ஆர். அம்பலவாணன்
திருவள்ளுவர் பல காலம் சிந்தித்துணர்ந்து தான் வாழ்ந்த காலத்தின் சமூக வழிகாட்டு நெறிகளை பல குறட்பாக்களாக எழுதி இருப்பார். அவர் மாணாக்கர்களோ அல்லது அவருக்குப் பின் வந்த அறிஞர் பெருமக்களோ இக்குறட்பாக்களை அதிகாரங்களாகப் பிரித்துத் தொகுத்து திருக்குறள் என்று நாம் தற்போது அறிகிற நூலாக்கினர் என்பது ஆன்றோர் கருத்து. அதிகாரத்திற்கு பத்து குறட்பாக்கள் என்று சீர் படுத்திய பொழுது இடைச்செருகல்கள் நிகழ்ந்திருக்கலாம் என்ற கூறுவாரும் உண்டு.
திருக்குறள் புதிய உரை என்னும் நூலில் சுஜாதா தனது முன்னுரையில் இவ்வாறு குறிப்பிட்டிருக்கிறார்.
“….. ஏறத்தாழ ஆயிரம் ஆண்டுகட்கு அப்புறம்தான் மணக்குடவரின் உரையின் காலம். இடைப்பட்ட காலத்தில் பல இடைச்செருகல்கள் ஏற்பட்டிருக்கலாம் என்ற கருத்துக்களும் சொல்லப்பட்டிருக்கின்றன. இருந்தும் பொதுவாக எல்ல்லாக் குறட்பாக்களையும் கவனிக்கும் போது அத்தனை இடைச்செருகல்கள் இருப்பதாக எண்ண இடமில்லை. என் நண்பர்கள் சிலர் திருக்குறள் ஒரே நபரால்தான் எழுதப்பட்டதா என்று சந்தேகம் எழுப்பியுள்ளார்கள். என் கருத்தில் அந்த சந்தேகத்திற்கு இடமில்லை. குறளில் முழுமையான அமைப்பும் சில இலக்கணப் பிரயோகங்களும் ………..சொற் சிக்கனமும் வள்ளுவருக்கு என்று ஓர் அடையாளம், ஒரு ‘நடை’ இருப்பதைக் காட்டிக்கொடுக்கின்றன.”
சுஜாதாவின் கருத்து ஒருபுறமிருக்க, இடைச்செருகல்கள் சாதாரணர்களால் செய்யப்பட்டிருக்க சாத்தியமில்லை. நன்கு கற்றறிந்த புலவர்களே செய்திருக்க வேண்டும் என்பதையும் நாம் கவனிக்கவேண்டும். அவர்கள் வள்ளுவரின் சொற் சிக்கனம், நடை இவற்றை முழுமையாகப் புரிந்துகொண்ட பின்பே ‘புதிய’ குற்ட்பாக்களை இயற்றி இணைத்திருக்க முடியும்.
இந்தப் பின்னணியில் முதல் அதிகாரமான கடவுள் வாழ்த்தைப் படிக்கலாம்.
முழு நூலாக எழுதப்பட்ட பல இலக்கியங்கள், முன்னுரை போல கடவுள் வாழ்த்துடன் தொடங்குவது மரபாக இருந்துள்ளது. பிற்பட்ட காலத்தில் முழு நூலாக உருவாக்கம் செய்யப்பட்ட திருக்குறளில் கடவுள் வாழ்த்து வள்ளுவரால் இயற்றப்பட்ட பாக்களா என்ற ஐயம் பலராலும் எழுப்பப்பட்டுள்ளது. அது அவராலேயே இயற்றப்பட்டிருந்தாலும், அது கடவுள் வாழ்த்தாக இல்லாமல், வேறொரு கருத்தை சொல்ல வந்த பாக்களாக இருக்கலாம். அது பின்னால் வந்தவர்களாலோ, அல்லது தொகுப்பாளர்களாலோ, அல்லது மாணாக்கர்களாலோ அது கடவுள் வாழ்த்து அதிகாரம் உருவாக்கப்பட்டு தொகுக்கப்பட்டிருக்கலாம்.
“உலகெலாம் உணர்ந்து ……… மலர் சிலம்படி வாழ்த்தி வணங்குவாம்” என்று பெரிய புராணத்தில் சேக்கிழார் பெருமானும், “உலகம் யாவையும் தாமுளவாக்கலும் ….. அவர் தலைவர் அன்னவர்க்கே சரண் நாங்களே” என்று ராமாயணத்தில் கம்பரும் கடவுளைத் தன்மையில் (in firstperson) வாழ்த்தித் தொடங்கியுள்ளதைக் காணலாம். இவ்வாறு ஒன்றிரண்டு செய்யுளில் எழுதப்பட வேண்டிய ஒன்றை திருக்குறளில் பத்து பாக்களாக உள்ளதை நோக்கவும். மேலும், இப்பாக்கள், மற்ற குறட்பாக்களைப்போலவே படர்க்கையில் (in third person) எழுதப்பட்டுள்ளன.
கடவுளைத்தொழுது தொடங்குவதன் நோக்கம் தான் மேற்கொள்ளும் (நூல் எழுதும்) செயல் நல்லபடியாக முடியவேண்டும் என்பதே. கடவுள் வாழ்த்தில் உள்ள பாக்களைப் பாருங்கள். மற்ற அதிகாரங்களைப்போலவே ஒரு வரையறை, சாதக பாதகங்கள் என்ற முறையிலேயே அமைந்துள்ளன. “அகர முதல” என்ற முதல் குறள் ஒரு வரையறை(definition). “கற்றதனால்” என்ற இரண்டாவது குறளும், “கோளில்” என்ற ஒன்பதாவது குறளும் கடவுளை வணங்குதலே தலையாய கடமை என்ற அறிவிக்கைகள் (statements). மற்ற ஏழு குறட்பாக்களில், மனித குலத்தின் மூன்று முக்கிய வரையறுப்புகளான சோகம் அல்லது மனக்கவலை (4,7), காலம் அல்லது அநித்யம் (3,6,8,10), அறியாமை (5) ஆகியவற்றை நீக்கும் உபாயம் இறைவணக்கமே என்று கூறப்பட்டுள்ளது.
சொன்னதையே திரும்பச்சொல்லுதல் இலக்கியத்தில் தவிர்க்கப்பட வேண்டும் என்பர். நான்காவது, ஏழாவது பாக்கள் கவலையறுத்தல் என்ற ஒரே கருத்தையும், எட்டாவது, பத்தாவது பாக்கள் பிறவியறுத்தல் என்ற ஒரே கருத்தையும், மூன்றாவது, ஆறாவது பாக்கள் நெடிய வாழ்வு என்ற ஒரே கருத்தையும் சொல்வதைக் கவனிக்கவும்.
“ஒருமைக்கண் தான் கற்ற கல்வி … எழுமைக்கும் ஏமாப்புடைத்து” (398) என்ற குறளையும் இரண்டாவது குறளையும் ஒப்பிட்டு நோக்கினால், இக்குறளும் பிறவியறுத்தல் என்ற கருத்தையே குறிப்பதாகக் கொள்ளலாம். வலியுறுத்தல் (tautology) என்று எடுத்துக்கொண்டாலும்கூட பத்து எண்ணிக்கை நிரப்பும் இடைச்செருகலாக இருக்கலாமோ என்ற எண்ணம் உண்டாவதைத் தவிர்க்க முடியவில்லை.
ஐந்தாவது அதிகாரமான இல்வாழ்க்கையில் “தென்புலத்தார் தெய்வம்…..ஓம்பல் தலை” (43) என்றும், “வையத்துள் வாழ்வாங்கு வாழ்பவன் …….. தெய்வத்துள் வைக்கப்படும்” (50) என்று குறிப்பிட்டிருப்பதையும், ஆறாவது அதிகாரமான வாழ்க்கைத்துணை நலனில் “தெய்வம் தொழாஅள் …. பெய் எனப் பெய்யும் மழை” என்ற குறளையும், ஆள்வினை உடைமை(62) அதிகாரத்தில் “தெய்வத்தான் ஆகாது ….. கூலி தரும்” என்ற குறளையும் கவனித்தால் வள்ளுவரின் தெய்வம் (கடவுள்) பற்றிய சிந்தனை ஓரளவுக்குப் புலப்படும்.
தவம் (27) அதிகாரத்தில் “கூற்றம் குதித்தலும் கைகூடும் நோற்றலின் ஆற்றம் தலைப்பட்டவர்க்கு (269) என்ற குறட்பாவில் நற்றவமே நீடு வாழ்தலின் காரணம் என்ற மாற்றுக்கருத்தொன்றை வைக்கிறார்.
இது போன்றே மெய்யுணர்தல் அதிகாரத்தில் “பிறப்பென்னும் பேதைமை நீங்கச் சிறப்பென்னும் செம்பொருள் காண்பது அறிவு” என்ற குறட்பாவிலும் மற்றும் இரண்டு பாக்களிலும் பிறவி மற்றும் துன்பத்திலிருந்து விடுபட மெய்யறிவு பெறுதலே வழி என நிறுவுகிறார். மெய்யுணர்வு பெற மெய்ஞானியர்களை நாடுவதே ஆன்மீக மரபு. மெய்யுணர்வு பெற்ற மனிதன் தெய்வீக நிலை எய்துகிறான் (50). தெய்வம் பற்றிய அவரது குறள்களின் மூலம் இதனையே வலியுறுத்துகிறார்.
இந்த பின்னணியில் பார்த்தால், வேண்டுதல் வேண்டாமை இலான், பொறிவாயில் ஐந்தவித்தான், அறவாழி அந்தணன் என்னும் சொற்கள் கடவுளைக் குறிப்பதாகக் கருதுவதை விட முற்றும் துறந்த ஞானியர்களையே குறிப்பதாகக் கொள்ளலாம். துறவு (35) அதிகாரத்தில் “பற்றுக பற்றற்றான் பற்றினை அப்பற்றைப் பற்றுக பற்று விடற்கு” (350) என்ற வழிகாட்டு நெறியையும், குறட்பாக்கள் 25,30 மற்றும் 348 இவைகளில் அமைந்த சொற்களையும் காண்க. எனவே, இச்சொற்கள் இடம் பெற்றுள்ள பாக்கள் நீத்தார் பெருமையின்பால் அமைவதே பொருத்தம் எனக்கருத இடமுண்டு. மேலும், தாள், அடி என்ற சொற்கள் உருவம் அற்ற இறைக்குச் சற்றும் பொருந்தாதவை. மெய்ஞானிகளான துறவியர்களின் தாள் அல்லது அடி சேர்தல் என்பதே பொருத்தமானதாகத் தெரிகிறது.
மேற்குறிப்பிட்ட கருத்துக்களை எண்ணிப்பார்த்தால், திருக்குறளின் கடவுள் வாழ்த்து அதிகாரம் இடைச்செருகல்கள் மூலமாக சீரமைக்கப்பட்டிருக்கலாம்(?) என்றே கருதத்தோன்றுகிறது.
- பிரபஞ்ச ஒளிமந்தைக் கொத்துக்களின் பயங்கரக் கொந்தளிப்பால் பேரசுரக் காந்த சக்தித் தளங்கள் உற்பத்தி ஆகின்றன.
- எலி
- மிதிலாவிலாஸ்-24
- தொடுவானம் 74. விடுதியில் வினோதம்
- தெருக்கூத்து
- அணைப்பு
- வடபுல முஸ்லிம்களின் மீள்குடியேற்ற சவால்கள் நூல் வெளியீட்டு விழா
- காய்களும் கனிகளும்
- கவி ருது வான போது
- திருக்குறளில் இல்லறம்
- அனார் கவிதைகள் ‘ பெருகடல் போடுகிறேன் ‘ தொகுப்பை முன் வைத்து..
- எப்படியும் மாறும் என்ற நினைப்பில்
- தெரவுசு
- புதிய சொல்
- சந்தைத் திரைப்படங்களிலிருந்து தப்பியவையும், சந்தை கும்பலும் , கலையின் அரசியலும் * 19வது கேரள சர்வதேச திரைப்பட விழா
- திரை விமர்சனம் நேற்று இன்று நாளை
- நான் யாழினி, ஐ.ஏ.எஸ். அத்தியாயம் -12
- ஜெயமோகன் – அமெரிக்கா -சந்திப்புகள்
- திருக்குறள்- கடவுள் வாழ்த்து – ஒரு மாறுபட்ட கண்ணோட்டம்