ஒரு வழியாக விடுதி நாளை சிறப்பாகக் கொண்டாடி முடித்துவிட்டோம். அதன் மூலமாக வகுப்பில் சில புது ஜோடிகள் உருவாகினர் .அவர்களுக்கு நாங்கள் பாராட்டுகளைத் தெரிவித்தோம். அதுபற்றி பொறாமையோ கவலையோ படவில்லை.
” அழுக்காறு அவாவெகுளி இன்னாச்சொல் நான்கும்
இழுக்கா இயன்றது அறம். ” என்பது வள்ளுவரின் வாய்மொழி. இதை நான் தீர்க்கமாக பின்பற்றிய காலம் அது. தினம் ஒரு குறள் படித்து அதன் பொருள் புரிந்து செயல்பட்டால் வாழ்க்கையில் வெற்றிப் படிகளை ஏறலாம். மனப்பாடம் செய்ய நான் ஓர் உத்தியைக் கையாண்டேன். காலையிலேயே புதுக் குறளைப் படித்துவிட்டு அதை ஒரு தாளில் எழுதிக்கொள்வேன். அதை சட்டைப் பையில் வைத்துக்கொள்வேன். நேரம் கிடைக்கும்போதெல்லாம் அதை மீண்டும் மீண்டும் சொல்லிப்பார்ப்பேன். மாலைக்குள் அது மனப்பாடம் ஆகிவிடும்! சங்க இலக்கியங்கள் நிறையவே இருந்தாலும், திருக்குறள் படிப்பதற்கும், மனப்பாடம் செய்வதற்கும்,கடைப்பிடிப்பதற்கு
முதல் வருடம் முடிவுக்கு வந்துகொண்டிருந்தது. தேர்வுகள் நெருங்கின. பாடங்களில் அதிக கவனம் செலுத்தினேன். இதில் தேர்ச்சி பெற்றால்தான் இரண்டாம் ஆண்டு செல்லமுடியும். பாடங்கள் அனைத்துமே சுலபமாக இருந்தாலும் படித்தால்தான் நல்ல மதிப்பெண்களைப் பெறமுடியும்.
இரவில் நன்றாகத் தூங்கிவிட்டு விடியலில் நான்கு மணிக்கு எழுந்து படிப்போம். அப்போது நாங்களே அறையில் காப்பி கலக்கிக்கொள்வோம். பால் இருக்காது. வற காப்பியில் சீனி போட்டு குடிப்போம். ஆறு மணிக்குமேல் குளித்துவிட்டு வகுப்புக்குச் செல்வோம். தேர்வுக்கு முன் சில நாட்கள் படிக்கும் விடுமுறை விடப்படும். அப்போது முழுக்க முழுக்க பாடங்களை நிதானமாக தேர்வுக்கு தயார் செய்வோம்.
தேர்வுகளில் ஒவ்வொரு பாடத்திலும் ஆறு கேள்விகள் தரப்படும். அவற்றில் ஐந்திலாவது தேர்ச்சி பெற்றால்தான் வெற்றி. இல்லையேல் தோல்விதான். திரும்ப அந்தப் பாடத்தை ஆறு மாதங்கள் கழித்துதான் எழுதவேண்டும். ஆனால் இரண்டாம் வருடம் சென்றுவிடலாம். இரண்டாம் ஆண்டில் அது மாதிரி இல்லை. தேர்வில் ஒரு பாடத்தில் தோல்வியுற்றால்கூட மூன்றாம் ஆண்டுக்குள் புக முடியாது. ஆறு மாதங்கள் இரண்டாம் ஆண்டிலேயே திரும்பவும் இருந்து மீண்டும் தேர்வு எழுதவேண்டும். அதனால் ஆறு மாதங்கள் பின்தங்குவதோடு, விடுதிச் செலவு, கல்விச் செலவு, இதரச் செலவுகள் அனைத்தும் வீண்! இரண்டாவது முறையும் தோல்வியுற்றால் புதிதாக இரண்டாம் ஆண்டுக்கு வரும் வகுப்புடன் சேர்ந்துகொள்ளவேண்டும். அது பெருத்த அவமானமாகும்!
எதற்கு வீண் வம்பு என்று இரவு பகலாக தீவிரமாக படித்து தேர்ச்சி பெறவே முயலுவோம். அறையில் படிப்பது போதாதென்று உணவு விடுதியிலும், ஓய்வு நேரத்திலும்கூட பாடங்கள் பற்றிதான் பேசுவோம்.
நாங்கள் நால்வர் ஓர் அறையில் இருந்ததால் கேள்விகள் பற்றி விவாதம் செய்வதற்கு எளிதாக இருந்தது. எந்தெந்த கேள்விகள் வரலாம் என்று யூகம் செய்து அவற்றின்மீது அதிக கவனம் செலுத்துவோம்.
நான் எப்போதுமே தேர்வுக்கு முதல் நாள் இரவு நன்றாகத் தூங்குவேன். காலையில் உற்சாகமாக சுறுசுறுப்புடன் தேர்வு எழுதச் செல்வேன். முன்பே எல்லாவற்றையும் தயார் செய்துவிடுவதால் இந்த தன்னம்பிக்கை. கடைசி நிமிடத்தில் புத்தகத்தைத் திறந்து பதற்றத்துடன் படிப்பதால் குழப்பமே நிலவும். நிதானத்துடன் தேர்வுக்குச் சென்றால் சிறப்பாக பதில்கள் எழுதலாம்.
தேர்வு நாள்! நிச்சயம் வெற்றி என்ற மனநிலையுடன் புறப்பட்டேன். நாங்கள் செம்மண் வீதியில் நடந்து சென்று கல்லூரி முதல்வர் அறை தாண்டி தேர்வுக் கூடம் அடைந்தோம். அங்கு வரிசை வரிசையாக மேசை நாற்காலிகள் போடப்பட்டிருந்தன.மேசையில் பெயரும் எழுதப்பட்டிருந்தது.
எல்லாரும் அமர்ந்தபின்பு தேர்வுத் தாளுடன் ஆசிரியர்கள் இருவர் வந்தனர். அவர்களுடன் அச்சன் ஊமனும் வந்தார். நாங்கள் எழுந்து நின்றோம். அச்சன் ஜெபம் செய்தார். நாங்கள் கண்களை மூடி தியானித்தோம்.
முதல் தேர்வு ஆங்கிலம். கேள்வித் தாள்களும் எழுதும் தாள்களும் தரப்பட்டன. ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” நாவலிலிருந்து ஆறு கேள்விகள் கேட்கப்பட்டிருந்தன.இவற்றுக்கு கட்டுரை பாணியில் பதில் எழுதவேண்டும். ஆறு கேள்விகளுக்கும் என்னால் சரியான பதில் தரமுடியும். முன்பே நான் கட்டுரைகள் நன்றாக எழுதுவேன். அந்த நாவலையும் நான் இரசித்து படித்துள்ளேன். முதல் கேள்வி ஹென்சார்ட் பற்றிய குணாதியங்கள். நான் அழகாக அது பற்றி நான்கு பக்கங்கள் எழுதிவிட்டேன். என் பதில்களில் எப்போதுமே முன்னுரை கவர்ச்சியாக இருக்கும். அதைப் படித்ததுமே திருத்துபவர்களுக்கு நல்ல அபிப்பிராயம் உண்டாகிவிடும். அடுத்தடுத்த கேள்விகளுக்கும் சிரமமின்றி நான்கு பக்கங்கள் எழுதிமுடித்தேன். ஒரு மணி நேரத்தில் நான் தேர்வுக்கூடத்திலிருந்து வெளியேறிவிட்டேன். ஆங்கிலப் பாடத்தில் நிச்சயமாக வெற்றி பெறுவது உறுதி!
ஒரு நாளுக்கு ஒரு தேர்வுதான். விடுதி சென்று நிம்மதியாகத் தூங்கிவிட்டு அடுத்த தேர்வுக்கு தயார் ஆகலாம். நான் அப்படிதான் செய்தேன். பரபரப்பு இல்லாமல் நிதானமாக எல்லா தேர்வுகளையும் அந்த வாரத்தில் எழுதி முடித்தேன்.
தாவரவியல், உயிரியல் , இயற்பியல், வேதி இயல் ஆகிய அறிவியல் பாடங்களுக்கு செய்முறை தேர்வுகளும் உள்ளன.அவை மாலையில் நடைபெறும். அது நேர்முகத் தேர்வு போன்றது. செய்முறைகள முடித்தபின்பு உடன் கேள்விகள் கேட்பார்கள். அவற்றையும் சிறப்பாகவே செய்து முடித்தேன்.
முடிவுகள் வருமுன்பே நான் முதலாம் ஆண்டில் தேர்ச்சியுற்றுவிட்டேன் என்பது எனக்குத் தெரிந்தது.
இனி நீண்ட விடுமுறை ! விடுதியில் ஒரே குதூகலம்தான். பாடநூல்களை பத்திரப்படுத்தி அடுக்கி வைத்தோம். புதிதாக வரும் முதலாண்டு மாணவர்களிடம் அவற்றை அரை விலையில் விற்கலாம். இல்லையேல் சென்னை மூர் மார்கெட்டில் பழைய புத்தகக் கடையில் விற்றுவிடலாம்!
ஆனால் ” த மேயர் ஆப் கேஸ்ட்டர்பிரிட்ஜ் ” நாவலை நான் விற்காமல் பத்திரப்படுத்துவேன். காரணம் அது இலக்கியம் !
சம்ருதி சித்தூர் சென்று கொண்டாடலாம் என்றான். அது சரியென்று தோன்றியது. சித்தூர் ஆந்திராவில் உள்ளது. சம்ருதி தெலுங்கு என்பதால் சிரமம் இருக்காது. பெஞ்சமினிடம் கேட்டேன். அவன் வரவில்லை என்றுவிட்டான்.
சம்ருதியும் நானும் மதியம் புறப்பட்டோம். பேருந்து மூலம் சித்தூர் அடைந்தோம். ஒரு மணி நேர பிரயாணம்தான். பாலாறு தாண்டி காட்பாடி வழியாக தமிழ் நாடு ஆந்திரா எல்லைப் பகுதிகளில் இருந்த அழகான கிராமங்களைக் கடந்து சென்றோம்.
சித்தூர் மாறுபட்டுதான் இருந்தது. எங்கும் தெலுங்கு பேசும் மக்கள். நிறைய திரைப்பட அரங்குகள். தெலுங்கு படங்கள் பார்க்க முடிவு செய்தோம். என்.டி. ஆர். படம் பார்த்தோம். அவர் அப்போது ஆந்திராவின் எம்.ஜி.ஆர்.
கடைத்தெரு சென்றோம். இங்கு மது விலக்கு கிடையாது. காரைக்கால் மாதிரி வீதிகளில் திறந்த ” பார் ” கள் உள்ளன. அங்கேயே இரவு உணவு உண்ணும் வசதியும் உள்ளது. தங்கும் விடுதிகளும் ஏராளம் உள்ளன. அங்கு எல்லா வசதிகளும் இருக்குமாம்!
மகிழ்ச்சியாக பொழுதைக் கழித்துவிட்டு வேலூருக்கு பேருந்து ஏறினோம். விடுதிக்கு வந்து சேர நள்ளிரவாகிவிட்டது.
நீண்ட விடுமுறை விடப்பட்டது. இரண்டு மாதங்கள்! சிங்கப்பூர் வருவதாக அப்பாவுக்கு கடிதம் எழுதியிருந்தேன். அவர் அடுத்த வருடம் வரலாம் என்று பதில் போட்டிருந்தார்.
லதாவிடமிருந்து கடிதங்கள் வருவது வெகுவாகக் குறைந்துவிட்டது. எல்லா கடிதங்களிலும் நன்றாகப் படிக்கச் சொல்லியிருப்பாள். சீக்கிரம் முடித்துவிட்டு ஒரு டாக்டராக சிங்கப்பூர் திரும்பும்படிதான் எழுதியிருப்பாள். நானும் கடிதங்களுக்கு பதில் எழுதுவதோடு சரி. அதிகம் அவள் பற்றி ஏங்குவதில்லை. இங்கு எப்போதுமே நண்பர்களுடன் இருப்பதால் தனிமைக்கு வாய்ப்பில்லை.
வெரோனிக்கா வந்தபின்பு லதாவின் நினைவு குறையத்தான் செய்தது. அவள் சென்னை கிறிஸ்துவக் கல்லூரியில்தான் இன்னும் உள்ளாள். இரண்டாம் ஆண்டு முடித்திருப்பாள். கல்லூரிகள் துவங்கியதும் அவள் இறுதி ஆண்டுக்குச் சென்றுவிடுவாள். அதன் பின் அவள் என்ன செய்வாள் என்பது தெரியாது. கடைசியாக அவள் எழுதியிருந்த கடிதத்தில் இளங்கலை பட்டம் பெற்றபின்புதான் எதிர்காலம் பற்றி முடிவு செய்யப்போவதாகக் கூறியிருந்தாள். எனக்கு இன்னும் நான்கு ஆண்டுகள் உள்ளதால் கவலை இல்லை என்றும் எழுதியிருந்தாள்.
கோகிலம் வந்தபின்பு வெரோனிக்காவின் நினைவுகள் குறையத்தான் செய்தன. ஒரு பெண்ணின் நினைவை இன்னொரு பெண்ணால் மழுங்கச்செய்யவோ அல்லது மறக்கடிக்கவோ முடிகிறது. இது வினோதமான அனுபவமே! புதிதாக வரும் பெண்ணிடம் அப்படி என்னதான் மாயம் உள்ளதோ தெரியவில்லை.
கோகிலத்தின் நினைவுகூட அதிகம் வருவதில்லை. அவள் மீது உண்டானது காதல் அல்ல. காதலிக்கும்போது உண்டான பிரிவுத் துயர் அதில் இல்லை. அது இரக்கம். அவள் அடுத்தவன் மனைவிதான். அனால் அவளைப்பொறுத்தவரை அவள் தேர்ந்தெடுத்த கணவன் இல்லை அவன். அவளுடைய மனதைக் கொள்ளைகொண்ட முதல் ஆடவன் நான்தான் என்று அவள் கூறுகிறாள். தாலி கட்டிய கணவனுக்கு அந்த ” சேவையைத் ” தவிர வேறு எல்லா சேவையும் செய்து வருகிறாள். மனதுக்குப் பிடித்துவிட்ட என்னுடன் இருப்பதில் தவறில்லை என்று வாதிடுகிறாள்! அவளுடைய துணிச்சல் என்னை அச்சுறுத்துகிறது! காரணம் எப்போது பார்த்தாலும் சாகப் போவதாகவே கூறி வருகிறாள். அவள் விளையாட்டாக அப்படிக் கூறவில்லை என்பது எனக்கு திடமாகத் தெரிகிறது. அது எப்போது விபரீதமாகுமோ என்ற அச்சம் என்னுடைய மனதில் உள்ளது.
இந்த விடுமுறையில் சிங்கப்பூர் சென்றால் லதாவைக் காணலாம். ஆனால் அது இந்த வருடம் முடியாது. சென்னை சென்றால் வெரோனிக்காவைக் காணலாம். ஆனால் சென்னையிலேயே அதிக நாட்கள் தங்க முடியாது. கடைசியில் ஊர்தான் சென்றாகவேண்டும். கோகிலத்தைதான் மீண்டும் சந்தித்தாகவேண்டும்!
ஊர் செல்லுமுன் தரங்கம்பாடி சென்றுவிடலாம். அங்கு அண்ணன் அண்ணியுடன் கொஞ்ச நாட்கள் கழிக்கலாம். மாலையில் வேண்டுமானால் காரைக்கால் சென்று வரலாம்.
விடுதி அறைகள் காலியாயின. நானும் பெட்டி படுக்கையுடன் ( ஹோல்டால் ) புறப்பட்டேன்.
திருப்பதி துரித பயணியர் புகைவண்டியில் ஏறி மாயவரம் புறப்பட்டேன்.
( தொடுவானம் தொடரும் )
- சூரியக் கதிர்ப் புயல்கள் சூழ்வெளியைச் சூனிய மாக்கி வறண்ட செவ்வாய்க் கோள் ஆறுகளில் வேனிற் காலத்தில் உப்பு நீரோட்டம்
- இஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா?
- ” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி
- மூன்று நூல்களின் வெளியீட்டு விழா
- மருத்துவக் கட்டுரை புற நரம்பு அழற்சி
- பொன்னியின் செல்வன் படக்கதை – 12
- நித்ய சைதன்யா – கவிதைகள்
- மாறி நுழைந்த அறை
- ‘புரியவில்லை’ என்ற பிரச்சினை பற்றி – பேராசிரியர் க.பஞ்சாங்கம்
- தேடப்படாதவர்கள்
- பாரதியைத் துய்த்துணரும் சொ.சேதுபதி
- அவன், அவள். அது…! 10
- பூவைப்பூவண்ணா
- தண்ணீரிலே தாமரைப்பூ
- திருப்பூர் இலக்கிய விருது 2015 (கவிஞர் சுகந்தி சுப்ரமணியன் நினைவுப் பரிசு)
- தொல்காப்பியம் இறையனாரகப்பொருள்- அகப்பாட்டு உறுப்புக்கள் ஒப்பீடு
- தொடுவானம் 94. முதலாண்டு தேர்வுகள்
- திரை விமர்சனம் தூங்காவனம்