பாவண்ணன் கவிதைகள்

This entry is part 13 of 23 in the series 10 ஆகஸ்ட் 2014

 

 

1.இளமை

 

ஏற்கனவே தாமதாகிவிட்டதென்றும்

உடனே புறப்படவேண்டுமென்றும்

கேட்டுக்கொண்டது இளமை

 

எந்த அதிகாரமும் அதனிடம் இல்லை

மென்மையான குரலில்

ஒரு தாயைப்போல அறிவித்தது

 

தடுக்கமுடியாத தருணமென்பதால்

ஒரு விருந்துக்கு ஏற்பாடு செய்தேன்

நாள் நேரம் இடம்

எல்லாவற்றையும் பேசிமுடித்தோம்

முழுச் சம்மதத்தோடு

தலையசைத்துச் சிரித்தது இளமை

 

நாற்பதைக் கடந்து நீளும்

அக்கணத்தில் நின்றபடி

இளமையின் நினைவுகளை

அசைபோடத் தொடங்கியது மனம்

 

இளமை

மீண்டும் ஏறமுடியாத மலைச்சிகரம்

நீர்மட்டம் குறைந்து வற்றும் ஆறு

அதன் கொத்துகளிலிருந்து

ஒவ்வொரு மலராக உதிர்ந்து விழுகின்றன

 

வீடெங்கும் நிறைந்திருக்கின்றன

கடந்துபோன இளமையின்

காலடிச் சுவடுகள்

நாவில் விழுந்த தேந்துளியென

ஊறிப் பெருகும் சுவைபோன்றது

மறைந்த இளமையின் கனவு

 

கரைந்துபோன இளமைதான்

காதலாக கனிந்து நிற்கிறது

இளமையின் மதுவை அருந்தியவையே

இக்கவிதைகள்

 

இன்றும் பொசுங்கிவிடாமல்

நான் பொத்திப்பொத்திக் காப்பாற்றும் சிறகுகள்

இளமையால் அன்பளிப்பாகத் தரப்பட்டவை

 

குறித்தநாள் முன்னிரவில்

எங்கள் தோட்டத்தில்

அந்த விருந்தை நிகழ்த்தினோம்

எதிரும்புதிருமாக அமர்ந்து

பழங்கதைகள் ஆயிரம் பேசினோம்

காரணமின்றியே கைகுலுக்கி

கள்ளப்பார்வை பார்த்துக்கொண்டோம்

ஒரு மிடறு  மதுவை அருந்தியதுமே

ஆனந்தம் தலைக்கேற

இனிய பாடலொன்றைப் பாடியது அது

உற்சாகத்தில் நானும் பாடினேன்

 

இவ்வளவு காலமும்

சிரிக்கச்சிரிக்க வாழ அனுமதித்த இளமைக்கு

நன்றியைத் தெரிவித்தபடி

போய் வருக என்று

ஒரு முத்தமிட்டு வழியனுப்பி வைத்தேன்

இறுதியாக ஆரத்தழுவிய இளமை

என் கன்னத்திலும் ஒரு முத்தம் கொடுத்தது

என்னைவிட்டு விலகுவதில்

அதற்கும் துக்கம் அதிகம்

தெருமுனை திரும்பும்வரை

திரும்பத்திரும்பப் பார்த்துச் சென்றது

 

குழந்தைமை உதிர்ந்ததைப்போல

பால்யம் விலகியதைப்போல

இளமையும் நெகிழ்ந்து உதிர்ந்தது

ஒரு சகஜமான செயலைப்போல

 

நான் இளமையை இழந்தால் என்ன

எனக்குள் இன்னும் இனிக்கிறது

இளமையின் முத்தம்

 

2. சரித்திரம்

 

கண்கள் கைகள் கால்கள்

எல்லாம் உண்டு மரத்துக்கு

எந்த மரத்தை வேண்டுமானாலும்

நெருங்கிப் பாருங்கள்

தன்னைக் கடந்துபோகும்

எல்லா மனிதர்களையும் விலங்குகளையும்

ஒரே மாதிரி கவனிக்கிறது அது

அறிந்த விவரங்களையெல்லாம்

காற்றின் அகன்ற பக்கங்களில்

இலைவிரல் நீட்டி எழுதிவைக்கிறது

இரவுபகல் வேறுபாடின்றி

எழுதுவதிலேயே மூழ்கியிருக்கிறது

 

அந்த அளவு ஆழ்ந்து எழுதப்பட்ட

உலக சரித்திரம் வேறெங்கும் இல்லை

 

மாடுகள் நடந்த ஆதி உலகம்

புழுதி பறக்க ஓடிய நால்வகைப்படைகள்

கீறிப் பறந்த துப்பாக்கி வாகனங்கள்

பறவைகள் நாடோடிகள் என

ஒரு சிறிய தகவலும் விடுபடாதபடி

நுட்பமாக எழுதப்பட்ட சரித்திரத்தை

எப்படிப் பார்ப்பது?

 

குறையோ கூட்டலோ இன்றி

உள்ளது உள்ளபடி எழுதப்பட்டு

நீண்டுகொண்டே போகிறது சரித்திரம்

 

நாம் படிக்க இயலாத அச்சரித்திரம்

யாருக்காக எழுதப்படுகிறது?

இலையின் விளிம்புக்கு மறுபுறம்

காற்றுடன் கரைந்துநின்று படிப்பது யார்?

 

என்றென்றும் தொடரும் சரித்திரம்

ஆயுள்முழுக்க முயன்றாலும்

அறிய இயலாத சரித்திரம்

 

3. வெட்டவெளி

 

பாதை தவறிய யானைகளென

அலைமோதும் மேகங்களின்

ஓலங்களுக்கு அஞ்சி

ஒடுங்கியிருக்கிறது ஊர்

 

இரவு முழுக்க

விடாது பெய்த மழையை

அவற்றின் கண்ணீர் என்றோ

மாறிமாறி இடிபடும் ஓசை

மிரண்டோடி மோதிக்கொண்டே

அவற்றின் பிளிறல்கள் என்றோ

அறியாதவர்கள் அனைவரும்

அச்சத்தில் மூழ்கியிருந்தார்கள்

 

அவற்றின் ஓலத்தைக் கேட்டு

தடம்பார்த்து வந்த தாய்யானை

ஒன்றையும் விடாமல்

எங்கோ வழிநடத்திச் சென்றது

 

காடுமின்றி

யானைகளுமின்றி

வெறிச்சென்றிருந்தது வெட்டவெளி

 

4. நாடோடி

 

மலையும் குளிரும் சூழ்ந்த நகரை

கடந்துகொண்டிருப்பதாக

தகவல் எழுதி அனுப்புகிறான் நாடோடி

 

ஏதோ கடைத்தெருவில் திரியும்போது

மனத்தைக் கவர்ந்த

ஓவியங்களையும் நூல்களையும் வாங்கி

பாதுகாப்பாக அனுப்பிவைக்கிறான்

 

தெரிந்தவர்கள் பார்வையில் பட்டால்

அன்பைத் தெரிவிக்கச் சொல்லி

புன்னகையுடன் கேட்டுக்கொள்கிறான்

 

ஆட்கள் எதிர்ப்படா தருணங்களில்

ஆகாயத்திடமும்

சூரியன் நிலாவிடமும் சொல்லியனுப்புகிறான்

 

வேகமாகச் செல்லும் என்ற எண்ணத்தில்

சில கவிதைகளையும்

காற்றில் மிதக்கவிடுகிறான்

 

மெல்ல மெல்ல

தன் சேதிகளால்

வெளியனைத்தையும் நிரப்பியபின்னர்

ஏதாவது ஒரு துணுக்காவது

சேரிடம் அறிந்து சேருமென நம்புகிறான்

Surfers ride waves off a pier on the 'Golden Mile' - in Durban, South Africa.

Series Navigationபிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சனிக்கோளின் துணைக்கோளில் 101 வெந்நீர் எழுச்சி ஊற்றுகள் கண்டுபிடிப்புதடங்கள்  
author

பாவண்ணன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *