ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை விபத்துக்குப் பிறகு மீண்டும் துவங்கியது (1995 – 2010)

This entry is part 8 of 48 in the series 15 மே 2011

‘மேன்மையான படைப்பு ஒன்றை உருவாக்க ஒரு பாதை இருக்குமானால், அதனால் விளையும் கோர முடிவுகளின் முழுத் தோற்றத்தை முதலில் உற்று நோக்கிய பிறகுதான் அதை ஆரம்பிக்க வேண்டும் ‘

 

தாமஸ் ஹார்டி [Thomas Hardy]

முன்னுரை: ஜப்பானின் அணுத்துறை விபத்துகளில் இரண்டாவதாகக் கருதப்படும், 1995 டிசம்பர் 8 ஆம் தேதி ஏற்பட்ட இந்த நிகழ்ச்சி, ஒரு முன்னோடி வேகப் பெருக்கி அணுமின் உலையில் நேர்ந்தது! அணு உலை 40% ஆற்றலில் இயங்கும் போது இரண்டாம் கட்ட வெப்பத் தணிப்பு ஏற்பாட்டில் சிறு பைப்பு உடைந்து ஸோடியத் திரவம் 5 டன் வெளியேறி, காற்றில் உள்ள ஆக்ஸிஜனுடன் மூர்க்கமாய்ச் சேர்ந்து வெடித்துத் தீப்பற்றியது! இந்த கோர விபத்து நிகழ்ந்த மஞ்சு அணுமின் உலை பல்லாண்டுகள் மூடப் பட்டதோடு, ஜப்பானின் பிற்கால வேகப் பெருக்கி அணு உலை முயற்சிகள் யாவும் ஒருங்கே கைவிடப் பட்டன! 280 MWe மின்னாற்றல் உள்ள மஞ்சு வேகப் பெருக்கி, உலகின் இரண்டாவது பெரிய நவீன அணுமின் உலையாக 5.9 பில்லியன் டாலர் நிதிச் செலவில் [1995 நாணய மதிப்பு] 12 ஆண்டுகளாகக் கட்டப் பட்டது! ஆயினும் விபத்துக்குப் பிறகு செப்பனிடப் பட்டுப புத்துயிர் பெற்று 14 ஆண்டுகள் கழித்து மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலை மீண்டும் இயங்க ஆரம்பித்தது, ஜப்பான் தேசத்தின் விடா முயற்சியைக் காட்டுகிறது. அத்துடன் ஜப்பானில் வேறு வழியற்றுப் பேரளவு மின்சக்தி பரிமாறும் அணுமின் உலைகள் மீது தொழில் துறைஞர் கொண்டுள்ள விடாப் பிடிப்பும் தெளிவாகிறது.

மஞ்சு வேகப் பெருக்கியை இயக்கி வரும், அரசுக்குச் சொந்தமான PNC அணுமின் உலை, அணுஎரு வாரியம் [Power Reactor & Nuclear Fuel Corporation] விபத்தைப் பற்றிப் பொது மக்களுக்குப் பொய்த் தகவல்களைத் திரும்பத் திரும்ப அறிவித்ததுடன், விபத்தின் காரணத்தைப் படமெடுத்த வீடியோப் பகுதியை வெட்டி எடுத்துத் தன் மதிப்பையும் பெயரையும் கரையாக்கிக் கொண்டது! மெய்யான காரணத்தை மூடி மறைத்தது தெரிந்த பின், அவமானம் தாங்காது PNC இன் பெரும் அதிபதி, ஷிகியோ நிஷிமுரா [Shigeo Nishimura, Deputy General Manager] மாடி உயரத்திலிருந்து கீழே குதித்துத் தன் இனிய உயிரை மாய்த்துக் கொண்டார்!

ஜப்பானில் 53 வாணிபத்துறை அணுமின் நிலையங்கள் இயங்கி தேசத்தின் 34% மின்னாற்றலைப் பரிமாறி வருகின்றன. அவை அனைத்தும் அழுத்த எளியநீர் அணு உலைகள் [Pressurized Light Water Reactors]. 1960 ஆண்டு முதல் ஜப்பான் வேகப் பெருக்கி அணு உலைகளை ஆக்க ஆராய்ச்சி செய்து வருகிறது.

மஞ்சு வேகப் பெருக்கி ஜப்பானின் முதல் முன்னோடி அணுமின் உலை [Prototype Fast Breeder Reactor]! ஆரம்பத்திலிருந்தே ஜப்பான் வேகப் பெருக்கி அணு உலையில் ஸோடியக் கசிவு ஏற்பட்டு விபத்து உண்டானால் எப்படி அபாயத்தைக் கையாள்வது என்பது ஆழமாகச் சிந்திக்கப் பட்டு பாதுகாப்பு முறைகள் சரியாக வகுக்கப்பட வில்லை!

மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் உலையின் விபரங்கள்

மஞ்சு முன்னோடி அணுமின் நிலையம் டோக்கியோவிலிருந்து 210 மைல் மேற்கே டுஸருகா [Tsuruga] என்னும் இடத்தில் அமைக்கப் பட்டுள்ளது. அணு உலை 1983 இல் அனுமதி பெற்று, 1985 முதல் கட்ட ஆரம்பிக்கப் பட்டு 1995 ஆகஸ்டு முதல் இயங்க ஆரம்பித்தது. அதன் மின்னாற்றல் 280 MWe [714 MWt Thermal Power]. பயன்படும் அணுஎரு: புளுடோனியம், யுரேனியம் கலப்பு ஆக்ஸைடு [Plutonium-Uranium Mixed Oxide (MOX)] 5.9 டன். இயற்கை யுரேனிய உலோகக் கவசம் [Natural Uranium Metal Blanket]: 17.5 டன். அணுக் கலனின் வடிவம் 6 அடி விட்டம், 3 அடி உயரம். உலைக்கலன் கொள்ளளவு 2340 லிட்டர். அணு உலை எருவிலிருந்து உண்டாகும் வெப்பத்தைக் கடத்தி நீராவியாக்க தனித்தனியே மூன்று சுற்று ஏற்பாடுகள் அமைப்பாடாகி யுள்ளன.

முதல் வெப்பக் கடத்திச் சுற்றும், இரண்டாம் வெப்பக் கடத்திச் சுற்றும் ஸோடியத் திரவத்தால் செயல்படுபவை. மூன்றாம் சுற்று நீரால் இயங்குவது. சராசரி 1 டன் அணு எருவின் ஈனுசக்தி: 80,000 மெகாவாட்நாள் [Fuel Burnup: 80,000 MWdays/ton]. அதாவது 714 MWt ஆற்றல் உற்பத்தி செய்யும் மஞ்சு நிலையம் 1 டன் எருவை 80,000 MWdays/714 =112 நாட்கள் வரை உட்கொள்ளும்! புளுடோனியம் பெருகும் பின்னம்: 1.2 [Breeding Ratio: 1.2]. எரிகோல்கள்: உட்புறம் 108, புளுடோனியம் செறிவு 16%. எரிகோல்கள்: வெளிப்புறம் 90, புளுடோனியம் செறிவு 21%. யுரேனியக் கவசக் கோல்கள் 172.

முதல் சுற்றில் அணு உலையில் நுழையும் ஸோடிய திரவத்தின் உஷ்ணம் 397 டிகிரி C [745 F] வெளியேறும் போது 529 டிகிரி C [985 F] அதிக மாகிறது. இரண்டாவது சுற்றில் போய்வரும் ஸோடியம் 325 டிகிரி C [620 F] இல் வெப்ப மாற்றியில் [Heat Exchanger] நுழைந்து வெளியேறும் போது 505 டிகிரி C [940 F] இல் உஷ்ணம் ஏறுகிறது. மூன்றாவது சுற்று நீர் நுழைவு உஷ்ணம்: 240 டிகிரி C [465 F], வெளிவரும் நீராவியின் உஷ்ணம்: 369 டிகிரி C [695 F]. மஞ்சு நிலையத்தின் ‘உஷ்ண ஏற்றியில் ‘ [Superhearter] நீராவியின் உஷ்ணம் 397 டிகிரி C யிலிருந்து 487 டிகிரி C [745-910 F] அளவுக்கு அதிகமாகிறது.

வேகப் பெருக்கி அணுமின் உலையில் எப்படி ஸோடியம் கசிந்தது ?

மஞ்சு வேகப் பெருக்கி 1994 ஏப்ரலில் முதல் பூரணத் தொடரிக்கம் [First Criticality] அடைந்தது. 1995 ஆம் ஆண்டு ஆகஸ்டில் மின்சாரம் பரிமாற ஆரம்பித்து, நான்கு மாதங்களுக்குப் பிறகு டிசம்பரில் தீவிர ஸோடிய திரவக் கசிவு இரண்டாம் வெப்பக் கடத்திச் சுற்றியில் உண்டானது. டிசம்பர் 8 ஆம் தேதி விபத்தின் போது மஞ்சு நிலையம் 40% [110 MWe] மின்னாற்றலில் இயங்கிக் கொண்டிருந்தது. இரவு 7:47 மணிக்குத் தீ எச்சரிக்கை மணி அலறியதும், ஆட்சி அறை இயக்குநருக்கு ஸோடியக் கசிவு ஏற்பட்டது முதலில் தெரியாது.

உடனே கவச அணிகளை மாட்டிக் கொண்டு, இயக்குநர் சோதித்ததில் இரண்டாம் வெப்ப நீக்கி அறையில் [Secondary Heat Exchanger Room] பெரும் புகை மூட்டமுடன் தீப்பற்றி எழுந்துள்ளதைக் கண்டார்கள்! அடுத்து 9:20 P.M. அணு உலை மெதுவாக நிறுத்தம் செய்யப்பட்டு, மேலும் கசிவைக் குறைக்க 80 டன் ஸோடியம் இரண்டாம் சுற்றிலிருந்து நீக்கப் பட்டது!

தீயணைப்புச் செய்தபின், உளவு செய்ததில் ஸோடிய திரவத்தின் உஷ்ணத்தைக் காட்டும் கருவி ஒன்று இணைக்கப் பட்ட சிறிய பைப் உடைந்து ஸோடியம் வெளியேறி யுள்ளது தெரிய வந்தது! அதே பைப்பில் முன்பு 1991 இல் ஒரு முறைப் பழுது ஏற்பட்டு, அது 20 அங்குல பிரதமப் பைப்பில் வெல்டிங் செய்யப் பட்டுச் செப்பனிடப் பட்டது! அந்த பழுதான துண்டுப் பைப்புதான் 5 டன் ஸோடிய திரவக் கசிவுக்குக் காரணம் என்று கண்டு பிடிக்கப்பட்டது!

இரண்டாம் சுற்று வெப்ப நீக்கியில் ஸோடியக் கசிவின் அறிகுறி உஷ்ணம் மிகையானதால் தெரிய வந்தது! அடுத்து உடனே தீ எழுச்சி எச்சரிக்கை மணி 7:47 P.M. அலறியது! ஆனால் கசிவு ஏற்பட்டு ஒரு நிமிடம் கழித்துத்தான் ‘ஸோடியக் கசிவு ‘ எச்சரிக்கை மணி அடித்தது! ஆயினும் அறையில் நிரம்பி யுள்ள புகை மூட்டத்தால், ஸோடியந்தான் கசிந்துள்ளது என்று தெரிந்து கொள்ள இயக்குநருக்கு 12 நிமிடங்கள் ஆயின! நிலையம் பரிமாறிக் கொண்டிருந்த 112 MWe மின்னாற்றலை இரவு 8:00 மணிக்குப் படிப்படியாகக் கையாட்சி முறையில் குறைக்கத் துவங்கி, 80 நிமிடங்கள் கடந்து 9:20 மணிக்குத்தான் அணு உலை நிறுத்தமானது! அது மனிதர் செய்த மாபெரும் தவறு! தீப்பற்றிய விபரம் தெரிந்தவுடன், அணு உலை உடனே நிறுத்தப் பட்டிருக்க வேண்டும்.

அடுத்து இயக்குநர் கவச உடுப்புகளை அணிந்து தீ விளைவுச் சிதைவுகளைக் காட்சிப் படமாக [Video Pictures] எடுத்து மேலதிகாரிகளுக்கு அனுப்பினார்கள். காட்சிப் படம் எடுத்த குழுவினர் உளவின் போது கண்ட சில சிதைவுக் காட்சிகள்:

ஸோடியம் ஆக்ஸைடு, ஸோடியம் ஹைடிராக்ஸைடு [Sodium Oxide, Sodium Hydroxide] தூள்கள் பழுதாகி உடைந்த இடங்களில் தொத்திக் கொண்டிருந்தன. அவை 20 அங்குல பிரதமப் பைப் நீளத்திலும் பல இடங்களில் ஒட்டிக் கொண்டிருந்தன! அதாவது ஸோடியம் கசிந்ததும் முதலில் ஆக்ஸிஜனுடன் மூர்க்கமான வெடியுடன் தீப்பற்றி அருகில் இருந்த வெப்ப நீக்கிச் சாதனங்கள் எரிந்து உருகிப் போய், அடுத்துப் பயங்கர ஸோடியம்-நீர் இயக்கமும் துவங்கிப் பல மணி நேரங்கள் தீ எரிந்து சிதைத்துள்ளது தெரிந்தது!

2. இரும்புச் சாதனங்கள், காற்றோட்டப் போக்கிகள் [Ventilation Ducts], காங்கிரீட் தளம் ஆகியவை ஸோடியத் தீயில் வெந்து உருகி, உஷ்ணம் 1500 டிகிரி C [2700 F] ஏறி யிருக்கலாம் என்று அறிய வந்தது!

3. எதிர்பாராத ஸோடிய இயக்கங்களிலே மிகக் கொடிய ‘துண்டிக்கும் நெருப்பு ‘ [Spay Fire] அறையில் உண்டாகி யிருப்பது கண்டு பிடிக்கப் பட்டது!

அணுமின் உலை விபத்தில் மனிதத் தவறுகள், பழுதுற்ற கருவிகள்

1995 டிசம்பர் 26 ஆம் தேதி ஃபுகுயி ஆட்சி அரசு [Fukui Prefectural Govt] உளவு செய்து வெளியிட்ட அறிக்கையில் ‘மஞ்சு வேகப் பெருக்கியில் போதிய எச்சரிக்கைக் கருவிகளும், தேவையான இயக்க முறை அறிவிப்புகளும் ஒழுங்காக இல்லை என்று குற்றம் சாட்டி பின்வரும் பழுதுகள் சிலவற்றையும் குறிப்பிட்டுள்ளது.

1. ஸோடியம் கசிவதை உளவிக் கண்டு பிடிக்கும் கருவிகள் எதிர்பார்த்தவாறு ஆட்சி அரங்கத்தில் அலறி [Control Room Panels] முன் எச்சரிக்கை செய்ய வில்லை!

2. இரண்டாம் சுற்றுச் ஸோடிய திரவத்தில் 600 டிகிரி C [1110 F] உஷ்ணம் ஏறி, உஷ்ண மானி உடைந்து விட்டதால் உச்சமான உஷ்ண நிலை அறிய முடியாது போனது! ஸோடிய திரவத்தின் உஷ்ணத்தை அறிய வேறு கருவிகளோ அன்றி உதவிச் சாதனங்களோ எதுவும் ஆட்சி அரங்கத்தில் அமைக்கப்பட வில்லை.

ஸோடியத் தீ துவங்கி 1.5 மணி நேரங் கழித்துதான், அணு உலைக் கையாட்சி முறையால் நிறுத்தமானது! அவ்விதம் தாமதமாக அணு உலை நிறுத்தமானது, இயக்க நெறிகளுக்கு முரண்பாடானது! ஸோடியம் கசிந்தால், அணு உலை உடனே நிறுத்தப்பட வேண்டும் என்று ‘இயக்கமுறை நூலில் ‘ [Operation Manual] காணப்படுகிறது.

4. ஸோடியத் தீயை அணைப்பதற்குப் போதிய பயிற்சி இல்லாத தீயணைப்புப் படையினர் இரவில் பணி புரிந்ததால், நிலையத்தில் தீயை அணைக்க அதிக நேரமானது!

5. அடுத்த நாள் நிலையத்தின் சிதைவை நேராகக் காணச் சென்ற PNC மேலதிகாரிகள் [Power Reactor & Nuclear Fuel Corporation Team] விபத்து நேர்ந்த அறையைக் காட்சிப்படம் [Video Pictures] எடுத்தனர். அக்காட்சிப் படங்கள் முழுவதும், பின்னால் பொது மக்களுக்குக் காட்டப்பட வில்லை. இரண்டு நாட்கள் கழித்துத் தனிப்பட்ட ‘உளவு ஆய்வுக் குழு ‘ [Prefectural Survey Team] சென்று எடுத்த முழுப் படங்கள்தான் பொது மக்களுக்குக் காட்டப் பட்டு உண்மை தெரிய வந்தது.

6. ஸோடியத் தீ பல மணி நேரங்கள் எரிந்ததால், மெய்யாக இயக்குநர் மறுநாள் காலை [December 9] 6:00 மணிக்குத்தான் சிதைவான அறையை உளவிடச் சென்றனர். ஆனால் PNC மேலதிகாரிகள் நிஜத்தை மறைத்துக் காலை 10:00 மணி என்று ஏனோ ஒரு பொய்த் தகவலைக் கூறினர்.

7. PNC மேலதிகாரிகள் விபத்து நடந்து ஒரு மணி நேரம் தாமதித்தே நகர, மாவட்ட, மாநில அதிகாரிகளுக்கு அறிவித்தனர்! அந்த புறக்கணிப்புச் செயல் மன்னிக்க முடியாத ஓர் மனிதத் தவறு என்று பின்னால் PNC குற்றம் சாட்டப் பட்டது!

8. தீ எழுச்சி ஆட்சி அரங்கில் எச்சரிக்கப் பட்டதும், நிலையத்தின் குளிர்விப்புச் சாதனங்கள், காற்றோட்ட ஏற்பாடுகள் [Air Conditioning & Ventilation Systems] ஆகிய இரண்டையும் உடனே இயக்குநர் நிறுத்த வில்லை. அதனால் ஸோடியத் தீ பலமடங்கு பரவி இருக்கலாமோ என்ற ஓர் ஐயப்பாடு பின்னால் எழுந்தது!

9. ஸோடியத்தின் கொள்ளளவைக் [Volume] காட்டும் கருவிகள், எச்சரிக்கை ஒலி அரங்கில் அமைக்கப் படாமல், வேறோர் அறையில் வைக்கப் பட்டிருந்தன. இரண்டும் ஒரே இடத்தில் இருந்திருந்தால், இயக்குநர் ஸோடியக் கசிவை உடனே தெரிந்து கொண்டு, கசிவைக் கட்டுப்படுத்தி இருப்பர்.

10. ஸோடியத் திரவம் பைப்புகளில் சுற்றி வரும் அறைகளில், கசிவைக் கண்காணிக்க முக்கியமாகத் தொலைக் காட்சிக் காமிராக்கள் எவையும் அமைக்கப்பட வில்லை!

11. நிலைய நிறுவகத்தின் போது, காற்றோட்டப் போக்கிகள் [Ventilation Ducts], அபாயமான ஸோடியப் பைப்புகளுக்குக் கீழ் அமைக்கப் பட்டது முறையான டிசைன் ஆகாது. தீப்பற்றி எரியும் போது, காற்றோட்ட போக்கிகள் உருகி, வெளியேறும் காற்று ஸோடியத் தீ பெருகுவதற்கு உதவி செய்தது!

12. ஸோடியம் கசிந்தால் உடனே அணு உலையை நிறுத்த, இயக்கமுறை அறிவிப்பு நுால் [Instruction Manual] இயக்குநருக்குப் போதிய அதிகாரம் அளிக்க வில்லை.

விபத்துக்குப் பிறகு நீதி மன்றத் தீர்ப்பும், பொது மக்களின் எதிர்ப்பும்

மஞ்சு வேகப் பெருக்கியில் ஸோடியம் தீப் பற்றியது, புளுடோனிய அணு உலைகளில் ஜப்பான் மக்கள் வைத்திருந்த நம்பிக்கையை முற்றிலும் இழக்க வைத்தது! புளுடோனியம் எருவாகவும், ஸோடிய திரவம் வெப்பக் கடத்தியாகவும் பயன்படும் எந்த அணு உலையும் ஜப்பானில் உருவெடுக்கக் கூடாது என்று எதிர்த்துப் பொது மக்கள் ஒன்று திரண்டார்கள்! 1995 டிசம்பர் 12 ஆம் தேதி ஆளுநர், டுகியோ குரிடா [Governor, Tukio Kurita] ஜப்பான் பிரதம மந்திரிக்கு, மஞ்சு அணுமின் நிலையத்தில் புரியும் ஆராய்ச்சிகள் அனைத்தையும் உடனே நிறுத்தும்படி ஓர் எதிர்ப்புக் கடிதத்தை அழுத்தமாக எழுதினார். ஜப்பானில் பொது மக்களிடையே அணுமின் சக்தி நிலைய எதிர்ப்புகள் அதிகமாயின! டிசம்பர் 17 ஆம் தேதி 600 எதிர்ப்பாளிகள் அணு உலை மறுப்பு அறிக்கைகளைத் தூக்கிக் கொண்டு, டுருகா [Turuga] என்னும் இடத்தில் திரண்டு, பெருத்த ஆரவாரம் செய்தார்கள்!

விபத்தை உளவு செய்ய வந்த ஆய்வாளர்களுக்கு மஞ்சு உரிமையாளர்கள் பொய்த் தகவல்களை அளித்து, சிதைவின் தீவிரத்தை மூடி மறைக்க முற்பட்டார்கள்! மேலும் மஞ்சு அணு உலையைச் செப்பனிடப்பட்டு 2005 இல் அது மீண்டும் இயங்க வேண்டுமெனத் திட்ட மிட்டார்கள்! சிதைந்து போன மஞ்சு நிலையத்தை மீண்டும் செம்மைப் படுத்துவதாய் PNC அதிகாரிகள் கொண்டு வந்த திட்டத்தை, மார்ச் 2000 இல் மாவட்ட நீதி மன்றம் ஏற்று அங்கீகரித்தது. ஆனால் அதற்குப் பிறகு எதிர்ப்பாளிகள் மறுபடியும் மனுப் போட்டு, நகோயா உயர்நீதி மன்ற நீதிபதி ‘எதிர்பார்க்கும் அபாயங்கள் நிச்சயமாய் நிகழ வாய்ப்புள்ளதால், மஞ்சு அணுமின் நிலையம் மீண்டும் இயங்கக் கூடாது ‘ என்று தடை உத்தரவைப் போட்டு மஞ்சு வேகப் பெருக்கி நிரந்தரமாக மூடப்பட்டது!

ஜப்பானில் வேகப் பெருக்கி அணு உலைகளின் எதிர்காலம்

மஞ்சு வேகப் பெருக்கி உலகின் இரண்டாவது பெரிய நவீன அணுமின் உலையாகக் கருதப்படுகிறது! அதன் இரண்டாம் சுற்றிலுள்ள ஸோடியத் திரவம் உடைந்த பைப்பின் வழியாகக் கசிந்து, வெடிப்புடன் வெளியேறினாலும் அணு உலைக்கோ, அன்றி அணு எருக்களுக்கோ எந்த விதப் பாதிப்பும் இல்லாமல் போனது, வேகப் பெருக்கியின் மூல டிசைன் உயர்த்தியைக் காட்டுகிறது! அணு உலை பாதுகாப்பாய் நிறுத்தம் செய்யப் பட்டதால், கதிர்வீச்சுத் தாக்கல் உள்ளே வேலை செய்த பணியாளிகளுக்கும், வெளியே வாழ்ந்த பொது நபர்களுக்கும் நேர வில்லை!

ஆனால் ஸோடியக் கசிவு விபத்து அணு உலை வெப்பத்தைத் தணிக்கும் முதல் சுற்று ஏற்பாட்டில் நேர்ந்திருந்தால், அணுக்கலன் எருக்கோல்கள் பல உருகிக் கதிரியக்கம் உள்ளேயும், வெளியேயும் பரவ வாய்ப்புக்கள் உண்டாகலாம்!

தற்காலியமாக நிறுத்தம் செய்யப் பட்டுள்ள மஞ்சு வேகப் பெருக்கி அணுமின் நிலையம் மறுபடியும் மாறுபாடுகள் செய்யப் பட்டு 2005 ஆண்டில் புத்துயிர் பெற்று எழலாம் என்ற ஒரு வதந்தியும் நிலவி வருகிறது!

2002 ஆண்டுத் தகவல் படி, ஜப்பான் நாட்டின் 34% மின்னாற்றலை 53 வெப்ப அணுமின் உலைகள் [Thermal Power Reactors] பரிமாறி வருகின்றன. அவற்றைப் போல் இன்னும் பல அணுமின் நிலையங்கள் நிறுவகமாகி, 2010 ஆண்டுக்குள் நாட்டின் 42% மின்னாற்றலை உற்பத்தி செய்யத் திட்டங்கள் வகுக்கப் பட்டுள்ளன. மஞ்சு அணு உலை ஸோடியத் தீ விபத்தும், டோகைமுரா யுரேனியச் செறிவுத் தொழிற் கூடத்தில் 1999 செப்டம்பர் 30 இல் ஏற்பட்ட பூரணத் தொடரியக்க விபத்தும் ஜப்பான் அணுத்துறைப் பேராசைத் திட்டங்களின் தலைவிதியை மாற்றி, மக்களிடையே எதிர்கால அணுமின் சக்தித் திட்டங்களில் பெருத்த ஐயப்பாடுகளைக் கிளப்பி யுள்ளன!

அடுத்து ஜப்பானில் கட்டப் போவதாய் இருக்கும் 600 MWe [1500 MWt] மின்னாற்றல் வாணிப வேகப் பெருக்கி அணுமின் நிலையம் நிச்சயம் வரப் போவதில்லை!

ஜப்பான் மஞ்சு வேகப் பெருக்கி அணு உலை புத்துயிர் பெற்றது

பதினான்கு ஆண்டுகள் முடக்கமாகி புதிய மாறுதல் சாதனங்கள் இணைக்கப் பட்டு மஞ்சு வேகப் பெருக்கி அணு உலை 2010 மே மாதம் 8 ஆம் தேதி மீண்டும் துவங்க ஆரம்பித்தது. அது தொடர்ந்து 2013 ஆண்டு வரை சோதனை முற்பாட்டில் இயங்கி மின்சாரம் அளித்து வரும். மஞ்சு வேகப் பெருக்கி ஓய்வாகி ஜப்பானில் ஒரு புதுப் பூத அணு உலை மாடல் 2025 ஆண்டில் நிறுவப் போவதாக எதிர்பார்க்கப் படுகிறது.

இந்திரா காந்தி அணுத்துறை ஆய்வுத் தளத்தில் வேகப் பெருக்கி அணு உலைகள்

பாரதத்தின் கல்பாக்க இந்திரா காந்தி அணுத்துறை ஆய்வுக் கூடத்தில் முதலாகத் தோன்றிய ஆய்வு வேகப் பெருக்கி பல பதுகாப்புக் காரணங்களால் 10 MWt ஆற்றலாகக் குன்றி 25% தகுதிநிலையில் இயங்கி வருகிறது! அதன் பிரச்சனைகளைத் தீர்த்து, முழு ஆற்றலில் அதை இயக்க முற்படுவதற்கு முன்பே, அடுத்து முன்னோடி பூத வேகப் பெருக்கி 1240 MWt [500 MWe] ஒன்று டிசைன் செய்யப் பட்டு கல்பாக்கத்தில் உருவாகி வருகிறது! உலக வேகப் பெருக்கி அணு உலைகளின் முதல் பிரச்சனை ஸோடியக் கசிவுகளே! காற்றையும், நீரையும் நெருங்கினால் மூர்க்க வெடியுடன் தீப்பற்றும் ஸோடியக் கசிவுகளை எப்படிக் கையாள்வது என்பது, கல்பாக்க அணுவியல் நிபுணர்களுக்கும் தீராத ஒரு போராட்டமாக இருக்கும் என்பதைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் முக்கிய நோக்கமாகும்!

***********************

தகவல்:

1. Prototype Fast Breeder Reactor Monju, Japan www.jnc.go.jp/jncweb/

2. Fast Breeder Reactors of the World.

3. High Court Overturns Decision, Nullifies Approval of Fast Breeder Reactor Monju [Feb 7, 2003]

4. Monju Campaign By: Green Action www.greenaction-japan.org/

5. Japan puts FBR reactor program on back burner

6. The Serious Accident of ‘Monju ‘ [Dec 25, 1995]

7. Japan ‘s Nuclear Safety Review Process Needs Overhaul

8. Monju Reactor Shutdown after Sodium Leak [December 15, 1995]

9. The Monju Accident Fall-out [Jan 14, 1996]

10. Plutonium Production as Energy Source By Arjun Makhijani (Feb 1997)

10. Japan Nuclear Industry is in Meltdown [Sep 28, 2002]

11. Fast Breeder Safety & Problems By : Charles Barton (May 13, 2009)

12. Monju Fast Breeder Startup (Feb 10, 2010)

13. Monju Fast Breeder Restarts after 14 years of Suspension (May 12, 2010)

************************

S. Jayabarathan (jayabarat@tnt21.com) May 7, 2011

http://jayabarathan.wordpress.com/

Series Navigationபாதல் சர்க்கார் – நாடகத்தின் மறு வரையறைஅரூப நர்த்தனங்கள்
jeyabharathan

சி. ஜெயபாரதன், கனடா

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *