ஞானக்கூத்தன் கவிதைகள் “கடற்கரையில் சில மரங்கள்” தொகுப்பை முன் வைத்து…

This entry is part 13 of 26 in the series 26 ஏப்ரல் 2015

இச்சிறு தொகுப்பில் 27 கவிதைகள் உள்ளன. 1960 களில் எழுதப்பட்ட கவிதைகளும் இதில் உள்ளன. கருப்பொருள் தேர்வு செய்வதில் வித்தியாசமான தனித்தன்மை
காணப்படுகிறது. ” மூலைகள் ” தத்துவ நோக்கு கொண்டது. ” மூலை ” என்ற சொல் ” உரிய இடம் ”
என்ற பொருளில் கையாளப்படுகிறது. கவிதை மிகவும் எளிமையாக இருக்கிறது.

பூமியிலிருந்து
சூரியன் வரைக்கும்
அடுக்கிக் கொண்டு
போகலாம்
உலகில் உள்ள
மூலைகளை எல்லாம்
கணக்கெடுத்தால்

இருந்தாலும் மூலை
சமமாகக்
கிடைப்பது கிடையாது

கிராமத்தில், ” குந்த இடம் ‘ என்பார்களே அதுபோல ” ஒருவனுக்குச் சொந்தமாக ஒரு வீடு வேண்டும் ” என்னும் கருத்தும் இக்கவிதையில்
சொல்லப்படுவதாகக் கொள்ளலாம். புகழுடம்பு தேவை என்பதும் சொல்லப்பட்டிருக்கிறது. மையம் நோக்கித் திறக்கும் வாயில்கள் சில
இதில் உள்ளன. கவிதை மேலும் தொடர்ந்தாலும் கரு தொடக்கத்திலேயே விளக்கப்பட்டுவிடுகிறது. ” வரிசையில் இருங்கள் ” என்ற
கவிதை, சமூக நல்லொழுக்கம் பற்றிப் பேசுகிறது. “அங்கம்மாளின் கவலை “” என்ற நீள்கவிதை கதைப்போக்கு கொண்டது. அங்கம்மாள்
பெட்டிக்கடை வைத்திருப்பவள்.

பலகைக் கதவில் நாங்காவதனைக்
கஷ்டப்பட்டு விலக்கி எடுக்கையில்
அங்கம்மாளின் கண்ணில் நாராயணன்
வருவது தெரிந்ததும் அலுத்துக் கொண்டாள்
[ கவிதை மொழி முழுவதும் புறக்கணிக்கப்பட்டுள்ளது. ]

என்ற கவிதையின் தொடக்கத்தில் முதல் வரியில் கிராமிய இயல்பு பதிவாகியுள்ளது. கடையின் கதவு , இணைப்புப் பலகைகளால்
உருவாகும். பலகைகளில் எண் எழுதப்பட்டிருக்கும். அந்தப் பலகை வரிசை மாறாமல்தான் கடையைப் பூட்ட வேண்டும் ; திறக்க வேண்டும்.
வாடிக்கையாளர்கள் நாராயணன் , சுப்பிரமணியன் , கோபாலன் ஆகியோர் கடனுக்குச் சுருட்டு வாங்க வருகிறார்கள். அவள் கணவன்
ரத்தினமும் அங்கு வருகிறான். அங்கம்மாளின் கவலை இதுதான் :

” என்ன சாமி எனக்கும் வயது
நாளை வந்தால் ஐம்பதாகிறது
இந்தப் பிள்ளைகள் என்னைத் தாயாய்
நினைக்காமல் போகக் காரணம் என்ன ?

கவிதை உரைநடைப் பாங்கில்தான் செல்கிறது.
” ஓட்டை ரூவா ” கூட சாதாரணக் கவிதைதான். அது இரண்டு ரூபாய்த்தாள் என்ற குறிப்பு கவிதையின் தொடக்கத்தில் காணப்படுகிறது.
பின்னர் இதற்கு மாறாக ஒரு தகவல் :

விரைவாய் ஓடித் தாளைத் தேடினர்
எண்ணற்ற ரூவாத்தாள்கள் எங்கும்
பார்த்ததாய்க் கூறிப் பிடிக்கத் தொடங்கினர்

இக்குறிப்பு ஒரு முரணாக இருக்கிறது.

போலீஸ் வந்தது கூட்டம் கலைந்தது
உனக்குத் தாள்கள் எங்கே கிடைத்தன ?
போலீஸ் கேட்டதும் உள்ளதைச் சொன்னேன்

என்பதில் உண்மை என்னவென்று புரியவில்லை. தெளிவின்மையால் வாசிப்பனுபவம் தடைப்படுகிறது. உரைநடைத் தன்மை கூடவே
வருகிறது.

” மண்டையைத் திறந்தால் ” என்ற கவிதை…
மண்டையைத் திறந்தால்
மூளை களிமண்ணாய்க்
காணும் என்று யாரோ சொன்னார்
கண்ணால் பார்த்தால் தவிர
நான் எதையும் நம்புவதில்லை
என் தலையைத் திறந்து
பார்த்தேன்
திறந்த இஸ்திரிப் பெட்டிபோல் மின்
சாரம் பாய்ந்திருக் கண்டேன்

” என் மூளை களிமண்ணாய் இல்லை, நான் அறிவுள்ளவனே ” என்கிற தகவல்தான் நமக்குத் தெரிகிறது.

புத்தகத்தின் தலைப்புக் கவிதை ” கடற்கரையில் சில மரங்கள் ”

கடற் கரையில் சில
மரங்களென்று நான் க
விதை எழுத நினைத்திருந்
தேன் , எதையும் நி
நைத்ததும் மு
டிக்க வேண்
டும். மு
டிய வில்லை யென்றால் ஏ
தும் மாற் றம் ஆ
கிவிடும்.

இந்தத் தொடக்கத்தைப் படிக்கும் போது நவீனத்துவம் ஏதும் இல்லை. மாறாக, சிறு பிள்ளைதனம் தோன்றுகிறது. வரி அமைப்பும் சொல் பிரிவும் ரசிக்க முடியாமல் செய்துவிடுகின்றன. கடற்கரையில் யூகலிப்டஸ் மரங்கள் , கொன்றை மரங்கள் உள்ளன. மரம் ஒன்று சாய்க்கப்
பட்டுவிட்டது. அதனால் சிதறிக் கிடக்கிறது. இச்சிதறலே கவிதை வடிவத்தில் மெழுகப்பட்டுள்ளது.

கோடரி குதிக்கத் தூள் தூள் எழுப்ப
நெடுகக் கிடந்த அம்மரப் பெருனையைக்
காற்று கூற

” மரப் பெருமை ” என்ற பதச்செர்க்கை நயமானது.

புள்ளிகள் காணா வியப்புக்
குறிகள் ஏராளம் தம்மிடம் தொங்க

என்ற வெளிப்பாட்டில் புதிய படிமம் நல்ல சிந்தனையைக் காட்டுகிறது.

” மீண்டும் அவர்கள் ” என்ற கவிதை ஒரு பறவையின் கூற்றாக அமைந்துள்ளதால் வித்தியாசப்படுகிறது.சில நுணுக்கங்கள் பிரகாசிக்கின்றன.
” மழை பொழியக் கடமைப் படாத மேகங்கள் ” , கடலைக் கொதிக்க வைக்காத சூரியன் ” , ” துப்பாக்கிக் கழுகு ” , சமித்துப் போல சேமித்துக்கொண்டு ” போன்ற நயங்கள் கவிதைக்குச் சிறப்பூட்டுகின்றன. பறவை வேட்டையை , பறவையின் பார்வையில் விளக்கியிருப்பது
உயிர்க் கொலையின் வலிகளை உறுத்தல் இல்லாமல் முன்வைக்கிறது.
பொதுவாக , ஞானக்கூத்தன் கவிதைகளில் ஒரு போதாமை { இத்தொகுப்பு வழியாக } தெரிகிறது. அது மொழி சார்ந்தது. மிகவும் சாதாரணக் கருவை இவர் கையாளும்போது சில இடங்களில் எடுபடாமல் ோகிறது.

Series Navigationசாந்தா தத்தின் “வாழ்க்கைக் காடு” ஒரு பார்வைமுக்காடு
author

ஸ்ரீரங்கம் சௌரிராஜன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *