”நீங்க போலீஸ் ஸ்டேஷன் வரைக்கும் போயிட்டு வந்திருக்கலாம்…. –
எதிர்வீட்டில் அவர்கள் வந்து இறங்குவதைப் பார்த்துவிட்டு, சடாரென்று தன்னை மறைத்துக் கொள்வதுபோல் உள்ளே வந்த சந்திரா என்னிடம் சொன்னாள்.
மனசுக்குள் இரக்கம். முகத்தில் தெரிந்தது. நான் அமைதியாயிருந்தேன்.
இப்டியே ரூமுக்குள்ளயே அடைஞ்சிக்கிட்டு புஸ்தகமே படிச்சிட்டிருங்க…..எல்லாம் வெறும் ஏட்டுச் சுரைக்காய்தான்…..என்றாள் மீண்டும்.
என்னைச் சீண்டுகிறாள். நன்றாகவே தெரிகிறது.
கறிக்கு உதவாதுங்கிறதில்லை…..எப்டி உபயோகப்படுத்தறோம்ங்கிறதைப் பொறுத்தது… ஏன்னா இந்த உலகத்துலே எல்லாவிதமான அனுபவங்களும் ஒரு மனுஷனுக்குக் கிடைச்சிடுறதில்லை…வாழ்க்கைல அடிபட்டு, அனுபவப்பட்டு, வாழ்ந்து முடிச்சவங்க எழுதிவச்சிருக்கிறதைப் படிச்சும் நாம புதிய அனுபவங்களைப் பெறலாம்…நம்மை முதிர்ச்சி ஆக்கிக்கலாம்….
அதான் தெரியுதே…ஜாக்கிரதையா உட்கார்ந்திருக்கிறது…..
இப்டி நினைச்சேன்னா உனக்கு அனுபவமில்லைன்னு பொருள்….இது, அதாவது நான் உட்கார்ந்திருக்கிறது, உலக அனுபவம் சார்ந்தது….சமூக நிலை சார்ந்தது…..வேறென்ன செய்யலாம்ங்கிற யோசனைக்குரியது…ஏதாச்சும் செய்ய முடியாதாங்கிற சிந்தனை. அதை வாய்விட்டுச் சொன்னாத்தான் ஆச்சா…?
அதாங்கிறனே, உங்களை மாதிரி கண்ட புஸ்தகத்தையும் படிச்சிட்டுத் திறியறவங்க, தேவைப்படுறப்போ இப்டி, தங்களுக்குப் பாதுகாப்பா வியாக்கியானம் பேசிட்டு, தப்பிச்சிக்கிடுவீங்க…… கன்ஸ்ட்ரக்டிவ்வா எதுவும் செய்ய மாட்டீங்க…..படிக்கிறதெல்லாம் இதுக்குத்தான் உதவுது….அதாவது உங்களை சேஃப்டியா பாதுகாத்துக்கிறதுக்கு…..காரியத்துல இறங்கி உதவினோம்ங்கிறதில்லே….செயல்…செயல்…அது ஒன்றே நமது வெற்றி…அப்டீன்னு நீட்டி முழக்கி வசனம் பேசுவீங்க….தனக்குன்னு வரும்போது யாருக்கும் தெரியாம, அல்லது எதுவும் சம்பந்தமில்லாததுபோல பம்மிக்கிடுவீங்க…அவ்வளவுதான்……!!
இப்போ எதுக்கு நீ இதைச் சொல்றே?…கண்ட புஸ்தகத்தைன்னு சொன்னபாரு…அது தப்பு..அதுக்கு அர்த்தம் வேறே…கண்ட கண்ட புஸ்தகம்னு சொல்லணும்…கண்டது கற்க பண்டிதனாவான்னு பழமொழி கேள்விப்பட்டதில்லை? நான் அந்த ரகம். நான்பாட்டுக்கு தேமேன்னு இருந்திட்டிருக்கேன்….நான் உண்டு என்பாடுண்டுன்னு….வம்புக்கிழுக்கிறமாதிரித் தெரியுதே…? நீயா எதாச்சும் எதிர்மறையா நினைச்சிட்டுப் பேசினா என்ன பண்றது?
வம்புக்கிழுக்கிறதாத்தான் வச்சிக்குங்களேன்…என்ன இப்போ? ஒரு நடை அவங்களோட போயிட்டு வந்திருக்கலாமில்ல….,?
எங்கே?
ம்ம்ம்…..! எங்கேயா? திர்ர்ருவிழாவுக்கு…!! போய் புகார் கொடுக்கிறதுக்குத்தான் சொன்னேன்….
போய் புகார், பொய்ப்புகார் ஆயிடும்…அதான் நீ சொல்லிட்டீல்ல…சாருக்கு வேலையிருக்குன்னு…அப்புறமென்ன?
சொன்னா என்ன? நீங்க விரும்பமாட்டீங்கன்னு அப்டிச் சொன்னேன்…..அதுதான் சாக்குன்னு பிடிச்சுவச்ச பிள்ளையாரா உட்காரணுமா? எல்லாம் ஒரு உதவிதானே…போகக் கூடாதா?
இதென்னடீ வம்பா இருக்கு? நீதான் அவங்க ஃபோன் பண்ணினபோது சாருக்கு வேறே வேலையிருக்குன்னு சொல்லி நிறுத்தினவ…நானா உன்னை அப்படிச் சொல்லச் சொன்னேன்? எங்கிட்ட நீ கேட்டிருக்கணும்ல? .அவங்களும் சரின்னு கிளம்பிப் போயிட்டாங்க…. விஷயம் முடிஞ்சு போச்சு….இப்போ திரும்ப எதுக்கு அடியப் பிடிக்கிறே! விடுவியா? என் தேவை அவசியம்னிருந்தா அவங்க வற்புறுத்திக் கூப்டிருக்க மாட்டாங்களா? அவங்களும் என்னை அத்தனை அவசியமா உணரலேன்னுதானே தெரியுது…? நானெல்லாம் வெறும் ஆளுடீ….!! இவனெல்லாம் ஒரு ஆளான்னு தோணியிருக்கும்…..அதான் கிளம்பிப் போயிட்டாங்க…..!
அதுதானே உங்க சாமர்த்தியம்……
அப்டீன்னா….? புரியல்லே எனக்கு…..
அப்டி வற்புறுத்திக் கூப்பிடாத இடத்துலதானே நீங்க உங்களை வச்சிக்கிறீங்க…? அதைச் சொன்னேன்……
பார்த்தியா? இது குசும்புல்ல…? கூடப் போங்கிறே….போகலைன்னா அது என் சாமர்த்தியம்ங்கிறே…? எதையாவது சொல்லி இப்போ என்னைக் கடுப்பேத்தணும் உனக்கு. குற்றவாளிக் கூண்டுல நிறுத்தணும் …அதானே…? நீயா தனி கேம் ஆடிட்டு இப்போ என்னைச் சொல்றியே…இது சரியா?
பக்கத்துவீட்டு மனோகரன் அவங்க கூடப் போயிட்டு வந்திருக்காரு
போகட்டும்….
அவர் சுமோலயே கூட்டிட்டுப் போய், திரும்பக் கூட்டிட்டு வந்திருக்காரு…..
சரி, இருக்கட்டும்…..
என்ன நொறுக்கட்டும்? உங்களுக்குக் கொஞ்சங்கூடச் சொரணையே கிடையாதா? எதையுமே மேலே போட்டுக்காம, துடைச்சிவிட்ட மாதிரி, இப்டியா எனக்கென்னன்னு இருப்பீங்க….?
இந்த பார்…உனக்கே இது கொஞ்சம் ஓவராத் தெரில…? இதுவரைக்கும் நீ பேசினது சரி…இப்பத்தான் தடம் மாறுற….! இந்த விஷயத்தை நீயும் நானும் கலந்து பேசினோம்…..ரெண்டு பேரும் சேர்ந்துதானே ஒரு முடிவுக்கு வந்தோம்…..இப்போ நீ மட்டும் விலகி நின்னுட்டு, உனக்கு மட்டும்தான் உதவி செய்ற மனசுங்கிறமாதிரி, என்னைக் குத்தம் சொல்றது சரியா? அவுங்களே அலட்டிக்கலே…நீ என்னமோ துள்றியே…? எல்லாம் எனக்குத் தெரியும்…சோலியப் பாத்துட்டுப் பேசாமப் போ…..!!!
பெரும்பாலான வாதங்கள் கடைசியில் இப்படித்தான் முடிந்து போகின்றன. புருஷன் பொண்டாட்டி ராசியோ என்னவோ…?
என் முகத்தைச் சந்திரா கூர்ந்து பார்ப்பது தெரிந்தது. புரிந்திருக்கும்.
என்னவோ பண்ணுங்க….எல்லாம் உங்க இஷ்டந்தானே…யார் சொல்லிக் கேட்கப் போறீங்க? .எனக்கென்ன வந்தது…? –கொல்லைப்புறம் நோக்கிச் சென்று விட்டாள். அவள் லிமிட் அது.
நான் மெல்ல அறையைவிட்டு வெளியே வந்து உறாலின் திரையை உயர்த்தினேன். நேர் எதிர்வீட்டின் திரை தொங்கிக் கொண்டிருந்தது. பரந்த, கனமான திரை. உள் பக்கம் ஒன்றும் தெரியாது. அது எப்போதும் அவர்களின் வழக்கம். அவர்களின் உரிமை அது. சொல்லப்போனால் அவர்களைப் பார்த்துத்தான் நான் கற்றுக் கொண்டேன். வீட்டுக்கு வீடு திரை. மனுஷனுக்கு மனுஷன் திரை. மனசுக்குள்ளேயே திரை. எல்லாரும் ரெண்டு மனிதர்கள் இந்த உலகத்தில். அல்லது ரெண்டு முகங்கள்….!
நாம் மட்டும் திரையைத் தூக்கிவிட்டு, பப்பரப்பா…….என்று ஏன் வீட்டை வெட்ட வெளியாக்க வேண்டும்? வீதியில் செல்பவரின் பார்வை சர்வ சாதாரணமாய் உள்ளே பாய்கிறது. வீடு முழுக்க திறந்து போட்டமாதிரி அப்பட்டமாய்த் தெரிகிறது. காலம் அப்படியா ஒழுங்கு மரியாதையாய், நேர்மையாய்க் கிடக்கிறது? நாலு தரம் பார்த்து, ஐந்தாம் முறை நுழைந்து விட்டால்? எது நடக்கும் என்று யார் கண்டது? எதாச்சும் நடந்தால், சினிமாவைப் போல் பறந்து பறந்தா அடிக்க முடியும்?
அத்தோடு, திரையைத் தூக்கிப்போட்டு, எப்பொழுது பார்த்தாலும் எதிர் வீட்டில் என்ன நடக்கிறது என்று பார்ப்பதுபோல் ஆகிறதல்லவா? தற்செயலாய்ப் படும் யதேச்சையான, யதார்த்தமான, வெறும் பார்வைதான் என்றாலும், அவர்கள் பார்வையும் அடிக்கடி மோத சும்மாச் சும்மா என்ன வேவு பார்க்கிற மாதிரி? என்று பரஸ்பரம் நினைக்க வாய்ப்பிருக்கிறதே? குரங்கு மனசுதானே…! என்னவேணா நினைக்கலாமே…!
நான் அப்படியெல்லாம் நினைப்பதில்லை. என்னத்தை நினைச்சு, என்னத்தைக் கட்டிக் கொண்டு போகப் போகிறோம் என்ற எண்ணம் உண்டு எனக்கு. அதென்னவோ அப்படியே வளர்ந்தாயிற்று. இளம் பிராயம் முதல் வளர்ந்த சூழல் அப்படி.
நெருநல் உளனொருவன் இன்றில்லை என்னும் பெருமையுடைத்து இவ்வுலகு…இன்றிருப்பார் நாளையில்லை.,நாளை என்பது நமக்கு ஏது? இன்னைக்குச் செத்தா நாளைக்குப் பால்…இப்படி ஏதாவது ஒன்று மனதில் தோன்றித் தோன்றி நின்று நிலைத்தே போனது. எல்லாமும் மாயை…!!!
அவர்களைப்பற்றி எனக்குத் தெரியாதே? அவ்வப்போதைய எதிர் பார்வையில் வெறும் உதட்டோரப் புன்னகையை வைத்து எல்லா நல்லது கெட்டதுகளையும் நிர்ணயம் செய்து விட முடியுமா?
ஒருவரையொருவர் ஓரளவு புரிந்து கொண்டவர்கள்தான் எனினும், கூடப் படித்த பால்ய காலப் பள்ளி நண்பன் மாதிரி அப்படி ஒன்றும் நெருக்கமில்லையே? யார்தான் அவ்வாறு இன்று கூடிக் குலாவிக் கொள்கிறார்கள்? சொந்தச் சகோதரர்களிடமே அது அற்றுப் போய்த்தானே கிடக்கிறது? அதுவாவது காலகாலமாய் பொதுவாய் உள்ள நோய் என்று சொல்லலாம். உறவுகளில் பரவிக் கிடக்கும் தீர்க்க முடியாத வியாதி. இந்தக் குடும்ப அமைப்பில் உள்ள பெண்கள்தான் ஆண்களுக்கிடையேயான அந்த வெப்பத்தைக் குறைக்கிறார்கள்.
வெளி ஆட்களிடம்? இந்த மாதிரியான ஒதுங்கலும், பதுங்கலும் சமீப காலங்களில்தானே அதிகரித்திருக்கிறது? ஒரே தெருவில் பல பிரிவினர்தான் எனினும், இந்த சுயநலம் எங்கிருந்து முளைத்தது? எப்படிக் கிளைத்தது? தாயா பிள்ளையா, மாமன் மச்சானா, அண்ணன் தம்பியா, அக்கா தங்கச்சியா….என்பதெல்லாம் பொய்யாகிப் போனதா? ஒருத்தருக்கொருத்தர் பார்த்துக்கிறதே சரியில்லையேய்யா…!!!
அவரவர் பாடு அவரவருக்கு என்றுதான் இருக்கிறார்கள்? கூட ரெண்டு வார்த்தை பேசி விட்டால் எங்கே ஏதேனும் காரியத்துக்கு என்று வந்து ஒட்டிக் கொள்வார்களோ? உதவிக்கு வந்து நின்று விடுவார்களோ என அஞ்சுகிறார்கள்…! அப்படியிருக்கையில் ஒருவர் விஷயத்தில் இன்னொருவர் தலையிடுவது என்பது எந்த அளவுக்கு சாத்தியம்? வற்புறுத்திக் கூப்பிட்டால் சரி…! இதுதான் லிமிட் என்று நான் இருந்து கொண்டிருக்கிறேன். நாமாய் நெருங்கிப் போனால்தான் விலகிப் போகிறதே? அதை இப்போது தவறு என்று சொல்லாமல் சொல்லிவிட்டுப் போகிறாள் சந்திரா.
கொல்லைப் புறம் பார்த்தேன். அவளைக் காணவில்லை.
இப்டித்தானே வந்தா, என்னாச்சு? – என்றவாறே சுற்று முற்றும் நோக்கினேன்.
வாசல்பக்கம் பார்வை போனபோது எதிரே அடர்த்தியாய் நின்ற நெட்டுலிங்க மரக் கிளைகளுக்கு நடுவே மனோகரன் வீட்டு வாசலில் சந்திராவும், அவரது மனைவி மல்லிகாவும் பேசிக் கொண்டிருப்பது தெரிந்தது.
ரெண்டு பேருக்கும் ரொம்பப் பிடிக்கும். எப்படி? கேட்கக் கூடாது. ஏதோவொருவகையில் ஒட்டிக் கொண்டதுதான். ரெண்டு பேரும் வேலை பார்க்கிறவர்கள். எம்பிளாய்டு லேடீஸ்……அதனால் கூட ஒன்றிப் போயிருக்கலாம். ஒருத்தருக்கொருத்தர் மனசு புரிந்து கொண்டு அட்ஜஸ்ட் பண்ணிப் பேசிப் பேசியே நெருங்கியிருக்கலாம். ஒருவரின் தீவிரக் கருத்துக்கு இன்னொருவர் எதிர்வினை புரியாமலிருக்கலாம். அதுவே பிடித்துப்போய், எந்தக் கருத்தானாலும் பாதுகாப்பாகப் பகிர்ந்து கொள்ளலாம் என்ற நிலை ஏற்பட்டிருக்கலாம். அம்மாதிரியான வெறும் பரஸ்பர வம்பு தும்பற்ற பகிர்தலே இருவருக்குமிடையே நெருக்கத்தை ஏற்படுத்தியிருக்கலாம்.ஒருத்தர வச்சு ஒருத்தருக்கு ஆபத்தில்லையே…! பொதுவாக நட்புகளே இன்று அப்படித்தானே கிளைக்கின்றன. இதில் ஏதோ ஒன்று. அவங்க மாநில அரசு ஊழியர். இவ மத்திய அரசு ஊழியர். அவ்வளவுதான். போதுமா?
சரி, இது இப்போதைக்கு ஓயாது…..நாம சாப்பிடுவோம்…..என்று சாதம் குழம்பு, காய் என எல்லாவற்றையும் தரையில் எடுத்து வைத்துக் கொண்டு சாப்பிடக் கிளம்பினேன். சுட்ட அப்பளம் இருக்கிறதா பார்த்துக் கொண்டேன்.சின்ன வயதில் அது மட்டும்தானே கிடைத்தது. இப்பத்தானே இந்தக் காய், கறி எல்லாம். ஒண்ணைச் சொன்னா ஒண்ணு நினைவுக்கு வரத்தான் செய்கிறது. அதுக்குப் பேர்தான் விழுமியங்களோ…?
இருந்து போடுவதெல்லாம் உறவுஸ் ஒய்ஃப்தான். வேலை பார்ப்பவள் என்றால் நாமே எடுத்துப் போட்டுக் கொண்டு, முடியுமானால் அவளுக்கும் போட்டு, எல்லாம் திரும்ப எடுத்து வைத்து, பற்று இட்டுத் துடைத்து, காரியத்தை முடிக்க வேண்டிதான்.
எனக்கு இந்த டைனிங் டேபிளில் அமர்ந்து சாப்பிடுவது என்பதெல்லாம் பிடிப்பதில்லை. நான் கொஞ்சம் பழமையானவன். அழுத்தமான பிடிப்புள்ளவன். தரையில் அமர்ந்து சம்மணமிட்டு உண்டால்தான் எனக்கு உள்ளே இறங்கும்.
இந்தக் காலத்துல டைனிங் டேபிள் இல்லாத வீடு உண்டா? அது வாங்க மனசு வரல்லை உங்களுக்கு…. என்று எத்தனையோ முறை காய்ச்சியிருக்கிறாள் என்னை. நன்றாகக் கவனியுங்கள். அவளும் வேலைபார்த்தாலும், என்னை மீறி ஒன்று வாங்கிப் புழங்கி விட முடியாது. தேவைகளை நீட்டிக்கொண்டே போனால், வளர்ந்துகொண்டேதானே போகும்? முடிவேது? என்ன கட்டுப்பாடு பார்த்தீர்களா? அதுதாங்க குடும்பக் கட்டுப்பாடு…!!! ஆணாதிக்கம்ங்கிறாங்களே…அதுவும்தானோ?
என்னோட பிசினாறித்தனம் அவளுக்கும் கொஞ்சம் இருக்கும்போல…இல்லைன்னாத்தான் வாங்கியாகணும்னு ஒத்தக் கால்ல நின்னிருப்பாளே…!
என்னோட முதல் மாசச் சம்பளத்துலர்ந்து படிப்படியா நம்ப வீட்டை மார்டனைஸ் பண்ணப் போறேன்….முதல்ல ஒரு அழகான டைனிங் டேபிள்…..
ஐ.டி. சீனியர் சிஸ்டம் இன்ஜினியர் கூறுகிறார் இவ்வாறு. வேற யாரு? எல்லாம் நான் பெத்த பயதான்….எடுத்த எடுப்பில நாற்பதாயிரம், அம்பதாயிரம் சம்பளம் கொடுத்தா பேச மாட்டானா அவன்? முப்பத்து மூணு வருஷம் சர்வீஸ் போட்டு நான் கடைசியா வாங்கின சம்பளம் முப்பதாயிரம்…இவனுங்களுக்கு ஆரம்பமே இப்டீன்னா…? அவன் எப்படி என்னை மதிப்பான்? வாங்கப் போறேன்னு சுயேட்சையாச் சொல்றதுக்கு அப்புறம் என்ன அர்த்தமாம்?
என்னென்ன நடக்கப் போகுதுன்னு நம்மளாலயே ஒண்ணும் சொல்ல முடிலீங்கோ……
சாப்பிட்டு முடித்து கை கழுவியபோது சந்திரா வந்தாள்.
ஆட்டோல போவமேன்னாங்களாம் அவுங்க….இவர்தான் அசடுமாதிரிப் பெட்ரோலைச் செலவழிச்சிட்டு கார்ல கூட்டிப் போய் வந்திருக்காருன்னு சொல்றாங்க…
இவர் எதுவும் கையெழுத்து காலெழுத்துப் போட்டாராமா? – நான் கவனமாய்க் கேட்டேன்.
அதெல்லாம் தெரியாது…..புகார் எழுதிக் கொடுத்திட்டு வந்திருக்காங்க போலிருக்கு….இவர் கூடப் போயிட்டு வந்திருக்காரு அவ்வளவுதான்….
போலீஸ்ல என்ன சொன்னாங்களாம்….?
என்னத்தைச் சொல்வாங்க…..நீங்க சொன்னதைத்தான் சொல்லியிருக்கான் அவனும்…..
என்னன்னு? – காதைக் கூர்மையாக்கிக் கொண்டேன்.
முள்ளுல சேலை விழுந்திடுச்சி…மெதுவாத்தான் எடுக்கணும்னு……
பார்த்தியா….நான் சொன்னது சரியாப் போச்சா? நீ என்னமோ பேசினியே,? அவன் அப்டித்தான் சொல்லுவான்….அதுக்கு வேறே அர்த்தம்…..
என்னது வேறே அர்த்தமா? அப்டீன்னா…?
அப்டீன்னா…அப்டித்தான்…….
புரியறமாதிரிச் சொல்லுங்க…..உங்க பாஷையெல்லாம் எனக்குத் தெரியாது…
அடி இவளே…..அப்டீன்னா…….. போயிட்டு வாங்க….பார்ப்போம்னு அர்த்தம்…..அதை வெளிப்படையாவா சொல்லுவான்….நாமதான் புரிஞ்சிக்கணும்…..?
என்ன சொல்றீங்க…சுத்த அநியாயமா இருக்கு…..ஒருத்தர் வந்து புகார் கொடுத்தா, ஸ்பாட்டுக்கு வந்து பார்த்து என்ன ஏதுன்னு விசாரிக்க வேண்டாமா? ஜனங்களுக்கு இருக்கிற ஒரே நம்பிக்கை காவலும், நீதியும்தானே?
இதுக்கு வர மாட்டாண்டீ…..வந்தா அவன் மாட்டிக்குவான்…..வீட்டுக்கு வந்து டார்ச்சர் கொடுத்தாங்கன்னு குடியிருக்கிறவன் கேசு போட்டான்னா அவனைப் பாதிக்கும் அது…..
அதுக்காக….? அப்புறம் இவனை எப்படித்தான் விசாரிக்கிறதாம்,? வெளியேத்தறதாம்?
அப்டிக் கேளு……ஃபோன் நம்பர் வாங்கி வச்சிட்டிருப்பான்ல…அதுல விரட்டுவான்…….அவ்வளவுதான்…..அதுதான் போலீஸ் ஆக் ஷன்……ஃபைவ் உறன்ட்ரட்….
கேட்கலைன்னா…..?
கேட்கலைன்னா கேட்கலைதான்…..அவனாக் காலி பண்ற போதுதான்….வாடகைச் சட்டம், குடியிருக்கிறவனுக்குத்தாண்டீ சாதகமாயிருக்கு…..
நாலு ஆளைக் கூட்டியாந்து சாமான்களையெல்லாம் எடுத்து வெளில வீசிப்புட்டு, வீட்டு ஆளுகளையும் வெளியேத்தி, பூட்டி சாவியைத் தூக்க எவ்வளவு நேரம் ஆகும்?
என்னடீ இப்டியெல்லாம் பேசறே? யார் சொல்லிக் கொடுத்தா உனக்கு இதெல்லாம்….வேலை பார்க்கிற இடத்துல கத்துக்கிட்டியா?
நாலு பேர் சொல்றதில்லையா? அது கிடக்கட்டும்.பதில் சொல்லுங்க….அப்டிச் செய்தா என்னாகும்?
ஒண்ணும் ஆகாது….கலகம் வெடிக்கும்…. அதல்லாம் பாபுராவ் மாதிரி ஆளுங்களுக்கு லாயக்கில்லை. அதுக்கு ரொம்ப தைரியம் வேணும்…பிரச்னை வெடிச்சா சரிக்கட்டுற திறமை வேணும்….…யாரும் செய்ய மாட்டாங்க… பாபுராவுனால எதுவும் முடியாதுன்னு தெரிஞ்சிதானே குடி வந்திருக்கான் அந்தாளு… நாப்பது, அம்பது வாங்காம நகர மாட்டாண்டீ…..
என்னங்க சொல்றீங்க…? – அதிர்ச்சியடைந்தவளாய்ப் பதறினாள் சந்திரா.
நீ ஏண்டீ பதர்றே? அதுதான் உண்மை…..இதுக்கு ரெண்டே வழி…அதத்தான் நான் அந்தம்மாகிட்டச் சொன்னேன்…..
என்னன்னு?
என்ன நொன்னண்ணு? முதல்ல வந்து நம்மகிட்டதான சொன்னாங்க…அப்ப சொல்லலை? நீயுந்தானே பக்கத்துல இருந்தே? என்ன கவனிச்சே?
சரியாக் கேட்கலை…திரும்பத்தான் சொல்லுங்களேன்…..
பேசாம ஒரு வக்கீலைப் புடிச்சி கோர்ட்ல கேசைப் போட்டுட்டு கம்முனு உட்கார்ந்துக்கணும்….அது எப்படியும் ஒரு வருஷம் ஆயிப் போகும்…. இது ஒரு வழி…இன்னொண்ணு….குடியிருக்கிற அந்த ஆளையே புடிச்சி, உட்கார்த்தி வச்சுப் பேசி….சமாதானம் பண்ணியோ..கெஞ்சியோ…எதோஒண்ணு செஞ்சு, அவனுக்கு ஒரு தொகையைக் கொடுத்து குடும்பத்தையும், சாமான்களையும் வெளியேத்தி, வீட்டைப் பூட்டி சாவியைக் கைப்பத்தணும்….
என்ன சொல்றீங்க…நீங்க…? அவனே ரெண்டு மாச வாடகை தர்லயாமே…? அட்வான்சுல கழிச்சாச்சுங்கிறாங்க….?
என்ன ஆதாரம்? அட்வான்சு வாங்கினதுக்கு எழுதிக் கொடுத்திருக்காங்களா? வெறுமே எழுதிக் கொடுத்திருக்காங்கன்னே வச்சிக்குவோம்….மாதா மாதம் வாடகைக்கு ரசீது கொடுத்திருப்பாங்களா? யார்தான் செய்றாங்க?….அதுதானே அங்க வீக்னஸே…? நல்லபடியா ஓடுற மட்டும் ஒண்ணுமில்லே…பிரச்னைன்னு வந்திட்டா…சிக்கல்தான்….!! இந்த மாச வாடகைவரை கொடுத்துட்டேம்பான்…துணிஞ்சு சொல்லுவான்..எனக்கு அட்வான்சைத் திருப்பித்தாங்கன்னு டிமான்ட் பண்ணுவான்…கோர்ட் கேசுல இதெல்லாம் அவனுக்குத்தான் சாதகம்… இந்த டாக்குமென்ட்டெல்லாம் சரியா இருந்தாத்தான் வீட்டுச் சொந்தக்காரனே ஜெயிக்க முடியுமாக்கும்….இத்தனை வில்லங்கம் இருக்கு இதுல….நீ என்னடான்னா கூடப் போகல….தேடப் போகலைங்கிற……நான் ஒண்ணு கேட்கிறேன்…தப்பா நினைக்கப் படாது…..சொல்லட்டுமா….?
சொல்லுங்க…?
வீட்டை வாடகைக்கு விடுற போது நம்மளக் கேட்டுட்டா விட்டாங்க….? இப்டியும் ஒரு கேள்வி வருதில்ல? என்னமோ பேசுறீயே….?
இது ரொம்ப அநியாயங்க? நீங்களா இருந்தா அப்டி செய்வீங்களா? நம்ப வீட்டை வாடகைக்கு விட நாம யார்ட்டக் கேட்கணும்? நல்லாயிருக்கு கதை?
நான் கேட்கலைடி…எனக்கு இதுக்கெல்லாம் வாய் வராது. சவரணையாப் பேசத் தெரியணும்…அதுக்கு ஒரு சாமர்த்தியம் வேணும் மனுஷனுக்கு. அதனாலதான் வாடகைக்கே வேண்டாம்னுட்டு, சைடு போர்ஷன்ல கதவை எடுத்துட்டு சுவர் எழுப்பி அடைச்சிட்டேன்….நம்ப சக்தி அவ்வளவுதான்…ரொம்ப நெருக்கினா போலீசே இதத்தான் கேட்பான்…போய்ச் சோலியப்பாரும்பான்….
ஏங்க, என்னங்க சொல்றீங்க…? போலீஸ் ஸ்டேஷன்லயும் இதத்தான் கேட்டானாம்ங்க…..? – வாயடைத்துப் போய், ஆவென்று திறந்தமேனிக்கு, என்னையே பார்த்துக் கொண்டிருந்தாள் சந்திரா. இவனென்ன அப்படியே சொல்கிறான் என்று நினைத்திருக்கலாம்.
உலக அனுபவத்த புத்தகங்களும் நிறையக் கத்துக் கொடுக்குதுல்ல…!!! புத்தகப் புழுன்னு ஏளனமாப் பேசுறாளே…சரியா?
வாய்க்குள்ள ஈ போயிடப் போகுது…மூடு….என்றேன்.
இதப் பொது விஷயமாக் கொண்டு போக முடியாதா? நம்ப சங்கத்துல சொல்லி ஏதாச்சும் செய்தா என்ன?
அதெல்லாம் முடியாது….விஷயம் பொதுவாகணும்னா அவன் ஏதாச்சும் கலாட்டா கிலாட்டா பண்ணனும்…தெருவுல இறங்கிக் கண்டமேனிக்குக் கத்தறது, கெட்ட வார்த்தை பேசுறது, கல்லை விட்டு எறியறது, க்ளாஸ் உடைக்கிறது…..இப்டி…பொது அமைதிக்கு பங்கம் ஏற்படுத்தணும்..அதுக்கு, தெரு சாட்சியா நிக்கணும்… குடியிருப்புப் பகுதில நியூசன்ஸ்னு சொல்லி புக் பண்ணிப்புடலாம். அவன்தான் பூனை மாதிரி வர்றான், போறானே…? சகலமும் அறிஞ்சவன் போலிருக்கு…பெரிய ஞானிதான்….நல்ல பொழப்பு….
அதத்தான் அந்தம்மா செய்யச் சொல்றாங்க……!
அதெப்படீடி முடியும்…? எப்டியாவது அவனைக் காலி பண்ண வைக்கணும்ங்கிற ஆதங்கத்துல அப்டிச் சொல்றாங்க… அவங்க நம்ம இடத்துல இருந்தா செய்வாங்களா? யோசிக்கணும்ல….அப்டியெல்லாம் தடாலடியா யாரும் இறங்கிட முடியாது…..
பாவந்தான்…இல்லே…!!! – சந்திராவின் முகம் சூம்பிப் போயிருந்தது.
எனக்கு அவளைப் பார்க்கப் பாவமாய் இருந்தது.
எதிர் வீட்டில், மாடியில் குடி வந்திருந்த அந்த ஆள் படு சமத்தாகப் படியிறங்கி, நல்ல பிள்ளையாய், பதவாகமாய் ரோட்டுக்கு வந்து, வெளியே நிறுத்தியிருந்த தன் டூ வீலரை எடுத்துக் கொண்டு சாவகாசமாய்க் கிளம்பிக் கொண்டிருந்தான். அவனுக்கும் நிறைய வேலையிருக்குதான்….!!! உலகம் எல்லோருக்குமாய்த்தானே இயங்கிக் கொண்டிருக்கிறது.
இப்படித்தான் எந்த அதிர்ச்சியும் இல்லாமல், எந்தச் சலனமும் இல்லாமல், தானாக் கனிஞ்சு வரட்டும் என்று, தினசரி காரியார்த்தமாய் அவன் போய் வந்து கொண்டிருக்கிறான். அந்த வீட்டில் பெண்மணிகளும் இருக்கிறார்கள், அவனுக்கு உகப்பாய் இருக்கும் இடம் தெரியாமல்..
சத்தியமாய்ச் சொல்கிறேன். அந்தக் குடியிருப்புக்காரன் இன்றுவரை என்னை ஒரு முறை கூடத் தலை நிமிர்ந்து பார்த்ததில்லை. அம்புட்டு மரியாதையோ என்னவோ…! அத்தனை பணிவு, அடக்கம். அவன் மூஞ்சியும்கூட எனக்குத் தெரியாது…நிமிர்ந்தால்தானே…?
நான் மாட்டியிருந்தாலும் அம்பேல்தான்…! கதை கந்தல்தான். அவனின் இருப்பில் எனக்குத் தெளிவாய்ப் புரிந்தது இதுதான்…!!
அடக்கம் அமரருள் உய்க்கும் …எங்கும் பயன்படுத்தலாம். அடேயப்பா…! அது இதுதானோ…!!
பாவம், பாபுராவும் அவர் மனைவி பத்மாவதியும்…,
நாம ஏன் அவனுக்குத் துட்டுக் குடுக்கணும்? எவன் காசை எவனுக்கு வாரி விடறது? நல்லாயிருக்கே கதை…அந்த இன்ஸ்பெக்டர்ட்ட நான் எல்லாம் சொல்லியிருக்கேன்….நல்ல மனுஷனாத்தான் தெரியறார்…எல்லாம் பொறுமையாக் கேட்டுக்கிறார்…நிச்சயம் ஏதாவது செய்வார்….நான் இவனை வெளியேத்தறேனா இல்லையா பாருங்க…?..பத்மாவதியின் பக்காவான வார்த்தைகள் இவை. பெண்மையின் உறுதி பல இடங்களில் வென்றிருக்கிறதையா…!
அவர்கள் காத்துக் கொண்டிருக்கிறார்கள்.
அவருக்கும், எனக்கும், பாதிக்காத ஏதாச்சும் வேறு நல்வழியுண்டா உதவ? இதுதான் என் வேண்டுகோள்…! யாராச்சும் கொஞ்சம் சொல்லுங்களேன்….!! மனசு கிடந்து அரிக்கிறதைய்யா…!!!
———————————
- தினம் என் பயணங்கள் -33 என்னால் ஒரு நல்ல காரியம்
- பூதக்கோள் வியாழனின் துணைக்கோள் ஈரோப்பா, பூமியைப் போன்று நில நடுக்க அடித்தட்டு நகர்ச்சி [Plate Tectonics] உள்ளது.
- உல்லாசக்கப்பல் பயணம் (ஆசிரியர் கிருத்திகா)
- பெண் எழுத்தாளர்களுக்கான திருப்பூர் அரிமா மு.ஜீவானந்தம் இலக்கியப் போட்டியில் ஜெயந்தி சங்கருக்கு 2 பரிசுகள்
- “கையறு நிலை…!”
- கடவுளும் வெங்கடேசனும்
- ஜெயந்தி சங்கர் சிறுகதைகள் நூலுக்கு கு.சின்னப்பபாரதி இலக்கிய விருது
- முக்கோணக் கிளிகள் (பெரிதாக்கப்பட்ட நெடுங்கதை) படக்கதை – 21
- ஆனந்த பவன் [நாடகம்] வையவன் காட்சி-5
- வால்ட் விட்மன் வசனக் கவிதை – 92
- கம்பம் பாரதி தமிழ் இலக்கியப் பேரவை சிறந்த நூல்களுக்கு பரிசளிப்பு 2014
- “மூட்டை முடிச்சுடன்….”
- நினைவிருக்கும் வரை நிலைத்திருக்கும் பெயர் – சு.கிருஷ்ணமூர்த்திக்கு அஞ்சலி
- வீரனுக்கு வீரன்
- எல்லை
- புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்
- எஸ்.ராமகிருஷ்ணன் பங்கேற்ற “அரேபிய இரவுகளும் பகல்களும்” புத்தகம் பற்றிய கலந்துரையாடல்
- தொல்காப்பியம் கூறும் உயிர் மரபுகள்
- ‘மேதகு வேலுப்போடி’
- கோடி சிறுகதை தொகுப்பில் மன உணர்வு – பண்பாடும் மன உணர்வும்
- பாவண்ணன் கவிதைகள்
- கபுசேனபூர் பேருந்து நிறுத்தத்தில் ஒரு நடுக்கம்
- வாழ்க்கை ஒரு வானவில் – 20
- தொடுவானம் 33. அகர முதல எழுத்தெல்லாம்
- நொண்டி வாத்தியார்