ஆச்சாள்புரம் [ வையவனின் குறுநாவல்களை முன்வைத்து ]

This entry is part 9 of 17 in the series 12 ஜூலை 2015

வளவ. துரையன்

மிகப் பெரியதாக மெகா நாவல்கள் வரத்தொடங்கிய பின்னர் சிறிய நாவல்களின் வரவு மிகவும் குறைந்து விட்டது. அதிலும் குறு நாவல்கள் என்ற வடிவம் சுத்தமாக அற்றுப் போய் விட்டது. முன்பு ’கணையாழி’ இதழ் குறுநாவல் போட்டி நடத்தி அவ்வப்போது இந்த வடிவத்துக்குப் புத்துயிர் கொடுத்து வந்தது இச்சூழலில் வையவனின் ’ஆச்சாள்புரம்’ எனும் ஐந்து குறுநாவல்கள் கொண்ட தொகுதியைப் படிக்க மிகவும் மகிழ்ச்சியாய் இருந்தது. .
ஆச்சாள்புரம் எனும் சிற்றூருக்கு வேணு ஆசிரியராகப் பணிபுரியப் பொறுப்பேற்கிறான். ராயர் என்பவர் வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியமர்கிறான். ராயரின் மகள் கௌசல்யாவிற்கும் வேணுவிற்கும் காதல் மலர்கிறது. காதல் ஊரார்க்குத் தெரியவர, ராயர்
”நான் சீர்திருத்தக்காரனில்லே; லோகத்தை எதிர்த்து எதிர் நீச்சல் போடத் தெம்போ, தைரியமோ இல்லாதவன்; சாதாரணக் குடும்பஸ்தன்; எனக்கு இன்னும் மூணு பெண்கள் இருக்கு; இதெல்லாம் நடக்கிற காரியமில்லே”
என்று மறுதலிக்கிறார். ஆனால் வேணுவும் கௌசல்யாவும் உறுதியாய் இருக்க ராயர் தற்கொலைக்கு முயல்கிறார். வேணுவே போய் காப்பாற்றுகிறான். ஆனால் தான் மீண்டும் தற்கொலை செய்து கொண்டு விடுவேன் என்று உறுதியாய்ச் சொல்கிறார். குழம்பிய வேணுவோ தன் பணியை ராஜினாமா செய்துவிட்டு யாரிடமும் சொல்லாமல் ஊரைவிட்டே போய்விடுகிறான். “உன் அப்பாவைப் பலி வாங்கிக் கொள்வதைக் காட்டிலும் என்னையே பலியிட்டுக் கொள்வது மேலென்று தோன்றுகிறது” என்று கௌசல்யாவிற்குக் கடிதம் எழுதுகிறான். பின்னர் இருபத்து மூன்று ஆண்டுகள் கழித்து வேணு மீண்டும் ஆச்சாள்புரம் தள்ளாமையுடன் வந்து சேர்கிறான். திருமணமே செய்து கொள்ளாத அவன் இப்போது கௌசல்யாவும் மணம் புரியாமல் பக்கத்து ஊரில் தலைமை ஆசிரியராக இருப்பதையும் தங்கைகள் இரண்டு பேருக்கும் திருமணம் செய்து வைத்ததையும் அறிகிறான்.
இப்போது வேணு பக்கத்து ஊருக்குப்போய் கௌசல்யாவைப் பார்க்கலாம் என நினைக்கிறான். ஆனல் அவன் மனம் நினைப்பதாக வையவன் எழுதும் வரிகள் மிக முக்கியமானவை.
‘அப்படி முடியாது………….அத்தோடு மட்டும் முடிந்து விடாது………..அப்பால்………..பிரிந்து வளைந்து எங்கெங்கோ விலகிய பாதைகள் மோதி வேறு குழப்பம் தோன்றும். ஒரே சந்திப்பில் நிற்கும் பக்குவம் வந்து விட்டால் அப்புறம் அந்த சந்திப்பே கூட அவசியம் இல்லையே! நினைவில் கௌசல்யா யௌவனத்தோடு எனக்கே உரியவளாய் இருக்கிறாள். நிஜம் எப்படியோ………..வேண்டாம், ஒரு தலையீடு போதும். இரண்டாவது தலையீட்டிற்கு அதிகாரமில்லை’
பிறகு வேணு நாடோடிபோல் போய்க் கொண்டிருக்கிறான் என்று முடிகிறது இக்குறுநாவல். நாவலின் இறுதியில் ஆச்சாள்புரம் என்ற போர்டை பஸ்ஸின் டீசல் புகை மூடியது என்று வருகிறது. அதுபோல்தான் வேணுவின் வாழ்வை அவன் கொண்ட காதல் மூடுகிறது. ஒரு வேளை அவனுடன் வரத் தயாராக இருந்த கௌசல்யாவை அவன் மணம் முடித்திருந்தால் ராயரின் வாழ்வையே விதி மூடியிருக்கும். ஆனால் கௌசல்யாவின் மனத்தில் இருக்கும் வேணுவையும் அதேபோல் வேணுவின் நெஞ்சில் குடியிருக்கும் கௌசல்யாவையும் எதனாலும் மூட முடியாது.
அடுத்த குறு நாவல் ”எங்கெல்லாம் மணி அடிக்கின்றதோ…..”. இதுவும் ஒருகாதல் கதைதான். மரியதாஸின் மகன் ஸ்டீபன், தற்போது பிஷப்பிடம் குருப்பட்டம் வாங்கப் போகிறான். பதினைந்து ஆண்டுகளுக்குப் பின் இப்போது அதற்காகத்தான் வந்திருக்கிறான். அவன் அன்று மாலை கடைவீதியில் தன் அப்பா மரியதாஸ் கருப்புச் சேலையணிந்த ஒரு மத்திய வயதுக்காரியுடன் நெருக்கமாகச் சிரித்துப் பேசிவருவதைப் பார்க்கிறான்.
‘ஒருவரை மற்றொருவர் மயக்காமலே இருவரும் ஒருவருக்கொருவர் சரணடைந்தனர்’ என்று அவர்கள் உறவை வையவன் நாசூக்காக எழுதுகிறார். ஆனால் ஸ்டீபன் வந்த பிறகு அவள் மீது கொண்ட மயக்கம் மகிமைதாஸுக்குக் குறைகிறது. ஓர் மழை இரவில் எதிர்பாராமல் அவள் வீடு வந்த அவர் அவளை நெருங்கும் போது மாதாகோயில் மணி அடிக்க சட்டென்று விலகிப் போகிறார். ஆனாலும் அவரால் மறக்க முடியவில்லை. அவர் வேதனையில் குமைகிறார்.
”அப்பாவிற்குத் தன்மீது ஒரு தர்மபயம் ஏற்பட்டு விட்டதையும், அதனால் இயல்பாக ஓடிக்கொண்டிருந்த அவரது வாழ்க்கை முறுக்கேறி ஒரு முறிவு நிலையை எட்டிவிட்டிருப்பதையும் “ குருவாக மாறிவிட்ட ஸ்டீபன் உணர்கிறார். அப்பாவிடம் கூடச் சொல்லாமல் வேறு ஊருக்கு மாற்றல் கேட்டு வாங்கிப் போய்விடுகிறார். இப்போது மரியதாஸ் நல்ல கிறிஸ்துவராக வாழ்ந்து வருகிறார் என்று குறுநாவல் முடிகிறது.
”அவரவர் தர்மங்கள் ஒன்றுக்கொன்று முரண் பட்டவை. எது சரியான தர்மம் என்பது அதைக் கடைபிடிப்பவன் விசுவாசத்தோடு தீர்மானிக்க வேண்டிய விஷயம்” என்று ஸ்டீபன் சிந்திப்பதுதான் இந்தக் கதையின் மையமாகும். உண்மையில் ஒவ்வொருவரும் தங்கள் சூழலுக்கேற்பத் தர்மங்களை மேற்கொள்ளலாம். ஆனால் அது அவருக்காவது விசுவாசமாய் இருக்க வேண்டும் ஸ்டீபனின் தருமமும் மரியதாஸின் தருமமும் மோதும் சூழல் வரும்போது ஸ்டீபன் தானாக விலகுவதுதான் அவன் தருமமாக மாறிப் போய் விடுகிறது.
‘மரபைக் காப்பதா, கொடுத்த வாக்கைக் காப்பதா எனும் நிலை வரும்போது இரண்டையும் காக்கத் தன் மன்னுயிர் துறந்தானே தயரதன் அவன் நினைவுக்கு வருகிறான்.
நம் நாட்டுச் சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டிருந்த கணபதி எனும் தீவிரவாதிக்கும், மதனகோபால் எனும் மிதவாதிக்கும் சுதந்திரம் பெற்றுப் பல ஆண்டுகளுக்குப் பிறகு ஏற்படும் சந்திப்பில் தொடங்குகிறது “வந்தே மாதரம்” குறுநாவல். இப்போது கணபதி சாமியாராக இருக்கிறான் மதனகோபால் பொதுவுடைமைக் கட்சியின் தலைவராக இருக்கிறான். குறுநாவல் பின்னோக்கு உத்தியில் சொல்லப்படுகிறது.
சாந்தி முகூர்த்தம் கூடத் தன் மனைவியிடம் நடக்காமல் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்த கணபதி இப்போது மதனகோபாலைப் பார்த்துச் சொல்லும் இந்தப் பேச்சு மிக முக்கியமானது.
”மதனு, நீயும் ஒரு லட்சியவாதி. என்னைப் போலவே மாறிவிட்ட லட்சியவாதி, எந்தப் பாதையை நம்முடைய உயிர் மூச்சுன்னு ஒரு ஆவேசத்திலே தேர்ந்தெடுத்து நம்ம வாழ்க்கையின் பொன்னான வருஷங்களையெல்லாம் அதிலே செலவிட்டு ரொம்பப் பின்னாடி அது தப்புன்னு ஒரு ஞானம் வந்தா மனோநிலை எப்படி இருக்கு சொல்லு?”
இன்றைய இந்தியாவின் சூழ்நிலையில் இக்கருத்துகள் முக்கியம் பெறுகின்றன. போராட்டம் எதற்காக நடந்த்தோ அதன் குறிக்கோள் நிறைவேறியது போல் தோன்றினாலும் உண்மையான சுதந்திரம் என்பது “ எல்லாரும் ஓர் நிறை; எல்லாரும் ஓர் குலம்; எல்லாரும் இந்நாட்டு மன்னர் என்பதில் தானே இருக்கிறது. அது கிடைக்காதபோதுதான் தாங்கள் விழலுக்கு நீர் பாய்ச்சியது போலவும் அன்னியராக ஆகி விட்டது போலவும் கணபதி போன்றோர் உணர்கிறார்கள். மதனகோபால் போன்றோர் சூழலைத் தன் வயப் படுத்தி வாழ்கிறார்கள்.
அடுத்த குறு நாவல் ‘ஒரு ரோஜா நனைகிறது’ அஞ்சலகத்தில் வேலை பார்க்கும் சாரங்கனுக்குச் சீட்டாட்டத்தில் தொடங்கிய பழக்கம் ‘லாட்ஜ்’ களுக்குப்போகும் வரை வந்து விட்டது. ஓய்வு பெறும் நிலையிலிருக்கும் பிச்சையா அவனுக்கு உதவியாளர். அவருடைய ஒரே மகள் ருக்கம்மாவை அவர் அதிக பாசம் கொட்டி வளர்த்து வந்தார். ஆனால் அவள் ஒரு சேல்ஸ்மேனோடு ஓடிப் போய் விடுகிறாள். அதன் காரணமாக பிச்சையா எப்போதும் அவள் நினைவாக அவளை வளர்த்த்தையே எண்ணித் தனியே புலம்பிக் கொண்டிருந்த்தைப் பார்த்த சாரங்கனுக்கு அவர் மீது பரிதாபம் வருகிறது ஏதோ ஒரு காரணத்தால் பிச்சையா பணியிலிருந்து நீக்கப்பட சாரங்கன் அவரைத் தன் அறையில் தங்க வைத்து நன்கு கவனித்து வருகிறான்.
ஏதோ ஓர் ஊருக்குச் சென்ற சாரங்கன் உடல் தேவைக்காக ஒரு லாட்ஜிற்குப் போகிறான். நன்குப் பழகிச் சுகம் கொடுத்த பெண்ணிடம் அவள் பெயர் சீதம்மா என்று தெரிந்து கொள்கிறான். தன் ஊரையும் பணியையும் சொன்னவுடன், அவள் ‘உங்கள் பெயர் சாரங்கனா?” என்கிறாள். ‘ஆமாம்’ என்று அவன் பதில் சொன்னதற்குப் பின் அவள் மிகவும் பதற்றமடைகிறாள். அழுதுகொண்டே போய்விடுகிறாள். ஊருக்கு வந்த சாரங்கன் ஒருநாள் பிச்சையாவிற்கு வந்த ஒருகடிதத்தைத் தற்செயலாகப் பிரித்துப் படிக்கிறான். அது ஓடிப்போன அவர் மகள் எழுதியது.
அதில் அவள் “தான் நலமாக இருப்பதாகவும், தன் கணவர் அடிக்கடி பணியின் நிமித்தம் சுற்றுப் பயணம் செல்வதால் வர இயலவில்லை. திடீர் திடீரென்று எங்களுடைய ஊர் மாறுவதால் நீங்களும் வர வேண்டாம் என்று எழுதியதோடு, நீங்கள் இனிமேல் யாருடைய அறையிலும் தங்கி இருக்க வேண்டாம். நான் மாதா மாதம் பணம் அனுப்புகிறேன். உடனடியாக திரு. சாரங்கன் வீட்டிலிருந்து புறப்படவும்” என்று எழுதி இருந்தாள். சற்று நேரம் சிந்தித்த சாரங்கனுக்கு சீதம்மாதான் பிச்சையாவின் மகள் ருக்கம்மா என்று புரிகிறது. பிச்சையா மனம் உடைந்து விடக்கூடாது என்பதற்காக அவள் பொய் சொல்லி வருவதையும் தெரிந்து கொள்கிறான். உண்மை தெரிந்த பின்னும் நம்பிக்கையில் வாழும் பிச்சய்யாவை ஏமாற்றிக்கொண்டே கூசாமல் அவரோடு உடனிருக்கப் பிடிக்காமல் வேறு ஊருக்கு மாற்றலாகிப் போகிறான்.
தற்செயலாகச் சிலரைச் சந்திப்பது எப்படி வாழ்வை மாற்றுகிறது என்பற்கு சாரங்கனின் வாழ்வு ஓர் உதாரணம். அவன் இப்போது ஒழுக்கமான வாழ்வு வாழ்கிறான். தன் தந்தை மோசமான பழக்கம் உள்ள ஒருவருடன் தங்கியிருப்பதை ருக்கம்மா விரும்பாதது தான் கதையின் மையம். ஒழுக்கமாக வாழவேண்டிய சாரங்கன் அதிலிருந்து தவறுவதும், திசை மாறி வாழ்பவள் அவனை மட்டமாக நினைப்பதும், நல்ல முரண். ஆனால் வையவன் ருக்கம்மாவை மையப் படுத்தி “உன்னை ரோஜாப் பூவு கணக்கா தண்ணி படாமே தழும்பு படாமே, வெயில் படாமே வளர்த்தேனே ருக்கம்மா “ என்று பிச்சையா புலம்புவதை வைத்து. இப்போது அப்போது அந்த ரோஜாப்பூ மழையில் வீணாக நனைவதை எண்ணித் தலைப்பு சூட்டியிருக்கிறார்.
அடுத்தது ‘மறதி’ எனும் குறு நாவல். இந்நாவலில் ஓரிடத்தில் “ உலகத்தில் எல்லாத் துயரங்களுக்கும், எல்லாமான முறிவுகளுக்கும் மறதிதான் மாபெரும் மருந்து “ என்று வருகிறது. உண்மைதான். இந்த மறதி என்ற உணர்வு மட்டும் இல்லாவிடில் வாழ்வு பல சிக்கல்களுக்கு உள்ளாக நேரிடும். உறவுகளுக்கிடையே குழப்பங்கள் ஏற்படும். நடந்ததையே நினைத்து நாம் மன உளைச்சலுக்கு ஆளாகிப் பிறரையும் வருத்தத்திற்கு ஆட்படுத்துவோம். மறதிதான் இன்னா செய்தார்க்கும் நன்னயம் செய்யத் தூண்டுகிறது. இனி கதைக்கு வருவோம்.
கல்லூரி நாள்களில் மாதுவும் கிருஷ்ணவேணியும் ஒருவரை ஒருவர் காதலிக்கின்றனர். ஆனால் குடும்பச் சூழ்நிலையால் உறவுப் பெண்ணாகிய கௌசல்யாவை மணக்க வேண்டிய சூழ்நிலை மாதுவுக்கு ஏற்படுகிறது. கனத்த மனத்துடன் கிருஷ்ணவேணியிடம் சொல்லிவிட்டுப் பிரிகிறான் மாது. அவளும் வருத்தத்தோடு இம்முடிவை ஏற்கிறாள். கௌசல்யாவை மணம் புரிந்து இரு குழந்தைகள் பிறந்த பின்பும் மாதுவால் கிருஷ்ணவேணியை மறக்க முடியவில்லை. மனைவியிடம் முழு அன்பு செலுத்த முடியவில்லை.
ஒரு நாள் தன் மனைவிக்கு உடல் நலம் சரியில்ல என மாது அவளை மருத்துவரிடம் அழைத்துச் செல்கிறான். அந்த மருத்துவர் கிருஷ்ணவேணியாக இருப்பதுதான் கதையின் திருப்பம். எல்லாச் சோதனைகளும் செய்தபின்னர் கௌசல்யாவுக்கு டி.பி என்று அவர் கண்டுபிடிக்கிறார். [ ‘நெஞ்சில் ஓர் ஆலயம்’ நினைவுக்கு வருவதைத் தவிர்க்க முடியவில்லை.]
அத்துடன், “ அவளுக்கு ஏக்கம் என்ற நோய். அதுவே முற்றி டி.பி என்றாகி விட்டது. அவள் உங்களிடமிருந்து அன்பையும் ஆதரவையும் எதிர்பார்த்திருக்கிறாள். நீங்கள்…….அதைத் தரவே இல்லை “ என்று குற்றம் சாட்டுகிறாள்.
”பழைய காதலை— கிருஷ்ணவேணியை மறக்க முடியவில்லை” எனும் மாதுவிடம் ”மறக்கத்தான் வேண்டும் நான் அதற்காகத்தான் இந்தத் தொழிலைத் தேர்ந்தெடுத்தேன். என்னை மறந்து விடுங்கள்; ஒரு பாவமும் செய்யாத உங்கள் மனைவி ஏன் தண்டனை அடைய வேண்டும்?” என்றெல்லாம் கிருஷ்ணவேணி கூறுகிறாள்.
மனம் மாறிய மாது ஆறு வருஷத்தில் காட்டாத அன்பை கௌசல்யாவிடம் செலுத்த அவள் மனம் மகிழ்கிறாள். வெண்ணெய் திரண்டு வரும்போது தாழி உடைவது போல கௌசல்யா மறைகிறாள். ’கிருஷ்ணா ஏற்றுக்கொள்வாளா’ என்று கொஞ்சம் நப்பாசைப் பட்ட மாது உடனே மனம் மாறுகிறான்.
”எனக்குக் கிடைக்காத மறதி அவளுக்குக் கிடைத்திருக்கும் போது அதில் குறுக்கிட மாட்டேன். அவள் ஆயிரம் நோயாளிகளுக்கு உரியவள்” என்று அவளிடம் சொல்லாமலே போய்விடுகிறான்.
உண்மையிலேயே மறதி என்பது ஒரு வரப்பிரசாதம். இது முன்பே மாதுவிற்குக் கிடைத்திருந்தால் கௌசல்யா என்ற பெண்ணின் வாழ்வு மலர்ந்திருக்கும். அது கிடைத்ததால்தான் கிருஷ்ணவேணி என்பவளின் வாழ்க்கை நன்கு ஓடிக்கொண்டிருக்கிறது.
இந்த “ஆச்சாள்புரம்’ எனும் தொகுப்பிலுள்ள குறுநாவல்கள் ஒவ்வொன்றும் வெவ்வேறு தளங்களில் இயங்குகின்றன. எந்த சம்பவங்களும் வலிந்து அமைக்கப்படாமல் அவற்றின் இயல்பான போக்கிலேயே வந்து செல்கின்றன. தள வருணனைகள் மனத்தில் இடம் பிடிக்கின்றன. ஒரு குறு நாவல் முடியும் பக்கத்திலேயே அடுத்த நாவல் தொடங்குவது கொஞ்சம் தொழில்நுட்பக் குறைபாடாகத் தோன்றுகிறது. [ பக்கங்கள் 42, 63, 109, 132 ] ஆக வளர்ந்த மற்றும் வளர்ந்து வரும் அனைத்து எழுத்தாளர்களும் படிக்க வேண்டிய அருமையான தொகுப்பு இது.
[ஆச்சாள்புரம்—குறுநாவல்கள்—தொகுப்பு—வையவன்வெளியீடு:தாரணிபதிப்பகம்,4ஏ,ரம்யா பிளாட்ஸ், காந்தி நகர் 4ஆவது மெயின் ரோடு, சென்னை 600 020—பக்: 148, விலை: ரூ 120]

Series Navigationவொலகம்திரு நிலாத்திங்கள் துண்டம்
author

வளவ.துரையன்

Similar Posts

Comments

  1. Avatar
    என் செல்வராஜ் says:

    வையவனின் குறுநாவல்கள் பற்றிய விமர்சனம் நன்றாக இருக்கிறது.இப்போது குறுநாவல்கள் வெளியாவதில்லை.500 பக்கங்களுக்கு மேல் எழுதினால்தான் அது நாவல் என்ற நினைப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *