உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)

This entry is part 3 of 25 in the series 14 செப்டம்பர் 2014

 

 

பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)

 

பயணம் உல்லாசமானது.

கப்பல் பயணம் இன்னும் உல்லாசமானது.

உல்லாசக்கப்பல் பயணம் சொல்லவேண்டுமா?’சந்தோசா தீவுக்குப்போகும்போதெல்லாம் சில நேரங்களில் இந்த உல்லாசக்கப்பல் நிற்பதை பார்த்திருக்கிறேன்.

ஒருமுறை இயக்குநர் கே.எஸ்.ரவிக்குமார் குடும்பத்தோடு சென்னையிலிருந்து சிங்கப்பூர் மாலையில் வந்து நேரடியாக உல்லாசக்கப்பலில் சென்றது அவரை தமிழ்வள்ளல் நாகை தங்கராசு அவர்களுடன் சென்று விமான நிலையத்தில் வரவேற்றது , பின் உல்லாசக்கப்பலில் அனுப்பிவைத்தது எல்லாம் நினைவுக்கு வந்தன. எப்போது?

சிங்கப்பூர் எழுத்தாளர் திருமதி கிருத்திகா அவர்கள் எழுதிய “உல்லாசக்கப்பல் பயணம்” என்ற நூலை கையிலெடுத்தபோது.

அவரைச் சிங்கப்பூர் எழுதாளர் கழகத்தின் கதைக்களம் நிகழ்ச்சியில் கதைகளைப்படித்தும் விமர்சனம் செய்தும் பரிசுபெற்றபோது பார்த்தேன். பாராட்டினேன்.வளரும் எழுத்தாளரை ஊக்குவிக்கவேண்டும் என்பது என் இயல்பு. அப்படித்தான் கவிமாலையில் பலதம்பிகளை உற்சாகப்படுத்தி கவிஞர்களாய்க்கண்டோம்.

ஆனால் கிருத்திகாவைப்பொறுத்தவரை நான் தோற்றுவிட்டேன்.

ஒவ்வொருமுறையும் சிறுகதைக்கும் விமர்சனத்திற்கும் ஏதோ ஒரு பரிசைப்பெறும்போது பாராட்டத்தவறவில்லை. அண்மையில் அவர் ஈரோடு புத்தகவிழாவில் கலந்துகொண்டு பேசியாதாகவும், ஈரோடு மக்கள் சிந்தனைப்பேரவையின் தலைவர் ஸ்டாலின் குணசேகரன் அனுமதித்தாகவும் கேள்விப்பட்டு விசாரித்தேன். அப்போது அவர் வியந்து இந்தியாவின் முன்னாள் பிரதமர் அமரர் இராஜீவ்காந்தியின் கொலைவழக்கு பற்றிய நூலைப்படித்து ஒரு பாதிப்புக்கு உள்ளானதாகக் கூறினார். எனக்கு அன்பளிப்பாக வழங்கிப்படிக்கச்சொன்னார். அப்போது எனக்கு இன்னொரு நூலையும் அன்பளிப்பாகக் கொடுத்தார் அதுதான் அவர் எழுதிவெளிவந்திருக்கும் “உல்லாசக்கப்பல் பயணம்” எனும் பயணநாவல் நூல். அதாவது சிங்கப்பூர்-மலேசியா-தாய்லாந்து பயணநூல். ஐந்துநாள் உல்லாசக்கப்பல்(க்ரூஸ்) பயணநூல்.

சென்னை தமிழ் காமிக்ஸ் உலகம் வெளியீடாக விஸ்வநாதன் தேவராஜ் அவர்களை வெளியீட்டு ஆசிரியராகக்கொண்டு வெளிவந்திருக்கும் நூல்.

வியப்பும் மகிழ்ச்சியும் கலந்தநிலையில் நான். இவர் வளரும் எழுத்தாளர் அல்ல. வளர்ந்த எழுத்தாளர். வாசிப்பு,சமூகப்பார்வை, உலகநடப்பு, குடும்பம்,நட்பு,சாதனை, மொழி, பட்டறிவு படிப்பறிவு கலந்த பெண்மணியாகப்பார்க்கமுடிந்தது.

இராஜீவ் கொலைவழக்கு நூலை இரண்டு இரவில் படித்துமுடித்து கருத்துகளைப்பரிமாறிய நான் இவர் எழுதிய நூலை விருப்பமாய் கையிலெடுக்கவில்லை. காரணம் அதிகபக்கமாய் இருப்பதுபோல் தோற்றம். அழகாக பரிசுபதிப்புப்போல் வெளிவந்திருப்பதால் ஒரு தயக்கம் இயல்பானது.

159 பக்கத்தில் வெளிவந்திருக்கிறது. நாவல் வடிவம். நாவல் மட்டும் 140 பக்கம். மூன்றுநாளில் முடித்தேன். முழுநேரமின்மைதான் காரணம். ஏதாவது ஒருபடைப்பில் ஈடுபட்டிருப்பதால் எடுத்தோம் படித்தோம் என்ற நிலை வரவில்லை. செப்டம்பர் ஒன்பதாம்நாள் எடுத்து பன்னிரண்டாம்நாள் காலையில் முடித்தேன்.

பயணநூல் ஆனந்தவிகடன் மணியன் அதாவது இதயம்பேசுகிறது மணியன், சிங்கப்பூர் பி.பி..காந்தம் அவர்கள் எழுதிய நூலைப்படித்திருக்கிறேன்.

இவர் ஐந்துநாள் க்ரூஸ் பயணத்தை விலாவாரியாக, நேரக்குறிப்போடு எழுதித்தந்திருப்பது பயணநாவல் வகையில் இது நாவலாக அதாவது முன்னுதாரணமாக novelty யோடு வந்திருக்கிறது. பயணத்திற்குத்தேவையான முன்னேற்பாடுகள், கப்பலில் தேவையானவை, கப்பலில் கிடைப்பவை, கப்பலில் நடந்துகொள்ளவேண்டியமுறை அனைத்தையும் துல்லியமாகக்குறிப்பிட்டிருக்கிறார். இது நாவல் என்பதற்கு அடையாளமே பல்வேறு நாட்டு, பல்வேறு பயணிகளைப் பாத்திரங்களாக, சகபயணிகளாக பயணிக்க வைத்திருப்பதுதான்.. அதில் ஒரு குடும்பம் அருண் பூரணி இணையர்.

இன்னொரு பாத்திரம் இலெனின்.லெனின் காதல் வயப்படுகிறார்.அதுவும் ஜப்பான் நாட்டு பெண்குமிகோ மீது. அருண்பூரணி இணையர் மன அழுத்தத்தின் காரணமாகவும், வேலைபளுவின் காரணமாகவும் ஒரு குழந்தையப்பெற்றிருந்தும் மணவிலக்குவரை சென்றுவிடுகிறார்கள். இவர்களும் பயணத்தில்.

லெனின் பயணத்தின் முடிவில் குமிகோவிடம் என்ன கேட்கிறார்? குமிகோ என்ன பதில்சொல்கிறார்? என்பது நீங்கள் படித்துரசிக்கவேண்டிய பகுதி.

விவாகரத்து அதாவது மணவிலக்குப்பெற இருந்த அருண் பூரணி ஐந்துநாள் உல்லாசப்பயணத்தில் தம்மை உணர்கிறார்கள். பொழுதை எப்படிக்கழிக்கவேண்டும் என்பதைச்சிந்திக்கிறார்கள். அந்தமுடிவும்கூட ஒரு பண்பட்ட எழுத்தாளரின் அனுபவத்தைக்காட்டுகிறது. அவர்கள் எடுத்தமுடிவை கருத்துத்திணிப்பாக இல்லாமல் என்ன நடந்திருக்கும் என்பதை சிந்திக்கும் வகையில் எழுதிச்செல்கிறார். அருண் பூரணி வாழ்க்கை எப்படி இருந்தது.? “ நீ எதுக்காக என்னைக் கல்யாணம் செய்துகொண்டாய்? தினமும் காபி போடவும் சமைச்சுப்போடவும் மட்டும்தானா?” இப்படித்தான் அவர்கள் வாழ்க்கை இருந்தது..தொடக்கத்திலேயே அவர் எழுதியிருக்கும் சொற்றொடர் “நடக்கப்போவதை முடிவுசெய்யப்போவது யார்? அல்லது எது? என்பது கேள்விக்குறி.” இது அவருடைய எழுத்தாற்றலுக்கு சான்று.

பயணத்திற்குமுன்பே வீட்டுக்குவரும் செய்தித்தாளை நிறுத்தச்சொல்லும் அறிவுரை அனைவரும் கடைபிடிக்கவேண்டிய ஒன்று. அதைவிட திருடர்கள் என்று எழுதாமல் கயவர்கள் என்று எழுதிருப்பது என்னைச்சிந்திக்கவைக்கிறது.

மொழிநடைக்கு நிறைய எடுத்துக்காடுகள் உண்டு.நல்லதமிழ்ச்சொற்கள் விளையாடுகின்றன. பிழைகள் இல்லையென்றே சொல்லலாம்.

அதாவது; “மகிழ்ச்சியில் திளைத்த குரல்கள் அந்தப்பகுதி முழுவதும் கரைபுரண்டோடும் வெள்ளத்தைப்போல இரைச்சலை ஏற்படுத்தியது”

“குழிகள் இல்லாத விரவுச்சாலையில் வழுக்கிக்கொண்டு சென்ற கார்”

“அங்கே நடந்துகொண்டிருந்தவை கண்ணுக்கும் காதுக்கும் ஒரு மசாலா உணர்வைக் கொடுத்தன” “சன்னல்கள் கப்பலுக்கு ஒரு அரசகம்பீரத்தைக்கொடுத்தன” பொதுவாக ராஜகம்பீரத்தைக்கொடுத்தன எழுதுவதுதான் வழக்கம். “ தனக்குள்ளே ஒரு மகிழ்ச்சி நீரூற்று பொங்குவதைஉணர்ந்தாள்” “வழவழவென்று உடலைத்தழுவி” “உண்டுறையகம், சவர்க்கார குழம்பு, உவகையில்,தாளகதியில்,இலட்சினை,விழைந்து, மிளிர்ந்தனர்,இறைஞ்சினாள்,அங்காடியில்,உள்ளம் உவந்து வலிக்க வலிக்க கைகுலுக்கினோம்’ “அலைகளைப்பார்த்துக்கொண்டிருப்பது எத்தனைப்பிறவி எடுத்தாலும் அலுக்காத ஒரு காட்சி” இப்படி நூல்கள்தோறும் விரைந்து கிடக்கின்றன. “அடங்குடா டேய்” என்ற நட்பு மொழியும் இல்லாமலில்லை. நிறைய திரைப்படங்கள் பார்ப்பவர் அல்லது தேர்ந்துபடங்களைப்பார்ப்பவர் என்பது ஆங்காங்கே தெரிகிறது. மறந்துபோன கத்திரிக்கோலை திரும்பப்பெற்றதையும் கவனமாகக்குறிப்பிடுகிறார்.மறதி நமக்கு இயல்பு. கப்பல்காரர்கள் மறவாததை நினைவுகூர்கிறார். “குமிகோவின் அழகை ஓர் ஒவியத்துடன் ஒப்பிட்டு வியந்துகொண்டிருந்தான்” லெனின். இதுதான் காதலுணர்வின் மொழி. ஒருகவிதையே உருவாகிறது எனில் லெனினா கவிஞன்? இல்லை. நிலவு ஒரு பெண்ணாகி என்ற பாடலை லெனின் பாடுவதுபோல் இருந்தது. கம்பனும் வராமலில்லை. கண்டேன் சீதையை என்ற தாக்கம் கண்டேன் கடலை என்றுவந்திருக்கிறது. திருமணவீட்டு விருந்தை ஒப்பிடுவது பட்டறிவைக்காட்டுகிறது.

 

பக்கம் 47-ல் விளக்கிற்கு உயிர்கொடுக்கும், வெனிலாவா வெண்ணிலாவா?கிறுத்துவ, 133 வது பக்கத்தில் அரசவைக்கலைஞராக, என சில திருத்தங்கள் மனதில் பட்டது. ஒருமுறை வாசித்து எழுதுவதால் சரியா என தெரியவில்லை.

ஆசிரியர் இயல்பிலேயே ஒருவீராங்கனை என்பது எவெரெஸ்ட்டைத்தொடும் அவருடைய ஆர்வத்தில் தெரிகிறது. எனினும் “ யாரும் இல்லாமல் நான் மட்டும் படகில் ஆழ்கடலுக்குள் சென்று ஒரு சில நாட்களைக்கழிக்க வேண்டும்” என்ற வாக்குமூலத்திலிருந்து அது உறுதியாகிறது. “முயலுக்கு காரட்டைக்காட்டி முன்னேறச்செய்வதுபோல’ என்ற வாக்கியத்தின் வலிமையை அடுத்த நிகழ்விற்கு நம்மைத்தயார்செய்ய மூலமாக்குகிறார். அதாவது “ ஆணாக இருந்தாலும் சரி பெண்ணாக இருந்தாலும் சரி, உங்கள் வயது எதுவாக இருந்தாலும் சரி ஒரு சந்தர்ப்பம் கிடைத்தால் இப்படிப்பட்ட பாறை ஏறும் வாய்ப்பை நழுவவிடாதீர்கள்” என்பதுதான் அது.

அனைவருக்கும் எச்சரிக்கை அவர் ஒன்பது அமெரிக்க டாலர் கொடுத்தது.?அடுத்து ஒரு புதிய இலக்கணத்தை சொல்கிறார் கேளுங்கள்: “சினமா தியேட்டரில் முடிந்தவரை பின்சீட்டில் இடம்பிடிக்கவேண்டும். அதேசமயம் நேரடி நிகழ்ச்சிகளில் முன் வரிசையில் இடம்பிடிக்கவேண்டும்”. எவ்வளவு உண்மை!

கப்பலின் பெயர் Mariner of the seas.

ராயல் கரீபியன்க்ரூஸ் என்ற அமெரிக்க நிறுவனம் இவருடைய நூலை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து வெளியிடுவது அவசியம். இது அவர்களின் வியாபாரத்திற்கும் பயணிகளின் வசதிக்கும் கையேடாக, வழிகாட்டியாக உதவும் என்பதில் இருவேறு கருத்திற்கு இடமில்லை. உல்லாசக்கப்பல் பயணத்திற்குத்தேவையான அனைத்தையும் தெரிந்துகொள்கிறோம். என்னன்ன கிடைக்கும் என்பற்கு இந்நூலை வழிகாட்டியாகக்கொள்கிறோம்.

இந்தக்கப்பல் பயணம் ஒரு இளைஞனின் காதலுணர்வோடும் வாழ்க்கையைபுரிந்துகொள்ளாத கணவன்மனைவிக்கு பாடமாகவும் அமைக்கப்படுகிறது. நம்மில் பலருக்கு வேலையின் பின்னாலயே வாழ்க்கை ஒடுகிறது என்பதையும் சுட்டிக்காட்டி மகிழ்ச்சியை உருவாக்க, தேட,கண்டறிய உதவிசெய்கிறார்.

கப்பலின் உள்ளே தங்குமிடம் எப்படி இருக்கிறது என்பதை மினியின் வாய்வழி “நிறைய விலைகொடுத்தால்தான் இவ்வளவு நல்ல சேவைகிடைக்கும் என்றால், நான் என் வாழ்நாள்முழுவதும் இப்படிப்பட்ட இடத்தில் வாழவேண்டிய அளவிற்கு பணம் கொடுக்கத்தயார்” என உதிர்ந்த சொற்களே சாட்சி. அதுமட்டுமல்ல உங்கள் அனுபவும் எப்படி கேட்போருக்கு “அந்த இனிமையான தருணம் என் கடைசிமூச்சுவரை ஆனந்த நினைவலைகளை எழுப்பக்கூடியது.” என்பதையே பதிலாக்கலாம். அசிரியரின் பின்னணி இவரின் வளர்ச்சிக்கு அடித்தளமாக இருக்கிறது. இவரின் அம்மா ஒரு கவிஞர். இவரும் கவிஞர்தான். தாத்தாவுக்கு நூலை அர்ப்பணித்திருக்கிறார். தாத்தாவின் செல்லம் இவரை சாகசங்கள் நோக்கி வழியனுப்பியிருக்கிறது என்பதை உணர்கிறேன்.

எழுதிமுடிக்கும் தருணத்தில் மலேசியா ,தாய்லந்து போய்வந்த அனுபவத்தைப்பெற்றிருந்தாலும் இன்னும் நான் கப்பலிலிருந்து வெளிவரவில்லை என்பதையே பதிவுசெய்கிறேன். போதுமா? இன்னும்வேணுமா?

உல்லாசக்கப்பலில் போய்வாருங்கள்; போய்பாருங்கள்.

அதற்குமுன் இந்நூலை வாங்கிப்படியுங்கள்.பயணத்துறைக்குப் புதிய நூல்.பயணத்துறைக்குத் தேவையான நூல்.சிங்கப்பூர் தமிழ் இலக்கியத்திற்கு புதியவரவு. வரவேற்போம் வாருங்கள்.

 

அன்புடன் பிச்சினிக்காடு இளங்கோ(சிங்கப்பூர்)pichinikkaduelango@yahoo.com

Series Navigationபூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *