தெலுங்கில்: யத்தனபூடி சுலோசனாராணி
தமிழில்: கௌரி கிருபானந்தன்
tkgowri@gmail.com
காலையில் எழுந்ததுமே அபிஜித் ஆஸ்பத்திரிக்கு போன் செய்தான். நம்பர் பிசியாக இருந்தது. அவன் பல்லைத் தேய்த்துவிட்டு வருவதற்குள் மைதிலி காபி தயாரித்து கோப்பையில் ஊற்றிக் கொண்டிருந்தாள்.
“இரவு போன் ஏதாவது வந்ததா?” கேட்டான.
“இல்லை.” கோப்பையை நீட்டிக் கொண்டே சொன்னாள்.
“நன்றாக உறங்கி விட்டேன். நடுவில் விழித்துக் கொள்ளவே இல்லை.” கோப்பையை வாங்கிக் கொண்டே சொன்னான்.
“எனக்கு சரியாக தூக்கம் வரவில்லை. நடு நடுவில் முழிப்பு வந்து கொண்டே இருந்தது.”
அபிஜித் ஒரு நிமிடம் மனைவியைக் கூர்ந்து பார்த்தான் “நீ ஏன் தன்னை மறந்து நிம்மதியாக தூங்க மாட்டாய்?”
“எனக்குத் தெரியாது. என்னால் அப்படி தூங்க முடியாது.”
“சைக்ரியாடிஸ்ட் யாரையாவது கேட்போமா?”
“வேண்டவே வேண்டாம்.”
“ஏன் வேண்டாம்? பயமா?”
“பயம் உன்னைப் பற்றிதான்.”
“என்னை பற்றிய பயமா? ஏனாம்?” ஆர்வத்துடன் கேட்டான்.
‘அவர்கள் ஏதாவது சொன்னால் சீரியஸாக எடுத்துக் கொண்டு என் உயிரை எடுப்பாய்.”
அபிஜித் சிரித்தான். “அவர்கள் சொல்வதை சீரியஸாக எடுத்துக் கொள்ளவில்லை என்றால் நோயாளிகளுக்கு எப்படி குணமாகும்?”
“எனக்கு எந்த நோயும் இல்லை என்று ஆயிரம் தடவை சொல்லிவிட்டேன். இரவு முழுவதும் தூங்கவில்லை என்றாலும் காலையில் எழுந்து கொள்ளும் போது எனக்குக் களைப்பாக இருக்காது. குறைந்தபட்சம் தலைவலி கூட இருக்காது.“
“ஓ.கே. ஓ.கே. நோ ஆர்க்யுமென்ட்ஸ். இன்று ஏற்கனவே முக்கியமான மீட்டிங் ஒன்று இருக்கிறது.” அவன் போய் திரும்பவும் போன் செய்தான். நர்ஸ் எடுத்தாள். சித்தார்த் இரவு நன்றாக தூங்கியதாகவும், இப்பொழுதுதான் காபி குடித்ததாகவும் சொன்னாள்.
“சித்தார்த் நன்றாக இருக்கிறானாம்.” போனை வைத்துக் கொண்டே சொன்னான். “மைதிலி! மதியம் லஞ்சுக்கு சீக்கிரம் வந்து விடுகிறேன். ஒரு நிமிடம் போய் பார்த்து விட்டு வருவோமா?” என்றான். மைதிலி தலையை அசைத்தாள்.
அபிஜித் மணியைப் பார்த்துக் கொண்டான். “எட்டரை மணி பிளயிட்டில் மிஸ்டர் சங்கரன் வருகிறார். ஏர்போர்ட்டுக்குப் போகணும். அவர் வீட்டுக்குப் போகும் முன் பத்து நிமிடங்கள் அவரிடம் பேசணும்.”
அர்ச்சனா பார்மாஸ்யூடிகல் .கம்பெனியை டேக் ஓவர் செய்து கொள்ள வேண்டும் என்று இன்று போர்ட மீட்டிங்கில் முடிவு எடுக்கப் போகிறார்கள்.
“நஷ்டத்தில் மூழ்கியிருக்கும் கம்பெனி நமக்கு எதற்கு? ஏற்கனவே இருப்பவை போதாதா?”
“நான் போடும் முதலீடு ரொம்ப குறைவு. வியாபாரத்தைத் தொடங்க வேண்டும் என்று ஆர்வத்துடன் நிறைய முதலீடு செய்யக் கூடியவர்கள் நாலுபேர் இருக்கிறார்கள். நான் மாரல் சப்போர்ட் மட்டும்தான்.”
மைதிலி தலையை குறுக்காக அசைத்தாள். “நீயா? எதையாவது நினைத்துக் கொண்டுவிட்டால் அதை முடிக்கும் வரையில் உன் ரத்தத்திலேயே அந்த எண்ணம் கலந்திருக்கும்.”
“வேண்டாம் என்கிறாயா? சொல்லு.” அருகில் வந்து அமர்ந்து கொண்டே கேட்டான்.
“உன் விருப்பம். பொறுப்பு உன்னுடையது. எல்லாவற்றையும் தாங்கிக் கொள்ளவேண்டியது நீ.”
“உனக்கு எந்த பங்கும் இல்லையா?” சீரியஸாக கேட்டான்.
“உன் பின்னாலேயே நானும். கல்யாணம் பண்ணிக் கொண்ட பிறகு தவிர்க்கத்தான் முடியுமா?”
“கல்யாணம் பண்ணிக் கொண்டவன் என்ற மரியாதைக்காகதான் எல்லாவற்றையும் சகித்துக் கொண்டு வருகிறாயா?”
“அபீ!” தலையை நிமிர்த்தி கோபமாகப் பார்க்கப் போன மைதிலி அவன் முகத்தைப் பார்த்ததும் பக்கென்று சிரித்துவிட்டாள். அவன் முகவாய்க் கட்டையைப் பிடித்து தள்ளிவிட்டு “ரொம்பவும் பெண்டாட்டி தாசன் போல் பார்க்காதே. அது உனக்கு பொருந்தாது” என்றாள்.
அபிஜித் இரண்டு கைகளாலும் மனைவியின் முகத்தைப் பற்றிக் கொண்டு “அம்மாடி! சித்த முன்னாடி என்னாடா இன்று பொழுது வாக்குவாதத்தில் விடிந்து விட்டதே என்று பயந்துவிட்டேன். சிரித்து விட்டாய். பரவாயில்லை. நான் பார்மாஸ்யூடிகல் பேக்டரி விஷயத்தில் எந்த முடிவு எடுத்தாலும் நல்லதுதான் நடக்கும்” என்றான்.
“அப்படியா!” மைதிலி வேண்டுமென்றே இதழ்களை அகலமாய் விரித்து போஸ் கொடுத்தாள். “இந்த மாதிரி போட்டோ ஒன்றை எடுத்து படுக்கை அறையில் மாட்டி விடுகிறேன். தினமும் காலையில் எழுந்ததும் அதை பார்த்துக் கொள்ளலாம்.”
“ஊஹும். ஸ்டில் பிக்சர் எல்லாம் சரி வராது. உயிரோட்டத்துடன் இருப்பது மிகவும் முக்கியம்.”
“உன்னுடன் ரொம்ப சிக்கல்தான் அபீ! உனக்கு சாமர்த்தியம் அதிகம். நீ சீரியஸாக இருந்தால் எதிராளியையும் அதே மூடுக்குக் கொண்டு வந்து விடுவாய். நீ சிரித்தால் எதிரில் இருப்பவர்களும் சேர்ந்து சிரித்துதான் ஆக வேண்டும். சரி, போய் குளித்து விட்டு வா. நேரமாகிக் கொண்டிருக்கிறது” என்று எச்சரித்தாள்.
அபிஜித் போய் குளித்து விட்டு தயாராகி வந்தான். மைதிலி காலை உணவுக்கு தயார் செய்து கொண்டிருந்தாள்.
அதற்குள் போன் மணி ஒலித்தது. “வம்சீயா? நான் ஏர்போர்ட்டுக்கு கிளம்பிக் கொண்டிருக்கிறேன். நீங்க நேராக் வந்து விடுவீங்களா? என்ன டிரைவர் வரவில்லையா? ஓ.கே. நான் வந்து உங்களை பிக்கப் செய்து கொள்கிறேன். இப்போதே கிளம்புகிறேன்.” அபிஜித் போனை வைத்துவிட்டு ப்ரீப்கேசை, கார் சாவியை எடுத்துக் கொண்டு புறப்பட்டான். “மைதிலி! வம்சிகிருஷ்ணாவை அழைத்துக் கொண்டு ஏர்போர்ட்டுக்கு போகணும். நேரம் இல்லை. பிரேக்பாஸ்ட் சாப்பிட முடியாது” என்றான்.
“இரண்டே இட்டிலி. சீக்கிரமாக சாப்பிட்டு விடலாம்.” மைதிலி தட்டில் கொண்டு வந்தபடியே சொன்னாள்.
“நோ டியர்! ப்ளீஸ்.. நீ சாப்பிட்டுவிடு. நீ சாப்பிடாமல் இருந்தால் எனக்குக் கோபம் வரும். லஞ்சுக்கு கட்டாயம் வந்து விடுகிறேன்.” சொல்லிக் கொண்டே போய் விட்டான். கார் கிளம்பிய சத்தம் கேட்டது.
மைதிலி உணவு மேஜையின் முன்னால் உட்கார்ந்தாள். சாப்பிடணும் போல் இல்லை. இருவரும் சேர்ந்து சாப்பிடுவது வழக்கம். அவன் இல்லை என்றால் ஏனோ தெரியாது தனக்கு பசியும் இருக்காது.
மைதிலி ராஜம்மாவைக் கூப்பிட்டு எல்லாவற்றையும் எடுத்துவிடச் சொன்னாள். ஒரு டம்ளர் ஜூஸ் மட்டும் குடித்தாள்.
பதினோரு மணியாகும் போது சாரதாம்பாள் வந்தாள். மாமியின் மகள் இறந்து போன திதி. கோவிலில் பூஜை செய்ய வைத்து பிரசாதம் கொண்டு வந்திருந்தாள். மாமியின் மகள், மாப்பிள்ளை, பேரக் குழந்தைகள் எல்லோரும் விமான விபத்தில் ஒரே நேரத்தில் இறந்து விட்டார்கள். அந்த துக்கத்திலிருந்து, தனிமையிலிருந்து வெளியே வருவதற்கு அந்த தம்பதிகள் இருவரும் இன்றளவும் முயற்சி செய்து கொண்டு இருக்கிறார்கள். மைதிலி, அபிஜித் என்றால் அவர்களுக்கு உயிர். குழந்தைகளை இழந்தது முதல் மேலும் நெருக்கமாகி விட்டார்கள்.
“மைதிலி! குழந்தைகள் இல்லாமல் இருப்பதே பெரிய வரம். பிறந்து அவர்களை இழப்பதை விட சோகம் வேறு இல்லை.” மாமி அடிக்கடி சொல்லுவாள்.
மாமி வந்து பேசிக் கொண்டிருக்கையில் ஒருமணி ஆகிவிட்டது. மாமியிடம் பேசிக் கொண்டிருந்தாலும் மைதிலியின் பார்வை அடிக்கடி கடியாரத்தின் பக்கம் போய்க் கொண்டிருந்தது. அபிஜித் இப்போதோ சிறிது நேரத்திலேயோ வந்து விடுவான்.
போன் மணி ஒலித்தது. மைதிலி உடனேயே போய் எடுத்தாள். மறுமுனையில் பேசியது அபிஜித் இல்லை. நர்சிங் ஹோமிலிருந்து நர்ஸ்.
“மருந்துகள் வேண்டும் மேடம்! எங்களிடம் ஸ்டாக் இல்லை. அருகில் இருக்கும் மெடிகல் ஷாப்பிலும் இல்லை.” என்று மருந்துகளின் பெயர் சொன்னாள். மைதிலி குறித்துக் கொண்டாள்.
“மேடம்! அவனுக்கு மாற்றிக் கொள்ள உடைகள் கூட வேண்டும். நேற்று இரவு வாந்தி செய்து கொண்டதால் க்ளீன் செய்ய அனுப்பியிருக்கிறோம். நீங்க வரும் போது மாற்று உடைகள் கொண்டு வாங்க” என்று சொல்லிவிட்டு வைத்துவிட்டாள். மைதிலி ஒரு நிமிடம் அப்படியே நின்று விட்டாள்.
மருந்துகள் மட்டும் என்றால் ஆபீஸ் பையன் மூலமாய் அனுப்பிவைக்கலாம். ஆனால் உடைகள்? அளவு என்ன?
அபிஜித் வந்தால் சொல்லுவோம் என்று காத்திருந்தாள். மணி இரண்டு நெருங்கிக் கொண்டிருந்தது. அபிஜித் வரவில்லை.
நர்சிங் ஹோமிலிருந்து நர்ஸ் திரும்பவும் போன் செய்தாள்.
அபிஜித் மீட்டிங்கில் மாட்டிக் கொண்டு விட்டானாய் இருக்கும். போன் செய்யவும் நேரம் கிடைக்கவில்லை போலும். இனி லஞ்சுக்கு வரும் வாய்ப்பு இல்லை. மைதிலி மருந்துகள் வாங்குவதற்கு தானே கிளம்பினாள். ரெடிமேட் ஆடைகளின் கடைக்குப் போய் சித்தார்த்தின் உயரம், வயது சொல்லி இரண்டு ஜோடி உடைகளை தேர்வு செய்தாள். மேலும் இரண்டு ஜோடி உடைகள் சித்தார்த்துக்கு பொருத்தமாக இருக்கும் என்று தோன்றவே அவற்றையும் பேக் செய்ய வைத்தாள்.
மருந்துகள், பழங்கள், பிஸ்கெட்ஸ் எல்லாம் வாங்கிக் கொண்டு நர்சிங் ஹோமுக்கு வந்தாள். அவள் வந்து சேரும்போது சித்தார்த் கண்களை மூடி படுத்திருந்தான். மைதிலி நிசப்தமாக அறை வாசலில் வந்து நின்றாள்.
லேசாக வளர்ந்த தாடி, அப்பொழுதான் உலகததை எட்டி பார்க்கும் துளிர் போல் இளம் பச்சை நிறத்தில் இருந்தது. மூக்குக் கண்ணாடி இல்லாத அவன் முகத்தில் மூக்கும், கண்களும் எடுப்பாக இருந்தன. மைதிலி அவன் முகத்தையே பார்த்தபடி ஓவியம் போல் நின்று விட்டாள்.
“வந்தீங்களா மேடம்! உங்களுக்காகத்தான் காத்துக் கொண்டிருக்கிறேன்.” நர்ஸ் வந்து அவள் கையிலிருந்து பையை வாங்கிக் கொண்டாள். மருந்துகள், உடைகள் பழங்கள் எல்லாம் வெளியில் எடுத்தாள். அரைகுறை தூக்கத்தில் இருந்த சித்தார்த் பேச்சுக் குரல் கேட்டு கண்களைத் திறந்துப் பார்த்தான்.
எதிரே வாசற்படியில் மைதிலி நின்றிருந்தாள். அவன் கண்களில் இன்னும் ஜுரத்தின் தீவிரம் சிவப்பாய் தென்பட்டுக் கொண்டிருந்தது. தடுமாறிக்கொண்டே, கூச்சத்துடன் எழுந்து உட்கார்ந்தான். ஆஸ்பத்திரியில் கொடுத்த நீல உடை லூசாக தொங்கிக் கொண்டிருந்தது.
“சித்தார்த்! மேடம் வந்திருக்காங்க.” நர்ஸ் உரிமையுடன் சொன்னாள்.
சித்தார்த் கைகள் தன்னையும் அறியாமல் வணக்கம் தெரிவித்தன. அவன் கண்கள் அவளுக்குப் பின்னால் யாருக்காகவோ ஆர்வத்துடன் தேடின.
“சார் வரவில்லை” சொன்னாள் நர்ஸ். “காலை முதல் நான்கைந்து முறை அபிஜித் சாருக்காக கேட்டுக் கொண்டிருந்தான் மேடம்.” நர்ஸ் மருந்தைக கொடுத்துக் கொண்டே சொன்னாள்.
அபிஜித் வரவில்லை என்று தெரிந்ததும் அவன் கண்களில் ஆர்வம், எதிர்பார்ப்பு மாயமாகிவிட்டது. நர்ஸ் கொடுத்த மருந்தை குடித்து விட்டு பின்னால் சாய்த்து படுத்துவன் கண்களை மூடிக் கொண்டான். மைதிலியிடம் எந்த பேச்சும் வைத்துக் கொள்ள விரும்பாதவன் போல் மௌனமாக இருந்துவிட்டான்.
அந்த மௌனம், பற்றற்ற தன்மை யோக சமாதியில் நிலையில் இருக்கும் ஒரு முனிவரைபோல், இந்த உலகத்தில் எதன் மீதும் ஆர்வமோ, விருப்பமோ இல்லாமல் மௌன சாமியாராக வேறு உலகத்தில் வாழ்வது போல் இருந்தது.
மைதிலியால் அங்கிருந்து போக முடியவில்லை. அவனுடைய ஆர்வமற்றதன்மை அவளுக்கு அவமானமாகத் தோன்றவில்லை. அவனைப் பார்க்கும் போதே மகிழ்ச்சி வெள்ளமாக பெருக்கெடுத்தது. உள்ளே வந்தாள். இந்த உலகத்தையே மறந்து விட்டவள் போல் சித்தார்த்தின் முகத்தையே பார்த்துக் கொண்டிருந்தாள்.
- மவுஸ் பிடிக்கும் விமர்சகனும், படமெடுக்கும் மணி – RAT – னமும், சுஹாசினியின் கட்டளையும்.
- சூழலியல் நோக்கில் புறநானூற்றில் நீர் மேலாண்மை
- ரா. ஸ்ரீனிவாசன் கவிதைகள்— ஒரு பார்வை
- சூட்டு யுகப் பிரளயம் வந்து விட்டது ! மாந்தர் செய்ய வேண்டிய கடமை என்ன ?
- இரு குறுங்கதைகள்
- அப்பாவிக் குழந்தைகளின் அன்பான வேண்டுகோள்…
- இலங்கையில் தமிழ் மற்றும் சிங்கள மொழிகளின் சமுதாயப் பணிகள்
- புறநானூற்றால் அறியலாகும் தமிழர் பண்பாடுகள்
- தமிழ் ஸ்டுடியோவின் இலக்கிய இணைய இதழ் கூடு
- மிதிலாவிலாஸ்-10
- தொடுவானம் 64. நான் ஒரு மருத்துவ மாணவன்
- வைரமணிக் கதைகள் – 12 கறவை
- மறுவாசிப்பில் வண்ணதாசனின் “மனுஷா………மனுஷா……..”
- ஸ்ரீரங்கம் சௌரிராஜன் கவிதைகள் ” உரிய நேரம் ” தொகுப்பை முன் வைத்து…
- நான் யாழினி ஐ.ஏ.எஸ் [நாவல்] அத்தியாயம் -2
- ஆத்ம கீதங்கள் – 25 காதலிக்க மறுப்பு .. !
- வீடு பெற நில்!
- சென்னையில் ஜெயகாந்தனுக்கு நினைவஞ்சலி
- ஜெமியின் காதலன்