( 2 )
எடுத்த எடுப்பிலேயே மறுத்தான் பாலன்.
முடியாதுப்பா…நீங்க சொல்ற ஆளு ஒர்க் க்வாலிட்டி இல்லாத ஒப்பந்ததாரர். கடந்த மூணு வருஷமா அவர் மேல நிறையப் புகார். அதனால் அவருக்கு எந்தக் கான்ட்ராக்டும் வழங்கக் கூடாதுன்னு உத்தரவு… அதிர்ந்து போனார் நாகநாதன். தன் பையன் இத்தனை கரெக்டாகப் பேசுவது குறித்து பிரமித்தார்.
நீ ஒரு வார்த்தை போட்டு வை உங்க ஆபீசர்கிட்ட…அது போதும்….மத்ததை நான் பார்த்துக்கிறேன்…..
இந்த மாதிரியான விஷயங்கள் எதுலயுமே நான் தலையிடுறதில்லப்பா…தயவுசெய்து என்னை வற்புறுத்தாதீங்க….என்ன ரூல்ஸ் உண்டோ அதை நான் எழுதி வைப்பேன்…அதுக்கு மேல எதிலயும் நான் மூக்கை நுழைக்கிறதில்லை…நீங்க நினைக்கிறமாதிரி ஒண்ணும் நான் நெருக்கமான ஆள் இல்லை….
ஏண்டா உன்னை திருச்சியிலேர்ந்து சொந்த ஊருக்குக் கொண்டு வந்தது இதுக்குத்தானா? உனக்கு முதமுதல்ல வேலை கிடைக்க இந்தத் துறைதான் வேணும்னு உன்னை ஆப்ஷன் கொடுத்து எழுதச் சொன்னனே…அது எதுக்காக? வெறுமே நாக்கு வழிக்கவா? அதிர்ஷ்ட வசமா அதுவே அமைஞ்சு போக எல்லாம் நல்லபடியா வந்திட்டிருக்குன்னு பார்த்தா இதக் கூடச் செய்ய மாட்டேங்குற… சம்பளம் போக மேற்கொண்டு வருமானத்தப் பார்க்கத் தெரியாத பையனா இருக்க…ஊர் உலகத்துல எல்லாரும் உன்னை மாதிரியா இருக்காங்க? அஞ்சு வருஷம் வெளிய இருந்திருக்கியே….இதத்தான் கத்துக்கிட்டியா? சரி போகட்டும்னு விட்டா இந்த மாதிரிச் சின்ன விஷயம் கூட உன்னால செய்ய முடியாதா? உன்னை ஆபீசருக்கு வலது கைன்னு சொல்றாங்க எல்லாரும்…?
நா வலது கையும் இல்ல…இடது கையும் இல்ல…உங்ககிட்ட யாரோ தப்பா சொல்லியிருக்காங்க..அப்படிச் சொன்ன ஆள் தப்பான ஆளா இருப்பான்.?
அப்போ நான் தப்பான ஆள் கூடப் பழகிறவன்ங்கிறியா?
எனக்கென்ன தெரியும்? உங்க மனசாட்சிக்கே தெரியும்தானே?
நீ இருக்கேங்கிற தைரியத்துல சொன்னா, என்னடா இப்படிப் பேசற?
.என்ன ரூல்ஸ் உண்டோ அப்படித்தாம்ப்பா செய்ய முடியும். அதுக்கு மேலே எதுவும் நடந்தா அதுல நான் இருக்க மாட்டேன்…இதுநாள் வரைக்கும் திருச்சில நான் அப்படித்தான் இருந்திட்டு வந்திருக்கேன்…படு மோசமான சூழ்நிலைல வேலை பார்த்திட்டுத்தான் வந்திருக்கேன்….அந்த மாதிரி எடத்துல என்னளவுல நான் எப்படியிருக்கணும்னு எனக்கு நல்லாத் தெரியும். என்னால தப்பெல்லாம் செய்ய முடியாது. நீங்க சொல்றது தப்பு. செய்யப்போறது தப்பு…அதுக்கு நான் ஆளுல்லப்பா…
சொல்லி விட்டு வெளியேறியவன்தான். இதோ அலுவலகம் வந்து வேலை ஓடாமல் பித்துப் பிடித்தவன் போல் உட்கார்ந்திருக்கிறான். அங்கு சுற்றி இங்கு சுற்றி கடைசியில் அப்பா தன்னிடமே வந்து நிற்பார் என்று கொஞ்சமும் இவன் எதிர்பார்க்கவேயில்லை. நிம்மதியாய் உள்ளுரில் வேலை பார்ப்போம் என்று வந்தால் தன் தந்தையே தனக்கு வினையாய் வருவார் போலிருக்கிறதே! நேரம் கடந்து விட்டது. வழக்கமான வேகம் இல்லை இன்று. ஷன்டிங் பாசஞ்சர் போலாகி விட்டது. சுலபமான சில கோப்புகளை மட்டும்தான் அட்டென்ட் செய்ய முடிந்தது. ஆழமாகப் படித்து நுணுக்கமாய்ச் செய்ய வேண்டிய கோப்புகளைத்தான் முதலில் கையில் எடுப்பான் அவன். அப்படியே செய்து செய்து அதுவே அவனுக்குப் பழக்கமாகிவிட்டது. கஷ்டமான ஃபைலா இருந்தா பாலன்ட்டக் கொடுங்க…அவர் பார்த்துக்குவாரு என்று அலுவலர் அவனைப் பரிந்துரைக்க மற்ற பிரிவுகளின் கோப்புகள் இவன் பார்வைக்கு வருமளவுக்கு மதிப்புமிக்கவனாகி விட்டவன் இவன். விதிமுறைகளுக்கென்று என்னென்ன புத்தகங்கள் இருக்கிறதோ அத்தனையையும் கரைத்துக் குடித்தவன். பாலனின் கையில் எப்பொழுதுமே ஒரு டைரி இருக்கும். அதில் நிறையக் குறிப்புகள் எழுதப்பட்டிருக்கும். எது தேவைப்பட்டாலும் அதைத்தான் முதலில் புரட்டுவான். ஏறக்குறைய எல்லாமும் அவன் மனதிலேயே இருக்கும். விதிகளின் எண்களை மட்டும் குறிப்பதற்காகப் புரட்டுவான். தன் மனதிலுள்ளது சரிதானா என்றும் ஒரு முறை சரிபார்த்துக் கொள்வான். தன் வேலையின் மூலமாகத் தலை நிமிர்ந்தவன் அவன். தன்னை மதிப்புமிக்க இடத்தில் நிறுத்திக் கொள்ள வேண்டும் என்று வெறியோடு முனைப்புக் காட்டியவன். இவனைப் போலவே விதிமுறைகள் பலவும் அறிந்த வேறு சிலரும் இருக்கத்தான் செய்கிறார்கள். ஆனால் அவர்களிடமெல்லாம் இல்லாத கூடுதல் பலம் ஒன்று இவனுக்கு உண்டு. அதுதான் இவனது நேர்மை. அதுதான் தன்னை இன்றுவரை பாதுகாப்பாக வைத்திருக்கிறது என்று நினைத்துக் கொள்வான். தங்கள் திறமையை நல்லதற்குப் பயன்படுத்தாதவர்கள்தான் அதிகம். அதன் மூலமாக சுய லாபம் அடைய யத்தனிப்பவர்கள்தான் பலர். ஆனால் தான் அப்படியில்லையே! அதற்காக அதைத் தம்பட்டம் அடித்துக் கொள்வதும் இல்லை. நேர்மையாக இருக்க வேண்டும் என்று உறுதி செய்து கொண்டவன் அதை விளம்பரப்படுத்த வேண்டும் என்று என்றுமே நினைப்பதில்லை. அது அவர்களின் எளிமை. அந்தப் பக்குவம் அவனுக்குக் கை வந்திருந்தது.
பாலா….என்ன பலமான யோசனை? உங்களுக்கு சாப்பாடு வந்திருக்கு…..என்று தாரிணி வந்து சொன்னபோதுதான் தன் நினைவுக்கு வந்தான் இவன்.
என்னது சாப்பாடா? யார் கொடுத்து விட்டது?
அம்மாதான்யா கொடுத்துவிட்டாங்க….உங்க பக்கத்து வீட்டு அய்யாவுக்கு நான்தான கேரியர் எடுத்திட்டு வாரேன்…அடுத்தாப்ல இருக்கிற ஆபீசுல இருக்காருல்லங்கய்யா….இன்ஜினியரு… அவருக்குத்தான்….அப்டியே இதையும் கொடுக்கச் சொல்லி உங்கம்மாதான் கொடுத்து விட்டாக….காலைல மறந்து வந்திட்டீகளாமுல்ல….
சொல்லி விட்டுப் போய்க் கொண்டேயிருந்தாள் கூடைக்காரி. அவளை இன்றுதான் இவன் பார்க்கிறான். ஆனால் அவனைப்பற்றி, அவன் இருக்கும் அலுவலகம் பற்றி அவள் தெரிந்து வைத்திருக்கிறாள். இதைத்தான் விபரமான ஆளு என்று சொல்வார்களோ? எல்லோரும் எல்லாமாகவும்தான் இருக்கிறார்கள். ஆனால் தான் மட்டும்தான் தானாகவே மட்டும் இருக்கிறோமோ என்று ஏனோ தோன்றியது அப்போது. அப்படி இருப்பதில் என்ன தவறு என்ற கேள்வியும் கூடவே பிறந்தது அவனுக்கு.
அம்மா பாவம். மனது மிகவும் வருந்தியிருப்பாள். சொந்த ஊருக்கு இப்பொழுதுதான் வந்திருக்கும் பையனைப் போட்டு இப்படிப் படுத்துகிறாரே என்று நினைத்திருக்கலாம். அம்மாவால் அப்படி வருத்தப்படத்தான் முடியும். எதுவும் சொல்ல ஏலாது. சொன்னால் காட்டுக் கத்துக் கத்துவார் அப்பா. குழந்தைகளெல்லாம் பெரியவர்கள் ஆகும் முன்பு அம்மாவை அடித்திருக்கிறார். ஆனால் இப்பொழுது அது இல்லை. இவனும், தங்கைகளும் வளர்ந்தாயிற்று. பிள்ளைகள் முன் மனைவியை அடிப்பது தவறு என்று விட்டுவிட்டாரோ என்னவோ? வெறும் சத்தத்தோடு சரி. ஒன்றுக்குப் பாடாய்ப் பட்டு, வேண்டாத தெய்வத்தையெல்லாம் வேண்டி, இல்லாத விரதமெல்லாம் இருந்து, கோயிலில் உருண்டு பிரண்டு, ஒரு ஆணைப் பெற்றதுதான் தாமதம், அடுத்தடுத்து மூன்று பெண் குட்டிகளைப் பெற்றுப் போட்டதும், என்ன பயம் வந்து பிடித்துக்கொண்டதோ ஆளே மாறிப் போனார். சரி, அதற்காக நடவடிக்கைகளுமா இப்படி மாறும்? வாழ்க்கையைக் கண்டு மிரண்டு விட்டாரோ என்றிருந்தது. சாதாரணமாய் அரசியலில் இருந்து கொண்டிருந்த அப்பா எதற்கெடுத்தாலும் தன்னை முன்னிறுத்திக் கொள்வதுபோல் ஏன் அப்படி முனையலானார்? எந்த நடவடிக்கைக்கும் பின்வாங்காமல் துணிந்தல்லவா செய்ய ஆரம்பித்து விட்டார். பணம் சம்பாதிப்பதற்கு இது ஒன்றுதான் வழி. வாழ்க்கையில் ரிஸ்க் எடுத்தால்தான் முடியும் என்று இந்த வழியை அப்பாவுக்கு அப்படி அறுதியிட்டுக் காண்பித்தது யார்? அல்லது எது?
அப்பாவின் அப்படியான முயற்சியில்தானே தானே உள்ளுர் வந்தது. சீனியாரிட்டிப்படி தானே முதல் வரிசை என்றாலும், வேறு ஊர்களிலிருந்து தனது சொந்த ஊருக்கு மாறுதல் கேட்டிருப்பவர் எவ்வளவு பேர் இருப்பார்கள்? அப்படியானவைகளைப் பின்னுக்குத் தள்ளிவிட்டுத்தானே உள்ளுர் வந்தது. சரியாகப் பார்த்தால் நியாயமான ஒன்றில்லைதான். என்ன செய்வது? இவனும் ஏங்கித்தான் போனான். தனிமை இவனை ரொம்பவும் சங்கடப்படுத்தி ஏதோ வியாதிக்காரன் போலாக்கி விட்டது. குடும்பத்தில் அப்பா அம்மா, தங்கைகளோடு ஒன்றுக்குள் ஒன்றாக வளர்ந்து ஓங்கியவன். அதுவே வியாதி போலாகிவிட்டது.
அப்பாடா! சொந்த ஊர் வந்தாச்சு!! – எத்தனை சந்தோஷமான நாள் அது. அந்த ஞாயிற்றுக் கிழமை அம்மாவோடு கோயிலுக்குப் போனான். தங்கைகளோடு சினிமாவுக்குப் போய் வந்தான். கலகலவென்றும், சிரித்துக்கொண்டும், கும்மாளமிட்டுக்கொண்டும், சின்னச் சின்னச் சிணுங்கல்கள் செய்து கொண்டும், ஒருவரை ஒருவர் அடித்துக் கொண்டும், அடிப்பதுபோல் பாவனை செய்து கொண்டும், அம்மாவிடம் போய் புகார் செய்து கொண்டும், அப்பா இருந்தால் கப்சிப் என்று முடங்கிக் கொண்டும், அப்பாடீ…ஐந்தாண்டுகள் இதெல்லாம் அறவே இல்லாமல் போயிற்றே? அந்த ஆண்டவனுக்கு நன்றி என்னை உள்ளுர் கொண்டுவந்து சேர்த்ததற்கு.
இவன் அம்மாவிடம் சொல்லிக் கொண்டிருந்த அன்று அப்பா சொன்னார். ஆண்டவன் எங்க கொண்டு வந்தாரு. எல்லாம் மனுஷ முயற்சிடா…மனுஷ யத்தனம். இல்லேன்னா ஒண்ணும் கதையாகாது. ஆம்பளைன்னு இருந்தா ஆட்கள் நல்ல வெளிப் பழக்கம் வேணும். சும்மா குண்டுச் சட்டிக்குள்ளயே குதிரை ஓட்டினாப் பத்தாது. ஆபீஸ்ல வேலை பார்க்கிறங்கிறதுக்காக உனக்கு எல்லாமும் தெரிஞ்சிடிச்சின்னு அர்த்தமா? அதுதான் இல்ல. ஏட்டுச் சுரைக்காய் வேறே. உலக அனுபவமங்கிறது வேற…வீடு-ஆபீசு, வீடு-ஆபீசுன்னு இருந்தா உலகம் கைக்குள்ள வராதப்பூ……
அப்பாவின் உலகம் தனி. அது தனக்கு வேண்டாம் என்றுதான் தோன்றியது இவனுக்கு. ஜகதலப்பிரதாபன் என்கிற பெயர் அடிக்கடி இவன் மனதில் ஏனோ தோன்றிக்கொண்டேயிருக்கும். புதுவிதமான பெயராக இருப்பதாலேயே அது தன் மனதில் நின்று போனதோ என்று கூட எண்ணியிருக்கிறான். அந்தப் பெயர் இப்போது அப்பாவுக்குக் கனகச்சிதமாகப் பொருந்தும் போலிருந்தது. ஆனால் வாய் விட்டுச் சொல்ல முடியுமா?
தாரிணி அவள் டிபன் கேரியருடன் அவனது இருக்கை நோக்கி வருவது தெரிந்தது. இன்னும் தான் புதிதாகவே மற்றவர்களுக்குத் தோற்றமளித்துக் கொண்டிருக்கும் அந்த அலுவலகத்தில் அவள் அப்படி நெருக்கமாக நடந்து கொள்வது இவனுக்கு லஜ்ஜையாக இருந்தது. தன்னைப் பற்றி யாரும் எதுவும் தவறாக நினைத்துவிடக் கூடாது என்பதுவே அவனின் எண்ணமாக இருந்தது.
என்ன பாலா, ரெடியா…? சாப்பிடலாமா? – கேட்டுக் கொண்டே நந்தினி வந்து அமர்ந்தபோது கொல்லைப்புறம் பாத்ரூமுக்கு வந்த சிலரின் பார்வை இவர்கள் மேல் விழாமலில்லை.
- இரண்டு இறுதிச் சடங்குகள்
- இசை : தமிழ் மரபு ஒரு சில வார்த்தைகள் – தொடங்கும் முன்
- தொடுவானம் 79. தரங்கம்பாடி – பாடும் அலைகள்.
- மிதிலாவிலாஸ்-28
- காற்றுக்கென்ன வேலி- அத்தியாயம் 2
- கற்பு நிலை
- விலங்குகள் பற்றிய நினைவுகளோடு குழந்தை மனம் கொண்டவர்களும் பூனார்த்தி – இறையன்புவின் சிறுகதைத் தொகுப்பு
- அப்துல் கலாம் ஜீவனாய் வாழ்வார்
- வாராது வந்த மாமணி – எங்கள் அப்துல்கலாம்
- மாஞ்சா
- மனக்கணக்கு
- இந்தியாவுக்கு அசுர வல்லமை அளித்த ராக்கெட் விஞ்ஞானி டாக்டர் அப்துல் கலாம்
- திருப்பூர் தொழில் துறை இடி விழுவதைத் தவிர்க்க வேண்டும்
- அன்பு + எளிமை + நாட்டுப்பற்று + நேர்மை = அமரர் அப்துல் கலாம் அவர்கள்
- எறும்பைப்போல் செல்ல வேண்டும்
- எண்வகை மெய்ப்பாட்டு நோக்கில் புறநானூறு பயிற்றுவித்தல்
- முத்தொள்ளாயிரத்தின் அறவியல் நோக்குநிலை
- கலாம் நினைவஞ்சலி
- திரை விமர்சனம் – சகலகலாவல்லவன்
- அமாவாசை
- ஆளற்ற பாலம் – கொண்டபல்லி கோடேஸ்வரம்மா – நூல் வெளியீடு
- புரட்சிக்கவி – ஒரு பார்வை
- முதுமையின் காதல்
- கம்பன் கழகம், ஆகஸ்டு மாதக் கூட்டம் 2015
- முதல் மதிப்பெண் எடுக்க வேண்டாம் மகளே! – முத்துநிலவனின் கட்டுரை தொகுப்பு