உம்பர் கோமான்

This entry is part 1 of 26 in the series 17 ஆகஸ்ட் 2014

அம்பரமே தண்ணீரே சோறே அறஞ்செய்யும்
            எம்பெருமான் நந்தகோ பாலா எழுந்திராய்
                 கொம்பனார்க் கெல்லாம் கொழுந்தே குலவிளக்கே
            எம்பெரு மாட்டி யசோதா அறிவுறாய்
            அம்பர மூடறுத் தோங்கி உலகளந்த
            உம்பர்கோ மானே உறங்கா தெழுந்திராய்
            செம்பொற் கழலடிச் செல்வா பலதேவா
             உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய
இது திருப்பாவையின் பதினேழாவது பாசுரம். இதற்கு முந்திய பாசுரத்தில் ஆயர்குலப் பெண்கள் ’நேச நிலைக் கதவம் நீக்கு’ என்று வேண்டினார்கள். அப்பெண்கள் கேட்டதற்கிணங்க திருவாசல் காப்போன் கருந்தாளை உருவி இவர்களை உள்ளே போக விட்டான். அடுத்து இவர்கள் எம்பெருமானைக் கண்ணாரக் கண்டு அனுபவிக்க வேண்டும். அவன் மீது மிகவும் அன்பு வைத்தவர்கள் நிலையை நம்மாழ்வார் திருவிருத்தம் பாசுரத்தில் கூறுகிறார்.
“எழுவதும் மீண்டே படுவதும் பட்டுஎனை ஊழிகள் போய்க்
கழிவதும் கண்டுகண்டு எள்கல்லால் “இமையோர்கள் குழாம்
தொழுவதும் சூழ்வதும் செய்தொல்லை மாலைக் கண்ணாரக் கண்டு
கழிவதும் காதலுற்றார்க்கும் உண்டோ கண்கள் துஞ்சுதலே”
                                       திருவிருத்தம்—97
இப்படிப்பட்ட நிலையில் இருந்த ஆயர்குலப் பெண்கள் இப்போது பெருமானைக் காணப் போகிறார்கள். உள்ளே செல்கிறார்கள். அங்கே முதல் கட்டில் நந்தகோபனும், இரண்டாம் கட்டில் யசோதைப் பிராட்டியும், மூன்றாம் கட்டில் கண்ணபிரானும், நான்காம் கட்டில் பலராமனும் பள்ளி கொண்டிருக்கிறார்கள். அதேவரிசையில் ஒவ்வொருவராய் எழுப்புகிறார்கள்.
இவர்கள் கண்ணனைத்தான் நோன்புக்காகப் பறை வேண்டிக் கேட்கப் போகிறார்கள். முதலில் அவனையே எழுப்பி இருக்கலாம். ஆனால் ”வேதம் வல்லார்களைக் கொண்டு விண்ணோர் திருப்பாதம் பணிகையிறே” என்பது ஆழ்வார் வாக்கு. அந்த வைணவ மரபை இங்கே அப்பெண்கள் காட்டுகிறார்கள். காரிய பூதமான கண்ணனெம்பெருமானைக் காண, காரண பூதமான நந்தகோபனை எழுப்புகிறார்கள்
நந்தகோபனைப்பற்றி இப்பாசுரத்தையும் சேர்த்து மொத்தம் 5 பாசுரங்களில் ஆண்டாள்  நாச்சியார் அருளிச் செய்திருக்கிறார். முதல் பாசுரத்தில் ’கூர்வேல் கொடுந்தொழிலன்’ என்றும், 16- ஆம் பாசுரத்தில் ’நாயகனாய் நின்ற நந்தகோபன்’ என்றும், 21- ஆம் பாசுரத்தில் ’வள்ளல் பெரும் பசுக்கள் ஆற்றப் படைத்தவன்’ என்றும்,  18-ஆம் பாசுரத்தில் ’உந்து மதகளிற்றன் ஓடாத தோள் வலியன் என்றும் நந்தகோபன் பெருமைகள் பேசப்படுகின்றன.
இப்பாசுரத்தில் நந்தகோபன் பெரிய வள்ளல் என்று காட்டப்படுகிறார். இது பாகவத்தில் கூடக் கூறப்படவில்லை. ஆனால் யாதவாப்யுதய காவியத்தில் கண்ணன் பிறந்த மகிழ்ச்சியில் நந்தகோபன் சிந்தாமணி, கற்பக விருட்சம் போல் தானம் செய்ததாகக் கூறப்படுகிறது. எனவேதான் இப்பாசுரமும் ”அம்பரமே தன்ணீரே, சோறே, அறம் செய்யும் நந்தகோபாலா” என்று போற்றுகிறது.
இப்பாசுரத்தில்  ‘அம்பரம் ‘எனும் சொல் இரண்டு இடங்களில் இரு வேறு பொருள்களில் வருகிறது. முதல் அடியில் வரும் ’அம்பரம்’ என்பது  வஸ்திரத்தையையும் ஐந்தாம் அடியில் வரும் ’அம்பரம்’ என்பது ஆகாயத்தையும் குறிக்கும். நந்தகோபன் வஸ்திர தானம் செய்தவர். வஸ்திர தானம் எல்லாவற்றிலும்  மிகச் சிறந்தது ஆகும். வஸ்திரத்தில் முப்பத்து முக்கோடி தேவதைகள் இருந்து நம்மைக் காப்பாற்றுகிறார்கள் என்கிறது வேதம்.
கண்ணனே திரௌபதிக்கு வஸ்திர தானம் செய்தானன்றோ? அப்படி திரௌபதிக்கு வஸ்திர தானம் செய்யும்போதே கௌரவர்களின் மனைவி மார்களின் கழுத்தில் இருக்கும் நூலையும் அறுக்க பகவான் சங்கல்பம் செய்தராம். அடுத்து ’தண்ணீரே’ என்று தீர்த்த தானத்தைப் பற்றிச் சொல்கிறார்கள்.
கண்ணன் குருக்ஷேத்திரப் போர்க்களத்தில் அருச்சுனனின் குதிரைகளுக்குத் தீர்த்ததானம் செய்தார். குதிரைகள் தாகத்தால் தவிக்கின்றன. பார்த்தார் கண்ணபிரான். காண்டீபத்தை வாங்கினார். பூமிக்குள் ஓர் அம்பைவிட்டு தண்ணீரை மேலே வரவழைத்து அக்குதிரைகள் மற்றுமுள்ள படைகள் எல்லாருக்கும் தீர்த்த தானம் செய்தார். இதை,
“மன்னர் மறுக மைத்துனன் மார்க்கொடு
தேரின்மேல் முன்னங்கு நின்று மோழை எடுத்தவன்”
என்று ஆழ்வார்கள் அனுபவிக்கின்றனர். கண்ணன் மாடுகளை மேய்க்கும் போது கன்றுகளுக்கும் பசுக்களுக்கும் நீரூட்டியதை ஆண்டாள் நாச்சியார்,
 ’இட்டமான பசுக்களை இனிது மறித்து நீரூட்டி”
என்று அருளிச்செய்துள்ளார்.
அடுத்துச் ‘சோறே’ எனும் அன்னதானம்.
 ”வேர்த்துப் பசித்து வயிறசைந்து
        வேண்டடிசில் உண்ணும்போது ஈதென்று
    பார்த்திருந்து நெடுநோக்குக் கொள்ளும் பத்தவிலோசனத்து”
என்பது பாசுரம்.
பத்தவிலோசனத்திலிருந்த ரிஷிபத்தினிகள் சமர்ப்பித்த அடிசிலைத் தன்னேராயிரம் பிள்ளைகளுக்கு அன்னதானம் செய்தார் கண்ணன்பிரான்.
சரி, இந்த வஸ்திரதானம், தீர்த்த தானம், அன்னதானம் எல்லாம் நந்தகோபர் செய்தாரா என்ற கேள்வி எழலாம். நந்தகோபர் இவற்றைச் செய்யவில்லை என்றாலும் கண்ணன் செய்திருப்பதால், கண்ணனுக்குக் காரணமான தந்தையானதால் கண்ணனிடத்தில் இருப்பதை அவரிடத்தில் ஆண்டாள் நாச்சியார் ஏறிட்டுச் சொல்கிறார் என்கிறார் பெரிய வாச்சான்பிள்ளை.
மேலும் இந்த ஆயர்குலப் பெண்களுக்குக் கண்ணன்தானே கூறையும் நீரும் சோறும். அப்படிப்பட்ட கண்ணனையே கொடுத்தவர் நந்தகோபர். எனவே அவர் வேறு தனியாகச் செய்ய வேண்டுமா என்பார் முக்கூர் நரசிம்மாச்சாரியார். எனவேதான் ஆழ்வார் திருவாய்மொழியில்
“உண்ணும் சோறும் பருகும் நீரும் தின்னும் வெற்றிலையும் எல்லாம் கண்ணன்”
என்று அருளிச் செய்தார். அம்பரமே, தண்ணீரே, சோறே என்று ஒவ்வொரு சொல்லுடனும் ‘ஏகாரம்’ ஏன் கூறப்பட்டிருக்கின்றது என்றால் அவர் ஒவ்வொன்றையும் தானம் செய்யும்போதும் அதை வழங்கவே கற்றனர் போலும் என்று பிறர் எண்ணும்படி செய்வாராம்.
பலன்கருதாமல் செய்வதுதான் அறம் என்பர். அப்படி மேற்கண்ட தானங்களைப் பலன் கருதாமல் செய்வதால்தான் ‘அறஞ்செய்யும்’ என்று பாசுரம் கூறுகிறது.
”இப்படிக் கேட்பவர்க்கு எல்லாம் கொடுக்கும் நந்தகோபாலா! நீர் இன்னும் உறங்கி இருக்கலாமா? நீ எங்களுக்குத் தலைவனாயிற்றே! உடையவனான நீ உடைமையாகிய எங்களைத் தேடிவராமல் நாங்கள் உன்னைத் தேடி வந்துள்ளோமே!  இதுவா அழகு? வள்ளல் எனும் உன் பெயரை காப்பாற்றிக் கொள்ள எழுவாயாக; எழுவதோடு கிருஷ்ணனை எங்களுக்குத் தருவாயாக;” என்று முதலில் நந்தகோபரை எழுப்புகிறார்கள்.
பெண்கள் எல்லாரும் இப்படி நந்தகோபனை எழுப்பியபின் அவர் எழுந்திருக்கிறார். உள்ளே போக அனுமதி தருகிறார்  உள்ளே சென்ற ஆயர்குலப் பெண்கள் இப்போது யசோதைப் பிராட்டியை எழுப்புகிறார்கள். இவர்கள் முதலிலேயே யசோதையைத்தான் எழுப்பி இருக்க வேண்டும். ஆனால் நந்தகோபர் முதலில் படுத்திருப்பதால் அவரை எழுப்ப வேண்டியதாயிற்று.
அடுத்து யசோதை பிராட்டியார் இரண்டாம் கட்டில் படுத்துள்ளார். அவர் தம் மகனான கண்ணபிரானை ஒருபுறமும் மற்றொரு புறம் தன் கணவரையும் அணைத்துப் படுத்துக் கொண்டிருக்கிறார். மகாலக்ஷ்மியானவர் எப்படி ஸர்வேஸ்வரனையும், விபூதியையும் விட மட்டாரோ அதேபோல யசோதையானவர் நந்தகோபனின் படுக்கையையும் விடமாட்டார்; கிருஷ்ணனின் தொட்டிலையும் விட மாட்டார்.
உலகத்துப் பெண்கள் எல்லாரும் கொடிகள் என்றால் யசோதை அக்கொடியில் உள்ள இளந்தளிர் போன்ற கொழுந்தாம். அதனால்தான் கொம்பனார்க்கெல்லாம் கொழுந்தே அன்றழைக்கப்படுகிறாள். மேலும் கொடிக்கு ஏதேனும் துயர் வரின் உடனே கொழுந்து வாடிவிடும். அதுபோல ஆயர்குலப் பெண்களுக்கு துன்பம் ஏற்பட்டால் அவள் வாடிவிடுவாள். அவளை இப்போது                              ”ஆண்பிள்ளையான நந்தகோபரே எழுந்து விட்டார். பெண்களுக்கு ஏதேனும் வருத்தம் என்றால் வாடிவிடும் நீ எங்கள் துயரம் அறிந்த பின்னரும் இப்படி இருக்கலாமா? பிராட்டியைப் போன்று உறங்கும் நீ குணங்களில் அவளை ஒத்திருக்கவேண்டாமா? மேலும் நீ எங்கள் குலவிளக்கைப் போன்றவள்; மங்களதீபம் போன்றவள்; விளக்கு தன்னையும் அதேநேரத்தில் பிறவற்றையும் பிரகாசிக்கும் குணங்கொண்டது. அதுபோல உன்னாலன்றோ ஆயர்குலமும், நாங்களும் ஒளி பெறவேண்டும்; நீயோ குல விளக்கு; அவனோ ஆயர்குல மணிவிளக்கு; எல்லாம் இப்படி இருந்தும் எங்கள் நெஞ்சிலே இருள் கவிந்திருக்கிறதே; அதை போக்க வேண்டாமா? நீ எழுந்திருப்பாயாக” என்று எழுப்புகிறார்கள்.
யசோதையைப் போலவேதான் அவள் மகன் கண்ணனும் கூறப்படுகிறான். “அமரர்க்கமுதீந்த ஆயர் கொழுந்து” என்றும் ஆயர்பாடிக்கணி விளக்கு” என்றும் அவன் போற்றப் படுகிறான். அப்படிப்பட்ட கண்ணனெம்பெருமானைப் பெற்றுக் கொடுத்தவளாய் இருப்பதாலும், எம்பெருமானான நந்தகோபனைத் தம் கணவனாகப் பெற்றிருப்பதாலும், எம்பெருமானை எப்போதும் அனுபவித்துக் கொண்டிருப்பதாலும், பூமிதேவியும் நீளாதேவியும் கூட இவள் கையையே எதிர்பார்த்திருப்பதாலும், யசோதையை எம்பெருமாட்டி என்றழைத்து ’அறிவுறாய்’ என்கிறார்கள்.
அதாவது ”நீ நந்தகோபரைப்போல எழுந்திருக்கக் கூட வேண்டாம். உன் அறிவு கொண்டு நீ உணர்ந்தாலே போதும்; எங்கள் துன்பமெல்லாம் தீர்ந்துவிடும்” என்று வேண்ட யசோதையும் உணர்ந்து இவர்களை உள்ளே அனுமதிக்கிறாள். உள்ளே சென்றவுடன் இவர்களுக்குப் பள்ளிகொண்டிருக்கும் பெருமான் கண்ணனின் திருவடி கண்ணில் படுகிறது. இரண்டு அடிகளில் அதற்குப் பல்லாண்டு பாடுகிறார்கள். அப்போது பகவான் உலகளந்த பெருமையைப் பேசுகிறார்கள். திருப்பாவையில் மூன்று இடங்களில் பெருமாளின் திருவடி உலகளந்த திரிவிக்கிரம அவதாரம் பேசப்படுகிறது.
மூன்றாம் பாசுரத்தில் ‘ஓங்கி உலகளந்த’ என்றும் இப்பாசுரத்தில் ‘அம்பரமூடறுத்து ஓங்கி உலகளந்த’ என்றும் இருபத்து நான்காம் பாசுரத்தில் ‘அன்று இவ்வுலகம் அளந்தாய்’ என்றும் அருளிச் செய்யப்படுகிறது. ஒரு பெரிய யாகத்தில் மூன்று முறை ஆகிருதி போடப்படுவது போல முதலில், இடையில், இறுதியில் என்று போற்றப்படுவதாய்க் கொள்ளலாம். இப்பாசுரத்தில் வரும் ‘அம்பரம்’ எனும் சொல் ஆகாயத்தைக் குறிக்கிறது. உலகை அளந்தபோது அத்திருவடி ஆகாயத்தைக் கிழித்து அறுத்து மேலே போனதாம்.
”தேடுவார் தேட நின்ற சேவடி தானும் தேடி
நாடுவார் அன்று கண்ட நான்முகன்”
என்றபடி மேலேவந்த அத்திருவடிக்குப் பிரம்மன் தன் கமண்டலத் தீர்த்தத்தினால் திருமஞ்சனம் செய்தராம். அதுவே பகீரதனால் பூலோகத்திற்குக் கொண்டுவரப்பட்டு கங்கா தீர்த்தமாகியது. அப்படி உலகளக்கும் போது இன்னார் இளையார் என்று பாராமல் பூவுலகின் எல்லார் தலையிலும் அவன் திருவடி பட்டதாம். அதாவது “உறங்கும் குழந்தையைத் தழுவிக்கொண்டு கிடக்கும் தாயைப்போலே எல்லார் தலையிலும் ஊறெண்ணெய் வார்த்தது போலே” எல்லாரையும் குளிர வைத்தானாம்.
”தாவி அன்று உலகமெல்லாம் தலைவிளாக்
கொண்ட வெந்தையான திரிவிக்ரமன்”
என்பார்கள்.
ஆயர்குலப் பெண்கள் “அதுபோல் இப்போது நீ ஓங்கி உயர வேண்டா; எல்லார் தலையிலும் காலை வைத்தாயே? ”அடிச்சியோம் தலைமிசை நீயணியாய் ஆழியங்கண்ணா உன் கோலப்பாதம்” என்று வேண்டும் இந்த ஆயர்குலப் பெண்கள் வேண்டுதலுக்கு செவிசாய்க்க மட்டாயா? அன்று அறிவற்ற காடு மற்றும் மேடுகளை எல்லாம் தடவிய உன் திருவடி அறிவுள்ள எங்களைத் தடவக் கூடாதா? நீ உலகம் முழுதும் அளந்து கொண்டவனாயிற்றே? ஒருவேளை எங்களை உன் உலகிற்கு அப்பாற்பட்டவன் என எண்ணுகிறாயா?அன்று திரௌபதி ‘கோவிந்தா’ என்று வெகு தொலைவிலிருந்து அழைத்தது மிகவும் பெருகிவிட்ட கடனைப்போல என் மனத்தில் இடம் பெற்று விட்டது என்று நீ சொன்னதெல்லாம் வெறும் காற்றோடு போயிற்றா? தேவர்களுக்குத் தலைவனே! நீ தேவர்களுக்கு மட்டும் தான் காரியம் செய்வாயா? இந்த எளிய ஆயர்குலப் பெண்களுக்கு அருள்  புரிய மாட்டாயா?” என்று அவனை எழுப்புகிறார்கள்.
”உம்பர் கோமானே” என்பதை பரமபதத்திலிருக்கும் கோலமாகக் கொள்ள வேண்டும்.
”பரமபதத்தை விட்டு வந்தாய்; சூட்டுநன் மாலைகள் தூயனவேந்தி விண்ணோர்கள் நன்னீராட்டியந் தூபம் தரா நிற்கவே அங்கோர் மாயையினால் ஈட்டிய வெண்ணெய் தொடுவுண்ணப் போந்து என்றபடி நித்ய சூரிகளைத் தவிக்க விட்டு வந்தவன் இங்கே எங்களையும் தவிக்க விட்டு உறங்கலாமா?” என்று அவனை வேண்டும்போது அவன் உலகளந்த களைப்பினால்தான் உறங்குகின்றான் என்று இப்பெண்கள் எண்ணுகிறார்கள்.  எனவே திருப்பள்ளிஎழுச்சி பாடுகிறார்கள்.
“நடந்த கால்கள் நொந்தவோ நடுங்கும் ஞால ஏனமாய்                
இடந்த மெய் குலுங்கவோ இலங்குமால் வரைச்சுரம்
கடந்த கால் பரவி காவிரிக்கரைக் குடந்தையுள்
கிடந்தவாறு எழுந்திருந்து பேசு வாழி கேசவனே”
என்று ஆழ்வார்கள் அருளியது போல் இவர்களும் வேண்டுகிறார்கள்.
இந்த ஆயர்குலப்பெண்கள் இவ்வாறு பலவகைகளில் அழைத்தும் கண்ணன் எழவில்லை. ஏன் தெரியுமா? தனக்கு அடுத்துப் படுத்துக் கொண்டிருக்கிறாரே தனது அண்ணன் பலராமன். அவரை முதலில் எழுப்புவது அன்றோ முறை. அதை விடுத்துத் தன்னை எழுப்புகிறார்களே என்று கிருஷ்ணன் வாளாவிருந்தானாம். “ஆக்யாதி ஹ்ருதயம் ஹ்ருதா” என்று சொல்லியிருப்பதால் கண்ணன் நெஞ்சிலிருப்பதை ஆயர்குலப் பெண்கள் அறிந்துகொள்கிறார்கள்.

எனவே,
“செம்பொற் கழலடிச் செல்வா! பலதேவா
உம்பியும் நீயும் உறங்கேலோ ரெம்பாவாய்
என்று பலராமனை எழுப்புகிறார்கள். அவர்கள் பலராமனை பலதேவன் என்கிறார்கள். அது பலத்தின் இருப்பிடம் என்று பொருள்படும். பலராமனின் திருவடியை அவர்கள் ‘செம்பொற் கழலடி’ என்று கூறுகிறார்கள். ஆதிசேஷனின் அம்சமாக பலராமன் தேவகியின் கர்பத்தில் ஏழாவதாக உருவானார். அதற்குமுன் உருவாகிப் பிறந்த ஆறு குழந்தைகளைக் கம்சன் கொன்றான். எனவே பகவான் ஆறாவதாக உருவான பலராமனைக் கருவாக இருக்கும்போதே ரோகிணியின் கர்ப்பத்திற்கு மாற்றிவிட்டார். பலராமன் பிறந்தான். அதன்பின் கண்ணன் பிறந்தான். இந்த இரண்டு பேரையும் கம்சனால் ஒன்றும் செய்ய முடியவில்லை.
தனக்குப் பிறகு தோன்றும் குழந்தைகள் நன்றாக புகழ் பெற்றுத் திகழ வேண்டும் என்று உயர்ந்த நோக்கத்துடன் அவதரித்ததால் பலராமனின் திருவடி பொன்னடி என்று போற்றப்படுகிறது. மேலும் ”லக்ஷ்மணோ லக்ஷ்மி ஸம்பன்ன” என்று கூறுவதற்கிணங்க   இளைய பெருமாளாக இராமாயணத்திலே பின்னால் பிறந்து பெருமை பெற்றதை இங்கு முன்னால் பிறந்து கொண்டவனன்றோ பலராமன்.
 ’”மக்கள் அறுவரைக் கல்லிடைமோத இழந்தவன் வயிற்றில்
    சிக்கெனப் பிறந்து நின்றாய்………..”
என்று அருளிச் செய்வார் பெரியாழ்வார். பலராமனை செல்வா என்றழைக்கிறார்கள். இலக்குவனாய் அவதரித்தபோது கொண்ட கைங்கர்யச்செல்வத்தை இந்த அவதாரத்திலும் கொண்டவனன்றோ பலராமன். அவனை எழுப்புகிறார்கள்.
”இராமனும் சீதாபிரட்டியும் உறங்கும்போது இமைப்பிலன் நயனம் எனும் பெயருக்கேற்ப வில்லும் கையுமாய் நின்றாயே? ஆனால் இப்போது உறங்குகின்றாயே? எழுந்திருப்பாயாக.
 ”சென்றால் குடையாம் இருந்தால் சிங்காசனமாம்
    நின்றால் மரவடியாம் நீள்கடலுள்—என்றும்
    புணையாம் மணிவிளக்காம் பூம்பட்டாம் புல்கும்
    அணையாம் திருமாற்[கு] அரவு”  
என்றன்றோ ஆழ்வார் பாடியுள்ளார். நீ பெருமாளுக்குப் படுக்கையாயிற்றே? படுக்கையில் தூங்கலாம்; ஆனால் படுக்கையே தூங்கலாமா?  எழுவாயாக; இராமாவதார காலத்திலே குகப்பெருமாளுக்கும், சுக்ரீவனுக்கும், விபீஷண ஆழ்வாருக்கும் புருஷகாரம் செய்ததுபோல் இப்போது எங்களுக்குச் செய்தால் ஆகாதா?” என்றெல்லாம் வேண்டுகிறார்கள்.
மேலும், “ உனக்கு அன்புடையவான அவனும், அவனுக்குப் பின் போகும் நீயும் எழுந்திருப்பீர்களாக. அவன் உன்னை எழுப்பச் சொல்கிறான்; நீ அவனை எழுப்பச் சொல்லாதே? நீ அவனைப் புல்கும் அணை போன்றவன் ஆயிற்றே? உன் ஸ்பரிஸத்தால் ஆனந்தம் கொண்டிருக்கும் அவனும், அவனுடைய ஸ்பரிஸத்தால் மகிழ்ந்து கொண்டிருக்கும் நீயும் எழுந்து எமக்கு அருள் செய்ய வேண்டும். மேலும் பலராமா! இப்போது நாங்கள் உன் திருவடியின் கீழ் விழுந்து வேண்டுகிறோம்; எங்களுக்கு அருள வேண்டிய இச்சமயத்தைக் கைவிட்டுவிட்டால் நீ பிறகு எங்கள் கால்களிலே தனித் தனியே விழவேண்டி இருக்கும்; நாங்கள் உன் வாசலில் பட்டதெல்லாம் நீ எங்கள் வாசலிலே பட வேண்டி இருக்கும்; எனவே உடனே எழுந்து இந்த ஆயர்குலப் பெண்களுக்கு அருள வேண்டும்” என்று இப்பாசுரத்தில் சிறுமிகள் எழுப்புகிறார்கள்.
இப்பாசுரத்திற்கு நம் பூர்வாச்சாரியர்கள் பல உள்ளர்த்தங்களை அருளியிருக்கிறார்கள். இப்பாசுரத்தில் நந்தகோபன், யசோதை, கண்ணன், பலராமன் ஆகியோர் எழுப்ப்படுவதை முறையே ஆச்சாரியர், திருமந்திரம், திருமந்திரார்த்தம், திருமந்திரார்த்த சாரம் என்பார்கள்.
ஆச்சாரியன் : அம்பரம் என்பது ஆகாசத்தைக் குறிக்கும். இன்னும்பரந்த
பொருளாக அது பரமாகாசம் என்று கூறப்படுகின்ற ஸ்ரீவைகுந்தத்தைக் குறிக்கும். அப்படிப்பட்ட மேன்மையான வைகுந்தத்தைத் தமது கையிலேயே வைத்திருக்கக் கூடியவர்கள் ஆச்சாரியர்கள்.
அடுத்து தண்ணீர்; அதாவது தீர்த்தம்;ஆச்சாரியர்கள் தீர்த்ததானம் செய்பவர்கள். அதாவது ஸ்ரீவைகுந்தத்தில் ஓடும் விரஜா நதியின் தீர்த்தத்தைக் கொடுப்பவர்கள். பெருமாளே ஒரு தண்ணீர்ப் பந்தல் என்கிறது வேதம்.
அடுத்து சோறு; அதாவது அன்னம்; வருண பகவான் தன் மைந்தன் ப்ருகுவிற்கு அன்னமே பரப்பிரம்மம் என்று ஆரம்பித்து கடைசியில் பரமாத்மாவை அனுபவித்து ஆனந்திப்பதே பரப்பிரம்மம் என்று முடித்து வைக்கிறார்.
2.திருமந்திரம் : ”கொம்பனார்க்கெல்லம் கொழுந்தே! குலவிளக்கே!” என்று திருமந்திரம் காட்டப்படுகிறது. எல்லாமே நாராயணன் என்று உணர்த்துவதே திருமந்திரம்; அது தாய் போன்றது ஆகும். திருமந்திரத்திற்கு மாத்ரு ப்ரேமை இருப்பதால்தான் யசோதை பிராட்டி காட்டப்படுகிறார்.
3. திருமந்திரார்த்தம் : எல்லா இடங்களிலும் பரமாத்மாவே வியாபித்து இருக்கிறார் என்பதே திருமந்திரார்த்தம் ஆகும். அதுதான் “அம்பரமூடறுத்து ஓங்கி உளகளந்த உம்பர் கோமானே” என்று காட்டப்படுகிறது. திரிவிக்ரமனாய் மாறி அவன் உலகளந்தபோது  எல்லாமே அவனுக்குள் அடக்கமாகி பகவானின் ஸர்வ வியாபித்வம் விளங்கிற்று என்கிறார்கள்.
4. திருமந்திரார்த்த சாரம் : திருமந்திரத்தை நாள்தோறும் உள்ளன்போடு சொல்லிக் கொண்டு இருப்பதால் நமக்கு என்ன பலன் என்று பார்த்தால் பாகவதர்களிடம் அன்போடு இருக்க வேண்டும்  என்ற குணம் உண்டாகும். எல்லாரும் பகவானிடத்தில் பக்தியோடு இருப்பர்கள். ஆனால் பாகவதபக்தி என்பது ஒரு சிலரிடத்தில்தான் காணப்படும். திருமந்திரார்த்த சாரமாக பாகவத பக்தியே கூறப்படுகிறது. அதனால்தான் செம்பொற் கழலடிச் செல்வா! பல தேவா! என்கிறார்கள். அனந்தாழ்வானாகிய பாகவதனை அதன் மூலம் போற்றுகிறார்கள்.
இப்படி ஸ்ரீவைஷ்வணத்தின் முக்கியமான பல விஷயங்களை உள்ளடக்கியதாக இந்தப் பாசுரத்தை ஆண்டாள் நாச்சியார் அருளிச் செய்திருக்கிறார்.
———————————————————————————————————————————————

Series Navigationவால்ட் விட்மன் வசனக் கவிதை – 88பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! அண்டக் கோளின் சுழற்சியே உயிரினத் தோற்ற வாய்ப்புக்கு ஏற்றதாய்ப் பேரளவு தூண்டுகிறது.
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *