தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
tkgowri@gmail.com
இரவு பத்து மணி ஆகிவிட்டது. கருணா நர்சிங் ஹோமில் ஸ்பெஷல் ரூமில் சித்தார்த் கட்டில் மீது படுத்திருந்தான். அபிஜித் அங்கே வந்தான். அவன் பின்னால் நர்ஸ் வந்தாள். அவள் கையில் ட்ரேயில் சூடான பால், பிரெட் மற்றும் பிஸ்கட்டுகள் இருந்தன.
அபிஜித் சித்தார்த்தின் கன்னத்தில் மெதுவாக தட்டிவிட்டு “சித்தார்த்!” என்று தாழ்ந்த குரலில் அழைத்தான். இரண்டு மூன்று முறை அழைத்தப் பிறகு சித்தார்த் கண்களைத் திறந்தான். அவன் முகத்தில் ஜுரத்தின் தீவிரம் வெளிப்பட்டுக் கொண்டிருந்தது.
“விழிப்பு வந்து விட்டதா?” மென்மையான குரலில் கேட்டான்.
ஜுர பாரத்துடன் இருந்த அவன் கண்கள் குழப்பமாக பார்த்தன.
“நான்தான். அடையாளம் தெரிகிறதா?” அபிஜித் கேட்டான்.
அடையாளம் தெரிந்தது போல் சித்தார்த் கண்களாலேயே தெரிவித்தபடி எழுந்து கொள்ளப் போனான்.
அபிஜித் தடுத்து விட்டன.
பக்கத்திலேயே இருந்த கண்ணாயிரம் கொஞ்சம் முன்னால் குனித்து “சித்தூ! விழிப்பு வந்ததா? நான் யார் தெரிகிறதா?” என்று கேட்டார்.
அடையாளம் தெரிந்தது போல் சித்தார்த் தலையை அசைத்தான்.
“சாருக்கு வணக்கம் சொல்லு. நீ ஜெனரல் வார்டில் கிடந்த போது உடனே காரில் உன்னை இங்கே கொண்டு வந்து சேர்த்து விட்டார். உனக்கு மருந்து மாத்திரை கொடுக்கச் செய்தார்.”
“உஷ்!” அபிஜித் கண்ணாயிரத்தைத் தடுத்தான்.
சித்தார்த்தாவுக்கு அந்த பேச்சு புரிந்தாற்போல் இல்லை. அவன் கண்கள் திரும்பவும் மூடிக் கொள்ள தொடங்கின.
“சித்தார்த்! கொஞ்சம் எழுந்து இந்த பாலைக் குடி மருந்து சாப்பிடணும்.” நர்ஸ் தட்டி எழுப்பிக் கொண்டே சொன்னாள். சித்தார்த் பதில் சொல்லவில்லை.
அபிஜித் கட்டில் மீது உட்கார்ந்து கொண்டான். சித்தார்த்தாவை வலுக்கட்டாயமாக தோளைப் பற்றி எழுப்பி உட்கார வைத்தான். நர்ஸ் கையில் இருந்த பிரட்டை பாலில் தோய்த்து சித்தார்த்தின் வாயில் ஊட்டி விட்டான்.
மைதிலி சற்று தொலைவில் சுவற்றில் சாய்ந்து கொண்டு சித்தார்த்தாவை, அபிஜித்தை பார்த்துக் கொண்டிருந்தாள்.
சித்தார்த்தின் முகம் வாடியிருந்தது. அபிஜித் ஏதேதோ பேசிக் கொண்டே வலுக்கட்டாயமாக சாப்பிட வைத்துக் கொண்டிருந்தான். அந்தக் காட்சியை பார்க்கும் போது மைதிலிக்கு கண்ணிமைக்காமல் பார்த்துக் கொண்டே இருக்க வேண்டும் போல் தோன்றியது. அபிஜித்துக்கு வயதானவர்களிடம், குழந்தைகளிடம், நோயாளிகளிடம் பொறுமையும், நறுவிசும் வந்து விடும்.
அவனுடைய பொறுமையை பார்க்கும் போது சில சமயம் ஆச்சரியமாகவும் இருக்கும்.
சித்தார்த்தாவை சாப்பிட வைத்து பாலைக் குடிக்கச் செய்தான். நர்ஸ் சித்தார்த்தின் வாயை நாப்கின்னால் துடைத்து விட்டாள். சித்தார்த்துக்கு பாலை புகட்டும் போது அபிஜித்தின் ஷர்ட் மீது கொஞ்சம் சிந்தியது.
“வாஷ் செய்துக் கொள்றீங்களா சார்?” நர்ஸ் கேட்டாள்.
“பரவாயில்லை. வீட்டுக்குத்தானே போகிறோம்” என்றான், அது ஒன்றும் பெரிய விஷயம் இல்லை என்பது போல்.
நர்ஸ் சித்தார்த்துக்கு மருந்து கொடுத்து விட்டு, ஊசி போட்டாள். அவன் ஏற்கனவே தூக்கத்தில் சரிந்து விட்டான். நர்ஸ் போர்வையை போர்த்தி விட்டாள்.
கண்ணாயிரம் கைகள் இரண்டும் ஜோடித்து கும்பிட்டார். “இன்று மட்டும் நீங்க வந்திருக்கவில்லை என்றால் சித்தூ செத்துப் போயிருப்பான். உங்களுக்கு கோடி கும்பிடு அய்யா” என்றார்.
மைதிலி இந்த உலகத்திலேயே இல்லாதது போல் உறங்கிக் கொண்டிருந்த சித்தார்த்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள். தொண்டையில் துக்கம் அடைத்துக் கொள்வது போல் இருந்தது.
கண்ணாயிரம் சொன்னது உணமைதான். ஜெனரல் வார்டின் படுக்கைகள் காலி இல்லை. அவசர கேசுகள் நிறைய இருந்தன. தானும், அபிஜித்தும் போய் பார்க்கும் போது சித்தார்த் நாற்றமடிக்கும் கழிப்பறைக்கு அருகில் தரையில் படுக்க வைக்கப்பட்டிருந்தான். குளிருக்கு நடுங்கிக் கொண்டிருந்தான். நர்சுகள் அவசர கேசுகளுக்கு பின்னால் ஓடிக்கொண்டு கண்ணாயிரத்தின் வேண்டுகோளுக்கு செவி சாய்க்கவில்லை.
அபிஜித் அரைமணியில் டாக்டர்களுடன் பேசி டிஸ்சார்ஜ் செய்ய வைத்து தனக்குத் தெரிந்த கருணா நர்சிங் ஹோமில் சேர்க்க ஏற்பாடு செய்தான். முன் கூட்டியே போன் செய்து விட்டதால் ஸ்பெஷல் ரூம் தயாராக வைக்கப் பட்டிருந்தது. டாக்டர்கள் உடனே வந்து பார்த்தார்கள்.
அபிஜித் தாமதம் செய்யாமல் செயல்பட்டது நல்லதாகிவிட்டது.
“இனி கிளம்புவோமா?” தாழ்ந்த குரலில் மனைவியை அழைத்தான். மைதிலி இன்னும் அப்படியே சுவற்றில் சாய்ந்தபடி நின்றுகொண்டு சித்தார்த்தைப் பார்த்துக் கொண்டிருந்தாள். அவள் முகம் களையிழந்து தென்பட்டது. ஏதோ கலவரம்!
அபிஜித் மைதிலியின் தோளில் கையை வைத்தான் “மைதிலி! கிளம்புவோமா?” என்றான்.
மைதிலி திடுக்கிட்டாற்போல் அவன் பக்கம் பார்த்தாள்.
“சித்தார்த் பற்றி இனி பயப்பட வேண்டியது இல்லை.” தனக்குத் தானே சொல்லிக் கொள்வது போல் சொன்னான். “வா… போகலாம்.” மனைவியின் தோளைச் சுற்றிலும் கையைப் போட்டு வெளியே அழைத்துப் போனான்.
மைதிலி கணவனுடன் சேர்ந்து நடந்து வந்து கொண்டிருந்தாள். அவள் கால்கள் அந்த அறையை விட்டு வெளியே வருவதற்கு மறுத்தன. ஆனால் அவள் தோளைச் சுற்றியிருந்த அபிஜித்தின் கையின் தொடுகை சுயநினைவுடன் நடந்துகொள் என்று எச்சரித்துக் கொண்டிருந்தது.
வாசலைத் தாண்டி வரும்போது மைதிலி தலையைத் திருப்பி பார்த்தாள். கட்டில் மீது துணைக்கு யாருமே இல்லாத நாதியற்ற நிலையில் ஜுரத்துடன் சித்தார்த்! மைதிலிக்கு அபிஜித்தின் கையைத் தள்ளிவிட்டு சித்தார்த் பக்கம் ஓட வேண்டும் என்று தோன்றியது. மனதில், உடலில் எதிர்ப்பு!
யாரையும் பொருட்படுத்தாத எதிர்ப்பு அது. எதையும் சுலபமாக விட்டுக் கொடுக்கக் கூடிய துணிச்சல்!
அபிஜிதி மைதிலி பின்னால் திரும்பி பார்த்ததை, அவள் முகத்தில் தென்பட்ட எண்ணங்களின் கொந்தளிப்பை கவனித்தான்.
‘உன்னை இங்கே அழைத்து வந்தது என்னுடைய தவறுதான் மைதிலி. இது போன்ற காட்சிகளை பார்த்தால் உன் மனம் வேதனைப் படும்.’ உள்ளூர நினைத்துக் கொண்டான். வழக்கம்போல் அவன் கை மனைவியைத் தாங்கியபடி முன்னோக்கி வழி நடத்தியது.
“கண்ணாயிரம்! நர்ஸிடம் சொல்லி விட்டேன். அவள் ஜாக்கிரதையாக பார்த்துக் கொள்வாள். நீங்க காலை முதல் சித்தார்த்துடன் இருப்பதாகச் சொன்னார்கள். நீங்க வீட்டுக்குப் போய் காலையில் வரலாம்” என்றான்.
“ஆகட்டும் அய்யா” என்றார் அவர்.
“கண்ணாயிரம் கூட இருந்தால் என்னவாகும்?” மைதிலி தன்னையும் அறியாமல் உரத்தக் குரலில் சொல்லிவிட்டாள்.
“ஆகட்டும் அம்மா. அப்படியே இருக்கிறேன்.” வணக்கம் தெரிவித்துக் கொண்டே சொன்னான்.
“போகட்டும். கூட ஒருத்தர் இருப்பது நல்லதுதான். ஏதும் தேவைப் படாது. ஒருக்கால் ஏதாவது தேவைப்பட்டால் போன் செய்யச் சொல்லி நர்ஸிடம் சொல்லுங்கள்.” இரண்டடிகள் முன்னால் வைத்து நர்ஸிடமும் சொன்னான்.
“தவறாக நினைக்காதீங்க கண்ணாயிரம்! யாராவது ஒருத்தர் துணைக்கு இருந்தால் நல்லது இல்லையா?” என்றால் மைதிலி.
“என்ன வார்த்தை சொல்லிட்டீங்க அம்மா! கடவுள் போல் வந்தீங்க. அவன் பிழைத்துக் கொண்டுவிட்டான். நான் இருந்து கொள்கிறேன்.” இன்னொரு முறை கும்பிடு போட்டார்.
மைதிலி, அபிஜித் கீழே வந்து விட்டார்கள். அபிஜித் காரை ஓட்டிக் கொண்டிருந்தான். இருவரின் முகமும் சீரியஸாக இருந்தது. வரும் போது இருந்த சிரிப்புகள், பேச்சுக்கள் லவலேசமும் இருக்கவில்லை.
“என் இவ்வளவு சீரியஸாக இருக்கிறாய்?” அபிஜித் கேட்டான்.
“ஜெனரல் வார்டில் நாம் போகும் போது அவன் கிடந்த நிலை நினைவுக்கு வருகிறது.”
“ஆமாம். நாம் ஆஸ்பத்திரிக்கு வந்தது நல்லதாகி விட்டது.” பெருமூச்சு விட்டுக் கொண்டே சொன்னான். கையை நீட்டி மனைவியின் கையை இறுக்கமாக பற்றிக் கொண்டே “மைதிலி! இந்த உலகத்தில் தாய் தந்தை இல்லாத குழந்தைகள் எல்லோரையும் நமக்கு சொந்தமாக்கிக் கொள்ள வேண்டும் என்று சில சமயம் தோன்றும். சித்தார்த் தாய் தந்தை சின்ன வயதிலேயே இறந்து விட்டார்களாம். பாட்டி கூட சொந்த பாட்டி இல்லையாம். வளர்த்தவளாம். கண்ணாயிரம் சொன்னார்.”
மைதிலி காதில் வாங்கிக் கொண்டிருந்தாள். சித்தார்த்தின் நாதியற்றதன்மை அந்த ஆஸ்பத்திரியில், அழுக்கு விரிப்பின் மீது தீவிரமான ஜுரத்துடன் நிமிடத்திற்கு நிமிடம் மரணத்தை நெருங்கிக் கொண்டிருக்கும் நிலையிலிருந்தே புரிந்து போயிற்று. ஆண், பெண் பேதம் இல்லாமல் எத்தனையோ குழந்தைகள் ஏதோ காரணங்களுக்காக எதிர்காலம் என்பதே இல்லாமல் அற்பாயுஸில் இறந்து போகிறார்கள். சித்தார்த் அப்படி ஆகக்கூடாது. அவன் வாழ வேண்டும். சிறப்பான எதிர்காலம் அமைய வேண்டும்.
“மைதிலி! என்னவாயிற்று?” அபிஜித் தோளைப் பற்றி உலுக்கிக் கொண்டே கேட்டான்.
“ஒன்றுமில்லை.”
“என் இப்படி விறைப்பாக உட்கார்ந்திருக்கிறாய்?”
மைதிலி சாதாரணமாக உட்கார்ந்து கொண்டாள்.
- மருத்துவக் கட்டுரை – நரம்பு நார்க் கழலை ( Neurofibroma )
- ஜெயகாந்தன்
- செவ்வாய்த் தளத்தின் மீது தூசி மூடிய பனித்திரட்சி வளையத்தில் [Glacier Belts] பேரளவு பனிநீர் கண்டுபிடிப்பு
- பொழுது விடிந்தது
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] – அத்தியாயம் -1
- நதிக்கு அணையின் மீது கோபம்..
- நானும் நீயும் பொய் சொன்னோம்..
- முதல் பயணி
- அந்த சூரியனை நனைக்க முடியாது (ஜெயகாந்தன் எழுத்துக்கள்)
- சேதுபதி கவிதைகள் ஒரு பார்வை
- கடைசிக் கனவு
- விதிவிலக்கு
- பயணங்கள் முடிவதில்லை
- அப்பா எங்க மாமா
- மூன்றாவது விழி
- தொடுவானம் 63. வினோதமான நேர்காணல்
- பழம்பெருமை கொண்ட பள்ளர் பெரு மக்கள்
- செங்கண் விழியாவோ
- மரம் வளர்த்தது
- கூட்டல் கழித்தல்
- நூறாண்டுகள நிறைவடைந்த இந்திய சினிமாவில் ஜெயகாந்தனுக்குரிய இடம்
- சிறந்த சிறுகதைகள் ஒரு பார்வை -2
- வைரமணிக் கதைகள் – 11 ஓர் உதயத்தின் பொழுது
- ஒரு பழங்கதை
- ஆத்ம கீதங்கள் – 24 கேள்வியும் பதிலும் .. !
- ஜெயகாந்தன் – இலக்கிய உலகைக் கலக்கியவர்
- சிறுகதை உழவன்
- மிதிலாவிலாஸ்-9