வாழையடி வாழை!

author
0 minutes, 1 second Read
This entry is part 5 of 23 in the series 20 டிசம்பர் 2015

பிரேமா மகாலிங்கம் (சிங்கப்பூர்)

சிங்கையில் மிகவும் பிரபலமான ‘கண்டாங் கெர்பௌ’ மகப்பேறு மருத்துவமனை சுறுசுறுப்பாக இயங்கிக்கொண்டிருந்தது. நிறைமாத கர்ப்பிணிகள் முதல் கருத்தரித்து சிலவாரங்களே ஆன தாய்மார்களும், குழந்தை வரம் வேண்டி நம்பிக்கையோடு வந்திருக்கும் பெண்களும் அங்கே வண்ணப்பூக்களாய் அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்குச் சிறந்த சேவை வழங்கவேண்டும் என்ற பொறுப்புணர்ச்சியோடு தாதியர்கள் பட்டாம்பூச்சிகளாய் வலம் வந்துகொண்டிருந்தார்கள்.

டாக்டர் சத்தியநாராயணன் என்ற பெயர்ப் பலகை தொங்கிக்கொண்டிருந்த அறைக்குள் ரம்யாவும் அவளது அம்மா கௌரியும் பரீட்சை முடிவுக்கு காத்திருக்கும் மாணவிகள்போல் பதட்டத்தோடு காணப்பட்டனர். மூக்குக் கண்ணாடிக்குள் ஒளிந்திருந்த டாக்டர் சத்தியநாராயணன் இரத்தப் பரிசோதனை முடிவுகள் அச்சடித்த அறிக்கையைக் கவனமாக மீண்டும் ஒரு முறை பார்வையிட்டார்.

“வாழ்த்துக்கள்! இட்ஸ் பாசிட்டிவ்” புருவத்தை உயர்த்தி தெத்துப்பல் தெரிய வெற்றிச் சிரிப்போடு அவர்களைப் பார்த்த்தார் டாக்டர் சத்தியநாராயணன்.

“வாவ்” வாய் திறந்ததே தவிர வார்த்தைகள் வெளிவரவில்லை தாய், மகள் இருவருக்கும்.

“ரம்யா உன் கனவு நனவாகப்போகுது” ஈரமான கண்களுடன் கௌரி மகளை ஆரத் தழுவினாள். அம்மாவின் அரவணைப்பில் நெகிழ்ந்துப் போனாள் ரம்யா.

“டாக்டர், உங்களுக்கு எப்படி நன்றி சொல்வதென்றே தெரியவில்லை”

“நோநோ, நான் என் கடமையைத்தான் செய்தேன் மிசஸ் ரம்யா. உங்கள் கணவரிடம் என் வாழ்த்துக்களைக் கூறுங்கள்”

“அவர் வேலை நிமித்தம் இந்தோனீசியா சென்றிக்கிறார்.
இந்தச் செய்தி அவருக்கு நிச்சயம் மகிழ்ச்சியைத் தரும். கடமையைத் தவிர்த்து, இந்தக் கேசில் நீங்க சிரத்தை எடுத்து எங்கள் குடும்ப வாரிசை உருவாக்கிக் கொடுத்திருக்கிறீர்கள். இதை நாங்கள் மறக்கவேமாட்டோம்” ரம்யாவின் நெகிழ்ச்சியான சொற்கள் டாக்டர் சத்யநாராயணனின் மனதையும் இளகவைத்தது. அம்மாவும் மகளும் வெளியாகும் வரை அவர்களையே வைத்தக் கண் வாங்காமல் பார்த்துக்கொண்டிருந்தார்.

மருத்துவமனை மருந்தகத்தில் மருத்துவர் எழுதிக்கொடுத்த மருந்துகளுக்காக காத்திருக்கும் நேரத்தில் குமாருடன் தொடர்புகொண்டாள்.

“குமார், ரிசல்ட் இஸ் போசிடீவ். டாக்டர் இப்போதான் உறுதிப் படுத்தினார்” வாயெல்லாம் பல்லாக ரம்யா குமாரிடம் பேசுவதை பக்கத்து இருக்கையில் அமர்ந்து ரசித்துக்கொண்டிருந்தாள் கௌரி.

“காட்! உண்மையாகவா ரம்யா, அம்மா என்ன சொன்னார்?” இந்த நேரத்தில் தான் அங்கே இல்லாத வருத்தத்தை மறைத்து குமார் கேட்டான்.

“உண்மைதான், அம்மா இங்கேதான் இருக்கார், போனை அவங்ககிட்டே கொடுக்கிறேன்” அம்மா எதுவும் கூறுமுன்னே டக்கென்று கைபேசியைக் கொடுத்தாள் ரம்யா.

“சொல்லுங்க மாப்பிள்ள” அம்மா பூரிப்போடு பேசிகொண்டேப்போனார்,

ஒரு குழந்தைக்காக ஏங்கிய நாட்கள் நினைவுத்திரையில் வழுக்கிக் கொண்டு வந்தது ரம்யாவுக்கு. மாதவிலக்கு தள்ளிப் போகும்போதெல்லாம் கர்ப்பம் தங்கியிருக்குமா என்ற சந்தேகத்தோடு, வாந்தி, தலைசுற்றல் ஏதேனும் அறிகுறிகள் தெரிகிறதா என்று வராத வாந்தியையெல்லாம் வருவது போல கற்பனை பண்ணுவாள்.

ஆவலோடு மருந்தகத்திலிருந்து ‘செல்ப் பிரேக்னன்சி டெஸ்ட் கிட்’ வாங்கி சுய பரிசோதனை செய்துகொள்வாள். கடற்கரையில் கட்டிய மணல் வீடுகளை அழித்துவிட்டுப் போகும் அலைகள் போல வழக்கமான ஒற்றைக் கோடு குறியீடு ‘நெகடிவ்’ என்றே காண்பித்து, அவளது கனவுகளை சுக்குநூறாக்கியது. பாழாய்ப்போன கர்ப்பம் தங்காமல் ரம்யாவைப் பரிதவிக்க வைத்தது.

தாமதித்து வந்த மாதவிலக்கு அவளது தாய்மை அடையும் பாக்கியத்தையும் தூரத்தள்ளியது. எல்லாவித பரிசோதனைக்கும் தன்னையும் தன் கணவன் குமாரையும் உட்படுத்தி பணம் விரையமானதுதான் மிச்சம்.

“மிஸ்டர் அண்ட் மிசஸ் குமார், உங்கள் இருவருக்கும் எந்தப் பிரச்சனையும் இல்லை. சிலருக்கு சீக்கிரம் கரு தரிக்கலாம், சிலருக்கு நாள் ஆகலாம். நீங்கள் மனவுளைச்சல் இல்லாமல் ஜாலியாக இருங்கள், தானாக கருத் தரிக்கும்” என்ற மருத்துவர்களின் நம்பிக்கைகள் பொய்த்துப்போனது.

‘குழந்தை பாக்கியம் இல்லையே’ என்று கணவனின் நெஞ்சிலும், தன் கருவறை காலியாகக் கிடக்கிறதே’ என்று அம்மாவின் மடியிலும் புலம்பித் தீர்த்தாள்.

அவளது கண்ணீருக்கு அணை போட்டதுபோல ஒருநாள் ரம்யா கருவுற்றாள். வழக்கத்துக்குமாறாக அன்றைய சுய பரிசோதனையில் இரண்டு கோடு காண்பித்து அவளை மகிழ்ச்சிக்கடலில் ஆழ்த்தியது. மறுநாளே குமாரையும் அழைத்துக்கொண்டு மருத்துவரைச் சென்று பார்த்தாள்.

‘கர்ப்பம் கன்பார்ம்’ என்றதும் இருவரும் ஆனந்தக் கடலில் மிதக்கலாயினர். இந்த மகிழ்ச்சியான செய்தியைக் கொண்டாடுவதற்கு குமார், ரம்யாவை சிங்கப்பூர் ‘ஃப்ளை ஓவருக்கு’ அழைத்துச் சென்றான். இரவு உணவு, பூங்கொத்து அவளுக்குப் பிடித்த உயர்தர ‘சாக்லேட்ஸ்’ மற்றும் பரிசுப்பொருட்கள் எனக் கொடுத்து அவளைக் கொண்டாடினான்.

சொல்லடி பட்டாலும் கண்ணடி படக்கூடாது என்பார்கள். இவர்கள் மகிழ்ச்சியில் யார் கண் பட்டதோ ‘இது ‘எட்டோப்பிக் பிரக்னன்சி’, கரு கர்ப்பப்பைக்கும் வெளியே இருக்கிறது. உடனடியாக கருவை அகற்றவேண்டும் என்று மருத்துவர் கூறிவிட்டார்.

உடைந்துபோன ரம்யாவை அவளது அம்மா கௌரி தேற்றுவதற்கு மிகவும் சிரமப்பட்டாள்.

“எனக்கு மட்டும் ஏம்மா இப்படி நடக்குது”

“கொஞ்சம் பொறுமையா இரு ரம்யா, நாம கும்பிடற கடவுள் கை விடமாட்டார்”

“கைக்கு எட்டியது வாய்க்கு எட்டலியேம்மா, எல்லாரும் என்னை ஏளனமா பாக்கற மாதிரி இருக்கும்மா” ரம்யாவுக்கு அழுகை வெடித்துக்கொண்டு வந்தது.

“நீயே வீணா கற்பனை பண்ணாதே ரம்யா, பேசாம நீயும் குமாரும் ‘ஹொலிடே’ போயிட்டு வாங்க, உங்க ரெண்டுபேருக்கும் ஆறுதலா இருக்கும்” என்று கூறியது மட்டுமல்லாமல் இருவருக்கும் கேரளாவுக்குச் சென்று வர பயணச் சீட்டு எடுத்து கேரளாவைச் சுற்றிப்பார்க்க ஏற்பாடு செய்து அனுப்பிவைத்தாள்.

சுற்றுப்பயணம் முடித்து வந்ததும் ரம்யா இயல்பான நிலைக்குத் திரும்பியிருந்தாள். வேலைக்குப் போவதும் வருவதும் அம்மாவுடன் கோவிலுக்குப் போவதுமாக பொழுதைக் கழித்தாள்.

அவள் சும்மா இருந்தாலும் அவளைச் சுற்றி இருப்பவர்கள் அவளைச் சும்மா இருக்கவிடவில்லை. எம்.பி.பி.எஸ். படிக்காதவர்களெல்லாம் வைத்தியம் சொல்ல ஆரம்பித்தார்கள். இதைச் செய், அதைச் செய், இப்படிச் செய், அப்படிச் செய் என்று குழந்தை பாக்கியத்துக்காக நண்பர்கள் சொன்ன எல்லாவற்றையும் செய்தாள். ஒரு பலனும் இல்லை.

குமார் ஆரம்பத்தில் அவளது இழுப்புக்கெல்லாம் வளைந்துக் கொடுத்தாலும், நாள் ஆக ஆக அவளது செய்கைகள் அவனுக்கு அத்துமீறுவதாகத் தெரிந்தன. மிகுந்த மனவுளைச்சலுக்கு ஆளானான்

“அடச்சீ, ஒரு குழந்தைக்காக எவ்வளவு அவமானங்கள், பேசாம ஒரு பிள்ளையைத் தத்து எடுத்துக்கோ, என்னை விட்டுரு” முடிவாகக் கூறிவிட்டான் குமார். அவளைத் தவிர்ப்பதற்காக பணியிடத்தில் வழங்கிய புதிய இந்தோனீசியா ‘ப்ரோஜெக்ட்டை’ ஏற்றுக்கொண்டான். அதனால், அவன் அடிக்கடி இந்தோனீசியா சென்று வர வேண்டியிருந்தது. சிலநேரங்களில் மாதக்கணக்கில் அங்கேயே தங்கிவிடுவதும் உண்டு.

“ரம்யா, ஆஸ்பித்திரி போய் விட்டு வந்ததலிருந்து ஏன் ஒரு மாதிரியா இருக்கே?” அம்மாவின் கேள்வி ரம்யாவை நினைவுப் புத்தகத்தை மூடச் செய்தது.

“அம்மா, கடவுள் கருணையானவர்தான்னு நிரூபிச்சுட்டார். பதினைஞ்சு வருஷத்திற்குப் பிறகு, இப்போதான் அவர் மவுனம் கலைத்திருக்கிறார்”

“ஒரு குழந்தைக்காக நீ பட்டபாடு எனக்குத்தானே தெரியும், பழசையெல்லாம் மறந்துடு. அடுத்து, ஆரோக்கியமான சாப்பாடு, மருந்து மாத்திரைகளை ஒழுங்கா சாப்பிடணும் . மத்தபடி வீட்டைச் சுத்தப்படுத்தி குழந்தைக்கான அறையை தயார் பண்ணணும், இதுலதான் நாம கவனம் செலுத்தணும், என்ன சரியா?”

“மம்மி சொன்னா சரியாத்தான் இருக்கும், ‘லவ் யூ’ அம்மா” ரம்யா அம்மாவை இறுக்கமாக கட்டிப்பிடித்து அம்மாவின் கன்னத்தில் மூக்கை உரசி தோளில் சாய்ந்துக்கொண்டாள்.

அப்பா இறந்தபோதுகூட அம்மா தைரியமாக இருந்து ரம்யாவை வளர்த்தாள். ஆனால் ரம்யா ஒரு குழந்தைக்காக அவளையும் அவள் உடலையும் வருத்திக் கொண்டப்போது, தரைமட்டமான கட்டிடம் போல நொறுங்கிப்போனாள். குமாருக்கும் ரம்யாவுக்கும் இடையிலான நெருக்கம் குறைந்து வருவதை உனர்ந்ததும், அதனால் குமார் வேலையைக் காரணம் காட்டி அடிக்கடி வெளியூர் போவதையும் அறிந்து ரம்யாவுக்கு துணையாக அம்மாவும் ரம்யா வீட்டுக்கே குடிவந்துவிட்டாள். அன்றிலிருந்து அம்மா நிழல் தரும் மரமாக ரம்யாவுக்குத் துணையாக இருக்கிறாள்.

“ரம்யா, நன்றாகச் சிந்தித்துத்தான் இந்த முடிவு எடுத்தீர்களா” ரம்யாவின் ராஜினாமா கடிதத்தைப் பிரிக்காமலே கேட்டார் அவளது மேலதிகாரி.

“எஸ் சார், எனக்கு வேறு வழியில்லை”

“அடுத்தமாதம் வெளிவரவிருக்கும் பதவி உயர்வு பெயர் பட்டியலில், உங்க பெயரும் பரிந்துரைக்கப் பட்டிருக்குன்னு தெரியும்தானே? உங்களின் இந்த திடீர் முடிவுக்கு என்ன காரணம்?”

“தெரியும் சார், இருந்தாலும் என் முடிவில் மாற்றமிருக்காது, காரணத்தைப் பகிர்ந்துக்கொள்ள விருப்பமில்லை, ‘பர்சனல் மேட்டர் சார்’, என்னை மன்னிச்சுடுங்க” குழந்தை பற்றிய செய்தியை ரகசியமாக வைத்திருக்க விரும்பினாள் ரம்யா. அவளின் முடிவில் தீர்க்கமாக இருந்ததால் வேறு வழியில்லாமல் அவளது ராஜினாமா ஏற்றுக்கொள்ளப்பட்டது.

“அம்மா..!” கூவிக்கொண்டு வந்த ரம்யாவின் குரல் உற்சாகத்தின் உச்சியில் இருந்தது.

கௌரி, அவள் வேலையை ராஜினாமா செய்ததைக் கேள்விப்பட்டதும் முதலில் பயந்தாள். ஆனால், குமாரின் அனுமதியோடு எடுத்த முடிவு என்பதை அறிந்ததும் ஆறுதல் அடைந்தாள்.

“வாங்கம்மா, என்.டி.யு.சி. க்குப் போய் சமையலுக்கு வேண்டிய பொருட்களை வாங்கி வரலாம்” பையைத் தூக்கிக் கொண்டு இருவரும் கிளம்பினார்கள்.

“அம்மா! இங்கே பாருங்க, கைக்குழந்தையோட குட்டி சட்டை, எவ்வளவு கியூட்டா இருக்கு. அட! இதப் பாருங்க, எவ்வளவு குட்டி சோக்ஸ், அம்மம்மா வாங்குவோமா?” குழந்தையாகவே மாறிவிட்டிருந்த ரம்யாவைப் பார்க்க கௌரிக்குச் சிரிப்பு வந்தது.

“பாரு ரம்யா, ‘பேபி’ பிறக்குறதுக்கு முன்னாடி எந்தப் பொருளும் வாங்கக் கூடாதுன்னு பெரியவங்க சொல்லுவாங்கம்மா. குழந்தை பிறக்கட்டும், அப்புறம் வாங்குவோம்” ரம்யா அப்போதைக்குத் தன் ஆசைக்கு, அணைபோடுவதைத் தவிர வேறு வழியில்லை என்பதை நன்கறிவாள். மனமில்லாமல் அங்கிருந்து புறப்பட்டு அங்காடிக் கடையை வந்தடைந்தனர்.

“அம்மா, இந்தப் பால் கர்ப்பிணி பெண்களுக்கு நல்லது என்று என் தோழி கூறியிருக்கிறாள், இரண்டு பேக்கட் வாங்கட்டுமா?”

“ரம்யா, விலையைப் பார்த்தியா? இது வெறும் விளம்பரத்துக்காக சொல்லறது, அந்தக் காலத்துல ஏது இந்த மாதிரியான ‘ஸ்பெஷல்’ பால்? சாதாரண பால் குடிச்சுத்தான் நீ பிறந்தே, மறந்திடாத..”

“எல்லாத்துக்கும் ஒரு காரணம் சொல்லுங்க, சரி இதைப்பாருங்க, ‘ஸ்ட்ரெச் மார்க் கிரீம்’, வயிற்றுக்குத் தேய்ப்பது, அப்போதான் ‘பேபி’ பிறந்து வயிறு சுருங்கும்போது ரொம்ப கோடுகள் தெரியாது” அம்மா சொல்லச் சொல்ல கேட்காமல் கர்ப்பவதிகளுக்குத் தேவையானப் பொருட்களை ஒரு கூடையில் அடுக்கி பணம் செலுத்தப் போனாள்.

“நீங்கள் இருவரும் சிஸ்டர்ஸா” ‘கேஷியர் பில்’ கொடுக்கும்போது கேட்டதை நினைத்து வீட்டுக்கு வந்தும் இருவரும் விழுந்து விழுந்து சிரித்தனர்.

“உங்களை என்னோட தங்கச்சியான்னு கேட்டது கொஞ்சம் ஓவரா இருந்தது” என்று வாய்விட்டுச் சிரித்தாள் ரம்யா. வெகு நாட்களுக்குப் பிறகு அவள் இப்படிச் சிரிப்பதைப் பார்த்து ஆனந்தப்பட்டாள் கௌரி.

அம்மாவின் ஒற்றைப் புன்னகை பதிலை மிகவும் ரசித்தாள் ரம்யா. அம்மாவின் பளபளப்பு குறையாத கன்னங்களும், அகல விரிந்த கூர் கண்களும், காதோரம் சுருண்டு விழும் சுருள் கேசமும் அம்மாவை இன்னும் அழகாகக் காண்பித்தது. தன்னைவிட அம்மா அழகாகவும் இளமையாகவும் இருப்பதை, அப்பொழுதுதான் கவனித்தாள் ரம்யா. ‘கேஷியர்’ சொன்னது உண்மைதான் என்பதை அப்பொழுது உணர்ந்தாள்.

அம்மாவுக்கு இருபத்து இரண்டு வயதிலேயே திருமணம் முடிந்து மறுவருடம் ரம்யா பிறந்தாள். ரம்யாவுக்கு எட்டு வயதாயிருக்கும் போதே கார் விபத்தில் அப்பா தவறிவிட்டார். அப்பா உயிரோடிருந்தால் தனக்குத் தம்பியோ தங்கையோ இருந்திருப்பார்கள் என்று அவள் ஏங்கியதுண்டு.

“அம்மா இப்ப நீங்க பூசினாப்பல இருக்கீங்க, என் கண்ணே பட்டு விடும் போல இருக்கு, இருங்க உங்களுக்கு திருஷ்டி சுத்திப் போடுறேன்” ரம்யா உடனே சமையலறைக்குப் போனாள். போனவேகத்தில் ஒரு கைப்பிடி உப்பை எடுத்து, “பாம்புக் கண்ணு, பல்லிக் கண்ணு, ஊருக் கண்ணு, கேஷியர் கண்ணு, எங்கண்ணு எல்லா கண்ணும் போக” என்று அம்மாவுக்குத் திருஷ்டி கழித்தாள்.

ரம்யாவின் குறும்பை ரசித்துவிட்டு சமைக்கப் போவதாகக் கூறிக்கொண்டே சமையலறைக்குள் செல்லும் அம்மாவை இமைகொட்டாமல் பார்த்துகொண்டிருந்தாள் ரம்யா. அப்போது, அவளுக்குக் குமாரின் ஞாபகம் வந்தது. குமாருக்கு தன்னால் எவ்வளவு தொல்லை என்று நினைத்து வேதனைப் பட்டாள். கண்ணில் திரண்ட நீர்த் துளிகள் தரையைத் தொடும்முன், கைப்பேசியை எடுத்து குமாரின் எண்களை சுழற்றினாள்.

மறுமுனையில் குமாரின் குரல் அவரசமாக ஒலித்தது.

“சாரி குமார், ‘பிஸியா’ இருக்கற நேரத்திலே கூப்பிட்டுடேனா?”

“அவசரமா ஒரு ‘மீட்டிங்’ போய்கிட்டு இருக்குறேன், என்ன விஷயம்? சீக்கிரம் சொல்லு, அங்கே எல்லாம் ‘ஓகே’ தானே?”

“இங்கே ஒரு பிரச்சனையும் இல்லே, உங்கள ரொம்ப ‘மிஸ்‘ பண்ணுறேன். அதைச் சொல்லத்தான் கூப்பிட்டேன்”

மறுமுனையில் மௌனம்.

“ஐ லவ் யு குமார், ரொம்ப உங்க மனச நோகடிச்சுட்டேன், வெரி சாரி குமார்” ரம்யா விசும்புவது குமாரின் இதயத்தையும் பிசைந்தது.

“ஏய் லூசு மாதிரி பேசாத, ‘ஐ டூ லவ் யுடா’, இந்த மாதிரி நேரத்திலதான் நீ தைரியமா இருக்குனும், அம்மா எங்கே?

“உள்ளே ‘கிச்சன்ல’ இருக்காங்க, டுயூ டேட் (Due Date) செப்டம்பர் ஏழுன்னு சொல்லியிருக்கிறார் டாக்டர், ஆகஸ்ட் கடைசிக்குள்ள வந்துருங்க, ‘பேபி’ பிறக்கும்போது நீங்களும் என் பக்கத்தில இருக்கணும்னு ஆசைப்படுறேன்”

“ஒரு மாசத்துக்கு முன்னாடியே லீவு போட்டுட்டேன். ஆகஸ்ட் பதினைஞ்சுல நான் சிங்கப்பூர்ல இருப்பேன் ரம்யா. இப்போ அவசரமா போகணும், ராத்திரி கூப்பிடுறேன்” குமார் தொடர்பை துண்டித்தும் ரம்யா கைப்பேசியை காதிலேயே வைத்திருந்தாள். பெருமூச்சு ஒன்றே அப்போது அவளுக்குத் துணையாக இருந்தது..

உருளும் காலத்தோடு கருவும் குழந்தையாக உருமாறி வளர்ந்துக்கொண்டிருந்தது. நாள் நெருங்க நெருங்க ரம்யாவுக்கும் கௌரிக்கும் சிறிது பதட்டமாக இருந்தது. ஆனால், டாக்டர் ஸ்கேன் படங்களைக் காண்பித்து “உங்க ‘பேபி’யோட கன்னம் பெரிசா புசுபுசுன்னு இருக்குன்னு” என்று கூறி, கருமை படர்ந்த வெண்புகையைக் காட்டியபோது அவர்கள் பூரித்துப் போனார்கள்.

“முப்பத்தைந்து வாரம் முடியப்போகிறது, இனிமேல் வாரம் ஒரு முறை பரிசோதனைக்கு வாருங்கள், ‘பேபி’யோட தலை இன்னும் கீழ் நோக்கி இறங்கல, இப்படியே இருந்தா ‘சிசேரியன் ஆபரேஷன்’ செய்யும்படி இருக்கலாம், அடுத்த வாரங்களில் ‘பொஸிஷன்’ மாறுதான்னுப் பார்ப்போம். மற்றப்படி எல்லாம் ‘நார்மலா’ இருக்கு, வாழ்த்துக்கள்” டாக்டர் தெத்துப்பல் தெரிய சிரித்தபோது சாட்சாத் பெருமான் சத்தியநாராயணன் மூர்த்தியே ஆசீர்வதிப்பதுபோல இருந்தது இருவருக்கும்.

குமார் வரும்வரை காத்திருக்க முடியாது என்று பிடிவாதமாக குழந்தை படுப்பதற்காக தொட்டில், பால்’புட்டி’, ‘பவுடர்’, குளிக்கும் ‘சோப்’, தலைக்கு ‘ஷாம்பூ’ என்று கண்ணுக்குத் தெரிந்த பொருட்களை எல்லாம் வாங்கி குழைந்தைக்கான அறையைத் தயார் செய்துவிட்டாள். மேலும் ‘கார்ட்டூன்’ படங்களை சேகரித்து அவைகளை வெட்டி அறை முழுதும் ஒட்டி அழகு பார்த்தாள் ரம்யா.

“ரம்யா அலங்கரித்தது போதும், வந்து ஒரு வாய் சாப்பிடு” என்று அறைக்குள் வந்து ரம்யாவின் பின்னால் நின்று மகளின் கைத்திறமையை இரசித்துக்கொண்டிருந்தாள் கௌரி.

“அம்மா சட்டையெல்லாம் தண்ணீர், தரையெல்லாம் தண்ணீர், எப்படி வந்தது” திடுக்கிட்டு வினவினாள் ரம்யா.

கௌரியும் தரையெல்லாம் வழிந்துக்கிடக்கும் நீரைப்பார்த்து பயந்துவிட்டாள்.

“எனக்கும் தெரியல ரம்யா, ஒருவேளை பனிக்குடம் ஒடைஞ்சிருக்குமோ, வா நாம உடனே ‘ஆஸ்பித்திரி’க்குப் போவோம்” பதற்றத்தோடு இருவரும் கே. கே. மருத்துவமனைக்கு விரைந்தனர்.

“அம்மா பயமா இருக்கும்மா..” ரம்யா கலவரமாகக் காணப்பட்டாள்.

“பயப்படாதே ரம்யா, பனிக்குடம் ஒடைவது இப்போ சகஜமான நிகழ்வுதான், உடனே மருத்துவமனைக்குப் போய்ட்டா பிரச்சனை வராம தடுக்கலாம் ” கௌரி உள்ளுக்குள்ளே சிறிது பயந்திருந்தாலும் ரம்யாவிடம் காட்டிக்கொள்ள விரும்பவில்லை.

“நான்தான் உங்க பேச்சைக் கேட்காம பேபிக்கு எல்லாத்தையும் முன்னேற்பாடாய் வாங்கிட்டேன், நான் பாவி” வழியெல்லாம் புலம்பிக்கொண்டே வந்தாள் ரம்யா.

மருத்துவமனையில் கருப்பைக் கழுத்து விரிவடைந்திருப்பதாகவும் குழந்தையின் தலை மேல் நோக்கி இருப்பதகாவும் கூறி உடனே சிசேரியன் ஆபரேஷனுக்குத் தயாராகும்படியும் கூறிச் சென்றார் டாக்டர் சத்தியநாராயணன்.

“டாக்டர், இப்ப நீங்கதான் எனக்குக் கடவுள்” கையெடுத்துக் கும்பிட்ட ரம்யாவுக்குத் தைரியம் கூறி தன் பணியைச் செய்யக் கிளம்பினார் டாக்டர் சத்தியநாராயணன்.

அம்மா அமைதியாக இருப்பதைப் பார்க்க ரம்யாவுக்கு சிறிது கவலையாக இருந்தது. அம்மாவின் கையை இறுக்கமாகப் பிடித்துக்கொண்டாள். கௌரி தன் இரு கைகளாலும் அவள் கையை அணைத்து “தைரியமா இரு, நாம கும்பிடுற தெய்வம் கைவிடாது” ரம்யாவின் காதுகளுக்கு மட்டும் கேட்கும்படி மெதுவாகச் சொன்னாள்

தொய்வில்லாமல் ஓடிக்கொண்டிருந்த ஏசியின் உதவியால் அந்த அறை ஜிலுஜிலுவென்று இருந்தது. இருந்தும் ரம்யாவுக்கு வியர்த்துக் கொட்டிக் கொண்டிருந்தது. நேரம் ஓடிக்கொண்டிருந்தது. திடீரென்று கண்ணைக் கட்டிக் காட்டில் விட்ட மாதிரி இருந்தது. சுவற்றில் அடித்தப் பந்துப்போல பழைய ஞாபகங்கள் மோதிக்கொண்டிருந்தன. மனம் துடுப்பில்லாதப் படகைப் போல தத்தளிக்கும் போது ‘ஸ்ரீ ராம ஜெயம்’ சொல்வது வழக்கம். திடீரென்று ஞாபகம் வந்தவளாய் கண்களை மூடிக்கொண்டு மனதுக்குள்ளேயே ராம நாமம் சொல்ல ஆரம்பித்தாள்.

எத்தனை முறைச் சொல்லியிருப்பாள் என்று தெரியவில்லை. தன்னை யாரோ அழைக்கும் குரல் கேட்ட பிறகுதான் அவள் கண்களைத் திறந்தாள்.

“வாழ்த்துக்கள், ஆபரேஷன் சக்ஸ்சஸ், பெண் குழந்தை பிறந்திருக்கிறது” தேவதையைப்போலச் சொல்லிச் சென்ற தாதிக்கு நன்றி சொல்லக் கூடக் தோன்றாமல் கண்ணீர் திரைக்குப் பின் அவள் போவதையே பார்த்துக்கொண்டிருந்தாள்.

உடனே குமாரின் நினைவு வந்தது. தான் இருந்த குழப்பத்தில் குமாருக்குத் தகவல் சொல்ல மறந்துபோனது அப்போதுதான் நினைவுக்கு வந்தது. கைப்பேசியை எடுத்து குமாருடன் தொடர்பு கொண்டாள்.

“குமார்…., நீ அப்பாவாயிட்டே, நான் அம்மாவாயிட்டேன், நமக்கு பேபி கேர்ள் பிறந்திருக்கு” திக்கித் திணறி தன் சந்தோசங்களை வார்த்தைகளால் கொட்டினாள்.

“என்ன சொல்லற, தேதி இன்னும் இருக்குல்ல?” பதற்றத்தோடு வினவினான் குமார். ரம்யா நடந்த விவரங்களை விரிவாகக் கூறினாள்.

“அம்மா?”

“இன்னும் ஆபரேஷன் தியேட்டரில்தான் மயக்கமாஇருக்காங்க, ஒருமணி நேரத்தில் அவங்களுக்கு மயக்கம் தெளிந்ததும் பார்க்கலாம்னு நர்ஸ் சொன்னாங்க” மறுமுனையில் அமைதி. மெல்லிய விசும்பல்கள் கரை தொடும் சிறு அலைகளென மேலெழுந்து மௌனத்தில் கரைந்து போயின.

நிறைவு

Series Navigationடூடூவும், பாறுக்கழுகுகளும்வாய்ப் புண்கள்
author

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *