காந்தி தேசம் எனது பார்வையில் (.நூல் :- காந்தி தேசம் ஆசிரியர் :- ப. திருமலை.)

This entry is part 1 of 23 in the series 22 ஜூன் 2014

காந்திஜியின் அகிம்சைக் கொள்கைகளைப் பின்பற்றுகிறோமோ இல்லையோ, காந்தி அடிகளின் சிலை இல்லாத தமிழக நகரங்களைப் பார்ப்பது அரிது. காந்தி கனவுகண்ட தேசத்தை அமைக்கிறோம் என்பதில் முதலில் தீண்டாமை இல்லாத தேசத்தை அமைத்தல் முக்கியம் எனக் குறிப்பிடுகிறார் திருமலை தன்னுடைய காந்தி தேசம் என்ற நூலில்.

புதிய தரிசனத்தில் வந்த பதினான்கு கட்டுரைகள் தொகுக்கப்பட்டு காந்தி தேசம் என்ற நூலாக 2013 இல் வெளிவந்திருக்கிறது. பரபரப்புத் தகவல்களையும் சினிமா நிகழ்வுகளையும் எளியமக்களின் அந்தரங்க வாழ்வையும் பலர் காணக் கேலிக்கூத்தாகப் படைக்கும் ஊடகங்கள் காணத் தவறிய தகவல்கள் பல இந்நூலில் கொட்டிக் கிடக்கின்றன.

மூன்றாம் உலகப்போர் என்பது நீருக்காக ஏற்படும் என்று சொல்லப்படுகிறது. அதை வலியுறுத்துகிறது இந்நூல் 2020 வாகிலேயே நாம் நீருக்காக மட்டுமல்ல, க்ளோபல் வார்மிங் எனப்படும் புவி வெப்பமடைதல் ( இப்போதே வெய்யில் காலத்தில் வியர்வை ஆவியாகி உடம்பு எரிகிறது என்று சொல்கிறார்கள் எல்லா ஊர் மக்களும்.). , சிறு கனிமம் என்று சொல்லப்படும் மணல் கொள்ளை, சூரியசக்தி காற்றாலைச் சக்தி பயன்பாடு பற்றியும் சொல்கிறது .இயற்கையை மீட்பது பற்றியும் செயற்கையின் பிடியிலிருந்து விடுபடுவதுபற்றியும் வலியுறுத்துகிறார் ஆசிரியர். தகுந்த ஆராய்ச்சியாளர், ஊடகவியலாளர், சுற்றுச்சூழல் ஆர்வலர் ஆகியோரிடம் கருத்துக் கேட்டுப் பதிவு செய்துள்ளார்.

அது மட்டுமல்ல மனித நேயத்தோடு மாண்டொழிக மரணதண்டனை, சமூகத்தில் தலித் மக்கள் சந்திக்க நேரும் அவலங்கள் , ஆசிட்வீச்சின் கொடுமை, சுமங்கலி திட்டத்தின் கொடுமை, கௌரவக் கொலைகள் ( சாதி மாறிக் கல்யாணம் செய்து கொள்வதாலும், சாதி மாறிக் காதலிப்பதாலும் ) , சிறைச்சாலைகளில் போதிய மருத்துவ வசதியின்றி கைதிகள் சாவு, கந்து வட்டிக் கொடுமை, அதன் மூலம் ஏற்பட்ட பரிதாப மரணங்கள் ஆகியவற்றையும் பதிவு செய்திருக்கிறார்.

மேலும் மூன்று கட்டுரைகளில் இந்தியாவில் தமிழகத்தில்தான் விதவைகள் அதிகம் என்ற கட்டுரையில் குடியின் தீமையும், தொடரும் பெண் போலீஸ் தற்கொலைகளில் பாலியல் தொந்தரவுகள் மட்டுமல்ல பணிச்சுமையால் ஏற்படும் மன அழுத்தமும் பதிவு செய்யப்படுகிறது. கடைசி அத்யாயம் ஊழலுக்குக் காரணம் தலித்துகளா.? இது இன்னும் விரிவாக அலசப்பட்டிருக்கலாம். மேலும் மேலும் ஒவ்வொரு பஞ்சாயத்திலும் பேராசிரியப் பணியிலும் மருத்துவத்தொழிலிலும் இருக்கும் தலித்துகள் அவமானப்படுத்தப்படுவதும் அவர்களுக்கான உரிய மரியாதை கொடுக்கப்படாததுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. ஊழல் பற்றி எதுவும் சொல்லப்படவில்லை. எல்லாக்கட்டுரைகளும் ஆய்வுக் கட்டுரை பாணியில் அமைந்து உள்ளன.

பெண்களின் நிலை பற்றி அதிகம் அலசி இருக்கும் நூல் சமீபத்தில் இதுவாகத்தான் இருக்க முடியும். சுமங்கலித் திட்டம் என்ற கொத்தடிமைத் திட்டம் பற்றியும், சாதி விட்டு சாதி காதலிக்கும் மகள்களை தகப்பன்களே கொல்வது பற்றியும், கந்து வட்டியாலும், குடியாலும் இறக்கும் ஆண்கள் அதிகம் என்பதால் விதவைகளும் தமிழ்நாட்டில் அதிகம் என்றும் அச்சுறுத்தும் புள்ளி விவரங்களை அளிக்கிறது இந்நூல்.

இயற்கையை அளவுக்கு மீறியும் முறையற்ற வழியிலும் பயன்படுத்தி நாசப்படுத்துவதும், சகமனிதர்களையும் ( பெண்களையும்) அவ்வாறே நடத்தித் துன்புறுத்துவதும் மனிதர்களின் ஆதிக்க மனப்பான்மையைக் காட்டுகிறது. இது ஆதிக்க சாதி மனப்பான்மை என்பது ஒருபுறமிருக்க இன்றைய காலகட்டத்தில் இது எல்லா இடத்திலும் விரவி இருக்கும் ஆதிக்க மனிதர்களின் மனப்பான்மை என்று கொள்ளலாம்.

மொத்ததில் காந்தி தேசம் 2025 க்குப் பிறகு என்னென்ன சீர்கேடு அடையுமோ என அச்சம் கொள்ளவைத்த நூல். அதற்குப் பரிகாரங்களும் புள்ளிவிவரங்களோடு கொடுக்கப்பட்டுள்ளது. அதைப் பின்பற்றினால் காந்தி தேசம் மட்டுமல்ல, எல்லா தேசங்களிலும் நிலைமை சீரடையலாம். என பல்வேறு பத்ரிக்கைகளிலும் பணிபுரிந்த சிறப்பைப் பெற்ற மேலும் “ மேம்பாட்டிற்கான இதழியல் “ என்ற அமைப்பின் தலைவராக இருந்து பல இதழியல் மாணாக்கர்களை வழிநடத்தி வரும் ப. திருமலை கூறுகிறார்.

இது ஒவ்வொரு கல்லூரியிலும் இருக்க வேண்டிய நூல்.

நூல் :- காந்தி தேசம்

ஆசிரியர் :- ப. திருமலை.

பதிப்பகம் :- புதிய தரிசனம்.

விலை :- 200

Series Navigation
author

தேனம்மை லெக்ஷ்மணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *