முக்காடு

This entry is part 14 of 26 in the series 26 ஏப்ரல் 2015

உள்ளும் புறமும் எனக்குள் தீபிடித்துக்கொண்டது.
அமைதியாக வந்துபோன எனக்குள் ஏன் இத்துணைத் தவிப்பு.
இந்த வயசிலும் இப்படியா?
இதுக்கு வயது வேறு இருக்கிறதா?
எல்லாம் ஏமாற்றுவேலை.
அனுபவத்திற்கு ஆளாகும்போதுதானே எல்லாம் வெளிச்சமாகிறது.
வயசுக்கு இங்கு என்ன வேலை?
பார்த்ததும் தவிர்க்கவோ, செய்யும் பணியில் கவனத்தைக்கூட்டவோ ஏன் என்னால் முடியவில்லை?
அதன் கவர்ச்சி வலையில் சிக்காதவர்கள் இருக்கமுடியும் என்று நான் நம்பவில்லை.
அந்த நம்பிக்கை எனக்கில்லை.
சும்மா இருந்த நான் அப்படித்துடிப்பதற்கு எது காரணம்?
ஏன் துடிக்கவேண்டும்?
மனிதன் என்றால் துடித்துத்தான் ஆகவேண்டும்.
அப்போதுதான் அவன் மனிதன்.
சலனமற்ற நிலையில் ஒரு மனிதன் இருந்துவிட்டால் அவன் சந்தேகத்திற்குரியவன்.
ஒருவேளை துறவிகளால் அது முடியும் என்று சொல்லமுடியவில்லை.
துறவிகள் அதைமட்டும் துறக்காதை வெளிவரும் செய்திகள் நிரூபிக்கின்றன.
ஏனென்றால் சாதாரண மனிதர்களைனைவிட துறவிகள் இன்னும் பலவீனமானவர்கள்.
பலவீனத்தின் வடிவமே அவர்கள்தாம்.
மனிதர்கள் எதார்த்தமாக இருக்கிறார்கள்.
துறவிகள் ஏமாற்றிக்கொண்டு இருக்கிறார்கள்.
பாதுகாப்போடு அவர்கள் தவறுகிறார்கள்.
சாதாரணமனிதர்கள் மிகஇயல்பாக நிலைகுலைகிறார்கள்.
மேலும் அவர்கள் தவறிவிடுவதில்லை. தடுமாற்றம் அடைகிறார்கள் . அவ்வளவுதான்.
அப்படித்தான் நானும் அன்றைக்கு.
வழக்கமாக ஒவ்வொருநாளும் காலை பதினொருமணிக்கு என்னை அந்த மூத்தகுடிமகன்களுக்கான மூலையில் காணலாம்.
காலையில் 45 நிமிடத்திற்குமேல் குடியிருக்கும் புளோக் 474 உள்ளடக்கிய சுவாசுகாங் குடியிருப்புப்பேட்டையைச்சுற்றிவிட்டு கொஞ்சம் யோகாவும் செய்து பின் குளித்து காலை உணவைமுடித்து அப்புறம்தான் நான் அந்த இடத்திற்கு வருவேன்.
நடைபயிற்சி முடிப்பதற்குமுன்பு அங்குள்ள வயதானவர்களுக்கான உடற்பயிற்சி பகுதியில் கொஞ்சம் உடற்பயிற்சியும் செய்வதுண்டு.
முடியாத மூத்த பெண்மணிகளைப் பணிப்பெண்கள் கவனமாக அழைத்துவந்து அவர்களோடு பணிப்பெண்களும் உடற்பயிற்சி செய்வதுண்டு.
உடற்பயிற்சியைக்காட்டிலும் வாய்பயிற்சிக்கே அங்கே முதலிடம்.
அதாவது பேசுவதுதான் அங்கே அதிகம் நடக்கும்.
பக்கத்தில் சிறிய இடத்தில் ஒரு காய்கறித்தோட்டம்.
அதை எட்டிப்பார்க்கும் ஒரு கூட்டம்.
தக்காளி பூத்திருப்பதையும் காய்விட்டிருப்பதையும் பட்டிக்காட்டான் யானையைக்கண்டதுபோல் என்ற சொற்றொடருக்கு ஏற்ப ஆச்சரியத்தோடு கம்பிவேலியில் முகங்களைத்தேய்ப்பார்கள்.
வேலி வாயிலாகப்பார்ப்பார்கள்.
பார்த்துப்பார்த்து ரசிப்பார்கள்.
யாரும் காய்கறிசாகுபடிசெய்வதில்லை.
எல்லாரும் பார்வையாளர்களே.
நகரமயமான இந்த வாழ்க்கையில் காய்கறித்தோட்டம் ஒரு காட்சிபொருளாவதில் வியப்பு எனக்கில்லை.
எவ்வளவு அந்நியமான வாழ்க்கையை வாழ்ந்துகொண்டிருக்கிறோம்.
இது அநியாயமாகவே எனக்குப்படுகிறது.
அந்நியமாகவும் படுகிறது.
ஆனாலும் சில மூத்த சீனர்கள் மலாய்க்கார்ர்கள் இன்னும் செடிகொடிகளிடம் காட்டும் சிநேகத்தை வியக்காமல் இருக்கமுடியவில்லை.
இந்தியர்கள் வீட்டில்தான் தாவரங்களுக்குப்பஞ்சம்.
தலையில் பூச்சூடும் வழக்கமுடைய தமிழர்கள் வீட்டில் தாவரங்கள் குறைவு.
மற்ற இனத்தவர்வீட்டில் அதை அதிகம் பார்க்கமுடிகிறது.
என் பக்கத்துவீட்டுச் சீனர் மிகவும் வயதானவர்.
அவர் தன் வீட்டில் வளர்க்கும் பூச்செடிகளோடு பேசிக்கொண்டிருப்பதைப் பலமுறை பார்த்திருக்கிறேன்.
முதுமை கூட கூட தாவரங்களோடுதான் நெருக்கமும் உறவும் இருப்பதுபோல் தெரிகிறது.
அதுபோலவே வீட்டில் வளரும் செல்லப்பிராணிகள் பெருமளவில் முதுமையைச்சுமக்கும் குடிமக்களுக்குப் பெருந்துணையாக இருக்கின்றன. பிள்ளைகள் பேரப்பிள்ளைகள் கவனிக்கிறார்களோ இல்லையோ செல்லப்பிராணிகள் நன்றிமறப்பதில்லை.
ஒரு நள்ளிரவு வீட்டுக்குவரும்போது மொத்த அமாவாசை இருட்டையும் சுமந்துகொண்டு ஒரு பூனை மின் தூக்கி அருகில் நின்றது.
நான் உண்மையிலேயே திடுக்கிட்டுப் பயந்துவிட்டேன்.
இதற்குமுன் அதை நான் பார்த்ததில்லை.
மின்தூக்கி வாசலில் ஏன் நிற்கிறது என்று யோசித்தேன்.
அந்த நள்ளிரவில் அதற்குமேல் எனக்கு நேரமில்லை.
வந்து படுத்துவிட்டேன்.
பகலில் பார்க்கமுடியாத அந்தப்பூனையை இன்னொரு இரவில் பார்க்கமுடிந்தது. அப்போது நேரம் நள்ளிரவல்ல. ஒன்பது மணியிருக்கும்.
வீட்டுக்குப்போய்விட்டு ஆடையைமாற்றிக்கொண்டு மீண்டும் கீழே வந்தேன். அங்குள்ள இருக்கையில் அமர்ந்தேன்.
அப்போதும் அந்தக் கருப்புப்பூனை நின்றுகொண்டிருந்தது.
சற்று நேரத்தில் எனக்கு விடைகிடைத்துவிட்டது.
வயதான சீனமூதாட்டி கையில் உணவோடு வந்தார்.
இருவரும் அவ்வளவு நெருக்கமாக அந்நியோன்னியமாக உரையாடிக்கொண்டார்கள்.
இருவருக்கும் இடையில் இசையைப்போல ஒரு புதுமொழி பொதுமொழி இருக்கத்தான் செய்கிறது.
ஏன் இருக்கமுடியாது.
அண்மையில் தேர்ந்த இந்திமொழிச்சிறுகதைத்தொகுப்பைப்படித்துக்கொண்டிருந்தேன்..
மும்பைத்தமிழர், எழுத்தாளர், கவிஞர் மதியழகன் சுப்பையா மொழிபெயர்த்தவை. அந்திமழை பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. அதில் இடம்பெற்ற ஒரு சிறுகதையின் தலைப்பு சிட்டுக்குருவி.
ரவீந்திரா காலீயா எழுதியது.
குருவியோடு செய்திகளைப்பரிமாறத்துடிக்கும் அவரின் ஆழமான உள்ளத்தை உணரமுடிந்தது.
அவருடைய சிநேகத்தைக்கண்டு அவருடைய மனைவியே இயல்பாகக் கோபப்படுவதை ரசிக்கமுடிகிறது.
பூனைக்குவேண்டியதைக்கொடுத்துவிட்டு கொஞ்சிப்பேசி நலம்விசாரித்துவிட்டு மூதாட்டி என்னையும் கொஞ்சம் சாடையாகப் பார்த்துவிட்டு மின்தூக்கிக்குள் சென்றுவிட்டார்.
அடுத்தநாள் நானும் பூனைக்கு உணவுவாங்கிவந்தேன்.
ஆனால் சரியான உணவை வாங்கிவரத்தெரியவில்லை.
பஞ்சத்துக்கு ஆண்டியானவர்களின் கதையெல்லாம் இப்படித்தான் இருக்கும்.
அந்த உணவை பூனைக்கருகில் வைத்தேன்.
அதைப் பூனை திரும்பிப்பார்க்கவில்லை.
என்னசெய்வது என்று யோசித்துக்கொண்டிருந்தபோது அந்த மூதாட்டி வந்துவிட்டார்.
விலையுயர்ந்த கடிகாரங்களைத்தேடி வாங்கிக்கட்டும் நாம் குறித்தநேரத்தில் எதையும் செய்ய பழகிக்கொண்டதில்லை.
சொன்ன நேரத்தில் சந்திப்பதில்லை.
சாக்குப்போக்கு ஆயிரம் சொல்லி சமாளித்து விடுகிறோம்.
அது எப்படி பூனைக்குத்தெரியும்? அந்த அம்மா வரும் நேரம்.
அந்தமூதாட்டி வந்து உணவுக்கொடுக்கும்போது என்னைகவனித்தார்.
நான் வாங்கிவந்த உணவு சரியில்லை.
கடையில் கேட்டுவாங்கவேண்டும் என்பதை எளிய ஆங்கிலத்தில் சொன்னார்.
நான் பரம்பரை ஆண்டியில்லை என்பதை மனதுக்குள் சொல்லிக்கொண்டேன்.
அந்த மூத்த குடிமக்களின் மூலை(corner) உட்கார்ந்து பேசுவதற்கு சரியான இடம். காற்றோட்டமிக்க இடம்.
பக்கத்திலேயே ஜயண்டு சிறப்பு அங்காடி. வாகனங்களுக்கு பெட்ரோல்,டீசல் நிரப்பும் இடம்.
அதற்குள்ளேயே எண்டியூ சி பேர்பிரைஸ் கடை.
அங்கேதான் நான் நோட்டுப்புத்தகங்களை எடுத்துக்கொண்டுவந்து வசதியான இடம்பார்த்து உட்காருவேன்.
படிப்பதற்கும் எழுதுவதற்கும் நான் பயன்படுத்திக்கொள்ளும் நேரம் அதுதான். காலையில் பதினொரு மணிக்குவந்தால் பிறபகல் மூன்று மணிக்குத்தான் வீடு திரும்புவேன்.
இலக்கியம் தொடர்பாக எழுத்தோ படிப்போ ஒன்று நிகழும்.
இல்லையென்றால் இலக்கியம் படைப்பதற்கு என்னவழி.
அப்படி ஒருநாள் உட்கார்ந்திருக்கும்போதுதுதான் அது நடந்தது.
எப்போதுமே என்னைத்தவிர யாரும் அங்கே அதிகநேரம் இருப்பதில்லை.
வாருவார்கள் போய்விடுவார்கள்.
எனக்கு வேறுவழியில்லாததால் நான் அதிகநேரம் அங்கிருப்பேன்.
நான் இருக்கும் இருக்கையைப்போலவே தெற்குப்பார்த்து பல இருக்கைகள் உண்டு.
இடையில் ஒரு தடுப்பு இருக்கும். அதனால் பக்கத்து இருக்கையில் யார் இருக்கிறார்கள் என்பதை துல்லியமாகப் பார்க்கமுடியாது. துப்புரவுத்தொழிலாளர்கள் வருவார்கள் கொஞ்சநேரத்தில் போய்விடுவார்கள்.
வேலையில் இருந்துகொண்டே படிக்கும் சில தமிழர்கள் அங்கே வந்து வீட்டுப்பாடம் செய்வதைப்பார்த்திருக்கிறேன்.
ஆனால், அந்தக்காட்சியை அதற்முன் பார்த்ததில்லை.
திடீரென்று ஒரு பெண்மணி வேகமாக வந்து உட்காருவதை என்னால் கவனிக்கமுடிந்தது.
இருவரும் பக்கவாட்டில் அமர்ந்திருந்ததால் ஒரே திசையைநோக்கி இருந்ததால் ஒருவர் முகத்தை ஒருவர் பார்க்கமுடியவில்லை.
அந்தப்பெண்ணின் கால்களின் பாதப்பகுதி பக்கத்தில் பார்க்கும்போது தெரியும்.
அவ்வளவுதான்.
அவ்வளவுதான் என்றால் நான் பற்றியெரிய அது போதாதா என்ன?
நான் அமைதியாக என் வேலையைப்பார்த்துகொண்டிருந்தேன் என்று கதைவிடவேண்டுமா?
தத்துவச்சிதறல்கள் முகம்காட்டவேண்டுமா?
தீடிரென்று அந்தப்பெண் ஒரே திசையைநோக்கி எதிர்பார்ப்பதை கவனித்தேன்.
என் மனதுக்குள் காட்சிகள், கற்பனைகள் அரங்கேறுகின்றன.
எழுந்துபார்ப்பதும் உட்காருவதுமாக அந்தப்பெண் ஒரு பரபரப்புடன் நடந்துகொண்டாள்.
ஒரு பதட்டம்,அவசரம், படபடப்பு அத்தனையும் சுமந்துகொண்டு அந்தப்பெண்.
காதலனை வரச்சொல்லியிருப்பாளோ!
வெவ்வேறு இடத்தைச்சேர்ந்தவர்கள் வசதியாக இங்கே வந்து சந்திக்கப்போகிறார்களோ என
என் மனக்குரங்கு முடிவெடுத்துக்கொண்டிருந்தது.
எதை எதை நினைக்கமுடியுமோ அதையெல்லாம் நினைத்துப்பார்த்து அலைந்துகொண்டிருந்தது குட்டிப்போட்ட பூனையாக.
தாவித்தாவிகுதித்தது.
தவித்தது.
பக்கத்திலிருக்கும் பேருந்து நிறுத்தத்தை நோக்கி அந்தப்பெண் பார்த்துகொண்டிருந்ததால் நிச்சயமாக காதலனாகத்தான் இருக்கமுடியும் என்ற முடிவில் உறுதியாக இருந்தேன்.
பணிப்பெண்ணாகக்கூட இருக்கலாம் இல்லையா? என்பது என் மனம் எடுத்த முடிவுகளுள் ஒன்று.
ஏனெனில் முகத்தைச்சரியாகப் பார்க்கமுடியாதநிலை.
எல்லாம் தெரிந்த என்மனத்திற்கு பேருந்து நிறுத்தத்திற்கு எதிரில் இருக்கும் கன்கார்ட் தொடக்கப்பள்ளி தெரியவில்லை.
சரியாக 12 மணிக்கு அங்கிருந்து வேகமாக ஒரு பையன் வந்துகொண்டிருந்தான்
தாயின் மடிதேடும் கன்றுக்குட்டியைப்போல.
சாலையைத்தாண்டி வேகமாய் நடந்துவந்து தாயைக்கட்டிப்பிடித்து தாயின் முத்தத்தைப்பெற்று தாயூட்டும் உணவை ருசித்து சாப்பிட்டுக்கொண்டிருந்தான்.
காலூன்றி நடக்காமல் கண்டபடி சாயம்பூசிய என்மனம் தேடியது ஒன்றுதான்….

Series Navigationஞானக்கூத்தன் கவிதைகள் “கடற்கரையில் சில மரங்கள்” தொகுப்பை முன் வைத்து…சொப்பன வாழ்வில் அமிழ்ந்து
author

பிச்சினிக்காடு இளங்கோ

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *