தொடுவானம் 78. காதல் மயக்கம்

This entry is part 4 of 20 in the series 26 ஜூலை 2015

டாக்டர் ஜி. ஜான்சன்

Beach1 சென்னை மெரினா புஹாரி உணவகம் பல வகைகளில் சிறப்புமிக்கது. அது மெரினா கடற்கரையில் அமைந்துள்ளதால் கடல் காற்று ஜிலுஜிலுவென்று வீசும். உணவகம் சுத்தமாக இருக்கும். நல்ல வரவேற்பும் கிடைக்கும். நான் சென்ற ஆண்டில் அடிக்கடி அங்கு சென்றுள்ளதால் அங்குள்ள சிப்பந்திகளுக்கு என்னைத் தெரியும். அதோடு அவர்களுக்கு நிறையவே ” டிப்ஸ் ” தந்துள்ளேன்.
நாங்கள் தனி அறையில் அமர்ந்துகொண்டோம். நல்ல பசி. கோழி பிரியாணி கொண்டுவரச் சொன்னோம். புஹாரி பிரியாணி தனிச் சுவை கொண்டது. சுடச்சுட வந்த அதை பேசிக்கொண்டே சுவைத்தோம்.
செயின்ட் ஜார்ஜ் கோட்டையைச் சுற்றிப்பார்த்ததில் கால்கள் வலித்தன. உணவகத்தில் அதிக கூட்டம் இல்லை. மதிய நேரம் என்பதால் வெளியில் வெயில் அதிகம். அந்த குளுகுளு அறையில் குளிர் பானத்தைப் பருகியபடி நேரத்தைக் கழித்தோம்.
எதிர்காலம் பற்றி பேச நல்ல தருணம் அது.
” உனக்கு நான் நிறைய கடமைப் பட்டுள்ளேன் வெரோனிக்கா.” அவளைப் பார்த்து கூறினேன்.
” அதான் உடனுக்குடன் பதில் போடுகிறீரா? ” அவள் கிண்டலாக பதிலளித்தாள்..
” அதற்குதான் காரணம் சொல்லிவிட்டேனே? நான் சொல்லவருவது அதுவல்ல. நாம் ஓய்வுநாள் பள்ளிக்கு சைக்கிளில் சென்றது குறித்து சொல்லவந்தேன். அதனால்தான் நான் கடவுளைத் தெரிந்துகொண்டேன்.”
” அமாம். அந்த பயணங்களை மறக்கமுடியாது. அப்போதுதானே பைபிள் வாங்கினீர்கள். அதைப் படித்துவிட்டு ஆதாம் ஏவாளிலிருந்து ஒரு தொடராக அருமையாக பிள்ளைகளுக்கு கதைகள் சொன்னீர்கள். கதை சொல்வதில்தான் நீங்கள் மன்னராயிற்றே! ” அவள் அதே பாணியில் தொடர்ந்தாள்.
” கடவுள் நம்பிக்கை இல்லாமல் இருந்த என்னை பைபிள் படித்து உண்மையான தேவனை அறிந்துகொள்ள காரணமாக இருந்தவள் நீ. அதனால்தான் உன்னை நான் மறக்க மாட்டேன்.”
” இந்த வார்த்தை பலிக்குமா? அல்லது மெரினா கடல் அலைகள்போல் மறையுமா? மெடிக்கல் கிடைத்தும் என்னை ஒரேயடியாக மறந்துபோனவர்தானே நீங்கள்? ”
” மெடிக்கல் கிடைப்பதற்கும் நீ ஒரு முக்கிய காரணமாக இருந்துள்ளாய். அது உனக்குத் தெரியுமா? ”
” இல்லையே? நான்தான் மெடிக்கல் கிடைக்கக்கூடாது என்று ஜெபம் செய்தவளாயிற்றே? நான் எப்படி காரணமாக முடியும்? ”
” உன் ஜெபம் கேட்கப்படவில்லை என்பது வேறு விஷயம். ஆனால் நான் பைபிள் படித்தபோதுதான் கடவுள் நம்பிக்கை உண்டானது. அதனால்தான் அந்தத் தேர்வில் வேதாகமப் பகுதியில் நன்றாகச் செய்ய முடிந்தது. பிஷப்பின் பரிந்துரையும் கிடைத்தது.”
” அதன்பின் ஆனதெல்லாம் உங்கள் திறமையால்தான் என்பேன். அப்படித்தானே? ”
” இல்லை. என் திறமை இல்லை. அது கடவுளின் அழைப்பு. கடவுள் என்னை ஒரு மருத்துவனாக ஆக்க முடிவு செய்து தேர்வு செய்துள்ளதாகக் கருதுகிறேன். அவருக்கு நன்றி சொல்லும் வேளையில் இதற்கெல்லாம் காரணமாக இருந்த உனக்கும் இப்போது நன்றி சொல்கிறேன். ”
” என்ன இது. எனக்குப் போய் நன்றி சொல்லிக்கொண்டு… ஆமாம்…நீங்கள் இப்படி நன்றி சொல்வதைப் பார்த்தால் ஒரேயடியாக ” குட் பை ” சொல்லிவிடுவீர்கள் போன்றுள்ளதே? அதற்குதான் என்னை இங்கே தனிமையில் அழைத்துவந்தீரா? ”
” நான் ” குட் பை ” சொல்ல வரவில்லை. அப்படிச் சொல்வதென்றால் கடிதத்திலேயே சொல்லியிருப்பேனே? நம்முடைய உண்மையான நிலையைப் பற்றிக் கூறவந்தேன்.”
Beach2 ” நான் மெடிக்கல் காலேஜ் மாணவன்.அங்கு உன்னைவிட அழகான பெண்கள் பலர் உள்ளனர்.அதனால் இனி உன்னைத் தேடி வரமாட்டேன் என்பதுதானே அந்த உண்மை ” அவள் கிண்டலாகக் கூறுகிறாளா அல்லது விளையாட்டாகக் கூறுகிறாளா என்பது எனக்கு அப்போது புரியவில்லை.
நான் சொல்ல வந்ததை சொல்லிவிட முடிவு செய்தேன்.
” வெரோனிக்கா.உன்னுடைய ஆதங்கம் எனக்குத் தெரிகிறது.நான் முன்பே வராமல் போனது தவறுதான். மெடிக்கல் காலேஜில் என்னுடைய வகுப்பில் அழகான பெண்கள் உள்ளது உண்மைதான். அதற்காக அவர்களில் ஒருத்தியைப் புதிதாக காதலித்துவிடுவேன் என்ற எண்ணம் வேண்டாம்.அங்கு சென்றுள்ளது அதற்காக இல்லை. கஷ்டப்பட்டு படித்து முடித்து ஒரு நல்ல டாக்டராக வெளியேறவேண்டும் என்பதே என்னுடைய தற்போதைய குறிக்கோள். ”
” நீங்கள் படித்து முடிக்க வேண்டாம் என்று நான் சொன்னேனா? நான் வாரந்தோறுமா என்னைப் பார்க்க வரச் சொல்கிறேன்? ஏன் நான் அனுப்பும் கடிதங்களுக்கு பதில் போடலை என்றுதானே கேட்டேன். இதற்கு ஏன் கோபப்படுகிறீர்கள்? நீங்கள் கோபப்பட்டு நான் பாத்ததேயில்லையே? இங்கே இருந்த ஒரு வருடமும் எப்போதுமே கலகலவென்று இருப்பீர்களே? இப்படி கோபம் வருகிறது என்றால் என்னை இப்போது பிடிக்கலை என்றுதானே அர்த்தம்? ”
” நான் கோபப்படவில்லை. நம்முடைய இன்றைய நிலையை விளக்க விரும்புகிறேன். ”
” சரி. சொல்லுங்கள் கேட்கிறேன். ”
” நாம் இருவரும் இப்போது கல்லூரியில் படிக்கிறோம்.”
” அது தெரிந்ததுதானே? புதிதாக கண்டுபிடித்துவிட்டது போல் சொல்கிறீரே? ”
” இல்லை. எங்கே காதல் மயக்கத்தில் அதை மறந்துவிட்டாயோ என்று அவ்வப்போது நினைவூட்டிக்கொள்வது நல்லதுதானே? ”
” காதல் மயக்கமா? அது என்ன மயக்கம்? பசிக்காதா? தலை சுற்றுமா? ரொம்ப தூக்கம் வருமா? ”
” காதலில் மூழ்கியுள்ளவர்கள் அதே நினைவாக ஒருவித மயக்கத்தில் இருப்பார்களாம். அவர்கள் அன்றாட வேலைகளைக்கூட செய்ய மறந்துவிடுவர்களாம். அதுதான் காதல் மயக்கம். அப்படிதான் ஒருத்தி எதிரே இருந்த உணவைக்கூட உண்ண மறந்துபோனாளாம். ”
” நான் அப்படி இல்லையே? பிரியாணியை ருசித்துதானே சாப்பிட்டு முடித்தேன்? அமாம். அவள் யார்? அவளை உங்களுக்கு எப்படித் தெரியும்? ”
” அவளை எனக்குத் தெரியாது. அவளைப்பற்றி வள்ளுவர் குறளில் எழுதியுள்ளார். காமத்துப்பாலில் அந்த குறள் உள்ளது.அதற்கு சிங்கப்பூர் வந்திருந்த திருக்குறள் முனுசாமி கதைபோல் சொன்னது எனக்கு இன்னும் நன்றாக நினைவில் உள்ளது.”
” காமத்துப்பாலைப் படித்த காதல் மன்னரா நீங்கள்? சரி அது பற்றி சொல்லுங்கள். நானும் தெரிந்துகொள்கிறேன். ”
” காதலில் மயங்கியுள்ளாள் ஓர் இள மங்கை. அவளுடைய தாய் சூடான உணவு பரிமாறிவிட்டுச் செல்கிறாள் .கொஞ்ச நேரம் கழித்து திரும்பிவந்து பார்த்தபோது வைத்த உணவு அப்படியே ஆறிப்போய் இருந்ததாம். அதில் கைவைத்திருந்த அந்த மங்கை அப்படியே அமர்ந்திருந்தாளாம் அவளுக்கு காதல் மயக்கம் .உணவு உண்பதைக்கூட மறந்த நிலை. தாய் திட்டியபோது அவள் மனதுக்குள் எப்படி சமாதானம் சொல்லி மகிழ்ந்தாள் தெரியுமா? ”
” எப்படி? ”
” என் காதலர் என்னுடைய நெஞ்சிலே இருக்கிறார். சூடனை உணவை உண்டால் அவர் சூடுபட நேரிடும் என்று எண்ணிக்கொண்டாளாம். ”
” ஐயோ! அருமையாக உள்ளது ! ” வியந்தாள் வெரோனிக்கா.
” நெஞ்சத்தார் காதலவராக வெய்து உண்டல் , அஞ்சுதும் வேபாக்கு அறிந்து என்பதுதான் அந்தக் குறள். ”
” சங்க காலத்துத் தமிழ். புரிந்துகொள்வது சிரமம். ‘
” ஆமாம். பதவுரையுடன் படித்தால் எளிதில் புரிந்துகொள்ளலாம். திருக்குறளின் ஒவ்வொரு குறளும் இந்தக் கடலில் எடுக்கும் முத்து போன்றது. படித்து உணர்வோருக்குதான் அதன் அருமை புரியும்! ”
” காதல் மயக்கம் கூறவந்த மருத்துவப் புலவரே. நீங்கள் சொல்லவந்ததைச் சொல்லுங்கள் . ”
” கேளடி என் கல்லூரிக் காதிலியே! காதலிக்கும் வயதுதான் நம்முடையது. அதில் தவறில்லைதான். அனால் நமக்கு படித்து முடிக்கும் கடமையுள்ளது. அதை முதலில் நிறைவேற்றுவோம். அதுவரை நாம் அவசரப்படாமல் இருக்க முயல்வோம்.பின்பு நடப்பதுபோல் நடக்கட்டும். இதுதான் நான் சொல்லவந்தது. ”
” இது எனக்குத் தெரியாதா என்ன? நானா அவசரப்படுறேன்? ஒரு வருடம் பழகியபோது எப்போதாவது அப்படி நடந்துகொண்டேனா? அப்போது நீங்களும் நிதானமாகத்தான் நடந்துகொண்டீர்கள். பிரியும் வேளை வந்தபோதுதான் இதே கடற்கரையில் காதலை வெளிப்படுத்தினோம்? ”
” பின் என்ன பிரச்னை? இப்படியே இருப்போம். கவலையை விடு. ” என்றவாறு அவளுடைய கைகளைப் பற்றினேன்.அது பட்டுபோன்று மிருதுவாக இருந்தது. அதில் நாடி கூட வேகமாக துடித்தது! அவள் ஏதும் பேசவில்லை.என் தோள்மீது
சாய்ந்துகொண்டாள். கண்களை லேசாக மூடினாள்.
சிறிது நேரம் அவளை அந்த நிலையிலேயே விட்டுவிட்டேன். ஒரு ஐந்து நிமிடம்தான் ஆகியிருக்கும்.
” வெரோனிக்கா. தூக்கமா? ” அவளைத் தட்டி எழுப்பினேன்.
” இல்லை. காதல் மயக்கம் ” அவள் புன்னகைத்தாள். அவளின் முகம் மலர்ந்த மலரானது!
” வா. அவசரப்படாமல் நம்முடைய இடம் செல்வோம். ” என்றேன்.
” நம்முடைய இடமா? எங்கே? ” புரியாமல் விழித்தாள்.
” வேறு எங்கே? அந்த படகின் மறைவிடம்தான் .”
அதை புரிந்துகொண்டவள் நாணி தலைகுனிந்தாள் !
ஆள் நடமாட்டம் இல்லாத அந்தத் தனியான படகின் அருகில் சென்று மணல் பரப்பில் அருகருகே அமர்ந்துகொண்டோம். கடல் காற்று பலமாக வீசியது. அலைகளும் பெருத்த ஓசையுடன் கரைக்கு வந்து மறைவதும், போவதும், மீண்டும் வருவதுமாக இருந்தன.தொலைவில் கடலும் வானும் ஒன்று சேர்ந்து தொடுவானத்தை நினைவூட்டின.
அந்த மனோரதமான மாலை வேளையில் அந்தி சாயும் வரை ஆசையோடு பேசிக்கொண்டிருந்தோம். பின்பு விடைபெற்று எழுந்தோம்.
தாம்பரம் வந்து சேர இரவாகிவிட்டது. அவளை வீட்டில் விட்டுவிட்டு சோகத்துடன் திரும்பினேன்.
அன்று நள்ளிரவில் மாயவரம் செல்ல இரயில் ஏறினேன்.

( தொடுவானம் தொடரும் )

Series Navigationவெலிகம ரிம்ஸா முஹம்மதின் நூல் வெளியீட்டு விழாமிதிலாவிலாஸ்-27
author

டாக்டர் ஜி. ஜான்சன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *