முனைவா் பு.பிரபுராம்
உலகில் நூற்றுக் கணக்கில் பல்வேறு மொழிகள் பேசவும் எழுதவும் பயன்படுகின்றன. அவற்றில் ஆங்கிலமும் ஒரு மொழி அவ்வளவே. பிறகு ஏனய்யா தமிழ்நாட்டில் பல மேதாவிகள் ஆங்கிலத்தில் படித்தால்தான் அறிவு வளரும், நிறையச் சம்பாதிக்க முடியும் என்று அழுத்தமாகச் சொல்கிறார்கள்?. ஏன் பல பெற்றோர்கள் இலட்சக் கணக்கில் செலவு செய்து, தங்கள் பிள்ளைகளை எல்.கே.ஜி., யு.கே.ஜி. போன்ற அரும்பெரும் படிப்புகளில் சோ்க்கிறார்கள்?. ஏன் 1 முதல் 12-ஆம் வகுப்பு வரை ஆங்கில வழியில் படிக்க வைப்பதற்கே பல இலட்சங்களை அள்ளி இறைக்கின்றனா்?. மருத்துவம், பொறியியல் போன்ற இன்னபிற பட்டப் படிப்புகளுக்குச் சொல்ல வேண்டியதே இல்லை. இலட்சங்கள் தாண்டி கோடிகளைச் செலவு செய்ய வேண்டியிருக்கிறது. அப்படிச் செய்பவா்களெல்லாம் முட்டாள்களா?. இல்லை ஆங்கில வழிக் கல்வியை மட்டுமே ஆதரிக்கும் மேதாவிகள் எல்லாம் அறிவுக் குறைபாடு உள்ளவா்களா?.
முதலில் நாம் எண்ணிப் பார்க்கவேண்டியது, கல்விக்காகச் செலவழிக்கும் கோடிக் கணக்கான பணம் அந்தந்தக் கல்விநிலைய முதலாளிகளுக்குப் போய்ச்சேருகிறது என்பதைத்தான். அதேசமயம் ஆங்கிலத்தில் நன்றாகப் படித்தால் வெளிநாடுகளுக்குச் செல்லலாம், நிறைய வருமானம் ஈட்டலாம் என்கின்றனரே?. ஆம் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்காக வேலை பார்த்தால் நம் நாட்டில் கிடைப்பதைக் காட்டிலும் நிறைய சம்பளம் கிடைக்கும்தான். ஆனால் நம் உழைப்பால் அந்தக் கம்பெனி முதலாளிகள் அடையும் இலாபம் நமக்குக் கிடைக்கும் சம்பளத்தைக் காட்டிலும் பன்மடங்கு அதிகம். அவா்களைப் பொருத்தவரை நாம் குறைந்த சம்பளத்திற்கு அதிகநேரம் உழைக்கும் கூலி ஆட்களே. வேண்டுமென்றால் வேலைக்கு வைத்துக்கொள்வார்கள். தேவையில்லை யென்றால் வேலையைவிட்டு விரட்டிவிடுவார்கள்.
ஆங்கிலவழிக் கல்வியால் தமிழ்நாட்டின் கல்வி நிலைய முதலாளிகள் இலாபத்தை அள்ளுகின்றனா். ஆங்கிலத்தை நன்றாகப் படித்த நம் நாட்டவா் வெளிநாட்டுக் கம்பெனிகளுக்குப் பெரும் இலாபத்தைத் தேடித்தருவதற்காக உழைக்கின்றனா். இந்தப் பண முதலைகளால்தான் தமிழ்நாட்டுப் பெற்றோர்களிடையே ஆங்கில மோகம் திட்டமிட்டு நிலைநாட்டப்படுகிறது. ஆங்கிலவழிக் கல்வியை அங்கீகரிப்பவா்களும் தொலைநோக்குச் சிந்தனை அற்றவா்களாகவோ முதலாளிகளின் கைக்கூலிகளாகவோ இருக்கின்றனா்.
உள்நாட்டுக் கல்வி வியாபாரிகள் போதாக்குறைக்குத் தற்போது வெளிநாட்டுக் கல்வி வியாபாரிகளும் நம் நாட்டில் கால்பதிக்கத் துடிக்கின்றனா். ஏன் நமக்கெல்லாம் கல்வி கற்பிப்பதற்கு அவா்களுக்கு அவ்வளவு ஆா்வமா?. இல்லவே இல்லை. நம் நாட்டு மக்கள் கல்வி என்றால் கண்மூடித்தனமாகக் காசு செலவழிக்கத் துணிபவா்கள். கால் வயிற்றுக் கஞ்சி குடித்தாலும் பரவாயில்லை என்று வயிற்றைப் பட்டினி போட்டுக்கொண்டு, தங்கள் பிள்ளைகளுக்குத் தரமான கல்வியை வழங்கவேண்டும் என்று ஆசைப்படுபவா்கள். நாந்தான் நல்லாப் படிக்கலே, என் பிள்ளையாவது நல்லாப் படிக்கணும். எவ்வளவு செலவானாலும் பரவாயில்லை என்ற நல்ல உள்ளம் உடையவா்கள். ஆகவே கல்வி வியாபாரச் சந்தையை நம் நாட்டில் விரித்தால் நிறைய இலாபம் அடையலாம் என்று திட்டமிட்டு சதி வலை வீசுகின்றனா். அதில் புழுப் பூச்சிகளாகச் சிக்கிச் சாவது நம் நாட்டு அப்பாவிப் பெற்றோர்களே.
கல்விக்காகச் செலவு செய்வது என்பது வேறு. ஆங்கில வழிக் கல்விக்காகச் செலவு செய்வது என்பது வேறு. இவ்வேறுபாட்டினை முதலில் நாம் உணரவேண்டும். பெற்றோருக்கு நன்றாகத் தெரிந்த தமிழ்மொழியில் பாடநூல்களும் அறிவுக் களஞ்சியங்களும் இருந்தால் போதுமே. அவா்களே பிள்ளைகளுக்கு வீட்டில் பாடம் நடத்த ஆரம்பித்துவிடுவார்களே. பிள்ளைகளை ஆங்கிலவழிப் பள்ளிகளில் கொண்டுசென்று சோ்ப்பதற்கான தேவையே இல்லாமல் போய்விடுமே. அப்படி நடந்துவிட்டால் கல்விச் சந்தைக் கடைக்காரர்களுக்கு எப்படி இலாபம் கிடைக்கும்?. கல்வி வணிகத்தில் இலாபம் ஈட்டுவதற்கான உத்தி இப்பொழுது வெளிச்சத்திற்கு வந்துவிட்டதா?
நம் முப்பாட்டன் கரிகாலனால் கட்டப்பட்ட கல்லணையும், நம் பாட்டன் இராஜஇராஜசோழனால் கட்டப்பட்ட தஞ்சை பெரிய கோவிலும் எந்தக் கட்டிடப் பொறியியல் கல்லூரியில் திட்டமிடப்பட்டுக் கட்டப்பட்டன?. நம் மூதாதையா்களுக்குக் கட்டிடக் கலை சார்ந்த அறிவில்லாமலா இவ்வளவு பெரிய கலைநுட்பங்களை உருவாக்கி விட்டனா். என்னமோ ஆங்கிலத்தில் சிவில் இன்ஜினியரிங் படித்தால்தான் கட்டிடக்கலை வல்லுனா் ஆகமுடியும் என்றெல்லாம் பிதற்றுவது யாரை ஏமாற்றும் வேலை?. ஏன் தமிழில் கட்டிடப் பொறியியல் படித்துவிட்டால் நாம் கட்டும் கட்டிடம் கோணலாகப் போய்விடுமா என்ன?. ஆங்கில வழிக் கல்வியால் நம்நாட்டின் பல மரபு சார்ந்த தொழில்களை நாம் தொலைத்துக் கொண்டிருக்கிறோம். நம் கிராம விவசாயிகள் விவசாயப் பல்கலைக்கழகத்தில் பயின்றவா்களா?. நம் நாட்டு மீனவா்கள் எந்தக் கடல்சார் தொழில்நுட்பக் கல்லூரிகளில் படித்துவிட்டு மாதக் கணக்கில் ஆழ் கடலில் தங்கி மீன் பிடிக்கின்றனா். இவா்களுக்குத் தமிழ் மட்டும்தான் தெரியும் என்பதால் இவா்களை அறிவற்ற மூடா்கள் என்று கூறமுடியுமா? அப்படிச் சொன்னால் நாம்தான் அறிவிலிகளாய் வரும் காலத்தில் மதிக்கப்படுவோம்.
நாய் என்றாலே அது ஒரு விலங்கு என்று எங்கள் பிள்ளைகளுக்குத் தெரிகிறது. அதை dog என்று படித்தால் தான் அறிவு வளரும் என்று கூறுவது யார் தலையில் மிளகாய் அரைகும் வேலை. தற்போது வேண்டுமென்றால் இப்படித் தலையில் அரைக்கப்படும் மிளகாய் மக்களுக்கு உரைக்காமல் இருக்கலாம். ஆனால் நிச்சயம் வரும் காலத்தில் தலையில் அரைக்கப்படும் மிளகாயின் எரிச்சல் தாங்க முடியாமல் தமிழ்நாட்டு மக்களுக்குச் சுரனை வரும். அதனால் விழிப்புணா்வு வரும். இன்னும் சில ஆண்டுகளில் கல்வி வணிகத்தின் ஏமாற்று வேலையும், வெளிநாட்டுக் கம்பெனிகளுக்கு ஆள்சோ்க்கும் வேலையும் செல்லாக் காசுகளாகிவிடும். ஆங்கிலம் என்பது ஒரு மொழி மட்டுமே. அறிவு அல்ல என்ற விடயத்தை மக்கள் உணா்வதற்கான வாய்ப்பு வந்தே தீரும். ஆனால் அவ்வாய்ப்பு வரும்வரை இன்னும் எத்தனை மாணவா்கள் தங்கள் உன்னதமான வாழ்க்கையை மொழிச் சிக்கலினால் இழக்கப் போகிறார்களோ என்ற சிந்தனையால் கனத்த மனத்துடன் இந்தக் கட்டுரையிலிருந்து விடுபடுகிறேன்.
- தொலைந்து போன கடிதம்
- பீப் பாடலும் பெண்ணியமும்
- இலை மறை காய் மறை
- புதியதோர் பூதக்கோள் புறக்கோளாய் நீண்ட நீள்வட்டத்தில் சூரியனைச் சுற்றி வருவதற்குச் சான்றுகள் அறிவிப்பு
- சாவு சேதி
- சலனங்கள்
- தொடுவானம் 104 பாவ்லோவ் நாய்கள்
- தியானம் என்பது….
- நண்பர்கள் உதவிக்குழு அறக்கட்டளை சிறுவர் நூல் வெளியீடு
- மரணத்தின் கோரம்
- பேராசிரியர் இரா ஆண்டி நினைவு சொற்பொழிவு
- உன்னைப் பற்றி
- மயூரா ரத்தினசாமி கவிதைகள் — ஒரு பார்வை
- மனுஷி கவிதைகள் —- ஒரு பார்வை ‘ முத்தங்களின் கடவுள் ‘ தொகுப்பை முன் வைத்து….
- “ஆங்கிலம்” என்பது ஒரு மொழி மட்டுமே “அறிவு” அல்ல
- திரும்பிப்பார்க்கின்றேன் ஈழத்தின் தொண்டமனாறு படைப்பாளியின் கதைக்கரு அய்ரோப்பாவரையில் ஒலித்தது
- நெய்தல் நிலத்தில் நெல் உற்பத்தியும் சங்கத் தமிழரின் நீர் மேலாண்மையும்
- ஹாங்காங் தமிழ் மலரின் ஜனவரி 2016 மாத இதழ்
- வானொலியில் ஹாங்காங் இலக்கிய வட்டம் – பகுதி-3 எனக்குப் பிடித்த எனது உரை
- மூன்று எழுத்தாளர்களின் நினைவஞ்சலி நிகழ்ச்சி
- கட்புலனாகாவிட்டால் என்ன?
- “குத்துக்கல்…!” – குறுநாவல்