ஆல்பர்ட் என்னும் ஆசான்

This entry is part 4 of 24 in the series 1 நவம்பர் 2015

albert wr

அக்டோபர் மாத காலச்சுவடு இதழில் சுந்தர ராமசாமியின் நட்பு தனக்களித்த அனுபவங்களைப்பற்றி முகம்மது அலி எழுதிய கட்டுரை (இதயத்தால் கேட்டவர்) வெளிவந்துள்ளது. கட்டுரையுடன் முகம்மது அலிக்கு சுந்தர ராமசாமி எழுதிய நான்கு கடிதங்களும் பிரசுரிக்கப்பட்டுள்ளன. 1985 ஆம் ஆண்டில் எழுதப்பட்ட ஒரு கடிதத்தில் கொடைக்கானலில் நடைபெற்ற சிறுகதைப்பட்டறையில் கலந்துகொண்ட நினைவுகளின் பதிவை சு.ரா. எழுதியிருக்கிறார். பட்டறையில் கலந்துகொள்ளும்படி அழைத்தவர் ஆல்பர்ட் என்பதால் அந்நிகழ்ச்சியில் கலந்துகொண்டதாகத் தெரியப்படுத்துகிறார். சு.ரா. போன்ற ஆளுமை மதித்த ஆளுமையாக ஆல்பர்ட் விளங்கியிருக்கிறார். நாகர்கோவில் பகுதியில் இயங்கிய சிந்தனை மையமாக சுந்தர ராமசாமி விளங்கிய சமயத்தில் திருச்சி பகுதியில் சிந்தனை மையமாக விளங்கியவர் ஆல்பர்ட். அவர் படைப்பாளி அல்ல. ஆனால் நல்ல படைப்புகளைக் கண்டுபிடித்துச் சொல்லக்கூடிய நுண்ணுணர்வு கொண்டவர். நல்ல சிறுகதை, நல்ல நாவல், நல்ல கவிதை, நல்ல திரைப்படம், நல்ல நாடகம் என ஒவ்வொன்றைப்பற்றியும் மீண்டும்மீண்டும் பேசி தன்னைச் சூழ இருந்தவர்கள்மீது தாக்கத்தை ஏற்படுத்தியவர்.

கலை வடிவத்துக்கும் மனித வாழ்க்கைக்கும் இடையே நுட்பமும் நெருக்கமும் கொண்ட தொடர்பைக் கண்டறிந்து விவாதிக்கக் கூடிய ஆற்றலை தன்னைச் சூழ்ந்திருப்பவர்கள் பெறவேண்டும் என்னும் மேன்மையான ஆவலால் எழுந்த உத்வேகமே அவருடைய தொடர்ந்த இயக்கத்துக்கான காரணம். அந்த விவாதத்தை வளர்த்தெடுக்கும் பொருட்டு சில சமயங்களில் அவர் கவிதைகளை எடுத்துக்கொள்கிறார். அவை தமிழ்க்கவிதைகளாகவும் இருக்கின்றன. ஆங்கிலக்கவிதைகளாகவும் இருக்கின்றன. சில சமயங்களில் சிறுகதைகளையோ திரைப்படங்களையோ எடுத்துக்கொண்டு விவாதத்தைத் தொடங்கிவிடுகிறார். பட்டறைகளில், வகுப்பறைகளில், மாடியறைக்கூட்டங்களில், தேநீர்க்கடைகளில், வீட்டு முற்றத்தில் அவர் எப்போதும் ஒருவரிடமோ அல்லது பலரிடமோ உரையாடிக்கொண்டே இருக்கிறார். தன்னைத் தேடி அகால நேரத்தில் வரும் நண்பர்களிடம்கூட அவர் உரையாடத் தயாராகவே இருக்கிறார். தன்னையே உருக்கி அடுத்தவர் பாத்திரங்களில் வழங்கும் அவர் மேதைமைக்கு தமிழகம் தலைவணங்க வேண்டும்.

காவ்யா பதிப்பகம் வெளியிட்ட எழுபதுகளில் கலை இலக்கியம் என்னும் நூலில்தான் நான் முதன்முதலில் ஆல்பர்ட்டின் பெயரைப் பார்த்தேன். கவிதைகள் குறித்து அவர் எழுதியிருந்த கட்டுரையின் சாரம் என் நெஞ்சுக்கு மிகவும் உவகையளிப்பதாக இருந்தது. ஒரு காட்சியை முழுமையான அளவில் பார்க்கும் வகையிலான கோணத்திலிருந்து படமெடுப்பதுபோல ஒரு கவிதையை முழுமையான அனுபவமாக மாற்றிக்கொள்ள வழிவகுத்துக் கொடுக்கிற சொல்லை அல்லது வரிகளை, அக்கவிதையிலிருந்து எடுத்துரைத்தபடி செல்லும் அவர் எழுத்துமுறை எனக்குப் பிடித்திருந்தது. உரையாடும் ஆல்பர்ட்டின் முகத்தை அந்த எழுத்துகளின் ஊடே என்னால் பார்க்கமுடிந்தது. 1987 ஆம் ஆண்டில் சென்னையில் பூமணியின் ஏற்பாட்டின் நிகழ்ந்த சிறுகதைப்பட்டறையில்தான் அவரை நான் முதன்முதலாகச் சந்தித்தேன். கெட்டியான கண்ணாடியை அணிந்த சதுரமான முகம். கருணை மிகுந்த பார்வை. உதடுகளில் எப்போதும் பரவியிருக்கும் புன்னகை. குள்ளமான உருவம். அந்த நிகழ்ச்சியில் ஏறத்தாழ இரண்டு மணி நேரம் உணர்ச்சி மிகுந்த குரலில் அவர் சிறுகதைகளைப் பற்றி உரையாடினார். அந்த உரை எனக்கு மிகப்பெரிய அழகியல் அனுபவமாக இருந்தது. 28 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த ஆகஸ்டு மாதம் தஞ்சையில் நடைபெற்ற நண்பர் கோ.ராஜாராமின் மகனுடைய திருமணத்தில் கலந்துகொள்ளச் சென்றபோது இரண்டாவது முறையாகப் பார்த்தேன். முதுமையின் காரணமாக சற்றே தளர்ந்திருந்தார் என்றபோதும் அவரைச் சுற்றி இருபதுக்கும் மேற்பட்ட நண்பர்கள் அக்கணத்திலும் சூழ்ந்திருந்தார்கள். என்றும் நிகழும் உரையாடல் அன்றும் நிகழ்ந்துகொண்டிருந்தது.

திருச்சி ஜமால் முகம்மது கல்லூரியில் ஆங்கிலம் கற்பிக்கும் பேராசிரியராகப் பணியாற்றிய ஆல்பர்ட் ஆங்கிலத்தை மட்டுமன்றி, இலக்கியத்தில் தோய்ந்திருக்கும் மனநிலையையும் மாணவர்களுக்குக் கற்றுத் தந்த மாபெரும் மனிதர். எந்தக் கவிதையையும் அவர் பாடமாகவே நினைக்கவில்லை. ஒரு கவிதையின் வரிகளில் எங்கோ மூடியிருக்கும் கதவை அழகாகத் திறந்துகொண்டு அதன் வழியாக மகத்தானதொரு உலகத்துக்குள் செல்லும் பயணமாகவே அவர் நினைத்தார். வண்ணமயமான அந்த உலகத்துக்கு அனைவரையும் அழைத்துச் சென்றுவிடும் ஆற்றல் அவருக்கிருந்தது. ஜமால் முகம்மது கல்லூரி மாணவர்கள் மட்டுமன்றி, பிற கல்லூரி மாணவர்களும் ஆசிரியர்களும் விரும்பும் இனிய மனிதராக அவர் விளங்கினார். காந்தியின் மீதும் ஏசுவின் மீதும் அவர் கொண்டிருந்த ஆழ்ந்த பற்று, தொண்டாற்றும் அவர்களுடைய பாதையிலேயே அவரையும் செயல்படத் தூண்டியது. அவர் ஆற்றிய தொண்டு ஒருவகையில் மகத்தான இலக்கியத் தொண்டு. எந்த இடத்திலும் தன்னை முன்னிலைப்படுத்திக்கொள்ளாமல் கலை ஊடகங்களுக்கும் வாழ்க்கைக்கும் இடையேயுள்ள உறவின் முக்கியத்துவத்தை சதாகாலமும் கண்டடைந்து சொல்லும் தொண்டனாகவே அவர் தன்னை நிறுத்திக்கொண்டார்.

கல்லூரிக்காலத்தில் அவரால் உத்வேகம் பெற்ற பலர் பல்வேறு துறைகளில் இயங்கத் தொடங்கி படிப்படியாக தனித்த அடையாளங்களுடன் இன்று விளங்குகிறார்கள். கவிதைத்தொகுதியையும் சிறுகதைத்தொகுதியையும் வெளியிட்டு தன் ஆளுமையை எழுபதுகளிலேயே நிறுவிக்கொண்டவர் கோ.ராஜாராம். திரைத்துறையில் தன் பங்களிப்பை வழங்கியவர்கள் அம்ஷன்குமாரும் ஜேடி-ஜெர்ரியும். நாடகத்துறையில் பங்களித்தவர் வெளி.ரங்கராஜனும் ஜம்புநாதனும். எண்பதுகளில் எம்.டி.எம்.முத்துக்குமாரசாமி. தொண்ணூறுகளில் இமையம். கவிஞராக மட்டுமன்றி, மொழிபெயர்ப்பாளராகவும் உயர்ந்து நிற்பவர் நாகூர் ரூமி. இப்படி ஏராளமானவர்களின் வணக்கத்துக்குரிய குருவாக இருப்பவர் ஆல்பர்ட். எஸ்.வி.ராஜதுரை, பூரணசந்திரன், அமுதன் அடிகள் போன்ற சிலர் அவருக்கு நெருக்கமான நண்பர்களென்றாலும், அவர்களும் ஆல்பர்ட்டை ஒரு நல்ல குருவுக்குரிய மதிப்புணர்வுடன் அணுகுகிறவர்களாகவே காணப்படுகிறார்கள். ஆல்பர்ட்டின் ஆளுமையைப்பற்றிய அனுபவங்களைக் குறிப்பிடும் இவர்களுடைய கட்டுரைகளை ஒரு பகுதியாகவும் அவ்வப்போது ஆல்பர்ட் எழுதிய ஒரு சில கட்டுரைகளை இன்னொரு பகுதியாகவும் தொகுத்திருக்கும் அற்புதராஜ், அத்தொகுப்புக்கு பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட் என்ற பெயரில் நூல் வடிவம் கொடுத்திருக்கிறார். புத்தகத்தை மலைகள் பதிப்பகம் வெளியிட்டிருக்கிறது. முப்பதாண்டுகளில் ஆல்பர்ட் எழுதியவையாக பதினாறு கட்டுரைகள் மட்டுமே இத்தொகுப்பில் உள்ளன. இவற்றை மட்டுமே கண்டுபிடிக்க முடிந்திருக்கிறது. இன்னும் கண்டிப்பாக இருக்கக்கூடும். பட்டறைகளில் இவர் ஆற்றிய ஒவ்வொரு உரையும் ஒரு கட்டுரைக்கு நிகரானது என்றே சொல்லவேண்டும். துரதிருஷ்டவசமாக அதன் பிரதிகள் யாரிடமும் இல்லை.

தமிழ்ப்படங்கள் காட்டும் மனிதனும் சமூகமும் என்னும் முதல் கட்டுரை ஆல்பர்ட்டின் ஆழ்மனத்தில் இருக்கும் எதிர்பார்ப்பை முன்வைக்கிறது. வங்க மொழியிலும் கன்னட மொழியிலும் மராத்தியிலும் மிகச்சிறந்த படங்கள் வெளிவரும் சூழலில் மிகநீண்ட திரைப்படப் பரம்பரை உள்ள தமிழ்மொழியில் அதன் தாக்கம் சிறிதுகூட இல்லை. கலைப்பட முயற்சி என்பதே இல்லை. முழுக்கமுழுக்க ஒரு வணிகத்துறையாகவே அது இயங்குகிறது. அப்படிப்பட்ட சூழலில் வணிக நோக்கங்களைத் தக்கவைத்தபடியே, அத்துறையினர் செய்வதற்குச் சாத்தியமான வேலைகளை மறைமுகமாக இக்கட்டுரை சுட்டிக் காட்டுகிறது. பராசக்தி, புன்னகை, பாதை தெரியுது பார், உன்னைப்போல ஒருவன் ஆகிய படங்களை முன்வைத்து புற எதார்த்தத்தையும் அக எதார்த்தத்தையும் இணைக்கக்கூடிய சாத்தியக்கூறுகளையும் அவை வெற்றியடையும் தருணங்களையும் தோல்வியடையும் தருணங்களையும் சுட்டிக் காட்டுகிறார் ஆல்பர்ட். அக்கட்டுரையின் இறுதியில் அவர் வணிகப்படங்களை இயக்குபவர்களின் முன் ஒரு கோரிக்கையை முன்வைக்கிறார். அவர்களுக்கு அவர் ஷேக்ஸ்பியரின் ஆளுமையை நினைவுக்குக் கொண்டு வருகிறார். அவர் நாடகம் எழுத வந்தபோது இருந்த சூழல்களைச் சொல்கிறார். தமிழ்ச்சமூகம் எதிர்பார்க்கிற எல்லாவிதமான கேளிக்கைகளையும் எதிர்பார்க்கிற ஒரு சமூகமாகவே அன்றைய ஆங்கிலச் சமூகம் இருந்ததையும் சொல்கிறார். பார்வையாளர்களின் எதிர்பார்ப்பென்ன என்பதை ஆழமாகப் புரிந்துகொள்ளும் ஷேக்ஸ்பியர் அவை அனைத்துக்கும் இடம் கொடுக்கும் வகையில் தன் படைப்புகளை அமைத்துக்கொள்கிறார். நம்பவே முடியாத ஒரு கதையை நம்பவே முடியாத ஒரு புள்ளியிலிருந்து தொடங்குறார் அவர். ஆனால் அதற்குப் பின் நிகழ்வதையெல்லாம் நம்பக்கூடியவையாக அமைத்துக்கொள்கிறார். பார்வையாளர்கள் எதிர்பார்ப்பதையெல்லாம் வழங்கி, அவற்றையெல்லாம் அர்த்தத்தோடு ஆழத்தில் ஓர் அரிய தரிசனமாக மாற்றிவிடுகிறார். அதன் விளைவாக ஆழமும் அழுத்தமும் கூடிய செறிவான காவியமாக தன் படைப்பை கட்டியெழுப்புகிறார். ஷேக்ஸ்பியருக்கு சாத்தியமான ஒன்று தமிழ்ப்படைப்பாளிகளுக்கும் உறுதியாகச் சாத்தியப்படும் என்று தன் நம்பிக்கையை வெளிப்படுத்துகிறார் ஆல்பர்ட். தமிழ்ப்படைப்பாளிகள் அந்தப் புள்ளியை நோக்கிச் சிந்திக்கவேண்டும் என்றும் விழைகிறார். இத்தனை ஆண்டுகளுக்குப் பிறகும் அக்கோரிக்கை களிம்பேறிய தங்கச்சங்கிலிபோல தனித்தே கிடக்கிறது. ஆயினும் கலையை வணிகமாக மாற்றிவிட்டவர்கள் என அனைவரும் தூற்றி ஒதுக்கும் நிலையில், வணிக இயக்குநர்களையும் நம்பிக்கைக்குரியவர்களாக அரவணைத்துச் செல்ல நினைக்கும் ஆல்பர்ட்டின் விருப்பம் ஒரு காவியக்கனவாக தோற்றமளிக்கிறது.

கவிதை பற்றியவையாக இத்தொகுதியில் புதுக்கவிதையின் பாடுபொருள், எழுபதுகளில் தமிழ்க்கவிதை, சொல்லுக்கு அப்பால் காணும் கவிதை புதுக்கவிதையும் சமுதாய சீர்திருத்த நோக்கும் ஆகிய நான்கு கட்டுரைகள் உள்ளன. கவிதை பன்முகம் கொண்ட ஒரு கலை என்பதில் ஆல்பர்ட்டுக்கு ஆழ்ந்த நம்பிக்கை இருக்கிறது. கவிதையில் இயங்கும் பன்முகத்தன்மையைப் புரிந்துகொள்வதற்காக அவர் ஏராளமான கவிதைகளை எடுத்துக்காட்டி புரியவைக்க முயற்சி செய்கிறார். ஞானக்கூத்தன், சி.மணி, பிரமிள், சுந்தர ராமசாமி, ஆத்மாநாம், நாரணோ.ஜெயராமன், வேணுகோபாலன் போன்றோரின் கவிதைகளை பல இடங்களில் முன்வைத்து, அவை முன்வைக்கும் தரிசனத்தையும் சொல் வழியாகவும் பொருள் வழியாகவும் அத்தரிசனத்தை நோக்கிச் செல்லும் பயணத்தையும் தெளிவாகவும் விரிவாகவும் முன்வைத்து, நீண்டதொரு உரையாடலைத் தொடங்கிவைக்கிறார் ஆல்பர்ட். இத்தகு நீண்ட விவாதங்கள் வழியாகவே புதுக்கவிதைக்கான இடம் சமூகத்தில் வரையறுக்கப்பட்டது என்றும் சொல்லலாம். ஒரு கவிதையைப் புரிந்துகொள்வதில் வாசகர்களுக்கு இருக்கும் முக்கியமான பங்களிப்பை ஆல்பர்ட் தொடர்ந்து வலியுறுத்துகிறார். கவிஞனும் சொற்களும் மறைந்துவிட வாசகர்கள் சுதந்திரமாக பொருள்வெளியை உருவாக்கிக்கொள்கிறார்கள். ஞானியின் கல்லிகை காவியத்தையும் பிரமிளின் கண்ணாடியுள்ளிருந்து காவியத்தையும் ஒப்பிட்டு எழுதியிருக்கும் கட்டுரை காய்தல் உவத்தல் இல்லாத ஆல்பர்ட்டுடைய பார்வைக்கு ஓர் எடுத்துக்காட்டு.
albert1_n

albert2

albert3

albert4

albert5

albert6

albert7

albert8

albert9

albert11

albert12

albert13

albert15

albert19

albert20
பாரதியாரின் அழகுத்தெய்வம் கவிதையை முன்வைத்து ஆல்பர்ட் எழுதிய கட்டுரை அவருடைய ஆளுமைக்குச் சான்றாகும். மேலோட்டமான வாசிப்பில் வித்தியாசமாகவும் புதிதாகவும் ஒன்றும் சொல்லவில்லையே என்று தோன்றக்கூடிய ஒரு கவிதையை எடுத்துக்கொள்ளும் ஆல்பர்ட், அக்கவிதையில் பொதிந்திருக்கும் என்றென்றைக்குமான ஒரு பேருண்மையை, பொதுவாக அழகு என்று சொல்லும்போது நம் கவனத்திலிருந்து பிசகிவிடும் ஒரு தத்துவ முழுமையை, குறிப்பால் உணர்த்தும் தன்மையை, ஒரு விளையாட்டுபோல பாரதியார் அக்கவிதையை நிகழ்த்தியிருக்கும் அற்புதத்தை சுட்டிக்காட்டியிருக்கும் விதம் குறிப்பிட்டுச் சொல்லவேண்டிய ஒன்றாகும்.

மூன்று எண்சீர் விருத்தங்களை மட்டுமே கொண்ட கவிதை இது. சுவையான ஒரு கனவனுபத்தை விவரிக்கும் விதமாகத் தொடங்கி, எதிர்பாராத அதிர்ச்சி நேர்ந்து, மூச்சுவிடாமல் தொடரும் வினாவிடைகளாகவும் உணர்ச்சிமயமான உரையாடல்களாகவும் விரிந்து இன்பத்தில் தோயும் ஒரு புள்ளியில் முடிவடையுமாறு பாரதியார் இக்கவிதையை எழுதியிருக்கிறார். இக்கவிதையில் உள்ள ‘தூங்காதே, எழுந்தென்னைப் பார்’ என்ற வரியின்மீது ஆல்பர்ட் கவனத்தைக் குவிக்கிறார். கனவில் காட்சியளித்த, முழுநிலவென ஒளிரும் முகம்கொண்ட இளநங்கை இதழில் புன்னகை படர நிற்கிறாள். அந்த அழகைக் கண்டு உறைந்துபோனவனிடம் ‘தூங்காதே, எழுந்தென்னைப் பார்’ என்று அதட்டலாகவும் உரிமையோடும் சொல்கிறாள். காதல் மரபுக்கேற்ப அவன் நேர்க்கெதிர் நோக்காது நிலன் நோக்கவில்லை. நாணிக் கண் புதைக்கவுமில்லை. வழக்கமாக காதலனை எதிர்கொள்ளும் காதலியைப்போல அல்லாமல், அழைக்காமலேயே அவனெதிரில் வந்து நின்று, தூங்குகிறவனைத் தட்டி எழுப்பி தன்னைப் பார்க்கும்படி கட்டளையிடுகிறாள். அவளுடைய பேரழகுத் தோற்றத்துக்கும் அதிகாரம் தொனிக்கும் குரலுக்கும் இடையிலான முரண்பாடு உறுத்த அவன் மெல்ல விழியுயர்த்தி உற்று நோக்குகிறான். தன் முன் நிற்பவள் சாதாரணமான அழகி அல்ல, ஒரு ரசிகனாக, ஒரு கலைஞனாக, ஒரு கவிஞனாக தான் காலமெல்லாம் உபாசித்து வரும் அழகுத்தெய்வமே அது என்று அவனுடைய அறிவு ஒரே கணத்தில் உய்த்துணர்ந்துவிடுகிறது. மனம் விழித்துக்கொள்கிறது. தடுமாறித் தெளிந்து, ‘அடடா, ஓ அடடா, அழகென்னும் தெய்வம்தான் அது என்றே அறிந்தேன்’ என்று சுதாரித்துக்கொள்கிறான். ஆனாலும் அந்தச் சுதாரிப்பு போதவில்லை. பித்தின் பிடியிலிருந்து அவனால் முழுமையான அளவில் விலகி வர இயலவில்லை. எவ்வளவு நேரம்தான் ஓர் அழகியைப் பார்த்தபடி நிற்பது, எதையாவது உரையாடவேண்டுமே என்று மனம் பதறுகிறது. அதே நேரத்தில் தன் மனத்தில் துளிர்த்த பெண்ணாசையை தெய்வம் உணர்ந்துவிடக் கூடாது, முற்றிலும் அதை மறைத்துவிடவேண்டும் என விழைகிறான். எனவே அச்சூழலுக்கு முற்றிலும் பொருத்தமே இல்லாத ஒரு தத்துவக்கேள்வியிலிருந்து உரையாடலைத் தொடங்குகிறான். ‘யோகம்தான் சிறந்ததுவோ தவம் பெரிதோ?’ என்றொரு கேள்வியைக் கேட்டுவிட்டு அவள் முகத்தையே பார்க்கிறான். அவன் தடுமாற்றத்தைப் பார்த்து ரசிக்கும் அவள், தன் விளையாட்டை இன்னும் நீட்டிக்க விரும்புகிறாள். வெளிப்படையான பதிலாக இல்லாமல் அவளும் புதிர்போன்றதொரு பதிலைச் சொல்லி குறுநகை புரிகிறாள். இப்படியே உரையாடல் நீண்டபடி செல்கிறது. அவள் சொல்லும் ஒவ்வொரு பதிலும் அவனைக் குழப்பிச் சுழற்றியடிக்கும் பதிலாக உள்ளது. இருவருக்கும் இடையில் ஒரு கள்ளவிளையாட்டு நடக்கத் தொடங்குகிறது. இறுதியாக தன் நெஞ்சில் இருப்பதைக் கேட்கவும் முடியாமல் கேட்காமல் விடவும் முடியாமல் பூடகமாகவே ‘ஞாலத்தில் விரும்பியது நண்ணுமோ?’ என்று பொதுவாகக் கேட்கிறான். அதற்கும் அவள் நழுவிச் செல்லும் விதமாக ‘நாலிலே ஒன்றிரண்டு பலித்திடலாம்’ என்று சொல்கிறாள். இறுதியாக ’எண்ணினால் எண்ணியது நண்ணுங்காண்’ என்று சொல்லும் கணத்தில்தான் அவனுக்கு சற்றே துணிவு பிறக்கிறது. ஆசையை நிறைவேற்றிக்கொள்ள, அழகைப் பற்றிக்கொள்ள வெளிப்படையாகக் கேட்டுவிடவேண்டும் என மனம் துடிக்கிறது அவனுக்கு. ஆனாலும் கூட தன் ஆசையை பெயர் சொல்லி குறிப்பிட ஏதோ ஒன்று அவனைத் தடுக்கிறது. பட்டும் படாததுமாக ‘மூலத்தைச் சொல்லவோ வேண்டாவோ?’ என்று தயங்கித்தயங்கி அவளை மெதுவாக ஏறெடுத்துப் பார்க்கிறான். அதற்கும் மேல் அவனைச் சோதிக்க விரும்பாத தெய்வம் தன் முகத்தில் அருள்சுரக்க அவனைப் பார்க்கிறாள். அவன் மோகம் தணிகிறது. அதிர்ச்சியும் வியப்புமாக விறுவிறுப்பாகத் தொடர்ந்த நாடகம் ’மோகமது தீர்ந்தேன் ’ என உச்சத்துக்குச் சென்று முடிவடைகிறது. அந்த உரையாடலில் கேட்கப்படும் ஒவ்வொரு கேள்வியையும் முன்வைத்து ஆல்பர்ட் விரிவானதொரு தத்துவ விசாரணையை நிகழ்த்துகிறார். பாரதியாரின் பிற கவிதைகளின் வரிகளையே சான்றாக எடுத்துக்கொண்டு ஒவ்வொரு சொல்லையும் பிரித்துப்பிரித்து ஒவ்வொரு உலகத்தை வாசகனுக்கு உணர்த்தியபடி செல்கிறார். இறுதியாக, ‘எழுந்தென்னைப் பார் என்று சொல்வதே அழகு. எழுந்து பார்க்கும்போதுதான் உண்மையையும் நன்மையையும் காணமுடியும். அழகு என்பதே உண்மையின் வடிவம்’ என்று சொல்லி முடிக்கிறார் ஆல்பர்ட். இக்கட்டுரை ஆல்பர்ட்டின் கட்டுரையுலகின் உச்சப்புள்ளிகளில் ஒன்று.

இன்னொரு புள்ளி சத்யஜித் ரே யின் திரைப்படமான சாருலதா பற்றிய கட்டுரை. தாகூரின் கதையை அடிப்படையாகக் கொண்டு ரே எடுத்த திரைக்காவியமான அந்தப் படத்தின் முக்கியமான காட்சிகளை துண்டுதுண்டாக நகர்த்தி பாடம் சொல்லித் தருவதுபோல, அக்காட்சியில் பொதிந்திருக்கும் அழகியல் கூறுகளை அவர் எடுத்துரைப் படிக்கும்போது ஆல்பர்ட்டின் சொற்களில் மனம் மயங்காதவர்கள் யாருமே இருக்கமுடியாது என்று தோன்றுகிறது. அவருக்குள் கலந்திருக்கும் குரு, எல்லாத் தருணங்களிலும் வெளிப்பட்டு வழிகாட்டியபடி இருக்கிறார். அதைக்கூட எதையோ கதை சொல்வதுபோல முன்வைத்துவிட்டு தன்னை மறைத்துக்கொள்கிறார். எவ்வளவு மேன்மையான குரு. அவருடன் உரையாடும் பேறு பெற்ற மாணவர்களும் நண்பர்களும் பாக்கியவான்கள் என்றே சொல்லவேண்டும்.

நூலின் இரண்டாவது பகுதியில் ஆல்பர்ட்டுக்கு நெருக்கமான பத்தொன்பது நண்பர்களின் மனப்பதிவுகள் நிறைந்துள்ளன. ஒவ்வொரு கட்டுரையிலும் அவருடைய ஒரு முகம் வெளிப்படுகிறது. அவருடைய ஆளுமையே பன்முகம் கொண்ட ஒரு கவிதையனுபவமாக உருப்பெற்று நிற்கிறது.

ஆல்பர்ட் நல்ல ஆசிரியர். ஆங்கில யாப்பிலக்கணத்தை மில்டனின் கவிதையை முன்வைத்து வகுப்பில் நடத்தி மாணவர்களுக்குப் புரிய வைப்பவர். தன்னிடம் பயிலும் மாணவனின் எதிர்காலத்தைப் பற்றி கவலைப்படுபவர். தடம்புரண்டு சென்றுவிடாதபடி தடுத்து நிறுத்துபவர். அகாலத்திலும் வீட்டுக்கதவைத் தட்டி வருகிறவர்களோடும் உரையாடத் தயங்காதவர். நண்பர்கள் செய்திருக்கும் மொழிபெயர்ப்பைத் திருத்திச் சரிபார்த்துக் கொடுப்பவர். நல்ல இலக்கியத்தையும் நல்ல நாடகம், நல்ல திரைப்படம் என எல்லா நல்லதுகளையும் சுட்டிக்காட்டி, அவற்றில் தோயவைப்பவர். மாறுபட்ட கருத்துகளையும் செவிமடுத்துக் கேட்டுக்கொள்பவர். தொழுநோயாளிகள் இல்லத்தின் பராமரிப்புப் பணிகளைச் செய்வதில் ஆன்மநிறைவு கொள்பவர். இளைஞர்களிடையே நல்ல ரசனையை வளர்க்கும்பொருட்டும் வாசிப்புத் திறமையை மேம்படுத்தும் பொருட்டும் எழுத்தார்வத்தை வளர்க்கும்பொருட்டும் ஏராளமான சிறுகதைப் பட்டறைகளை எவ்விதப் பலனையும் எதிர்பாராமல் இடைவிடாது நடத்தியவர். இப்படி ஆல்பர்ட்டுக்குத்தான் எத்தனை எத்தனை முகங்கள். அற்புதராஜின் முயற்சியால் அம்முகங்களில் சிலவற்றைப் பார்க்கக்கூடிய பேறு நமக்கும் கிடைக்கிறது.

 

(பேராசிரியர் எஸ்.ஆல்பர்ட். தொகைநூல். மலைகள் பதிப்பகம். 119. முதல் மாடி. கடலூர் மெயின் ரோடு, அம்மாபேட்டை, சேலம்- 3. விலை. ரூ.250)

——————————————-

Series Navigationகரடிஆயிரங்கால மண்டபம்
author

பாவண்ணன்

Similar Posts

Comments

  1. Avatar
    Dr.G.Johnson says:

    பேராசிரியர் ஆல்பர்ட் என்னும் ஒரு மாபெரும் மனிதநேயரை, சிறந்த பன்முக இலக்கிய ஆர்வலரை மிக அழகாக அறிமுகம் செய்துள்ளார் நண்பர் பாவண்ணன் அவர்கள் . பாராட்டுகள். அன்புடன் டாக்டர் ஜி. ஜான்சன் .

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *