வீடெனும் பெருங்கனவு

This entry is part 8 of 29 in the series 19 ஜூலை 2015

சோ.சுப்புராஜ்

ஜெயசீலியும் செல்வகுமாரும் நீண்ட நேரமாகக் காத்திருந்தார்கள். தனபாலன் – வீடு வாடகைக்கு ஏற்பாடு செய்து தரும் புரோக்கர் – குறிப்பிட்டிருந்த நேரத்திற்கு சற்று முன்னதாகவே அவர்கள் அந்த இடத்திற்குப் போய்ச் சேர்ந்து விட்டார்கள். ஆனால் குறிப்பிட்டிருந்த நேரம் கடந்தும் தனபாலன் அங்கு வந்து சேரவில்லை.
ஜெயசீலியும் செல்வகுமாரும் சில வருஷங்கள் அபுதாபியில் வேலை பார்த்து விட்டு சொந்த ஊருக்குத் திரும்பி யிருந்தார்கள். மறுபடியும் அபுதாபிக்குத் திரும்பிப் போக வேண்டாமென்றும் அங்கு சேமித்து வைத்த பணத்தில் சென்னையின் ஏதாவதொரு புறநகரில் வீடுகட்டி செட்டில் ஆகிவிடலாம் என்றும் தீர்மானித்துத் தான் ஊர் திரும்பி யிருந்தார்கள். செல்வக்குமார் ஏதாவது அடுக்குமாடிக் குடியிருப்பில் ஒரு ஃபிளாட்டை வாங்கி குடி போய் விடலாம் என்றான். ஆனால் ஜெயசீலி ஃபிளாட்டில் நான்கு சுவர்கள் கூட நமக்குச் சொந்தமில்லை என்று கூறி அதை மறுத்து விட்டாள்.
அவள் வீடு பற்றி பாரதியின் காணிநிலம் கவிதையைப் போல நிறைய கனவுகள் வைத்திருந்தாள். 600 சதுர அடியென்றாலும் அது தங்களுக்கு மட்டுமே யானதாய் இருக்க வேண்டும். அவளே ஒவ்வொரு சுவரையும் பார்த்துப் பார்த்து கட்ட வேண்டும். தன்னுடைய ரசனைக்குத் தக்கபடி ஒவ்வொரு அங்குலத்தையும் அலங்கரிக்க வேண்டும். வீட்டைச் சுற்றியும் தென்னை, மா,பலா, வாழை, முருங்கை என்று மரங்களும் நிறைய பூச்செடிகளும் வைத்து பார்த்துப் பார்த்து பராமரிக்க வேண்டும். பறவைகளின் காலை ஒலி கேட்டுக் கண் விழிக்க வேண்டும். வீட்டினுள் சூரிய ஒளி நுழையும் முற்றம் கண்டிப்பாய் இருக்க வேண்டும்…. என்று இன்னும் இன்னும் ஏராளமான கனவுகள்!
அபுதாபியிலிருந்து திரும்பியதும் இருவரும் கொஞ்ச நாள் வேட்டவலத்தில் ஜெயசீலியின் வீட்டில் தங்கி யிருந்தார்கள். அப்புறம் செல்வக்குமார் மட்டும் சென்னைக்கு வந்து ஒரு மேன்சனில் அறையெடுத்துத் தங்கியபடி தனக்கொரு வேலையும் வீடு கட்டுவதற்கான இடமும் தேடிக் கொண்டிருந்தான்.
கூடவே ஜெயசீலிக்கும் வேலை தேடியதில் அவனுக்கு கிடைப்பதற்கு முன்பு ஜெயசீலிக்கு வேலை கிடைத்து விட்டது; ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரியில் ஆசிரியையாக. அதனால் ஜெயசீலியும் சென்னைக்கு வந்து வேலைக்குப் போகும் பெண்களுக்கான விடுதியில் தங்கிக் கொண்டு அங்கிருந்தபடி வேலைக்குப் போய்க் கொண்டிருந்தாள்.
ஒரே ஊரிலிருந்தாலும் இருவரும் தனித் தனியாய் தங்கியிருப்பது இருவருக்குமே சிரமமாய் இருந்தது. காதலர்கள் மாதிரி பூங்காக்களிலும் கடற்கரைகளிலும் சந்தித்துப் பிரிவதும், அந்தரங்கப் பகிர்தல்களுக்காக அவ்வப்போது ஹோட்டல்களில் அறை எடுத்துத் தங்குவதும் மனசுக்கு மிகவும் சங்கடமாக இருந்தது. அதனால் அவர்கள் தீவிரமாய் சென்னையில் வாடகைக்கு வீடு தேடத் தொடங்கினார்கள்.
ஒரு நண்பர் தான் தனபாலனின் கைத்தொலைபெசி எண்ணைக் கொடுத்து அவர் மூலம் முயற்சிக்கச் சொன்னார். அவரைப் போனில் தொடர்பு கொண்டு நண்பரின் பெயரைச் சொல்லி அறிமுகம் செய்து கொண்டு பேசிய போது என்ன ரேஞ்சில் வாடகைக்கு வீடு எதிர் பார்க்கிறீர்கள் என்று கேட்டார். பட்ஜெட்டைச் சொன்னதும் பார்த்து விடலாம் என்று நம்பிக்கையாய்ப் பேசினார். ஒரு மாத வாடகையைக் கமிஷனாகத் தந்துவிட வேண்டு மென்றும் கறாராகச் சொல்லி விட்டார்.
அதற்கப்புறம் அவரிடமிருந்து எந்தத் தகவலும் வரவில்லை. நேற்றுத் தான் மறுபடியும் அவர் செல்வக்குமாரைத் தொடர்பு கொண்டு, சென்னையின் பிரதான பகுதி ஒன்றின் பெயரைக் குறிப்பிட்டு அங்கு தனி வீடொன்று லீசுக்கு வருவதாய் சொல்லி, பார்க்கிறீர்களா என்று கேட்டார்.
முதலில் லீசுக்கு வீடெடுக்க வேண்டுமா என்ற தயக்கம் செல்வக்குமாருக்கு இருந்தாலும் தனபாலன் லீசுக்கென்று சொன்ன தொகையைக் கேட்டதும் ஆச்சர்யமாக இருந்தது. மாத வாடகையே பத்தாயிரத்திற்குக் குறையாமல் இருக்கும் அதுவும் அட்வான்ஸாகவே ஒரு லட்சத்திற்குக் குறையாமல் கேட்கப்படும் அந்தப் பகுதியில் மூன்று லட்ச ரூபாயில் வீடு லீசுக்கு கிடைப்பது என்பது தவறவே விடக்கூடாத சந்தர்ப்பம் என்று அவனின் உள்மனசு சொன்னது.
ஜெயசீலியிடம் விஷயத்தைச் சொன்னதும் அவளும் மிகவும் சந்தோஷப் பட்டாள். ஆனால் சாவகாசமாக ஞாயிற்றுக் கிழமை போய்ப் பார்த்துக் கொள்ளலாம் என்றாள். செல்வக்குமார் தான் உடனே போய் பார்த்துவிட்டு வந்து விடலாம் என்றும் மற்றவர்கள் யாரும் முந்திக் கொள்வதற்கு முன்னால் நாம் மடக்கிப் போட்டு விட வேண்டுமென்றும் இந்தமாதிரி வீட்டிற்கெல்லாம் அதிகம் போட்டி இருக்குமென்றும் சொல்லி அவசரப் படுத்தினான். ஜெயசீலியும் சரியென்று கல்லூரிக்கு விடுப்பு எழுதிக் கொடுத்து விட்டு இருவருமே கிளம்பி வந்திருந்தார்கள்.
நீண்டதோர் காத்திருப்பாக நேரம் கடந்து கொண்டிருந்தது. நேரம் செல்லச் செல்ல இதில் ஏதும் ஏமாற்று வேலை இருக்குமோ என்று இலேசான பதட்டமும் மனசுக்குள் எட்டிப் பார்க்கத்தான் செய்தது. செல்வக்குமார் தனபாலனை இதற்கு முன் பார்த்திருக்க வில்லை. எல்லா பேச்சு வார்த்தைக்களும் போனின் மூலம் தான் நடந்தேறியிருந்தது. போனில் தொடர்பு கொள்ள முயன்ற போது அவர் தொடர்பு எல்லைக்கு வெளியிலிருப்பதாக பதிவு பண்ணப்பட்ட குரல் ஒலித்தது.
ஜெனீட்டாவின் அவசரமான துர் மரணம் தான் வாழ்வின் நிச்சயமின்மையை முகத்தில் அறைந்து அவர்களை சொந்த ஊருக்குத் துரத்தியது. அவள் மட்டுமா? குடும்பமே அதுவும் இரண்டு இளம் குருத்துக்களுடன் அல்லவா மீளாத் துயிலில் ஆழ்ந்து போனது. ஜெனீட்டாவை நினைத்ததுமே ஜெனிலியாவிற்கு கண்கள் கசிந்தது. ஜெனீட்டா, ஜெனீலியாவின் தங்கை; மூன்று வருடங்கள் இளையவள்! அவளுக்கு எல்லா வற்றிலும் அவசரம் தான்; மரணிப்பதிலும்….!
ஜெயசீலியும் ஜெனீட்டாவும் அக்காள் தங்கை என்றாலும் இருவரும் நேரெதிர் துருவங்கள்! அக்காள் ஜெயசீலி சாது என்றால் ஜெனிட்டா சமர்த்து; அல்லது அடாவடி. எதுவும் அவளுக்குப் போக மிச்சமிருந்தால் மட்டும் தான் மற்றவர்களுக்கு என்ற எண்ணம். தான் தன் சுகமே பிரதானம். அழுதே எல்லாவற்றையும் அபகரித்துக் கொள்ளும் அதீத பிடிவாதம்! அப்பா தின்பண்டங்கள் ஏதாவது வாங்கி வந்தால் அவளாகப் பார்த்து ஏதாவது கொடுத்தால் தான் ஜெயசீலிக்கு; கேக் வாங்கி வந்தால் கிரீம்களையெல்லாம் வழித்துத் தின்றுவிட்டு கீழ்ப் பகுதியைத்தான் அக்காளுக்குக் கொடுப்பாள்.
அப்போது ஜெனீட்டாவிற்கு நான்கு அல்லது ஐந்து வயதிருக்கும். ஒரு ஞாயிற்றுக் கிழமை; மத்தியானச் சாப்பாட்டுக்காக அரைக் கிலோ ஆட்டு ஈரல் வாங்கி வதக்கி வைத்து விட்டு அம்மா எங்கோ வெளியில் போயிருந்தாள். ஜெயசீலி வெளியில் விளையாடிக் கொண்டிருந்தாள். சாப்பாட்டு வேளைக்கு எல்லோரும் உட்கார்ந்து விட்டார்கள்.
சமைத்து வைத்திருந்த பாத்திரங்களை ஒவ்வொன்றாக எடுத்து வந்து பரிமாறப் போனபோது தான் அம்மா கவனித்தாள். ஈரல் சமைத்து வைத்திருந்த பாத்திரத்தில் வெறும் வெங்காயமும் தக்காளியும் கலந்த மசாலா மட்டுமே மிச்சமிருந்தது. ஈரல் மொத்தத்தையும் தனித்துப் பிரித்து யாரோ தின்று முடித்திருந்தார்கள். பகீரென்றிருந்தது அவளுக்கு.
யாருக்கும் துளி கூட சந்தேகம் வரவில்லை; ஜெனீட்டா தவிர வேறு யாரும் இதை செய்திருக்க முடியாது என்பதில். அம்மா ஏண்டி இப்படித் தாந்தின்னியா இருக்குற என்று அவளைப் போட்டு மொத்தினாள். அப்பா தான் அவளை அம்மாவிடமிருந்து காப்பாற்றினார். அவளுக்கு வயிற்றுக்கு ஏதும் ஆகி விடுமோ என்று எல்லோரும் பதறினார்கள்.
கல்லூரியில் ஜெயசீலி இயற்பியலும் ஜெனீட்டா கணிதமும் படித்தார்கள். ஜெனீட்டா மிகவும் நன்றாகப் படிப்பாள்.ஆனால் கொஞ்சமும் சிரத்தை எடுத்துக் கொள்ளவே மாட்டாள். செமஸ்டர் பரீட்சைகளில் பாஸாவதற்கு மட்டுமேயான கணக்குகளை மட்டும் போட்டு பேப்பரை மடித்துக் கொடுத்து விட்டு வந்து விடுவாள். அப்பாவின் நச்சரிப்புக்காகத் தான் படிப்பதாகவும் தான் படித்து முடித்து வேலைக்கெல்லாம் போகப் போவதில்லை என்றும் தன்னை கால்கள் தரையில் பாவ விடாமல் தேவதை மாதிரி பராமரிக்கும் ஒருவனுக்குத் தான் தான் மனைவியாகப் போவதாகவும் அவன் தன்னை வேலைக்கெல்லாம் அனுப்ப மாட்டான் என்றும் கனவுலகில் சஞ்சரித்தபடி சொல்வாள்.
ஜெனீட்டா பி.எஸ்.ஸி. கடைசி வருடம் படித்துக் கொண்டிருக்கும் போதே சரவணன் என்பவனைக் காதலித்து அவனுடன் ஓடிப் போனாள். ஜெயசீலி அப்போது எம்.பில். படித்துக் கொண்டிருந்தாள். சரவணன் மெக்கானிக்கல் டிப்ளமோ படித்து விட்டு ஏதோ கம்பெனியில் வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அவர்களின் கல்லூரியில் படிக்கவில்லை; அவர்கள் படித்தது பெண்கள் மட்டுமே படிக்கும் கல்லூரி. இருவரும் எங்கே சந்தித்து எப்படி காதல் வளர்த்துக் கொண்டார்கள் என்ற விபரம் எதுவுமே அவள் கூடவே அலைந்த ஜெயசீலிக்குத் தெரிந்திருக்க வில்லை!
ஓடிப் போவதற்கு சில தின்ங்களூக்கு முன்னால் ஜெனீட்டா தன் காதலைப் பற்றி ஜெயசீலியிடம் சொன்ன போது அவளால் நம்பவே முடிய வில்லை. தன் குரலில் ஆச்சர்யத்தை வெளிப்படுத்தி “எப்படீ இந்த காதல் கண்றாவியெல்லாம் பண்ண? நான் உன் கூடவே தான் இருக்கேன்; எனக்குத் தெரியவே இல்ல..” என்று கேட்டாள்.
“எப்பவும் புத்தகத்தையே கட்டிக் கிட்டு அழுகிற உன்னைப் போன்றவளால காதலையோ வாழ்க்கையின் மற்ற அழகுகளையோ உணரவே முடியாது….” என்றாள் ஜெனீட்டா காதலின் போதையில் கிறங்கியபடி.
”எங்க தாண்டீ உன் ஆளப் பார்த்த…?” என்ற அக்காளின் விடாப்பிடியான கேள்விக்கு “பஸ்ஸுல தான்; எங்கள் காதல் உன்னத் தவிர பஸ்ஸுலயே பல பேருக்குத் தெரியும்…” என்று மேலும் ஆச்சர்ய மூட்டினாள்.
தொடர்ந்து சொன்னாள். “பஸ்ஸுல பலநாள் முறைச்சுப் பார்த்துக்கிட்டே வந்தான்; நேர வந்து பேசப் பயப்புடுறான்னு புரிஞ்சது. அதான் நானே அவன் கிட்டப் போய் ஏன் இப்படி கடிச்சுத் திங்கிறது மாதிரி தெனம் பார்த்திக்கிட்டே வர்ற? ன்னு கேட்டேன்.
அவனும் பட்டுன்னு ’கடிச்சுத் திங்க ஆசைதான்; அனுமதிப்பியா?’ என்றான். பார்த்தால் நல்லவனாத் தான் தெரிஞ்சுச்சு; கொஞ்சம் பேசிப் பார்த்த்துல பெரிய வசதியில்லாட்டாலும் படிப்பும் வேலையும் இருந்தது தெரிஞ்சுச்சு; எப்படியும் வச்சுக் காப்பாத்திடுவான்னு தோணுச்சு… ’திராணி இருந்தா தின்னுக்கோ…’ன்னேன். அப்படியே ரெண்டு பேரும் பழகிக்கிட்டோம்….” என்றாள். ஆனால் இப்படி திடுதிப்பென்று ஓடிப் போவாள் என்பதை ஜெயசீலி எதிர்பார்க்கவில்லை.
அப்பாவால் தாங்கிக் கொள்ளவே முடியவில்லை. காவல் நிலையத்தில் புகார் கொடுத்து அவர்களை கன்னியாகுமரியிலிருந்து கண்டுபிடித்துக் கொண்டு வந்தார்கள். காவல் நிலையத்தில் வைத்து கட்டப் பஞ்சாயத்து நடந்தது. அப்பா அடிக்கப் பாய்ந்தார்; அம்மா கதறி அழுதாள். ஜெனீட்டா கொஞ்சமும் கலங்காமல் இவனுடன் தான் வாழ்வேன் என்றாள். காவல் நிலையத்திலேயே அவர்களின் கல்யாணம் நடந்தது.
அப்பா இனிமேல் அவளுக்கும் எங்களுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்றும் எங்கள் குடும்பத்தின் எந்த நல்லது கெட்டதுக்கும் அவள் வரக் கூடாது என்றும் எழுதி வாங்கிக் கொண்டு, “கழுதை எப்படியும் சீரழியட்டும் வாங்க…” என்று குடும்பத்தினர்களை இழுத்துக் கொண்டு வெளியேறினார்.
ஜெனீட்டாவின் காதலுக்கான பாவம் ஜெயசீலியின் தலையில் விடிந்தது. இவளின் தங்கை ஒருத்தி எவனையோ அதுவும் ஒரு இந்துப் பையனை இழுத்துக் கொண்டு ஓடி விட்டாள் என்ற செய்தி பரவியதால் ஜெயசீலியைக் கல்யாணம் பேச சொந்த பந்தங்கள் யாருமே முன்வரவில்லை. அசலில் இருந்து பெண் கேட்டு வந்தவர்களும், எப்படியோ அந்த விபரம் தெரிந்து கொண்டதும் ஏதும் சொல்லாமலே விலகிப் போனார்கள்.
யாரையும் காதலிக்கிற சாமர்த்தியமும் ஜெயசீலியிடம் இல்லை. முப்பத்தைந்து வயது முடிந்து விட்டிருந்தது. அவள் எம்.பில். முடித்து அப்போது ஈசல்கள் போல பெருகிக் கொண்டிருந்த ஒரு சுயநிதி பொறியியல் கல்லூரியில் விரிவுரையாளராக வேலை பார்த்துக் கொண்டிருந்தாள். சென்னையின் சுற்று வட்டாரத்திலிருந்த அந்தக் கல்லூரியின் பெண்கள் விடுதியின் வார்டனாவும் இருந்ததால் அந்த விடுதியிலேயே தங்கிக் கொண்டாள்.
கல்லூரியின் கட்டிடங்களைக் கட்டுவதற்காக வந்த கட்டுமானக் கம்பெனியின் என்சினியர் ஒருநாள் இவளுடன் பேச வேண்டுமென்றார். ஜெயசீலிக்கு எதுவும் புரியவில்லை; இவருக்கு தன்னுடன் பேசுவதற்கு என்ன இருக்கப் போகிறது என்ற கேள்வியை முகத்தில் தேக்கியபடி அவரைப் பார்த்தாள்.
அவர் தன்னைப் பற்றிய விபரங்கள் மொத்தமும் சொல்லி அவளைத் திருமணம் செய்து கொள்ள ஆசைப் படுவதாகவும் அவளுக்கு இதில் சம்மதம் என்றால் அவளின் வீட்டில் வந்து பேசுவதாகவும் சொன்னார். கொஞ்ச நேரம் யோசித்தவள் தன்னையும் ஒருத்தனால் காதலிக்க முடிந்திருக்கிறதே என்கிற பிரேமைகளில் மூழ்கி கனவு கண்டபடி சரி வாருங்கள் என்று அவளின் வீட்டு முகவரியைக் கொடுத்தாள்.
செல்வக்குமாருக்கும் அப்போதே நாற்பது வயது கடந்து விட்டிருந்தது. நடுமண்டையில் முடியெல்லாம் கழிந்து வழுக்கை எட்டிப் பார்த்துக் கொண்டிருந்தது. அப்பா அம்மா என்று யாரும் கிடையாது. அனாதை விடுதியில் வளர்ந்திருக்கிறார். கல்யாணம் செய்து கொள்ள வேண்டாமென்றும் சமூக சேவைகளிலேயே தன்னுடைய வாழ்நாட்களைக் கழித்து விடலாம் என்றும் தீர்மானித்துக் காலங்களைக் கடத்தியவர் ஜெயசீலியைச் சந்தித்ததும் சம்சார வாழ்க்கையில் மூழ்கித் தான் பார்ப்போமே என்று அவளைப் பற்றிய விபரங்களைச் சேகரித்து அவளை அணுகிப் பேசியிருக்கிறார்.
நாற்பது வயதுக்குள் செல்வக்குமாரின் வாழ்க்கையில் எத்தணையோ பெண்கள் குறுக்கிட்டுருப்பார்கள்! பேரழிகள் சிலரும் அவரைக் கடந்து போயிருக்கலாம்; அப்போதெல்லாம் மிகவும் உறுதியாக இருந்தவர் மிகச் சாதாரணமான பெண் ஜெயசீலி அவரைச் சலனப் படுத்தி அவரின் சங்கல்பத்தைத் தளர்த்திக் கொள்ள செய்ததற்குப் பின்னால் இருந்தது கடவுளா, இயற்கையா அல்லது விதியா என்ன வென்று சொல்வது? இருவரும் திருமணம் செய்து கொண்டார்கள்.
அதற்காகவே காத்திருந்தது போல் ஜெனிட்டா வேட்டவலத்திற்கு வந்து அவளின் அப்பாவுடன் சண்டை போட்டு அவளுக்கான சீர், செனத்தி, நகை என்று ஒன்று விடாமல் பெற்றுக் கொண்டாள். மூத்த பெண்ணிற்கும் திருமணம் முடிந்து விட்டதால், குடும்பத்தினர்களும் பெரிதாய் பகைமை பாராட்டாமல் அவளுக்கான பங்கைக் கொடுத்து விட்டார்கள்.
ஜெனிட்டாவின் குடும்பம் திருவள்ளூரில் வசித்தது. அவளின் காதல் கணவன் ஒரு மோட்டார் கம்பெனியில் மெக்கானிக்காக வேலை பார்த்துக் கொண்டிருந்தான். அவர்கள் தங்களின் குழந்தைகளுடன் அப்போது தாம்பரத்தில் வசித்த ஜெயசீலியின் வீட்டிற்கும் அவ்வப்போது வந்து போய்க் கொண்டிருந்தார்கள்.
அப்படி ஒருமுறை வந்த போது செல்வக்குமார் ஜெயசீலிக்கு முதன்முதலில் ஆசையாய் வாங்கித் தந்திருந்த ஆரஞ்சு வண்ணமும் அரக்கு பார்டரும் போட்ட பட்டுப் புடவையை உடுத்திக் கொண்டு போய் விட்டாள். ஜெயசீலி திருப்பிக் கேட்ட போது அது தனக்கு மிகவும் பிடித்திருப்பதால் அதைத் தானே வைத்துக் கொள்வதாகவும் அவள் வேண்டுமென்றால் அதே போல வேறு ஒன்று வாங்கிக் கொள்ளும் படியும் சொல்லி விட்டாள்.
”நீ என்னைக்கும் மாறவே மாட்டியாடி…?” என்று ஜெயசீலி கோபப்பட்ட போது, “எதுக்கு மாறனும்? என் செல்ல அக்காவோட புடவையை உடுத்திக்கிறதுக்கு எனக்கு உரிமை யில்லையா என்ன!” என்று அவளைக் கட்டிக் கொண்டு செல்லங் கொஞ்சினாள். ”பொடவையோட நிறுத்திக்கோ; என் புருஷனையும் கேட்டுடாத….” என்று ஜெயசீலி அவளைச் சீண்டியதும் “அதெல்லாம் எந்த உத்திரவாதமும் தர முடியாது; மாமாவுக்கு இஷ்டமின்னா மச்சினிச்சியும் தயார்…” என்றாள்.
”அடிப்பாவி! அப்ப சரவணன என்ன செய்றதா உத்தேசம்…?” என்று ஜெயசீலி கேட்ட போது, “அய்யோப் பாவம்; அதையும் வெலக்க முடியாது; அது பாட்டுக்கு ஒரு பக்கம் இருந்துட்டுப் போகட்டும்… பாஞ்சாலி அஞ்சு புருஷனோட வாழ்ந்த போது நான் ரெண்டு புருஷனோட வாழக் கூடாதா என்ன?” என்றாள் சிரித்துக் கொண்டே.
செல்வக்குமாருக்கு அபுதாபியில் வேலை கிடைத்துக் கிளம்பிப் போகவும், ஜெனிட்டா தன் அக்காளைத் தன்னுடன் திருவள்ளூரில் வந்து தங்கிக் கொள்ளும் படியும் அங்கிருந்தபடியே அவள் கல்லூரிக்கும் வேலைக்குப் போய் வரலாம் என்றும் சொன்னாள். ஆனால் ஜெயசீலி அதற்கு சம்மதிக்காமல் வேலையை வேண்டாமென்று எழுதிக் கொடுத்துவிட்டு அவளின் அப்பா ஊரான வேட்டவலத்தில் போய்த் தங்கிக் கொண்டாள். அங்கிருந்தபடியே நான்கு மாதங்களுக்கப்புறம் செல்வக்குமார் விசா அனுப்பவும் அபுதாபிக்குக் கிளம்பிப் போய்விட்டாள்.
அபுதாபியில் அவர்கள் இரண்டு வருஷங்களைக் கடந்திருந்த நிலையில் ஜெனீட்டாவிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. அதில் அவள் தாங்கள் திருவள்ளூரிலேயே ஒரு இடம் வாங்கி வீடுகட்டத் தொடங்கியிருப்பதாகவும், அந்தக் கட்டிடச் செல்வுகளுக்காக கணிசமான ஒரு தொகையை அனுப்பி உதவும் படியும் கேட்டிருந்தாள். செல்வக்குமார் அனுப்பத் தயாராய் இருந்தான். ஆனால் ஜெயசீலி அனுப்ப வேண்டாம் என்று சொல்லி விட்டாள்.
”ஜெனீட்டாவோட இயல்பே அப்படித் தாங்க; நாம அப்பப்ப அப்பாவுக்கு டிராப்ட் அனுப்பி பேங்க்ல டெபாஸிட் பண்ணச் சொல்றோமில்ல… அது அவளுக்கு தெரிஞ்சுருக்கும்; நம்மகிட்ட கொஞ்சம் பணம் இருக்குன்றத மோப்பம் பிடிச்சுட்டால்ல… அதுல இருந்து கொஞ்சம் கொஞ்சமாக் கறக்குறதுக்கு அடி போடுறா? அவகிட்டருந்து பத்துப் பைசா கூடத் திரும்பி வராது; அதனால அவ லெட்டரையெல்லாம் கிழிச்சுப் போட்டுட்டு பேசாமக் கெடங்க….” என்றாள்.
ஆறு மாதங்கழித்து மறுபடியும் அவளிடமிருந்து ஒரு கடிதம் வந்தது. தாங்கள் கட்டத் தொடங்கிய வீடு முடியும் தறுவாயில் இருப்பதாகவும், இன்னும் வீட்டின் தரை வேலைகளும் கதவு, ஜன்னல் வேலைகளுமே முடிக்க வேண்டியிருக்கிறது என்றும் அதற்கான முழுத் தொகையை செலுத்தியும் அவர்கள் ஏற்பாடு செய்திருந்த காண்ட்ராக்டர் அவர்களை ஏமாற்றி விட்டு ஓடிப் போய் விட்டதாகவும் எழுதியிருந்தாள்.
மேலும் சரவணனின் கம்பெனி தற்போது தொழிலாளர் பிரச்னையில் லாக் அவுட்டில் இருப்பதாகவும் சம்பளமும் சரியாக வராமல் வீடுகட்டுவதற்கு வாங்கிய கடனுக்கான தவணைத் தொகையும் தங்களை நெறிப்பதாகவும் வீடும் முடிவு பெறாமல் இழுத்தடிப்பதால் தங்களால் சமாளிக்கவே முடியாமல் நிலைமை இருப்பதாலும் சுமார் ஒன்றரை லட்ச ரூபாய் மட்டும் அனுப்பி உதவும் படியும் உருக்கமாய் எழுதப் பட்டிருந்தது அந்தக் கடிதம்.
சரவணன தொலைபேசியிலும் தொடர்பு கொண்டு ஜெனீட்டா கடிதத்தில் குறிப்பிட்டிருந்த தகவல்களையே அழுகிற தொனியில் பேசினார். தங்களின் நகை, பணம் எல்லாவற்றையும் முழுசாய் முழுங்கிக் கொண்டும் வீடு இன்னும் முடிக்க முடியாமல் இழுத்துக் கொண்டு போவதாகவும் புலம்பினார் அவர். செல்வக்குமாரும் அவர்கள் கேட்ட தொகைக்கான டிராப்ட்டை எடுத்துக் கொண்டு வந்து ஜெயசீலியிடம் கொடுத்து அனுப்பச் சொன்னார்.
ஜெயசீலி அவளிடம் ஒரு வார்த்தை கூடக் கேட்காமல் டிராப்ட் எடுத்ததற்காக செல்வகுமாரைக் கடிந்து கொண்டாள். அவர்கள் சும்மா டிராமா பண்ணி நம்மிடமிருந்து பணம் கறக்க முயல்கிறார்கள் என்றும் நாம இந்த மொட்டைப் பாலைவனத்துல வெயில்லயும் குளிருலயும் உண்ணாம உறங்காமக் கஷ்டப்பட்டு சம்பாரிச்சுச் சேர்த்து வச்சத நோகாம லவட்டிட்டுப் போகப் பார்க்கிறார்கள் என்றும் ஆவேசப்பட்டாள். மேலும் இந்தப் பணத்தை எப்படி நமக்கு திருப்பிச் செலுத்தப் போகிறார்கள் என்பது பற்றி எதுவுமே பேசவில்லை பார்த்தீர்களா என்றும் கேட்டாள்.
செல்வக்குமாரும் ’’திருப்பித் தராட்டால் தான் என்னம்மா? அவர்கள் உன் தங்கையின் குடும்பம் தானே! நமக்கென்ன குழந்தையா குட்டியா, யாருக்கு சேர்த்து வைக்கப் போறொம்…?’’ என்று எதார்த்தமாய் சொல்லவும் அப்படியே வெடித்து பொங்கி விட்டாள் ஜெயசீலி.
”எனக்குக் குழந்தை இல்லைன்னு குத்திக் காட்டுறீங்களா? எனக்கு என்ன கொறை? உங்களால தான எனக்கொரு குழந்தையக் குடுக்க முடியல…. இதுக்கெல்லாம் யாரு காரணம்? அந்த சண்டாளி தான? படிக்கும் போதே அரிப்பெடுத்து அலைஞ்சு, எனக்கு முன்னால எவனையோ இழுத்துட்டுப் போயி கல்யாணம் பண்ணி அழகழகா ரெண்டு புள்ளைங்களயும் பெத்துக்கிட்டா… ஆனா இவள் பண்ண காரியத்தால எனக்குக் கல்யாணமே ஆகாம முப்பத்தஞ்சு வயசுக்கப்புறம் பாதிக் கெழவனாயிட்ட நீங்க தான் புருஷனா வந்து வாச்சீங்க…. எப்புடிக் குழந்தை பொறக்கும்? என் வாழ்க்கையோட எல்லா துன்பங்களுக்கும் அவ தான காரணம்?” ஜெயசீலி அப்படி ஒரு அழுகை அழுது பார்த்ததே இல்லை.
”பத்துப் பைசா கூட அந்த ஓடுகாலிக்காக அனுப்ப நான் ஒத்துக்க மாட்டேன்… என் தங்கச்சிக் குடும்பத்து மேல எனக்கில்லாத அக்கறை உங்களுக்கென்ன? சின்ன வயசாத்தான இருக்குறான்னு பணம் குடுத்து மச்சினிச்சியை மடக்கிப் போடலாமுங்குற அல்ப ஆம்பள புத்தியக் காட்டுறீங்களா?
டிராப்ட மாத்துங்க; அல்லது கிழிச்சுக்கூடப் போடுங்க; அதைப்பத்தி எனக்கு துளிகூட அக்கறையில்ல…. ஆனா அவளுக்கு மட்டும் அனுப்புனீங்கன்னு கண்டேன்; அவ்வளவு தான்….” ஜெயசீலிக்குள் இருந்து வெளிப்பட்ட ஆங்காரமும் வன்மமும் கண்டு வாயடைத்துப் போனார் செல்வக்குமார்.
மூன்று மாதங்களுக்கப்புறம் வேட்டவலத்திலிருந்து வந்த செய்தி அவர்களை வெலவெலக்கச் செய்து விட்டது. கடன் தொல்லை தாங்க முடியாமல், வீட்டையும் கட்டி முடிக்க முடியாமல் ஜெனீட்டாவும் அவள் புருஷனும் இரண்டு பிள்ளைகளுடனும் விஷம் அருந்தி இறந்து போனார்கள். செய்தி கேள்விப்பட்டதும் தலையில் அடித்துக் கொண்டு கதறினாள் ஜெயசீலி. அவள் தன் இயல்புக்கு மாறாக ஏன் அத்தனை மூர்க்கமாக அன்றைக்கு பணம் அனுப்பக் கூடாது என்று முரண்டு பிடித்தாள் என்பது அவளுக்கே விளங்காத விஷயமாகக் கடந்து போய் விட்டது.
மீண்டும் மீண்டும் சலிக்காமல் கைத்தொலைபேசியில் தொடர்பு கொண்டபோது தனபாலனை போனில் பிடிக்க முடிந்து ஒரு வழியாய் அவரும் வந்து சேர்ந்தார். அவர் அழைத்துப் போன பகுதி முழுக்க உயர உயரமான கட்டிடங்கள்; சுற்றிலும் அழகழகான அடுக்குமாடிக் குடியிருப்புகள் இருக்க ஒரே ஒரு தனி வீடு மட்டும் தரைத் தளத்துடன் அதுவும் கட்டி முடிக்கப் படாமல் அரையும் குறையுமாய் அந்த சூழலுக்கே பொருந்தாமல் நின்றது. வெளிச்சுவர் எதுவும் பூசப் படாமல் சிமெண்ட் கலவையை அங்கங்கே உதிர்த்து விட்ட செங்கற் சுவர்களும் கான்கிரீட் பிசிறுகளுமாக நின்று கொண்டிருந்தன. அந்த வீட்டிற்கு முன்னால் அவர்களை நிறுத்தி உள்ளே பார்த்து குரல் கொடுத்தார் தனபாலன்.
”இதான் நீங்க சொன்ன வீடா? இன்னும் கட்டி முடிக்கவே இல்ல போலருக்கு….” என்றார் செல்வக்குமார் சோர்ந்து போய். இதற்காகவா இவ்வளவு நேரம் காத்திருந்தோம் என்ற எரிச்சலுடன் பேசாமல் இப்படியே திரும்பிப் போய் விடலாம் என்றார் தனபாலனிடம். “கட்டி முடிக்காததால தான் லீசுத் தொகை அவ்வளவு கம்மியா இருக்கு…. இன்னும் ஒரு வாரம் பத்து நாள் வேல தான் பாக்கி; முடிச்சுக் குடுத்துருவாங்க ஸார்… இவ்வளவு தூரம் வந்துட்டீங்க…. வீட்டுக்காரங்க கிட்டயும் கொஞ்சம் பேசிப் பார்த்துட்டு முடிவெடுங்க…” என்றார் அவர்.
சுமார் எழுபது எழுபத்தைந்து வயதிற்கும் மேலேயே இருக்கும் பெண்மணி ஒருத்தி வீட்டிற்கு வெளியே வந்தார். தனபாலனைப் பார்த்ததும், அவரை அறிந்திருந்த பாவம் முகத்தில் பிரதிபலிக்க எல்லோரையும் வீட்டுக்குள் அழைத்துப் போனார். உள்ளே நாற்பது வயது மதிக்கத் தக்க இன்னொரு பெண்ணும் பத்து வயதுக்குள் உள்ள ஒரு சிறுவனும் இருந்தார்கள். வீட்டின் உள்சுவர் முழுக்க பூச்சு முடிந்திருந்தது. ஆனால் வீடு கட்டத் தொடங்கி நீண்ட காலமாகி விட்டது பூசிய சுவர் முழுக்க அழுக்குப் படிந்து கிடப்பதிலிருந்து புரிந்தது.
இவர்களை உட்காரச் சொல்லி உபசரிப்பதற்கான எந்த இருக்கை வசதியும் அங்கு இருக்கவில்லை. வீட்டுக்குள்ளிருந்த இளைய பெண் அவசரமாய் ஒரு பாயை விரித்து இவர்களை உட்காரச் சொன்னாள். “அதெல்லாம் பரவாயில்லைங்க….” என்று சொல்லி உட்கார மறுத்து விட்டாள் ஜெயசீலி. அவளின் கண்கள் அலை பாய்ந்து ஒவ்வொரு அறையையும் அளவெடுத்தன. சில அறைகளுக்குள்ளும் போய்ப் பார்த்து விட்டு வரவேற்பரைக்கு வந்து நின்று கொண்டாள்.
தரையில் எங்கும் தளம் போடப்படாமல் கரடு முரடாய் கற்கள் துருத்திக் கொண்டு இருந்தன. சமையலறையிலும் மேடையோ செல்ஃபோ அமைக்கப் படாமல் சமையல் பாத்திரங்கள் எல்லாம் சுவற்றை ஒட்டி சீராக அடுக்கப்பட்டிருந்தன. கேஸ் ஸ்டவ் மட்டும் அடுக்கடுக்கான செங்கற்களால் ஒரு உயரம் அமைக்கப்பட்டு அதன்மீது வைக்கப் பட்டிருந்தது. சமையலறையில் மட்டும் மிகச் சிறு பகுதியில் தரை சிமெண்ட் கலவையால் பூசப்பட்டிருந்தது.
வீட்டின் உள்ளமைப்பு, இரண்டு படுக்கை அறைகள், விசாலமான வரவேற்பறை, சமையலறை, இரண்டு கழிவறைகள் – ஒன்று படுக்கை அறையினுள்ளும் இன்னொன்று பொதுவாகவும் – என்று மிகவும் ரசனையாகவே அமைக்கப் பட்டிருந்தது. வரவேற்பரைச் சுவரில் இரண்டு ஆண்களின் போட்டோக்கள் பிரேம் பண்ணப்பட்டு அருகருகே மாட்டப் பட்டிருந்தன. போட்டோக்களின் தலைகளில் வைக்கப் பட்டிருந்த குங்குமமும் அணிவிக்கப் பட்டிருந்த புத்தம் புது செவ்வந்திப்பூ மாலைகளும் – தினசரி மாற்றுவார்கள் போலிருக்கிறது – அதில் இருப்பவர்கள் இப்போது உயிரோடு இல்லை என்பதைக் கூறிக் கொண்டிருந்தன.
தலைவாசலில் கிரில் கேட்டும் ஜன்னல்களுக்கு கம்பி வலையுடன் கூடிய கிரிலும் பொருத்தப் பட்டிருந்தன. மற்றபடி எந்த அறைக்கும் ஜன்னல்களுக்கும் கதவுகள் பொருத்தப் பட்டிருக்கவில்லை. சமையலறையிலிருந்து வெளியே போவதற்கும் ஒரு புறவாசல் இருந்தது. அது அவர்களின் புழக்கடையாக இருக்கலாம். இங்கிருந்து பார்க்கும் போதே அங்கு விஸ்தாரமான திறந்த வெளி ஒன்று விரிந்து கிடப்பது தெரிந்தது.
அங்கு நிறைய பூச்செடிகள் வனம் போல் அடர்ந்திருந்தன. அதுவும் பெரும்பாலும் செவ்வந்திப் பூக்கள் வெவ்வேறு வண்ணங்களில் பூத்துக் குலுங்கின. இந்த வீட்டுப் பெண்களுக்கு செவ்வந்திப் பூக்களின் மீது நிறைய பிரேமை இருக்க வேண்டும் என்று தோன்றியது. அந்தப் பூக்களைப் பறித்துத் தான் சுவற்றில் மாட்டியிருக்கும் போட்டோக்களுக்கு தினசரி மாலையாகக் கட்டி சூற்றுவார்கள் என்றும் தோன்றியது.
செல்வக்குமாருக்கு இந்த வீடு சரிப்பட்டு வராது என்று தோன்றி விட்டது. ஆனால் அதை எப்படிச் சொல்வது என்று தயங்கினான். என்ன பேசுவதென்றே தெரியாமல் அவர்களையே பார்த்துக் கொண்டிருந்தான். தனபாலன் தான் ஆரம்பித்தார்.
”லீசுக்கான பணத்தைக் கொடுத்தீங்கன்னா அக்ரீமெண்ட் போட்டுக்கலாம்… நீங்க குடுக்குற பணத்த வச்சு பத்துப் பதிணைஞ்சு நாள்ல பாக்கி நிற்குற வேலைகளையெல்லாம் முடிச்சுக் குடுத்துருவாங்க; நீங்க குடி வந்துக்கலாம்…..” செல்வகுமாருக்கு அந்த மாதிரியான ஏற்பாடு ஏற்புடையதாய் இல்லை. எப்படி இவர்களை நம்புவது? வெறும் அக்ரிமெண்டை நம்பி மூன்று லட்ச ரூபாயை எப்படித் தூக்கிக் கொடுக்க முடியும் என்ற சஞ்சலம் அவருக்கிருந்தது.
செல்வக்குமாரின் முக பாவத்திலிருந்தே அவனின் மன ஓட்டங்களைப் படித்து விட்டது போல் முதிய பெண்மணி பேசினாள். “நீங்க சும்மா பணம் குடுக்க வேண்டாம் தம்பி; இந்த வீட்டோட பத்தரத்தைக் குடுக்குறோம்… அதை அடமானமா வச்சுக்கிட்டு பணம் குடுங்க போதும்… அதோட புரோக்கர் தம்பி சொன்னது போல பத்துப் பதிணைஞ்சு நாள்லயெல்லாம் வேலை முடியாது. குறைஞ்சது ஒன்றரை ரெண்டு மாசமாகும்… அதுவரைக்கும் உங்க பணத்துக்கு வட்டி போட்டுக் குடுத்துருறோம்… ” என்றாள். எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அவர்களிடம் தயாராகவே இருப்பது போலிருந்த்து.
செல்வக்குமார் “இந்த வீட்ட எங்களுக்கு குடுத்துட்டா, அப்புறம் நீங்க எங்க போவீங்க பெரியம்மா…” என்றான் ஒரு ஆர்வக் கோளாறில். ”நாங்க மொட்ட மாடியில தகரத்துல ஒரு ரூம் போட்டுக்கிட்டு அங்க போயிடுவோம் தம்பி…புழக்கடையில ஏற்கெனவே ஒரு கக்கூஸ் கட்டியிருக்கிறோம்; அதை நாங்க பாவிச்சுக்குறோம்” என்றாள்.
ஜெயசீலி இன்னொரு இளைய பெண்ணைக் காட்டி இவங்க யாரும்மா என்றாள். “இவ என் மருமக; அவன் என் பேரன்…” என்றவள் அவளாகவே ”என் மருமகளுக்கு வாய் பெச வராதும்மா; ஆனா அவள் வேலைக்குப் போயி கொண்டு வர்ற பணத்துலதான் எங்க வீட்டுல உலை கொதிக்குது…” என்றாள். தொடர்ந்து “நானும் அக்கம் பக்கத்து வீடுகள்ல வீட்டு வேலை செய்றேன்; எப்படியும் ரெண்டு அல்லது மூணு வருஷத்துல உங்க பணத்தத் திருப்பிக் குடுத்துட்டு நாங்க எங்க வீட்ட மீட்டுக்குறோம்மா…“ என்றாள்.
ஜெயசீலி ”வீடுகட்டத் தொடங்கி ரொம்ப நாள் ஆகியிருக்கும் போலம்மா….” என்று கேட்கவும் “அது ஆச்சு தாயி; ஆறேழு வருஷத்துக்கு மேல…. இந்த வீடு எங்களோட கனவும்மா… சொன்னா நம்புவீங்களா, இந்த வீட்டு மனையைக் காபந்து பண்றதுக்காகவும் இந்த வீட்டைக் கட்டுறதுக்காகவும் முழுசா ரெண்டு ஆம்பளைங்களப் பலி குடுத்துருக்கோம்மா. ஒண்ணு என் புருஷன்; இன்னொன்னு இவ புருஷன், அதான் என் பிள்ளை…அவங்க போட்டோ தான் சுவத்துல தொங்குது…
இது எங்க பூர்வீக பூமிம்மா… என் வீட்டுக்காரர் எங்கிருந்தோ ஒரு நாடோடியா எங்க கிராமத்துக்குப் பொழைக்க வந்திருந்தார்… அவர் மேல எனக்கு ஒரு பிரியம் விழுந்துருச்சு; எங்க அப்பாட்ட சொல்லவும், முதல்ல சாதி கௌரவம் அது இதுன்னு சொல்லி முடியாதுன்னுட்டார்; நான் பிடிவாதமா கட்டுனா அவரத்தான் கட்டுவேன்னு முரண்டு பிடிக்கவும் மனசு இளகி என்னை அவருக்கு கல்யாணம் கட்டி வச்சு இந்த நெலத்தையும் எங்களுக்கு சீதனமா எழுதிக் குடுத்து இத வச்சுப் பொழைச்சுக்குங்கன்னு சொல்லி அனுப்பி வச்சார்….
இது பொன்னு வெளையுற மண்ணும்மா; ஆனா ரியல் எஸ்டேட்டுங்குற பூதம் வந்து விவசாயம் மொத்தத்தையும் முழுங்கீட்டுது; என்ன செய்றது? எங்க நெலத்தையும் யாராரோ வந்து விலை பேசுனாங்க… என்ன வெலைன்னாலும் தர்றோம்னாங்க… நெலத்தை நாங்க ஒரு விற்பனைச் சரக்கா பாவிக்கல; எங்க வாழ்க்கையோட ஆதாரமே அதுதான்; குடுக்க முடியாதுன்னுட்டோம்; மிரட்டிப் பார்த்தாங்க. நாங்க மசியல…. போலி பத்திரங்கள் தயார் பண்ணி நெலத்தை எங்ககிட்டருந்து புடுங்கிக்கிட்டாங்கம்மா…
அதப் போராடி மீட்குறதுக்குள்ள திண்டாடிப் போயிட்டோம்; அதுல தான் என் புருஷனக் கொன்னுட்டாங்க… லாரி ஏத்திக் கொன்னுட்டு விபத்து மாதிரி சோடிச்சுட்டாங்க. ஏழை சொல் அம்பலம் ஏறலம்மா…. ஆனா எப்படியோ கைவிட்டுப் போன எஙக நெலம் எங்களுக்கே திரும்பக் கிடைச்சுருச்சு…. காலி மனையாக் கிடந்தாத் தான பிரச்னைன்னு என் புள்ளை தலை எடுத்து இந்த வீட்டைக் கட்டத் தொடங்கினான். அதையும் செய்ய விடாம ஏகப்பட்ட முட்டுக்கட்டை; தடங்கல்கள்…!
இத்தனை அழகழகான வீடுகளுக்கு மத்தியில எங்க வீடு அசிங்கமா நிக்குதுன்னு எவனெவனோ வந்து என்னன்னவோல்லாம் சொன்னானுங்க; அவங்களே அடுக்கு மாடி வீடுகட்டித் தந்து ஆளுக்குப் பாதியா வித்துக்கலாமின்னு ஏதேதோ கணக்கெல்லாம் சொல்லி ஆசை காட்டுனாங்க; என் புள்ள அதுக்கெல்லாம் ஒத்துக்கல…. அவனுங்களுக்கிருக்கிற செல்வாக்க வச்சு போலீஸுல சொல்லி ஒரு பொய்க்கேச சோடிச்சுப் போட்டு விசாரணைக்குன்னு கூட்டிட்டுப் போயி மிரட்டி அடிச்சு அவனை அரை உயிராக் கொண்டுவந்து போட்டுட்டு போயிட்டானுங்கம்மா ….” அடக்கவே முடியாமல் கதறி அழத் தொடங்கினாள் அந்த முதிய பெண்.
பேச்சைக் கொஞ்சம் திசை மாற்றலாம் என்று எண்ணி “தண்ணிக்கெல்லாம் இங்க பிரச்னை இல்லையாம்மா…” என்று கேட்டாள் ஜெயசீலி. தனபாலன் உடனே அவசரமாக “அதெல்லாம் ஒரு பிரச்னையும் இல்லைங்க; போர்வெல் இருக்கு; கார்ப்பரேசன் தண்ணியும் தாராளமா வரும்….” என்றான்.
சேலை முந்தானையால் கண்களையும் முகத்தையும் அழுந்தத் துடைத்தபடி முதிய பெண்ணே மீண்டும் பேசினாள். ”பொய் வேண்டாம் புரோக்கர் தம்பி; நாளைக்கு உண்மை தெரிஞ்சதும் நாங்க அவங்க முகத்துல முழிக்க வேண்டாமா? கோடை காலத்துல தண்ணிக்குக் கஷ்டம் தான் தாயி… ஒரு காலத்துல இதெல்லாம் விவசாய நெலமா இருந்தப்ப நாலடி அஞ்சடி தோண்டுனாலே தண்ணி பீறிட்டுக்கிட்டு வரும். ஆனா அடுக்கடுக்கா வீடுகட்டி ஆட்கள் குடி வந்து பூமியில போர்த் தொலையா போட்டு உறிஞ்சதுல எங்கயோ அடி ஆழத்துக்கு போயிருச்சும்மா தண்ணி….
என்னதான் பூமி நம்ம தாயின்னாலும் அவ மார்ல விடாம உறிஞ்சுக்கிட்டே இருந்தா பால் சுரந்துக் கிட்டேவா இருக்கும்…இரத்தம் கூட வத்திப் போயிடாதாம்மா… அதான் இப்பல்லாம் 200 அடி 300அடின்னு போர் போட்டாத்தான் தண்ணியவே பார்க்க முடியுது. அதோட இளநி மாதிரி இருந்த தண்ணி உப்பாயிருச்சு… குடிக்கிறதுக்கெல்லாம் கார்ப்பரேசன் தண்ணி; அது வரலைன்னா லாரியில கொண்டு வந்து குடம் அஞ்சு ரூவா ஆறு ரூபான்னு விக்கிறவங்க கிட்ட வாங்கிக்கணும்; வசதி இருக்குறவங்க கேன் தண்ணி வாங்கிக்கிறாங்கம்மா…” என்றாள்.
கொஞ்ச நேரம் பேசுவதற்கு எதுவுமே இல்லாத்து போல் அமைதி நிலவியது. முதிய பெண் தன் மருமகளிடம் சைகையில் ஏதோ சொல்ல அவள் ஒரு செம்பில் தண்ணீர் கொண்டு வந்து எல்லோருக்கும் கொடுத்தாள். “வந்ததுலருந்து உங்களுக்கு ஒண்ணூமே தரல… இந்தத் தண்ணியையாவது குடிங்க; காப்பித் தண்ணி கலந்து தரச் சொல்றேன்…” என்றாள்.
அதை அவசரமாக மறுத்த செல்வக்குமார் “அதெல்லாம் வேண்டாம் பெரியம்மா; நாங்க கெளம்புறோம்; வீட்டுல போயிக் கலந்து பேசீட்டு ரெண்டொரு நாள்ல எங்க முடிவச் சொல்றோம்…” என்றபடி ஜெயசீலியைப் பார்த்தான். முதிய பெண் கைகளைக் கூப்பி “கொஞ்சம் உதவி பண்ணுங்க தம்பி, உங்க புண்ணியத்துல இந்த வீட்டைக் கட்டி முடிச்சுடுறோம்….” என்றாள். அவளுக்குக் குரல் பிசிறி கண்களிலிருந்து பொலபொலவென்று கண்ணீர் பொங்கி விட்டது.
ஜெயசீலி “நாங்க கண்டிப்பா இந்த வீட்டை லீசுக்கு எடுத்துக்குறோம்மா; நீங்க நாளைக்கே வேலையத் தொடங்குங்க…” என்றவள் செல்வக்குமாரைப் பார்த்து “ஒரு ஆயிரத்து ஒரு ரூபாய் எடுத்து அட்வான்ஸ் குடுப்பா…” என்றாள். அவன் கொஞ்சம் தயங்கவே அவளாகவே அவனுடைய பையிலிருந்து பர்ஸை எடுத்து பணம் எடுத்து முதிய பெண்ணிடம் கொடுத்தாள். அவளும் சேலை முந்தானையை விரித்து அதில் பணத்தை வாங்கிக் கொண்டாள்.
திரும்பும் வழியில் செல்வக்குமார் தன் மனைவியிடம் “ஏன் அப்படி அவசரப்பட்ட ஜெயசீலி; அந்த வீடு வேண்டாமின்னு தோணுச்சு எனக்கு…” என்று கடிந்து கொண்டான்.
“பரவாயில்லப்பா; ஒரு வீடுங்குறது எவ்வளவு பெரிய கனவு; அதை அஞ்சு வருஷத்துக்கு மேல கட்டி முடிக்க முடியாம அதையே தினசரி பார்த்துக்கிட்டு வாழ்றது பெரிய சித்ரவதைப்பா… பாவம் அந்தக் குடும்பம்; கட்டி முடிக்கட்டும்ப்பா…
அதோட அந்த வீட்டைப் பார்த்ததும் எனக்கு ஜெனீட்டா ஞாபகம் வந்துருச்சுப்பா; அவளும் தொடங்குன வீட்டை கட்டி முடிக்க முடியாமத் தான செத்துப் போயிட்டா; என்னோட பிடிவாதம் தான் அவள சாவை நோக்கித் தள்ளீடுச்சுன்னு எனக்கொரு குற்ற உணர்ச்சி இருந்துக்கிட்டே இருக்கு; அதுக்குப் பிராயச் சித்தமாத்தான் இந்த பெரியம்மாவோட வீட்டைக் கட்டி முடிக்கிறதுக்கு உதவணும்னு முடிவெடுத்தேன்…” என்றபடி கண் கலங்கினாள்.

***
முகவரி : சோ.சுப்புராஜ், 7, 2வது பிரதான சாலை, நேதாஜிநகர், திருமுல்லைவாயில், சென்னை – 600 062. டெலி: +91- 9952081538 E.mail: engrsubburaj@yahoo.co.in

Series Navigationகாலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழா
author

சோ சுப்புராஜ்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *