ஆதிகால மாந்தன் இயற்கையைக் கண்டுதான் முதலில் அச்சப்பட்டான். அதனால்தான் அதைத் தெய்வமாக வணங்கத் தலைப்பட்டான். இறைவன்தான் இயற்கையின் வடிவாய் இருக்கின்றான் என்று பல சமயச் சான்றோர்கள் கருதியதால்தான் “வானாகி, மண்ணாகி, வளியாகி ஒளியாகி” என்று பாடினர். நிலம், நீர், தீ, காற்று, மண் என்று எல்லாமே நமக்கு ஏதோ ஒரு வகையில் உதவி செய்துகொண்டுதான் இருக்கின்றன. ஆனால் நாம்தான் அவற்றை முழுக்கச் சுரண்டும் பணியை மெதுவாகச் செய்து கொண்டிருக்கிறோம்.
குறிப்பாகக் காடு நமக்கு இயற்கை அளித்த பெருங்கொடை. மழையால் வளர்ந்து மழையைக் கொடுக்கும் வள்ளல் அது. காட்டில் உள்ள எல்லாமே அந்தக் காட்டில் வாழும் உயிரினங்களுக்குத்தான் சொந்தம். ஆனால் நாம் அங்குள்ள மூலிகைகள், மரங்கள், அவற்றிலுள்ள காய் கனிகள் எல்லாம் நமக்குத்தான் எனும் எண்ணத்துடன் அளவுக்கு மீறி அவற்றை அவ்வப்போது எடுத்துக் கொண்டிருக்கிறோம். அத்துடன் காட்டு நிலங்களை விளை நிலங்களாகவும் ,கட்டடங்களாகவும் மாற்றிக்கொண்டிருக்கிறோம்.
பெரும் செல்வந்தர்கள் வறுமையில் வாடும் மக்களைக் காட்டுக்குள் அனுப்பி இயற்கைச் செல்வத்தைக் கொண்டுவரும்படி ஏவிவிட்டு அவற்றின் மூலம் கொள்ளைலாபம் அடிக்கின்றனர். அப்படிக் காட்டுக்குள் சென்றுவரும் பாவப்பட்ட ஜீவன்களின் கதைதான் “ஆரண்ய காண்டம்”.
காட்டுக்குள் செல்வது, அங்கு ’சாலெ’ எனும் குடில் அமைத்துத் தங்குவது, காட்டில் சமைத்துச் சாப்பிடுவது என்பன மட்டுமன்றி, ஈத்த இலையின் பிசின் நஞ்சு, காட்டில் இருக்கும் மலைவாழைப்பழத்தை விலங்குகள் மட்டுமே தின்னும், சீயக்காய்ப் பொடியைத் தேய்த்துக் கொண்டால் அட்டை கடிக்காது, யானைச் செந்தட்டி எனும் இலை மேலே பட்டால் புண்ணாகிவிடும், நாப்புலி எனும் விலங்கு குதறிவிடும், தேனடைகளில் பிள்ளையார் அடை, யானையானது உப்பை விரும்பித் தின்னும், செங்கோரை மரத்தில் உலக்கை செய்யலாம், வக்கணத்திப் பாம்பு எனும் மலைப் பாம்பு ஆளையே விழுங்கும் போன்ற நாம் அறியாத பல செய்திகளை எல்லாம் கதைகளின் ஊடே, ஒரு காட்டுவாசியைப்போல் தருகிறார் குறிஞ்சிச் செல்வர் கொ. மா. கோதண்டம். எப்படித்தான் இவற்றையெல்லாம் அறிந்தாரோ எனும் வியப்புதான் ஏற்படுகிறது.
ஆனால் காடு தம்மிடமிருந்து பொருள்களை எடுத்துச் செல்லும் அப்பாவி ஜனங்களைப் பழிவாங்குவதையும் சில கதைகள் காட்டுகின்றன. எய்தவன் எங்கோ இருக்க அம்புதானே பழி ஏற்கிறது. ‘ஆரண்ய காண்டம்” கதையில் காட்டை வேடிக்கை பார்க்க வந்த புது மாப்பிள்ளை யானை மிதித்துச் செத்துப் போவது பரிதாபமாக இருக்கிறது.
இதே போல “ஓ….அந்த உயர்ந்த மலைகளின் அடர்ந்த காடுகளுக்குள்ளே” எனும் சிறுகதையில் ஏஜெண்டுக்காக ஏலக்காய் பறித்துவர தன் மனைவியைக் கைக் குழந்தையுடன் அழைத்துக்கொண்டு போகிறான் ராக்கப்பன். குழந்தையை மரக்கிளையில் தொட்டில் கட்டிப்போட்டுவிட்டு ஏலக்காய் பறிக்கையில் வழிதவறி விடுகிறது. குழந்தை பறிபோன பதற்றத்தில் வழிதேடும்போது ராக்கப்பன் மனைவி தட்டுப்பலாச் செடியின்மேல் விழுந்துவிட அவள் உயிர் துறக்கிறாள். அவள் பிணத்தைத் தூக்கிக்கொண்டு போகும்போது குழந்தையைக்கண்டு பிடிக்கிறார்கள். வேலையில்லாத காலத்தில் வறுமையின்பொருட்டு காசுக்காக ஏலக்காய் பறிக்கச் சென்ற ராக்கப்பன் குடும்பம் பட்ட பாடு யதார்த்தமாக உள்ளது. அடிமேலடி விழுவதுதானே ஏழைகளுக்கு வாடிக்கை என்பது புரிகிறது.
”வேட்டை” எனும் கதையில் ஒரு பண்ணையார் தன் தவறுகளை மறைக்க கலெக்டருக்கு விருந்து வைக்க ஆசைப்படுகிறார். அதற்குக் கருமந்தி கறி வேண்டுமென்று இருவரை அழைத்துக் கொண்டு வேட்டைக்குச் செல்கிறார். மந்தியைச் சுடுவதாகப் பண்ணையார் கூட வந்த ஒருவனைத் தவறுதலாகச் சுட்டுவிடுகிறார். ஆனால் காவல் நிலையத்தில் கூட வந்த மற்றவன் சுட்டுவிட்டதாக அவன் மீது பழியைப் போட்டு விடுகிறார். இந்தக் காலத்தில் இது எல்லா மட்டத்திலும் நடைபெறுவதைப் பார்க்க முடிகிறது. பண்ணையார்களின் ஆதிக்கத்தைக்காட்டும் அதே வேளையில் ராயப்பன் போன்ற அடிமட்ட மக்களுக்கு விடியலே கிடையாதா என்று எண்ணத் தோன்றுகிறது.
கதைகளில் வரும் காட்டு வருணனைகள் அப்படியே கண்முன்னே கதை நடக்கும் இடத்தைக் கொண்டு வருகின்றன. “பஞ்சின் குவியல்களைப்போல் மேகக்குவியல்” ”சுத்த பங்களா ராகம் சண்பகத் தருவாக மாறியது” என்பன போன்ற உவமைகள் படிக்க சுவை தருகின்றன.
வன்பாறைக்குள் வற்றல் மரம் தளிர்ப்பதுபோல் ஒரு சண்டைக்காரியிடமும் தாய்மையை இருக்கிறது என்பதை “ஓ… இவளிடமும்” கதை காட்டுகிறது. இது போன்ற ஒரு சில வித்தியாசமான கதைகளும் கலந்த கலவையாகத் தொகுப்பு விளங்குகிறது.
முழுக்க முழுக்கக் காட்டைப் பற்றியும் காட்டுவாசிகளைப் பற்றியுமான சிறுகதைகளே தொகுப்பில் நிறைந்திருந்தால் இன்னும் விறுவிறுப்பாக இருந்திருக்கும். அது சரி; நூலில் நூலாசிரியரின் உரை இல்லையே?
ஆக மொத்தத்தில் சில புதிய செய்திகளையும், யதார்த்தமான சில மாந்தர்களையும் நமக்குக் காட்டிக் கொடுக்கும் நல்ல தொகுப்பு என்று துணிந்து கூறலாம்.
[ஆரண்ய காண்டம்—சிறுகதைகள்—குறிஞ்சிச் செல்வர் கொ.மா.கோதண்டம்—வெளியீடு : தாமரை பப்ளிகேஷன்ஸ் [பி] லிட்—அம்பத்தூர், சென்னை-600 098—பக் : 156—விலை : ரூ 130]
===============================================================================
- SAVE THE DISTRESSED AT UDAVUM KARANGAL
- மாமழையும் மாந்தர் பிழையும்!
- படித்தோம் சொல்கின்றோம் – குழந்தைப்போராளி நவீனம்
- பிரபஞ்சம் தொடர்ந்து விரிவதை நோக்கிய வானியல் விஞ்ஞானி எட்வின் ஹப்பிள்
- சென்னை மழையில் ஒரு நாள்
- அய்யனார் கதை
- நித்ய சைதன்யா – கவிதை
- தொடுவானம் 97. பிறந்த மண்
- காடு சொல்லும் கதைகள்
- காற்று வாங்கப் போகிறார்கள்
- சிற்பி வடித்த சங்க ஓவியங்கள்
- முதுமொழிக்காஞ்சி உணர்த்தும் வாழ்வியல் சிந்தனைகள்
- முனைவர் க. பஞ்சு வின் தலித் இலக்கிய பார்வையை முன்வைத்து
- பத்திரிகைல வரும்
- பத்திரம்
- விதிகள் செய்வது
- சென்னை- கடலூர் வெள்ளம் சில புகைப்படங்கள்