வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் பகுதி-1 இலக்கிய வட்டம் ஓர் அறிமுகம்

This entry is part 12 of 12 in the series 10 ஜனவரி 2016

 

[ரேடியோ டெலிவிஷன் ஹாங்காங்(RTHK) சிறுபான்மை தேசிய இனங்களுக்காக நிகழ்த்திய  தொடர் ஒலிபரப்பில் 19.9.15 அன்று ஹாங்காங் இலக்கிய வட்டத்தைக் குறித்த உரையாடல் நடைபெற்றது. அதில் தேர்ந்தெடுக்கப்பட்ட பகுதிகளின் எழுத்து வடிவம் இங்கே இடம் பெறுகிறது. இது முதல் பகுதி]

 

இலக்கிய வட்டம் ஓர் அறிமுகம்

 

அன்பு நெஞ்சங்களுக்குத் தலை வணங்குகிறேன். கடந்த சில வாரங்களாக ஒலிபரப்பாகி வரும் ஹாங்காங் தமிழோசை நிகழ்ச்சியின் வாயிலாக உங்களைச் சந்திப்பதில் மகிழ்ச்சியடைகிறேன். இந்த வாரம் இலக்கிய வட்டத்தைப் பற்றிப் பேசப் போகிறோம்

 

என் பெயர் மு.இராமனாதன். நான் இலக்கிய வட்டத்தின் இப்போதைய ஒருங்கிணைப்பாளர். எனக்குத் தொழில் பொறியியல், கட்டுமானம். இதைக் கேட்டுக்கொண்டிருக்கிற உங்களைப்போலவே எனக்கும் இலக்கியத்தில் கொஞ்சம் ஆர்வம். அவ்வளவுதான்.

 

ஹாங்காங் இலக்கிய வட்டம் டிசம்பர் 2001ல் துவங்கப்பட்டது. தமிழ் இலக்கிய வரலாற்றில் குறிப்பிடத்தக்க முயற்சிகள் பலவும் – அவை சிறிதாகிலும் பெரிதாகிலும்- தனி நபர்களாலும் சிறிய குழுக்களாலுமே முன்னெடுத்துச் செல்லபட்டிருக்கின்றன. ஹாங்காங் இலக்கிய வட்டமும் இந்த விதிக்கு விலக்காக அமையவில்லை. இது போன்ற, தமிழ் இலக்கியம் தொடர்பான கருத்துக்களைப் பகிர்ந்து கொள்வதற்கு ஒரு முறையான மேடை ஹாங்காங்கில் அதற்கு முன்பு இருந்ததாகத் தெரியவில்லை.

 

இலக்கிய வட்டத்தை நிறுவியவரும் அதன் ஆரம்ப கால ஒருங்கிணைப்பாளரும் திரு. எஸ். நரசிம்மன் ஆவார். வட்டத்திற்குத் தலைவர், செயலர், பொருளாளர், என்றெல்லாம் யாரும் இல்லை. செயற்குழு, பொதுக்குழு, சந்தா, ஆண்டறிக்கை என்பனவும் இல்லை. விருப்பமுள்ளவர்கள் வரலாம், பேசலாம். சமயம் வாய்க்கிற போது கூடுவதும், படித்ததை ரசித்ததை அனுபவித்ததைப் பகிர்ந்து கொள்வதும் வட்டத்தின் எளிய செயல் திட்டம் ஆகியது. மூன்று நான்கு கூட்டங்களுக்குப் பிறகு, தமிழ் இலக்கியம் மட்டுமின்றி, பிற மொழி இலக்கியங்களைக் குறித்தும், வாழ்வனுபவங்களைக் குறித்தும் இலக்கிய வட்டத்தில் பகிர்ந்து கொள்ளலாம் என்று முடிவாகியது.

 

கூட்டங்களில் பேசியதைக் குறித்தும், பேசத் தவறியவை குறித்தும் உரையாடுவதற்காக ஒரு மின்னஞ்சல் குழுமம் ஏப்ரல் 2002ல் ஏற்படுத்தப்பட்டது (ilakkya@yahoogroups.com). 20 பேருடன் தொடங்கிய குழுவில் இப்போது 80க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் உள்ளனர். கூட்டத்தின் அழைப்பிதழ்கள் இந்த மின்னஞ்சல் குழுவின் வழியாகவே அனுப்பப்படுகின்றன. தகவல் தொடர்பிற்கும், இலக்கியம் மற்றும் வாழ்க்கை குறித்த தொடர்ச்சியான கருத்துப் பரிமாற்றங்களுக்கும் மின்னஞ்சல் குழு உதவி வருகிறது.

 

அக்டோபர் 2002ல் திரு. எஸ். நரசிம்மன் பணிமாற்றல் காரணமாக ஹாங்காங்கிலிருந்து விடைபெற்றார். தொடர்ந்து திரு. எஸ். பிரசாத்தும், பிற்பாடு நானும் வட்டத்தின் ஒருங்கிணைப்பாளர்களாக இருந்தோம்.

2009-லிருந்து 2014-வரை திரு.ப.குருநாதனும் இப்போது மீண்டும் நானும் ஒருங்கிணைப்பாளர்கள்.

 

இலக்கிய வட்டக் கூட்டங்களில் நவீனத் தமிழ் இலக்கியப் படைப்புகளும் பழந்தமிழ் படைப்புகளும் அதிகமும் பேசப்பட்டிருக்கின்றன. தீவிர இலக்கியமே வட்டத்தின் ஊடுபாவாக இருந்து வருகிறது. எனில், வெகுஜனப் படைப்புகளைக் குறித்து அதில் ஆர்வமுள்ளவர்கள் பேசியிருக்கிறார்கள். இவையன்னியில் ஆங்கில இலக்கியம், திரைப்படம், நாடகம், இசை, இணையம், நிழற்படம், ஓவியம், நாட்டியம், வாழ்வனுபவம், புலம் பெயர் வாழ்க்கை என்று பலவும் பேசு பொருளாக இருந்திருக்கின்றன.

 

சீரிய இலக்கிய முயற்சிகளுக்குத் தமிழ்ச் சூழலில் உள்ள ஆதரவு எப்படிப்பட்டது என்பது யாவரும் அறிந்ததே. வெளிநாடுகளில், அதுவும் ஹாங்காங் போன்ற பணி அழுத்தம் அதிகமுள்ள இடங்களில் உள்ள நிலையைக் குறிப்பிட்டுச் சொல்ல வேண்டுவதில்லை. இலக்கிய வட்டக் கூட்டங்கள் அரங்கு நிறைந்தவையாக அமைந்ததில்லை. இந்தக் கூட்டங்களில் பேசுபவர்களில் பலரும் ஆராய்ச்சியாளர்களோ பெரும் புலமையாளர்களோ அல்லர். சாதாரண மற்றும் தீவிர வாசகர்கள். ஆயினும், இலக்கியம் குறித்தும் வாழ்வனுபவம் குறித்துமான பல சிறந்த உரைகள் இந்த மேடையில் அரங்கேறியிருக்கின்றன. இந்த உரைகள் ஹாங்காங்கில் நிகழ்த்தப்பட்டவை என்ற சலுகையைச் சேராதவை. தம்மளவில் தனித்துவமும், சிறப்பும் மிக்கவை.  இவற்றில் 15 உரைகள் நவம்பர் 2014 முதல் ஜனவரி 2015 வரை திண்ணை. காமில் ‘ஹாங்காங் இலக்கிய வட்ட உரைகள்’ என்ற பொதுத் தலைப்பில் வெளியாகின. மேலும் திரு. வி.க, வ.உ.சி, தேவநேயப் பாவாணர், சி.சு.செல்லப்பா, ஆ.இரா. வேங்கடாசலபதி ஆகியோரைப் பற்றி வட்டத்தில் நிகழ்த்தப்பட்ட உரைகள் ‘அதிகம் பேசப்படாத தமிழறிஞர்கள்’ என்ற பொதுத்தலைப்பில் ஜனவரி-மார்ச் 2009-ல் திண்ணை. காமில் வெளியாகின. இந்த உரைகளையும் இன்னும் சில சிறப்பான உரைகளையும் சேர்த்து ஒரு நூலாக வெளியிட வேண்டும் என்று ஒரு ஆசையும் இருக்கிறது.

 

இலக்கிய வட்டத்தின் 25ஆம் கூட்டம் 2008ல் நடைபெற்றது. அப்போது அதுகாறும் நடந்த 24 கூட்டங்களின் பதிவுகள் அடங்கிய “இலக்கிய வெள்ளி”  என்ற நூலை வெளியிட்டோம்.

 

இந்த அளவில் அறிமுகத்தை நிறுத்திக் கொள்வோம். இன்றைய நிகழ்ச்சியில் இலக்கிய வட்டத்தில் பங்கெடுத்த நண்பர்களில் சிலர்,  தற்சமயம் ஹாங்காங்கிலும், இந்தியாவிலும், வெளிநாடுகளிலும் வாழ்பவர்கள், தங்களது அனுபவத்தை, நேரிலும் தொலைபேசி வாயிலாகவும், நம்மோடு பகிர்ந்து கொள்வார்கள். தொடர்ந்து நான்கு பேர் தாங்கள் இலக்கிய வட்டத்தில் நிகழ்த்திய உரைகளில் தங்களுக்குப் பிடித்தமான உரையைப் பற்றிக் குறிப்பிட்டு, அதிலிருந்து சில பகுதிகளைப் பகிர்ந்து கொள்வார்கள்.

 

தொடரும்

 

[ஒலியிலிருந்து எழுத்து: கவிதா குமார்]

 

[வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம், தொகுப்பு:மு.இராமனாதன், தொடர்புக்கு: Mu.Ramanathan@gmail.com]

 

Series Navigationஓர் உணவு விடுதியும் இரண்டு காதலிகளும்
author

மு. இராமனாதன்

Similar Posts

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *