அளித்தனம் அபயம்

This entry is part 8 of 23 in the series 30 நவம்பர் 2014

இராமபிரானின் தூதனாக இலங்கை சென்ற சிறிய திருவடியாகிய ஆஞ்சநேயர் அசோகவனத்தில் தவம் செய்த தவமாம் சீதாபிராட்டியைக் கண்டார். பின் அசோகவனத்தை அழித்தார். இலங்கையைத் தீக்கிரையாக்கி அயோத்தி வள்ளலை அடைந்தார்.
எம்பெருமானிடம் “கண்டனன் கற்பினுக்கணியைக் கண்களால்’ என்று மாருதி கூறினார். அண்ணனுக்கு மொழிந்த நீதிகள் பயனளிக்காததால் வீடணன் இலங்கையை விட்டு நீங்கி இராமபிரானிடம் அடைக்கலமானார்.
பின்னர் சுக்ரீவனும், அனுமனும், வீடணனும் உடன் வர இராம இலக்குவர் இருவரும் இலங்கையை அடைய வேண்டி கடற்கரையை அடைந்தனர்.
அப்பொழுது வீடணன் “பெருமானே, இந்தக் கடலானது மறைந்துள்ள உன் தன்மையை முழுதும் அறியும். மேலும் உமது மரபில் முன்தோன்றிய சகரால்தான் இது தோண்டப்பட்டது. எனவே இக்கடல் அன்புடன் நீ வேண்டும் வரத்தைத் தரும். இக்கடலை நாம் கடந்து செல்ல வழி விடுமாறு இதனிடம் நீர் வேண்டுவாயாக” என்று கடலைக் கடக்க வழி கூறினான்.
இராமபிரான் உடனே வருணனை வேண்டத் தொடங்கினார். இராமபிரான் வருணனிடம் வேண்டியதைக் கமபர் “கருணையம் கடல் கிடந்தனன் கருங்கடல் நோக்கி வருண மந்திரம் எண்ணினான் விதிமுறை வணங்கி” என்று பாடுவார்.
அதாவது கருணைக் கடலான இராமன் கரிய கடலை நோக்கி விதிமுறைப்படி வருண மந்திரத்தை எண்ணியபடியே தருப்பைப் புல்லில் அமர்ந்திருந்தான்.
இத்தகைய முறையில் ஏழு நாள்கள் கழிந்தன. வருணன் வரவில்லை. ‘சங்கு தங்கு தடங்கடல் துயில் கொண்ட தாமரைக் கண்ணினான்’ என்று திருமங்கையாழ்வார் அருளிச் செய்த தாமரைக் கண்கள் சினம் கொண்டு சிவந்தன. நீண்ட புருவங்களும் வில்லைப்போல் வளைந்தன.
:வில்லைத் தருவாயாக” என்று வில்லை இலக்குவனிடமிருந்து வாங்கிய இராமபிரான் கடலின் மீது கணைகள் விடுத்தார். பல அம்புகள் பாய்ந்தும் வருணதேவன் வரவில்லை. எனவே இராமபிரான் பிரம்மாத்திரத்தை மந்திரித்து விடத் தொடங்கினார். உலகம் முழுவதற்கும் வெப்பம் பரவியது. எல்லா உயிர்களும் அஞ்சின.
திருமழிசை ஆழ்வார் தன் திருச்சந்த விருத்தத்தில் இராமபிரான் தன் கணைகளை விடுத்தவுடன் கடல் நீரே கொதிக்கத் தொடங்கி விட்டது என்பார். “வேலைவேவ வில் வளைத்த வெல்சினத்த வீர” என்பது அவர் வாக்கு. அவரே திருச்சந்த விருத்தம் 50-ஆம் பாசுரத்தில் திருவரங்கத்தை மங்களாசாசனம் செய்லையில் இப்படிப் போற்றுவார்.
”வெந்திரைக் கருங்கடல் சிவந்து வேவ முன்னோர் நாள்
திந்திறல் சிலைக்கை வாளி விட்ட வீர்ர் சேரும் ஊர்
எந்திசைக் கணங்களும் இறைஞ்சியாடு தீர்த்த நீர்
வண்டிரைத்த சோலைவேலி மன்னு சீர் அரங்கமே”
“வெண்மையான அலைகளை உடைய கறுத்த கடலானது, அம்பிலிருந்து கிளம்பும் நெருப்பாலே சிவந்து, வெந்து போகும்படி மிக்க வலிமையுடைய கோதண்டத்திலிருந்து அம்புகளை செலுத்திய பெரு வீர்னான ஸ்ரீராமன் வாழும் திவ்ய தேசம் எது என்றால் எட்டுத் திக்கிலுமுள்ள மக்கள் கூட்டமும், திருவடி தொழுது தீர்த்தமாடுகிற, தூய்மையான தீர்த்தத்தையுடையதும், வண்டுகள் ஒலிக்கிற சோலைகளை வேலியாக உடைய அழகு பொருந்திய திருவரங்கமாகும்” என்பது இதன் பொருள்.

நிலம், நெருப்பு, காற்று, வானம் ஆகிய மற்ற பூதங்கள் நீர்ப்பூதமாகிய வருணனை இகழ்ந்துரைத்தன. தீய்ந்து போன தலையுடன், வெந்து அழிந்து உருகிய உடலுடன் புகைப்படலத்தில் வழிதடுமாறி வருணன் குருடரைப் போல வந்தான்.
அந்த வருணன் வந்ததைக் கம்பர்,
”வந்தனன் என்ப மன்னோ மறிகடற் கிறைவன் வாயில்
சிந்திய மொழியன் தீய்ந்த சென்னியன் திகைத்த நெஞ்சன்
வெந்து அழிந்து உருகும் மெய்யன் விழும்புகை படலம் மின்ன
அந்தரின் அலமந்து அஞ்சித் துயருழந்து அலக்கன் உற்றான்”
என்று பாடுகிறார். வந்த வருணன் இராமபிரானை நோக்கி “குற்றம் இல்லாத தலைவ! நீயே சினம் கொண்டால் அதிலிருந்து காத்துக் கொள்வதற்கு உன் திருவடி அல்லாமல் வேறு எது உள்ளது? அடைக்கலம் அடைக்கலம் நான் உனக்கு அடைக்கலம்” என்று பலமுறை கூறினான். மேலும் “ஆழி நீ! அனலும் நீயே! அல்லவை எல்லாம் நீயே! ஊழி நீ! உலகும் நீயே! அவற்றுறை உயிரும் நீயே!” என்று போற்றினான்.
மேலும் “ஏழாம் கடலில் சுறாமீன்களுக்கிடையே நடந்த போர்ச்செயலை விலக்கிவிடப் போயிருந்தேன். நின் கட்டளையை அறியாதவானாய் இங்கு வந்தேன்” என்றும் அவன் கூறினான்
இராமனும் சினம் தணிந்தான். “ஆறினாம் அஞ்சல் உன்பால் அளித்தனம் அபயம்” என்றான். அடைக்கலம் என்று வந்தவரைக் காத்தருளும் கருணைக்கடல் அன்றோ இராமபிரான்.

Series Navigationஊழிஆனந்த பவன் நாடகம் வையவன் காட்சி-15
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *