பிறப்பியலும் புணர்ச்சியும்

author
2
0 minutes, 6 seconds Read
This entry is part 4 of 24 in the series 25 அக்டோபர் 2015

 

மனோன்மணி தேவி அண்ணாமலை,

விரிவுரைஞர்,

சுலுத்தான் இதுரீசு கல்வியியல் பல்கலைக்கழகம்,

மலேசியா.

 

முன்னுரை

 

பிறப்பியல் என்பது தொல்காப்பியத்தில் மூன்றாவதாக அமைந்துள்ள கருவியியல் ஆகும். எண், வகை, அளவு, முறை என்பன போன்று பிறப்பியலும் எழுத்திலக்கணத்தின் ஒரு கூறேயாகும். ஆயினும், எழுத்ததிகாரத்தின் முதன்மை நோக்கம் சொற்புணர்ச்சி இலக்கணம் கற்பித்தல் என்பதால், அதற்குத் தேவையான இன்றியமையாத ஒரு கருவியியலாகவே பிறப்பியலைத் தொல்காப்பியர் வகுத்துள்ளார் என்பது தெளிவு. இதுவே, சொற்புணர்ச்சிக்கும் எழுத்துகளின் பிறப்புக்கும் உள்ள தொடர்பை உணர்த்த வல்லதாகும். மெய்கள் ஒன்றுடன் ஒன்று மயங்குதற்கும் மயங்காமைக்கும் காரணம் அந்த மெய்களின் பிறப்பிடம், முயற்சி ஆகியவற்றில் அமைந்துள்ள ஒருமைப்பாடும் வேறுபாடுமே ஆகும். எனவே, மெய்ம்மயக்கம் என்று கூறப்படுவதும் பிறப்பியலுக்கும் சொற்புணர்ச்சிக்கும் உள்ள தொடர்பை உணர்த்துவதாகவே அமைந்துள்ளது. இக்கட்டுரை, தொல்காப்பியம், வீரசோழியம், நேமிநாதம், நன்னூல் ஆகிய இலக்கண நூல்களில் கூறப்படும் பிறப்பியல் செய்திகளுக்கும் புணர்ச்சிக்கும் உள்ள தொடர்பை விளக்கும் வகையில் அமைந்துள்ளது.

 

அறிஞர் கருத்து

வேங்கடராசுலு ரெட்டியார்(1944:88),

 

பிறப்பியலுக்கும் புணரியலுக்கும் உள்ள தொடர்புபற்றி வேங்கடராசுலு ரெட்டியார், மொழிமரபை அடுத்துப் புணரியலை வைக்காதது ஏன்? என்ற வினாவை எழுப்பி, விடை அளித்துள்ளார்.

 

“இவ்வியலை(பிறப்பியலை) மொழிமரபினை அடுத்து வைக்க எனில் மொழிமரபில் எழுத்துக்களின் இயல்பினையே கூறினார். ஆகலானும் புணர்ச்சியில் எழுத்துக்கள் திரிதற்கும் காரணம் அவ்வெழுத்துக்களின் பிறப்பிடத்து இயல்பே ஆகலானும் எழுத்துக்கள் திரிந்து புணரும். புணர் இலக்கணம் கூறுதன் முன்னர் எழுத்துக்களின் பிறப்பு உணர்த்தல் வேண்டற்பாலது ஆகலானும் மொழிமரபினை அடுத்துப் பிறப்பியலை நிறுத்தினார் என்க.”

 

என்று கூறுவது எழுத்தியல், பிறப்பியல், புணரியல் என்ற வைப்பு முறையின் சிறப்பு விளக்கமாக உள்ளது. வ.சுப.மாணிக்கம்(1989:149),

 

‘தொல்காப்பிய எழுத்ததிகாரம் ஒன்பது இயல்களில் பின்னுள்ள ஏழியல்கள் புணர்ச்சிச் செய்கை பற்றியன. நூன்மரபு, மொழிமரபு என்ற முதலிரண்டு புணர்ச்சி நிலைக்கு வேண்டிய கருவிகளை அடித்தளங்களை வரம்பறுக்கும் இயல்களாகும்’

 

என்று கருத்துரைப்பதை நோக்கின், ஏழியல்கள் என அவர் குறிப்பிடுவதில் பிறப்பியலும் அடங்கும் என்பதால் பிறப்பியலுக்கும் புணர்ச்சிக்கும் தொடர்பு இருப்பதை அறியமுடிகிறது. செ.சீனி நைனா முகம்மது(உங்கள் குரல், ஆகத்து/செட்டம்பர், 2009:24),

 

எழுத்ததிகாரத்தில் மூன்றாவதாக அமைந்த பிறப்பியல், கருவி இயல்களுள் ஒன்று. இஃது எழுத்துகளின் பிறப்பைப்பற்றிக்கூறுகிறது. இந்த இயல் சொற்புணர்ச்சியாகிய செய்கைக்கு உரிய கருவியியல் என்பதால் இதில் சொற்புணர்ச்சிக்குத் தேவையான செய்திகளே கூறப்பட்டுள்ளன.

 

என்று கூறியுள்ளமை, பிறப்பியலுக்கும் புணர்ச்சிக்கும் உள்ள தொடர்பை உணர்த்துவதாக அமைந்துள்ளது.

 

இதனை மேலும் தெளிவதற்கு, உயிர்களின் பிறப்பும் மெய்களின் பிறப்பும் குறித்த விளக்கம் துணைநிற்கும்:

 

உயிர்களின் பிறப்பும் புணர்ச்சியும்

பிறப்பின் அடிப்படையில் 12 உயிர்களையும் தொல்காப்பியப் பிறப்பியல் பின்வருமாறு மூன்று வகைப்படுத்துகிறது.

 

‘அவற்றுள்

அஆ இரண்டும் அங்காந் தியலும்’       (தொல். 85)

 

‘இஈ எஏ ஐஎன இசைக்கும்

அப்பால் ஐந்தும் அவற்றோ ரன்ன;

அவைதாம்

அண்பல் முதல்நா விளிப்புறல் உடைய’   (தொல். 86)

 

‘உ ஊ ஒ ஓஎன இசைக்கும்

அப்பால் ஐந்தும் இதழ்குவிந் தியலும்’   (தொல். 87)

 

இந்மூன்று வகைகளுள், நாவின் அசைவு தேவையின்றி அங்காத்தலாலும் இதழ்குவிதலாலும் மட்டும் பிறப்பவை அ ஆ உ ஊ ஒ ஓ ஔ எனும் ஏழு உயிர்கள். உயிரும் உயிரும் சந்திக்கும் புணர்ச்சியில் இந்த ஏழு உயிர் ஈறுகளும், வகர உடம்படுமெய் கொள்கின்றன. இந்த வகர உடம்படுமெய்யும், நாவின் அசைவு தேவையின்றிப் பல்லும் இதழும் இயைவதால் தோன்றுவதேயாகும்.

‘பல்லிதழ் இயைய வகாரம் பிறக்கும்’   (தொல். 98)

 

இதனால், இந்த ஏழு உயிர்களும் வகர உடம்படுமெய் கொள்வதற்கு அவற்றின் பிறப்பே காரணம் என்பது தெளிவாகிறது.

 

இ ஈ எ ஏ ஐ என்னும் ஐந்து உயிர்களும், அண்ணமும் நாவும் தொடர்புடைய முயற்சியுடன் பிறப்பவை இந்த ஈறுகள் இயல்பாக யகர உடம்படுமெய் கொள்கின்றன.(ஏகார ஈறு வகர உடம்படுமெய் பெறுவது, பொருள்கருதி வலிந்து செய்யும் விதிவிலக்கு). இந்த யகர உடம்படுமெய்யும், அண்ணமும் நாவும் தொடர்புடைய முயற்சியால் தோன்றுவதேயாகும்.

 

‘அண்ணம் சேர்ந்த மிடற்றெழு வளியிசை

கண்ணுற் றடைய யகரம் பிறக்கும்’           (தொல்.99)

 

இதனால், இந்த ஐந்து உயிர்களும் யகர உடம்படுமெய் கொள்வதற்கு அவற்றின் பிறப்பே காரணம் என்பது தெளிவாகிறது.

 

மெய்களின் பிறப்பும் புணர்ச்சியும்

 

திரிபு புணர்ச்சியில், ணகரம் டகரமாதற்கும், னகரம் றகரமாதற்கும் பிறப்பிலமைந்த ஒருமைப்பாடே காரணமாகிறது.

 

‘டகார ணகாரம் நுனிநா அண்ணம்’       (தொல். 91)

 

‘அணரி நுனிநா அண்ணம் ஒற்ற

றஃகான னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்’ (தொல்.94)

 

இவை போலவே, லகரம் னகரமாகவும் றகரமாகவும் திரிதற்கும், ளகரம் ணகரமாகவும் டகரமாகவும் திரிதற்கும் அவற்றின் பிறப்பிலமைந்த ஒருமைப்பாடே காரணமாகிறது. றகரம், னகரம் போலவே லகரமும் அண்ணத்தில் நாவு ஒற்றுவதால் பிறக்கும் ஒருமைப்பாட்டைப் பின்வரும் நூற்பா தெளிவுபடுத்துகிறது.

 

‘நாவிளிம்பு வீங்கி அண்பல் முதலுற

ஆவயின் அண்ணம் ஒற்றவும் வருடவும்

லகாரம் ளகாரம் ஆயிரண்டும் பிறக்கும்’           (தொல்.96)

 

புணர்ச்சியில் வலிமிகும்போது, நிலைமொழி ஈற்றில் வருமொழி முதல் வல்லின மெய்யே மிகுவதற்கும், தேவையான இடங்களில் மெல்லினமெய் தோன்றும்போதும் மிகும்போதும் மகரமெய் திரியும்போதும் வருமொழி முதல் வல்லின மெய்களின் இனமாக மெல்லின மெய்களே வருவதற்கும் பிறப்பில் அமைந்த ஒருமைப்பாடே காரணமாகிறது.

 

கங, சஞ, டண, தந, மப, னற ஆகிய இணைகளும் ஒவ்வொன்றும் ஒரே முறையிலேயே பிறக்கின்றன. வல்லின மெல்லின மெய்களுக்கு இடையிலான வேறுபாடு, வல்லின மிடற்றொலி பெறுவதும் மெல்லினம் மூக்கொலி பெறுவதும் மட்டுமேயாகும்.

 

‘ககார ஙகார முதல்நா அண்ணம்’     (தொல். 89)

‘சகார ஞகாரம் இடைநா அண்ணம்’     (தொல். 90)

 

‘டகார ணகாரம் நுனிநா அண்ணம்’       (தொல். 91)

 

‘அண்ணம் நண்ணிய பல்முதல் மருங்கின்

நாநுனி பரந்து மெய்யுற ஒற்றத்

தாமினிது பிறக்கும் தகார நகாரம்’       (தொல்.93)

 

‘இதழியைந்து பிறக்கும் பகார மகாரம்’     (தொல்.97)

 

‘அணரி நுனிநா அண்ணம் ஒற்ற

றஃகான் னஃகான் ஆயிரண்டும் பிறக்கும்’ (தொல்.94)

 

இவை போலவே, புணர்ச்சியில் மிகுதலும் திரிதலும் நேரும் இடங்களில் மெய்களின் செயற்பாடு அவற்றின் பிறப்பில் அமைந்த ஒருமைப்பாட்டின் அடிப்படையிலேயே நிகழ்கிறது என்பது தெளிவு.

 

நன்னூலார் எழுத்தியலில், எழுத்துகளின் பிறப்புக் குறித்தும் முயற்சி குறித்தும் பதினைந்து நூற்பாக்களில் பேசுகிறார். வீரசோழியம் இரண்டு காரிகையிலும்(வீர.4,6) நேமிநாதம் ஒரே வெண்பாவிலும்(நேமி.6) எழுத்துகளின் பிறப்புக் குறித்தும் முயற்சி குறித்தும் எடுத்துரைக்கின்றன. இருப்பினும், எழுத்துகள் பிறக்குமிடத்திலும் அதன் முயற்சியிலும் இந்நூல்கள் தொல்காப்பியத்தில் இருந்து சற்றே மாறுபாடுவதைக் கீழ்க்காணும் அட்டவணை1.0 காட்டுகிறது.

 

 

 

அட்டவணை1.0: எழுத்துப் பிறப்பு ஒப்பீடு

காற்றறை ஒலி எழுப்பி
தொல்காப்பியம் தலை, மிடறு, நெஞ்சு பல்,இதழ்,நா,மூக்கு,அண்ணம்
வீரசோழியம் மார்பு,சிரம்,கண்டம், மூக்கு அண்ணம், பல், இதழ், நா
நேமிநாதம் நெஞ்சு,தலை, மிடறு நா, அண்ணம், எயிறு, மூக்கு
நன்னூல் உரம், கண்டம், உச்சி, மூக்கு இதழ், நா, பல், அண்ணம்

 

தொல்காப்பியம் தரும் விளக்கமான பிறப்புப் பற்றிய செய்திகள் வீரசோழியத்திலும் நேமிநாதத்திலும் கூறப்பெறவில்லை. இந்நூல்கள் எழுத்துகளின் பிறப்பு முறையைப் பொதுநிலையிலேயே விளக்குகின்றன. நன்னூலார், தொல்காப்பியத்தில் கூறப்பட்ட ஒலிகளின் பிறப்பைத் தொகுத்துக் கூறுகின்றார்.

 

 

முடிவுரை

தொல்காப்பியம் தொடங்கி நன்னூல் வரை, தமிழ் இலக்கண மரபில் பிறப்பியல் குறித்தச்செய்திகள் எழுத்தியலில் தொடர்ந்து பேசப்பட்டு வந்துள்ளமை தெரியவருகிறது. இதற்குக் காரணம் பிறப்பியலுக்கும் புணர்ச்சிக்கும் உள்ள தொடர்புதான்.

 

சொற்புணர்ச்சி என்பது வாயறையில் ஒலியுறுப்புகளின் வழியாக நிகழ்வதே அன்றி எழுத்தில் நிகழ்வது அன்று. சேர்ந்தொலிக்கும் இரு சொற்களை, ஒலியுறுப்புகள் தாம் எளிதாகவும் விரைவாகவும் ஒலிப்பதற்கு ஏற்றவிதமாகச் செய்யும் மாற்றமே ஒலிசார்ந்த சொற்புணர்ச்சியாகும். எழுத்துகளை ஒலிக்கும் அல்லது பிறப்பிக்கும் ஒலியுறுப்புகளே சொற்புணர்ச்சி மாற்றங்களையும் நிகழ்த்துவதால், பிறப்பியல் சொற்புணர்ச்சியுடன் தவிர்க்கவியலாத தொடர்புடையதாகிறது.

 

பயன்கொண்ட நூல்கள்

 

1.தமிழண்ணல், தொல்காப்பியம் எழுத்ததிகாரம், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.(1993).

2.தமிழண்ணல், பவணந்தி முனிவர் அருளிய நன்னூல் எழுத்ததிகாரம், செல்லப்பா பதிப்பகம்,

மதுரை.(2012).

3.புத்தமித்திரனார், வீரசோழியம் பெருந்தேவனார் இயற்றிய உரையுடன், கழகப் பதிப்பு,

சென்னை.(1970).

4.குணவீர பண்டிதர், நேமிநாதம், கழகப்பதிப்பு, சென்னை.(1973).

5.வேங்கடராசுலு ரெட்டியார்,வே., தொல்காப்பிய எழுத்ததிகார ஆராய்ச்சி, சென்னை.(1944).

6.மாணிக்கம், வ.சுப., தொல்காப்பியக்கடல், மணிவாசகர் பதிப்பகம், சென்னை.(1989).

7.உங்கள் குரல் மாத இதழ், ஆகத்து/செட்டம்பர், 2009, உங்கள் குரல் எண்டர்பிரைசு, பினாங்கு, மலேசியா.

Series Navigationதிரும்பிப்பார்க்கின்றேன். தாமரைக்கு ஒரு செல்வி – வன்னிமக்களுக்கு ஒரு வன்னியாச்சி.பிரபஞ்சத்தின் மகத்தான நூறு புதிர்கள். அகிலவெளி மரண விண்மீன் அண்டக் கோளைச் சிதைக்கிறது
author

Similar Posts

2 Comments

  1. Avatar
    சு.செ.திருவருள் says:

    வணக்கம் அம்மா. அருந்தெரிவல்கள். அருமுயற்சி. கவிஞரின் பயணத்தைத் தொடர்வோம் இணைந்தே!

    நன்றி.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *