நாய் இல்லாத பங்களா

author
0 minutes, 0 seconds Read
This entry is part 18 of 24 in the series 7 ஜூன் 2015

ரசிப்பு எஸ். பழனிச்சாமி

இந்த சித்திரை மாதம் வந்தாலும் வந்தது, சென்னை வெயில் வெளுத்து வாங்குகிறது. வெளியே தலை காட்ட முடியவில்லை. எங்காவது ஊட்டி, கொடைக்கானல் என்று நினைத்தவுடன் நம்மால் கிளம்ப முடிகிறதா? அப்படி எல்லா ஏற்பாடுகளையும் செய்து கிளம்ப ஒரு வாய்ப்புக் கிடைத்தால் அதற்குள் கோடைகாலமே முடிந்து விடுகிறது.

நான் இந்த மாதிரி புலம்பிக் கொண்டிருந்த நேரத்தில்தான் ஒரு நாள் அந்தப் பங்களாவிலிருந்து போன் வந்தது. உதவி மானேஜர் ரகுராமன் தான் பேசினார்.

“சார், வணக்கம். கொஞ்சம் பங்களாவுக்கு உடனே வர முடியுமா?”

உடனே மனதிற்குள் ஒரு சந்தோஷம் ஏற்பட்டது. காரணம் அந்தப் பங்களாவுக்குப் போனால் ஏதோ ஒரு காட்டுக்குள் நுழைந்து விட்டது போல் இருக்கும். அங்கே பசுமையான செடிகொடிகளும் ஓங்கி உயர்ந்த மரங்களும் நிறைந்திருக்கும்.. சில்லென்ற காற்று வீசும். அதனால் அங்கு வெய்யிலின் கொடுமை தெரியாது. கொஞ்ச நேரமாவது குளுகுளு என்று ஒரு சுகத்தை அனுபவிக்கலாம். உடனே கிளம்பி விட்டேன்.

மாதம் இரண்டு அல்லது மூன்று முறையாவது இது போல் பங்களாவுக்கு வரச்சொல்லிக் கூப்பிடுவார், அங்கு பெரிதாக ஒன்றும் வேலை இருக்காது, பெரும்பாலும் அங்கு உள்ள சின்னச்சின்ன கட்டிடங்களையோ அல்லது ஏதாவது மரம் செடிகளுக்கு உள்ள தூரத்தையோ அளவு எடுத்து அதை வரைபடமாகத் தயார் செய்து கொடுக்க வேண்டும்.

சென்னையின் மையப்பகுதியில் வசதி படைத்த சீமான்கள் பலரும் வசிக்கும் பகுதி அது. அந்தப் பங்களா இரண்டரை ஏக்கர் பரப்பளவில் விரிந்து பரந்திருந்தது. மெயின் ரோட்டில் உள்ள அந்த ஐந்து நட்சத்திர ஹோட்டல் எதிரில் இருக்கும் நாற்சந்தியில் நேராகச் சென்றால் இருபது அடி தூரத்தில் இடது புறம் அந்த பங்களாவின் கேட் வந்து விடும், ரோட்டிலிருந்து அந்த கேட் வழியாகப் பார்த்தால் உள்ளே இருபுறமும் உயர்ந்த மரங்களுடன் ஒரு நீண்ட சாலை தெரியும். சாலையின் வலது புறம் ஓரமாக விதவிதமான கார்கள் நிறுத்தப் பட்டிருக்கும்.

கேட்டில் நுழைந்து அங்கிருந்த செக்யூரிட்டியிடம் மானேஜர் ரகுராமன் அழைத்திருப்பதாகச் சொன்னேன். விசிட்டர் புத்தகத்தில் என்னைப் பற்றிய விபரங்களை எழுதச் சொன்னார். எழுதி கையொப்பம் இட்டு விட்டு உள்ளே சாலையில் நேராக நடந்தேன்.

அந்த சாலையில் இருநூறடி தூரம் நடந்து கடைசியில் வலது புறம் திரும்ப வேண்டும். போகும்போது வலது புறத்தில் சற்றுத் தூரத்தில் தெரிந்த பங்களாவைப் பார்த்தேன். அது கட்டப்பட்டு பல வருடங்கள் ஆகி விட்டாலும் முறையாகப் பராமரிக்கப் படுவதால் மிகுந்த அழகோடு பளிச்சென்று காணப்பட்டது. அதன் முன்னால் இருந்த போர்டிக்கோவில் ஒரு வெள்ளை நிற லெக்ஸஸ் கார் நின்றிருந்தது. பங்களாவை ஒட்டி இடது பக்கத்தில் நீண்ட `ப’ வடிவத்தில் மேல் கூரையுடன் கூடிய ஒரு மண்டபம் தெரிந்தது. பெரும்பாலும் அதன் அருகில்தான் எனக்கு வேலை இருக்கும்.

சாலையில் நேராகச் சென்று முடிவில் வலதுபுறமாகத் திரும்பி பங்களாவின் வலது ஓரமாகச் சென்றேன். போகும்போது அங்கிருந்த ஒரு காவலாளி சல்யூட் அடித்தான். ரகுராமனைப் பார்க்க வேண்டும் என்றேன். பின்புறம் இருந்த கார்ஷெட்டைக் காட்டி ‘அங்கே இருக்கிறார்’ என்றான்.

பெயருக்குத்தான் அது கார்ஷெட். அதில் இரண்டு கார்கள் மட்டுமே நிறுத்தலாம். ஆனால் இருப்பதோ பன்னிரண்டு கார்கள். அதனால் கார்கள் வெளியே நிறுத்தப்பட்டு அந்த இடம் மானெஜரின் அலுவலகமாகவும், ஓட்டுநர்களின் ஓய்விடமாகவும் மாற்றப் பட்டிருந்தது.

ரகுராமன் என்னைக் கண்டதுமே “வாங்க சார்” என்று வரவேற்று பங்களாவின் பின்புறமாக உள்ள தோட்டத்திற்கு அழைத்துச் சென்றார். அழகழகான செடி கொடிகளுடன் ரம்மியமாக இருந்தது அந்த இடம். தோட்டத்தில் ஆங்காங்கே சிலர் வேலை செய்து கொண்டிருந்தார்கள்.

அதன் அருகேதான் அந்த ‘ப’ வடிவ மண்டபம் இருக்கிறது. அறுபது அடி நீளமும் நாற்பது அடி அகலமும் கொண்ட அதன் வெளிப்புறத்தில் ஆறு அடி அகலத்தில் நடைபாதை. அதன் இரு புறமும் வரிசையாக திண்டுகள் அமைந்திருக்கும். ஒருவேளை அங்கு நடைப்பயிற்சி செய்வார்களோ. அங்கு உள்ள ஒரு திண்டில் அமர்ந்து சுற்றிலும் உள்ள இயற்கைக் காட்சிகளை ரசித்தபடி அங்கு வீசும் குளிர்ந்த காற்றை அனுபவித்தால் சொர்க்கம் போலத் தோன்றும்.

அதனாலேயே பங்களாவுக்கு வரும்படி மானேஜர் அழைத்தால் சந்தோஷமாகக் கிளம்பி விடுவேன். என்னுடைய சந்தோஷத்திற்கு இன்னொரு காரணமும் இருக்கிறது. பொதுவாக இது போன்ற பெரிய வீடுகளில் காணப்படும் ‘நாய்கள் ஜாக்கிரதை’ போர்டு அங்கு கிடையாது. இது வரை நான் சென்ற எந்த சமயத்திலும் அங்கு நாயைப் பார்த்ததில்லை. ஒரு வேளை அந்த வீட்டில் உள்ளவர்களுக்கு நாய் பிடிக்காமல் இருக்கலாம்.

எனக்கு நாய் பிடிக்காமல் போனதுக்கு அதன் மீதுள்ள பயம்தான் காரணம். என்னுடைய எட்டாவது வயதில் நடந்தது இன்னும் ஞாபகம் இருக்கிறது. எங்கள் கிராமத்தில் ஒரு தெரு வழியாகப் போன போது ஓரமாகப் படுத்திருந்த ஒரு நாய் என்னைப் பார்த்ததும் உர் என்றபடி முறைத்தது. அதையும் மீறி நான் நடந்த போது திடீரென்று என் மேல் பாய்ந்து விட்டது. நான் ஓவென்று கத்த அருகில் இருந்தவர்கள் அதை விரட்டி விட்டார்கள். நல்ல வேளையாக கடி படாமல் சிறு நகக் கீறல்களோடு தப்பித்தேன்.

அதிலிருந்து எங்காவது நாயைப் பார்த்தாலே நடுக்கம்தான். இந்த பங்களாவில் நாய் இல்லை என்பதால் இங்கு வருவது எனக்கு சந்தோஷமாக இருக்கிறது. என்னைப் போல நாயைப் பிடிக்காத இந்த பங்களாவாசிகளுக்கு மனதிற்குள்ளேயே நன்றி சொன்னேன்.

ஆனால் என்னுடைய நினைப்பு தவறென்று சிறிது நேரத்திலேயே புரிந்தது.

ரகுராமன் அங்கு வேலை செய்து கொண்டிருந்த ஒருவனை அழைத்து, “சார் கூடவே இருந்து அவர் என்ன சொல்றாரோ அந்த வேலையைச் செய்” என்று சொல்லி விட்டு, “நான் ஒரு பத்து நிமிஷத்தில் வருகிறேன்” என்று சென்று விட்டார்.

அவனை வேலை வாங்கிக் கொண்டே அந்த மண்டபத்தின் அருகில் நின்று கொண்டிருந்தேன். இது போன்ற ஒரு பங்களாவில் இருக்க கொடுத்து வைத்திருக்க வேண்டும். சுற்றிலும் செடிகொடிகள், மரங்கள், குளுமை. ஆஹா!

அப்போது எங்கிருந்தோ திடீரென்று ஒரு நாய் நாங்கள் இருந்த இடத்தைக் கடந்து ஓடியது. அதிர்ச்சியில் அப்படியே உறைந்து விட்டேன். அதைத் தொடர்ந்து ஒரு ஆளும் ஓடினார். ஆனால் அவரைப் பார்த்ததும் அது வேறு பக்கம் திரும்பி ஓடியது. அவரும் அதை விரட்டிக் கொண்டே ஓடினார்.

என்ன இது? இங்கே எப்படி நாய் வந்தது? வெளியிலிருந்து தவறிப்போய் உள்ளே நுழைந்து விட்டதா? எனக்கு லேசாகப் பயம் ஏற்பட்டது.

என்னுடைய அதிர்ச்சியை ஒருவாறு சமாளித்துக் கொண்டு, எனக்கு உதவியாக இருந்தவனிடம் கேட்டேன்,

“இது யாருடைய நாய்? இங்கே நாய் எதையும் இதற்கு முன் பார்த்ததில்லையே”

“முதலாளியம்மா புதிதாக இந்த நாயை வாங்கி இருக்கிறார்கள். இரண்டு லட்சம் ரூபாயாம். அதற்கு ட்ரெயினிங் கொடுப்பதற்கு என்று ஒருவரை வேலைக்கு சேர்த்திருக்கிறார்கள். அவருக்கு இருபத்தைந்து ஆயிரம் ரூபாய் சம்பளம்” என்றான்.

அப்போது மறுபடியும் அந்த நாய் ஓடி வந்தது. எனக்கு முன்னால் வந்து நின்று என்னை உற்றுப் பார்த்தது. பின்னாடியே அந்த ட்ரெயினரும் ஓடி வந்தார்.

நான் பயத்தை வெளிக்காட்டிக் கொள்ளவில்லை. அந்த ட்ரெயினரைப் பார்த்து சிரித்தேன். தைரியசாலி போல அவரிடம், “இதற்கு என்ன பெயர்” என்றேன்.

“சீஸர்” என்றார்.

நான் பயத்தை மறைத்துக் கொண்டு, அந்த நாயைப் பார்த்து, “சீஸர்” என்றேன்,

அந்த நாய் என்னை உற்றுப் பார்த்தது. பிறகு மெல்ல என்னை நோக்கி வந்தது. என்னுடைய இருதயத் துடிப்பு அதிகமானது. இரண்டு பேர்கள் அருகில் இருக்கிறார்கள் என்பது கொஞ்சம் தைரியத்தைக் கொடுத்தாலும் அது மிகவும் அருகில் நெருங்கியதால், பயத்தில் “ஏய்” என்றேன்.

“ஒன்றும் செய்யாது. நீங்கள் அதைக் கவனிக்காதீர்கள்” என்றார் ட்ரெயினர்.
ஆனால் அது அருகில் வந்து என் காலை நோக்கி குனிந்தது. கத்துவதற்கு வாயெடுத்தேன். ஆனால் “சீஸர்” என்று ஓரு அதட்டல் கேட்டதும் அங்கிருந்து ஓடியது. எனக்கு படபடப்பு அடங்க கொஞ்சம் நேரமானது.

அருகில் இருந்தவனிடம் மெதுவாக, “கடிக்காதுல்ல” என்றேன்.

“வந்து ஒரு வாரம்தான் ஆகிறது. இது வரை யாரையும் கடிக்கவில்லை. ஆனால் அதை யாராவது திட்டினாலோ சத்தம் போட்டாலோ அம்மாவுக்குப் பிடிக்காது. அதை நாய்ன்னுகூட சொல்லக்கூடாது” என்றான்.

எனக்கு கொஞ்சம் பதட்டம் ஏற்பட்டது. அந்த இடத்தை விட்டு சீக்கிரம் போய் விட வேண்டும் என்று தோன்றியது. இப்போது பங்களாவில் இருப்பது சந்தோஷமாக இல்லை, தாகமாக இருந்தது. பயத்தில் தாகம் எடுக்குமோ?

“குடிக்க கொஞ்சம் தண்ணீர் வேண்டும்” என்றேன்.

“இதோ போய் கொண்டு வருகிறேன்” என்று போய் விட்டான். இப்போது நான் மட்டும் தனியாக அங்கு நின்றேன். செல்போன் பாடியது. எடுத்து பேசிவிட்டு திரும்பினேன். அதிர்ச்சியில் ஒரு கணம் மூச்சு நின்று விட்டது. அந்த நாய் எனக்கு மிக அருகில் என்னைப் பார்த்துக் கொண்டு நின்றது, அந்த ட்ரெயினரைக் காணோம்.

தண்ணீர் கொண்டு வரப்போனவனும் வரவில்லை. இப்போது நான் மட்டும் தனியாக நாயிடம் மாட்டிக் கொண்டிருக்கிறேன்.

நான் தைரியமாக இருப்பது போல் காட்டிக் கொண்டு கையில் நோட்டுப் புத்தகத்தை வைத்து எழுதுவது போல் பாவனை செய்து கொண்டே ஓரக்கண்ணால் அதைப் பார்த்தேன். அது என்னை நோக்கி மெதுவாக முன்னேறியது. அதன் கண்களில் ஒரு வெறி இருந்தது போல் தெரிந்தது. இல்லை அது பிரமையோ?

கொஞ்ச நேரம் எப்படியாவது சமாளித்து விட்டால் யாராவது வந்து விடுவார்கள். நான் சற்றே பின்னோக்கி நகர்ந்தேன். அது என்னைப் பார்த்தபடியே முன்னேறியது. நான் கையை கொஞ்சம் மேலே தூக்கி, “போ” என்றேன். அது சட்டென்று கையைப் பிடிக்க வந்தது.

எனக்குப் பயம் வந்தது. ஓடலாமா? ஓடுபவனைக் கண்டால் விரட்டும் நாய்க்கு கொண்டாட்டம் என்று சொல்வார்களே! அது கொஞ்சம் கொஞ்சமாக முன்னேறிக் கொண்டிருந்தது. கத்தலாமா என்று யோசித்தேன். ஆனால் அந்த நாயைப் பார்த்து சத்தம் போட்டால் முதலாளியம்மாளுக்குப் பிடிக்காது என்று அவன் சொன்னது ஞாபகம் வந்தது. இது என்னடா வம்பு.

அது முன்னேறி வர வர என் இதயம் பலமாக அடித்துக் கொண்டது நன்றாகத் தெரிந்தது. பின்னால் தூண் வரை வந்து விட்டேன். இப்போது அது பாய்வதற்கு தயாராவது போல் தெரிந்தது. இன்னும் ஒரு நொடிதான் நிச்சயம் கடித்து விடும் போல் தோன்றியது. அலறுவதற்குத் தயாரானேன்.

அது வாயைத் திறந்து கையைப் பிடிக்கப்…..அய்யோ!

சட்டென்று “சீஸர்” என்றபடி அந்த ட்ரெயினர் ஓடி வந்தார். அவரைப் பார்த்ததும் அது அங்கிருந்து ஓடியது.

“என்ன சார், பயந்துட்டீங்களா, ஒன்றும் செய்யாது சார்” என்றான்.

எனக்கு உயிர் போய் வந்தது அவருக்கு எப்படித் தெரியும்.

அடுத்த சில நாட்களுக்கு பங்களாவிலிருந்து போன் எதுவும் வரவில்லை. கொஞ்சம் நிம்மதியாக இருந்தது. இனிமேல் பங்களாவிலிருந்து மானேஜர் கூப்பிட்டால் போகக் கூடாது என்று முடிவு செய்தேன்.

ஆனால் அடுத்த வாரமே பங்களா மானேஜரிடமிருந்து போன் வந்தது.

“சார், கொஞ்சம் பங்களாவுக்கும் வந்துட்டுப் போக முடியுமா?”

“இல்ல சார், நான் வர முடியாது”

“ஐயய்யோ, இன்னிக்கு முடியாதா? சரி, அப்ப நாளைக்கு வாங்க. கொஞ்சம் அர்ஜென்ட்”

“சார், இனிமேல் நான் பங்களாவுக்கு வர மாட்டேன்”

“என்ன விஷயம்? பேமெண்ட் எல்லாம் கரெக்டா வருதுல்ல”

“அது இல்லே சார். அங்கே அந்த நாய் இருக்கு. போன தடவை கடி வாங்காம தப்பிச்சதே பெரிய விஷயம்”

“ஓ, அது தான் விஷயமா, ஒன்னும் கவலைப் படாதீங்க. இப்ப நீங்க தாராளமா வரலாம். அந்த நாய் இங்கே இல்லை”

“நிசமாத்தான் சொல்றீங்களா”

“நிசமாத்தான் சொல்றேன். நீங்க வாங்க, நானே கேட்டுக்கு வந்து உங்களை உள்ளே கூட்டிட்டுப் போறேன்”

சரியென்று பங்களாவிற்குப் போனேன். சொன்னபடி மானேஜர் கேட்டிலேயே காத்திருந்தார். அவருடன் உள்ளே போகும்போது கேட்டேன்.

“அந்த நாய் என்னாச்சு”

“அது ஒருத்தர கடிச்சுருச்சு. அதுதான் கார்ப்பொரேஷன்ல் பிடிச்சுக் கொடுத்து விட்டோம்”

“முதலாளியம்மா ஒன்றும் சொல்ல வில்லையா”

“சொன்னதே அவர்கள்தானே” என்றார் அவர். என்னால் நம்பமுடியவில்லை.
ஏனென்றால் அந்த நாயின் மீது உயிராக அல்லவா இருந்தார்கள்.

“என்னால் நம்பவே முடியவில்லை” என்றேன். அவரே அந்தக் கதையைச் சொல்லத் தொடங்கினார்.

“முதலாளியம்மா வீட்டின் ஏதாவது ஒரு பகுதியை எப்பவும் புதுப்பித்துக் கொண்டே இருப்பார்கள் அல்லவா. போர்டிகோ டைல்ஸ், பாத்ரூம் டைல்ஸ், மண்டபத்தின் டைல்ஸ் இவற்றை எல்லாம் வேறு டிசைனில் மாற்றுவதற்கு இந்தோனேசியாவிலிருந்து ஒருவரை வரச் சொல்லி இருந்தார். அவர் இங்கு தான் பத்து நாட்கள் தங்கி இருந்தார். அப்போதெல்லாம் அந்த நாய் அவருடன் விளையாடும். அதைப் பார்த்து முதலாளியம்மாளும் சந்தோஷப் படுவார். ஒருநாள் அவருடைய விலையுயர்ந்த மோதிரத்தை கழற்றி வைத்து விட்டு பாத்ரூம் போன போது, அதை அந்த நாய் விழுங்கி விட்டது”

“மோதிரத்தை விழுங்கிருச்சா? அப்புறம்”

“அதுவாக கழிவு வெளியேற்றும் போது மோதிரம் கிடைத்தால்தான் உண்டு, வேறு எதுவும் செய்ய முடியாது என்று டாக்டரும் சொல்லி விட்டார். டிரெயினருக்கு ஓவர் டைம் வேலை கொடுத்து அந்த நாயைக் கவனிக்கச் சொன்னார்கள்”

“மோதிரம் கிடைத்து விட்டதா?”

“மோதிரம் கிடைத்து விட்டது. ஆனால் அந்த நாய் அந்த வெளிநாட்டுக்காரரைக் கடித்து விட்டது” என்றார்.

‘முதலாளியம்மா மிகவும் மதிக்கும் ஆள் அவர். முதலாளி அம்மாவுக்கு வந்த கோபத்தில் அந்த நாயை அடித்து விரட்டி விடச் சொன்னார். நாங்கள் கார்ப்பொரேஷனுக்கு போன் செய்தோம். நேற்றுத்தான் வந்து பிடித்துக் கொண்டு போனார்கள்” என்றார். எனக்கு கொஞ்சம் நிம்மதியாக இருந்தது.

போகும் வழியில் ஒரு கருப்புக் கலர் பி.எம்.ட்பிள்யூ கார் நின்றிருந்ததைப் பார்த்தேன். “இந்த வண்டி புதுசா இருக்கே, யார் வண்டி” என்றேன்.

“முதலாளியம்மாவோட மகள் வந்திருக்கிறார்” என்றார் ரகுராமன். அப்போது கையில் ஒரு பையுடன் ஒருவன் வேகமாக எங்களைக் கடந்து போனான். அவனைக் கூப்பிட்டு, “என்னடா, எங்கே கிளம்பிட்டே” என்றார் அவர்.

“சார், உங்களுக்குத் தெரியாதா? அந்த நாய் மறுபடி வந்திருக்கிறது. சின்னம்மா அதை கொண்டு போய் வளர்க்கப் போகிறார்களாம். கார்ப்பொரேஷனில் போய் அதைத் திரும்பக் கூட்டிக் கொண்டு வந்து விட்டார்கள். அது இப்ப வெளியேதான் சுத்திக் கொண்டிருக்கிறது. அதான் நான் லீவு சொல்லி விட்டு கிளம்புகிறேன்” என்றான். எனக்கு திக் என்றது.

“அதற்காக இவர் ஏன் கிளம்புகிறார்” என்றேன் புரியாமல்.

“இவனை ஒரு தடவை அந்த நாய் கடித்து விட்டது. முதலாளியம்மாவிடம் உள்ள பயத்தில் அதை யாரும் வெளியே சொல்லவில்லை” என்றார்

“ஐயய்யோ” என்று அலறினேன்.

“ஒன்றும் பயப்படாதீர்கள். நான் பார்த்துக் கொள்கிறேன்” என்றார். திகிலுடன்
எல்லாப் பக்கமும் பார்த்துக் கொண்டே நடந்தேன்.

அந்த மண்டபம் வரை கூட வந்தவர், “உங்கள் உதவிக்கு யாரையாவது அனுப்புகிறேன். ஒரு நிமிடம் பொறுங்கள்” என்று சொன்னார் ரகுராமன்..

“சார், அந்த நாய் இங்கே வருமா?”

“வராது, அது பங்களா உள்ளேதான் இருக்கும்”

ரகுராமன் போன பிறகு அங்கு இருந்த ஒவ்வொரு நொடியும் ஒரு யுகம் போல் தோன்றியது. யாராவது சீக்கிரம் வந்து விட்டால் நல்லது.

அவர் போன திசையையே பார்த்துக் கொண்டிருந்தேன். இன்னும் யாரையும் காணோமே. நிச்சயம் யாராவது வந்து விடுவார்கள்.

திடீரென ஒரு சந்தேகம் வந்தது. அந்த நாய் தோட்டத்தில் எங்காவது திரியுமோ. திரும்பி ஒவ்வொரு பகுதியாகப் பார்த்தேன்.

திடீரென பக்கத்தில் எதுவோ அசைவது போல இருந்தது. சட்டென்று அந்தப் பக்கம் திரும்பினேன்.

அந்த நாய் எனக்கு கொஞ்சம் முன்னால் நின்று என்னையே பார்த்துக் கொண்டிருந்தது.

நான் பயத்தில் உறைந்து போய் நின்ற போது திடீரென்று…

சபாஷ், அப்புறம் நடந்ததை சரியாக ஊகித்து விட்டீர்களே!

Series Navigationகனவு திறவோன் கவிதைகள்அழகின் விளிப்பு
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *