[June 7, 2014]
சி. ஜெயபாரதன் B.E.(Hons) P.Eng (Nuclear) கனடா
2014 ஜூன் 7 ஆம் தேதி கூடங்குளம் ரஷ்ய அணுமின்சக்தி நிலையம் முதன்முதல் 1000 MW உச்ச நிலை ஆற்றலில் வெற்றிகரமாக இயங்கி மின்சாரம் தமிழ்நாட்டுக்கு மின்வடங்களில் அனுப்பி வருகிறது. இந்த முதல் அணுமின் உலை ஆரம்பநிலை இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, பூரணத்துவம் அடைந்த தேதி : 2013 ஜூலை 14. மின்னாற்றல் திறன் ஏற்றமாகி 400 மெகாவாட் மேல்நிலை எட்டிய போது முதன்முதல் மின்வடங்களில் இணைப்பாகி, அனுப்பியது. முதல் யூனிட் அடித்தளம் 2001 இல் போடப்பட்டு, கட்டி முடிந்த பிறகு, கூடங்குள ஊர்ப்புற எதிர்ப்பாளர் போராட்ட நிறுத்தத்தால் அணு உலை இயக்கம் இரண்டு வருடங்கள் தாமதமானது. அடுத்த இரண்டாம் யூனிட் இன்னும் ஓரிரு ஆண்டுக்குள் இயக்கப் பாதுகாப்புத் தேர்வுகள் முடிந்து, மேலும் 1000 MW மின்சக்தி உற்பத்தியாகும் என்று எதிர்பார்க்கலாம்..
பின்புலம் : அணு உலையா ? வாழ்வுக்கு உலையா ? இப்படி மேலோடி இடித்துரைப்பது ஓர் அசுரப் போக்கு. அணு உலை அருகே வாழ்பவருக்கு எல்லாம் ஆறாம் விரல் முளைக்குது, புற்று நோய் தாக்குது என்றெல்லாம் நையாண்டி செய்வது அறிஞர்களின் கோமாளித்தனம். புற்று நோயுடன் மற்ற நோயும் தொற்றுது என்னும் பாட்டி கதைகளைக் கட்டிக் எறிந்து விட்டு சற்று புள்ளி விபரத்தோடு டாக்டர் புகழேந்தி ஆய்ந்து காட்டினால் நாமெல்லாம் நம்பலாம். கல்பாக்கத்தில் அணு உலை கட்டும் முன்பு அத்தகைய நோய்களால் துன்புற்றோர் அல்லது செத்தவர் எத்தனை பேர் ? அப்போது அங்கு வாழும் நபருக்கு எத்தனை விரல்கள் இருந்தன என்று எண்ணிப் பார்த்தவர் யார் ? அணு உலைகள் கட்டிய பின் இயங்கும் போது எத்தனை பேர் புற்று நோயில் செத்தனர், மற்ற நோயில் மடிந்தனர் என்ற எண்ணிக்கைகள் தேவை. அப்படி அதிகமானால் அந்த தொகை கூறப்பட வேண்டும். அந்தப் புற்று நோய்கள், உடல் ஊனங்கள் அணு உலைக் கதிரடியால் உண்டாயின என்பது ஆதாரமோடு நிரூபிக்கப் பட வேண்டும். அப்போதுதான் அணு உலையால் மனிதருக்கு ஆறாவது விரல் முளைத்த விந்தைகளைப் பற்றி மக்களிடம் புகாரிடலாம்.
உலகத்திலே இப்போது இயங்கி வரும் (435+284+220) 939 அணு உலைகளுக்கு அருகில் வாழ்வோர் யாராவது புற்று நோயுற்றுத் செததால் அங்குள்ள பராக்கிரம யூனியன் நிலைய அதிகாரிகளைச் சும்மா விட்டுவிடுமா ? அவர்களைச் சிறையிலிட்டு பெருத்த நட்ட ஈடைப் பிடுங்கி விடும். நான் இந்தியாவிலும் கனடாவிலும் 45 ஆண்டுகளுக்கு மேல் யுரேனிய எரிசக்தி ஊட்டும் யந்திரக் கதிரியக்க வேலைகளில் நேரிடையாகத் தொடர்ந்து பணியாற்றி யிருக்கிறேன். இப்போது பொறியியல் படித்த என் புதல்வி கனடாவில் பிக்கரிங் அணுமின் நிலையத்தில் பணி புரிகிறாள். அவளது கணவரும் டார்லிங்டன் என்று அழைக்கப்படும் வேறோர் அணுமின் நிலையத்தில் எஞ்சினியராகப் பணி செய்கிறார். எனக்கோ, அவர்களுக்கோ அவரது இரண்டு பிள்ளைகளுக்கோ எவருக்கும் ஆறாவது விரல் முளைக்க வில்லை. ஆகவே உதயகுமார் போன்ற அணுவியல் பொறிநுணுக்கவாதிகள், ஞாநி போன்ற எழுத்தாளர்கள், டாக்டர் புகழேந்தி போன்ற மருத்துவர்கள் ஆதாரமற்ற மூன்றாவது நபர் கருத்துக்களைப் பாமர மக்களுக்கு ஊட்டிப் பயமுறுத்தும் வழக்கத்தைக் கைவிடுமாறு வேண்டிக் கொள்கிறேன்.
பேரறிஞர் ஞாநி கல்பாக்க அணு உலைகள் தூங்கும் எரிமலை மேல் நடனம் ஆடுகின்றன என்று அபாயச் சங்கு ஊதுகிறார். கூடங்குளம் இரட்டை அணு உலைகள் எரிமலைப் பாறைமேல் பள்ளி கொண்டுள்ள தாக பெரிய புராணம் எழுதியுள்ளார் அடுத்தொருவர் ரா ரமேஷ்.. கல்பாக்கத்துக்கும், கூடங்குளத்துக்கும் இப்போது பிரச்சனை அணுமின் உலைகள் அல்ல ! அவற்றின் கீழாகத் தூங்கும் எரிமலைகள் ! எரிமலைக்கும் அணு உலைக்கும் வரும் சடுகுடுப் போட்டியில் அஞ்ச வேண்டியது எரிமலைக்கு, அணு உலை பாதுகாப்பாக புதைபடும். எரிமலைப் பூதங்கள் தூங்கும் சென்னைக் கடற்கரை மக்களும், குமரிக் கடற்கரை மக்களும் கோடிக் கணக்கில் எங்கே, எப்படிப் புலம் பெயரப் போகிறார்கள் ?
2012 மார்ச்சில் ஞாநி கல்பாக்கம் அணுமின் உலைகள் தூங்கும் எரிமலை மேல் படுத்துள்ளது என்றும், அது 1757 ஜனவரி 20 இல் வெடித்ததை பரிணாம வளர்ச்சி மேதை டாக்டர் சார்லஸ் டார்வின் நேராகப் பார்த்ததாக ரா. ரமேஷ் தன் நூலில் எழுதி இருப்பதாகவும் சொல்லி இருக்கிறார். டார்வின் பிறந்து, இறந்த ஆண்டுகள். (1809-1882). இந்து மாக் கடலில் 1831-1835 ஆண்டுகளில் பயணம் செய்த டார்வின் கப்பல் கல்பாக்கம் அருகில் சென்றதாக அவரது கடல் வரைபடத்தில் இல்லை. அது ஈழத் தீவுக்குத் தெற்கே ஆயிரம் மைல்களுக்கு அப்பால் சென்றது. 1757 இல் எரிமலை மூச்சு விட்ட புகைத்தடம் கூட அந்த தூரத்தில் தெரிந்திருக்க முடியாது.
அணு உலை எதிர்ப்பாளி உதயகுமாரின் சில வினாக்களுக்கு என் பதில்
////கூடங்குளம் அணுமின் நிலையத்தை மூடக் கோருவதற்கான காரணங்கள் (கீற்றில் வந்தது) உதயகுமார் திங்கள், 12 செப்டம்பர் 2011 ///
http://www.keetru.com/index.
/////கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 1, 2 உள்ளூர் மக்களை கலந்தாலோசிக்காது, ஜனநாயக, மனித உரிமை மரபுகளை மீறி கட்டப்படுகின்றன. 1, 2 உலைகளுக்கான சுற்றுச்சூழல் தாக்க அறிக்கை மக்களோடு பகிர்ந்து கொள்ளப்படவில்லை. கருத்துக் கேட்பு கூட்டம் நடத்தப்படவில்லை. 1, 2 உலைகள் அமைக்கப்பட்டிருக்கும் தலங்கள் பற்றிய ரசிய விஞ்ஞானிகளின் ஆதங்கங்கள் மூடி மறைக்கப்பட்டதோடு, தல ஆய்வறிக்கை (site Evaluation Study) மக்களுக்கு தரப்படவில்லை. பாதுகாப்பு ஆய்வறிக்கையும் (Safety Analysis Report) பொதுமக்களுக்கு, மக்கள் பிரதிநிதிகளுக்கு, பத்திரிக்கையாளர்களுக்கு அளிக்கப்படவில்லை. இப்படி மக்களுக்கு எந்தத் தகவலும் தராமல், உண்மைகளைச் சொல்லாமல், ஜனநாயக மரபுகளை மீறி நிறைவேற்றப்படுவது ஏற்றுக்கொள்ளப்பட முடியாதது.
kudankulam_323தமிழ்நாடு அரசின் அரசாணை எண். 828 (29.4.1991 – பொதுப்பணித்துறை) அணுமின் நிலையத்திலிருந்து 2 கி.மீ தூரத்திற்குள் அணுமின் கட்டிடங்களைத் தவிர வேறு எதுவும் இருக்கக்கூடாது என்றும், 2 முதல் 5 கி.மீ சுற்றளவிலான பகுதி நுண்ம ஒழிப்பு செய்யப்பட்ட பகுதியாக (Sterilization Zone) இருக்க வேண்டும் என்றும் சொல்கிறது. வீடுகளோ, மனிதர்களோ இருக்கக்கூடாது என்பதை நேரடியாகக் குறிப்பிடாமல், திசை திருப்பும் வார்த்தைகள் உபயோகப்படுத்தப்பட்டுள்ளன. அரசின் உண்மைநிலை என்ன என்பதை தெளிவாக தெரிவிக்கவில்லை.
i) AERB எனும் அணுசக்தி ஒழுங்காற்று வாரியத்தின் விதிமுறைகள் படி 5 கி.மீ. சுற்றளவுக்குள் 20,000 பேருக்கு மேல் வசிக்கக்கூடாது. அணுமின் நிலையத்திலிருந்து 10 கி.மீ தூரத்திற்குள்ளேயே கூடங்குளம் கிராமத்தில் 20,000 மக்களும், இடிந்தகரை கிராமத்தில் 12,000 மக்களும், காசா நகரில் 450 குடும்பங்களும் வசிக்கிறார்கள்.
ii) 10 கி.மீ சுற்றளவுக்குள் மாநிலத்தின் சராசரி மக்கள் அடர்த்தியின் மூன்றில் இரண்டு பங்குக்கு குறைவாகவே மக்கள் இருக்க வேண்டும். ஆனால் மாநில சராசரியை விட மிக அதிகமான மக்கள் இந்த பகுதியில் நெருக்கமாக வாழ்கிறார்கள்.
iii) 30 கி.மீ சுற்றளவுக்குள் 1,00,000-க்கும் அதிகமான மக்கள் வாழும் நகரங்கள் இருக்கக்கூடாது. ஆனால் 2,00,000 மக்கள் வாழும் நாகர்கோவில் நகரம் 28 கி.மீ தூரத்திற்குள் இருக்கிறது.
iv) 20 கி.மீ சுற்றளவுக்குள் சுற்றுலாத் தலங்களோ, சரித்திர பிரசித்தி பெற்ற இடங்களோ இருக்கக்கூடாது என்று AERB சொன்னாலும் உலக பிரசித்தி பெற்ற கன்னியாகுமரி 15 கி.மீ சுற்றளவுக்குள் இருக்கிறது.
இப்படி கூடங்குளம் அணுமின் நிலையத்திலிருந்து 30 கி.மீ சுற்றளவுக்குள் 10 லட்சத்திற்கும் அதிகமான மக்கள் வசித்து வரும் நிலையில் எங்களை வெளியேற்றுவதோ, பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்துவதோ, எங்களுக்கு தேவையான இருப்பிட வசதிகளை செய்வதோ, மருத்துவ வசதிகள் செய்து தருவதோ, பள்ளிகள் அமைத்து தருவதோ, மாற்று வேலைகள் ஏற்படுத்திக் கொடுப்பதோ கற்பனையில் கூட நடக்காத காரியம். 2004 டிசம்பர் சுனாமியில் மத்திய மாநில அரசினர் கொண்டிருந்த பேரிடர் மேலாண்மையை நாடே அறியும்.////
என் பதில் : அணுமின் உலைகளுக்கு அருகில் வாழும் மக்கள் எண்ணிக்கை கூடிக் குறைந்து மாறுவது. 2001 இல் கூடங்குள அணுமின்னுலை கட்ட ஆரம்பித்துடன் இருந்த ஜனத்தொகை பத்தாண்டுக்குப் பிறகு அதிகமா யிருக்கும். கனடாவில் கடந்த 40 ஆண்டுகளாய்ப் பாதுகாப்பாய் இயங்கி வரும் 12 பெரிய கனநீர் அணுமின் நிலையங்கள் (இந்திய கனநீர் அணுமின் உலைகளை ஒத்தவை). ஜனத்தொகை மிக்க டொரோண்டோ நகருக்கு (மில்லியன் 2011) அருகில் மின்சாரம் அனுப்பி வருகின்றன. மனித நெருக்கம் புலப் பெயர்ச்சிக்கு இடையூறாய் இருக்கும். கட்டி முடித்த அணுமின் உலைகள் பாதுகாப்பாக இயங்க முடியும். அவை யாவும் மனித நெருக்கத்தால் மூடப் பட வேண்டும் என்பதை ஏற்றுக் கொள்ள முடியாது.
///அணுஉலைக் கட்டிடங்களின், குழாய்களின் மோசமான தரம், கட்டிடம் கட்டியதை உடைத்து மீண்டும் கட்டுவதான திருவிளையாடல்கள், உள்ளூர் காண்டிராக்டர்களின் கைங்கரியங்கள், ரசியாவில் இருந்து தாறுமாறாகவும் தலைகீழாகவும் வந்த உதிரிபாகங்கள், நிர்வாக குழப்பங்கள், குளறுபடிகள் என அடிவயிற்றை புரட்டிப் போடும் தகவல்கள், அனுதினமும் வந்து கொண்டே இருக்கின்றன. 26.9.2006 அன்று அப்போதைய குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் கூடங்குளம் அணுமின் நிலையத்திற்கு வருகை தந்தார். அணுசக்தித் துறை உயர் அதிகாரிகளோடு அவர் நின்று கொண்டிருந்த போது கூரையில் இருந்து ஊழியர் ஒருவர் ஓரிரு அடி தூரத்தில் பொத்தென்று விழுந்து அனைவரையும் கதி கலங்கச் செய்தார். குடியரசுத் தலைவர் வந்தபோதே இந்த நிலை என்றால், குடிமக்களுக்கு என்ன நிலை? /////
என் பதில் : யந்திர யுகத்தில் தொழிற்சாலை விபத்துக்கள் ஏதாவது நேர்வது உண்மை. ஆனால் கடந்த 40 ஆண்டில் அடுத்தடுத்து இயங்கும் 20 இந்திய அணு உலைகளில் ஒருவர் கூட இதுவரை மரிக்க வில்லை என்பதும் உண்மை. கதிரடி பட்டு இதுவரை ஒருவர் கூட நோய்வாய்ப்பட வில்லை என்பதும் உண்மை.
/////உலைகளை குளிர்விக்கும் சூடான கதிர்வீச்சு கலந்த தண்ணீரையும், உப்பு அகற்றி ஆலைகளில் இருந்து வெளிவரும் உப்பு, சேறு, ரசாயனங்களையும் கடலில் கொட்டி, ஊட்டச்சத்து மிகுந்த கடல் உணவையும் நச்சாக்கப் போகிறோம். உணவு பாதுகாப்பு கேள்விக்குறியாகும். மீனவர்களின் விவசாயிகளின் வாழ்வுரி மையும், வாழ்வாதார உரிமைகளும் முற்றிலுமாக அழிக்கப்படும். விபத்துக்களோ, விபரீதங்களோ நடக்கவில்லை என்றாலும் அணு உலைகளில் இருந்து அனுதினமும் வெளியாகும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்களை உண்டு, பருகி, சுவாசித்து, தொட்டு அணு அணுவாய் சிதைந்து போவோம்.///
என் பதில் : உலகத்தில் கடந்த 40 ஆண்டுகளால் அடுத்தடுத்து இயங்கி வரும் 430 மேற்பட்ட அணுமின் உலைகளில் பெரும்பான்மையானவை நதிக் கரையிலோ, கடற்கரையிலோ, ஏரிக்கரை மீதோதான் அமைக்கப் பட்டுள்ளன. ஆகவே மேற்கூறிய கருத்து முற்றிலும் மெய்யாகாது. அணு உலைகளில் இருந்து அனுதினமும் கதிர்வீச்சு நச்சுப் பொருள்கள் வெளியாவதில்லை. விபத்துக்கள் அனுதினம் நேர்வதில்லை. என்ன ஆதாரம் வைத்து இப்படி வெறுமையாகப் புகார் செய்ய முடியும் ? அனுதினம் வெளியாகும் திரவ, திடக் கழிவுகள், வாயுப் புகை யாவும் சோதிக்கப் படாமல் வெளியே விடப் படுவதில்லை.
////பேரிடர்கள் வராது, நடக்காது, என்று தரப்படும் வெற்று வாக்குறுதிகளை ஏற்க முடியாது. 2003 பிப்ரவரி 9ம் தேதி இரவு 9.45 மணி அளவில் திருநெல்வேலி மாவட்டம், பாளையங் கோட்டையில் ஒரு மெலிதான நிலநடுக்கம் ஏற்பட்டது. 2006 மார்ச் 19ம் தேதி மாலை 6.50 மணிக்கு கூடங்குளத்தை சுற்றியுள்ள கன்னன்குளம், அஞ்சுகிராமம், அழகப்புரம், மயிலாடி, சுவாமிதோப்பு போன்ற கிராமங்களில் நில அதிர்வு உண்டானது. வீடுகளின் சுவர்களிலும், கூரைகளிலும் கீறல்களும், விரிசல்களும் தோன்றின. இரண்டு நாட்கள் கழித்து மார்ச் 21ம் தேதி கரூர் மாவட்டத்தில் அதிகாலை 1.30 மணிக்கும், 5.00 மணிக்கும் நில அதிர்வுகள் உண்டாகின. 2011 ஆகத்து முதல் வாரத்தில் தமிழகத்தின் 7 மாவட்டங்களில் நிலநடுக்கம் நடந்திருக்கிறது. மார்ச் 11, 2011 அன்று நடந்த புகுசிமா விபத்தினால் அமெரிக்க அணு உலைகள் ஜப்பானின் மேலாண்மை இருந்த பிறகும் வெடித்து கதிர்வீச்சை உமிழ்ந்திருக் கின்றன. கூடங்குளம் அணுமின் நிலையம் 2004 டிசம்பர் சுனாமிக்கு முன்பே கட்டப்பட்ட நிலையில் அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் செய்யப்பட்டிருப்பதாக அணுசக்தித் துறை சொல்லும் வாதங்கள் உண்மைக்கு புறம்பானவை. /////
என் பதில் : 9 ரிக்டர் அளவு பயங்கர நிலநடுக்கத்தில் கூட ஜப்பான் புகுஷிமா அணுமின் நிலையங்கள் எதுவும் பாதிக்கப் படவில்லை. அத்தனை அணுமின் உலைகளும் நிலம் நடுங்கியதும் பாதுகாப்பாய் நிறுத்தமாயின. நிறுத்தமான அணு உலையில் அபாய வெப்பத் தணிப்பு ஏற்பாடுகள் சுனாமியில் மூழ்கிப் போனதாலும், இரட்டை அல்லது முப்படி வெப்ப தணிப்பு ஏற்பாடுகள், (Shutdown Cooling Systems) ஓய்வுத் தணிப்பு அமைப்பு (Passive / Gravity Cooling Systems) இல்லாததாலும் எருக்கோல்கள் சில உருகிக் கதிரியக்கம் கசிந்தது. கூடங்குளத்தில் அவ்விதப் பிரச்சனைகள் எழமாட்டா.
1979 இல் நேர்ந்த திரிமைல் தீவு அணுமின் நிலைய விபத்தில் ஹைடிரஜன் வாயுக் கோளம் உருண்டு விபத்து ஏற்படப் பயமுறுத்தினாலும் வெடிப்பு ஏற்பட வில்லை.. அந்த கதிரிக்க விபத்துக்குப் பிறகு உலக நாடுகள் தமது அணுமின் உலைகளில் ஹைடிரஜன் வாயு இணைப்பிகளை (Hydrogen Recombiners) உடனே அமைத்துக் கொண்டன. தனியார் துறை இயக்கும் புகுஷிமா ஜப்பான் அணுமின் உலைகளில் அவ்விதம் ஏன் இல்லாமல் போயின என்பது 2011 ஆம் ஆண்டில் வியப்பாக இருக்கிறது. கூடங்குளத்தில் ஹைடிரஜன் வாயு இணைப்பிகள் இருப்பதால் அந்தப் பிரச்சனை எழாது.
////அணுமின் நிலையங்கள் மீதான தீவிரவாத அச்சுறுத்தல் பற்றி பாரத பிரதமரே அவ்வப்போது எச்சரித்து வருகிறார். ஆகத்து 18, 2011 தேதியிட்ட இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியில் உள்துறை துணை அமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன் அணுமின் நிலையங்கள் பயங்கரவாத குழுக்களின் முக்கிய இலக்குகளாக இருக்கின்றன என்கிறார்.////
என் பதில் : அமெரிக்காவில் 9/11 மூர்க்கரின் வரலாற்று முக்கிய தாக்குதலில் ஓரிரு நாட்களில் 5000 பேர் ஜெட் விமான மோதலில் மாண்டனர். அதன் பிறகு உலகின் 430 மேற்பட்ட அனைத்து அணுமின் உலைகளும் இராணுவப் பாதுகாப்பில் இயங்கத் துவங்கின. மூர்க்கர் அணு உலைகள் அருகில் வராமல் பாதுகாக்க வேண்டுமே தவிர பயந்து போய் அவற்றை மூடிவிடக் கூடாது.
////2007 பிப்ரவரி மாதம் அப்போதைய தமிழக மின்துறை அமைச்சர் ஆற்காடு வீராசாமி கூடங்குளம் அணுமின் நிலையத்தை சுற்றி வசிப்பவர்களுக்கு இலவச குழுக் காப்பீட்டு திட்டம் செயல்படுத்தப்படும் என்று அறிவித்தார். சுமார் 1 வருடத்திற்கு முன்னால் இந்திய அணுமின் கழகமும், இந்தியாவுக்கு அணு உலைகள் வழங்கும் ஆட்டம் ஸ்டராய் எக்ஸ்போர்ட் என்னும் ரசிய நிறுவனமும் இழப்பீடு குறித்த பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். ரசியா வழங்கும் உலைகளில் ஏதேனும் விபத்துக்கள் நிகழ்ந்தால், இழப்பீடு வழங்க வேண்டும் என இந்தியா கேட்க, அந்த மாதிரியான உடன்படிக்கைக்கு ஒப்புக்கொள்ள முடியாது, உலைகளை இயக்கு கின்ற இந்திய அணுமின் கழகமே முழுப் பொறுப்பு ஏற்க வேணுடும் என ரசியா கையை விரித்தது. 2 008ம் ஆண்டு ரகசியமாக கையெழுத்திடப்பட்ட இரு நாட்டு உடன்படிக்கை ஒன்றின் 13-வது சரத்து இதைத் தெளிவாக எடுத்துரைக்கிறது என்று சொல்கிறது ரசியா. போபால் நச்சுவாயுக் கசிவில் பாதிக்கப்பட்ட மக்கள் 25 ஆண்டுகள் கழித்தும் இன்னும் இழப்பீடுகள் பெறாமல், எந்தவிதமான உதவிகளும் கிடைக்காமல் வதைப்பட்டுக் கொண்டிருப்பது மொத்த இந்தியாவுக்கே, உலகத்திற்கே தெரியும்.////
என் பதில் : போபால் விஷவாயு விபத்துக் கசிவில் பல்லாயிரம் இந்தியர் மரித்தனர். பல்லாயிரம் இந்தியர் கண்ணிழந்தார். அங்கயீனப் பிறப்புகள் உண்டாயின. அவருக்கு முறையான காப்பீடு இழப்பு நிதி சரியான தருணத்தில் அளிக்கப் படவில்லை என்பது உண்மை. இரசாயனத் தொழிற்துறை நிறுவகங்களில் இந்திய அணுசக்திச் சட்டம் போல் (Atomic Energy Act) தெளிவாகக் காப்பீடு முறைகள்/பொறுப்புகள் விளக்கமாக எழுதப் படவில்லை. ரஷ்ய அணு உலைச் சாதனங்கள் ஆரம்பத்தில் பழுதானல் அவற்றைச் செம்மைப் படுத்தும் பொறுப்பு & செலவு ரஷ்யாவைச் சேர்ந்தது. அணு உலை இயங்க ஆரம்பித்து மனிதத் தவறாலோ, யந்திரப் பிசகாலோ விபத்து உண்டானால் அந்த நிதி இழப்பை நியூகிளியர் பவர் கம்பெனி (NPCIL) ஏற்றுக் கொள்ளும். செலவு குறிப்பிட்ட வரம்பு மாறினால், இந்திய அரசாங்கம் ஈடு செய்யும்.
////அணுஉலை கழிவு ஒரு பெரிய பிரச்சனை. கூடங்குளம் அணுமின் நிலைய கழிவு ரசியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் என்றுதான் முதலில் ஒப்பந்தம் செய்யப்பட்டது. பின்னர் அது இந்தியாவிலேயே மறு சுழற்சி செய்யப்படும் என்றும், கூடங்குளத்திலேயே அதற்கான உலை நிறுவப்படலாம் எனவும் தெரிவித்தனர். கூடங்குளம் அணு உலைகள் ஆண்டுக்கு சுமார் 30 டன் யுரேனியத்தை பயன்படுத்தும். ஏறத்தாழ 30 ஆண்டுகள் இயங்கும் போது 900 டன் கழிவு வெளியாகும். பயங்கரமான கதிர்வீச்சை வெளியிடும் இந்த கொடிய நச்சை 24,000 ஆண்டுகள் நாம், நமது குழந்தைகள், நமது பேரக்குழந்தைகள் அவரது வழித் தோன்றல்கள் போற்றிப் பாதுகாக்க வேண்டும். அபாயகரமான இந்தக் கழிவுகளை தேக்கி வைத்திருப்ப தாலும், மறு சுழற்சி செய்வதாலும் நிலத்தடி நீரும், காற்றும் பாதிக்கப்படும். நமது விளை நிலங்களும், பயிர்களும், கால்நடைகளும் பாதிக்கப்படும்.///
என் பதில் : கூடங்குள அணு உலைத் தீய்ந்த எருக்கோல்களை மீண்டும் ரஷ்யாவுக்கு அனுப்பலாம். அல்லது சுத்தீகரித்து எஞ்சிய எருக்கருவை மீட்கலாம். இவற்றில் முதல் பொறுப்பு இந்தியாவுக்கு நிதி விழுங்குவது. கப்பலில் கனத்த கவசமோடு நீண்ட தூரம் அனுப்பவதில் சிரமங்கள் அதிகம். தீய்ந்த எருக்கருச் சுத்தீகரிப்பு முறைகள் இந்திய அணுவியல் நிபுணருக்குப் பழக்கமானவை. மேலும் சேமிப்புச் சுரங்கங்களில் கதிரியக்கக் கசிவுகள் நேர்வதில்லை. இரண்டாம் வழியைப் பின்பற்றுவதில் பாதுகாப்பு உள்ளது.
///அவற்றில் இருந்து பெறப்படுகின்ற பால், காய்கறிகள், பழங்கள் நச்சு உணவுகளாக மாறும். அணு உலைகளை குளிர்விக்கும் கதிர்வீச்சு கலந்த நீர் கடலுக்குள் விடப்படுவதால் கடல் நீரின் வெப்ப நிலை அதிகரித்து கதிர்வீச்சால் நச்சாக்கப்பட்டு மீன் வளம் பாதிக்கப்படும். மீனவ மக்கள் ஏழ்மைக்குள்ளும், வறுமைக்குள்ளும் தள்ளப்படுவார்கள். மீனவ மக்களின் மற்றும் உள்ளூர் மக்களின் கடல் உணவு நச்சாகும் போது நமது உணவு பாதுகாப்பு அழிக்கப்படும். அணு உலையின் புகை போக்கிகளில் இருந்து வருகின்ற நீராவி, புகை மூலமும், கடல் தண்ணீர் மூலமும் அயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 அய்சோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் நமது உணவில், குடிதண்ணீரில், சுவாசத்தில், வியர்வையில் கலந்து அணு அணுவாக வதைப்படுவோம். நமது குழந்தைகள், பேரக்குழந்தைகள் இந்த நச்சை கொஞ்சம், கொஞ்சமாக நீண்ட நாட்கள் உட்கொண்டு புற்றுநோய், தைராய்டு நோய் போன்ற கொடிய நோய்களுக்கு ஆளாகி உடல் ஊனமுற்ற, மணவளர்ச்சியற்ற குழந்தைகளைப் பெற்று பரிதவிப்பார்கள்.////
என் பதில் : அணு உலை எருக்கோல்கள் வெப்பத் தணிப்பின்றிச் சிதைவடையும் வாய்ப்புக்கள் கூடங்குளத்தில் மிக மிக அபூர்வம். சிதைவடையா அணு உலையில் ஐயோடின் 131, 132, 133, சீசியம் 134, 136, 137 ஐசோடோப்புகள், ஸட்ராண்டியம், டீரிசியம், டெலூரியம், போன்ற கதிர்வீச்சு பொருட்கள் வெளியேறு வதில்லை.
////1988ம் ஆண்டு கூடங்குளம் அணுமின் திட்டத்திற்கு (முதல் இரண்டு உலைகளுக்கு) 6,000 கோடி ரூபாய் செலவாகும் என்றார்கள். ஆனால் 1997 ஏப்ரல் மாதம் இந்த திட்ட்த்தின் துவக்க மதிப்பீடே 17,000 கோடி ரூபாயாகும் என்று சொன்னார்கள். 1998 நவம்பர் மாதம் கூடங்குளம் அணுமின் நிலையங்கள் 2006ம் ஆண்டு இயங்கும் என்றும், 15,500 கோடி ரூபாய் செலவாகும் என்றும் விளக்கமளித்தார்கள். 2001ம் ஆண்டு பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சர் குழு இந்தத் திட்ட்த்தின் மொத்தச் செலவு 13,171 கோடி எனவும், இந்திய அரசு 6,755 கோடி முதலீடு செய்ய, ரசியா மீதமிருக்கும் தொகையை 4% வட்டியில் வழங்கும் என்று சொன்னார்கள். முதன் முறையாக எரிபொருள் வாங்குவதற்கும், அடுத்தடுத்த 5 முறை எரிபொருள் வாங்குவதற்கும் 2,129 கோடி ரூபாயில் ஒதுக்கப்பட்டது. இந்த தொகை கிட்டத்தட்ட ரசிய அரசின் கடனுதவியாகவே இருக்கும் என்று அறிவிக்கப்பட்டது. 10 ஆண்டுகள் கழித்து இன்றைக்கு எவ்வளவு செலவாகும் என்பதை நாம் ஊகித்துக் கொள்ள முடியும். நமது குழந்தைகளை கடனாளிகளாக ஆக்கும் திட்டம் நமக்கு வேண்டாம்.///
என் பதில் : கட்டி முடிக்கப் பட்ட 15,000 கோடி கூடங்குள இரட்டை அணுமின் உலை முடக்கத்தால் இந்திய அரசுக்கும், இந்தியர் வரி நிதிக்கும் குறைந்த அளவு வருவாய் இழப்பு தினமொன்றுக்கு சுமார் 100,000 டாலர் (50 லட்சம் ரூ). ஆதலால் முதல் இழப்பு, வட்டி இழப்பு, கடன் அடைப்புப் பிரச்சனைகள் அணு உலை முடக்கத்தால் குறையப் போவதில்லை. கடல் அருகே இருக்கும் அணு உலைச் சாதனங்கள் துருப்பிடித்துப் பயனற்றுப் போகவும் வாய்ப்புள்ளது.
//நமது நாட்டை விட எத்தனையோ மடங்கு வளர்ச்சி அடைந்த, தொழில் வளமிக்க ஜெர்மனி 2022ம் ஆண்டுக்குள் அனைத்து அணு உலைகளையும் மூடிவிட முடிவெடுத்திருக்கிறது. நோய்வாய்ப்பட்டு அமெரிக்காவில் உள்ள ஸ்லோன் கெட்டரிங் புற்று நோய் மருத்துவ மனையில் சிகிச்சை பெற்று வருவதாக சொல்லப்படும் திருமதி.சோனியா காந்தி அவர்களின் பிறந்த நாடான இத்தாலியில் அண்மையில் நட்த்தப்பட்ட வாக்கெடுப்பில் 90% மக்கள் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என முடிவெடுத்திருக்கிறார்கள். சுவிச்சர்லாந்து, மெக்சிகோ போன்ற நாடுகள் அணு உலைகளை மூடிவிட முடிவெடுத்தி ருக்கின்றன. புகுசிமா விபத்து நடந்த சப்பான் நாட்டிலே கட்டப்பட்டு கொண்டிருக்கும் 10 அணு உலைகளை நிறுத்தி விட்டனர். 28 பழைய உலைகளையும் மூடிவிட்டனர்////.
என் பதில் : புகுஷிமா அணுமின் உலைகள் விபத்தால் ஜப்பானில் உள்ள சுமார் 50 அணுமின் நிலையங்கள் தற்காலிய மாக நிறுத்தம் அடைந்துள்ளன. சில அணுமின் நிலையங்கள் செம்மைப் படுத்தப் படுகின்றன. அவை மீண்டும் ஒரு சில மாதங்கள் இயங்க ஆரம்பிக்கும். மற்ற ஆசிய நாடுகளில் (சைனா, இந்தியா, தென் கொரியா) அணுமின் உலைகள் நிறுத்தப் பட வில்லை. ஐரோப்பா, கனடா, அமெரிக்க நாடுகளில் எந்த ஓர் அணுமின் உலையும் நிறுத்தம் அடைய வில்லை. ஹிரோஷிமா, நாகசாக்கியைச் சுத்தம் செய்து புதுபித்த ஜப்பான் மீண்டும் அணுமின் நிலையங்களைச் செம்மைப் படுத்தி இயக்கும். அனைத்தும் மூடப்படும் என்று எதிர்பார்க்க வேண்டாம்.
///நமது நாட்டிலேயே மேற்கு வங்காள மாநிலத்தின் முதல்வர் மதிப்பிற்குரிய மம்தா பானர்சி அவர்களின் அரசு கரிப்பூர் என்னும் இடத்தில் ரசிய உதவியுடன் கட்டப்படவிருந்த அணு உலைத் திட்டத்தை நிராகரித்து விட்டு, மாநிலத்தின் எந்தப் பகுதியிலும் அணு உலைகள் அமைக்க மாட்டோம் என்று அறிவித்திருக்கிறது. நமது அண்டை மாநிலமான கேரளாவில் அணு உலைகள் வேண்டவே வேண்டாம் என்று அனைத்து கட்சிகளும் ஒருங்கே நின்று எதிர்க்கின்றன.////
என் பதில் : கூடங்குளத்தை வர்வேற்றது கருணாநிதி திமுக. இப்போது எதிர்ப்பது ஜெயலலிதா திமுக. மாநில அரசியல் கட்சிகள் மாறுவதால் இம்மாதிரி ஏற்படும் ஆதரவு / எதிர்ப்பு முடிவுகள் நிரந்தரம் அல்ல.
///ரசியா, அமெரிக்கா, பிரஞ்சு நாட்டு நிறுவனங்களின் லாபம் முதன்மையானதா அல்லது இந்திய மக்களின் உயிர்களும், எதிர்காலமுமா ?////
என் பதில் : 21 ஆம் நூற்றாண்டில் ஒரிஜினல் 1000 மெகா வாட் அணு உலை டிசைன்கள் செய்து விற்பனை செய்பவை அமெரிக்கா, பிரான்ஸ், ரஷ்யா, கனடா ஆகிய அந்நிய நாடுகளே. ஆசிய நாடுகள் சைனா, தென் கொரியா, இந்தியா, ஜப்பான் உட்பட அனைத்தும் இந்த நான்கு நாடுகளிடம்தான் பேரளவு மெகா வாட் உற்பத்தி செய்யும் அணு உலைகளைக் கடனுக்கோ, காசுக்கோ வாங்கி கடந்த 50 ஆண்டுகளாய்க் கட்டி நிறுவகம் செய்கின்றன.
++++++++++++++
++++++++++++++
தகவல்:
1. http://www.npcil.nic.in/
2. http://pib.nic.in/release/
3. http://www.stratmag.com/
[Russia Breaches Nuclear Blockade against India By: C. Raja Mohan (Nov 16, 2001)]
4. World Nuclear Association – WNA
Radiological Protection Working Group – RPWG (Official List – July 20, 2006)
http://www.world-nuclear.org/
5. World Nuclear Association – WNA
Waste Management and Decommissioning Working Group – WM&DWG (Official List – July 25, 2006) http://www.world-
6. http://www.candu.org/npcil.
7. Safety of Nuclear Power Reactors, [www.uic.com.au/nip14.htm] (July 2007)
8. Nuclear Power Plants & Earthquakes [www.uic.com.au/nip20.htm] (Aug 2007)
9. http://www.thinnai.com/?
10. http://www.wano.org.uk/
11 IAEA Incident Reporting System Using Operational Experience to Improve Safety (IAEA Instruction)
12. http://www.world-nuclear.
13. http://jayabarathan.
14. http://www.thinnai.com/?
[கூடங்குளம் அணுமின் உலைப் பாதுகாப்பு ஆய்வுகள்]
15. http://www.thinnai.com/?
[செர்நோபிள் விபத்துபோல் கூடங்குளத்து அணுமின் உலையில் நிகழுமா ? ]
******************
S. Jayabarathan [jayabarathans@gmail.com] June 28, 2014
- ஏன் என்னை வென்றாய்! அத்தியாயம்- 3
- வாழ்க்கை ஒரு வானவில் 9
- சிவமே
- இந்த இதழ்கள் இடம்பெயராதா…..
- இடையன் எறிந்த மரம்
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 81 ஆதாமின் பிள்ளைகள் – 3
- பகைவனும் நண்பனே – நூல் பற்றிய கண்ணோட்டம்
- மல்லித்தழை
- சுமை துணை
- ஒரு நதி ஒரு கடல் ஒரு சில கரைகள்
- இளைப்பாறல்
- புதுச்சேரியில் 13 ஆம் உலகத்தமிழ் இணைய மாநாடு
- தொடுவானம் 22. வீட்டை விட்டு ஓடினேன்
- ப்ரதிகள்
- ஆத்ம ராகம்
- நீங்காத நினைவுகள் – 52
- தினம் என் பயணங்கள் -23 என்னைப் போன்றவர்கள்
- யானை டாக்டர்.
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 10
- கூடங்குள ரஷ்ய அணுமின் உலை 1000 மெகாவாட் உச்சத் திறனில் இயங்குகிறது
- இருக்கிற கடவுள்களும், இனி வரப் போகும் கடவுள்களும் கை விட்ட தங்கர்பச்சானின் மனிதர்கள் – தங்கர்பச்சான் கதைகள் தொகுப்பு
- மல்லிகை ஜீவாவுக்கு எதிர்வரும் 27 ஆம் திகதி 88 வயது பிறக்கிறது
- தி.க.சி. யின் நினைவில்