ஹரணியின் ‘பேருந்து’ – ஒரு சன்னலோரப் பயணம்.

author
0 minutes, 4 seconds Read
This entry is part 1 of 26 in the series 26 ஏப்ரல் 2015

Harani
முனைவர் ந.பாஸ்கரன்,
உதவிப்பேராசிரியர்,
பெரியார் அரசு கலைக் கல்லூரி,
கடலூர்-1.

பயணம் என்பது ஒரு சுகமான அனுபவம். வெற்றுப் பையோடு கடைக்குச் செல்கின்றவர் திரும்பும்போது வாங்கும் பொருட்களையெல்லாம் அதில் அடைத்து வருவார். அதுபோல பயணத்தை மேற்கொள்கின்றவர் மனது நிறைய பல அனுபவங்களை நிறைத்துக் கொள்ளும் வாய்ப்பு கிடைக்கிறது. இது எல்லா பயணிகளிடத்திலும் நிகழும் என்பதற்கு உறுதி கூற முடியாது. பல பயணமுகங்கள் மேலும் மேலும் இறுகிக்கொண்டே இருக்கும். பாதிப்பை எண்ணி எண்ணி சன்னலோரத்தில் அமர்ந்தாலும் கண்ணில் நீர் வழிய அமர்ந்திருக்கும். பல முகங்கள் தூங்கிவிடும். இன்னும் சில முகங்கள் வாசிப்பு, பாட்டு, படம் என்று அல்லாடும். சில முகங்கள் சுயசிந்தனைக்குள்ளும் கற்பனைக்குள்ளும் ஆழ்ந்து ஆனந்தமாயப்; பயணத்துக்குள் ஒரு பயணத்தைச் செய்யும். அந்த அனுபவ விளைச்சலை ஹரணி பேருந்தில் நிகழ்த்திக் காட்டியுள்ளார்.
காது கொடுத்து கேட்பவரையும், கண் கொடுத்து படிப்பவரையும் மிரளவைக்கும் பத்து ஆண்டுப் பேருந்து பயணம். தினம் தினம் காலை 4.00 மணிக்கு வீட்டிலிருந்து புறப்பட்டு புதுப்புது அவசரங்களை அணிந்து கொண்டு ஓடி ஓடி பிடித்து சுமார் 4 மணிநேரம் பயணித்து ஒரு வேலையைப் பார்த்துவிட்டு மீண்டும் மாலை 5.00 மணிக்கு புறப்பட்டு புதுப்புது சோர்வுகளைப் போர்த்திக்கொண்டு ஆடி ஆடி வந்தமர்ந்து அதே மணிநேரம் பயணம் செய்து மீண்டு வீட்டிற்கு வந்து..! இதே போல் மீண்டும் மீண்டும்…, ஓடி ஓடி.., ஆடி ஆடி..,அப்பப்பா பத்து ஆண்டுகள் பேருந்து பயணம். இதை பற்றிய அனுபவத்தைப் ‘பேருந்து’, நாவலாக பேசுகிறது. பத்தாண்டு பயணத்தை மட்டுமே இந்நாவல் பேசுகிறதென்றால் கண்டிப்பாக அலுப்பை ஏற்படுத்துவதாகத்தான் இருக்கும் என்று முகாந்திரமில்லாத முடிவை நீங்கள் செய்துவிட்டால்;., உங்கள் முடிவு தோல்வி அடைந்துவிடும். மழையில்லாத ஒரு மழைக்கால மாலைநேரத்து மஞ்சள் வெயில், சாலையோர வயல்நாற்றுகளில் பட்டுத்தெறித்து, பச்சைச்சந்தனக் காற்றை முகத்தில் வாரிஇறைத்து நெற்றிமுடி லேசாய்ப்பறக்க, பேருந்தில் பயணம் செய்யும்போது கிடைக்கும் ஒரு சுகத்தை, ஹரணியின் ‘பேருந்து’ நாவல் வாசிப்புத் தருகிறது.!?
