இரவீந்திர பாரதியின் “காட்டாளி” – யதார்த்தமான சம்பவங்களின் பின்னல்

This entry is part 19 of 26 in the series 26 ஏப்ரல் 2015

 

[       இரவீந்திர பாரதியின் “காட்டாளி” நாவலை முன்வைத்து]

நாவல் என்னும் வகைமை சார்ந்த இலக்கியம் பலவிதங்களில் இன்று ஆளப்படுகிறது. மிகப்பெரிய ‘மெகா’ நாவல்களின் காலமாக இது இருந்து வருகிறது. ஒரே ஒரு முடிச்சு வைத்து அதைக் கூறுவதாக இருப்பது சிறுகதை என்றும் பல முடிச்சுகள் கொண்டது நாவல் என்றும் முன்பு கூறினார்கள். இவற்றில் கூட முடிச்சை அவிழ்த்துக் காட்டி அதற்கு ஒரு தீர்வைச் சொல்ல வேண்டும் என்றும், வேண்டாம், வேண்டாம் வாசகனே முடிச்சை அவிழ்த்துப் பார்க்கட்டும் என்றும் இரு வேறு கருத்துகள் எழுந்துள்ளன. ஆனால் இக்கருத்துகள் இப்போது மாறிவிட்டன. முடிச்சுகளே இல்லாத சிறுகதைகளும் நாவல்களும் வருகின்றன. அவை வெறும் நிகழ்ச்சிகளை மட்டும் காட்டி விட்டுச் செல்கின்றன. எந்த ஒரு தனி பாத்திரப் படைப்பையும் மையப்படுத்தாமல் பின்நவீனத்துவ சாயல் கொண்டதாக எல்லாவற்றையும் கட்டுடைத்துப் பல நாவல்களும் வருகின்றன. நிகழ்கின்ற சம்பவங்களைக் காட்டி வாசகனை முடிவெடுக்கச் சொல்லும் நாவல்கள்தான் நவீன இலக்கியத்தில் பெரும்பானவை என்று கூடச் சொல்லலாம்.

இந்தச் சூழ்நிலையில் இரவீந்திரபாரதியின் “காட்டாளி” எனும் நாவல் வந்துள்ளது. முழுக்க முழுக்கக் கிராமத்தில் நடக்கும் இந்நாவலில் மண் வாசனை சற்று அதிகமாகவே வீசுகிறது. கிராமத்தில் புழங்கும் யதார்த்தமான மொழியும் சொலவடைகளும் சற்றுத் தாராளமாகவே விரவிக் காணப்படுகின்றன. இந்நாவல் காட்டும் மனிதர்கள் எல்லாருமே வெள்ளந்தியானவர்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசாதவர்கள். பிறர் மீது அன்பு வைத்து அந்த அன்பைப் பெறுபவர்கள். அவர்களிடையே நிகழும் பல்வேறு சம்பவங்களைப் பின்னித்தான் இந்த நாவலை இரவீந்திரபாரதி படைத்துள்ளார்.

நாவல் நடைபெறும் காலக்கட்டம் ஒரு சில இடங்களில் குறிப்பாக உணர்த்தப்படுகிறது. கிராமங்களுக்கு வானொலிகள் வரும் காலம் அது. தந்தை பெரியார் தமிழகம் முழுதும் சுற்றி வந்து கூட்டங்கள் பேசிய காலம் அது. ஆனால் அப்போது திண்ணைப் பள்ளிகூடங்களைக் காட்டுவது சரியா எனத் தெரியவில்லை. கிராமத்துப் பிள்ளைகளைப் பள்ளிக்கு அனுப்புதல், விதவைத் திருமணம், சமூகத்தின் அடிமட்டத்தில் இருப்பவர்களையும் மதித்தல் போன்ற எல்லாவற்றையும் இதில் பார்க்க முடிகிறது.

பெரும்பாலும் எல்லாத் திருமணங்களிலும் நாதஸ்வரக்காரர்கள் சாப்பிடச் செல்லும்போது எல்லாமே முடிந்திருக்கும். ஒருசில திருமணங்களில் எதுவும் கூட அவர்களுக்கு இருக்காது. அவர்களால் முதலில் சென்று சாப்பிடவும் முடியாது. கிராமத்து விருந்துகளிலும் பலவிதமான வேலைகள் செய்து கொண்டிருக்கும் நாலாந்தர மக்களிலும் இதைப்பார்க்க முடிகிறது. இதற்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று ஓரிடத்தில் குறிப்பாகக் காட்டுகிறது நாவல்.

கிராமத்துத் திருவிழாவில் ஆடுவெட்டி கறி விருந்து பறிமாறப்படுகிறது. அப்போது ”கடசியில தோட்டிங்களுக்கும் கொஞ்சம் குடுங்கப்பா! அவுங்களும் நம்மளோடதான ஓரியாடிக்கிணு கீறாங்க! இனிமேலெல்லாம் நல்ல கறியிலியே கொஞ்சம் அவுங்களுக்கும் பிரிச்சி குடுத்தா என்னா? மாரி இப்படி செஞ்சா பரவாயில்லியா?”

இந்தக் கேள்வியில் இருக்கும் மனிதநேயத்துப் பதில் இப்படி வருகிறது. ஆதிக்கத்திற்குப் பயப்படும் மனம் அதற்குள் மாறிவிடுமா?

“எதுக்கும் ரெண்டொருத்தரக் கேட்டு செஞ்சாப் பரவாயில்ல! முன்ன முன்ன அவுங்களுக்குத்தன் குடுக்கணுமான்ணு ஆளாளுக்கு மொணருவாங்க!

கடைசியில் ஆசிரியர் தீர்வு இப்படி வருகிறது. எதற்கெடுத்தாலும் ஏதாவது சொல்லிக் கொண்டு நல்ல எண்ணங்கள் நிறைவேறாமல் இருக்க சிலர் இருக்கிறார்கள் என்பதைக்காட்ட “அடுத்த தடவ குடுத்துப் பாக்கலாம்; பேசினா பேசிப் போறாங்க! எப்பப் பேசாம கீறாங்க! எத செஞ்சாலும் ஏதாவது பேசிக்கினுதாம் இருப்பாங்க”

அதாவது சில நாம் எடுக்கும் நல்ல முடிவுகளுக்குத் தடங்கல்கள் வரும் . ஆனால் அவற்றை எப்படியும் தீர்க்க வேண்டிய முறையில் தீர்க்க வேண்டும் என்ற திடமான முடிவை எடுக்க வேண்டியதின் அவசியத்தை இப்பகுதி காட்டுகிறது.

ஒரு விதவையைத் திருமணம் செய்துகொண்ட காட்டாளி ஊர்க்கூட்டத்தில் விதவைகளின் மறுவாழ்வு குறித்துப்பேசுவதும் முக்கியமான ஒன்று. ” புருசன் செத்தா வயசு பொம்பள காலமெல்லாம் சும்மாவே இருக்கணுமா? ஊருதான் அவள சும்மா வுடுமா? அவளப்பத்தி எத்தனை அவதூறு? அவ ஒரு துணையைத்தேடி ஊரார் முன்னாடியே வெளிப்ப்டையா வாழ்க்கய அமச்சிக்கணும். முண்டச்சின்றது ரொம்ப ரொம்ப அசிங்கமான பேரு. அத ஒளிக்கணும். சின்ன புள்ளங்களுக்கு கல்யாணம் பண்ணணும்.”

ஆனால் ஊரார் அவர் பேச்சுக்கு எதிர்ப்பு தெரிவித்து அவரைப்பிடித்துக் கட்டிவைக்க முயல அவர் அவர்களைப் புறந்தள்ளி விட்டுப் பறந்து விடுகிறார். இப்படித்தான் கிராமத்தில் பள்ளி ஒன்றைக்கொண்டு வந்து அதற்குள் மாடு மேய்க்கும் பிள்ளைகளைச் சேர்க்கும் பதிவும் ஆனால் தன் பிள்ளை மாடுதான் மேய்க்கப் போக வேண்டும் என்று விரும்பும் தந்தைகளையும் காட்டுகிறது நாவல். பெற்றோர்களின் பொருளாரத்திற்குப் பிள்ளை மாடுமேய்ப்பது மிகவும் உதவியாயிருந்த காலம் அது. மகனின் எதிர்கால வாழ்வை விட அவர்களின் நிகழ்கால வாழ்வின் கேள்விக்குறிக்குப் பதில் சொல்ல வேண்டிய நிலையில் இருந்தார்கள் அவர்கள்.

இரவீந்திரபாரதியின் உவமைகள் மிகவும் இயல்பாக உள்ளன. திருமணம் பேச ஒரு பெண்ணைப் பார்க்கப் போகிறார்கள். அந்தப் பெண் பற்றி “பொம்மைக்குப் புடவை கட்டியது போல துணிப் புதையலுக்குள்ளிருந்து நிலவு ஒன்று தலை கவிழ்ந்து நின்றது. சற்று நேரத்திற்கு எல்லாருடைய முகத்திலும் பொலிவையும், பூரிப்பையும் பூசிவிட்டுச் சென்றது அந்தக் குட்டி நிலா” என்று அவர் எழுதுவது ஒரு கவிதையைப் படிப்பது போலவே இருக்கிறது.

பொழுது மிகவேகமாகக் கழிவதை, “பொளுது பாரு, வெறிநாயாட்டும் வருது” என்று கிராமத்தான் கூறுவது காதில் இனிக்கிறது. இதேபோல் “மோட்டுக்குத் தண்ணி ஏறினாலும் ஏறினாலும் ஏறும்; மூடனுக்குப் புத்தி எங்க ஏறப் போவுது?” என்ற கேள்வியும் சாதாரணமான மொழியில் புழங்குகிறது.

நாவலில் பெரும்பாலும் துணி வெளுக்கும் வண்ணார்கள்தாம் அதிகமாக வருகிறார்கள். அவர்களில் மாரி என்பவர் கூத்துச் சொல்லிக்கொடுக்கும் வாத்தியாராக வருகிறார். அவரிடம் கூத்துக் கற்றுக் கொண்டிருக்கும் கவுண்டர்கள் ஒரு சிலர் அவருக்கு துணி வெளுக்கும் வேலையில் வந்து உதவி புரிகிறார்கள். அதுவும் பொழுது விடிந்துவிட்டால் தங்கள் சாதி மக்களுக்குத் தெரிந்து விடுமே என்று விடியலிலேயே வந்து உதவி செய்கிறார்கள்.

அப்போது மாரியும் பயந்து கொண்டே சொல்கிறார். “ஏம்பா, சீக்கிரம் முடிங்கப்பா; கவுண்டன், செட்டிக்காரன் ஆசாரில்லாம் வண்ணானா ஆயிட்டாங்கண்ணு ஊர்ல பிரச்சினை ஆயிடப்போவுது. எங்க பாட்டுல மண்ணப் போட்ராதிங்கப்பா”

அந்தக் கிராமத்தில் பெரும்பாலோர் கவுண்டர்கள்தாம். உயர் சாதிக்காரர்கள் யாரும் நாவலில் காட்டப்படவில்லை. நாவலின் கதை ஓட்டத்திற்கு அவர்கள் தேவையில்லை என்பதனால் இருக்கலாம். எல்லாக் கிராமங்களிலும் காணப்படும் கள்ள உறவு, கால் கொலுசுக்காக சிறு பெண்ணைக் கொலை செய்தல் போன்றவையும் வந்து மறைகின்றன. நாவல் காட்டும் கிராமங்களில் இருந்த ஒரு பழக்கம் இன்று நமக்கு விசித்திரமாக இருக்கிறது.

அதாவது குழந்தை பிறந்த நல்ல செய்தியைச் சம்பந்தி வீட்டுக்குச் சொல்லி அனுப்புகிறார்கள். [அந்தக்காலம் செல்போன் இல்லாத நல்ல காலம் போல் இருக்கிறது] செய்தியைச் சொல்லப்போகிறவனை ‘மாம்பாடி’ என்கிறார்கள். செய்தியைச் சொல்லப்போவதை ‘மாராயம் சொல்வது’ என்று வழங்குகிறார்கள். மங்கலமான நல்ல செய்தியைக் கேட்ட வீட்டுப் பெண்கள் செய்தி சொல்ல வந்தவனுக்குத் தங்கள் கைகளால் எண்ணெய் தேய்த்துக் குளிப்பாட்டி, கோழிக்குழம்பும் அரிசிசோறும் பரிமாறிப் போகும்போது தட்டு நிறைய பழங்களும் புது வேட்டி, துண்டும் அத்துடன் ஒரு கன்றுக்குட்டியும் கொடுத்து அனுப்புகிறார்கள்.

நாவலில் ஒருசில சிறிய குறைகளும் ஆங்காங்கே தெரிகின்றன. ஆசிரியர் கூற்றிலியே ‘புள்ளார்’ என்றும் ‘பில் வேய்ந்த வீடு’ என்றும் வருகின்றன. இக்காலத்திலேயே கோயில் கருவறையில் தமிழ் நுழைய முடியவில்லை. அப்போதே கோயிலில் அய்யர் தமிழில் மந்திரம் சொல்வதுபோல் வருகிறது. ஒருவேளை நாவலாசிரியரின் ஆசையாக இருக்கலாம். பள்ளியில் மாணவனைச் சேர்க்கும்போது ஆசிரியருடைய நாக்கிலேயே எழுதுவது போன்ற மயக்கத்தைப் பக்கம் 68-இல் உள்ள வாக்கியம் தருகிறது. 102-ஆம் பக்கத்தில் ’பட்டை பட்டையாக திருநீர்’ என்று வந்துள்ளது. நீர் என்பது தண்ணீரைக் குறிக்கும். நீறு என்பதுதான் சாம்பல் எனும் பொருள்தந்து விபூதியைக் குறிக்கும்.

நாவல் கடைசியில் கிராமத்துக்கு வானொலி வருவதுடன் முடிந்திருக்கலாம். தன்போக்கில் ஆற்று நீரோட்டம்போல் சென்று கொண்டிருந்த நாவல் அதற்குப்பின் நாவலாசிரியரின் கைக்கு வந்து ஒரு செயற்கைத் தன்மை பெற்று விடுகிறது. இந்தி எதிர்ப்புப் போராட்டம், முத்தமிழ் மன்றம் அமைத்தல், மேடைச் சொற்பொழிவுகள் என்று   இதுவரை ஓடிய ஓட்டத்திற்கு சற்று நெருடல்களாக இருக்கின்றன.

இருவரின் உரையாடல்கள் ஒரே பத்தியாக அச்சடிக்கப்பட்டு என்னதான் மேற்கோள் குறிகள் கொடுக்கப்பட்டிருந்தாலும் மயக்கம் தந்து மீண்டும் படிக்க வேண்டியதன் அவசியத்தை ஏற்படுத்துகின்றன. ஆனால் இம்முறையைத்தான் அணிந்துரையில் பெருமாள் முருகன் பாராட்டியிருக்கிறார்.

ஆக மொத்தத்தில் புதிய தளத்தில், நல்ல கிராமத்துக் கொச்சைமொழியில், சாதாரணமான மாந்தர்களைக் கொண்டு, பின்னப்பட்ட யதார்த்தமான நல்ல நாவல் என்று இதைத் துணிந்து கூறலாம். நல்ல கட்ட்டமைப்பு; நேர்த்தியான அச்சமைப்பு.

[ காட்டாளி—நாவல்—இரவீந்திரபாரதி—மாரி ராஜம் வெளியீடு—417-3; பாரதியார் நகர்—அரூர்—பேசி: 94421 58086—பக்: 251—விலை: ரூ 150 ]

===============================================================================

 

 

Series Navigationதலைப்பு:இந்த நெட் நியூட்ராலிட்டி வேண்டுமா?ஒரு துளி கடல்
author

வளவ.துரையன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *