கிளி ஜோசியம்

This entry is part 15 of 23 in the series 21 டிசம்பர் 2014

சீட்டாட்டம் எங்காவது நடப்பதை வழியில் பார்த்தால் சிலர் அப்படியே அங்கு நின்று விடுவார்கள். அவர்கள் ஆடாவிட்டாலும் அதைப் பார்த்துக் கொண்டிருக்கின்ற பைத்தியம் அவர்கள். இந்த சீட்டுப் பைத்தியங்களைப் போலவே சில கிரிக்கெட் பைத்தியங்களும் உண்டு. கிரிக்கெட் ஆடினாலோ அல்லது அதைப் பற்றி யாராவது பேசிக் கொண்டிருந்தாலோ அவை அப்படியே அவற்றில் மூழ்கிப் போய் விடும். அதுபோல குமார் ஒரு ஜோசியப் பைத்தியம்.
யாராவது கைரேகை பார்ப்பவர்களோ அல்லது கிளி ஜோசியக்காரர்களோ அவர்கள் தெருவின் வழியாய் வந்து விட்டால் அது ஜோசியக்காரருக்குப் பொன்னான நாள்தான். குமார் தான் பார்ப்பதோடு தன்குடும்பத்தில் இருக்கும் எல்லாருக்கும் பார்த்து விடுவான். அதற்காகவே இரண்டு அல்லது மூன்று மாதங்களுக்கொருமுறை அவன் தெருவிற்கு வரும் ஜோசியக்காரர்களும் உண்டு. ஜோசியம் பார்ப்பதற்காகவே குமார் கோயில் திருவிழாவிற்குச் செல்வதும் உண்டு. அங்குதானே ஜோசியக்காரர்கள் நிறைய பேர் உட்கார்ந்திருப்பார்கள். இந்தக் கதையைப் பொருத்த வரை குமாரைப்பற்றிய அறிமுகம் இதுவரை போதும் என நினைக்கிறேன்.
அடுத்து பாலா என்றழைக்கப்படும் பாலசுப்பிரமணியன். இவர் காவல் துறையில் திறம்படப் பணியாற்றி ஆறு மாதங்களுக்கு முன்புதான் ஓய்வு பெற்றார். தன் பணிக்காலத்தில் எந்தவொரு இடைப் பணி நீக்கமும் இல்லாமல், காவல் நிலையச் சாவு, கற்பழிப்புகள் இல்லாமல், தன் மீது எந்த வழக்கும் இல்லாமல், ஓய்வு பெற்று முழு ஓய்வூதியம் வாங்குவதாலேயே திறம் படப் பணியாற்றினார் என்று சொன்னேன். இதனாலேயே இவருக்கு அவர் துறை சார்ந்தவர்கள் கொடுத்த பட்டம்தான் “ பொழைக்கத் தெரியாத மனுசன் “
அடுத்து இந்தக் கதையைச் சொல்லிக் கொண்டிருக்கும் நான். என்னைப் பற்றி நானே அதிகம் சொல்வது தற்புகழ்ச்சியாகி விடும் என்றாலும் ‘ தன்னயே புகழ்தலும் தகுமாம் புலவோர்க்கே ’என்பதால் என்னைப் பற்றிச் சொல்லித்தான் ஆக வேண்டும் நான் முதுகலை தமிழ் படித்து வேலையில்லாமல் திரிந்து கொண்டிருப்பவன். திரிதல் என்பது இந்த இடத்தில் கவிதை எழுதுதல், பட்டி மன்றம் பேசல், இலக்கியக் கூட்டங்களுக்கு செல்லுதல், கூட்டங்கள் நடத்துதல் என்று சற்று விரிவாகப் பொருள்படும்.
கொள்கையில்லாமல் ஒன்று சேரும் சில அரசியல் கூட்டணி போல சற்று வித்தியாசமான குணாதிசயங்கள் கொண்ட நாங்கள் மூவரும் வயது வித்தியாசமின்றி நண்பர்களானது ஒருகதை. ஆனால் கதைக்குள் கதையாக அது இங்கு தேவையில்லை.
இந்தக் கதை நடக்கும் காலம் பற்றிச் சொல்லியாக வேண்டும் அல்லவா? அது ஆனி மாதம் முதல் வாரம். தமிழ் மாதம் யாருக்குத் தெரியும் என்று கேட்கிறீர்களா? சரி; அப்போது ஜூன் மூன்றாவது வாரம் நடந்து கொண்டிருந்தது. ஆனால் மிகவும் வெக்கையாக இருந்தது. எல்லாரும் கத்தரியே பரவாயில்லை இப்படி தகிக்கிறதே என்று சொல்லிக் கொண்டார்கள். அந்த அளவுக்கு காலை ஏழு மணிக்கே தொடங்கிய சூரியனின் ஆட்டம் மாலை ஐந்து மணி வரை நீடித்தது. அதுவும் மாலைக்காற்று தொடங்காத நாள்களில் ஆறு மணிவரை கூட வெயிலின் தாக்கம் இருந்தது. இருந்தாலும் மக்கள் பழகிக் கொள்ள ஆரம்பித்து விட்டனர். இரு சக்கர வாகன ஓட்டிகள் தங்கள் முகத்தை அனல் காற்றிலிருந்து காப்பாற்ற முகத்தைத் துணியால் மூடிக்கொண்டனர். இள்நீர் வியாபாரம் முமுரமாக நடந்தது.
அதுவும் அன்று தாங்க முடியாத அளவுக்கு சூடு இருந்ததால் குமாரிடம் பேசினேன்.
”என்னா குமாரு? வெயிலைத்தைத் தாங்கவே முடியல”
”ஆமாம்ப்பா; நேத்தியவிட இன்னிக்கு அதிகம்னு தெனம் சொல்லிகிட்டுதான் வரோம்; வெளியில தல காட்ட முடியல; என்னா செய்யறது?”
”அதுக்குதான் ஒன்கிட்ட பேசலாம்னு பாத்தேன்; வேல ஒண்ணும் இல்லயே?”
”ஏன் கேக்கறெ? சொல்லு; வேல ஒண்ணும் இல்ல; நாய்க்கு வேல இல்ல; நிக்க நேரம் இல்ல கதைதான்”.
“இல்ல; பீச்சுக்குப் போய் வரலாமா? அதுக்குதான் கூப்பிட்டேன்”.
குமார் சிரித்துக் கொண்டே கேட்டான். ”என்னா நீ கூட பீச்சுன்னு சொல்லறே? கடற்கரைன்னு தானே சொல்லுவே?”
“எல்லாம் ஒங்களோட பழகினதால வந்த வெனதான். சரி; தயாராயிரு வண்டி எடுத்துகிட்டு வரேன்”.
கம்மியம்பேட்டை பாலம் தாண்டும்போது வீசிய காற்றில் அனல் பறந்தது. இத்தனைக்கும் அப்போது மணி ஐந்தாகி விட்டது. பக்கத்தில் கட்டப்பட்டுக் கொண்டிருந்த ஐந்து அடுக்கு விடுதியின் உச்சியில் வெயிலில் நின்று கொண்டு சிலபேர் வேலை செய்துகொண்டிருந்தனர். ஒற்றை மாட்டு வண்டியில் ஏற்றப்பட்டிருந்த மூட்டைகளை தன்னால் முடிந்த மட்டும் மாடு இழுத்துக் கொண்டு சென்றது. எதைப் பறியும் கவலைப்பட வேண்டிய அவசியமில்லாத மாணவப் பருவத்தினர் பள்ளி முடிந்து மிதிவண்டியில் திரும்பிக் கொண்டிருந்தனர். மருத்துவமனை வாசலில் நின்று கொண்டிருந்த குமாரை ஏற்றிக் கொண்டு செல்லும்போது வீசிய காற்று சற்று குளுமையாக இருந்தது.
”மாவட்ட ஆட்சியர் சாலை வழியாகப் போகலாமா” என்று கேட்டபோது குமர் சொன்னான்.
”இல்ல; புதுப்பாளையம் வழியாப்போ. அங்க முக்குட்ல பாலா நிக்கறாரு. அவரையும் கூட்டிக்கிட்டு போயிடலாம்.”
”ஊருக்குப் போனவரு வந்திட்டாரா? தெரியாதே; தெரிஞ்சிருந்தா கூப்பிட்டிருப்பனே”
“நானும் சந்தேகத்துலதான் கூப்பிட்டேன் காலைலதான் வந்தாராம்; ஒடனே கெளம்பி வரேன்ன்னு சொல்லிட்டாரு”
பாலா அவர் வண்டியில் தயாராக இருந்தார். கடற்கரைக் காற்று இப்போதுதான் வீசத் தொடங்கி இருந்தது. கடற்கரைச் சாலை வழக்கத்தை விட சற்று கூட்டமாக இருந்தது. வண்டிகளை நிறுத்தும் இடத்தில் விட்டுவிட்டு நடக்கத் தொடங்கினோம்.
”என்னாங்க வேலூர் போன காரியம் என்னாச்சு?” என்று கேட்டேன் பாலாவைப் பார்த்து.
“எதிர்பார்த்ததைவிட சுலபமா முடிஞ்சு போச்சு. பரவாயில்ல”
”எப்படிங்க?“ என்று கேட்டேன் ஆச்சரியத்துடன். வேலூரில் பாலா அவருக்குச் சொந்தமான ஒரு வீட்டை வாடகைக்கு விட்டிருந்தார். குடியிருந்தவரை காலி செய்யச் சொன்னபோது அவர் மறுத்ததோடு ஐந்து வருஷமாக இழுத்தடித்தார். அத்துடன் வீட்டையே தன் பெயருக்கு எழுதித் தருமாறு கேட்டார். அவர் கொஞ்சம் அரசியல் செல்வாக்கும் உள்ளவர். பாலாவும் பொறுத்துப் பொறுத்துப் பார்த்தார். போன வாரம் ஒரு முடிவோடுதான் வேலூர் போனார்.
”கடைசியில எல்லாம் நீங்க சொன்ன வழிதான். அங்க இருக்கிற எஸ்.பி எனக்கு ரொம்ப தெரிஞ்சவரு; அதால அவரு ஆபீஸ்ல போய் ஒக்காந்துகிட்டேன். எஸ்.பி குடியிருக்கிறவரை வரச் சொன்னாரு. ஒண்ணும் அதிகமா பயமுறுத்தல; என்னக் காட்டி இவர் எனக்கு வேண்டியவரு. என்வீடு மாதிரிதான் அது. ஒண்ணும் தகராறு செய்யாதீங்க; அப்புறம் நான் பழைய கேஸெல்லாம் நோண்ட வேண்டியிருக்கும்னாரு; ஒடனே அவரு மறு வார்த்தை பேசாம ”அய்யா நான் அடுத்த வாரமே காலி செஞ்சுட்டு சாவியை ஒங்க கிட்டயே கொடுத்திறேன்”னு சொல்லிட்டாரு.”
“ஆடிக் கறக்கிற மாட்ட ஆடிக் கறக்கணும்; பாடிக் கறக்கற மாட்ட பாடிக் கறக்கணும்னு சும்மாவா சொன்னாங்க” என்றான் குமார் சிரித்துக் கொண்டே.
“வேலையில இருந்தவரை அதிகாரத்தைச் சொந்த காரியத்துக்கு உபயோகப்படுத்த மாட்டேன்னு துணிஞ்சு நின்னீங்க; இப்ப முடியலெயே பாத்தீங்களா?”
பாலாவின் முகம் வாடி விட்டது. ”சில நேரம் சரியான காரியத்தை முடிக்க தப்பான வழியிலதான் போக வேண்டியிருக்கிறது. என்னா செய்யறது? நான் வேலையில இருந்தவரை ஒருத்தருக்கும் எந்தக் கெடுதலும் செய்யல. அதோடு யாரையும் என் உடுப்பைக் காட்டி பயமுறுத்தல தெரியும்ல” என்றார்.
“என்னாபாலா? ஒங்களைப் பத்தி எங்களுக்குத் தெரியாதா? அவன் சும்மா ஏதோ வெளையாட்டுக்கு சொல்றான்” என்று சமாதானம் சொன்னான் குமார்.
சிறு பிள்ளைகள் குதிரைகள் மீதும், ஒட்டகங்கள் மீதும் சவாரி செய்தனர். பழச்சாறு பலூன் கடைகளில் கூட்டம் அதிகமாக இருந்தது. பஜ்ஜி, போண்டா வியாபாரமும் நடந்து கொண்டிருந்தது. மிதிவண்டியில் ஒருவன் பஞ்சு மிட்டாய் விற்றுக்கொண்டிருந்தான். ஒரு கடையில் பெரிய அப்பளமும் சூடாக சமோசாவும் போட்டுக் கொண்டிருந்தனர். வயது வித்தியாசமின்றிப் பெரியவர்களும் சிறுவர்களும் கடலை நோக்கிப் போய்க்கொண்டிருந்தனர்.
’குமாரு, வா, இப்படியே வடக்கால போய் ஒக்காரலாம்; கூட்டம் அங்கதான் கொறவா இருக்கு” என்றேன். குமாரோ சிரித்துக் கொண்டே, “தெக்காலயும் கூட்டமும் கொறவாத்தான் இருக்கு; அங்கயும் போகலாம்” என்று பதில் கூறினான்.
“அதுக்கு ஏன் சிரிக்கறே” என்று ஒன்றும் புரியாமல் கேட்டார் பாலா.
“அங்கதான் போகணும்னு ஏன் சொல்றான் தெரியுமா? அங்க பாருங்க” என்று நான் கையை நீட்டிச் சுட்டிக் காட்டினேன். அப்போதுதான் பாலா அவர்களைப் பார்த்தார். நான் காட்டிய திசையில் சிறிது தூரத்தில் இரண்டு கிளி ஜோசியக்காரர்கள் தங்கள் பெட்டியுடன் உட்கார்ந்திருந்தனர். அவ்ர்கள் முன்னால் யாரும் இல்லை.
”ஓ, அப்படிப் போகுதா கதை” என்று சிரித்த பாலாவும், குமார் ஆசையைக் கெடுப்பானேன்; அங்கெயே போகலாம்” என்றார். அருகே சென்றோம். பத்தடி இடைவெளியில் ஜோசியக்காரர் இருவரும் உட்கார்ந்திருந்தனர். ”வாங்க; வாங்க” என்று நீண்ட நாள் பழக்கப்பட்டவர் போல் அழைத்தவரிடம் போய் அவர் எதிரில் மணலில் உட்கார்ந்தோம். உடனேயே அவர் ”யாருக்குப் பாக்கணுங்க?” என்று தயாரானார்.
அவருக்கு சுமார் நாற்பது வயது இருக்கலாம். கைலி கட்டியிருந்தார். காவி வண்ணத்தில் முழுக்கை சட்டை போட்டிருந்தார். இன்றுதான் முகமழிப்பு செய்திருப்பார் போலிருக்கிறது. மீசையைக் கச்சிதமாக ஒதுக்கியிருந்தார்.
”ஒருத்தருக்கு எவ்வளொ” என்றுகேட்டார் பாலா. ”ரொம்ப அதிகமில்லீங்க இருபது ரூபாய்தான் என்றார் அவர். குமார் சட்டைப் பையிலிருந்து இரண்டு பத்து ரூபாய்த் தாள்களை எடுத்துக் கொடுத்து, “குமாருன்ற பேருக்குப் பாருங்க” என்றான்.
“வயசு சொல்லுங்க” என்று கூறிக் கொண்டே ரூபாயை வாங்கிகொண்டார். குமார் “இருபத்தெட்டு” என்றான். கிளிக் கூண்டைத் திறந்து “வா ராஜா, வா; குமாருன்ற பேருக்கு கெரக நெலம எப்படியிருக்குன்னு பாக்க ஒரு சீட்டு எடு” என்றார். சிறகுகள் வெட்டப்பட்டு இருந்த கிளி வெளியே வந்து கீ, கீ என்றது, மெதுவாக நடந்து வந்து அடுக்கி வைக்கப்பட்டிருந்த சீட்டுகளிலிருந்து ஒவ்வொன்றாக எடுத்துப் போட்டது. திடீரென்று ஒரு சீட்டை எடுத்து அவரிடம் செல்ல அவர் அதைத் தன் கைகளில் வாங்கி கொண்டதோடு ஒரு நெல்லையும் அதற்குக் கொடுத்தார். அதைக் கொறித்துக் கொண்டே அது தன் கூண்டுக்குள் சென்றது.
சீட்டைப் பிரிக்காமலேயே அவர் சொன்னார். ”உள்ள பாருங்க பெருமாள் படம் வந்திருக்கு” பிரித்துக்காட்டினார். திருப்பதி பெருமாள் அதில் இருந்தார். ”பெருமாள் காக்கும் கடவுள். இதுவரை எப்படி நடந்ததோ பரவாயில்ல; இனிமே எல்லாம் நல்லதே நடக்கும்; போனமாதம் ஒங்களுக்கு ஒரு கஷ்டம் வந்திருக்கும்; இப்ப அது ரொம்ப சீக்கிரம் ஓடிப்போயிவிடும் நீங்க எதிர்பாக்கிற நல்ல செய்தி வந்து சேரும். வீட்ல இனிமே எல்லாமே ஜெயம்தான். தொட்ட காரியம் எல்லாம் சுலபமா ஜெயிக்கும் நேரம் இது. அப்பா அம்மாக்கு இருக்கிற ஒடல் உபாதை எல்லாம் சரியாப் போயிடும். வேலயில உயர்வு கிடைக்கும். பணம் விஷயத்துல கொஞ்சம் ஜாக்ரதையா இருக்கணும்; நீங்க எல்லாருக்கும் தாராளமா கொடுக்கற மனசு உள்ளவங்க; அதாலயே ஒங்களை ஏமாத்தணும்னே துட்டு வாங்குவாங்க; சீக்கிரம் யாரையும் நம்பிடாதீங்க; வெளியூர்ப் பயணம் அப்புறம் வண்டி ஓட்டும்போது கொஞ்சம் பாதுகாப்பா இருக்கணும். ரெண்டு சனிக்கெழமை பெருமாளுக்கு தீபம் போடுங்க; எந்தக் கொறயும் வராது.” என்று அவர் சொல்லி முடித்தார்.
”எல்லாம் தெரிஞ்ச சேதிதான்; சரி போலாமா?” என்று எழுந்தேன். ”ஏன் சார் வேற யாரும் பாக்கலாயா’ என்று ஜோசியர் கேட்க ”வேணாம்; வேணாம்” என்று நான் கூற அவர் பாலாவைப் பார்த்து ”சார் நீங்க பாருங்க” என்றார். பாலாவும் ”நான் அதெல்லாம் பாக்கறது இல்ல; விடுப்பா” என்று கூறினார். குமாரா விடுவான்? “வேலூர் விவகாரம் எப்படி முடியும்னும் பாக்கலாம்” என்று சொல்லி இருபது ரூபாய் எடுத்துக் கொடுத்து, “பாலான்ற பேருக்குப் பாருங்க” என்றான். பாலா உடனே ”என்பேருக்கு வாணாம்; பையனுக்குப் பாப்போம்; வயசு இருபது; ரகுன்ற பேருக்கு எடுக்கச் சொல்லுங்க” என்றார்.
வழக்கம்போல ஜோசியக்காரர், ”ராஜா ஓடி வா! ஓடிவா; ரகுன்ற பேருக்கு ஒரு சீட்டு எடு” என்று கண்டைத் திறந்தார். ஆனால் அந்த ராஜா வெளியே வரவே இல்லை.
”அய்யா; ரகுதான் பேரா? வேற பேரு ஏதாவது பேரு இருக்கா?”
உடனே பாலா “இல்லீங்க; முழுப்பேரு ரகுநாதனுங்க” என்று பதில் கூறினர்.
”அப்படிச் சொல்லுங்க; அதான் ராஜா வர மாட்டேங்கராரு; டேய், இப்ப வா; ரகுநாதன்ற பேருக்கு ஒரு சீட்டு எடு.”
கிளி கூண்டைவிட்டு வரவே இல்லை. ”வா; ராஜா வா; என்ன தயக்கம்? ரகுநாதன்ற பேருக்கு கெரக நெலம பாக்கணும்டா; ரகுநாதன்ற பேருக்கு ஒருசீட்டு எடு:” அவர் எவ்வளவு வேண்டியும் அது வரவே இல்லை.
”சரி வேணாங்க உடுங்க: வேற யாரு பேராவது சொல்லுங்க” என்று கூறினார். ”ஏங்க வர மாட்டேங்குது” என்று கேட்டேன் நான்.
”அதுக்கெல்லாம் காரணம் கேக்கக் கூடாது உடுங்க; வேற பேரு சொல்லுங்க”
”இல்லீங்க ரகுவுக்கு தான் பாக்கணும்” என்றார் பாலா: அவர் குரலில் உறுதி தெரிந்தது. “சரி’ சொன்னா கேக்க மாட்டேங்கறீங்க; என்று கூறிய அவர் ஒரு குச்சியை எடுத்துக் கிளியை லேசாகக் குத்தி ”ராஜா கொஞ்சம் வாடா ரகுநாதன்ற பேருக்கு ஒரு சீட்டு எடு” என்றார். இப்போது பட்டென்று வெளியே வந்தது. ஆனால் சீட்டுகளின் பக்கம் போகவே இல்லை; வேறு பக்கம் திரும்பியது. ”பாத்தீங்களா? சீட்டு எடுக்க மாட்டேங்குது;” என்றார் அவர். “எப்படியாவது எடுக்கச் சொல்லுங்க” என்றான் குமார். அவர் கிளியைப்பிடித்துத் தூக்கி சீட்டுகள் பக்கம் விட்டார். அங்கேயும் அது பேசாமல் நிற்க அவர், ”ஏண்டா தயங்கறே? எடுடா; ராஜா ரகுநாதன்ற பேருக்கு ஒரு சீட்டு எடு” என்று கூறிக்கொண்டே அதைத் தொட்டார். கிளி அடுக்குகளைக் கொஞ்ச நேரம் கலைத்தது. சீட்டுகளே முடிவடையும் நிலயில் ஒரு சீட்டை எடுத்தது. அவர் கையில் கொடுத்துவிட்டு தனக்குக் கொடுத்த நெல்லையும் வாங்காமல் வேகமாக ஓடிக் கூண்டுக்குள் சென்றது. கூண்டை மூடியவாறே சீட்டைப் பிரிக்காமலேயே அவர் பேச ஆரம்பித்தார்.
“பாத்தீங்களா? இதுக்குதான் நான் பாக்கவாணாம்னு சொன்னேன்; உள்ள என்னா படம் வந்திருக்கு தெரியுமா? கெட்ட ஆவி; பாருங்க” என்று சொல்லியவாறே பிரித்துக் காட்டினார்.
ஆச்சரியமாக இருந்தது. ஒரு பெண்ணுருவம் முழுக்க வெள்ளை ஆடையில் பறப்பது போன்ற தோற்றத்துடன் இருந்தது. கால்களே இல்லை. தலைமுடி பின்னால் பறந்து கொண்டிருந்தது. அவர் எங்களைப் பற்றிக் கவலையில்லாமல் பேச ஆரம்பித்தார்.
”இந்தப் பையனுக்கு இப்ப கெரகம் எல்லாம் ரொம்ப நல்லாயில்ல; மோசமாயிருக்கு; தொட்டதெல்லாம் துலங்காது. கஷ்டமாகத்தான் இருக்கும்; உடல் உபாதையெல்லாம் அதிகமாயிருக்கும்; அவ்வளவு சீக்கிரம் வேலை கிடைக்காது. பையனை ரொம்ப ஜாக்கிரதையாய்த்தான் பாத்துக்கணும்; ஏதாவது செஞ்சுக்கக் கூடத் தோணும்; சேர்க்கையெல்லாம் நல்லவங்ககிட்டய இருக்கணும்;”
“உயிருக்கு ஏதாவது பாதிப்பு வருமா?” என்று நான் கேட்டபோது, “ ”அதெல்லாம் ஒண்ணும் பயப்படற அளவுக்கு இல்ல: ஆனா சனி பகவானுக்கு வாரம் இரண்டு தடவை விளக்கு போடச் சொல்லுங்க; ஆஞ்சநேயரு பக்கத்துல இருந்தா தெனம் போயி ஒம்போது சுத்து சுத்தச் சொல்லுங்க; எல்லாம் சரியா போயிடும்; அவ்வளவுதான்” என்று கூறி முடித்தார்.
காலாற நடக்கக் கிளம்பினோம். கால்கள் மணலில் புதைந்தது திருப்தியாக இருந்தது. யாரும் ஒன்றும் பேசவே இல்லை. நான்தான் மௌனத்தைக் கலைத்தேன்.
“ஏண்டா குமாரு, சும்ம வீட்ல இருந்தவரைக் கடலுக்குக் கூட்டியாந்து மனசில கவலை உண்டாக்கி உட்டுட்டே”
”இது மாதிரி சொல்லுவாங்கன்னு எனக்குத் தெரியுமா” என்றான் அவன் மெல்லிய குரலில். பாலா எதுவுமே பேசவில்லை. சற்று இறுகிய முகத்துடன் இருந்தார்.
லேசாக வெளிச்சம் இருந்தது. சுனாமிக்குப் பிறகு, “ கடலைப் பாத்தாலே பயமாகத்தான் இருக்கு இல்ல” என்று நான் பேச்சை மாற்றிய பிறகும் யாரும் பேசாதது என்னமோ போல இருந்தது. ” சரி, கிளம்புவோம்” என்று குமார் கூற எழுந்தோம். வரும்போது, பாலா என்னைப் பார்த்து,
“அங்க பாருங்க, நாம பாத்த ஜோசியக்காரரு போயிட்டாரு. பக்கத்துல ஒக்காந்திருந்த வயசானவருதான் இருக்காரு. எல்லாரும் போனா அடையாளம் தெரிந்து சந்தேகப்படுவாரு; நீங்க மட்டும் இவருகிட்டப் போயி என் பையன் பேருக்குப்பாத்திட்டுவாங்க” என்று கூறினார்.என்னால் மறுக்க முடியவில்லை.
”அய்யா, வயசு இருபது; ரகுநாதன்ற பேருக்குப் பாக்கணும் “
“இருபது வயசுள்ள ரகுநாதன்ற பேருக்கு ஜோசியம் பாக்கணுமாம்; தம்பி வெளியே வந்து சீட்டு எடுத்துப் போடு பாக்கலாம்” என்று கூறியவாறே கூண்டைத்திறக்க பட்டென்று கிளி வெளியே வந்ததே எனக்கு சற்று நிம்மதி தந்தது. கிளி தந்த சீட்டை வாங்கியவர் பிரிக்காமலேயே ”என்னாங்க இந்தப் படம் தருது.?” என்று சொல்லிக் கொண்டே பிரித்துக் காட்டினார். பார்த்தேன். ஒரு பெண்னுருவம் அதே போன்று வெண்மை உடையுடன் குத்திக் காலிட்டுத் தலையைக் கால்களுக்கிடையில் புதைத்துக் கொண்டு உட்கார்ந்திருந்தது.
”என்னாங்க இது.”
“தெரியலீங்களா? மூதேவி சாரு; மூதேவி” என்று சொன்னவர் மேலும் பையன் யாரு”ன்னு கேட்டார் என்நண்பருடைய புள்ள” என்றேன்.
’சாரு சொல்றேன்னு தப்பா நெனக்காதீங்க: இந்தப் பையனை ஏதொ பிடிச்சிருக்கு: அவன் பித்துப் பிடிச்சது போல இருப்பான்”
“இல்லீங்கய்யா; நல்லாத்தானே இருக்கான்”
”பாக்க நல்லாத்தான் இருக்கற மாதிரி தெரியும். அவன் மனசு பூரா வெசனமாத்தான் இருக்கு. வெளில போயி வருவான். எல்லாருடனும் பேசுவான். ஆனா உள்ளுக்குள்ள உருகறான். இப்படியே உட்டா பெரிய ஆபத்துல போயி முடியும். பையனுக்கு எதிர்காலம் ரொம்ப நல்லாத்தான் இருக்கு.”
“எதனால இப்படி ஆயிட்டான்?”
“வெளில போயி வரச்சே யாரோ திருஷ்டி கழிச்சி வச்சிருந்ததைக் காலால மிதிச்சிட்டான். அப்படியே காலக் கழுவாம வீட்டுக்குள்ள வந்துட்டான். அது அவனைப் புடிச்சிக்கிடுச்சு. ஆமா; நீங்க இப்ப பாத்தது ரொம்ப நல்லதாப் போயிடுச்சு. பயமில்லன்னுதான் சொல்வாங்க; ஆனா ஒருதரம் திருவிடை மருதூர் போயி மகாலிங்கசாமிக்கு ஒரு அர்ச்சனைக்கு செய்யச் சொல்லுங்க, சரியாயிடும்னு சொல்றேன்”
”தூரத்திலேந்து நீங்க வரச்சியே பாத்துட்டேன். மொகமே சரியீல்ல. என்னாசொல்றாரு” என்று பாலா கேட்டார். அவர் சொன்னதை முழுவதும் நான் கூற, குமார், ”என்ன ரெண்டுமே ஒண்ணா இருக்கு? ஆச்சரியாமா இருக்க” என்றான். பாலா ஒன்றுமே பதில் பேசவில்லை. வண்டியில் கிளம்பினோம். வழியில் ஓரிடத்தில் தேனீர் குடிக்க நிறுத்தினோம். குமார் பாலாவிடம் பேசினான்.
”அதையே நெனச்சிக்காதீங்க; நான் ஒண்ணு சொல்றேன்; நாளைக் காலைல ரகு ஜாதகத்தை எடுத்துகிட்டு இவரு கூடப் போயிப் பாத்துக்கிட்டு வாங்க”
”யாருகிட்ட?”
இவரு நண்பர் ஒருத்தர் பாக்கறாரு. அவரு சொன்ன சரியாக இருக்கும்னு எனக்குத் தோணுது.
பாலாவை ஏற்றிக் கொண்டு பாக்கம் கிராமத்திற்குச் சென்றேன். நண்பர் வீடு வாசலில் வண்டியை நிறுத்தினேன்.
“என்னாங்கய்யா? முஸ்லீம் வீடு மாதிரியில்ல இருக்கு” என்றார் பாலா மெல்லிய குரலில். “ஆமாங்கய்யா; முஸ்லீம்தான்; பேரு கூட ஜமால்தான்; எங்க வீட்டுக்கு நீண்ட நாள் நண்பர்; எங்க அப்பா எப்பவும் இவருகிட்டதான் பாப்பாரு”
ஜமால் ரொம்ப நேரம் ஜாதகத்தைப் பார்த்து என்னென்னமோ கணக்கெல்லாம் போட்டுப் பார்த்தார். பழைய பஞ்சாங்கமெல்லாம் எடுத்துப் பார்த்தார். கணினிக்குப் போய் ஜாதகம் ஒன்று அச்சில் எடுத்து எடுத்து வந்தார். பிறகு பேசா ஆரம்பித்தார்.
“ஜாதகம் ரொம்ப சுத்த ஜாதகம். ஒரு தோஷமும் இல்ல; கேட்டை நட்சத்திரம்; கோட்டை கட்டி ஆள்வான்;” என்று சொல்லி நிறுத்தியவர் ”ஒங்க நட்சத்திரம் என்ன” என்று பாலாவிடம் கேட்டார். அவர் எனக்கும் கேட்டைதான்” என்றார்.
“அதுதான் அவனைப் போட்டு இப்ப படுத்தி எடுக்குது; ஆனா ஒண்ணுக்கும் கவலைப் பட வேணாம்; எல்லாம் சரியாயிடும். இந்த இருபது முடியறதுதுக்குள்ள அவனுக்கு நெலயான நல்ல வேலை கெடைக்கும். புள்ள பின்னாடி பெரிய ஆளா வருவான். கல்யாணம் இருபத்திஞ்சில பாருங்க; இருபத்தியேழுக்குள்ள முடிஞ்சுடும். பொண்ணு சொந்தத்தில இல்ல. அசல்தான்; அப்புறம் என்ன” என்று என்னைப்பார்த்தார்.
”பையனுக்கு இப்ப ஏதாவது ஆபத்தா?” என்று கேட்டேன்.
”அதெல்லாம் ஒண்ணும் இல்ல; சீர்காழி போயி கால பைரவரை பாத்திட்டு வரச் சொல்லுங்க; போதும்”
”இல்ல ஜமாலு ஏன் வந்தோம் தெரியுமா?” என்று கேட்டு கிளி ஜோசிய விவகாரம் முழுவதும் சொன்னேன். ஜமால் சுருக்கமாக “அதெல்லாம் சும்மான்னு நான் சொல்லக் கூடாது. தவிர ஒரு ஜோசியக் காரரு சொன்னது தப்புன்னும் சொல்லக் கூடாது. இன்னி நெலமயை மட்டுமில்ல நாளைக்கும் எப்படி இருக்கும்னு பாத்துதான் நான் சொல்லறேன். நம்புங்க; எந்த பயமும் இல்ல; எல்லாம் நல்லா நடக்கும்” என்று கூறினார். 1
பாலா இப்பொழுது சற்று தெளிவடைந்தது போல இருந்தார். ’எதை நம்புவது எதை நம்பாமலிருப்பது என்றே தெரியவில்லை” என்று அவர் சொன்னது பொருத்தமாகத்தன் இருந்தது.
———————————————————————————————————————————————–
————————————–

Series Navigationதினம் என் பயணங்கள் -39 கடலும் நானும் -3இது பொறுப்பதில்லை
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *