” கலைச்செல்வி ” சிற்பி சரவணபவனுக்கு அஞ்சலி

author
0 minutes, 2 seconds Read
This entry is part 3 of 18 in the series 15 நவம்பர் 2015

LateSirpy Saravanapavan02முருகபூபதி – அவுஸ்திரேலியா

அதிபர் – இதழாசிரியர் – இலக்கியப்படைப்பாளியாழ்வாசி “ விடைபெற்றார்

                          

தீபாவளி வாழ்த்து அழைப்புகள் வந்தவண்ணம் துயில் எழுப்பியபொழுது மீண்டும் ஒரு அழைப்பு. ஆனால், துயரமான செய்தியுடன் …!! நண்பரும் வீரகேசரியில் முன்னர் பணியாற்றியவரும்  எழுத்தாளர் அருண். விஜயராணியின் மருமகனுமான ஊடகவியலாளர் தெய்வீகன் மறுமுனையில். சிற்பியின் மறைவுச்செய்தி சொல்லி துயரம் பகிர்ந்துகொண்டார்.

இந்தப்பதிவிற்காக சிற்பியின் ஒளிப்படம் தேடியபொழுது  அவரும் இலக்கிய நண்பர் கே.எஸ்.சுதாகரனும் உதவினர்.

ஒருவரின் மறைவின்பொழுதுதான் மறைந்தவர் பற்றி ஆழமாக யோசிப்பது இயல்பாகிவிட்டது. அந்த யோசனையில் அவர்தம் நினைவுகள்தான் மனதில் அலைமோதும்.

LateSirpy Saravanapavan01

தொடர்ச்சியாக  பல கலை, இலக்கிய ஆளுமைகளுக்கு விடைகொடுத்துக்கொண்டிருக்கும்  சமகாலத்தில், முன்னே சென்றவர்களிடம் நில்லுங்கள் நானும் வருகின்றேன் “ என மனதளவில்  சொல்லிக்கொண்டு சிற்பியும் புறப்பட்டுவிட்டார்.

இலக்கிய  உலகில் சில பெயர்கள் வாசகர்களுக்கு அடிக்கடி மயக்கம் தருபவை.

இலங்கையில்  எமக்கு ஒரு சிற்பி சிவசரவணபவன் இருந்ததுபோன்று , தமிழக இலக்கிய உலகில் சிற்பி பாலசுப்பிரமணியம் என்ற கவிஞர் இருக்கிறார்.

அதேபோன்று இலங்கைக்கு ஒரு யாழ்ப்பாணம் தேவன். தமிழகத்திலும் ஒரு தேவன்.

இலங்கையில் முருகானந்தன் என்றபெயரில் மூன்று முக்கியமான இலக்கியப்படைப்பாளிகள்.

ஒருவர் மறைந்த அளவெட்டி .செ.முருகானந்தன்.  மற்ற இருவரும் சமகாலத்திலும் தொடர்ந்து எழுதிவரும் டொக்டர் எம்.கே.முருகானந்தன், டொக்டர் .முருகானந்தன்.

இந்தப்பெயர்மயக்கம் என்றும் தொடரும் மயக்கம்தான்.

தமது 82 வயதில் கடந்த 9 ஆம் திகதி மறைந்த சிற்பி சிவசரவணபவன், 1933 ஆம் ஆண்டு காரைநகரில் பிறந்தவர். யாழ். வண்ணை  வைத்தீஸ்வரா கல்லூரியிலும் தென்மராட்சி உசன் இராமநாதன்  கல்லூரியிலும் அதிபராக பணியாற்றி ஓய்வுபெற்றவர்.

கலைச்செல்வி என்ற இலக்கிய இதழை  சிறிது காலம் நடத்தியவர்.    அதனால் அவரை  கலைச்செல்வி சிற்பி சரவணபவன் என்றும் அழைப்பார்கள். கலைச்செல்வி இதழில் செங்கை ஆழியான், செம்பியன் செல்வன், செ.யோகநாதன், மு.கனகராஜன்,    யாழ்நங்கை அன்னலட்சுமி இராஜதுரை  உட்பட பல  படைப்பாளிகளுக்கு களம் தந்து வளர்த்துவிட்டவர்.

அத்துடன் அதிபராக பணியாற்றிய காலகட்டத்தில் தம்மிடம் படித்த மாணவர்களின் கலை, இலக்கிய ஆற்றலை இனம்கண்டு ஊக்குவித்து, சிலரை எழுத்தாளராக்கியுமிருக்கிறார்.

ஈழத்து    இலக்கிய வளர்ச்சியில் கலைச்செல்வியின் பங்களிப்பு குறித்து  ஏற்கனவே  செங்கை ஆழியான் விரிவாக எழுதியிருக்கிறார். ஆனால், இன்று அவர் தமது மானசீக குருவாக மதித்த சிற்பியின் மறைவு  பற்றிப் பேசவும் எழுதவும் இயலாமல் யாழ்ப்பாணத்தில் ஓய்ந்திருக்கிறார்.

1970 களில் தமிழகத்திலிருந்து வெளியான நா. பார்த்தசாரதியின் தீபம் இதழின் கடைசிப்பக்கங்களில்  இலங்கைக்கடிதம் என்று ஒரு பகுதி மாதந்தோறும் பதிவாகும். அதனை  எழுதியிருப்பவர் யாழ்வாசி.

யார் இந்த யாழ்வாசி…? என்று வட மேல்மாகாணத்தில் வசித்த எனக்கு முதலில் தெரிந்திருக்கவில்லை. இலங்கையின் அனைத்துப்பாகங்களிலும்  நடைபெறும் இலக்கியப்புதினங்களை தவறவிடாமல் தீபம் இதழுக்கு அனுப்பியவர்தான் யாழ்வாசி என்ற புனைபெயரிலும் எழுதிய சிற்பி சிவசரவணபவன்.

இன்றுபோல்    தொடர்பு ஊடகங்களில்  நவீன சாதனங்கள் இல்லாத அக்காலப்பகுதியில் யாழ்வாசி அவர்களின் குறிப்பிட்ட  இலக்கிய கடிதத்தொடர்    பெறுமதியானது.

தமிழகத்தில் மூத்த படைப்பாளிகள் எழுத்து சி.சு. செல்லப்பா, வல்லிக்கண்ணன், விஜயபாஸ்கரன், தீபம் பார்த்தசாரதி, அகிலன் உட்பட  பலருக்கும் இலங்கை இலக்கியப்புதினங்களை தொடர்ச்சியாக  வழங்கியவர்தான் யாழ்வாசி சிற்பி சிவசரவணபவன்.

அந்தவகையில்  இவர் இலங்கைக்கும் தமிழகத்திற்கும் உறுதியான இலக்கியப்பாலம்  அமைத்தவர். இலக்கியத்தில் பல்துறையிலும் ஈடுபாடுகொண்டிருந்தவர்.

பொதுவாக  கலை, இலக்கியத்துறைகளில் ஈடுபடுபவர்களுக்கிருக்கும் அதிரும் தர்மாவேச இயல்புகள் இவரிடம் இல்லை என்பது இவரது தனித்துவம்.  அதற்கு அவருடைய சமூகப்பின்னணியும் காரணமாக இருக்கலாம். இலக்கிய உலகில் அமைதியாகவே  வாழ்ந்து அமைதியாகவே    விடைபெற்றுவிட்டார் சிற்பி.

எனினும் இந்தச் சிற்பியின் கைவண்ணம் கடல்கடந்து அவுஸ்திரேலியாவிலும்  ஒலித்தது.

ஆம்…. எமது அவுஸ்திரேலியா  தமிழ் இலக்கிய கலைச்சங்கம் கடந்த 2014  ஆம் ஆண்டில் தொடர்ச்சியாக மூன்று மாதங்களுக்கு ஒரு தடவை தமிழ் விக்கிபீடியா , சிறுகதை, நாவல், கவிதை முதலானவற்றின் தேவை, தேடல், வாசிப்பு அனுபவம் தொடர்பாக சந்திப்புகளை  நடத்தியது.

கவிதை தொடர்பான அனுபவப்பகிர்வை பாடும்மீன் சு. சிறிகந்தராசா தலைமையில் நடத்தியபொழுது சங்கத்தில் அங்கம் வகிக்கும் அவுஸ்திரேலியா தமிழ் ஒலிபரப்பு கூட்டுத்தாபன ஊடகவியலாளர் திருமதி சாந்தினி புவநேந்திரராஜா சிற்பியின் கவிதைகளையே தலைப்பாகக்கொண்டு    உரையாற்றினார்.

ஆனால், இந்தத்தகவலை   பின்னர் வெளியான செய்திகள் ஊடாக சிற்பி தெரிந்துகொண்டாரா…? என்பது எமக்குத் தெரியவில்லை.

சிற்பி சிவசரவணபவனுக்கு எமது அஞ்சலி.

—0—

 

 

 

Series Navigationஇஸ்லாம் ஒரு வன்முறை மதம் – இஸ்லாம் என்பது அமைதி மார்க்கமா இல்லையா?மூன்று நூல்களின் வெளியீட்டு விழா
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *