மல்லித்தழை

This entry is part 1 of 23 in the series 29 ஜூன் 2014

பின்பக்கம் நடுநரம்பிலிருந்து பிரியும் எட்டு நரம்புகள். ஒவ்வொன்றிலும் பிரியும் அடுத்த 8 நரம்புகள். உருப்பெருக்குக் கண்ணாடியில் பார்த்தால் பார்த்துக்கொண்டே இருக்கலாம். எட்டுப்பிரிவுகளாய் இலைகள். ஒவ்வொன்றிலும் இரண்டிரண்டாய் மூன்றுமூன்றாய் என்று நுனிகள். கூர்மையாக அல்ல. சமாதானமாக. வேலாயுதத்தை நினைவுபடுத்தும் சில நுனிகள். கணினியில் சுண்டெலியோடு நகரும் கைவிரல்களை நினைவுபடுத்தும் சில நுனிகள். v என்ற ஆங்கில எழுத்தைக் காட்டி வெற்றி என்று சொல்லும் சில நுனிகள். ஒரே தண்டில் ஏழெட்டு கிளைகள். ஒவ்வொரு கிளையிலும் ஏழெட்டு இலைகள். அகலமாய் வைத்த நெற்றிப்பொட்டு மாதிரி. இலைகள் மஞ்சளாகவோ சிவப்பாகவோ இருந்தால் அது இலையல்ல பூ. வடிவத்திலேயே அத்தனை அழகு. நீங்கள் ஓர் ஓவியரா? ஒரே ஒரு இலையை துல்லியமாக வண்ணமும் வடிவமும் முரண்படாமல் வரைந்துவிட்டால் உங்கள் படத்தை உலகப்போட்டிக்கு அனுப்பலாம். நீங்கள் ஒரு புகைப்பட கலைஞரா? சரியான வெளிச்சத்தில் சரியான பின்னணியில் ஒரே ஒரு இலையை மட்டும் புகைப்படம் எடுங்கள். அது உங்களை உலகக் கலைஞன் என்று ஒப்புக்கொள்ளவைக்கும். அப்பேற்பட்ட மல்லித்தழையை ஒருநாளாவது ஒரு நிமிடமாவது கூர்ந்து கவனித்திருக்கிறோமா?
இந்த மல்லித்தழைக்கும் எனக்கும் நெருங்கிய தொடர்புண்டு. ஐந்தாம் வகுப்பு படித்தபோது எங்களின் இயற்கை வாத்தியார் கோதண்டம்சார் பள்ளியின் சுற்றுச்சுவரின் உட்பகுதியில் எல்லாருக்கும் பாத்தி பிரித்துக்கொடுத்து பயிர்க்குழி போடச்சொன்னார். அது ஒரு ஆடிமாதம். எனக்கு ஆறடிக்கு மூன்றடி என்ற அளவில் ஒரு பாத்தி கிடைத்தது. அந்த இடத்தை களைக்கொட்டால் கொத்திவிட்டு தோட்டமண்ணை பரப்பினேன். விருதுநகரிலிருந்துதான் அறந்தாங்கிக்கு மூட்டைமூட்டையாக மல்லி வந்திறங்கும். எங்கள் கடையும் மளிகைக்கடைதான். அந்த மல்லி முளைக்குமா என்று அத்தாவிடம் கேட்டேன். மல்லியை உள்ளங்கையில் வாங்கி ஆழமாகப் பார்த்தார். ‘வால்பகுதியில் இருக்கும் நார் முறியவில்லை நிச்சயம் முளைக்கும்’ என்றார். முளைப்பதற்கு அது ஒரு அடையாளம் என்று தெரிந்துகொண்டேன். தெரிந்த ஞானத்தின் எண்ணிக்கையில் இப்போது ஒன்று கூடிவிட்டது. அதை அப்படியே மண்ணில் இரைத்துவிட்டால் முளைக்குமா? அம்மாவிடம் கேட்டேன். அம்மா சொன்னார். ‘விராட்டிச்சாம்பலோடு மல்லியை சேர்த்து நன்றாகப் பிசைந்து ஒரு தாளின் மீது பரப்பி தோல்செருப்பால் தேய்க்கவேண்டும். லேசாக மல்லி உடையும் சப்தம் கேட்கும். அழுத்தமாக தேய்க்கக்கூடாது. பிறகு அதை சீராக தூவி பூவாளியால் தண்ணீர் வீடவேண்டும்.’ அட இவ்வளவு பக்குவமா? என் ஞானக்கணக்கு கூடிக்கொண்டே இருந்தது. அம்மாவின் கண்முன்னையே எல்லாமும் செய்தேன். அம்மாவின் உத்தரவோடு பள்ளிக்கு எடுத்துச் சென்றேன். மண்ணில் சீராக இரைத்துவிட்டு பூவாளியில் தண்ணீர்விட்டேன். இரண்டு நாட்களாகியும் ஒரு முளையும் தெரியவில்லை. அத்தனை மல்லியும் என்னதான் செய்துகொண்டிருக்கிறது. அதே சமயம் விதைக்கப்பட்ட சொரை, கத்தரி, வெண்டி, மிளகாய் எல்லாம் முளைவிட்டுவிட்டது. கவலையோடு வீட்டுக்குப் போனேன். யாரிடமும் ஒன்றும் பேசவில்லை. அடுத்தநாள் காலை பள்ளிக்கூடத்துக்கு வந்த முதல் மாணவன் நான்தான். என் பாத்தியைப் பார்த்ததும் யாரோ என் சட்டைப் பாக்கெட்டில் 10 ரூபாய் வைத்ததுபோல் உணர்ந்தேன். 10 ரூபாய் என்பது ஓர் ஆளுக்கு ஒரு மாதச்சம்பளம் அப்போது. குதிரைவால்போல் ஒரு மெல்லிய வேரை ஊன்றிக்கொண்டு முழுமல்லியையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு ‘இதுபோல் உன்னால் நிற்கமுடியுமா’ என்று அத்தனை முளையும் தெனாவெட்டாய் என்னைப்பார்த்து கேட்பதுபோல் இருந்தது. பார்த்துக்கொண்டே நின்றேன். கூட்டம் கூட்டமாய் மாணவர்கள் வருவதையும் போவதையும்கூட நான் உணரவேயில்லை. மணியடித்தபோது உச்சிமண்டையில் அடிப்பதுபோல் இருந்தது. பார்வையை அப்போதுதான் விலக்கினேன். வகுப்புக்குச் சென்றேன். என் மல்லிக்கு எதுவும் ஆகிவிடக்கூடாதென்று மனதுக்குள் தொழுதுகொண்டேன். அன்று மாலை பூவாளியில் தண்ணீர் விட்டேன். சில் முளைகள் சாய்ந்துவிட்டன. வணக்கம் சொல்கிறதா அல்லது வலியா? தெரியாமல் திகைத்தேன். அடுத்தநாள் அத்தனை முளையும் நிமிர்ந்துவிட்டன. இன்று மெதுவாகவே தண்ணீர் விட்டேன். வணங்கி நிமிர்ந்துவிட்டது.
இரண்டு மாதங்கள் முடியப்போகிறது. ஒவ்வொரு முளையும் ஆறு கிளைவிட்டு பத்து அங்குலம் வளர்ந்துவிட்டது. பெரிய பெரிய இலைகள் பரவசமாய் சிரித்தன. பாத்திகளை பார்த்துக்கொண்டுவந்தார் கோதண்டம்சார். என் பாத்தியை பலமுறை அவர் பார்த்திருக்கவேண்டும். மீண்டும் வந்து வெகுநேரம் பார்த்தார். தன் சட்டைப்பையிலிருந்த சிமிண்டுக்கலர் ரைட்டர்பேனாவை என் சட்டைப்பையில் செருகினார். அப்போதெல்லாம் சிலேட்டுக்குச்சிதான். அதிகப்டியாகப்போனால் பென்சில். பேனாவெல்லாம் நினைத்துப்பார்ப்பதே குற்றம் என்று எண்ணிய காலம். என் வாழ்க்கையில் நான் கண்ட முதல்பேனா என் மல்லித்தழைதான் எனக்கு வாங்கித்தந்தது. ஆண்டுவிழாவில் தோட்டக்கலைக்கு முதல்பரிசு ‘யூசுப்’ என்று என்னை அழைத்தபோது காற்றில் பறப்பதுபோல் இருந்தது. ஒரு பரிசு வாங்குவதில் இத்தனை ஆனந்தம் ஒளிந்திருக்கிறதா? ஒரு சான்றிதழ்தான் தந்தார்கள். அதுவும் கனமான அட்டைகூட இல்லை. சாதாரண கலர்தாள். அவ்வளவுதான். நான் வாங்கிய முதல் சான்றிதழ் என் மல்லித்தழைதான் பெற்றுத்தந்தது. வீட்டுக்கு வருபவர்களிடமெல்லாம் காண்பித்தேன். மாமன் மச்சான் என்று ஒருவர்விடாமல் காண்பித்து காண்பித்து பூட்டிவைத்துக்கொண்டேன். அதனால் எந்தப்பயனும் இல்லை என்று பின்னால் அறிந்தாலும் என் பெயரை அவ்வளவு பெரிய கூட்டத்தில் அழைத்த அந்த ஒருசில நொடிகள் என் அனுபவத்தில் மின்சாரம் இறங்கிய நொடிகள்.
சைவமா? அசைவமா? இல்லை வெறும் மோரா? எதிலும் இயல்பாக இணைந்துகொள்ளும் மல்லித்தழை.நுகர்ந்துகொண்டே இருக்கலாம். ஒரு இலையை அசைபோட்டு அதன் மணமும் ருசியும் தொண்டைக்குழியில் இறங்கும்வரை நினைவை அதோடு பதித்துவைத்துப் பாருங்கள். வித்தியாசமாக உணர்வீர்கள். அந்த மல்லித்தழையை ஒரு நிமிடமாவது நாம் ஆழமாகப் பார்த்திருக்கிறோமா?
தஞ்சை திருச்சி என்று என் படிப்புக்காலம் ஊர்சுற்றியது. தஞ்சாவூரில் பேருந்துநிலையம் அருகே மல்லித்தழைகளை மூட்டைமூட்டையாக இறக்கிவைத்து வாழைநாரில் கட்டுக்கட்டாகக் கட்டி ஒருவர் விற்றுக்கொண்டிருப்பார். அவரிடம் வெகுநேரம் பேசிக்கொண்டிருந்திருப்பேன். அவர் ஊர் மாப்பிள்ளைநாயக்கன்பட்டியாம். புதுக்கோட்டை ரோட்டில் தஞ்சாவூரிலிருந்து ஆறாவது மைலில் அந்த ஊர். பெயர் சின்னையாவாம். ‘மல்லிசின்னையா’ என்றால் எல்லாருக்கும் தெரியுமாம். ஒரு ஞாயிற்றுக்கிழமை அந்த ஊருக்குப் போனேன். மல்லிப்பபாத்திகளைப் பார்த்தேன். வாரத்துக்கு மூன்று நாட்கள் பிடுங்குவதுபோல் கணக்கிட்டு கணக்கிட்டு பாத்திகளை வளர்ந்திருந்தார். அந்த பச்சை இன்றுகூட என்னால் மறக்கவே முடியவில்லை. எனக்கு நிறைய மல்லித்தழைகளைத் தந்தார். ஒரு ரூபாய் தந்தேன். முதலில் வேண்டாம் என்றார். பிறகு வாங்கிக்கொண்டார். சுட்ட பனங்கிழங்கும் நிறைய முந்திரிக்கொட்டையும் தந்தார். அவ்வளவு முந்திரிக்கொட்டைகளை பார்த்தது அதுதான் முதல்முறை. எல்லாவற்றையும் எடுத்துக்கொண்டு சவுடாலாய் ஊருக்குப்போனேன். பல ஞானங்கள் என் கணக்கில் சேர்ந்துகொண்டே இருக்கிறது. அதன்பிறகு திருச்சி மெயின்கார்டுகேட் தெப்பக்குளம் கரையில் கிளைவ் விடுதியில் தங்கி படித்துக்கொண்டிருந்தேன். அந்த விடுதியில் 7 மணிமுதல் 9 மணிவரை படிக்கும் நேரம். 7 மணிவாக்கில் தெப்பக்குளக்கரையில் மூன்று சக்கரவண்டியில் மூட்டைமூட்டையாக மல்லித்தழைகள் இறக்கப்படும். அந்த மல்லித்தழை வாங்குவதற்காகவே பெருங்கூட்டம் சேர்ந்துவிடும். 9 மணிக்கு படிக்கும்நேரம் முடியும்போது அவர் சாக்கை உதறிக்கொண்டிருப்பார். அடுத்தநாள் ஊருக்குப்பொவதென்றால் முதல்நாளே நான் வாங்கிவைப்பது மல்லித்தழைதான். நான் என்ன பைத்தியமா? எனக்கு ஏன் மல்லித்தழையில் இத்தனை ஈடுபாடு? பிறகு சென்னை. சென்னையில் காசிச் செட்டித் தெருவில் என் உறவினர் கடை இருக்கிறது. அங்கே அடிக்கடி போவேன். ஒருநாள் கடைக்குப் பக்கத்தில் ஏகப்பட்ட கூட்டம். நல்லபாம்பையும் கீரியையும் உண்மையிலேயே சண்டைபோட விட்டுவிட்டானோ என்று நினைத்தேன். எட்டிப்பார்த்தேன். ஒரு வண்டியில் மிருதுவான இரண்டு ரொட்டித்துண்டுகளுக்கு நடுவே கொத்தமல்லி, பச்சமிளகாய், உப்பு சேர்த்த சட்டினியையும் ஒரு வெங்காயத்துண்டையும் வைத்து 25 காசுக்கு விற்றுக்கொண்டிருந்தார். நெருங்கும்போதே மல்லிவாசம் எனக்கு இறக்கை கட்டிவிட்டது. வெகுநேரம் அந்த வாசனையை அனுபவித்து நின்றேன். 50 காசுக்கு இரண்டு துண்டுகள் வாங்கி சாப்பிட்டேன். அடடா! என்ன ருசி. இந்த மல்லித்தழை எப்படியெப்படியெல்லாம் ஒருவர் வாழ்க்கைக்கு உதவுகிறது பாருங்கள்.
திருமணம் குழந்தைகள் தனிவீடு என்று வளர்ந்தேன். சொந்த வீட்டில் தென்னை. அசோக மரம் மாமரம் என்று எத்தனை மரங்கள் வளர்ந்தாலும் சுவர் ஓரத்தில் மல்லிவளர்க்க நான் மறந்ததேயில்லை. என் மனைவி கதிஜாவுக்கு வேம்பும் கறிவேப்பிலையும் பிடிக்கும். எங்களுக்குள் கறிவேப்பிலை பெரிதா மல்லித்தழை பெரிதா என்று சண்டையெல்லாம் வரும். நான் சொல்வேன். மல்லி தன்னைத்தானே தளர்த்திக்கொண்டு கறியோடு செம்புலப்பெயல்நீராய் சேர்ந்துகொள்ளும். கறிவேப்பிலை முறைத்துக்கொண்டு நிற்கும். எடுத்து தூக்கியெறிந்தாலும் அதற்கு ரோசமே வருவதில்லை. மல்லித்தழையை அப்படி யாரும் தூக்கி எறிய முடியாது என்பேன்.
இப்போது நான் சிங்கப்பூர் வந்துவிட்டேன். வந்த புதிதில் ஓர் ஓரறை வீட்டில்தான் இருந்தேன். வீட்டின் முன்னே செருப்பைப் போடும் இடம்தான் கொஞ்சம் இருந்தது. ஒரு தட்டலமாரியில் செருப்பைவைத்து அதன்மேலே இரண்டு தொட்டிகளில் என் மனைவிக்காக கறிவேப்பிலையும் வேம்பும் வைத்தேன். மருந்துக்குக்கூட வெயில்படாத முகப்பு. இரண்டுமே செத்துவிட்டது. வெயில் படும் வீட்டு முகப்புகளைக் கண்டால் அப்படியே நின்றுவிடுவேன். இதுபோன்ற வீடு நமக்குக் கிடைக்காதா என்று ஏங்கிப்போவேன். நன்றாக வெயில்படும் ஒரு வீட்டில் நாலைந்து தொட்டிகள் வைத்து பிளாஸ்டிக் பூக்களை ஒருவர் வைத்திருந்தார். பார்த்துவிட்டு நொந்துபோனேன். இப்படியும் ஓர் ஆசையா? ‘நன்றாக வெயில்படுகிறது. உங்களுக்குப் பிடித்த சில செடிகளை வைக்கலாமே.. நன்றாக வளரும்.’ என்று அந்த வீட்டுக்ககாரரிடம் சொன்னேன். ‘போடா உன் வேலையப்பாத்துக்கிட்டு’ என்று ஆங்கிலத்தில் திட்டினார்.
பழைய திரைப்படங்களில் ஒரு சிறுவன் கதாநாயகனாக வளர்வதுபோல் நான் வளர்ந்தேன். இப்போது தேக்காவில் ஒரு நான்கறை வீட்டில் இருக்கிறேன். மகன் பல்துறைக்கல்லூரியில் மூன்றாமாண்டு மாணவன். என் மகள் ஒரு ஆசிரியை. பேரன் பேத்தி என்று ஊரையே சிங்கப்பூருக்குக் கொண்டுவந்துவிட்டதுபோல் உணர்கிறேன். வேம்பு, கறிவேப்பிலை, ஓமவல்லி, முல்லைக்கொடி பெரண்டை, எல்லாம் நன்றாக வளர்கிறது. சில ரோஜாக்களும் அதில் அடக்கம். செவ்வகமாய் ஒரு பிளாஸ்டிக் தொட்டி வாங்கி தோட்டமண்ணைப்பரப்பி, மேலே தாதுமண்ணைப்பரப்பி மல்லிப்பாத்தியை மீண்டும் உயிர்ப்பிக்க நினைத்தேன். இங்குள்ள மளிகைக்கடைகளில் மூட்டைமூட்டையாக மல்லியை வெளியேதான் வைத்திருக்கிறார்கள். உள்ளங்கையில் அள்ளிப்பார்த்தேன். அத்தா சொன்ன அந்த நார் வால்பகுதியில் இல்லை. இது என்ன கருத்தடை செய்யப்பட்ட மல்லியா? கடைக்காரரிடம் கேட்டேன். ‘எனக்குத் தெரியாது. வாங்கி போட்டுப்பாருங்கள்’ என்றார். ‘அந்த நாள் ஞாபகம் வந்ததே ‘ என்று மனசுக்குள் உயர்ந்தமனிதன் பாடலை பாடிக்கொண்டே எல்லா சடங்கையும் செய்து தூவிவிட்டு பூவாளியில் தண்ணீரும் விட்டேன். பத்து நாட்கள் ஆனபின்னும் ஒரு முளையும் தெரியவில்லை. கடைக்காரரிடம் கேட்டேன். ‘இதெல்லாம் அவித்த மல்லியாம் முளைக்காது’ என்றார். அடப்பாவி இதை முன்னாலேயே சொல்லக்கூடாதா? மானசீகமாக என் அத்தாவை நினைத்துக்கொண்டேன். என்ன அழகாக அவர் சொன்னார். வால்பகுதியில் அந்த நார் இல்லாவிட்டால் முளைக்காது என்று
குடும்பம் வளர வளர சொந்த ஆசைகளை நினைத்துப்பார்க்கவே கூட நேரம் கிடைப்பதில்லை. என் பேத்தி ஆர்த்திக்கு பிறந்தநாள். ‘என் பிறந்தநாளைக்கு எனக்கு ஐபேடு வாங்கித்தா யூசுப்பத்தா’ என்றது. கதிஜாவும் சொன்னார். ‘ஒரு ஐபேடு வாங்குங்கள். நானும் சூரியகாந்தி பார்ப்பேன்.’ என்றார். அந்தப் பிறந்நாளில் ஐபேடு வாங்கிக்கொடுத்தேன். மகன் அன்வார் கேட்டார் ‘ஜப்பானுக்கு ஒரு குழுவை பள்ளியிலிருந்து அனுப்புகிறார்களாம். 500 வெள்ளியாம். தேர்வாகாவிட்டால் காசை கொடுத்துவிடுவார்களாம். சொன்னார். உடனே 500 வெள்ளியைக் கொடுத்து அதில் பதிவுசெய்துகொள்ளச் சொன்னேன். அவர்களின் தேவைகளைக் கேட்க நானிருக்கிறேன். என்னுடைய தேவையை நான் யாரிடமும் கேட்கமுடியாது. ஒருநாள் என் பழைய மன்னார்குடி நண்பரை சந்தித்தேன். வேகமாக அடித்த பந்து காற்றில் பறந்து பார்வையாளர் மத்தியில் விழுந்து சிக்சர் ஆவதுபோல் என் பேச்சு எங்கே சுற்றினாலும் மல்லித்தழையில் வந்து நின்றது. அவரிடமும் முளைக்காத மல்லிக்கதையைச் சொன்னேன். அவர் சொன்னார். ‘நாளை மன்னார்குடி போகிறேன். உழவர் சந்தையில் முளைக்கும் மல்லிவிதை ஏராளமாக வரும் வாங்கிவருகிறேன்’ என்றார். ஒரு நீண்டகால வங்கிக் கடனின் கடைசித் தவணையை செலுத்திவிட்டதுபோல் துள்ளினேன். அவரின் ஊர் தொலைபேசி எண்ணையும் வாங்கிவைத்துக்கொண்டேன். இரண்டுநாள் கழித்து அவரை அழைத்தேன். ‘ஒரு நல்ல செய்தி. உங்களுக்கு மல்லி வாங்கிவிட்டேன். தாளில் பக்காவாகக் கட்டி சிங்கப்பூர் செல்லும் பெட்டியில் வைத்துவிட்டேன். வரும் புதன்கிழமை மல்லியோடு வருகிறேன். வியாழக்கிழமை தேக்காவில் உங்களை சந்திக்கிறேன்.’ என்றார். ஏற்கனவே வைத்து தோற்றுப்போன அந்த செவ்வகத்தொட்டியை மீண்டும் தயார் செய்தேன். செங்சாங் கடையில்தான் எல்லாவகை மண்ணும் எப்போதும் கிடைக்கிறதே. அந்த வியாழக்கிழமையை எதிர்பார்த்திருந்தேன். அந்த வியாழனும் வந்தது. சொன்னபடி வந்தார். சந்தித்தார். மல்லியைத் தந்தார். ஒரு செய்தித்தாளில் இறுக்கமாகக் கட்டி சடம்பில் கட்டித்தந்தார். ஒரு வருடம் இருந்தாலும் முளைப்பு கெடாதாம். விநாடிகளில் எண்ணிக்கொண்டிருக்கும் என் ஆவல் அவருக்குப் புரியவில்லை. அடுத்த ஒரு மணிநேரத்தில் எல்லாம் சரசரவென்று முடிந்தது. விராட்டிசாம்பலுக்கு பதிலாக தாதுமண்ணை பயன்படுத்திக்கொண்டேன். சீராக அந்த செவ்வகத் தொட்டியில் பரப்பி தண்ணீரும் விட்டேன். இரண்டுநாட்கள் கழிந்தன. எனக்குத் தெரியும். மூன்றாம்நான் குதிரைவால் வேரை நீட்டிக்கொண்டு மொத்த மல்லியையும் தலையில் தூக்கிவைத்துக்கொண்டு நிற்கும். அதுபோலவே நின்றது. அப்பா! எத்தனை நாள் ஆசை. எல்லா ஆசையும் என்றாவது ஒருநாள் தீரும் என்பதை நம்பிக்கொண்டிருந்தேன். இன்று நடந்திருக்கிறது. வெகுநேரம் அந்த மல்லிமுளையையே பார்த்துக்கொண்டிருந்தேன். வீட்டுக்குள் நுழைந்தேன். என் பேத்தி ஓடிவந்தாள். ‘யூசுப்பத்தா. மிக்கி மௌஸ் எல்லாம் இப்போ நானே ஐபேடில் பார்ப்பேன். தெரியுமா?’ என்றது. ‘ஓ அப்படியா? நீதான் புத்திசாலியாச்சே. இன்னொரு சேதி தெரியுமா? என் மல்லி மொளச்சிருச்சு. என் மல்லி மொளச்சிருச்சு’ என்றேன். என்னை விநோதமாகப் பார்த்துவிட்டு விலகிவிட்டாள். நான் சொன்னது அவளுக்குப் புரியவில்லையோ? என் மகன் அன்வார் வந்தார். ‘அத்தா! ஜப்பான் செல்ல என்னை செலக்ட் செய்துவிட்டார்கள். வருகிற புதன்கிழமை ஃபிளைட்.’ என்றார். ‘ ஓ அப்படியா உங்களுக்குக் கிடைக்காவிட்டால்தானே ஆச்சரியம். இன்னொரு சேதி தெரியுமா? என் மல்லி மொளச்சிருச்சு. என் மல்லி மொளச்சிருச்சு’ என்றேன். என்னை வித்தியாசமாகப் பார்த்துவிட்டு போய்விட்டார். கதிஜாவிடம் சொன்னேன். அவர் அதை காதிலேயே வாங்கிக்கொள்ளவில்லை. ‘வீட்ல கேவூர் மாவு இல்ல. போயி வாங்கிட்டு வாங்க’ என்றார். விளங்கிக்கொண்டேன். அவர் மனத்தில் கேவூர் மாவு பிடித்த இடத்தைக்கூட என் மல்லி பிடிக்கவில்லை என்று. முகச்சவரம் செய்ய குளியலறைக்குள் புகுந்தேன். கூடத்தில் கதிஜாவும் அன்வாரும் பேசிக்கொண்டிருந்தது தெளிவாகக் கேட்டது.
‘ஜப்பானுக்கு செலக்சன் ஆனது எவ்வளவு பெரிய சேதி. ரொம்ப சந்தோசப்படுவார் என்று சொன்னால் மல்லி மொளச்சிருச்சு என்கிறார். அத்தா. என்னம்மா ஆச்சு அவருக்கு. அந்த மல்லி மொளச்சது என்ன நான் ஜப்பான் போறதவிட பெரிய சேதியா? சே! ஏன்டா சொன்னோம் என்று ஆகிவிட்டது.’ என்றார் அன்வார். ‘உனக்கும் வயசாயிட்டா நீயும் இப்படித்தான் பேசுவே.’ என்றார் கதிஜா. ‘இல்லே மாமா. யூசுப்பத்தாவுக்கு பைத்தியம்’ இது பேத்தி ஆர்த்தி. கேட்ட மாத்திரத்தில் கையில் இருந்த பிளேடு கீழே விழுந்தது. இரண்டுசொட்டுக் கண்ணீர் சோப்பைக் கரைத்துக்கொண்டு வழிந்தது யூசுப் ராவுத்தர் ரஜித்

Series Navigation
author

யூசுப் ராவுத்தர் ரஜித்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *