திரையுலகக் கலைஞர்களுக்கு . . .

author
1
0 minutes, 1 second Read
This entry is part 11 of 23 in the series 20 டிசம்பர் 2015

கவிஞர் இரா.மாரியப்பன்

தமிழ், ‘இயற்றமிழ், இசைத்தமிழ், நாடகத்தமிழ்’ என மூன்று பிரிவுகளை உடையது. இவற்றுள், நாடகத்தமிழ் மட்டுமே படித்தவர் படிக்காதவர் என்ற வேறுபாடின்றி அனைவராலும் விரும்பக்கூடியது; ரசிக்கக்கூடியது. அதனால்தான் விடுதலைப் போராட்டக் காலங்களில் விடுதலைப் போராட்டத் தியாகிகள் வள்ளி திருமணம், பாஞ்சாலி சபதம் போன்ற நாடகங்களின் மூலம் மக்களிடையே விடுதலை உணர்வை ஊட்டினர். இது அனைவரும் அறிந்ததே. இன்றும்கூட திரையுலகில் முகம்காட்டியவர்களே நாட்டை ஆள்கின்றனர். இதோடு மட்டுமா? நடிகை குஷ்புவுக்குக் கோவில் கட்ட முயற்சி எடுத்ததுவும், நடிகர்களது கட் – அவுட்களுக்குப் பாலால் அபிஷேகம் செய்வதுவும் இன்றைய அறிவியல் யுகத்தில் அதீதம் என்றாலும் யதார்த்தம்தானே! இவற்றையெல்லாம் ஆராய்ந்து பார்க்கும்போது, திரையுலகம் எவ்வளவு வலிமை வாய்ந்தது என்பது நான் சொல்லித்தெரியவேண்டியதில்லை.
திரைப்படங்களில் காண்கின்ற காட்சிகளும், கேட்கின்ற வசனங்களுமே மக்கள் மனதில் எளிதில் பதிகின்றன. உதாரணத்திற்கு அன்றைய காலத்தில் எம்.ஜி.ஆர். அவர்கள் நடிகைகளைச் செந்தூக்காகத் தூக்குவது போன்று நாமும் தூக்குவோம் என்று தனது மனைவியின் இடுப்பை ஒடித்தவர்கள் பலபேருண்டு. ஸ்டைல் மன்னர் ரஜினிகாந்த் போன்று ஸ்டைல் செய்கிறேன் என்று சிகரெட், பீடி குடிக்கப் பழகியவர்களும், வீட்டிலுள்ள பொருட்களைத் தூக்கிப்போட்டுப் பிடிக்கிறேன் என்று உடைத்தவர்களும் உண்டு. நடிகர் நடிகையர் அணிகின்ற உடைகள் போன்று ஆண்கள் சாயம்போன சாக்குகளையும் (ஜீன்ஸ்), பெண்கள், ஜன்னல், பெட்டி, முக்கால் முதுகு என்பனபோன்ற ஆடைகளை அணிகின்றார்கள். என்பது அனைவரும் அறிந்ததே.
பெரும்பாலும் அன்றைய காலத்திரைப்படங்களில் அந்தரங்கமான அநாகரிகமான காட்சிகளோ வசனங்களோ இடம்பெறுவதில்லை. அப்படியே இடம்பெற்றாலும் அது மறைமுகமாகக் காட்டப்படும், அப்படியே அமைந்தாலும் தணிக்கைத் துறையினர் நீக்கிவிடுவார்கள். ஆனால் இன்றைய காலங்களில் . . . முதலிரவு, கற்பழித்தல், போன்ற செய்திகள் வெளிப்படையாகவே பேசவும் காட்டவும் படுகின்றன. எந்தப்பருவத்தில் எதைத்தெரிந்து கொள்ளவேண்டுமோ அதைத் தெரிந்துகொள்வதுதான் பாதுகாப்பானது. அவ்வாறில்லாமல் அந்தரங்க விஷயங்களை அனைவருக்கும் அம்பலப்படுத்துவது எவ்வளவு ஆபத்தானது என்றபதை அறிதல் வேண்டும். மேலும் ” ஊதாக்கலரு ரிப்பன் ஒனக்கு யாரு அப்பன்?, ரோஜாக்கலரு பொம்மி உனக்கு யாரு மம்மி, ஹே நில்லடி அவளுக்கு நான் சபாஷ் போடணும், எவண்டி ஒன்ன பெத்தான் பெத்தான் என் கையில கெடைச்சா செத்தான் செத்தான், அவள அடிடா குத்துடா கொல்லுடா அவள” என்று பெண்களை இழிவுபடுத்தும் வார்த்தைகள் திரைப்படப்பாடல்களில் அதிகமாகவே அமைக்கப்படுகின்றன. இவைகளையெல்லாம் இவ்வளவு நாட்களாகப் பொறுமையோடு சகித்துக்கொண்டிருந்த பெண்கள் சமுதாயம் விழித்துக்கொண்டது கண்டு மன ஆறுதல் அடைகின்றேன்.

கோவைமாநகரில் ஆர்ப்பாட்டம் செய்த மாதர் அமைப்புகள் இந்த விஷயத்தில் இன்னும் வலுவாகச் செயல்பட வேண்டுமெனக்கேட்டுக் கொள்கிறேன். இதோடுமட்டும் நின்றுவிடாமல் பெற்றோர்களை இழிவுபடுத்தும் வசனங்களையும் காட்சிகளையும் தடைசெய்யப் போராடவேண்டும். காரணம், இன்றைக்கு இருக்கின்ற பிள்ளைகள் பெற்றோர்களை அளவிற்கு மீறி வார்த்தைக்கு வார்த்தை எதிர்த்துப் பேசுவதைப் பார்க்கிறோம், இவற்றையெல்லாம் கற்றுக்கொடுத்தது யார்? பெற்றோர்களே நீங்களா கற்றுக்கொடுத்தீர்கள்? நினைத்துப்பாருங்கள்! “எருமை மாட்டையெல்லாம் வீட்டிற்குள்ள யாரு கட்டிப்போட்டது?” என்ற வசனமும், எத்தன் என்னும் திரைப்படத்தில் பெற்றோர் மனத்தை எந்த அளவிற்கு நோகச்செய்யமுடியுமோ அந்த அளவிற்கு நோகச்செய்யும் வசனமும் காட்சிகளும் நகைச்சுவை என்ற பெயரில் நச்சுவிதைகளை சமுதாயத்தில் விதைப்பது எவ்வளவு ஆபத்தானது என்பதை உணர்ந்து செயல்படவேண்டும்.
மேலும், இன்றைய காலங்களில் எங்குபார்த்தாலும் கொலை, கொள்ளை, பாலியல் வன்மங்கள் தாராளமாக அரங்கேறுகின்றன. சிறியவர், பெரியவர் என்ற பாகுபாடின்றி மது குடிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டே போகிறது. இதற்குக்காரணம், சின்னத்திரை பெரியதிரை என்று எந்தத்திரையாக இருந்தாலும் அவற்றில் மேற்கூறிய செயல்கள் அதிகமாகக் காட்டப்படுவதே எனக்கூறலாம். குறிப்பாக, திரைப்படங்களில் ஏதேனும் மனக்கவலை என்றால் உடனே மது அருந்துவது போன்ற காட்சிகள் காட்டுகின்றனர். இக்காட்சியைக் காணும் பலரும் மனக்கவலைக்குத் தீர்வு மதுதான் என்று கருதும் நிலை உருவாகிறது. குறிப்பாக இளைஞர்கள் உறுதியாக நம்புகிறார்கள். மேலும், ஏதாவது பார்ட்டி என்றால் மது இடம்பெறுகிறது. இவ்வாறான காட்சிகளைத் திரும்பத் திரும்பக் காட்டும்போது மது அருந்தும் பழக்கம் மீண்டும் மீண்டும் தூண்டப்படுகிறது. மது அருந்துபவர்களால்தான் சாலை விபத்துக்கள் அதிகம் ஏற்படுகின்றன என்பது புள்ளிவிவரங்கள் சொல்லும் உண்மை. உதாரணத்திற்கு நடிகர் சல்மான்கான் ஏற்படுத்திய விபத்தைக் குறிப்பிடலாம்.

மேலும், தீபாவளி நாளன்று சிறப்புப்பட்டிமண்டபம் ஒன்று ஒளிபரப்பப்பட்டது. அதில், நடிகரும் இயக்குநருமான திரு. கே.பாக்கியராஜ் அவர்கள் தலைமை வகித்தார்கள். திரைப்பட இயக்குநர்கள் கலந்துகொண்டு பேசினார்கள். பட்டிமண்டபத்தின் தலைப்பு, சினிமா ரசிகர்களுக்காகவா? ரசிகர்கள் சினிமாக்காரங்களுக்காகவா? என்பது. அதில் பேசிய இயக்குநர் திரு பத்ரி அவர்கள், சிகரெட் பிடிப்பதை ஸ்டைலுக்காக செய்தேன் அதைப்பார்த்துத்தான் எனது ரசிகர்கள் அனேகம்பேர் அந்தப்பழக்கத்திற்கு அடிமையாகிவிட்டனர், அதற்காக இப்போது நான் பெரிதும் வருந்துகிறேன், அதனால் தினமும் குறைந்தது ஒரு மூன்றுபேர்களுக்காவது போனில் சிகரட் பிடிக்கக்கூடாது என்று அறிவுறுத்தி வருகிறேன் என்று மரியாதைக்குரிய திரு ரஜினிகாந்த் அவர்கள் குறிப்பிட்டதாகக் கூறினார்கள்.
இன்றைய நாளில் பழிவாங்கும் உணர்வைத்தூண்டும் விதத்தில் காட்சிகளும் வசனங்களும் அதிகமாகக் காட்டப்படுகின்றன. அவ்வாறு பழிவாங்குவது தவறு என்பதைச் சுட்டிக்காட்ட மறந்துவிடுகின்றனர். மேலும், அக்காட்சிகளை வண்ணப்படங்களில் மிகத்தெளிவாகவும், நெருக்கமாகவும் காட்டுகின்றனர். திரும்பத்திரும்ப அக்காட்சிகளைக் காண்பவர்கள் அதேபோல் நாமும் செய்தால் என்ன என்று தூண்டும் விதத்தில்தான் அவை அமைகின்றன. இவற்றால் பலரது உள்ளத்திலும் கொடூரமான வக்கிர உணர்ச்சிகளே தூண்டப்படுகின்றன.
ஒருநாட்டை அழிக்கவேண்டுமென்றால் அணுகுண்டு போன்ற ஆயுதங்கள் தேவையில்லை, அந்த நாட்டிலுள்ள மொழியையும், மதத்தையும் சிதைத்தாலே போதும் என்பார்கள். இந்த உத்தியைத்தான் ஆங்கிலேயன் நம்மிடம் மேற்கொண்டு நம்மை அடிமைப்படுத்தினான். இப்படி அனுபவப்பட்டும் நாம் திருந்தியபாடில்லை. திரைப்படங்களில் வரிவிலக்கிற்காகத் தமிழில் பெயர்களை வைத்துவிட்டு, வசனங்களிலும், பாடல்களிலும் முழுக்க முழுக்க ஆங்கில வார்த்தைகளைப் பயன்படுத்தியும் தமிழைச்சிதைத்து அழித்துவருகின்றீர்களே இது எந்தவித்தில் நியாயம்? மொழியை மட்டுமா, மதத்தையும் குறிப்பாக இந்துமதத்தை இழிவுபடுத்துகிறீர்கிறீர்களே! இது சரியா?
எனவே தயவுகூர்ந்து திரையுலகக் கலைஞர்களே, தீபாவளிப் பட்டிமண்டபத்தில் இயக்குநர் திரு சீமான் அவர்கள் குறிப்பிட்டதுபோன்று, வணிக நோக்கத்திற்காக மட்டும் திரைப்படங்களை எடுக்காமல் மனித வாழ்க்கையை மேம்படுத்தும் விதத்திலும் திரைப்படங்கள் அமைய வேண்டுமென அன்போடு மீண்டும் ஒருமுறை வேண்டிக்கொள்கின்றேன்.


இராஜபாளையம்.
கைபேசி : 92441 52982

Series Navigationகைப்பைக்குள் கமண்டலம்தினம் என் பயணங்கள் – 47 யுக்தி
author

Similar Posts

Comments

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *