டாக்டர் ஜி. ஜான்சன்
77. செயின்ட் ஜார்ஜ் கோட்டை
நீண்ட விடுமுறை விடப்பட்டது. திட்டமிட்டபடியே திருவள்ளுவர் துரித பேருந்து மூலம் சென்னை புறப்பட்டேன். அங்கிருந்து மின்சார இரயில் மூலம் தாம்பரம் சென்றேன்.
அத்தை மாமா பிள்ளைகள் அனைவரும் மகிழ்ச்சியைத் தெரிவித்தனர். நான் மருத்துவக் கல்லூரியில் சேர்ந்துவிட்டது அவர்களுக்கு பெருமையாக இருந்தது. எங்களுடைய குடும்ப வரலாற்றில் நான்தான் முதல் மருத்துவனாகப் போகிறேன். அப்பா, பெரியப்பா, அத்தை, அண்ணன், அண்ணி ஆகியோர் ஆசிரியர்கள். அத்தை மகள் நேசமணி பாசத்தோடு ” அத்தான், அத்தான் ” என்று ஆசை பொங்க அழைத்து அன்பைக் காட்டினாள். அத்தை அன்றே கோழி வெட்டி சமைத்தார்கள். நேசமணிதான் எனக்கு உணவு பரிமாறினாள். அவளுக்கு இனி நான்தான் என்றே முடிவு செய்துவிட்டாள். பாவம் அவள். முறை மாப்பிள்ளை என்பதால் தானாகவே ஆசையை வளர்த்துக்கொண்டாள். அவளிடம் நான் நன்றாகத்தான் பழகினேன். அவளுடைய ஆசையை நான் ஏன் கெடுக்கவேண்டும்? அவளிடம் லதா பற்றியோ வெரோனிக்க பற்றியோ கூறவில்லை. மூத்தவன் பாஸ்கரனும், இளையவன் ஸ்டீபனும் அதற்கடுத்தவன் வில்சனும் பள்ளி சென்று வந்தனர்.இவர்களில் பாஸ்கரன் ஏறக்குறைய என்னைப்போலவே இருப்பான். அதனால் அவன் மீது எனக்கு தனிப் பாசம்.
மறுநாள் மாலை சென்னைக் கிறிஸ்துவக் கல்லூரி சென்றேன். வகுப்புகள் முடியும் நேரம். வழக்கமாக நான் காத்திருக்கும் மஞ்சள் பூ மரத்தடியில் நின்றேன். காற்றில் பூக்கள் உதிர்ந்து விழுந்துகொண்டிருந்தன. புத்தகங்களை நெஞ்சோடு அணைத்தவண்ணம், குனிந்த தலை நிமிராமல் வெரோனிக்கா மாலைத் தென்றல் போல் அசைந்தாடி வந்தாள். தொலைவிலேயே என்னைப் பார்த்துவிட்டாள். நடையும் துரிதமானது. என்னைப் பார்த்ததும் அவளுடைய முகம் மலர்ந்து சிவந்தது.
” அப்பாடா! வந்துவிட்டீர்களா? எப்படி இருக்குது மெடிக்கல் காலேஜ் ? ” அருகில் வந்து நின்றாள். நான் அவளுடைய கண்களைப் பார்க்கத் தயங்கினேன். உடன் பதில் சொல்லவும் தடுமாறினேன். நெஞ்சம் லேசாக படபடத்தது.
” நீ எப்படி இருக்கே? ” பதிலுக்கு நான் கேட்டேன்.
” மெடிக்கல் கிடைத்ததும் மறந்துபோனீரோ என்னை? ” என்னைப் பார்த்து கேட்டாள்.
” இல்லை. அது எப்படி மறப்பேன்? ” சரளமாக பதில் கூற முடியவில்லை. மனதில் ஒருவித குற்ற உணர்வுதான்.
” சரி வாங்க பேசிக்கொண்டே நடப்போம். இன்று இரவு உணவு எங்கள் வீட்டில்தான். அம்மா சொல்லிவிட்டார்கள். ஆமாம் கடிதம் கூட எழுத நேரமில்லையா? ஒரு கடிதம் எழுதினால் பதிலுக்கு ஒரு மாதமா காத்திருப்பார்கள்? ” கோபம் கலந்த கொஞ்சல் அது.
” ஆமாம். முதல் ஆண்டிலேயே கொஞ்சம் வேலைகள் அதிகம். அதனால்தான்.” சமாளித்தேன்.
” நீங்கள் என்னைப் பார்க்க வருவீர்கள் என்ற நம்பிக்கை எனக்கு இல்லாமல் போனது.மருத்துவம் கிடைத்தால் நாம் பிறிய நேரலாம் என்ற எண்ணம் வலுப்பெற்றது.. ” அவள் உண்மையைச் சொன்னாள்.
” உண்மைதான். முன்புபோல் நாம் அடிக்கடி சந்திக்க முடியாததுதான். இந்த வருடம் நீ இரண்டாம் வருடம். அடுத்த வருடம் உன் படிப்பு முடிந்துவிடும். நான் அப்போது இரண்டாம் வருடத்தில் இருப்பேன். பின்பு நீ என்ன செய்வாய் என்றும் தெரியாது. ஆனால் நான் வேலூரில்தான் இருப்பேன்.”
” ஆமாம்..ஒருவேளை நான் இங்கேயே எம்.எஸ்.சி .கூட படிக்கலாம். அல்லது வேலைக்கு போகலாம். அது பற்றி இப்போ கவலைப்படத் தேவையில்லை. நம் உறவு தொடருமா என்பதுதான் இப்போதைய கவலை.”
” எனக்கும் அதே எண்ணம்தான். எனக்கு படித்து முடிக்க இன்னும் நான்கு ஆண்டுகள் ஆகும். அதன்பின் ஹவுஸ் சர்ஜனாக ஒரு வருடம் பயிற்சி பெறவேண்டும். இப்போது பரவாயில்லை. கொஞ்சம் சுலபமாக உள்ளது. அனால் இரண்டாம் வருடம் அநேட்டோமியும் பிசியோலாஜியும் ரொம்ப கஷ்டம். அதில்தான் பலர் பெயில் ஆவார்கள். அப்படி ஆனால் மீண்டும் அதை எழுத ஆறு மாதங்கள் ஆகும்.”
” நீங்கள்தான் படிப்பில் சூரப்புலியாச்சே. நிச்சயம் பாஸ் பண்ணுவீங்க. அந்தக் கவலையெல்லாம் வேண்டாம். நம் உறவால் படிப்பு ஒன்றும் கெடாது. நாம் என்ன அருகிலேயா இருக்கிறோம்? காதலால் படிப்பு கெட? ”
” காதலால் படிப்பு ஏன் கெடப்போகிறது? நான் இங்கிருந்தபோது நம் படிப்பு கெட்டதா? ”
” அப்போது நாம் காதலித்தோமா? அது பற்றி நாம் பேசியதில்லையே? பிரியும்போதுதானே அதெல்லாம்? ” அவள் சொல்வதும் நியாயம்தான். அப்போது நாங்கள் நல்ல நட்புடன் நெருங்கிதான் பழகினோம். காதலுடன் தொட்டுப் பேசியதில்லை. அப்போது அது நட்பா காதலா என்றுகூட தடுமாற்றம் இருந்தது. பிரிந்தபோதுதான் அது காதல் என்பது புலப்பட்டது.
ரயில்வே மேம்பாலம் தாண்டி, வீதியைக் கடந்து , லூத்தரன் ஆலயம் தாண்டி அவளுடைய குடியிருப்புப் பகுதிக்குள் நுழைந்தோம்.
” வீடு வந்துவிட்டது. இப்போதே பேசிவிடுவோம். நாளை சனிக்கிழமை காலேஜ் இல்லைதானே? காலையிலேயே வந்துவிடவா? மெட்ராஸ் போவோம். ”
” சரி. நாளை நமதே. ” கிண்டலாகக் கூறி கண் சிமிட்டினாள். அது கண்டு என் உற்சாகம் அதிகமானது.
வீட்டில் தடபுடலாகவே வரவேற்பு கிடைத்தது.
அவளுடைய பெற்றோர் என்னை அன்புடன் வரவேற்று நலம் விசாரித்தனர். நான் மருத்துவக் கல்லூரியின் அனுபவங்கள் பற்றி கூறினேன். அவர்கள் தங்களுடைய மகிழ்ச்சியையும் பாராட்டுகளையும் தெரிவித்தனர்.
அன்று இரவு உணவை அங்குதான் உண்டேன்.சுவையான கோழிக் குழம்பு பரிமாறினார்கள்.
இரவு பத்து வரை அங்குதான் இருந்தேன்.விடை பெற்றபோது காலையில் வருவதாகச் சொன்னேன்.இருவரும் சென்னை செல்லலாம் என்றேன். அவள் சரி என்றாள். அவளுடைய பெற்றோர் ஏதும் சொல்லவில்லை. முன்பு ஒரு முறை அவளுடன் மெட்ராஸ் சென்று வந்தது அவர்களுக்குத் தெரியும். அவர்கள் அதை பெரிதுபடுத்தவில்லை. என்னுடன் வெரோனிக்கா கலகலப்புடன் இருந்தது அவர்களுக்கும் மகிழ்ச்சியையூட்டியது தெரிந்தது.
அத்தை வீடு திரும்பி இரவைக் கழித்தேன்.
காலையிலேயே புறப்பட்டுவிட்டேன். அவள் காத்திருந்தாள். இருவரும் மின்சார இரயில் ஏறினோம். அருகருகே அமர்ந்து சென்னை துறைமுகம் இரயில் நிலையம் சென்றோம்.
” எங்கே போகலாம் ? ” அவள் ஆவல் பொங்கக் கேட்டாள் .
” செயின்ட் ஜார்ஜ் கோட்டை போவோம். நான் அதை இன்னும் சரியாகப் பார்க்கலை. நீ பார்த்துள்ளாயா? ” வினவினேன்.
” நான்கூட அப்படித்தான். இன்னும் சரியாகப் பார்க்கலை. நல்ல இடம்தான் செலக்ட் பண்ணியுள்ளீர்கள். வரலாற்று சிறப்புமிக்கது! ”
” ஆமாம். இன்றைய மெட்ராஸ் உருவான இடம். அந்த கோட்டையை வைத்துதான் இந்த நகரமே உருவானது. அதற்கு முன் அந்த இடம் ஒரு மீன் பிடிக்கும் கிராமமாகத்தான் இருந்தது. கிழக்கிந்தியக் கம்பெனியார் வாணிகம் செய்ய இடம் தேடியபோது அந்த இடத்தைத் தேர்ந்தெடுத்தனர். அதன் சரித்திரம் பற்றி கொஞ்சம் படித்துள்ளேன். ” என்றேன்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டை பற்றி பேசிக்கொண்டே பிரயாணம் செய்தோம். துறைமுகம் ஸ்டேஷன் வந்ததும் இறங்கி, ஆட்டோ பிடித்து கோட்டை சென்றோம்.
மனதைக் கவரும் வகையில் வெள்ளை நிறத்தில் செயின்ட் ஜார்ஜ் கோட்டை காலை வெயிலில் பளிச்சிட்டது! அங்கு மிகவும் உயரத்தில் மூவர்ணக் கொடி வானில் படபடத்தது கண்கொள்ளாக் காட்சி. முன்பு அதன் கொடிமரம் தேக்கு மரத்தால் நூற்று ஐம்பது அடி உயரத்தில் இந்தியாவிலேயே இரண்டாவது அதிக உயரமான கொடிமரமாகத் திகழ்ந்துள்ளது.
கோட்டைக்குள் நுழைந்ததும் என்னை அதிகம் கவர்ந்தது அங்கிருந்த செயின்ட் மேரி ஆலயம். அதனுள் நுழைந்ததும் நிசப்தத்துடன் கூடிய பக்தியான சூழலை உணர்ந்தேன். அதன் சுவர்களில் வரலாற்றுச் சிறப்புமிக்க நினைவுக் கற்கள் பதிக்கபட்டிருந்தன. அது 1678 ஆம் வருடம் கட்டப்பட்டது. அங்குதான் ராபர்ட் கிளைவ் திருமணம் நடந்துள்ளது. அங்குள்ள கல்லறைத் தோட்டத்தில் புதைக்கப்பட்டிருக்கும் ஆங்கிலேய அதிகாரிகளின் நினைவாக பதிக்கப்பட்டிருக்கும் நினைவுக் கற்கள்தான் இந்தியாவிலேயே மிகவும் பழமையானது. நாங்கள் இருவரும் இருக்கையில் அமர்ந்து ஜெபம் செய்தபின் வெளியேறினோம்.
பின்பு கோட்டையின் அருங்காட்சியகம் சென்றோம். அங்கு ஆங்கிலேயர்களின் ஆட்சியின்போது பயன்படுத்திய வரலாற்று சின்னங்கள் வைக்கப்பட்டிருந்தன. அவற்றில் அவர்கள் பயன்படுத்திய வாட்கள் துப்பாகிகள், பீரங்கிகள் , உடைகள், நாணயங்கள், அவர்களால் எழுதப்பட்ட முக்கிய ஆவணங்கள் அடங்கும்.சுவர்களில் ஆங்கில ஆளுநர்களின் படங்கள் வண்ணத்தில் பெரிதாக வரையப்பட்டு மாட்டப்பட்டிருந்தன. அங்கு சென்னையின் வரலாற்றை அறிய முடிந்தது. அவை ஆங்கிலேயர்களின் பெருமையைக் கூறுவதாக இருந்தாலும், சென்னையின் வரலாற்றுச சின்னங்கள் பாதுகாக்கப்படுவதையே பிரதிபலித்தன. ஒருவகையில் அவை எனக்கு வியப்பையும் உண்டுபண்ணின!
ஆங்கிலேயரின் கிழக்கிந்தியக் கம்பெனியார் 1600 ஆம் வருடம் பம்பாய் அருகேயுள்ள சூரத்தில்தான் வாணிபம் செய்யத் தொடங்கினார்கள். பின்பு அவர்களுடைய வாணிபத்தை விரிவு படுத்த தெற்கே மலாக்கா ஜலசந்திக்கு அருகில் ஒரு துறைமுகம் தேடினார்கள். அதற்கு சென்னிறயர்ப்பட்டினம் அல்லது சென்னைப்பட்னம் என்ற கடற்கரைப் பகுதியை தேர்ந்தெடுத்தனர்.அதை சந்திரகிரில் இருந்த விஜயநகர சிற்றரசரான தாமரியா சென்னப்ப நாயகா என்பவரிடமிருந்து விலைக்கு வாங்கினர். அங்கு கட்டிய இந்தக் கோட்டைதான் ஆங்கிலேயர்களால் இந்தியாவில் கட்டப்பட்ட முதல் கோட்டை. இதை அவர்கள் கட்டி முடித்தது 1664 ஆம் வருடம் ஏப்ரல் மாதம் 23 ஆம் நாள். அன்று ஆங்கிலேயர்கள் கொண்டாடும் செயின்ட் ஜார்ஜ் தினம் என்பதால் கோட்டைக்கு அந்த பெயர் இட்டனர்.அங்கு ஒரு துறைமுகமும் கட்டி கடல் வாணிபம் செய்தனர். வெறுமனே கிடந்த அங்கு ஒரு புதிய குடியிருப்பு பகுதி உருவாகியது.வர்த்தகர்களின் நடமாட்டம் பெருகியது. அந்த புதிய பகுதிக்கு ஜார்ஜ் டவுன் என்று பெயர் சூட்டினர். அதுதான் மேலும் வளர்ந்து மெட்ராஸ் நகரமானது.
ஒன்றுக்கும் உதவாத ஒரு சாதாரண கடல்பகுதி எவ்வாறு ஆங்கிலேயர்களின் வருகையால் உலகம் முழுதும் பிரசித்திப்பெற்ற மெட்ராஸ் நகரமானது என்பதை எண்ணி வியந்தேன். ஆங்கிலேயர்கள் வராமலிருந்தால் அந்தப் பகுதி இன்று எவ்வாறு இருக்கும் என்பதை கற்பனைகூட செய்துப் பார்க்க முடியவில்லை.
நாட்டு விடுதலைக்குப்பின் தமிழ் நாட்டின் சட்டசபையும் கோட்டைக்குள்தான் இயங்குகிறது.
நாங்கள் இருவரும் நிதானமாக அருங்காட்சியகத்தைச் சுற்றிப் பார்த்து முடித்தபோது மணி ஒன்றாகிவிட்டது. செயின்ட் ஜார்ஜ் கோட்டைக்கு சென்று நிதானமாகப் பார்த்தது மனதுக்கு திருப்தியை அளித்தது. அதிலும் வெரோனிக்கா போன்ற அழகிய பெண்ணுடன் சென்றது நிறைவாகவும் இருந்தது. பசியும் வயிற்றைக் கிள்ளியது. அங்கிருந்து ஆட்டோ பிடித்து நேராக மெரினா புஹாரி சென்றோம்.
( தொடுவானம் தொடரும் )
- மிதிலாவிலாஸ்-26
- தொடுவானம் 77. செயின்ட் ஜார்ஜ் கோட்டை
- தோற்றுப் போகக் கற்றுக் கொள்வோம்
- மு. நித்தியானந்தனின் கூலித்தமிழ் விமர்சனமும் வெண்கட்டி பத்திரிகை வெளியீடும்
- ‘ரிஷி’யின் கவிதைகள்
- ஞானம் ‘ஈழத்துப் புலம்பெயர் இலக்கியம் – சிறப்பிதழ்’ அறிமுகம்
- காலவெளி: விட்டல் ராவிடமிருந்து ஒரு சொல்லாடல்
- வீடெனும் பெருங்கனவு
- அடையாறு கலை இலக்கியச் சங்கமும் இந்திய நட்புறவுக் கழகமும் இணைந்து நிகழ்த்தும் இஸ்கப் விழா
- மொழிவது சுகம் ஜூலை 18 -2015 அ. இலக்கிய சொல்லாடல்கள் -4
- காரைக்குடி கம்பன் கழகம் 58ஆம் வருட விழா
- கெளட் நோய் ( Gout )
- பரிதி மண்டலத்தின் புறக்கோள் புளுடோவை முதன்முதல் நெருங்கிப் படமெடுத்த நாசாவின் புதுத்தொடுவான் விண்ணூர்தி
- மணல்வீடு இலக்கிய வட்டம்-தக்கை- கொம்பு- சார்பில் நிகழவிருக்குமோர் நூல்-வெளியீட்டு & விமர்சன அமர்வு
- ஆறாண்டு காலத் தவிப்பு –
- வாழ்வின் வண்ணமுகங்கள் – பாரதி கிருஷ்ணகுமாரின் சிறுகதைகள்
- கள்ளா, வா, புலியைக்குத்து
- சிவப்பு முக்கோணம்
- ‘தாய்’ காவியத்தில் பாடுபொருள்
- சொல்லின் ஆட்சி
- எங்கே செல்கிறது தமிழ்மொழியின் நிலை?
- தறிநாடா நாவலில் பாத்திரப்படைப்பு
- அஞ்சலி: திருமதி கமலா இந்திரஜித் மறைவு
- சினிமா பக்கம் – பாகுபலி
- நேர்த்திக் கடன்
- நெசம்
- வழி தவறிய பறவை
- ஜெயகாந்தன் கவிதைகள் —- ஒரு பார்வை
- கே.எஸ். சுதாகரின் இரண்டாவது கதைத்தொகுதி சென்றிடுவீர் எட்டுத்திக்கும்