ரசிப்பு எஸ். பழனிச்சாமி
கொஞ்ச நேரத்தில் பட்டாபி ஒரு பார்சலோடு வந்தான். கதவைத் திறந்து உள்ளே உட்கார்ந்தான். அவரைப் பார்த்து ஆறுதலாக, “ஒன்னும் கவலைப் படாதீங்க சார். அவன் வேலைக்கு உலை வைத்து விட்டால் என்ன பண்ண முடியும் அவனால். அதன் பிறகு மன்னிப்பு கேட்டு உங்க காலைத்தான் பிடிக்கணும்”
பாட்டாபி பேசியது அவருக்குக் கொஞ்சம் ஆறுதலாக இருந்தது. அவன் வாங்கி வந்த பார்சலைப் பார்த்தார். உடனே பட்டாபி அவரிடம்,
“இதைக் கொஞ்சம் ‘ஊத்துங்க சார். கவலை பறந்துடும்’ என்றவனை முறைத்தார்.
‘சார் ஊதுங்கன்னு சொல்லவில்லை. ஊத்துங்கன்னுதான் சொன்னேன்’
கிளாஸில் கொஞ்சம் ஊற்றிக் கொடுத்தான். அவர் கொஞ்சம் கொஞ்சமாக அதைக் குடித்தார். அப்படியே ஒரு அரை மணி நேரம் ஓடியது. பிறகு காரை விட்டு இறங்கி கடலை நோக்கி நடந்தார். பாட்டிலையும் கிளாஸையும் எடுத்துக் கொண்டு அவரைப் பின் தொடர்ந்தான் பட்டாபி.
‘கடல் ஓரமாக அலை வந்து கரையைத் தொடும் இடத்தில் வந்து நின்று கொண்டார் ரகுபதி. ஒரு கையில் மது பாட்டிலும் இன்னொரு கையில் கிளாசுமாக அவருக்குப் பின்னால் நின்றான் பட்டாபி. அவர் கேட்கும் போதெல்லாம் கிளாசில் ஊற்றிக் கொடுப்பான். அவர் குடித்து விட்டு கிளாசை அவனிடம் கொடுத்து விட்டு, இரண்டு கைகளையும் இடுப்பில் வைத்துக் கொண்டு கடலையே வெறித்துப் பார்த்துக் கொண்டு நிற்பார். இப்படியே மீண்டும் மீண்டும் நடந்தது.
அந்தப் பக்கம் வருவோர் போவோரெல்லாம், பட்டாபி கையில் மது பாட்டிலும், கிளாசுமாக நிற்பதைப் பார்த்து அவனைக் கேவலமாக ஒரு பார்வை பார்த்து விட்டுப் போவார்கள். சில பெண்கள், ‘பாட்டிலும் கையுமா நிற்கிறதைப் பார். குடிகாரப்பய’ என்று அவனைத் திட்டிக் கொண்டே போவார்கள். பிழைப்புக்காக என்ன என்ன வேலையெல்லாம் பண்ண வேண்டியிருக்கிறது என்று தன் மீதே வெறுப்பு வந்தது பட்டாபிக்கு.
அப்பாடா! ஒரு வழியாக பாட்டில் காலியாகி விட்டது. பட்டாபியிடமிருந்து ஒரு நிம்மதிப் பெருமூச்சு வந்தது. மணி ஒன்பதரை ஆகி விட்டதால் கடற்கரையில் கூட்டம் குறைந்து விட்டது. இங்கொன்றும் அங்கொன்றுமாக ஒரு சிலர் மட்டுமே இருந்தார்கள். மெதுவாக பார்க்கிங்கை நோக்கி நடந்தார் ரகுபதி. பட்டாபியும் அவரைப் பின் தொடர்ந்தான். பார்க்கிங்கில் ஒன்றிரண்டைத் தவிர எல்லாக் கார்களும் கிளம்பிச் சென்று விட்டதால் அந்த இடமே வெறிச்சோடி காணப்பட்டது.
“சரி, கிளம்பலாம்” என்று அவனைப் பார்த்தார்.
அப்போது ஒரு பச்சைக் கலர் பாக்கெட்டை கையில் எடுத்து, ரகுபதியிடம் கொடுத்தான் பட்டாபி.
“என்னய்யா இது”
“PASS PASS சார். இதை வாயில் போட்டுக் கொண்டால் வாடை தெரியாது”
“இதெல்லாம் வேண்டாம்”
“சார், போற வழியிலே போலீஸ் நிறுத்தி வாயை ஊதச் சொன்னால் பிரச்சினை ஆகி விடும். அதனால் இதை வாயில் போட்டுக்கோங்க”
“வாயை ஊதச் சொல்லுவாங்களா” என்றார் அதிர்ச்சியாக.
“ஆமா சார், இப்போதெல்லாம் டிரங்க் அண்ட் டிரைவ் கேஸைப் பிடிக்கிறேன் என்று இப்படி அடிக்கடி வாகனங்களை நிறுத்தி வாயை ஊதச் சொல்லுகிறார்கள்”
“அய்யய்யோ. அப்ப இப்ப போற வழியில் மாட்டிக் கொள்வோமா”
“ஆமா சார். வாய்ப்பிருக்கிறது, நானே ஒருமுறை மாட்டியிருக்கிறேன்”
“அப்படியா, எப்போ”
“போன மாதம் ஒரு எக்ஸிபிஷனில் காட்டன் சட்டை ஒன்று வாங்கினேன். இரண்டு முறைதான் அதைப் போட்டிருக்கிறேன். ஆனால் அதற்குள் அந்த சட்டையில் வயிற்றுப் பகுதியில் உள்ள பட்டன் தெறித்து எங்கோ விழுந்து விட்டது. அதன் பிறகு அந்த சட்டையை நான் போடுவதே இல்லை.
ஒருநாள் ஞாயிற்றுக்கிழமை நண்பன் ஒருவனைப் பார்க்கப் போக வேண்டி இருந்தது. அன்று லீவு நாள்தானே என்று அந்தச் சட்டையைப் போட்டுக் கொண்டு சென்றேன். சாதாரணமாக பட்டன் இல்லாதது தெரியாது. ஆனால் பைக்கில் உட்கார்ந்தால் வயிற்றுப் பகுதியில் சட்டை விலகி உள்ளே உள்ள பனியன் தெரியும். கையாலேயே கொஞ்சம் அட்ஜஸ்ட் செய்து கொண்டு நண்பனைப் பார்க்கப் போனேன்.
திரும்பி வரும்போது சாயந்தரம் நாலு மணி ஆகி விட்டது, தி.நகர் பஸ் ஸ்டாண்டை தாண்டி பாலத்துக்கு அருகில் நின்றிருந்த ஒரு போலீஸ்காரர் வாகனங்களை மடக்கிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்த நான் வலது புறமாக சென்றேன். ஆனால் என்னைப் பார்த்ததும் ரோட்டின் குறுக்கே பாய்ந்து, கையை குறுக்கே நீட்டி அப்படியே ஓரங்கட்டி நிறுத்தச் சொன்னார்.
சரி நம்மிடம்தான் எல்லா டாக்குமெண்டுகளும் இருக்கிறதே என்று நினைத்து கவலைப் படாமல் ஓரமாக நிறுத்தினேன்.
‘எங்கே இருந்து வர்றீங்க’
‘நந்தனத்தில் இருந்து வர்றேன்’ என்றேன்.
‘ஊதுங்க’ என்றார் அவர். நம்மிடம் எல்லா டாக்குமெண்டுகளும் இருக்கிறது. நாமும் குடிக்கவில்லை என்ற தைரியத்தில் ‘கொடுங்க சார்’ என்றேன்.
வாங்கியே பழக்கப்பட்ட அவர் நான் கொடுங்க என்றவுடன் திகைத்துப் போனவர், கொஞ்சம் கடுப்பாகி, ‘கொடுக்கவா, என்ன சொல்றீங்க’ என்றார்.
‘அய்யோ சார், ஏதோ ஞாபகத்தில் அப்படிச் சொல்லி விட்டேன்’ என்றேன்.
‘அப்படி என்ன ஞாபகம். குடிச்சிருக்கீங்களா’ என்றார்.
‘அய்யோ நான் குடிக்கலை சார். ஒரு படத்தில் ஒரு குழந்தை இந்த பலூனை கொஞ்சம் ஊதிக் கொடுங்க அங்கிள் என்று சொல்லுமே அந்த ஜோக் ஞாபகம் வந்து விட்டது. அதான் அப்படிச் சொல்லி விட்டேன். நான் நடிகர் வடிவேலுவோட ரசிகன் சார்.’ என்றேன்.
‘ஏய்யா, என்னைப் பார்த்தால் சின்னக் குழந்தையாட்டம் தெரிகிறதா உனக்கு’ என்று டென்ஷனானார் மனிதர்.
‘மன்னிச்சுக்கோங்க சார். தினமும் டிவியில் வரும் ஜோக்குகளைப் பார்ப்பதனால் என்னையறியாமலே அப்படிச் சொல்லி விட்டேன்’ என்றேன்.
‘உடனே, லாரியில் வரும் வடநாட்டுக்காரனிடம் மாமூல் கேட்டு டிராபிக் போலீஸாக வரும் வடிவேலு அடி வாங்குவாரே. என்னைப் பார்த்தால் உனக்கு அது போலத் தெரிந்ததாக்கும்’ என்றார் கிண்டலாக.
‘சே சே! அப்படியெல்லாம் இல்லை சார். ஆனா உங்களுக்கும் நல்ல நகைச்சுவை உணர்ச்சி இருக்கு சார்’ என்றேன்.
‘நானும் வடிவேலு ரசிகன்தான்யா. உன்னைப் பார்த்தால் குடித்து விட்டு வருவது போல் இருந்தது. அதனால்தான் நிறுத்தினேன்’ என்றார்.
‘என்னிடமுள்ள பணமா, இல்லே அப்பாவித்தனமான என்னோட முகமா அல்லது நான் பைக் ஓட்டி வந்த அழகா, எது உங்களை அப்படி ஹெவியா அட்ராக்ட் பண்ணுச்சு’ என்று வடிவேலு பாணியில் கேட்கலாமா என்று தோணிச்சு. ஆனால் பாவனாவிடம் வடிவேலு உதை வாங்குவாரே அது ஞாபகம் வந்ததால் பேசாமல் இருந்து விட்டேன்.
என் நல்ல நேரம் அவரும் வடிவேலு ரசிகராக இருந்ததனால் சிரித்துக் கொண்டே என்னை அனுப்பி விட்டார். போகும்போது, ‘பட்டனைப் போட்டுட்டு போங்க’ என்று சொன்னார். அப்போதுதான் அவர் என்னை மடக்கிய காரணம் புரிந்தது.
வயிற்றுப் பகுதியில் சட்டை விரிந்து பனியன் தெரிந்ததால், நான் குடித்து விட்டு போதையில் அப்படி வருவதாக நினைத்து விட்டிருக்கிறார். அன்றிலிருந்து அந்தச் சட்டையை நான் போடுவதே இல்லை” என்று சொல்லி முடித்தான் பட்டாபி.
நடந்த நிகழ்ச்சிகளை நகைச்சுவையாக அவன் சொன்னதைக் கேட்ட ரகுபதி சிரித்து விட்டார். அவர் மனம் மிகவும் லேசாகி கவலையெல்லாம் பறந்து விட்டது. அவன் கையில் இருந்த அந்த பாக்கெட்டை வாங்கி பிரித்து கொஞ்சம் எடுத்து வாயில் போட்டுக் கொண்டார்.
பிறகு காரில் கிளம்பி டாக்டர் ராதாகிருஷ்ணன் சாலையைப் பிடித்தார். ஒரே ரோடுதான், அந்த ரோடு முடிவில் அண்ணா மேம்பாலத்தைத் தாண்டி வள்ளுவர் கோட்டம் சென்று விட்டால் வீடு வந்து விடும். நுங்கம்பாக்கம் போலீஸ் ஸ்டேஷன் வழியாகப் போனால் மாட்டிக் கொள்வோம். இடப்பக்கம் திரும்பி கோடம்பாக்கம் ரோடு வழியாக போய் விட வேண்டும். பட்டாபியை எங்கே இறக்கி விடுவது.
“நீ எங்கே இறங்குவே பட்டாபி”
“வள்ளுவர் கோட்டத்தில் இறங்கி ஒரு ஆட்டோ பிடித்து போய் விடுவேன்” என்றான் பட்டாபி.
இதோ அண்ணா மேம்பாலம் வந்து விட்டது. தூரத்தில் நாலைந்து போலீஸார் வாகனங்களை மடக்கி சோதனை இடுவது தெரிந்தது. அதைப் பார்த்ததும் ரகுபதிக்கு மனம் திக் திக் என்று அடித்துக் கொண்டது.
“பட்டாபி, போலீஸ் செக் பண்றாங்களே” என்றார்.
“ஒண்ணும் கவலைப்படாதீங்க. ஊதச் சொன்னா சும்மா ஊதுங்க பாஸ்” என்ற பட்டாபியை சட்டென நிமிர்ந்து பார்த்தார் ரகுபதி. அவன், “சாரி” என்று சொல்லி தலையைக் குனிந்து கொண்டான்.
குறுக்கே கை நீட்டி காரை நிறுத்தினார் ஒரு போலீஸ்காரர். கண்ணாடியைத் தட்டி இறக்கச் சொன்னார். ரகுபதி கண்ணாடியை இறக்கியதும், “எங்கே இருந்து வர்றீங்க” என்ற வழக்கமான கேள்வியைக் கேட்டார்.
“பீச்சிலிருந்து” என்று ரகுபதி சொன்னவுடன், லேசாக அடித்த வாடையில் மீன் சிக்கி விட்டது என்று உணர்ந்த அனுபவமிக்க அந்த போலீஸ்காரர், “ஐயா, இங்கே வாங்க” என்று சார்ஜெண்டை அழைத்தார். அதன் பிறகு காரை ஓரமாக நிறுத்தச் சொன்னார்.
(தொடரும்)
- புறநானூற்றில் மனிதவள மேம்பாடு
- மிருக நீதி
- ஜெயந்தன் நினைவு இலக்கியப் பரிசுப் போட்டி-2015
- நியூட்டிரினோ ஆராய்ச்சி செய்ய அண்டார்க்டிகாவில் பனிப் பேழை [ICECUBE] ஆய்வுக்கூடம் நிறுவகம்
- மிதிலாவிலாஸ்-20
- தொடுவானம் 69. கற்பாறை கிராமங்கள்
- பரிசுத்தம் போற்றப்படும்
- “என்னால் முடியாது”
- அந்தப் புள்ளி
- ஒலி வடிவமில்லாக் கேள்விகள்
- எழுத நிறைய இருக்கிறது
- ஹாங்காங் தமிழ் மலரின் மே 2015 மாத இதழ்
- வடு
- தங்கராசும் தமிழ்சினிமாவும்
- திருக்குறள் உணர்த்தும் பொருளியல்ச் சிந்தனைகள்
- சும்மா ஊதுங்க பாஸ் – 3
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். – அத்தியாயம் : 7
- விளம்பரமும் வில்லங்கமும்
- பாகிஸ்தானில் நடக்கும் தாக்குதல்களால், நாட்டை விட்டு ஓடும் ஷியாக்கள்