13-ம் நம்பர் பார்சல் – புது நாவல் தொடர் (3,4)

This entry is part 4 of 18 in the series 27 டிசம்பர் 2015

Copy of ushadeepan 1 002

( 3 )

டெலிபோன் மணி அலறியது. ரிசீவரை எடுத்தான். டேவிட் உறியர்…

எதிர்வரிசையில் அப்பா. எப்போது எதில் பேசுவார் என்று சொல்ல முடியாது. பெரும்பாலும் அவருக்குப் பிடித்தது லேன்ட் லைன்தான்.

என்னப்பா, சொல்லுங்க…

உங்கிட்டே ஒரு முக்கியமான பொறுப்பை ஒப்படைக்கப் போறேன்…சின்சியராச் செய்வேன்னு நினைக்கிறேன்…

நிச்சயமாச் செய்றேம்ப்பா…சொல்லுங்க… – அப்பா என்ன சொல்லப் போகிறார் என்று சற்றுப் பதட்டத்துடனேயே எதிர்நோக்கினான் டேவிட்.

அதை போன்ல சொல்ல முடியாது. நேர்ல வா….

எங்கே?

பூந்தோட்டம் பங்களாவுக்கு….

அடுத்த பத்தாவது நிமிடம் தன் தந்தை மைக்கேல் ராபர்ட் முன் நின்றான் டேவிட்.

ரெண்டு கோடி ரூபா மதிப்புள்ள அபின் பேக்கிங்கோட ரெடியா இருக்கு…நம்ப எஸ்டேட் பங்களாவுக்கு நீ உடனடியாப் போகணும்…சரக்கைக் கார்ல ஏத்திட்டு எப்படியாவது கொண்டுபோய் பெங்களுர் பார்ட்னர் கஜராஜ்கிட்டே சேர்த்துடணும்…முடியுமா? யோசிக்காமச் சொல்லு…

யோசித்தான் டேவிட். தயங்கினான். மலைப்பாகத்தான் இருந்தது. இந்த மாதிரி வேலைகளையெல்லாம் தவிர்க்க விரும்பினான். எல்லாம் அப்பாவோடு போகட்டும் என்பது அவன் நினைப்பாக இருந்தது.

உடம்பு லேசாக வியர்த்தது. மறுக்க மனமில்லை. அப்போ…கோழை என்று அப்பா நினைத்துவிட்டால்? நினைத்தால் நினைத்துக் கொள்ளட்டுமே? இம்மாதிரிக் காரியங்களைச் செய்வதற்கு எதற்கு தைரியம்? மொத்த நேரமும் பயத்தில்தானே கழியும்? என்ன பதில் சொல்வது?

வழியிலே நிறையச் செக்கிங் இருக்குமே ஃபாதர்…?

அதனால்தான் சொல்றேன்…இதைச் சாமர்த்தியமா முடிக்கணும்னு….உன்னால முடியும்னு எனக்குத் தோணுது…

உதடுகளை அழுந்தக் கடித்தான் டேவிட். மூளையில் பளீரென்று ஒரு ஷாட்…ஆனால் இதற்கு அப்பா சம்மதிப்பாரா?

அப்பா, ஒரு விஷயம்…

என்ன…?

சரக்குல இருக்கிறது போக, தனியாக் கொஞ்சம் வேணும் எனக்கு….

சொல்லி முடிக்கவில்லை. கொதித்தெழுந்தார் மைக்கேல்.

இடியட்…உன் ஃப்ரெண்ட்சுகளோடு போய்க் கூத்தடிக்கவா…? நான் உன்னை உருப்படியா ஒரு பெரிய இடத்துல சேர்க்கணும்னு மனக்கோட்டைக் கட்டிக்கிட்டிருக்கேன்….நீ எல்லாத்தையும் சிதைச்சிடுவ போலிருக்கே? இதெல்லாம் வேண்டாம்னு எத்தனை தடவை சொல்லியிருக்கேன்? அப்டியும் திருந்த மாட்டேங்கிறியே…? உடம்பு என்னத்துக்கு ஆகும்? அழிஞ்சு போவேடா…அழிஞ்சு போவே…உன்னை நம்பிக் கூப்பிட்டேன் பாரு…என்னைச் சொல்லணும்…என் புத்தியை செருப்பால அடிக்கணும்…

அய்யய்யோ…அதுக்கில்லைப்பா…நீங்க நினைக்கிற மாதிரியெல்லாம் இல்லை. இதுவும் காரியத்தை சக்ஸஸ்ஃபுல்லா முடிக்கிறதுக்காகத்தான்…இதை மட்டும் செய்யுங்க….அப்டியும் வேலை முடியலைன்னா, தப்பித்தவறி நான் போலீஸ்ல மாட்டிக்கிட்டேன்னா….என்னை நீங்க பெயில்ல கூட எடுக்க வேண்டாம்…

மகனின் முகத்தைப் பார்த்தார் மைக்கேல். இரக்கம் பிறந்தது. அந்த முகத்தில் தெரிந்த உறுதி அவரை மிரள வைத்தது. ஏதேது…என்னை விடத் தைரியசாலியாய் இருப்பானோ?

ரைட்…! மொத்தம் பதின்மூன்று பேக்கிங் இருக்கு…குழப்பம் வராதபடிக்கு முதல் ஒரு டஜனை அப்படியே சேர்த்திடு…பதிமூன்றாவது பேக்கிங் சிறிசு…அது எக்ஸ்ட்ரா…நீ கேட்கணும்னே அதுவே ரெடியாயிடுச்சு போலிருக்கு…அதைப் பயன்படுத்திக்கோ…இன்னிக்கு ராத்திரி எட்டு மணிக்குக் கிளம்பறே…ஓ.கே….

யெஸ் ஃபாதர்…ஆனா ஒரு விஷயம்…

இன்னும் என்ன? – பொறுமை இழந்தார் ராபர்ட்.

சரக்கு உரியவர்கிட்டே போய்ச் சேரணும்…அவ்வளவுதான்…அதை நான்தான் கொண்டுபோகணும்னு கட்டாயப்படுத்தக் கூடாது….

என்ன அதுக்குள்ளே உளர்றே…? – ஏதாச்சும் ஏடாகூடமாய் ஆகிவிடுமோ? ஆள் தேர்வு சரியில்லையோ? எசகு பிசகாய் மாட்டிக் கொண்டுவிடுவானோ? – சட்டென்று மின்னலாய்ப் பல எண்ணங்கள் மைக்கேலுக்கு.

உளறலை…உள்ளதைத்தான் சொல்றேன்…ஆள் மாறினாலும் கேட்கக் கூடாது. பொறுப்புதான் என்னோடது…சரிதானா?

ஒரு நிமிடம் அயர்ந்துதான் போனார். தோளில் தட்டி, கை குலுக்கி, உற்சாகமாய் அனுப்பி வைத்தார்.

( 4 )

திர் வரிசையில் ஸ்ரீநேசன் வந்து அமருவதைப் பார்த்தான் டேவிட். அவனும் பார்த்துவிட்ட பிறகு எழுந்து வேறிடம் செல்வது சரியல்ல. முகத்தில் வலிய வரவழைத்துக்கொண்ட புன்னகையோடு உறலோ என்றான்.

பதிலுக்கு ஸ்ரீ ஒப்புகைத்தானா தெரியவில்லை. அதுவே டேவிட்டிற்கு என்னவோ போலிருந்தது. தெரிந்துதான் வந்திருப்பானோ? கூட வந்து அமர்ந்திருக்கும் ஆட்களைப் பார்த்தால் இப்போதைக்கு அவனிடம் எதுவும் பேசக் கூடாது என்பதே சரி. முடிவு செய்து கொண்டான். ஆனால் பேச்சு அவர்களிடம் வலிய ஆரம்பித்திருப்பதே தன்னிடம் சண்டை இழுக்கத்தானோ என்ற சந்தேகம் ஏற்பட்டது. எப்பொழுதும் நாலு பேருடன் வந்து அமரும் தான் அன்று தனியே வந்ததும், வலிய மாட்டிக் கொண்டதும், நினைக்கையில் சற்றே உதறலெடுக்க ஆரம்பித்தது.

உறலோ டேவிட், என்ன இந்தப் பக்கம்? இங்க நான் உங்களைப் பார்த்ததேயில்லையே? ஸ்ரீநேசன் எழுந்து வந்து அப்படி தன் எதிரில் அமருவான் என்று டேவிட் எதிர்பார்க்கவேயில்லை.

எங்கப்பாவுக்காக வெயிட் பண்றேன். வர்றேன்னு சொன்னாரு… – ஏதோ வாயில் வந்ததைச் சொல்லி வைத்தான்.

அப்டியா, நல்லதாப் போச்சு….அவர்ட்ட நேரடியாவே பேசிடலாமே…விஷயம் முடிஞ்சு போகுமில்ல…..

எதைச் சொல்றீங்க…?

தெரியாதமாதிரி குழந்தையாப் பேசக் கூடாது. வளவளன்னு பேசுறது எனக்கு எப்பவுமே பிடிக்காது….நேரடியா விஷயத்துக்கு வர்றேன்…..பார்கவியோட சுத்துறத விட்டிடுங்க….என் மனசுல இருந்த சந்தேகம் நேற்றைக்குக் கன்ஃபார்ம் ஆயிடுச்சி…நேர்லயே பார்த்திட்டேன்….இனி ஒரு முறை உங்க ரெண்டுபேரையும் சேர்த்துப் பார்க்கக் கூடாது. அவ்வளவுதான். மீறி நடந்திச்சின்னா அப்புறம் நான் கொலைகாரனாக் கூட மாறத் தயங்கமாட்டேன். ஜாக்கிரதை……

எதுக்காக சார் இதெல்லாம் பேசுறீங்க….விட்டிடுன்னா விட்டுடப் போறேன்….எங்க ரெண்டு பேரையும் சேர்த்து நீங்க பார்த்திட்டீங்கங்கிறதுக்காக நாங்க ரெண்டு பெரும் லவர்ஸ், கல்யாணம் பண்ணிக்கப் போறோம்ன்னு நீங்களாகவே எதுக்காகக் கற்பனை பண்ணிக்கிறீங்க…அந்த அளவுக்கான பழக்கம் இன்னும் எங்க ரெண்டுபேர்கிட்டயும் வரலை…அத்தனை நெருக்கமும் இல்லை….நீங்க பயப்படுறதுக்கு ஒண்ணுமேயில்லை…..

இந்த பார் டேவிட்….நீ போடுற நாடகத்துக்கெல்லாம் நான் கூடவே வந்திட்டிருக்க முடியாது….எனக்கு நிறைய வேலையிருக்கு….நான் இன்னைக்கு இங்கிருப்பேன்…நாளைக்கு வேறொரு கன்ட்ரில இருப்பேன்….போற எடத்துலயெல்லாம் உன்னைக் கண்காணிக்கிறதே என்னோட சிந்தனையா இருக்க முடியாது. அதுக்குன்னே ஆளை நியமிச்சு உன்னை இஞ்ச் பை இஞ்ச்சா கவனிக்கச் செய்ய முடியும் என்னால.…எனக்குத் தெரியாம பார்கவியோட கல்யாணம் நிச்சயம் நடக்காது. அது நிச்சயம் ஆகிட்டாலும் கூட என்னால தடுத்து நிறுத்த முடியும்…அவளை அடையறதுக்காக எந்த லெவலுக்கும் நான் போவேன். சின்ன வயசிலேயிருந்து அவள் மேல எனக்கு ஆசை. அவள் என்னை விரும்புறாளா, இல்லையாங்கிறதைப் பத்திக்கூட எனக்குக் கவலையில்லை. நான் அவளை அடையணும்…அவ்வளவுதான்….உனக்குத் தெரியுமோ, தெரியாதோ ஊர்ல படிச்சிட்டிருந்தபோது ஸ்கூல்மேட் ஒருத்தன் அவளைத் துரத்திட்டேயிருந்தான். கையைக் காலை ஒடிச்சி அவனை முடமாக்கிட்டேன்….அத்தோட நொண்டிக்கிட்டுத் திரியறான் இப்போ….அவனைப் பார்க்கணுமா…கோயில் பக்கத்து பாரதியார் மண்டபத்துல உட்கார்ந்திருப்பான்…வேணும்னாப் போய்ப் பாரு….கேட்டுக்கூடப் பாரு…என் பேரைச் சொன்னவுடனே எழுந்திரிச்சி ஓடலைன்னா என்னன்னு கேளு…புரியுதா….

நீங்க இப்படிப்பட்ட ஆளா இருப்பீங்கன்னு நான் எதிர்பார்க்கலே…உங்க பேருக்கும் உங்க செய்கைக்கும் கொஞ்சம் கூடச் சம்பந்தம் இல்லாம இருக்கே…

பார்கவி நேசன்னு வச்சிருக்கணும்…ஸ்ரீநேசன்னு வச்சிட்டாரு எங்கப்பா…அது எங்க தாத்தாவோட திரிஞ்ச பேரு…அவர் ஞாபகமா வச்சது…அவர் வச்சிட்டார்ங்கிறதுக்காக அதைக் காப்பாத்தணும்ங்கிற கட்டாயம் ஒண்ணும் எனக்கில்லே…ஏன்னா இது என்னோட வாழ்க்கைப் பிரச்னை….

ஓ.கே. சார்…இப்போ நான் இங்கே சாப்பிடவா…இல்ல போகவா….நீங்களே சொல்லுங்க…அது பிரகாரம் செய்துடறேன்…

அப்பா வர்றதாச் சொன்னீங்க…இப்போ போறேங்கிறீங்க….

அவர் வேறே வந்து என்ன சொல்லப் போறாரோ…அதுக்கு முன்னாடி கிளம்பிப் போயிடலாமில்லியா……

அப்போ அவர் வந்தா தனியா அவரைக் கவனிச்சிக்கட்டுமா?

ஸ்ரீநேசனின் பேச்சு டேவிட்டைத் துணுக்குற வைத்தது. எதற்கும் துணிந்தவனோ? என்னமாதிரி எகிறுகிறான் பேச்சில்? எல்லாம் பணத் திமிர்…அதே பணத்திமிர் என்னிடமும் இல்லையா என்ன? இவனால் அப்படி என்ன செய்து விட முடியும்? சமயத்துக்கு ஒரு பொய்யைச் சொல்ல அதை அப்படியே நம்பி விட்டான். பயல் காத்துக் கிடக்கட்டும்….நமக்கென்ன….அப்பா வந்தால்தானே…. – எழுந்தான்.

விறுவிறுவென்று வெளியே வந்தான்.

சார்…ப்ளீஸ்…. – சர்வரின் பணிவான குரல் இவனைத் தடுத்தது.

அந்தோ உட்கார்ந்திருக்காங்களே அவங்களைப் போய் கவனியுங்க…நல்ல டிப்ஸ் தருவாங்க….என்றவாறே வெளியேறினான் டேவிட். அப்பா சொன்ன வேலை நினைவுக்கு வந்தது. அநேகமாக எல்லாமும் தயாராகத்தான் இருக்கும். அப்பா, தோளில் தட்டி, கை குலுக்கி வழியனுப்பி வைத்தது உற்சாகத்தைத் தந்தது.

Series Navigationபுத்தகங்கள் ! புத்தகங்கள் !! – 2 கொழுத்தாடு பிடிப்பேன் – அ . முத்துலிங்கம் -சிறுகதைகள் தொகுப்பு .தொடுவானம்100. பிரேதங்களுடன் உடற்கூறு
உஷாதீபன்

உஷாதீபன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *