அன்னா ஹஸாரே 30 ஆண்டுகளுக்கும் முன்பாக ரானேஜி காவ் சிந்தி என்னும் தனது கிராமத்தை மேம்படுத்துவதில் இயற்கை விவசாயம், சிறு நீர்த்தேக்கங்கள் எனத் தம் பொது வாழ்க்கையைத் துவங்கினார். மகாராஷ்டிர அரசில் ஊழலைக் களைய பல போராட்டங்களை அவர் முன்னெடுத்தார்.
அகில இந்திய அளவில் ஊழல் ஒழிப்புக்கான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றுவது மிகப் பெரிய சவாலாக இருந்தது. அவர் ஏற்படுத்திய மக்கள் விழிப்புணர்வு மற்றும் அதற்கு இந்தியாவில் மட்டுமல்லாமல் புலம் பெயர்ந்த இந்தியரிடையேயும் கிடைத்த வரவேற்பு அரசியல்வாதிகளை சிந்திக்க வைத்தது.
இந்தச் சூழலில் தான் கருப்பு ஆடு 1 விழித்துக் கொண்டார். ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை இணைய தளம் மூலமாக உலகெங்கும் எடுத்துச் செல்வதில் முக்கியப் பங்களிப்பு செய்து அவரின் சீடர் போல அவரிடம் ஒட்டிக் கொண்டிருந்த கேஜரிவால்தான் அது. இவ்வளவு ஆதரவா? இதை வைத்து அரசியல் செய்தால் எங்கேயோ போய்விடலாமே என்று அவர் “உள்ளுவதெல்லாம் உயர் உள்ளல்” என்று பிரதம மந்திரியே ஆகிவிடும் ஒரு கணக்கைப் போட்டார். புலம்பெயர்ந்த இந்தியர்களைக் குறிவைத்தார். பாவம். அவர்கள் ஒரு பிரதம மந்திரியை உருவாக்கும் ‘பிராஜெக்ட்’டைக் கையில் எடுத்தனர். எவ்வளவு நன்கொடை வசூல் ஆனது என்பது யாருமே இது வரை சரியாக கவனிக்காத ஒன்று. நல்ல வசூல்.
அவர் கையில் மின்சாரப் பழுது பார்ப்பு சாதனங்களுடன் கிளம்பினார். அன்னா ஹஸாரே என்னும் ஏணியால் ஊழலை எதிர்க்கும் படையின் முக்கிய தளபதியாயிருந்த பிம்பத்துடன் ஏழைகளுக்கு இலவச மின்சாரம்- மின் கட்டணக் குறைப்பு என்னும் நாடகங்களை நடத்திக் காட்டினார்.
ஒரு பத்திரிக்கை இவர் அரசியலின் போக்கையை மாற்றப் போகிறார் என்று எழுதியது. ஒரு தனி மனிதன் அரசியலின் போக்கையே மாற்றினார். உண்மைதான் ஆனால் அது ராஜபார்ட் கேஜ்ரிவால் இல்லை.
ஒரு அசுரன் தன் தலையில் தானே கையை வைத்துக் கொண்டு (வாங்கிய வரத்தால்) தன் முடிவைத் தானே தேடிக் கொண்ட புராணக் கதையை கேஜ்ரிவால் படிக்கவில்லை. அவர் அம்மாவும் அவருக்குச் சப்பாத்தி ஊட்டும் போது சொல்லித் தரவில்லை. நாடகங்களை அரங்கேற்றி ஊடகங்களின் வெளிச்சத்தில் மட்டுமே வலம் வந்த அவர் ஒரு படி மேலே போய் டெல்லி முதலமைச்சர் டெல்லியின் உரிமைக்காகத் தெருவில் போராடும் ஒரு நாடகத்தில் தம் அரசியல்வாழ்வின் உச்சத்தைத் தொட்டார். தமது நடிப்பு மற்றும் இயக்குனர் திறமையில் புளகாங்கிதம் அடைந்து ஒரு மண்டலம் முதலமைச்சராக இருந்தேன் – இப்போது ராஜினாமா செய்து மக்களுக்குச் சேவை செய்வேன் என்று ஒரு பெரிய நாடகமாக ஒன்று போட்டுப் பார்த்தார். அது ‘புமெராங்க்’ போல அவரது ராஜபார்ட் வேஷத்தைக் கோமாளி வேஷமாக்கி விட்டது. (வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவது போல ஜெயமோகன் தாம் படித்த கடிதங்களில் அது தான் இதயத்தைத் தொடுவது என்று பாராட்டி எழுதினார். ஜெயமோகன் – சோ இருவருக்கும் தவறான பரிந்துரைகள் கொடுப்பதில் ஆர்வம் அதிகம்.)
கருப்பு ஆடு 2 கிரண் பேடி. அவர் கேஜ்ரிவாலை எதிர்த்த போது எல்லோருமே அன்னா ஹஸாரேயின் அரசியல் ஆதாயம் தேடாத வேள்வியில் தாக்குப் பிடித்து நிற்கும் கொள்கைக் குன்று என்றே நினைத்தார்கள். விதி வலியது. அவருக்கும் கேஜ்ரிவாலைப் போலவே அரசியல் அபிலாஷைகள் இருந்தன. ஆனால் ‘முதலில் வா. முதல் கரண்டி உனக்கு” என்னும் முறையில் அன்னா ஹஸாரே பெயரைச் சொல்லிப் பெரிய ஆதாயம் தேடி விட்டார் கேஜ்ரிவால். தாமதமாக வந்தாலும் தடாலடியாக வர விரும்பிய பேடிக்கு ஒரு அரசியல் கட்சி சிவப்புக் கம்பளம் தயார் செய்தது. சரியான தருணத்தில் அதை விரிப்போம் என்று சமிக்ஞை செய்தது. இப்போது புது டெல்லித் தேர்தல் களத்தில் இரண்டு ஆடுகளும் மோதத் தயார்.
அன்னா ஹஸாரே கிராமப்புறத்தவர். அவருக்குப் படித்த மக்களின் சூதும் வாதும் தெரியாது. அவருக்கு எந்த நஷ்டமும் இல்லை. அவர் இந்திய மக்கள் எல்லோரையும் நேசிக்கும் நல்ல உள்ளம் கொண்டவர். அரசியல் ஆதாயம் தேடுவோர் தம்மை ஏணியாகப் பயன்படுத்திக் கொண்டதால் அவருக்கு ஏமாளிப் பட்டம் கிடைக்கலாம். ஊழலை ஒழிக்க ஏமாளிக்குத் தகுதி உண்டு. சமாதானமே செய்து கொள்ளாத நேர்மையும் உலகமே வணங்க வேண்டிய நெஞ்சுரமும் உள்ளவர் அவர்.
அன்னா ஹஸாரே இந்தியாவுக்கும் உலகுக்கும் உணர்த்திய தெளிவான செய்தி “ஊழலை அமைப்பின் உள்ளே இருப்பவர்கள் சரி செய்ய முடியாது- அது மக்கள் இயக்கத்தாலேயே சாத்தியம்” என்பதாகும்.
அரசியலில் ஈடுபடுவது குற்றமா? அதிகார ஆசை தவறா? கண்டிப்பாக இல்லை. அது தந்திரமான, குறுகிய கால நடவடிக்கைகளால் அடையப் படக் கூடாது. அன்னா ஹஸாரே அரசியலில் ஈடுபடக் கூடாது என்கிறார் – இதில் கருத்து வேறுபாடு உள்ளது என்பதோடு நிற்காமல் அவர் பெயரைச் சொல்லிக் கிடைத்த பெரிய ஆதரவாளர் பட்டியலை அப்படியே கடத்திக் கொண்டு போனார் கேஜ்ரிவால்.
12 13 ஆண்டுகளுக்கு முன் நான் டெல்லியில் பணி புரிந்த காலம். அப்போது ஒரு நாள் மாலை கரோல்பாக் பதம் சிங் சாலை ஓரத்தில் ஒரு தேனீர் விற்பவரிடம் தேனீர் பருகிக் கொண்டிருந்தேன். உயரமான (சாதாரண உடை அணிந்த) ஒரு அம்மாள் எங்களைக் கடந்து போனார். இவர் யார் தெரியுமா என்றார் தேனீர்க்கடைக்காரர். எனக்குத் தெரியவில்லை. “கிரண் பேடி அம்மாள். நேர்மையும் வீரமுமான போலீஸ் ஆபீஸர்” என்று பெருமையுடன் கூறினார் அவர். இன்று அவர் ஒரு அரசியல்வாதியாகவே அறியப் படுவார். இனி டெல்லி மக்கள் தம் ஊரின் பெருமையாக அவரைக் காண்பது இயலாது.
டெல்லி மக்களின் இந்திய மக்களின் இதயத்தில் ஆட்சி செய்யும் அரிய வாய்ப்பை இரண்டு கருப்பு ஆடுகளும் நழுவ விட்டுவிட்டார்கள். அதை விட சோகமானது ஊழலை ஒழிப்பதில் வரலாறு என்றும் போற்றப் போகிற பெரியவர் அன்னா ஹஸாரேயுடன் பணிபுரியும் அரிய வாய்ப்பை நழுவ விட்டது.
இருவரும் ஏணியில் ஏறி அதிகாரத்தை எட்டிப் பிடிக்கும் ஆசை மட்டுமே உடையவர்கள். அன்னா ஹஸாரே மக்கள் தம் வாழ்க்கையில் இன்னும் மேலான இடத்துக்குப் போக ஆசைப்பட்டவர். இவர்கள் வரலாற்றால் மறக்கப் படுவார்கள். அன்னா ஹஸாரே வரலாறு படைத்துக் கொண்டிருப்பவர்.
- படிக்கலாம் வாங்க…. தாய்மொழி வழிக்கல்வி
- திரு கே.எஸ்.சுதாகர் ’சென்றிடுவீர் எட்டுத்திக்கும்’ நூல்விமர்சனம்
- நாவல் – விருதுகளும் பரிசுகளும்
- பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள் ! சூரியக் கோள்கள் தோற்றக் கருத்தில் ஒரு மாறுபட்ட கோட்பாடு
- பண்பாட்டைக்காட்டும் பாரம்பரியச்செல்வங்கள்
- இலக்கிய வட்ட உரைகள்: 10 வோர்ட்ஸ்வர்த்தைப் புரிந்து கொள்வது
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2015 மாத இதழ்
- பெருந்திணை- இலக்கண வளர்ச்சி
- கல்பனா என்கின்ற காமதேனு…!
- தொடுவானம் 51. கிராமத்து பைங்கிளி
- சீஅன் நகரம் – வாங்க.. சாப்பிடலாம் வாங்க
- சங்க இலக்கியத்தில் நாய்களுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு
- பஹ்ரைன் தமிழ் சங்கம் (Bharathi Association) இவ்வாண்டு பொங்கல் விழா
- ” நட்பே நலமா: “ கடித நூல் வெளியீடு
- தென்னிந்தியாவில் சமணர்க்கோயில்கள்
- ஷங்கரின் ‘ஐ’ – திரைப்பட விமர்சனம்
- டெல்லியில் மோத இருக்கும் இரண்டு கருப்பு ஆடுகள்
- ஹாங்காங் இலக்கிய வட்டக் கூட்டம்
- மெல்பனில் தமிழ் மொழி உரைநடை தொடர்பான கலந்துரையாடல்
- ஆனந்த பவன் : 22 நாடகம் காட்சி-22
- கருத்து சுதந்திரத்திற்கு ஆதரவாக தமிழ் ஸ்டுடியோவின் கையெழுத்து இயக்கம்…
- பேசாமொழி பதிப்பகத்தின் புதிய புத்தகம் – ஒளி எனும் மொழி (ஒளிப்பதிவாளர் விஜய் ஆர்ம்ஸ்ட்ராங்)
- பாக்தாத் நகரத்தில் நடந்த சில சுவையான அனுபவங்கள்