தமிழின் முதல் இணைய வாரப்பத்திரிகை

25 அக்டோபர் 2020

எல்லை

Spread the love

சோழகக்கொண்டல்

கடலாழத்து
நீருக்குள் இருக்கும்
குடுவைக்குள் இருக்கும்
நீருக்குள்
மூன்று மீன் குஞ்சுகள்

முதல் குஞ்சு
அதே குடுவையில் பிறந்தது
இரண்டாவது குஞ்சு
அதே போல் இருக்கும் சிதைந்துவிட்ட
வேறொரு குடுவையில் பிறந்தது
மூன்றாவது குஞ்சு
குடுவைகளையறியாத
பாறையிடுக்கில் பிறந்தது

இந்த குடுவையின்
அடித்தளத்தில் தொடங்கும் கடல்
மிக நீண்டது –
அதன் இருள்
குடுவையின் இருளைப்போல
பன்மடங்கு கரியது என்றது முதல்குஞ்சு

நீண்டு பரந்த கடலின்
ஒரு புள்ளியில் கிடக்கிறது
ஒளி நுழையாத அடியாழத்தில்
இந்த குடுவையென்றது
மூன்றாவது குஞ்சு

சிறிய குடுவையின்
சிறிய இருள்போல்
பெரிய கடலில்
பெரிய இருளோ என்று குழம்பிய
இரண்டாவது குஞ்சு
எதுவூம் பேசாமல்
குடுவையின் சுவரைப்
பற்றிக்கொண்டது

ஆத்திரத்தோடு குடுவையின்
இருளாழத்தில் பாய்ந்தது முதல்குஞ்சு
தர்க்கத்தில் இணைந்து
தாவிப் பாய்கையில்
வெளி விளிம்போடு நின்றது
இரண்டாவது குஞ்சு
கடலுக்குள் சுழன்று சுழன்று
நீந்திக்காட்டியது
மூன்றாவது குஞ்சு

நீ குடுவையை அறியாததால்
வெளியே பாய்கிறாய் என்று
முதலும்
குடுவையில்லாததால்தான்
உள்ளே நுழைகிறாய் என்று
இரண்டாவதும் சொல்ல
வார்த்தையிழந்தது மூன்று

எனக்குக் குடுவையையே தெரியும்
எனவே நீ சொல்வது
உண்மையில்லை என்று
முதலும்
எனக்கே எதுவூம் தெரியாததால்
உனக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை
என இரண்டாவதும் சொல்ல
மீண்டும் குடுவையிழந்தது
மூன்றாவது குஞ்சு.

– சோழகக்கொண்டல்
7 செப்டம்பர். 2014

Series Navigationவீரனுக்கு வீரன்புறநானூற்றின் வழி அறியலாகும் ஆள்வோருக்கான அறிவுரைகள்

Leave a Comment

Archives