பேருந்தில் இயல்பாக நிகழக்கூடியவை அனைத்தும் இவரது நாவலில் இடம்பிடித்து விட்டது. பேருந்துக்குள் சில நேரங்களில் நடக்கும் சட்டத்திற்கு அல்லது மனிதநேயத்திற்கு புறம்பான திருட்டு போன்ற சில அத்துமீறல்கள் இவரது பேருந்தில் நிகழ்ந்ததற்கான பதிவுகள் இல்லை. மற்றபடி அனைத்து சம்பவங்களும் இதில் இடம்பிடித்து விட்டன. இதில், நாவலுக்கான அம்சத்தை மிக நுட்பமாக ஆசிரியர் நெய்திருக்கிறார். இருப்பினும் கரம் சிரம் புறம் நீட்டக்கூடாது என்னும் நிதானத்தையும் கடைபிடித்த வண்ணமாகவே கதையை நகர்த்தி இருக்கின்றார். ஒரு நாள் பேருந்தில் ஓர் ஆடு அடிபட்டு இறந்து விடுகின்றது. அப்போது ஆட்டின் உரிமையாளரான ஓர் இளம்விதவை வந்து அழுது அரற்றுகிறாள். அவளின் துயரநிலையை ஆசிரியர் தனது உறவில் இளம்வயதிலேயே விதவையாகி பலவகையான இன்னல்களை எதிர்கொண்டு துன்பத்தில் உழலும் சொந்த சித்தி ஒருவரை நினைவுகூர்ந்து அவரைப்பற்றி விவரிக்கின்றார். இது இடைபிறல் வரலாக இல்லாமல் மிகவும் நேர்த்தியாக கதைசித்தரிப்பில் பொருந்துகிறது. இதுபோன்ற மூன்று நான்கு சம்பவங்களைஇடை பாவாகநெய்து நாவலின் மையத்தை வலிமைபடுத்தியுள்ளார். இதில் முக்கியமானது சிதம்பரம் பேருந்து நிலையம். பேருந்துநிலையத்தினுள் அடிக்கும் மூத்திரவாடை விவரிப்பு. அதன் அருகாகவே பேருந்துகளை நிறுத்துவது. அதில் அமர்ந்திருக்கும் பயணிகள் அவஸ்த்தைக்குள்ளாகி அருவருப்படைவது. அதைவிட, நேரநெருக்கடி காரணமாக அப்பேருந்துகளில் அமர்ந்து தவிர்க்க முடியாத சூழலில் உணவுகலன்களைப் பிரித்து சிலர் உணவு உண்ணுவது போன்றவற்றை மிக துல்லியமாக வருத்தமிகு பின்னணியில் சித்தரித்துள்ளார். அத்துடன், சிதம்பரம் பேருந்து நிலையத்திலிருந்து பல்கலைக்கழகத்திற்கு நடந்து செல்லும் பாதையைக்; கடக்கும் பாலத்திற்கடியில் ஓடும் கருப்புநதியையும் அதில் குளித்துக்கொண்டிருக்கும் மனிதர்களையும் காவிரியாற்று மண்ணின் மாந்தனுக்குரிய பார்வையுடன் பகிர்ந்துள்ளார்.
சின்ன வயதில் பேருந்தில் பயணம் செய்தால் தலைசுற்றல், வாந்தி என்று பேருந்தையே கலங்கவைத்த நிலை இன்றைக்கு மாறி இருக்கிறது. வாந்தி எடுத்து அதை சுத்தம் செய்வது வரையிலான அச்செய்தியை வாந்திபுராணமாகவே விவரிக்கின்றார். பேருந்தில் சென்றால் வாந்தி வருகிறது. அப்படி வராமல் இருக்க என்ன செய்ய வேண்டும்? என்பதற்கு, தொடர்ந்து பேருந்தில் பயணம் செய்துகொண்டே இருக்கவேண்டும் என்று நிவாரணம் கூறுகின்றார். இந்த எதார்த்த வைத்தியத்தை பேருந்து பயணத்திற்கு மட்டுமல்ல வாழ்க்கைக்கும் வேண்டிய அறிவுறுத்தலாகவே எடுத்துரைத்;துள்ளார் எனலாம். கிட்டத்தட்ட கல்லூரி படிப்பு வரை சொல்லும்படியான ஒரு பேருந்து பயணத்தை மேற்கொள்ளாதவர். பெண் ஆசிரியர் ஒருவர் சொன்ன கைரேகை பலித்ததோ என்று எண்ணும்படி பணிநிமித்தமாக பத்தாண்டுகள் தொடர்ந்து பேருந்து பயணத்தை மேற்கொண்டுள்ளார். அப்பத்தாண்டுகளில் ஒவ்வொரு தினத்துக்கான பயணத்தையும் புதுப்புது சுவாரஸ்யத்துடன் அனுபவித்துள்ளார்.
பேருந்தில் செல்லும் பயணிகளில் பெரும்பாலானவர்கள் ஓட்டுநரையும் நடத்துநரையும் பேருந்தின் ஒரு பாகமாகவே பார்ப்பர். ஆனால், பேராசிரியர் ஓட்டுநர் மற்றும் நடத்துநருடன் ஏற்படுத்திக்கொள்ளும் நட்புறவு வலிமைமிக்கது. பேருந்துகளில் ஓட்டுநருக்கு முன்பாக “ப்ளீஸ்… அப்பா, மெதுவா ஓட்டுங்க.!” என்று ஒரு வாசகம் எழுதி வைத்திருக்கிறார்கள். அதை வாசிக்கும் போதுதான் அவர்ளுக்கான உணர்வை நாம் உணர வாய்ப்புள்ளது. அவர்களும் மனிதர்கள் தான். அவர்களுக்கும் குடும்பம் பிள்ளைகள் இருக்கின்றார்கள் என்பதையெல்லாம் மிகவும் மென்மையாக நாவலாக்கியுள்ளார். பாண்டியன், ஜெயக்குமார், நாராயணன், சேகர் இவர்களையெல்லாம் குடும்ப நண்பர்களாக வளர்த்துக்கொள்ளும் அளவிற்கு அன்பை செலுத்துகின்றார். ஓட்டுநர் பாண்டியன் தனது வேலையைப் பற்றி சொல்லும்போது, ‘நெறைய பாவம் செஞ்சவங்க தான்சார் கண்டக்டர், டிரைவராக வருவாங்க’ என்கிறார். வண்டி ஓட்டும்போது ஆடு, மாடு மட்டுமல்லாமல் மனிதர்களும் அடிபட்டு இறந்து விடுவதும் உண்டு. அதன் பிறகு கோர்ட்டு, கேஸ{ என்று அலையும்போது வேலையை எண்ணி நொந்துகொள்பவர்களாக மாறிவிடுகின்றனர். ஒரு முறை பாண்டியன் ஓட்டிய வண்டியில் ஆசிரியரின் நண்பர் கனகலிங்கத்தின் மகன் வைத்தீஸ்வரன் கோயில் என்னும் ஊரில் அடிபட்டு இறந்து விடுகிறான். அதையெண்ணி ஆசிரியரைவிட ஓட்டுநர் பாண்டியன் மிகவும் கஷ்ட்டப்படுவதாகக் காட்டுகிறார். விபத்து நடந்த சில தினங்களுக்குப் பிறகு பாண்டியன் தன்பிள்ளைக்குக் காதுகுத்தி விழா எடுக்கின்றார். அப்பொழுது தன் மகனுக்கு அணிவிக்கப்பட்ட காது கடுக்கனைப் பார்த்து இதுபோலவேதான் வண்டியில் அடிபட்டு இறந்துபோன சிறுவனும் அணிந்திருந்தான் என்று மனம் வாடி உழன்று துன்பம் அடைகின்றான். தன்பிள்ளையைப் போலவே பிற பிள்ளைகளையும் எண்ணுகின்ற ஓட்டுநர்களின் மனநிலையை விவரிக்கின்ற இச்சித்தரிப்பு ஓட்டுநர்களின் மனிதநேயப் பண்பை வெளிப்படுத்தும் வண்ணம் அமைத்துக் காட்டுகிறார். எப்பொழுதாவது வியாபார நிமித்தமாக வண்டியில் பயணத்தை மேற்கொள்ளும் பாய் ஒருவர். இவர் பாண்டியன் பேருந்தில் மட்டுமே பயணிப்பார். வண்டிக்கு வரும்போது இருவருக்கும் சுடச்சுட வேர்க்கடலையை வறுத்து எடுத்து வருவதும், பயணத்தின் இடையில் அவ்விருவருக்கும் டீ வாங்கிக் கொடுப்பதும் அவரது வாடிக்கை. டெலிஃபோன் துறையில் பணிபுரியும் திக்குவாய் சிவக்குமார், எப்பொழுதும் சன்னலோரத்தில் இடம்பிடித்து அமரும் வெற்றிலைபாக்கு போஸ்ட்மாஸ்ட்டர,; இறந்த மனைவியை நினைத்து எப்பொழுதும் தனியாக பேசிக்கொண்டிருக்கும் பேங்க் ஆபீஸர் இவர்களெல்லாம் அவர்களுக்கான கஸ்ட்டமர்கள் என்பதைவிட அவர்களின் நண்பர்கள். இந்த பாசப்பறவைகள் கூட்டத்தில் ஆசிரியர் தமது பத்தாண்டு பேருந்து பயணத்தை இனிமை நிறைந்ததாக எண்ணி மகிழ்கின்றார்.
இரயில் பயணத்தில் கிட்டும் சிநேகிதம், பேருந்து பயணத்தில் கிட்டுமா? என்னும் வினாவிற்குள் நாம் செல்வதே இல்லை. ஒருவர் முகத்தை ஒருவர் பார்ப்பதிலிருந்து தப்பிக்கவே முடியாத அளவிற்கு இரயில் இருக்கை. ஒரு பக்கமாகவே பார்த்து அமரும்படியான பேருந்து இருக்கை. இதை உடைத்து, வெற்றிலைப்பாக்குக் கொடுத்து இருக்கைகளைப் பறிமாறிக்கொள்ளும் ஒரு பாசமிகு பேருந்தை ஹரணி இயக்கி இருக்கிறார். பத்து ஆண்டுகள் பேருந்து பயணத்தைச் செய்தவர் பதினோராம் ஆண்டின் முதல்நாளில் இரயில் பயணத்திற்கு மாறுகிறார். இரயிலில் முதல் பயணத்தை மேற்கொள்வதற்கு முன்பாகவே, அதாவது முதன்முதல் இரயிலில் ஏறும் போதே இவருக்கான ஒரு நட்புப்பட்டாளம் காத்திருக்கின்றது. அந்த நண்பர்களின் முகங்களிலும் கூட பேருந்து நண்பர்களின் முகங்களையேக் காணக்கூடியவராக இருக்கின்றார்.
இந்நாவலில், கிட்டத்தட்ட பத்து உவமைகள் பேருந்து வாசிப்பை இனிக்கச் செய்கின்றன. அதாவது,
கலைத்து விட்ட தேன் கூட்டுத் தேனிக்கள் – மனசின் மகிழ்வு (ப-1),
சீப்பிலிருந்து செல்லும் பல் – நேராக உள்ள தெரு (ப-4),
கூட்டுத் தேனீயின் ரீங்காரம் -திரும்பத்திரும்ப காதில் கேட்கும் ஒருசொல்(ப-7);,
கண்ணாடிக்குள் சுடராய்.. – நீண்டநாளாய் மனதில்அடைகாத்துவந்த லட்சிய ஆசை (ப-9);,
வெற்றிக்கோட்டை தொட முந்தும் பந்தயக்காரன் – தொடர் மன அழுத்தம் (ப-10);.

இப்படியாய் சுவைகூட்டும் உவமைகள். ஹரணி பல இலக்கிய வகைகளைப் படைத்த ஆளுமை மிக்கவர். அது இந்நாவலிலும் பளிச்சிடுகிறது. இவ்வளவு சிறிய கதைக் கருவை வளர்த்தெடுத்தமையே இதற்குச் சான்றாகக் காட்டலாம். நூல் பதிப்பில் இருக்கும் சில குறைகளை பேருந்தின் ஓட்டம் பொறுத்துக்கொள்ளச் செய்கிறது. இல்லுறை தெய்வம், சாலையுத்தம், மிருக அவஸ்த்தை, கடவுள் கணக்கு போன்ற சொல்லாடல்கள் ஹரணியின் மொழிவளத்தை வெளிக்காட்டுகின்றன. இடைஇடையே அடைப்புக் குறிக்குள் நாவலாசிரியர் தரும் விளக்கம் வாசிப்பாளர்க்கு கொஞ்சம் வசதியை ஏற்படுத்துவதாக உள்ளது. அதை தவிர்த்திருந்தாலும் பெரிதாக குறை இருந்திருக்காது என்றே தோன்றுகிறது.
பேருந்தின் பெயர் ஒயிட் ஹார்ஸ் என்கின்ற வெள்ளைக்குதிரை. தஞ்சாவூர் – சிதம்பரம், சிதம்பரம் – தஞ்சாவூர் இதன் வழித்தடம். இது 111 இருக்கைகள் என்கின்ற பக்கங்களைக் கொண்டது. 25 ஸ்டேஜ் என்கின்ற பகுப்புகளைக் கொண்டது. வாசிப்பு என்கின்ற பயணம் பாய்ண்ட் டூ பாய்ண்ட் தான். பேருந்துக்குள் பாட்டு வசதியாக இதில் வரும் உவமைகள். உரிமையாளர் ஹரணி. உணவகம் நில்லா பேருந்து இதுவல்ல. மயிலாடுதுறையில் சூடான மெதுவடைக்கும், டீ க்கும் என்கின்ற இடைஇடை வேற்றுசித்தரிப்புகளில் நிறுத்தி அழைத்துச்செல்லும். பேருந்துக்குள் இருக்கும் குறளின் தொடக்கம் ‘ கற்க…’
நூலின் பெயர் : பேருந்து.
நூலாசிரியர் பெயர் : ஹரணி
பதிப்பு : கே.ஜி. பப்ளிகேஷன்ஸ்
31, பூக்குளம் புதுநகர்,
கரந்தை,
தஞ்சாவூர்-613 002.
முதற் பதிப்பு : சூன், 2013
விலை : ரூபாய் 100 ஃ ஸ்ரீ

Series Navigationகாசு வாங்கியும் வாங்காமலும் ஓட்டுப் போட்ட விவசாயிகளுக்கு பெப்பே
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *