னார் என்றான் தேவா.

அம்மாவும் எங்களோடு வந்தாள், கம்யுட்டர் சென்டர் போகனும் தேவா என்றேன்.

கம்யுட்டர் சென்டர் போய் தகவல் சொல்ல, முடியாது வேறு வேலை இருக்கிறது என்றவரிடம் தேவா நிலையை விவரித்து டைப்செய்து வாங்கி வந்தான்.

சிறு தாமதத்திற்கு பிறகு நாங்கள் அவ்விடம் விட்டு பயணித்த சிறு இடைவெளிக்குப் பிறகு விஜய் போன் செய்தான் நான் செங்கத்தில் இருக்கிறேன் என்று.

அப்பொழுது நாங்கள் மண்மலையை கடந்து விட்டிருந்தோம். மீண்டும் திரும்பி செங்கம் வந்து விஜயை அழைத்துப் போவது கால தாமதம் மற்றும் பெட்ரோல் செலவு. விஜயை பேருந்தில் திருவண்ணாமலை வரும்படி பணித்து, பின் எதிர்பாராவிதமாய் திரும்பிப் பார்க்க, என் ஊன்றுகோள் கொண்டு வராதது தெரிந்தது. எப்பொழுதும் அம்மாவோ அல்லது மகளோ எடுத்து ஆட்டோவில் வைத்துவிடுவார்கள். அல்லது நானாவது கவனமுடன் கேட்டு வாங்குவேன். இன்றோ லிஸ்ட் டைப் செய்வதில் இருந்த ஒருமுகத்தில் அதை தவற விட்டிருந்தேன்.

அச்சோ என்ற என் முகபாவனையைப் பார்த்த அம்மா, பரிதவித்துப் போனாள். பரவாயில்லை தூக்கிக்கொண்டு தானே போகிறார்கள் என்றேன். அவளை சமாதானப் படுத்தும் தோரணையில்.

இன்று இறுதி நாள் யாரையேனும் பார்க்க வேண்டியிருக்கும், அல்லது நண்பர்கள் யாரிடமேனும் விடைபெற வேண்டி காத்திருக்க நேர்ந்தால் கட்டை இல்லாமல் சிரமப்படுவாய் என்றவள் கரியமங்கலம் இந்தியன் வங்கி அருகே இறங்கிக் கொண்டாள். அவள் இறங்கவும் திருவண்ணா மலையில் இருந்து செங்கம் செல்லும் பேருந்து வரவும் சரியாக இருந்தது.

தனித்த என் பயணம் சங்கடத்தை ஏற்படுத்தியது. இத்தனை வருடங்களில் மனம் தனிமைக்குப் பழகாதது எத்தனை வேதனையை உணரச் செய்கிறது.

நாங்கள் மலைசுத்தும் பாதை நெருங்கும் போது ஒரு சவம் எதிரில். மிகச் சிறிய பெண் ஆறு அல்லது ஏழாம் வகுப்பு படிக்கக் கூடிய வயது. முகம் முழுவதும் மஞ்சள் பூசப்பட்டு உறங்குவதான எழிலோடு. துக்க உணர்வு தொண்டையை ஆட்கொண்டது.

மரணம் இல்லாத வீடு எது ? ஆனாலும் மரணம் துக்கத்தின் சாயல் தான். மனதை அந்த பெண்ணிடமிருந்து விலக்கி குரங்கு ஒன்று தன் குட்டியை வயிற்றில் அணைத்தபடி உட்கார்ந்திருந்ததை கவனிக்க ஏவினேன்.

மனம் முரண்டு பிடித்தது. விஜய் ரமணாசிரமம் அருகில் நின்றிருப்பதாகக் கூறினான். நாங்கள் அவனருகில் சென்றோம். அருகே இளநீர் கடை. இளநீர் வேண்டும் என்றேன் நான். விலையை கேட்டவன் 30ரூபாய் ஒரு சாப்பாடே சாப்பிடலாம் என்று வாங்க மறுத்தான்.

எனக்கு இளநீர் வேணும் வாங்கித்தர முடியுமா முடியாதா? என்றேன். எப்போதாவது இந்த பிடிவாதம் அட்டையாய் என்னை ஒட்டிக் கொள்கிறது.

சிறிது தயக்கத்திற்கு பிறகு வாங்கித் தந்தான். இந்த இளநீர் இன்றைய நாள் முழுவதின் உணவு என்பதை முடிவு செய்து கொண்டேன் மனதிற்குள்ளாக!

அம்மா நான் மறந்து விட்ட ஊன்றுகோலோடு வந்துக்கொண்டிருப்பதாக தகவல், பாலசுப்பிரமணியத் தியேட்டர் ஸ்டாபிங்கில் இருந்து அம்மாவை அழைத்துக் கொண்டு சண்முகா தொழிற்சாலை மேல்நிலைப்பள்ளியை நெருங்கியபோது மற்றும் ஒரு சவம். இவர் வயோதிகர் முகமே தெரிய வில்லை வயிறு உப்பி, பட்டாசு சப்தம் இதயத்தைக் கலங்கச் செய்தது.

இரண்டு மரணம் கண்டபின், தேர்வில் அவ்வளவு சுவராசியம் இருக்க வில்லை.

மூன்று முறை சிறப்பு கண்காணிப்பிற்காய் வந்த தேர்வு நடத்தும் அலுவலர், காப்பி அடித்த மாணவிகள் அழுது ஒப்பாரி வைத்தது, என்று எதுவும் என் மனதில் லயிக்க வில்லை. படித்ததை ஒழுக்கமாக எழுதி, இடையில் நீர் தாகம் ஏற்பட தேர்வறைக் கண்காணிப்பாளரைத் தொந்தரவு செய்து. தண்ணீர் வாங்கி குடித்து, பின்னும் பொறுப்பாக தேர்வு எழுதிக் கொண்டிருந்தேன்.

எழுதி முடித்து வெளியே வந்த போது வேகமான காற்று. மழை வருவதற்கான பலத்த அடையாளங்கள், மேல் மாடியில் தண்ணீர் வைத்திருந்த குடம் காற்றில் விழ திடீர் நீர்வீழ்ச்சி சாரல். காற்றின் வேகத்தில் மரம் ஒன்று முறிந்து பாதி தொங்கியது.

ஆட்டோ காற்றை வழி மறிப்பது போல் வந்து நிற்க, சுவரில் ஒட்டியபடி காற்றில் தப்பி, ஆட்டோவில் ஏறிக்கொண்டேன்.

போய்விடுவது என்று முடிவெடுத்த பின்னும், உதவி செய்த தேர்வு நடத்தும் அலுவலருக்கு நன்றி சொல்லாமல் போவது மிகவும் கவலையுறச் செய்தது. அவர் வெளியில் எங்கும் இல்லை.

சரி போகலாமா? என்றேன் பொதுவாக.

சார் கிட்ட சொல்லிட்டுப் போகலாம் என்றார்கள் இருவரும் கோரசாக,

மூவரின் மனஓட்டத்தை உணர்ந்தவராக அவர் வெளியில் வர விஜய் போய் விடை பெற்றான் அவரிடம். தேவன் ஆட்டோவை அவர் அருகே கொண்டு சென்றான்.

நான் விடை பெறுதலாக தலையசைத்தேன். அவர் ஆட்டோவின் அருகில் வந்தார்.

தேங்க்ஸ் சார், நாங்க புறப்படறோம்.

ஒப்புதலாக தலையசைத்தார்.

சார் உங்க போன் நம்பர் தாங்க சார்.

சொன்னார் எழுதிக்கொண்டேன்.

சார் உங்க பேர் ?

ஸ்ரீதரன்

உங்க பேர் ?

தமிழ்ச்செல்வி

ஐந்து நாட்கள் இந்த பள்ளிக்கும் எனக்குமான உறவு இன்றோடு முடிந்தது. தேர்வு இனிதே முடிந்தது என்ற திருப்தியோடு இனம்புரியா பிரிவு உணர்வும் வாட்டவே செய்தது. மீண்டும் இந்த திருவண்ணாமலை வரப் பலமாதங்கள் ஆகலாம். ஒரு வேளை அடுத்த தேர்விற்வே வருகையின் நாளாகவும் அமையலாம்.

விஜய் லிஸ்ட் தந்துட்டியாடா?

அவர் வந்து வாங்கிட்டு போய்ட்டார்.

இப்ப எங்க நேரா வீட்டுக்கா ?

இல்ல அம்மா அக்கா வீட்ல இருக்காங்க இல்ல அவங்கள கூட்டிட்டு போகனும் என்றான்.

ஆட்டோ அக்கா வீட்டை நோக்கி வேகமெடுத்தது. மனமும் அடுத்த பணிகளில் நாட்டம் கொண்டு ஓடியது.

[தொடரும்]

Series Navigation
author

ஜி. ஜே. தமிழ்ச்செல்வி

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *