Posted in

தமிழ்ப் புத்தாண்டு பிறக்கிறது.

This entry is part 16 of 17 in the series 10 ஏப்ரல் 2016

சி. ஜெயபாரதன், கனடா

புத்தாண்டுப் பிள்ளை பிறக்குதடி
ஈராறு திங்கள் தாண்டி,
சித்திரை முதல்நாள் தமிழ்த் தாயிக்கு !
புத்தாண்டுப் பஞ்சாங்கம் வாசிப்போம்
சித்திரை மாத நாள் முதலாய் !
புத்தாண்டுக் கன்று உடனே,
எழுந்து நிற்கும், தத்தி
நடக்க முயலும்,
நழுவி விழும் தள்ளாடி;
நல்ல காலம் வருகுது நமக்கென
நம்புவோம்.
நாச காலம் போகட்டும் எனச்
சாபம் இடுவோம்.
நாடு செழிக்கப் போகுது,
நன்மை விளையப் போகுது,
நம்மைப் பிடித்த பிசாசுகள் போயின வென்று
கும்மி அடிப்போம் !
ஏட்டுச் சுவடி செந்தமிழ் ஆளும் !
நாட்டுச் சுரைக்காய் ஆங்கிலம் கூறும் !
கல்விக் கூடங்கள் பெருகும் !
பல்கலைக் கழகப் பட்டங்கள் எல்லாம்
செல்வப் பூதங்கள் வழங்கும் !
பட்டதாரிகள் ஈசலாய்ப் பறப்பார் !
வேலை யின்றிச் சிறகறுந்து வீழ்வார் !
நோய், நொடி, தீமைகள் பெருகும் !
வேலி தாண்டும் கூண்டுக் கிளிகள்.
செல்வந்தர் பெருகுவார்,
கல்வி கற்போர் பெருகுவார்.
குடியரசில் குடியும், குடிசையும் பெருகும்.
சச்சரவு, சண்டைகள் பெருகும் !
சட்டங்கள் மீறப்படும் !
வம்பு, வன்முறை பெருகும்;
வாய்ச் சண்டை மிகும் !
மதச் சண்டை பெருகும் !
ஜாதிக் கொலைகள் தொடரும்.
காவல் துறைக்கு
அச்சமில்லை அச்சமில்லை என்று
கயவர் கூட்டம்
காயப் படுத்தும் பெண்டிரை.
அமைச்சர்கள் வேடிக்கை பார்ப்பார்,
நாணய மதிப்பு குறையும்.
நன்னெறிகள் நூலுக்குள் உறையும் !
புத்தாண்டுப் பிள்ளை பிறக்குது
குளிக்காமல்,
புத்தாடை அணிந்து கொண்டு !

Series Navigationபெண்டிர்க்கழகுஅக இருப்பு

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *