உறையூர் என்னும் திருக்கோழி

author
15
0 minutes, 0 seconds Read
This entry is part 2 of 25 in the series 15 மார்ச் 2015

பாச்சுடர் வளவ.துரையன்

[ஒரேஒரு பாசுரம் பெற்ற திவ்ய தேசம்]
திருமங்கையாழ்வார் திருநாகை எனும் நாகப்பட்டினத்திற்கு வருகிறார். அங்கு எழுந்தருளி உள்ள சௌந்தர்யரராஜப் பெருமாளை மங்களாசாசனம் செய்யும்போது அவர் அழகில் தன் மனத்தைப் பறிகொடுக்கிறார். சௌந்தர்யராஜப் பெருமாளின் அழகு உறையூர் எனும் திருக்கோழியில் குடிகொண்டுள்ள அழகிய மணவாளனின் அழகுக்கு நிகரானது என்று கருதுகிறார். எனவே
”இவர் உறையூரையும், தென் மதுரையையும் இருப்பிடமாகக் கொண்ட கண்ணபிரானைப் போலவே இருக்கிறாரே? மலை போன்ற நான்கு திருத் தோள்களை உடையவராகவும் இருக்கிறார். மேலும் இவரை நாம் இதற்கு முன்பு பார்த்ததில்லையே! இவர் பல்லாண்டு வாழ்க! கடல்வண்னம் கொண்டவராகவே இவர் தோன்றுகிறார். ஒரு திருக்கையில் சக்கரத்தையும், மற்றொரு கையில் சங்கினையையும் தரித்துக் கொண்டிருக்கிறாரே! இவரது அழகை நான் என்னென்று சொல்வேன்?” என்று மங்களாசாசனம் செய்து அருளுகிறார்.
“கோழியும் கூடலும் கோயிலும் கொண்ட கோவலரே ஒப்பர், குன்ற மன்ன
பாழியந்தோளுமோர் நான்குடையர் பண்டு இவர்தம்மையும் கண்டறியோம்
வாழியரோ இவர் வண்ணம் எனில் மாகடல் போன்றுளர், கையில் வெய்ய
ஆழியன்றேந்தி ஓர் சங்கு பற்றி அச்சோ ஒரு வரழகியவா” [1762]
Manavaalarஇந்த உலகினில் எங்கும் காணாத அவ்வழகுக்குக் கண் எச்சில் படாமல் இருப்பதற்காக ஆழ்வார் ‘வாழியரோ’ என்கிறார்.
திருக்கோழி என்னும் உறையூர் பெயர் கொண்ட இத்திவ்ய தேசம் திருச்சி நகரத்தின் உள்ளேயே உள்ளது. திருச்சி இரயில்வே சந்திப்பிலிருந்து சுமார் மூன்று கி.மீ தொலைவிலுள்ளது.
இங்கே பெருமாள் வடக்கு நோக்கி நின்ற திருக்கோலத்தில் அழகிய மணவாளன் எனும் திருநாமத்துடன் எழுந்தருளி உள்ளார். தாயார் திருமணக் கோலத்துடன் கமலவல்லி நாச்சியார் மற்றும் உறையூர்வல்லி எனும் திருநாமங்களுடன் அருள் பாலிக்கிறார்.
திருவரங்கம், திருக்கரம்பனூர் எனும் உத்தமர்கோவில், மற்றும் திருவெள்ளறை ஆகிய திவ்யதேசங்கள் உறையூருக்கு மிக அருகில் உள்ளன. இந்த உறையூரானது பண் டைக்காலத்தில் உறந்தை என்றும் நிகளாபுரி என்றும் அழைக்கப்பட்டது. தமிழ் இலக்கியங்களில் இதன் பெருமை பல இடங்களில் கூறப்படுகிறது. இது சோழ மன்னர்களின் தலைநகராகவும் விளங்கி வந்திருக்கிறது.
முன்பொருகாலத்தில் நந்தசோழன் எனும் மன்னன் இதைத் தலைநகராகக் கொண்டு சோழநாட்டை ஆண்டு வந்தான். அவன் தர்மவர்மாவின் வம்சத்தில் வந்தவன்.அவன் சிறந்த பக்தி உள்ளவனாகத் திகழ்ந்து வந்தான். மேலும் அரங்கனுக்குத் தொண்டு செய்வதை தன் வாழ்நாளின் பெரும்பேறாகக் கருதி வந்தான். ஆன்னலும் அவனுக்குப் புத்திர பாக்கியம் இல்லாததால் பெரும் கவலையோடிருந்தான். ஸ்ரீவைகுந்தத்தில் குடிகொண்டுள்ள எம்பெருமான் அவன் அன்பைக் கருதி அவனுக்கு திருவருள் செய்ய எண்ணம் கொண்டார். தம் பிராட்டியையே அவனுக்கு மகளாகப் பிறக்க அருளினார். பிராட்டியும் மனம் மகிழ்ந்து உறையூரில் தாமரை ஓடையில் தாமரை மலரில் சிறுகுழந்தையாக அவதரித்தார். வேட்டைக்குச் சென்ற நந்தசோழன் அக்குழந்தையைக் கண்டெடுத்தான். அதற்குக் கமலவல்லி என்று பெயரிட்டு வளர்த்து வந்தான்.
அக்குழந்தையும் நன்கு வளர்ந்து மணப்பருவம் எய்தியது. ஒருநாள் கமலவல்லி தம் தோழிகளுடன் வனத்திற்கு உலாவச் சென்றாள். அப்போது ஸ்ரீஅரங்கநாதன் அங்கு தம் குதிரை மீது ஏறி வேட்டைக்கு வந்தார். கமலவல்லி அவரைக் கண்டதும் அவர் அழகில் மயங்கி வியப்படைந்தாள். யாரோ இவர் எனக் கருதினாள். பெருமாள் தம் பேரழகு முழுவதையும் கமலவல்லிக்குக் காட்டி மறைந்தார். கமலவல்லியோ அவரை மறக்க இயலாமல் அவர் மீது காதல் கொண்டு பக்தியும் மேலிட்டுக் கலங்கலானாள்.
தம் மகளின் நிலை கண்ட நந்தசோழன் அதற்கு என்ன காரணம் என்று தெரியாமல் திகைத்தான். மனம் வருந்தினான். எம்பெருமானிடம் முறையிட்டான். அவன் கனவில் தோன்றிய பெருமாள் “யாம் பிள்ளையில்லாத உன் மனக்குறையைப் போக்கவே பிராட்டியை உனக்குத் திருமகளாக அனுப்பி வைத்தோம். ”நீ உன் மகளை எம் சன்னதிக்கு அழைத்து வா; யாம் அவளை ஏற்றுக் கொள்கிறோம்” என்று திருவாய் மலர்ந்து அருளினார். மன்ன்ன் மன்ம் மகிழ்ந்தான். நகரை அலங்கரித்தான். கமலவல்லியைத் Manavaalar1திருமணக் கோலத்தில் திருவரங்கம் அழைத்து வந்தான். அக்கோவிலின் கருவறையில் எழுந்தருளி உள்ள அரங்கநாதனுடன் சென்று கமலவல்லி இரண்டறக் கலந்தருளினார். மன்னனும் அவனுடன் வந்திருந்த மற்றவரும் காணக்கிடைக்காத அக்காட்சியைக் காணும் பேறு பெற்றனர்.
அதன் பிறகு நந்தசோழன் திருவரங்கக் கோவிலுக்குக் கணக்கற்றத் திருப்பணிகள் பல செய்தான். பின்னர் உறையூர் வந்து கமலவல்லி அழகிய மணவாளன் திருமண நினைவாக ஒரு பெரிய கோவில் சமைத்தான். திருவரங்கத்தின் அரங்கநாதனே அழகான மாப்பிள்ளையாக வந்ததால் இங்கு அழகிய மணவாளன் எனும் திருநாமம் கொண்டார்.
இந்நிகழ்ச்சி துவாரபயுகத்தின் இறுதியில் நடந்தது என்பர். பிறகு கலியுகம் தோன்றிய காலத்தில் ஒரு சமயம் உறையூரில் மண்மழை பெய்ததாம். அதனால் இந்த உறையூரே மூழ்கிப்போனதாம். அதன் பிறகு ஒரு சோழமன்னன் இத்திருக்கோயிலைக் கட்டி இங்கு திருமணக் கோலத்தில் அழகிய மணவாளனையையும், கமலவல்லியையும் அமைத்தான் என்று கூறப்படுகிறது. அம்மன்னன் பெயர் அறிய முடியவில்லை.
சிபிச்சக்கரவர்த்தி ஆண்ட போது இந்த உறையூர் முதல் தலைநகராகவும், காவிரிப்பூம்பட்டினம் இரண்டாவது தலைநகராகவும் விளங்கியது என்பர். ஒரு சமயம் இளஞ்சேட்சென்னி எனும் மன்னன் இந்த உறையூரை ஆண்டு வந்தான். அப்போது ஒருநாள் அந்த அரசனின் பட்டத்தரசி இறைவனின் பூஜைக்கு வைத்திருந்த பூக்களை எடுத்துத் தன் தலையில் சூடிக் கொண்டாளாம். அதனால் மனம் சினந்த இறைவன் இந்த ஊரை நெருப்பு மாரி பெய்து அழித்து விட்டதாகவும் கூறுவார்கள். ஆனால் மண்மாரி பெய்ததகாவே செவிவழிக்கதைகள் அதிகம்.
ஒரு முறை உறையூரை ஆண்ட ஆதித்தசோழன் பட்டத்து யானை மீது உலா வந்தான். அப்போது அவனுக்கு இவ்வூரின் பெருமையை உணர்த்த இறைவன் எண்ணினார். அவர் வில்வ மரத்தின் நிழலின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த கோழியை ஏவினார். அது மிக வேகத்துடன் பறந்து சென்று அந்தப் பட்டத்து யானையை எதிர்த்துப் போர் புரிந்துத் தன் அலகினாலும், கால்களினாலும் யானையின் கண்களைக் குத்திக் குருடாக்கிப் புறமுதுகிட்டு ஓடச் செய்தது. அதை எம்பெருமானின் அருள் என்று உணர்ந்த. ஆதித்தசோழன் அக்கோழியின் பெயரால் இவ்வூருக்குத் திருக்கோழி எனப்பெயரிட்டான். மேலும் இவ்வூருக்குக் குக்கிடபுரி, கோழியூர், வாரணபுரி, திருமுக்கீசுரம் என்ற பெயர்களும் வழங்கப்பட்டுள்ளன.
கரிகால் சோழன், நலங்கிள்ளி, குலோத்துங்க சோழன், கிள்ளிவளவன் முதலானோர் இங்கு ஆட்சி புரிந்துள்ளனர். நாயன்மார்களில் புகழ்ச்சோழர், மற்றும் கோச்செங்க்ன் சோழர் பிறத்தும் இங்குதான். அத்துடன் பன்னிரு ஆழ்வார்களில் ஒருவராகவும் எம்பெருமானுடன் கலக்கும் பேறு பெற்றவராகவும் விளங்கிய திருப்பாணாழ்வார் அவதரித்தத் திருத்தலம் இது. இத்திருக்கோயிலில் திருப்பாணாழ்வாருக்குத் தனி சன்னதி உள்ளது.
Manavaalar3 திருமங்கையாழ்வார் ஒரேஒரு பாசுரத்தால் இத்திவ்யதேசத்தை மங்களாசாசனம் செய்துள்ளார். அவரும் கோழி என்று இவ்வூரின் பெயரை மட்டுமே குறிப்பிட்டுள்ளார். குலசேகரப்பெருமாள் சேர, சோழ, பாண்டிய நாடுகளை ஆண்ட போது இந்த உறையூரைத் தலைநகராகக் கொண்டிருந்தார் எனப்து அவர் பாசுரத்தால் அறிய முடிகிறது. அதில் அவர் தம்மைக் கொல்லிமலை, கூடல் கோழி ஆகிய மூன்றுக்கும் மன்னன் என்று குறிப்பிட்டுள்ளார்.
”அல்லிமாமலர் மங்கை நாதன்
அரங்கன் மெய்யடியார்கள் தம்
எல்லையிலடிமைத் திறத்தினில்
என்றும் மேவு மனத்தனாம்
கொல்லிக் காவலன் கூடல் நாயகன்
கோழிக்கோன் குலசேகரன்
சொல்லினின் தமிழ்மாலை வல்லவர்
தொண்டர் தொண்டர்களாவாரே”
கமலவல்லி நாச்சியாரை மணம் புரிய அரங்கநாதன் திருவரங்கத்திலிருந்து இந்த உறையூருக்கு எழுந்தருளியதை இன்றைக்கும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர். அதன் பொருட்டு எம்பெருமான் அரங்கன் ஆண்டுக்கொருமுறை திருவரங்கத்திலிருந்து எழுந்தருளி கமலவல்லி நாச்சியாருடன் ஏகாதசனத்தில் இங்கு அமர்ந்து சேவை சாதிக்கிறார். இந்தத் திருக்கல்யாண உற்சவம் மிகவும் காணக் கிடைக்காத ஒன்றாகும்.
==============================

Series Navigationதுவக்கமும், முடிவும் இல்லாத பிரபஞ்சமே  பெருவெடிப்பின்றி தோன்றியுள்ளது.அழிந்து வரும் வெற்றிலை விவசாயம் வரலாற்றுப்பார்வையில் வத்தலக்குண்டு
author

Similar Posts

15 Comments

  1. Avatar
    ramu says:

    ஒரு திவ்ய சேசத்தை பாடும் போது மற்றொன்றை நினைவு கொள்வது திருமங்கை யானின் தனி சிறப்பு திருமெய்யத்தை பாடும்போது ” கண்ணாரக்கண்டு கொண்டேன் ” கடல் மல்லை தலைசயனத்தே” என்று .திருக்கடல் மல்லை தலசயனரை நினைவு கொள்வார். கண்டியூர் அரங்கம் மெய்யம் கச்சி பேர் மல்லை ” என்று மற்றொரு பாசுரம்

  2. Avatar
    BS says:

    திருக்கோழிக்கு நான் போனவாண்டு சென்றேன். எதற்காக? திருமால் – திருமகளோடு இருக்கிறார் என்று போனேனா? இல்லை, திருமங்கையாழ்வார் மங்களாசாசனம் செய்திருக்கிறார் திவ்ய தேசமாக்கும் எனச் சென்றேனா? இல்லை. நான் சென்ற ஒரே காரணம் திருப்பாணாற்றாழ்வாருக்காக. ஏனென்றால், தமிழ் வைணவத்தில் சிறப்பை உலகுக்கு எடுத்துச்சொன்ன திருப்பதி இது; அஃது இவ்வாழ்வாரை வைத்து இறைவன் நிகழ்த்திய திருவிளையாடல். வளவ துரையன் ஒரே வரியில் இவ்வாழ்வாரின் அவதார தலமிது என்று முடித்து, மன்னர்களைப்பற்றி நீட்டியெழுதிவிட்டார். அவருக்கு வைணவத்தின் சிறப்பு எவருமே எடுத்துச்சொல்லவில்லை போலும்!

    அது கிடக்க.

    குலசேகராழ்வாரோடு கோழி என்ற சொல்லை இணைத்து இத்தலத்துடன் முடிச்சுப்போடப்படுகிறது. அத்தனியனின் காணப்படும் கோழி என்ற சொல் இத்தலத்துப்பெயர்தான் என்றெப்படி சொல்கிறார்?

    குருபரம்பரா பிரபாவம் என்று நூலே ஆழ்வார்களின் திவ்ய சரிதங்களை முதலில் சொன்னது. பின்னர் எழுந்த வரலாறுகளுக்கு இதுவே முதனூல். ஆயினும் இது வரலாற்றுப்பெட்டகமாக இல்லாமல் வைணவருக்காக எழுதப்பட்டது. இந்நூல் சொல்வது குலசேகரர் ஒரு மலையாளி, இவரண்ட கொல்லி கேரளத்தில் உள்ள சிறுநாடு. அவ்வளவுதான். தமிழறிஞர்கள், இந்த கொல்லியை தமிழகத்தில் ஈரோடு மாவட்ட மலையோடு இணைக்க வைணவ உலகம் அதை கோழிக்கோடாகப் பார்க்கிறது. எஃதெப்படியாயினும் இத்தனியனின் காணபபடும் கோழி திருச்சியிலுள்ள இத்தலமில்லை. இருந்தால், எவரேனுமாவது சொல்லியிருப்பார்களே!? சேர சோழ பாண்டியர்களை வென்று தமிழகத்தை குலசேகரர் ஆண்டார் என்று எங்கேனுமே சொல்லப்படவில்லை.

    திருக்கோழியைப்பற்றி எழுதும்போது திருப்பாணாற்றாழ்வாரை இருட்டடிப்புச்செய்வோரை இறைவன் மன்னிப்பதில்லை. வேதாந்த தேசிகன் எந்த ஆழ்வாருக்கும் ஒரு தனிநூலை எழுதவில்லை. இவருக்கு மட்டுமே எழுதினார்! தேசிகன் ஜாதிகளைக்கடந்தவர். வஞ்ச முக்குறும்பைக் கடந்தவர்கள் ஆச்சாரியர்கள். அக்குறும்பில் ஒன்று ஜாதி என்னும் குறும்பு என்பார் திருவரங்கத்து அமுதனார் இராமனுஜ அந்தாதியில்.

    1. Avatar
      mahakavi says:

      >>குலசேகரர் ஒரு மலையாளி<>எஃதெப்படியாயினும் இத்தனியனின் காணபபடும் கோழி திருச்சியிலுள்ள இத்தலமில்லை. இருந்தால், எவரேனுமாவது சொல்லியிருப்பார்களே!? <>திருக்கோழியைப்பற்றி எழுதும்போது திருப்பாணாற்றாழ்வாரை இருட்டடிப்புச்செய்வோரை இறைவன் மன்னிப்பதில்லை<<
      First of all the author of the article does not vilify tiruppANAzhwAr (it is not திருப்பாணாற்றாழ்வார் –please note your spelling). Is god that vindictive as to punish people for supposed offenses (that too hurled by some ordinary humans)? We read that even ajAmiLan got to vaikuntham.

      1. Avatar
        BS says:

        வைணவ சம்பிராதாய நம்பிக்கைகளில் ஒன்று இறைவன் தன்னை நிந்தித்தவர்களைக் காட்டிலும் தன் அடியார்களை நிந்தித்தவர்களை விடுவதில்லை. பிரஹலாதவன் சரிதை. ஆச்சாரியர்களும் ஆழ்வார்களும் முதலில் போற்றப்பட்ட பின்னரே இறைவன் வணங்கப்படுவான் என்பதும் நம்பிக்கை. உறையூர் என்றால் முதலில் நினைவுக்கு வரவேண்டியது திருப்பாணாற்றாழ்வாரே (இதுவே சரியான எழுதும் முறை). பின்னர்தான் மன்னர்களைப்பற்றிப்பேசலாம். வைணவத்தின் சிறப்பை இத்தலம் அவ்வாழ்வார் மூலமாக உலக்குக்குத் தெரிவிக்கிறது. இப்படிப்பட்ட விடயத்தை இருட்டட்டுப்புச் செய்து வெறும் ஆழ்வார் அவதார தலமென்று எழுதிவிட்டு சோழனைப்பற்றி நீட்டி எழுதுவது சரியாகாது. ஆழ்வாரைப்பற்றி எழுதாதது ஒரு பெரிய அவமரியாதை.

        எவராகினும் இத்தலத்தைப்பற்றி எழுதுவதற்கு முன், இதன் சிறப்புக்களுக்கு மாசுபடாதவாறு எழுதவேண்டும். இக்கோயிலின் தலபுராணத்தில் இவ்வாழ்வாரின் செயலைப்பற்றியும் அவரடைந்து முக்தியின் மூலம் உலகுக்கு என்ன சொல்லப்பட்டது என்றும் தெரியாமல் எழுதலாமா?

        1. Avatar
          mahakavi says:

          Why didn’t tiruppANAzhwAr sing about the azhagiya maNavALan in uRaiyUr (where he was born) but went across the river to sing about ranganAthar? Is azhagiya maNavALan not worthy of the AzhwAr’s praise? I am sure sampradAyam has a ready answer for that.

    2. Avatar
      mahakavi says:

      >>இந்நூல் சொல்வது குலசேகரர் ஒரு மலையாளி<<
      This is a chauvinistic statement—does not matter who made it in the first place. In the first millennium CE it was all Thamizh-speaking cEra nADu. Kulasekara AzhwAr wrote his perumAL tirumozhi in chaste Thamizh. MalayALam as an independent language evolved only towards the end of the first millennium, according to generally accepted sources.

  3. Avatar
    BS says:

    //திருவரங்கம், திருக்கரம்பனூர் எனும் உத்தமர்கோவில், மற்றும் திருவெள்ளறை ஆகிய திவ்யதேசங்கள் உறையூருக்கு மிக அருகில் உள்ளன. //

    மிக அருகில் என்ற சொற்றொடருக்கு என்ன பொருள்? குறைந்தது ஒரு ஐந்து கி.மீ களுக்குள் இருக்கலாமா? சரி ஒரு பத்து கி.மீகளுக்குள் இருக்கலாமா?

    திருவரங்கமும் உறையூரும் 15 கி.மீகளுக்கப்பால்; உத்தமர் கோயில் (கோவில் என்பது பிழை) திருவெல்லறையும் திருச்சி-துறையூர் சாலையில். 27 மைல்கள் திருவெல்லறைக்கு. 18 மைலகள் உத்தமர் கோயிலுக்கு.

    உறையூர் மட்டுமே திருச்சி மாநகரத்துக்குள் இருக்கும் திவ்ய தேசமாகும். திருவரங்கம் திருச்சிக்குப்பக்கத்தில். உத்தமர் கோயிலும் திருவெள்ளறையும் மட்டுமல்ல, திருப்பேர்நகர் (அப்பக்குடத்தான்), திருஅன்பில் ஆகியவையும் திருச்சிக்கு வெளியேயுள்ள திவ்ய தேசங்களாகும். திருக்கோழிக்கு மிக அருகில் என்றால், அது வெக்காலியம்மன் கோயிலே. அதாவது திருக்கோழிக்கு அடுத்த பஸ் ஸ்டாப்.

  4. Avatar
    ஜெயஸ்ரீ ஷங்கர் says:

    தங்களின் வரலாற்றுச் சான்றுகள் கொண்ட கட்டுரை சிறப்பு.
    சமீப காலமாக திருச்சிக்குள் இருக்கும் உறையூர் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்தலமாக விளங்கி வருகிறது.
    மேலே விமானம் இல்லாமல், வரப்ரசாதியாக தன்னை நாடி வரும் பக்தர்களுக்கு கேட்டதையும் நினைத்ததையும் கற்பகவிருக்ஷம் போல வாரித்தருகிறாள்
    வெக்காளியம்மன் . நமது கோரிக்கைகளை அவர்கள் தரும் மஞ்சள் பாரத்தில் எழுதி அம்மனின் பாதத்தில் வைத்தெடுத்து சூலத்தில் கட்டி விட்டு சென்றால்,
    எழுதிய அனைத்தும் வரமாக நடந்து விடுவதே அந்த அம்மனின் வரப்பிரசாதம். ஒரு சூலமாக இருந்தது இப்போது ஐந்து சூலங்களும் கோரிக்கை சீட்டுக்களால்
    நிரம்பி மரம் போல நிற்பதைக் காணும் போது அம்மனின் சக்தி தெரிகிறது. கூட்டம் வந்தவண்ணம் இருக்கிறது. உறையூர் வெக்காளியம்மன் கோவில் திருச்சிக்கு
    மற்றுமொரு அடையாளம் என்றும் சொல்லலாம்.

    1. Avatar
      BS says:

      உறையூரில் வெக்காளியம்மன் கோயில் இருப்பதாக கட்டுரை சொல்லவேயில்லை. அதைச்சொன்னவன் நான்தான். நான் சொல்லாமல் விட்டிருந்தால் நீங்களும் எழுதாமல் விட்டிருந்திருப்பீர்கள்.

      மிகப்புகழ்பெற்ற வெக்காளியம்மன் அடுத்த பேருந்து நிறுத்ததிலேயிருக்க, மறந்துவிடக் காரணம்?

  5. Avatar
    ஷாலி says:

    //ஒரு முறை உறையூரை ஆண்ட ஆதித்தசோழன் பட்டத்து யானை மீது உலா வந்தான். அப்போது அவனுக்கு இவ்வூரின் பெருமையை உணர்த்த இறைவன் எண்ணினார். அவர் வில்வ மரத்தின் நிழலின் கீழ் மேய்ந்து கொண்டிருந்த கோழியை ஏவினார். அது மிக வேகத்துடன் பறந்து சென்று அந்தப் பட்டத்து யானையை எதிர்த்துப் போர் புரிந்துத் தன் அலகினாலும்….//

    மற்றொரு தல வரலாறு……சோழ மன்னன் கரிகால் பெருவளத்தான் தன் பட்டத்து யானை மீதேறி உறையூரை வலம் வந்துகொண்டிருந்த போது யானைக்கு மதம் பிடித்து எல்லோரையும் துன்புறுத்த ஆரம்பித்தது.யானையை அடக்க முடியாமல் மன்னனின் படை வீரர்கள் கலங்கினர்.சிவ பெருமான் மீது தீராது பக்தியுள்ள மன்னன் இறைவனை நினைத்து பிரார்த்தனை செய்தான்.சிவ பெருமானும் கருணை கூர்ந்து உறையூர் தெருவிலுள்ள ஒரு கோழியை தன் கடைக்கண்ணால் நோக்க (ஏழாம் அறிவு), அக்கோழி அசுர பலம் பெற்று பறந்து சென்று யானையின் மத்தகத்தின் மீதமருந்து அதைக்குத்தி தாக்கியது.

    கோழியின் தாக்குதலை சமாளிக்க முடியாமல் யானை மிரண்டு ஓடி ஒரு வில்வ மரத்தினடியின் கீழ் நின்றது.கோழியும் அங்கு வந்து அமர்ந்தது. கோழியின் வீரச் செயலைக்கண்ட அம்மன்னன்,உறையூர் தலத்தின் மகிமையை அறிந்து தான் வணங்கும் சிவ பெருமானுக்கு ( பஞ்சவர்ணேஸ்வரர் ) கோவில் ஒன்றை எழுப்பினான்.இத்தல வரலாற்றை நினைவு படுத்துமுகமாக மூலவர் கருவறை வெளிச்சுவற்றில் வலது புறம், யானையின் மத்தகத்தை கோழி அடக்கும் புடைப்புச் சிற்பம் ஒன்றைக் காணலாம்.

    திருக்கோழிக்கு சிறப்பு வந்தது சிவ பெருமானாலா?…அல்லது மணவாள பெருமாளாலா? பாச்சுடர்.வளவ.துறையன் தான் சொல்லவேண்டும்.

  6. Avatar
    ஷாலி says:

    கோழியூர்,அர்காரூ,அறந்தை,நிகளாபுரி,திருமூக்கிச்சரம்,உறதூர,உரகபுரம்,இப்படி வரலாற்றில் பல பெயர்களில் அழைக்கப்பெறும் உறையூரை ஆண்ட கோப்பெருஞ்சோழன் கொடைச் சிறப்பை பிசிராந்தையார், நாராய்..நாராய் செங்கால் நாராய்..என்னும் தூது விடும் பாடலைப்போல் பாடிப் புகழ்கின்றார்.

    குமரி அம்பெருந்துறை அயிரை மாந்தி
    வடமலைப் பெயர்குவை ஆயின் இடையது
    சோழ நல்நாட்டுப் படினே கோழி
    உயர் நிலை மாடத்து குறும் பறை அசைஇ …-புறநானூறு –

    “ அன்னச் சேவலே! குமரித்துறையில் அயிரை மீனை உண்டு உன் பெட்டையோடு வடமலை செல்கிறாய்! இடையே சோழநாட்டுக்குப் போகும்போது கோழியூரின் ( உறையூர் ) உயர்நிலை மாடத்தில் உள்ள சோழனிடம், நான் பிசிராந்தையாரின் சேவல் என்று சொன்னாய் என்றால், அவன் உன் பெட்டைக்கோழிக்கு நல்ல ஆபரணங்கள் தருவான்.”

    இதுபோல் இளங்கோவடிகளின் சிலப்பதிகாரத்திலும் யானையை அடக்கிய கோழியின் பெருமை குறிப்பிடப்படுகிறது.

    காவுந்திஜையையும் தேவியும் கணவனும்
    முறம் செவி வாரணம் முன் சமம் முருக்கிய
    புறம் சிறை வாரணம் புக்கனன் புரிந்து என்….

    -சிலம்பு புகார் காண்டம். (நாடு காண் காதை)

    கோவலனும் கண்ணகியும் கவுந்தி அடிகளும் உறையூருக்கு செல்லும்போது,உறையூரை கோழிச் சேவல் யானையை வீழ்த்திய இடம் என்று குறிப்பிட்டு பாடுகிறார்.இப்பாடலில் “ முறம் செவி வாரணம் “ என்றால் யானையையும், “புறம் சிறை வாரணம்” என்றால் கோழிச் சேவலையும் குறிக்கும்.

    பண்டைய தமிழில் சேவல் என்றால் பொதுவாக எந்த ஆண் பறவையையும், கோழி என்பது ஆணுக்கும் பெண்ணுக்கும் பொதுப்பெயர் ( கோழி கூவி பொழுது விடியலே…—பழமொழி) பெட்டைக்கோழி என்றால் பெண்.சேவற் கோழி என்றால் ஆண். கோழி என்னும் விரிவாக பொருள் தரும் சொல்லை இன்று நாமக்கல் பிராய்லரில் முடக்கி விட்டோம்.

  7. Avatar
    ஷாலி says:

    //கமலவல்லி நாச்சியாரை மணம் புரிய அரங்கநாதன் திருவரங்கத்திலிருந்து இந்த உறையூருக்கு எழுந்தருளியதை இன்றைக்கும் ஆண்டு தோறும் கொண்டாடி வருகின்றனர்.//

    உறையூரில் பிரபல்யமானது நாச்சியார் கோவில்.ஸ்ரீ ரங்கநாதரால் ஆட்கொள்ளப்பட்டவர்.ஆனால் ஸ்ரீ ரங்கநாயகித் தாயாரால் அங்கீகரிக்கப் படாத மனைவி நாச்சியார்.அவரை ஸ்ரீரங்கத்திலிருந்து பார்க்க வந்த பெருமாள்,மோதிரத்தை விட்டு விட்டு போய் விடுவார்.அந்த மோதிரத்தை திரும்பப் பெற்று வருமாறு ஸ்ரீரங்கநாயகித் தாயார் அடித்து அனுப்புவார் என்பது ஐதீகம்.
    அதை ஒட்டி வருடா வருடம் நடக்கும் திருவிழாவில் நாச்சியாரைப் பார்க்க வரும் பெருமாளின் விக்கிரகத்தை வாழை மட்டையால் அடித்துக்கொண்டே வருவார்கள் பக்தர்கள்.

    ஒன்னு கிடக்க ஒன்னு வச்சுக்கிட்ட ஆண்டவனாலும் அடிக்கு தப்பா முடியாது….

  8. Avatar
    BS says:

    திருப்பாணர்+ ஆழ்வார்= திருப்பாணாழ்வார். சரி.

    எனவே திருப்பாணாழ்வார் என்று எழுதுவது சரி. திருப்பாணாற்றாழ்வார் என்றே எழுதுவதுதான் முறையென்பது சரியன்று. ஆயினும் அப்படி எழுதுவதும் வழக்கம் சான்றுகள் பின்னர் தருகிறேன்.

    இந்த ஆழ்வார், பறையர் என்ற கீழ்ச்சாதி குலத்தவர்களில் ஒரு பிரிவான பாணர் வகுப்பார். பறையர்கள் இசைக்கருவிகளோடு இணைத்துச்சொல்லப்படுவர். பறையென்பதே ஒரு இசைக்கருவி. பாண் என்பதும் இவர்கள் வாசித்த ஒரு இசைக்கருவி. இன்று காணப்படும் பேரூர்கள் அன்று கிடையா. எனவே திருச்சிராப்பள்ளி அன்றில்லை. திருவரங்கமே பேரூர். அது கோயிலைச்சுற்றி மட்டுமே. மற்றபடி சோலைகளால் நிரம்பியது திருவரங்கம். திருவரங்கத்தைப்பாடிய ஆழ்வார்கள் சோலைகளைச் சிறப்பாகக் குறிப்பிட்டார்கள்.

    திருவரங்கத்தைச் சுற்றியே சிற்றூர்கள்; குக்கிராமங்கள். இன்றவையனைத்தும் திருச்சி மாநகரமாகி விட்டன.

    ஆழ்வார்கள் காலம் கி.பி 7லிருந்து 9 வரை. ஆச்சாரியர்கள் காலம் 10லிருந்து தொடங்குகிறது. ஆதியிலிருந்து இன்று வரை தீண்டாமை போற்றப்படுகிறது. அக்காலத்தில் அது கொடூரமாக இருந்தது. ஊருக்கு வெளிப்புறத்திலேயே தீண்டத்தகாதோரின் குடியிருப்பு. ஊருக்குள் நுழைந்தால், அவர்களை பார்த்த மட்டுமே நாம் தீட்டுப்பட்டவர்களாகி விடுவோம் என்பதால் அவர்களுக்கு ஊருக்குள் வர அனுமதியில்லை. எனவே உறையூர் திருவரங்கத்துக்கு வெளியிலுள்ள ஒரு தீண்டத்தகாதோர் குடியிருப்பு. காவிரிக்கரையிலிருந்து பார்க்கும்போது திருவரங்கத்து கோயில் கோபுரம் தெரியும். எனவே தீண்டத்தகாதோர் காவிரிக்கரையிலிருந்தே கோபுரத்தை வழிபட்டு இரங்கநாதர் பக்தர்களாயினர். அவர்களுள் ஒருவரே இப்பாணர். அவர் இயற்பெயர் தெரியவில்லை பாண் என்ற இசைக்கருவியை வைத்து பாசுரங்கள் பாடி இரங்கனை வழிபட்டதால், திருப்பாணர் ஆனார். அவர் அக்கருவியோடு இருப்பதாக விக்கிரஹம் செய்யப்படும். இதன் பின் இவர் எப்படி ஆழ்வாராக வைக்கப்பட்டார் என்பதே வைணவத்தின் சிறப்பு. திருக்கோழியைப்பற்றி எழுத வந்தவர் அதை இருட்டடிப்புச் செய்துவிட்டார். அதுவே முதன்மையாகச் சொல்லப்பட்டிருக்கவேண்டும். ஆனால், கோயிலையமைத்த வைணவர்கள் அப்பாவத்தைச் செய்யவில்லை. திருப்பாணாற்றாழ்வாருக்குத் தனிச்சந்நதி உள்ளேயே அமைத்து வழிபடுகிறார்கள். திருவரங்கத்திலும் தனிச்சந்நிதி உண்டு. அங்கு போகும் நீங்கள் ஆழ்வாரை தொழுதுவிட்டு பெருமாளைத் தொழப்போங்கள். அதுவே முறை.

    ஏன் உறையூர் பெருமாளைப்பற்றிப்பாடவில்லை என்பதற்கு அக்கோயில் அக்காலத்தில் கோபுரமில்லாதவொன்றாக இருந்திருக்கலாம். அதைச்சுற்றி சிற்றூரிருந்து அதற்குள் தீண்டத்தகாதோர் செல்லமுடியாதபடி இருந்திருக்கலாம். எனவே எக்கோபுரத்தை காவிரிக்கரையிலிருந்து தரிசிக்க முடியுமோ அதைப்பாடியுருகியிருக்கலாம். அல்லது திருவரங்கனே இஷட் தெய்வமாக இருந்திருக்கலாம். உறையூரே தீண்டத்தகாதோர் குடியிருப்பாக இருக்க வாய்ப்பில்லை. ஏனெனில் இக்கோயில் இருக்கிறதே! எனவே உறையூருக்கு வெளியில் இருந்திருக்கலாம்.

    திருமங்கையாழ்வார் இக்கோயிலுக்கு ஒரு பாசுரம் பாடியிருக்கிறார். ஆனால் அவர் திருப்பாணாற்றாழ்வாருக்குப் பிந்திய காலத்தவர். திருவரங்கனைப்பற்றி மட்டுமே பாடியவர் பாணர் மட்டுமன்று; தொண்டரடிப்பொடியாழ்வாரும்தான். அவரேன் பிற கோயில்களைப் பாடவில்லையென்றால், அவர் நிலையாக திருவரங்கத்திலேயே கோயிலுக்கு அருகிலேயே ஒரு நந்தவனமைத்து அங்கு வாழ்ந்தார்.

Leave a Reply to mahakavi Cancel reply

Your email address will not be published. Required fields are marked *